கையெழுத்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 14, 2023
பார்வையிட்டோர்: 1,488 
 
 

அவரின் கையெழுத்து கிடைக்குமா… வாங்குவேனா….

எந்த நாளிதழை திறந்தாலும் சுந்தரமூர்த்தியின் பெயர்தான் அடிபடுகிறது. அவரின் சிந்தனைகள், அவரைப் பற்றிய தகவல்கள்… அவர் வளர்ந்த விதம், படிப்பு, கடந்த பாதை, கடந்தமலைமேடுகள், பள்ளத்தாக்குகள்…. அடைந்த வெற்றிகள் என படித்து படித்துமூளைக்குள் ஒருவித பரபரப்பு… இடைவிடாமல் அவரை காண ஒருதுடிப்பு… அண்ணாந்து பார்க்கும் படியான உயரத்தை அவர் எட்டியுள்ளதை எண்ணி என்னுடைய சுயமான வெற்றிபோல ஒரு மகிழ்ச்சி.

இது இன்றல்ல நேற்றல்ல, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து என்னுள்ளே மூட்டப்பட்ட நெருப்பு, ஆர்வம், ஆசை, திகைப்பு, சாதிக்க வெறி….. அது நாளுக்குள் நாள் அதிகமானதே ஒழிய குறைவில்லை. நான் அதை குறையவும் விடவில்லை.

பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் நான் வெற்றி அடைந்தபின் என்னுடைய ஒரே நோக்கம் வெற்றி காண்பது….. அவரைப் போல வெற்றி காண்பது….. அதற்கு ஏற்ற படிப்பை எடுத்து அதை ஒரு மனதுடன் சாதிக்கபாடுபட்டேன்.

அவரை ஒரு முறை சந்திக்க நேர்ந்தால்… விடாத ஆசை, கற்பனையில், கனவில் நிகழ்வில் என அந்தஆசை கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. அடக்க முடியாமல் பெங்களூரை நோக்கி பயணப்பட்டேன்…. என் ஆசை அறிந்த என் பெற்றோரும் அதற்கு துணை போயினர்.

பெங்களூரை அடைந்து அவரின் ஆபிசை அடைந்தேன். ஒரு வழியாக தடைகளை சமாளித்து வரவேற்ப்பாளரின் முன் நின்றேன்….

அவர் காலடி பட்டஇடம், அவர் சுவாசக் காற்று தவழும் இடம், ஆழ்ந்தமூச்சை எடுத்தேன். படபடக்கும் இதயத்துடன் வரவேற்ப்பாளரிடம் மன்றாடி அவரை ஒரு நொடி மட்டுமே காண கைகுலுக்க வேண்டி நின்றேன்…. என்னுடைய ஆர்வத்தையும் படபடப்பையும் புரிந்து கொண்டாலும் அவரால் பெரிதாக உதவ முடியாமல் போனது.

எனக்கு வெறுப்பு ஒரு பக்கம், வேதனை எரிச்சல் கோபம் இயலாமை மறுபக்கம் என வாட்டியது.

“சாரி சர், உங்க ஆர்வம் எனக்கு புரியுது, ஆனா சர் இன்னிக்கி காலையில தான் மும்பை கிளம்பி போனாரு…. வர ஒரு வாரமானும் ஆகுமே சாரி யங்மான்” என்றார் அந்த நடுத்தர வயது மாது.

“ஒ” என்றேன் துவண்டு போய்.

“சரி என் பாட்லக், நான் கிளம்பறேன்” என வாயிலை அடைந்தேன்.

“நான் உங்க டிடேயில்சை அவருக்கு அனுப்பறேன், அத குடுத்துட்டுபோங்க” என என் இமெயில், போன் எண் என வாங்கிக்கொண்டார்.

சரி வழக்கம் போல நான் அகன்றதும் குப்பை தொட்டிக்குதானே போகும் என உள்ளே நொந்தபடி நானும் அதை ஒருகார்டில் குறித்து தந்துவிட்டு வெளியே வந்தேன்.

மீண்டும் சென்னை….. படிப்பு தொடர்ந்தது…..கல்லூரியின் கடைசி நாள் பிரிவுபசார விருந்து….. ஒவ்வொரு வருடமும் பல பெரிய மனிதர்கள் சாதனையாளர்கள் வந்து பெருமைபடுத்தும் விழா. இந்த வருட நம் முக்கிய விருந்தினர் என கல்லூரி தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி சாரின் பெயரைச் சொல்லி முடித்ததும் என் இதயம் என் தொண்டைக்குள் வந்து நின்றது.

என் தீவிரம் அறிந்த கல்லூரி வகுப்பு தோழர்கள் அனைவரின் பார்வையும் என்னைக் கண்டு மீண்டது. ‘இங்கேவா, அவரா வரப்போகிறாரா… இப்போதானும் அவரை கண்ணால் காணமுடியுமா, ரெண்டு வார்த்தை பேச முடியுமா, கைகுலுக்குவாரா, ஆட்டோக்ராப் வாங்க முடியுமா…’ என பற்பல கனவுகள், ஆசைகள் உள்ளே இத்தனை ஆண்டுகளாக அமிழ்ந்து கிடந்தவை மேலெழும்பின…. ஆர்வத்தில் மூச்சடைத்து.

வீட்டிற்குச் சென்றதும் ஆவலுடன் பெற்றோரிடம் பகிர்ந்து கொண்டேன்.

“அப்படியா, கண்டிப்பா இந்த முறையானும் நீ அவரை பார்த்து பேசி கை எழுத்து வாங்குவே பாரு” என உற்சாகப்படுத்தினர்.

அந்த நாளும் வந்தது…. என்னுடைய மிகச் சிறந்த உடையை அணிந்தேன்….. அவரை சந்திக்க நேர்ந்தால் என்ன பேசுவேன் என கண்ணாடி முன் நின்று பலமுறை ஒத்திகை பார்த்துக்கொண்டேன்….. ஒரே படபடப்பு….. உள்ளங்கை வியர்த்து ஈரமாகியது…. சமாளித்தேன்…. ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டேன்.

கல்லூரியை அடைந்தேன்.

“கார்த்தி வா வா, வகுப்பு தலைவன்கர முறையில நீதான் சுந்தரமூர்த்தி சாரை வரவேற்று பூங்கொத்து தரணும்” என்றார். எனக்கு மயக்கமே வந்தது.

‘என்னது நானா, எனக்கு இப்படி ஒரு வாய்ப்பா?’ என வாய் பிளந்து நின்று விட்டேன் திகைத்துபோய்.

“என்ன கார்த்தி,வான்னு சொல்றேனே நேரமாச்சு” என்றார் அதட்டலுடன்.

“தோ சர், சாரி சார்” என தடுமாறியபடி அவர் பின்னோடு நடந்தேன்.

வாயிலை அடைந்து அவர் என் கையில் தந்த பொக்கேவை கெட்டியாக பிடித்தபடி படபடக்க நின்றேன்.

கார் வந்தது. என் பரபரப்பு அதிகமானது.

இறங்கினார், என் மனம் சோர்ந்தது….. ஆம் வந்தது அவரில்லை, அவரைப் போலவே சிறந்த சாதனைகளை செய்தவர்…. அவருக்கு கைகொடுத்து அவரது முன்னேற்றத்திற்கும் வாழ்க்கைக்கும் வழித்துணையாக நின்றவர்….அவர மனைவி சுபா சுந்தரமூர்த்தி தான் இறங்கினார்.

“மன்னிக்கணும், அவர் சார்பில நான் உங்க அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கறேன்….அவசரமான ஒரு மீட்டிங் ஏற்பாடாயிடுச்சு, அவர் அதில கலந்துகொண்டே ஆக வேண்டிய கட்டாயத்தின் பேரில் போயிருக்கார்…… அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன், அதான் என்னை போகச் சொன்னார்…. இது எவ்வளவு முக்கிய விழா இங்கே அவர் வந்து வாழ்த்தி பேசுவது எவ்வளவு பெரிய உற்சாகம் இந்த இளைஞர்களுக்கு எல்லாம் அவர் புரிஞ்சு வெச்சிருந்தார்,ஆனா பாருங்க வரமுடியாம போச்சு” என கைகூப்பி வணங்கினார்.

“வாங்க மேடம், நீங்க வந்ததில எங்களுக்கு அதைவிட மகிழ்ச்சி” என்று நானும் முகம் மலர மனதார வரவேற்றேன். என்னுடைய மன தேவனின் தேவி அல்லவா…. அவரின் துணைவி அல்லவா.

‘பெண்ணாகப் பிறந்து அவருக்கு ஈடாக சாதித்தவர் அல்லவா’ என மனம் பெருமை உற்றது.

உள்ளே அழைத்துச் சென்று அமர வைத்தோம்…. அவரின் முறை வந்தபோது சுருக்கமாக ஆனாலும் சுவையாக பேசினார்…. எங்களை வாழ்த்தினார்.

மனசுக்கு மிகவும் சந்தோஷம்தான் ஆனாலும்…. சுந்தரமூர்த்தி சர் வரலியே என சோர்ந்து படுத்தேன்.

“போனாபோகுது விடுப்பா… அதற்கு ஒரு நேரம் வரும்…. அந்த நாள் உன் வாழ்வில் வரும்” என தந்தை தலை வருடி ஆறுதல் படுத்தினார்.

கல்லூரி முடிந்து, மேல் படிப்புக்கென இரண்டாண்டுகள் பாரின் சென்று வந்தேன்… என் பலநாள் கனவை நினைவாக்கவென ஒரு பெரியபல் நாட்டு கணினி கம்பனியில் வேலைக்கு சேர்ந்தேன்.

அங்கே வேலை பார்த்துக்கொண்டே, கற்றுக்கொண்டே என் சுய முயற்சியில் என் சொந்த கம்பனி நிறுவ ஏற்பாடுகளை செய்தபடி இருந்தேன்.

என் கனவை அறிந்த தோள்கொடுக்க துணிந்த என் நெருங்கிய நண்பர்கள் சிலரின் உதவியோடு பெற்றோரின் ஆசைகளோடும் ஆசிகளோடும் கம்பனியை நிறுவினேன்.

பிள்ளை பாதங்களாக மெல்ல மெல்ல தடுக்கி விழுந்து தடுமாறி கரம் பிடித்து தவழ்ந்து அமர்ந்து நின்று நடமாடத் துவங்கியது என் நிறுவனம்.

மெல்ல மெல்ல படியேறி உச்சியை அடைந்தது….. எங்களது நிறுவனம் பப்ளிக் செய்தேன்…. ஷேர்மார்கெட்டில் மிக உச்சாணியில் ஏறி அமர்ந்தது…. நல்ல வருமானம், நல்ல பெயர், புகழ்.

சமீபத்தில் மனம் போல என் கனவரிந்த மனையாளும் அமைந்தாள்.

ஆனாலும்… அடி மனதில் அந்த கனன்று கொண்டிருக்கும் நெருப்பு…..

இந்தநொடியில், நான் ஏறி நிற்கும் இந்த நிலையில், இருந்துகொண்டு மிகவும் சாதாரணமாக நான் அவரை சந்திக்க, கை எழுத்து வாங்கிடமுடியும்தான்… ஆனால்…. ஏதோ தடுத்தது… அது என்ன…..

எனக்கு ஈகோ இல்லை, தற்பெருமை இல்லை, ஆனால் கூச்சம் இருந்தது….. என் தலைவனை கண்டால் என்னவென கூறுவேன் என்ன பேசுவேன், கல்லூரி மாணவனாக நான் இருந்தபோது இருந்த அந்த துணிச்சல் இப்போது எங்கோ சென்று மறைந்துகொண்டு உள்ளிருந்து வாட்டியது.

எங்களது பல்நாட்டு கம்பனியின் புதிய சில பொருட்கள் மேல்நாட்டு கணினி துறையில் சக்கை போடு போட்டது தெரிய வந்தது….. சமாளிக்க முடியாமல் போகும் அளவுக்கு நடக்க, ‘மேல்நாட்டு பொறுப்புகளையும் நாமே இங்கிருந்து கொண்டு கண்காணிப்பதை காட்டிலும் அங்கே அசலுக்கே தொழிலில் உள்ள கம்பனி யாருடனானும் கைகோர்த்து கொண்டால் சுலபமாக இருக்குமே’ என என் மனதில் தோன்றியதை என் மனையாளும் எடுத்துரைத்தாள்.

அந்த விதத்தில் சுந்தரமூர்த்திக்கு சுபா அவர்களை போலத்தான் எனக்கும் என கவிதா.

“நல்ல யோசனை, பார்த்து செய்வோம், அமையரவங்க நல்லவங்களா இருக்கணும் இல்லையா” என்றேன்.

அத்தோடு அந்த நினவு பின்வாங்க பல வேலைகள் பொறுப்புகள் என நாட்கள் கடந்தன.

“நான் சில நல்ல கம்பனிகளிடம் நமது கொலாபறேஷனுக்கு முன் வேலைகளை ஆரம்பிச்சிருக்கேன்” என கவிதா என்னிடம் கட்டியம் கூறினாள்.

“ஒ நல்ல வேளை, நான் அதை மறந்தே போனேன்…..நீயானும் நினவுவெச்சு அதை பார்த்துக்கறியே ரொம்ப நல்லதுமா” என்றேன் ஆத்மார்த்தமாக.

“என்னங்க இந்த ப்ராஜெக்டைபாருங்க, நான்சரியானஒப்பந்தம்போட்டிருக்கேனானு சரி பார்த்துடுங்க, நம்ம லீகல் அட்வைசர் சரினுட்டாரு…. எதுக்கும் நீங்களும் பார்த்துடுங்களேன்” என முன் வைத்தாள்.

மேலோட்டமாக படித்தேன். “நல்ல கம்பநிதானா, இதில கம்பனி பேர் எதுவும் இன்னும் இடப்படலியே?” என்றேன் படித்துக்கொண்டே.

“அவங்களுக்கு பல கம்பனிஸ் பா, அதில எந்த பெயரில இந்த ஒப்பந்தத்த ஏற்க போறாங்கன்னு நாளைக்கு தெரிய வரும், அப்போ அதை பில் அப் பண்ணிடுவேன்” என்றாள் சிரித்த முகமாக.

“ஒ அப்படியா….. அப்படி என்ன பெரிய க்ரூப் இது என்ன பேரு?” என்றேன்.

“இத்தனை நாள் கழிச்சு இப்போவானும் கேட்கணும்னுதோணிச்சே, இத்தனை நாள் தெரிஞ்சுக்கல இல்ல, எல்லாம் நாந்தான் தலைபொறுப்பா எடுத்துகிட்டு செய்யறேன்……திஸ் இஸ் மை பேபி டார்லிங்……. நேரம் வரும்போது தானே தெரிய வரும்” என்றாள் நமுட்டாக சிரித்து

“சரி சரி சந்தோஷமா செய், உன் பேபியாவே இருக்கட்டுமே, அதில முதல்ல பெருமைப்படறவன் நானாகத்தானே இருப்பேன் ஹனி” என்றேன் நானும் சிரித்தபடி.

“ஒப்பந்த தேதி முடிவு பண்ணியாச்சு டார்லிங், நாள மறுநாள்….உங்க காலெண்டர்ல மார்க் பண்ணி வெச்சுட்டேன்….. முக்கியமான திருப்புமுனை நம் வாழ்க்கையில” என்றாள் வெற்றி புன்னகையுடன்.

“கண்டிப்பா, உன் கஷ்டம் வீண் போகலை…..சொல்லாமையே சாதிச்சுட்டே போல” என அவளை கிண்டல் செய்தேன்.

“ம்ம்ம்ஆமா” என்றாள் சிரிப்புடன்.

பெருமையாக உணர்ந்தேன்….இப்பேற்பட்ட மனைவி அமைந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொன்னேன்.

மறுநாள் காலையிலேயே எழுந்து இருவரும் குளித்து கடவுளுக்கு நன்றி கூறி ஒன்றாகவே கிளம்பினோம்.

“ஒப்பந்தம் எங்கே யார் ஆபிசில….பிரஸ்கு சொல்லி இருக்கியா என்ன, சின்னபங்க்ஷன் தானே,பெரிசா பிரமாத படுத்திடலியே, ஏன் சொல்றேன்னா, ரொம்ப ஓவரா தடபுடல் பண்ண வேண்டாமேன்னு தோணிச்சு” என்றேன்.

“தடபுடல் எல்லாம் அந்த கம்பனி தலைவருக்கும் பிடிக்காதாம் பா கார்த்தி…..அதனால நம்ம ஆபிஸ் கான்பரென்ஸ் ரூமில்தான்…..நம்ம முக்கியப்பட்ட தலைமை ஆபிசர்கள் அதேபோல

அவங்க கம்பனி தலைமைகள் அவ்ளோதான்….. ஒப்பந்தம் முடிஞ்சசதும் எல்லாருக்கும் அங்கேயே ஸ்பெஷல் லஞ்ச ஏற்பாடு பண்ணியாச்சு” என்றாள்.

“கிரேட்ஜாப் கண்ணம்மா” என்றேன் கன்னம் வருடி.“போறுமே” என சிவந்தாள்

உள்ளே சென்று அமர “வாங்க டார்லிங், பெரியவர் வந்தாச்சாம்” என பரபரத்தாள் மனையாள்.

நானும் கோட் பட்டனை இட்டுக்கொண்டு விரைவாக வாசலை அடைந்தேன்.

காரை விட்டு இறங்கினார்….ஆம், அவரேதான்……சுந்தரமூர்த்தி அவர்கள்தான்….. காலடியில் பூமி நழுவியது.

‘என்ன அவரா….நிஜமாவே அவர்தானா, என் ஆபிஸ் வாயிலிலா, என்னுடம் ஒப்பந்தம் போடப்போவது அவரா, மைகாட்’ என வாய் பிளந்து திகைத்து நின்று போனேன்.

“ஹலோ யங்மேன், என்னை, விடாது கருப்பு போல துரத்தினியாமே, கேள்விபட்டிருக்கேன்… இப்போவும் ஞாபகம் இருக்கு….. இன்னமும் உன் நம்பர் இமெயில் குடுத்து போனியே அது என்னிடம் இருக்கு…..இப்போ பாரு என்னாச்சு, உன்னைத்தேடி நான் வரும் உயரத்தில் நீ வளர்ந்துட்டே” என சின்னக் குரலில் என்னோடு தோளோடு தோள் உரசியபடி நடந்தபடியே சிரித்த குரலில் பேசினார்.

நான் அசந்துபோய் அவரை திரும்பி பார்த்தேன்.

“நான், என் நம்பர்….?” என தடுமாறினேன்.

“ஆம் என்னிடம் இருக்கு அந்த சீட்டு…… பல முறை உனக்கு போன் பண்ணி வாழ்த்தணும்னு நினச்சுப்பேன், யுநோ நம்ம தொழில் நம்ம பொழப்பு அப்படி….

ஆனாலும் மனசார பல முறை உன்னை வாழ்த்தி இருக்கேன் பா…. ஐ ஆம் ப்ரவுட் ஆப் யு மை பாய்”என்று என் தோளில் தட்டி குடுத்தார்.

“இந்த சிறு வயசில நீ செஞ்சிருக்கற சாதனைகளை பார்க்கும் போது அந்நாளில் என்னை பார்த்ததுபோல தோணுது…… அதே போல யுவர் சார்மிங் யங் வைப், அவ அப்படியே என் சுபாபோலதான், அதே போல சுறுசுறுப்பு, திறமை, சாதுர்யம்……ஷி இஸ் எ பார்ன் அச்சீவர்” என அவளையும் இடது கையால் அணைத்துக்கொண்டார்.

“ஐயோ அப்படி ஒண்ணும் இல்லை…” என கவிதா கூச்சத்துடன் கூறினாள்.

“ஐ நோ மா”என்றார் சிரித்தபடி.

எங்களது மீட்டிங் ஹால்….. அவர் அருகே நான்….. எங்கள் இருவரின் முன்னும் ஒப்பந்த பத்திரங்கள்.

கை எழுத்து……அவர் தன் சொந்தமான பெருமைவாய்ந்த அந்தப் பேனாவுடன் என் கம்பனியுடன் ஒப்பந்தம் செய்ய கை எழுத்து இட்டார்….. ஆம் கை எழுத்து வாங்கியே விட்டேன்…..எப்பேர்பட்ட மனிதனின் எப்பேர்பட்ட கை எழுத்து…..

‘ஆட்டோக்ராபாக வாங்க சிறு வயது முதல் நான் பட்டபாடென்ன, இன்று அவர் என் ஆபிஸ் அறையில் என் முன்னே அமர்ந்து என்னுடம் ஒப்பந்தம் செய்து போடும் கை எழுத்து என்ன…..இறைவா தலை வணங்குகிறேன்’ என மனதார கும்பிட்டேன்.

“இந்தாபா நீயும் போடு” என என் அருகே நகர்த்தினார்…. தன் பேனாவை நீட்டினார் என்னிடம்….. அந்த நொடி தளர்ந்தேன்…..சிவந்தேன்.

“சார்…” என பேனாவோடு சேர்த்து அவர் கையையும் பற்றிக்கொண்டு கண்களில் ஒற்றிக்கொண்டேன்….. கண்கள் மல்கின…..

“இந்த நாளை நான் என் வாழ்வில் சத்தியமாக எதிர்பார்க்கலை சர்” என்றேன் அவருக்கும் கவிதாவுக்கும் மட்டுமே கேட்கும் குரலில்.

“டோன்ட் பி இமோஷனல் மை பாய்…… நீ இன்னும் சாதிக்க எவ்வளவோ இருக்கு….. கண்டிப்பா சாதிப்பே….. அதற்குண்டான திறமை உழைப்பு உன்னிடம் நான் பார்க்கறேன்” என வாழ்த்தினார்.

நான் கை எழுத்திட்டேன்…..கண்களின் ஓரத்திலிருந்து இதை எல்லாம் சிறு குழந்தையின் குதூகலத்துடன் கண்டுகொண்டு இருக்கும் என் மனையாளில் முக மலர்ச்சியை கண்டு நானும் முகம் மலர கை எழுத்திட்டேன்.

“இதை விட பெரிய பரிசு நீ எனக்கு வாழ்நாளில் தந்திருக்கவே முடியாது டார்லிங்” என்றேன் அவள் பக்கம் குனிந்து,

அவளின் செல்லமான ‘போடா’வையும் வாங்கிக்கொண்டு சிரித்தேன்.

“என்னது மீட்டிங் ஹால்ல ரொமான்சா?” என கீழ் குரலில் கேட்டார் சுந்தரமூர்த்தி.

“ஐயோ சர்” என சிவந்தோம் இருவருமே.

பின்னோடு அவருக்கு உணவு படைத்து உபசரித்தோம்.

“சர் கண்டிப்பா ஒரு நாள் மேடமோட வீட்டுக்கு வந்து கவுரவிக்கணும்” என்றேன் தயக்கத்துடன். என்ன கூறுவாரோ என பயந்தபடி.

“அதுக்கென்ன இனி அடிக்கடி சந்திச்சுப்போமே, ஒரு வாட்டி கண்டிப்பா சுபாவோட வரேன்” என்றார். விடைபெற்றார்.

மனம் நிறைந்தது. உள்ளே கனன்ற நெருப்பு அமிழ்ந்தது.

அவர் மீண்டும் மீண்டும் பாராட்டும் வண்ணம் உழைத்து சாதித்து காட்ட வேண்டும் என்ற வெறி மட்டும் அணையாமல் கொழுந்துவிட்டு எரிந்தது.

அவரின் கை எழுத்தை தொட்டு தடவினேன்….. கைமணத்ததோ இல்லையோ மனம் மணத்தது.

ஆம் சுந்தரமூர்த்திசாரின் கை எழுத்தல்லவா….வாங்கியே விட்டேன்….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *