மச்சு வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 3, 2019
பார்வையிட்டோர்: 6,178 
 
 

(இதற்கு முந்தைய ‘சுவர்க் கிறுக்கிகள்’ கதையைப் படித்துவிட்டு இதைப் படித்தால் புரிதல் எளிது)

“அப்ப நல்ல நாள் பாத்து ஆரம்பிச்சிரலாமா தாயி?”

“தொணைக்கு இன்னும் ஒரேயொரு கொத்தனார் மட்டும் வச்சிக்குங்க அண்ணாச்சி.”

“சரி தாயி.”

“சித்தாள் வேண்டாம், நானே அந்த வேலையை பாத்துக்குறேன். நீங்க பாட்டுக்க ஒங்க வேலையைப் பாத்திட்டே போங்க. செங்கல்லு, சுண்ணாம்பு, மண்ணு எல்லாம் நானே போய் பாத்து பாத்து வாங்கிப் போட்டுடறேன்.”

“கதவு, சன்னலு, நெலை எல்லாத்துக்கும் வார்னிஷ் அடிக்கணும்னு சொல்றியே தாயி. இப்ப வார்னிஷ் அநியாய விலை சொல்றாகளே கடையில…”

“அவங்ககிட்ட வார்னிஷ் வாங்கினாத்தானே… நானே காச்சிப்புடுவேன் அண்ணாச்சி. கருங்குளத்ல எங்க அய்யா, சின்னய்யா எல்லாத்துக்கும் விவசாயம் பண்றதுக்கு மேல், வார்னிஷ் காச்சி விக்கறதுதான் தொழிலே.”

“அப்படியா, எனக்குத் தெரியவே தெரியாதே இத்தனை நாளா.”

“அத ஏன் கேக்கறீங்க, அப்பல்லாம் கோவில்பட்டி, விளாத்திகுளம், கடம்பூரு, சாத்தூரு, அந்தப் பக்கம் பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் இப்படிக்கா நெறைய ஊருக்கு போய் எங்க அய்யாதான் காச்சின வார்னிஷை எல்லாம் இரும்புக் கடைங்கள்ல போயி மொத்தமா வித்துப்புட்டு வருவாக.”

“அப்ப ஒனக்கும் தெரியுமா வார்னிஷ் காச்சறதுக்கு?”

“நானுன்தானே கூட சேந்து காச்சுவேன்?”

“இங்கேயும் காச்சு வித்திருந்தா இத்தனை வருசத்துல இன்னும் நாலு வீடுகட்ற மாதிரி துட்டு சம்பாரிச்சிருக்கலாமே தாயி. இப்படியா சும்மா இருப்பே?”

“அதுக்கும் ஒரு நேரம் வரணுமோ, என்னமோ..”

“நேரம் நல்லா வந்திருச்சி போ!”

எது எப்படியோ, பூரணிக்கு வீட்டை செமனி வெள்ளையடித்து பெரிய மச்சி ஒண்ணு கட்டுவதற்கு நேரம் வந்துவிட்டது. நல்ல நாள் பார்த்து வேலையை ஆரம்பித்து விட்டாள். முதலில் கொத்து வேலைக்கான சாமான் ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தது. இரண்டு கொத்தனார்களும் வீடு பூராவும் முதலில் ஒரு நோட்டம் விட்டார்கள். அஸ்திவாரத்தை கணக்கிட்டுப் பார்த்தார்கள். செங்கல், காரை எல்லாம் வந்து இறங்கியது.

முதலில் ஊரில் ஒரே அமளி துமளி… பூரணிதான் வீட்டை யாருக்கோ வித்துப்புட்டாள், வாங்கியவர்கள் வீட்டை ரிப்பேர் பண்ணி நல்லா இடித்துக் கட்டப் போகிறார்கள்னு. பிறகு பார்த்தால் விசயமே வேற..! ஒண்ணும் இல்லாததுக்கெல்லாம் வம்பு பேசுகிற பாளையங்கோட்டை, இவ்வளவு பெரிய சமாசாரத்துக்கு வாயைப் பொத்திகிட்டு சும்மா இருந்து விடுமா? நிறைய பேருக்கு ரொம்ப நேரத்துக்கு திறந்த வாயை மூடவே மறந்து போய்விட்டது. நெசமாவே அவர்களுக்குப் புரியவில்லை இதெல்லாம் நெனவா கனவான்னு. என்னவோவேன்று நினைத்துக் கொண்டிருந்த கருங்குளத்துக்காரி ஒத்தையிலே நின்னு வீட்டுக்காரையில பெரிசா மச்சில்ல கட்றா. அக்ரமமா இல்ல இருக்கு..!

அவர்களுக்கு அக்கிரமமாக இருந்து என்ன செய்ய? பூரணி போட்டத் திட்டம் மெள்ள மெள்ள நடந்தேறியது. ஓடிப்போய் செங்கல்லும் சுண்ணாம்பும் வாங்கிப்போட்டு; கொத்தனார்களுக்கு செங்கல் தூக்கிக் கொடுத்து; ட்ரம் நிறைய தண்ணீர் எடுத்து ஊற்றி; அடுப்படியில் விறகோடு விறகா வெந்து வார்னிஷ் காய்ச்சி; இருக்கிற பாடெல்லாம் பட்டு; தனி மனுசியா நின்னு முப்பதே நாளில் மச்சி கட்டி; வீடு பூராவும் வெள்ளையடித்து, வார்னிஷ் கொடுத்து; பிடரியில் வழியும் வியர்வையை சேலைத் தலைப்பில் துடைத்துவிட்டு; நடுத் தெருவில் போய் நின்னு வீட்டை நிமிர்ந்து பார்த்து பார்த்து மனசு பூரித்தாள்.

இதையெல்லாம் பார்த்த பாளை வியாபாரிகளில் ஒரு சிலர் பூரணியின் எதிரில், தோளில் கிடந்த துண்டை எடுத்து கம்மங்கட்டுக்குள் வைத்துக்கொண்டு நடந்ததாகக் கேள்வி…! காரையில் ஒரேயொரு மச்சி கட்டியதில் அம்மாவுக்கும், பிள்ளைக்கும் அதுவரை இல்லாத கெளரவம் வந்து விட்டது. ரொம்ப ரொம்ப தூரத்து உறவு என்று கூடச் சொல்லிக்கொள்ள முடியாத பயல்கள்கூட இப்போது பூரணியைப் பார்த்தால் ‘மதினி’ என்று ரொம்பப் பிரியமா கூப்பிட்டுச் சொந்தம் பாராட்டிக் கொள்கிறார்கள் என்றால் துட்டின் மகிமை என்ன என்கிறதைப் புரிஞ்சு கொள்ளலாம். இதே மதினி மச்சு கட்டுவதற்கு முந்தி வெறும் கருங்குளத்துக்காரி… அடப் பாளை சனங்களா..!”

ஆச்சு, பெரிசா மச்சு கட்டி முன்னத்ல பூசணிக்காயை கட்டித் தொங்க விட்டாச்சி.

“இங்க எங்க பொழப்பே இழுத்துக்கடா பறிச்சிக்கடான்னு கெடக்கு, இதுல இவ மகனுக்கு வேலை கொடுக்கணுமாம். அம்புட்டுத்தேன்; இந்த ஆனா ஆவன்னா சொல்லத் தெரியாத தடிப்பயலையெல்லாம் வேலைக்கி வெச்சிகிட்டா நாங்க பெறகு சிங்கிதேன் அடிக்கப் போகணும் போ போ..! ஒன் மவனுக்கு வேலையும் கிடையாது ஒண்ணும் கிடையாது..” என்று முந்தி விரட்டிய வியாபாரிகள், இப்போது பூரணி கேட்காமலே வேலைக்கு இசக்கியை வரச்சொல்லி ஆள் மேல் ஆள் அனுப்பினார்கள். பூரணிதான் அவர்களின் சங்காத்தமே வேண்டாம்னு இருந்தாள்.

ஜோதிடர் இன்னும் ரெண்டு வருசத்துக்கு இசக்கிக்கு நேரம் சரியில்லை என்று சொல்லியிருக்கிறார். அதனால் ரெண்டு வருசத்துக்கு அவன் பாட்டுக்கு செட்டியாரின் கிணற்றில் மீன் பிடித்துக்கொண்டு திரியட்டும்… பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று மகனை அவன் போக்கில் விட்டுவிட்டாள் பூரணி. ஆனால் அவள் சும்மாயிருக்கவில்லை.

வார்னிஷ் காய்ச்சுகிற தொழிலை ஆரம்பித்துவிட்டாள். புதிதாக வீடு கட்டிக் கொண்டிருக்கும் மனிதர்களை சந்தித்து அவர்களுக்குத் தேவையான வார்னிஷ் பூராவும் அவளே சப்ளை செய்தாள். இசக்கிதான் போய் வார்னிஷ் டின்களை டெலிவரி செய்துவிட்டு வருவான்.

பூரணி அவள் காய்ச்சிய வார்னிஷ்க்கு பேர் எதுவும் வைக்காவிட்டாலும், பாளை மக்கள் பூரணி வார்னிஷ் என்று அவர்களாகவே ஒரு ட்ரேட்மார்க் கொடுத்து விட்டார்கள். ஆறேழு மாதங்களில் பூரணி வார்னிஷ் ரொம்ப பிரபலமாகிவிட்டது. அப்போதுதான் பக்கத்துத் தெருவில் இருக்கும் ஆவுடையப்பன் பூரணியின் வீடு தேடி வந்தார்.

“அண்ணாச்சி வாங்க வாங்க, ரொம்ப நாள் கழிச்சி எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க… எதுவும் விசேசமா அண்ணாச்சி? பூரணி அவரை வரவேற்றாள்.

“விசேஷம் நீதேன் சொல்லணும் பாப்பா.”

“எங்க வீட்ல என்ன அண்ணாச்சி விசேசம் இருக்கு?”

“ஒன மகன் இசக்கியை ஏன் இப்படி சும்மா சுத்த விட்டுட்டு இருக்க?”

“படிப்புத்தேன் அவனுக்கு மண்டையிலே ஏறவே மாட்டேன்னிடுச்சே?”

“படிப்பைக் கொண்டு ஒடப்ல போடு..! இசக்கிக்கு வயசென்ன இப்ப?”

“இருவது.”

“கல்யாணத்தை செஞ்சி வச்சிருன்தீன்னா பிள்ளையை பெத்திருப்பான்.”

“ஒரு வேல, ஒரு தொழில்னு இல்லாம இப்ப எப்படி அண்ணாச்சி அவனுக்கு கல்யாணத்தைப் பண்ணி வைக்கிறது?”

“நா அவனுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்கச் சொல்லலை பாப்பா. ஏதாவது வேலை வெட்டி பார்க்கச் சொல்லாமல், பாவம் நீ வார்னிஷ் காச்சி அடுப்படியில் வெந்து சாகிறதுக்கு இசக்கிப் பயலுக்கு ஒரு தொழிலை ஆரம்பிச்சுக் குடுக்கலாம்ல? ஏன் சொல்ரேன்னா இந்த வயதில் ஒரு ஆம்பிளைப் பையன் சும்மா இருக்கப்படாது பாப்பா… படிப்பு வந்தா படிக்கணும். வரலைன்னா ஏதாவது ஒரு வேலை செய்யணும். சும்மா இருக்கக்கூடாது. இன்றைக்கு சும்மாயிருந்தா நாளைக்கு உடம்பு வணங்காது..”

“தொழில் ஆரம்பிச்சுக் கொடுக்கலாம்தேன் அண்ணாச்சி… அதுக்குத்தேன் நம்ம செட்டிகுளம் ஜோசியர்கிட்டே போயி கேட்டேன். அவரு என்னவோ இசக்கிக்கு இன்னும் ரெண்டு வருசத்துக்கு நேரம் சரியில்லைன்னு சொல்லிட்டு, இப்ப எதுவும் பண்ணாத அவனுக்கு, எதைப் பண்ணாலும் சரியா வராது… அதனால ரெண்டு வருசத்துக்கு அவன் சும்மா இருந்தாலே நல்லதுன்னுட்டார். அதான் நானும் பேசாம அவனை விட்டுட்டேன்.”

“அப்படியெல்லாம் விடக்கூடாது. பேசாம இசக்கியை எங்கூட அனுப்பு. ஆறுமாசம் எங்கூடவே அவனும் மலையாளத்துக்கு வரட்டும். நெளிவு சுளிவு எல்லாத்தையும் ஆறே மாசத்ல சொல்லிக் குடுத்திடறேன். பெறகு அவனா தனியா சொந்தமா செய்துக்கட்டும். என்ன சொல்ற?”

“நீங்க பாத்து அவனுக்கு எது செஞ்சாலும் எனக்கு சம்மதன்தேன்.”

“புதன்கிழமை புதன்கிழமை நான் மலையாளத்துக்குப் போவேன்.”

“தெரியும் அண்ணாச்சி.”

“சனிக்கிழமை ராத்திரி திரும்பிருவேன்.”

“எங்க தங்கிப்பீங்க அண்ணாச்சி?”

“ஏதாவது ஒரு கடையிலேதேன் படுத்துப்போம். சாப்பாடுதேன் மலையாளத்ல வாய்க்கு வெளங்காது..”

“தொழிலுக்குன்னு போற எடத்ல அதையெல்லாம் பாக்க முடியுமா அண்ணாச்சி?”

“அதனால, இசக்கி கிளம்பற அன்னைக்கி ரெண்டு நாளைக்கிக் காண்ற மாதிரி அவனுக்குப் புளியோதரை கட்டிக் குடுத்திரு. அதுதேன் கெட்டுப் போகாம இருக்கும்…”

“சரி அண்ணாச்சி கட்டிக் குடுத்திடறேன்.”

“புதன்கிழமை காலைல நாலு மணி பாசஞ்சர் ரயிலுக்குத்தேன் போவேன். ஞாபகமா வரச் சொல்லிரு இசக்கியை.”

“நேரா டேசனுக்கே வரச்சொல்லிறவா அண்ணாச்சி?”

“எங்க வீட்டுக்கு வரச்சொல்லு சேந்துபோயிடறோம். இன்னொரு விஷயம் பாப்பா நீ இந்த வார்னிஷ் காச்சி விக்கிறதை எல்லாம் விட்டுப்பிடு. ஒனக்கு எதுக்கு இத்தன பாடு? நல்லா மச்சுவீடு கட்டி ஓஹோன்னு இருக்கே. அதுல செளகரியமா இருப்பியா. இப்படி அடுப்படியில கெடந்து வெந்துகிட்டு இருக்கியே பாவம். அதுவும் காத்தவராயன் கணக்கா ஒரு ஆம்புளைப் புள்ளயை வேறு வச்சிக்கிட்டு.”

“ஒங்களோட இவ்வளவு பெரிய உதவிக்கு என் மவன் நல்லபடியா வரணும்.”

“வருவான், வருவான். அப்ப நான் கெளம்பட்டுமா பாப்பா. இசக்கிப் பயலை மறந்துராம புதன்கிழமை காலையில மூணு மணிக்கு எங்க வீட்டுக்கு வந்திரச் சொல்லு.”

“கண்டிப்பா அண்ணாச்சி.”

“ஆவுடையப்பன் எழுந்து போனார். இசக்கி அவருடன் நல்லபடியா மலையாளத்துக்குப் போய் வியாபாரம் தெரிந்து கொண்டால் நெல்லையப்பர் கோயிலுக்கு வந்து பன்னீர் அபிஷேகம் செய்வதாய் பூரணி மனசுக்குள் வேண்டுதல் செய்து கொண்டாள்.

விஷயம் தெரிந்ததும் இசக்கிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. வாரா வாரம் ஆவுடையப்ப அண்ணாச்சியுடன் மலையாளத்துக்கு ரயிலில் போயிட்டு வரலாமே..! அவன் ரயிலில் ஏறி ரொம்ப வருசமாகிவிட்டது. எப்பவோ அம்மாவுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் போனது. தெரிந்தவர்கள் எல்லோரிடமும் போய் சொல்லிவிட்டான். நான்கு நாட்கள் இருக்கும்போதே ரெண்டு சட்டையும், ரெண்டு வெட்டியும் ஒரு பையில் எடுத்து வைத்துக்கொண்டான்.

ஆவுடையப்பன் ரொம்ப வருஷமா மலையாளத்துக்காரன்களுக்கு சரக்கு வாங்கிப் போடுகிற பிசினஸ்தான் செய்து வருகிறார். மலையாளத்தான்களுக்கு எல்லாமே பாளையங்கோட்டையில் இருந்துதான் போக வேண்டும். அரிசி; துவரம்பருப்பு; உளுத்தம்பருப்பு; பாசிப்பருப்பு; மல்லி; சீரகம்; மற்றும் எண்ணெய் வகைகள்… அவர்கள் ஊரில் திருப்பித் திருப்பி கிடைப்பது தேங்காய்தான். ஆனால் தேங்காயை சாப்பாட்டில் எக்கச்சக்கம் சேர்த்துக் கொள்கிறார்களா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. அதற்கெல்லாம் சேர்த்து அதன் எண்ணையை வண்டி வண்டியாய் தலையில் போட்டுத் தேய்த்துக் கொள்வார்கள். அதனால்தானோ என்னவோ மலையாலத்தான்களில் வழுக்கைத் தலையை மருந்துக்குக்கூட பார்க்க முடியாது. அதே மாதிரி தலைமயிர் நரைத்தும் பார்க்க முடியாது. சுருட்டை சுருட்டையாய் முடி கருகருவென்று இருக்கும் அவ்வளவு பயல்களுக்கும்.

மலையாளப் பெண்மணிகள் அவ்வளவு பேரும் சுத்தமான மேனி மினுமினுப்புடன் கிளிகொஞ்சும் அழகில் ஜொலிப்பார்கள். பார்ப்பவர்கள் சொக்கித்தான் போவார்கள். காரணம் உடம்பிலும் தலையிலும் அப்பிக் கொள்ளும் தேங்காய் எண்ணை.

மலையாளத்தான்கள் எல்லோருமே பாக்கிறதுக்குக் கொஞ்சம் கொஞ்சம் பொம்பளைப் பிள்ளைகள் மாதிரிதான் இருப்பான்கள். மை தீட்டின மாதிரி கண்கள் இயற்கையாகவே கறுப்பாக இருக்கும். கண்ணாடி போட்ட ஒருத்தனைக்கூட பார்க்க முடியாது. அதேமாதிரி மீசை இல்லாமல் ஒரு மலையாளத்துக்காரனைப் பார்க்க முடியாது. ஒவ்வொருத்தனுக்கும் மீசை அரிவாள் மாதிரிதான் இருக்கும்.

மீசையை மட்டும் வைக்கச் சொன்னால் ஆவுடையப்பனும் பார்க்கிறதுக்கு ஒரு வயசான மலையாளத்தான் மாதிரிதான் இருப்பார். ஆனால் ஆவுடையப்பன் தலை வழுக்கையான மலையாளத்தான்..! அதுதான் வித்தியாசம்.

செவ்வாய்க்கிழமை ராத்திரி இசக்கிக்கு உறக்கமே வரவில்லை. ரெண்டு மணிக்கெல்லாம் எழுந்து குளித்துத் தயாராகி விட்டான். சரியாக மூணு மணிக்கு ஆவுடையப்பன் வீட்டுக் கதவைப் போய்த் தட்டினான். அதிகாலையின் ஜில்லுப்பான காற்றில் ரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்து போவது இதமாக இருந்தது. பாசஞ்சர் ரயில் சரியான நேரத்தில் வந்து கிளம்பியது. இசக்கி ஜன்னல் ஓரமாய் உட்கார்ந்து, பொழுது விடியாத இருளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். ஸ்டேஷன்கள் பெயரை கவனித்து ஞாபகத்தில் வைத்துக்கொண்டான். ஆனால் ரயிலில் ஏறியதுமே இசக்கிக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தைக் காதில் போட்டுக்கொள்ள வேண்டியிருந்தது.

அந்தப் பாசஞ்சர் ரயிலில் ஆவுடையப்பனைப் போலவே மலையாளத்துக்கு சரக்கு வாங்கிப் போடுகிற பாளையங்கோட்டை மனுஷர்கள் இருபதுபேர் இருந்தார்கள். அந்த இருபது பேரில் ஆவுடையப்பன் மட்டும்தான் டிக்கெட் வாங்கியவர். மிச்சம் பத்தொன்பது ஆசாமிகளும் டிக்கெட் வாங்கவில்லை. அப்போது மட்டுமில்லை. எப்பவுமே அவர்கள் ரயிலில் போனால் டிக்கெட் வாங்குவது இடையாது. வியாபார சோலியா சதா ரயிலில் போய் போய் ரயிலில் வருகிற அவர்களுக்கு, எல்லா டீட்டியாளர்களும் ரொம்பப் பழக்கமாகி விடுவார்கள். ஆகையால் ரயிலில் போக அவர்கள் கவர்ன்மென்ட் டிக்கெட் வாங்காமல் டீட்டியாருக்கு துட்டு கொடுத்துவிட்டு சல்லிசாக ஊருக்குப் போய் வந்துவிடுவார்கள்.

உதாரணமா, பாளையிலிருந்து கொல்லம் போக பாசஞ்சர் ரயிலில் அப்பல்லாம் ரெண்டே ரூபாய்தான் சார்ஜ். அந்த ரெண்டு ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுப்பதென்றால் மனசே வராது அவர்களுக்கு. இத்தனைக்கும் அந்த ஆசாமிகளின் பெண்டாட்டிமார்கள் ஒவ்வொருத்தியும் கழுத்தில் தாலிக்கொடியே இருபது பவுனில் போட்டிருப்பார்கள்.

இந்தக் கொல்லம் போகிற பாசஞ்சர் ரயிலில் தினமும் குறைந்தது பத்துப் பதினைந்து பாளையங்கோட்டை வியாபாரிகள் இருப்பார்கள். இவர்கள் டிக்கெட் எடுக்காமல் என்னமோ அவர்கள் மாமியார் வீட்டு வண்டிபோல ஏறி சலாத்தலாய் உட்கார்ந்து கொள்வார்கள். டீட்டியாரும் தன் வேலை அத்தனையையும் முடித்துவிட்டு இந்த கோஷ்டியில் வந்து உட்கார்ந்துகொண்டு அரட்டையடிக்க ஆரம்பித்துவிடுவார். இல்லேன்னா சீட்டு விளையாடுவார். அந்தப் பத்து பெரும் தலைக்கு எட்டணா வீதம் போட்டு அஞ்சு ரூபாயை டீட்டியாரிடம் கொடுத்து விடுவார்கள். கொல்லத்தில் இறங்கிப் போகும்போது பத்துப்பேரும் கலெக்டர் மாதிரி கையை வீசி வீசி நடப்பார்கள். வெளியேறும் இடத்தில் ஒருத்தர் டிக்கெட் கேட்டு நிற்பாரே, அவரிடம் ‘டீட்டியார்’ டிக்கெட் என்று ரொம்பக் கெத்தாக சொல்லிவிட்டு ராஜா மாதிரி போவார்கள். உடனே கேட்டில் நிற்பவர் பின்னால் பார்ப்பார்.

ரயிலில் வந்த டீட்டியார் தூரத்தில் நின்னு எத்தனைபேர் என்பதைக் கையை உயர்த்தி என்னமோ கை காட்டி மரம்போல சிக்னல் கொடுப்பார்..! இந்த அநியாயம் காலம் காலமாக நடந்து வந்தது.

ஒருவகையில் பார்த்தால் பாளையங்கோட்டை வியாபாரிகள் இப்படியெல்லாம் செய்யாவிட்டால்தான் ஆச்சர்யம். எப்படின்னா அவர்கள் எல்லாமே வெள்ளைக்காரனுக்கு வால் பிடிக்கிறவர்கள். ‘வெள்ளையனே வெளியேறு’ என்று கோஷம் போட்ட காங்கிரச்காரன்களை கால்தூசியாய் நினைத்தவர்கள். வெள்ளைக்காரன் தங்களுக்கு ராவ்பகதூர் பட்டத்தை தூக்கிக் கொடுத்து விடமாட்டானாவென்று பேயாய் அலைந்தவர்கள். அவர்களின் புத்தி எப்படி இருக்கும்? வெள்ளைக்காரன் சுரண்டிச் சுரண்டி அவனுடைய தேசத்திற்கு சுருட்டிக்கொண்டு ஓடினான். இந்த ஆசாமிகள் தங்கள் வீட்டுப் பொம்பளைகளுக்கு கல் வளையல்களும், கல் நெக்லசுமாய் செய்து செய்து போட்டார்கள் இப்படியெல்லாம் சுரண்டிய துட்டில். அப்பல்லாம் பவுன் பதினெட்டே ரூபாதானே? அஞ்சு மாசம் கொல்லத்துக்கு டீட்டியார் டிக்கெட்டில் போய் வந்துட்டா மிச்சமாகிற டிக்கெட் செலவில் ஒரு பவுன் வாங்கிடலாமே..! இந்த மாதிரி ஆசாமிகள்தான் முக்கால்வாசிப்பேர் பாளையில். பின்ன எப்படி ஒழுங்கா மழை பெய்யும் அந்த ஊர்ல…!

இசக்கிக்கு ஆறுதலான விஷயம் ஆவுடையப்பன் அண்ணாச்சி டிக்கெட் வாங்கி இருந்தார். ஆகையால் அவன் இந்த டீட்டியார் டிக்கெட் கோஷ்டியின் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காமல் வெளியிலேயே பயணம் முழுக்க வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *