எல்லோருக்கும் சம்பளம் கொடுத்து முடிய இரவு எட்டு மணி ஆகி விட்டது. வழக்கத்தை விட அன்று ஒருமணி நேரம் தாமதம் என்று உணர்ந்தான் சதீஷ்.
அது ஒரு ரெண்டுங்கெட்டான் ஊர். கிராமமும் இல்லை, பெரிய டவுனும் இல்லை. அந்த மாதிரி சின்னச் சின்ன ஐந்து ஊர்களில் ஒவ்வொன்றிலும் ஐம்பதிலிருந்து நூறு பெண்கள் வரை சேர்த்துத் தையல் பயிற்சி கொடுத்து, அவர்களுக்கு வேலையும் கொடுத்தது, நகரத்திலிருக்கும் ஒரு கம்பெனி. அந்தப் பெண்களிடம் துணி கொடுத்து, ரெடிமேட் ஆடைகள் தைத்து வாங்கி, பெரிய அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அந்த நிறுவனத்தில் சதீஷ் கேஷியர் வேலை பார்த்து வந்தான்.
மாதத் தொடக்கத்தில் ஒருநாளைக்கு ஒரு தையல் மையம் என்ற அளவில் சதீஷ் தலைமையகத்திலிருந்து பணம் எடுத்துச் சென்று அங்குள்ள பெண்களுக்கு சம்பளப் பட்டுவாடா செய்து திரும்புவது வழக்கம்.
அன்று அவன் சென்றிருந்த தையல் யூனிட்டின் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் பூங்கோலம் என்ற பெண் பளிச்சென்று இருப்பாள். சிரிப்பை எந்நேரமும் உதட்டில் ஒட்ட வைத்துக்கொண்டு, வெடுக் வெடுக்கென்று பேசி எதிராளியை வம்புக்கு இழுக்கும் அவளது சுபாவம் அனைவருக்கும் ரொம்பப் பிடிக்கும்; சதீஷ் உட்பட!
“கேஷியர் ஸார். ஸேலரி பட்டுவாடா செஞ்சு டயர்டாகி இருப்பீங்க. அடுத்த தெருவில்தான் என் வீடு! வாங்க சூடா தோசை வார்த்துப் போடறேன். மிளகாய்ப் பொடி எண்ணெய், தேங்காய்ச் சட்னி தொட்டுகிட்டுச் சாப்பிட்டா ரொம்ப நல்லாயிருக்கும்! அதுவும் மசால் தோசை! நான் அதில் ஸ்பெஷலிஸ்ட். வந்து சாப்பிட்டுப் போங்க!” என்று சொல்லி, அவனைக் கனிவாகப் பார்த்தாள் பூங்கோலம்.
மை எழுதிய அவள் விழிகளில் ஒரு காந்த சக்தி நிலவி அவனைக் கவர்ந்து இழுப்பதாகத் தோன்றியது. திருமணமாகி, இரண்டே ஆண்டில் கணவனோடு வாழப் பிடிக்காமல் விவாகரத்து
பெற்ற பெண் அவள் என்பதும் தற்போது அவள் தனியாகத்தான் வசிக்கிறாள் என்பதும் சதீஷுக்குத் தெரியும்! மாதாமாதம் சம்பளப் பட்டுவாடாவுக்கு அந்தத் தையல்
யூனிட்டுக்கு வரும்போதெல்லாம், அவள் சதீஷைக் கிறக்கமாகப் பார்ப்பதும், குழைவாகப் பேசுவதும், மையலுடன் அவனை உரசி நிற்பதும்…
அப்போதெல்லாம் சதீஷுக்கு மனம் சிறகடித்துப் பறக்கும்.
இன்று…?
“என்ன பூங்கோலம், நீங்க மசால் தோசை வார்த்துத் தருவீங்கன்னு நான் உங்க வீட்டுக்கு வந்துட்டா, இன்னும் அரை மணியில் எனக்குக் கடைசிப் பஸ் போயிடுமே.. அப்புறம் எப்படி
ஊருக்குப் போறதாம்..?” என்று கேட்டான் சதீஷ்.
“அவள் செல்லமாகச் சிணுங்கினாள். என்னங்க கேஷியர் ஸார், நீங்க ஒருத்தர் ராத்திரி தங்கறதுக்குத்தான் என் வீட்டுல இடம் இல்லாமப் போயிடுமாக்கும்?” கண் சிமிட்டியபடி பூங்கோலம் கூறியபோது உடம்பு முழுக்க ஜிவ் வென்று மின்சாரம் பாய்ந்தது போல உணர்ந்தான் சதீஷ். மனசில் பர பரவென்று மகிழ்ச்சித் துள்ளல்.!
பூங்கோலம் ஓர் அழகான இளம் பெண்; தனியாக வசிப்பவளும்கூட. தன் வீட்டில் இந்த இரவில் டிபன் சாப்பிடவும், இரவு அவளுடனே தங்கவும் அழைப்பு விடுக்கிறாள் என்றால்..?
எப்பேர்ப்பட்ட வாய்ப்பு! ஓர் இளம் அழகியுடன் ஓர் இரவை ஜாலியாகக் கழிக்க அரிய வாய்ப்பு தேடி வருகிறது.. “அட நான் பெரும் அதிர்ஷ்டசாலிதான்!” மனதுக்குள் ஒரே சமயம் ஆயிரம்
வயலின்கள் தேனிசை முழக்கி அவனுக்கு மயக்கம் வரவழைத்தன…
“ஸார்!” தையல் யூனிட்டின் வாட்ச்மேன் மேத்யூஸ் கூப்பிட்டார்.
“வாங்க ஸார், ஒரு டீ சாப்பிட்டு வரலாம்!”
மேத்யூஸ் வயதானவர். அவருடன் பக்கத்து டீக்கடைக்கு நடந்தான்.
கால்கள் மேத்யூஸுடன் நடந்தாலும், மனம் போதைக் கிறக்கத்தில் இருந்தது. பூங்கோலம் என்ற கட்டுடல் கொண்ட ஓர் அழகியுடன் அவள் வீட்டில் தான் கழிக்கப் போகும் அந்த இரவின்
சுகானுபவத்தை விதம் விதமாகக் கற்பனை செய்து சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தான்.
“அப்ப முடிவே பண்ணிட்டீங்களா ஸார்..?”
“ஆங்…”
“மசால் தோசை சாப்பிடப் போகணுமின்னு முடிவே பண்ணிட்டீங்களான்னு கேட்டேன்…” சதீஷின் முகத்தைப் பார்த்துத் தயக்கமாகக் கேட்டார் மேத்யூஸ்.
“அது வந்து… சூப்பர்வைசர் பூங்கோலம் கூப்பிடறாங்க. போகலாமா, வேணாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்…”
“வயசுல பெரியவன்கிற முறையில நான் ஒண்ணு சொல்லலாமா..?”
“சொல்லுங்க மேத்யூஸ்!”
“இந்த சூப்பர்வைஸர் மேடம் ஏற்கெனவே பல பேரை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயி மசால் தோசை போட்டுக் கொடுத்திருக்கு. உங்களுக்கும் போட்டுத் தரும். நீங்க பஸ்சைத்
தவற விட்டோம்கிற காரணத்தைச் சொல்லி, அங்கேயே ராத்திரி தங்குவீங்க. ராத்திரி பூராவும் உல்லாசம்தான்! அப்புறம், இந்த உறவு தொடரும். அந்தப் பொண்ணும் ஒங்களை விடாது; நீங்களும் அவங்களை விட மாட்டீங்க… ஆனால், இதில் ஒரேயொரு வில்லங்கம் இருக்கு. அது என்னன்னா..?”
“சொல்லுங்க மேத்யூஸ்!”
“ஆமா ஸார்! இதுக்கப்புறம் மாசா மாசம் ஒண்ணாம் தேதி நீங்க சம்பளப் பணத்தை உங்க வீட்டுக்குக் கொண்டு போக முடியாது, அவ்வளவுதான்..!”
“வாட்..?”
“ஆமா ஸார். அந்தப் பொணனு கேக்கறதை வாங்கிக் கொடுத்தே நீங்க ஓட்டாண்டி ஆகிடுவீங்க. முதல்ல சம்பளம் அம்பேல் ஆகும். அப்புறம் கடனாளி ஆவீங்க. அப்புறம்
குடும்பத்துல குழப்பம்… தற்கொலை கூட செய்துக்கலாம்னு தோணும். இதுக்கு முந்தி மூணு, நாலு பேர் சாதாரண மசால்தோசைக்கு ஆசைப்பட்டு அவங்க வீட்டுக்குப் போய், இப்ப
ஊருக்குள்ள பைத்தியமாத் திரிஞ்சுகிட்டிருக்காங்க..”
“ஐயோ! வீட்டுக்கு சம்பளம் கொண்டு போக முடியாதா? வயதான தாய்-தந்தை, திருமணத்துக்கு நிற்கும் இரண்டு தங்கைகள், கல்லூரிப் படிப்பில் உள்ள தம்பி…” பகீரென்றது சதீஷுக்க்கு.
திரும்பவும் தையல் யூனிட்டுக்கு வந்தவன் பூங்கோலத்திடம் “ஸாரி சிஸ்டர், நான் அவசரமா ஊருக்குப் போகணும். உங்க மசால் தோசையைச் சாப்பிட எனக்குக் கொடுத்து வைக்கலை.
மன்னிச்சுக்குங்க!”
கை கூப்பிவிட்டு, தெருக்கோடியில் உள்ள பஸ்டாண்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தான் அவன்.
(ஆனந்த விகடன் வார இதழ்)