மகிழம்பூ

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 15, 2013
பார்வையிட்டோர்: 9,242 
 

குமரேசன் ஏறி மிதிக்கும் நேரத்தில் சைக்கிளில் செயின் கழன்று போய்விட்டது. குப்பற விழுந்தான். பாலத்தின் மேலிருந்து ஆற்றுக்குள் குதிக்க ஆயத்தமான சிறுவர்கள் திரும்பி பார்த்தனர். அவர்களில் ஒருவன் குமரேசனை பார்த்து ஓடிவர அவனை தொடர்ந்து மற்ற சிறுவர்களும் ஓடி வந்தனர். அதற்குள் குமரேசனே எழுந்து புறங்கையில் தோல் கிழிந்து ரத்தம் சொட்டுவதை தன் கைலியால் துடைத்துகொண்டான். ஓடி வந்த சிறுவர்களிடம் , ” ஒண்ணுமில்லடா… போய். குளிங்க… என்று சொல்லுவிட்டு சைக்கிள் செய்யினை மாட்டுவிட்டு ஓட்டத்துவங்கினான்.சிறுவர்கள் திரும்பி பாலத்தை நோக்கி ஓடினர். புதிதாகபாலம் கட்டியதிலிருந்து இப்படிதான் பையன்களை கட்டுப்படுத்த முடியவில்லை.குமரேசன் சிறுவனாக இருந்தபோது குதித்த பாலம் சிதிலமடைந்து பக்கத்தில்தான் இருக்கிறது. அந்த பாலத்தை கடந்து ஐயர்வீட்டு கொல்லைகாட்டு வழியே போனால் காளியம்மன் கோவிலின் பின்புறத்திலிருந்து மூன்று சாலை பிரியும் அதில் வலப்பக்கம் திரும்பி கொஞ்ச தூடத்தில் வலப்பக்கம் திரும்பினால் அக்கிரகாரம் கடைசியில் ஏறிவிடும் . அதில்
திரும்ப வலப்பக்க திரும்பினால் மெயின் ரோடு வந்துவிடும். அங்கிருந்து கொஞ்ச தூரத்திலிருக்கும் காளியம்மன் கோவிலை தாண்டிய அடுத்த சந்தில்தான் அவன் தேடிவந்திருக்கும் நாட்டாண்மைகாரர் வீடு இருக்கிறது. குமரேசன் இப்போது தங்கியிருக்கும் ஊரிலிருந்து மெயின் ரோட்டிலிருந்து நேராக
வந்தால் இத்தனை சுற்று இல்லாமல் மெயின் ரோட்டிலேயே வந்திருக்கலாம். தினமும் அப்படிதான் வருவான். இன்று ஏனோ அவனால் அப்படி வருவருதில் ஒருவித சங்கடம் இருந்தது. ஒரு கள்ளனைப்போல தன் மனத்தில் மறைத்துள்ள புகாரை யாரேனும் கண்டுகொண்டுவிடுவார்களோ என்று பதட்டத்தோடேவந்துக்கொண்டிருந்தான்.

பாலத்தை கடக்கும்போது பொத்தென்று நான்கு சிறுவர்கள் ஒன்..டு..த்ரி..சொல்லி ஆற்றுக்குள் குதித்தார்கள். மழை வரும்போலிருந்தது. கொல்லை காட்டுவழியிலிருக்கும் அடர்ந்து விரிந்திருக்கும் புளியமரத்தின் கீழே சைக்கிளை நிறுத்தி விட்டு பீடி ஒன்றை எடுத்து பத்தவைத்துகொண்டான். திலகாவை பெண் பார்க்கபோன நாளில் கூட மழை வந்தது. பெண் பார்க்க என்று சொன்னாலும் அது பெண் பார்க்க இல்லை என்பது சென்ற அனைவருக்கும் தெரியும். சொந்த மாமன் மகளை பெண் கேட்கத்தான் போனார்கள். எல்லோரும் புறப்பட்டு
தயாராக இருந்த போது குமரேசன் இப்போது மழைக்கு ஒதுங்கியிருப்பது போல செட்டியார் வீட்டுவண்டி கொட்டகையில் ஒதுங்கியிருந்தான்.செக்கில் நேற்று தேங்காய் கானம் ஆடியிருப்பார்கள் போல அந்த பகுதியே அது மணந்துகிடந்தது. குமரேசனுக்கு இரண்டு அண்ணன்களும் ஒரு தம்பியும் ஒரு அக்காவும் இவன் தலையெடுப்பதற்குள் அப்பா போய்சேர்ந்திருந்தார். அண்ணன்கள் இரட்டையர். ஊர் வழக்கப்பட ராமன் லெஷ்மனன் என பெயர் வைத்திருந்தனர். அக்கா விமலாவை சுரைக்குடியில் கட்டிகொடுத்திருந்தனர். அக்கா மீது குமரேசனுக்கு கொள்ளைப் பிரியம். அக்கா உறவு வழியிலேயே இரண்டு அண்ணகளுக்கு பெண் எடுத்திருந்தனர்.திருமணம் ஆன சிலமாதங்களில் பெரிய அண்ணன் கொல்லை புறமாக வீடுகட்டிகொண்டும் சின்ன அண்ணன் தெருக்கோடியில் வாடகைக்கும் தனியே போய்விட்டனர்.

சின்ன வயதில் அக்காவோடு குமரேசன் மகிழம்பூ பொறுக்க போவதற்காவே பலநாட்கள் பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் இருந்திருந்க்கிறான். ஆற்றை ஒட்டியிருக்கும் மாரியம்மன் கோவில் வாசலில் நீண்டு வளர்ந்திருக்கும் மரத்தில் மகிழம்பூக்களை பொறுக்க ஏகப்போட்டி நடக்கும். பெருத்த நான்கு
ஆலமரங்களும் ஒற்றை அரசமரமும் மாரியம்மன் கோவில் திடலுக்கு போதுமான நிழலையும் யாருமற்ற நேரத்தில் பயத்தை தந்துகொண்டிருந்தன. மதிய நேரத்தில் உருமி நேரம் என்பதால் சின்ன பிள்ளைகள் மட்டுமல்ல பெரியவர்கள் கூட அந்நேரத்தில் கோவிலருகே இருக்க மாட்டார்கள். அந்நேரத்தில்தான் அக்காவோடு குமரேசன் செல்வான். அக்கா அப்போதுதான் வயது வந்திருந்தாள் என்பதால் அவளை அழைத்து போககூடாதென்று சொல்லி விட்டு தான் அம்மா அக்கிரகாரத்திற்கு வேலைக்கு சென்றிருப்பாள். ஆனாலும் இருவருக்கும் வீட்டில் கால் பொறுக்காது.செட்டியார் செக்குமரத்தை தாண்டுவதற்குள் மகிழம்பூ வாசம் இவர்களை தொட்டுவிடும். குமரேசன் கால்களை குறுகுறுகச்செய்து விரோந்தோடி சென்று மரத்தை தொடுவான். கோவிலை தொட்டவாறே ஓடும் ஆற்றின் குளுமையோடு சேரும் மகிழம்பூவின் வாசம் அவனின் புத்திக்குள் சின்ன கிரக்கத்தை தரும். ஏழு கன்னிமார்கள் மணற்மேட்டில் கால்மேல் கால்வைத்து உட்கார்ந்துகொண்டவனின் தலை ஏதோ பாட்டிற்கு தலையசப்பவனை போலிருக்கும். எச்சில் தொட்டு மூக்கினருகே வைத்துகொண்டு பூக்களை எடுத்து எச்சிலில் ஒட்டவைத்துகொள்வான். ஏழு கன்னிமார்கள் மேட்டின் மேலிருந்து அடுத்த கொல்லையின் மூங்கில் குத்தினையே பார்த்துகொண்டிருந்தான். எப்படியும் ஒரு பாம்பாவது வரும் என்று அவனுக்கு தெரியும் அவன் நிறைய முறை பாம்புகளை அந்நேரத்தில் பார்த்திருக்கிறான். ஒரு முறை இரண்டு பாம்ம்புகள் சண்டையிட்டு கொள்வதுபோல கட்டிபுரண்டு கொண்டிருந்தன. பாம்புகள் அப்படி கிடப்பதை அவன் முதல்முறை அப்போதுதான் பார்த்தான். வாய்விட்டு அலறியவனிடம் அக்கா வந்து பார்த்துவிட்டு ஒன்றும் இல்லையடா என்று சொல்லிவிட்டு போனாள்.

ரொம்பநேரம் பாம்புகள் சண்டை போட்டுகிட்டு கிடக்குது பாரேன் என்றவனிடம் அதெல்லாம் கொஞ்சநேரத்தில் போயிடும் நீ வந்து பூக்களை பொறுக்கி கொடு. என்று வெகு சாதாரணமாய் போய்விட்டது.

“என்னடா அக்காவுக்கு தம்பிக்கு வேற வேலை இல்லையா”

என்று கேட்டுக்கொண்டே சேகர் அண்ணன் வந்தது. அக்கா ஏதும் பேசாமல் பூக்களைப் பொறுக்கி கொண்டிருக்கும். சேகர் அண்ணன் என்னிடம் ஒரு ரூபாயை தந்து த‌னக்கு ஒரு நிஜாம் பாக்கும் சொச்சத்திற்கு மிட்டாயும் வாங்கிங்கன்னு சொன்னதும் நான் காசை வாங்கிட்டு கடைக்கு ஓடினேன். பதினைந்து காசுக்கு நிஜாம் பாக்கு வாங்கினால் பாக்கி காசு எல்லாம் அவனுக்குதான் அக்கா விரும்பி தின்கிற தேன் மிட்டாய்களை மறக்காது வாங்கிவருவான். திரும்ப வரும்போது அக்காவும் சேகர் அண்ணனும் கோவில்கிட்ட இருக்கிற கிணற்றருகே நின்னு பேசிகிட்டு இருந்தார்கள். பின்னாடி கோவிலிருந்து புறாக்கள் பறந்து மேலேயும் கீழேயும் இருந்தன. எங்கோ தூரத்தில் வெடி போடுகிற சத்தம் வந்ததும் ஒரே தடவையாக புறாக்கள் எல்லாம் பறந்து அவைக்கென்றே கோவில் வைத்திருக்கிற பொந்துகளுக்குள் போய்க்கொண்டன. அக்காவும் சேகர் அண்ணனும் பேசிகொண்டிருந்தார்கள் என்று சொல்வது ஒரு பேச்சுக்குதான். சேகர் அண்ணன் பேச பேச அக்கா சிரிச்சிட்டு இருக்கும். சேகர் அண்ணன் எப்பவும் சிரிக்க பேசுவார். ஒருநாள் பூப்பொறுக்க போகையில் சேகர் அண்ணன் கையில் சின்னதாக ஒரு பை வைந்திருந்தார். அவர் துபாயிலிருந்து வந்திருந்தார் அந்த பையைபோல அவன் ஊரில் யாரிடமும் பார்த்தது இல்லை அதனாலேயே அது துபாய் பை என்று நம்பினான். அவன் அவர்களுக்கருகே வருதற்குள் அந்த பை அக்காவின் கைக்கு மாறியிருந்தது. அக்கா அந்த பையை பற்றி யாரிடமும் சொல்லக்கூடாதென்று வீட்டிற்கு போவதற்குள் பலதடவை சொல்லிவிட்டாள் அதற்குள் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் அக்கா அந்த பையை தன் தகரப்பெட்டிக்குள் வைத்துவிட்டு சென்றதும் திறந்துப்பார்த்தான். இலையில் சுற்றப்பட்டி மல்லிகை பூக்களும், ஒரு தாவணியும் இருந்தன. சின்னதாக சென்ட் பாட்டில் ஒன்றும் இருந்தது. அன்றைக்கு அக்கா தேன் மிட்டாய்களை அவனுக்கே சாப்பிடதந்துவிட்டாள்.

மழை வந்தேவிட்டது. புளியமரம் நனையாமல் காக்குமா என்று யோசித்தாலும் வேறு வழியின்றி அங்கேயே நின்றுகொண்டான் குமரேசன். நன்றாகத்தான் அடிப்பட்டுவிட்டது போல . அடிப்பட்ட இடத்தில் தண்ணீர் பட்டதும் எரிச்சலானது. திலகா இந்நேரம் வேலைக்கு கிளம்பியிருப்பாள். பக்கத்துவிட்டு
சுமதியக்காவோடுதான் சித்தாள் வேலைக்கு செல்வது அவனுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை என்றாலும் அவன் சொன்னாலும் கேட்க மாட்டாள். அவள் சிரித்து பார்த்து ரொம்ப நாளாயிற்று. அவளை பெண் கேட்க செல்வதை அவளின் அப்பாவிடம் ஏற்கனவே சொல்லியிருந்தாலும் அன்றுதான் அவளிடம் சொல்லியிருந்தார்கள். அவளுக்கு குமரேசன் மேல் விருப்பம் இல்லை என்றாலும் வெறுப்பும் இல்லை .

சம்பிரதாய பேச்சு வார்த்தகள் முடிந்து ஊருக்கு கிளம்புகையில் குமரேசன் அவளிடம் போய்ட்டு வாரேன் என்று சொல்லிவிட்டு சென்றான். அவன் அப்படி சொல்வதற்க்குள் நான்கைந்து முறை சிரித்துவிட்டான். திலகாவிற்கு அப்படி சிரித்ததுகூட பிடித்துதான் போனது. கல்யாணத்திற்கு முன் ஏதோ காரணம் சொல்லி இரண்டொரு முறை வந்துவிட்டான். ஒருமுறை மகிழம்பூக்களை ஊசியில் கோர்த்து அதை சரமாக்கி கொண்டு வந்திருந்தான். திலகாவின் அம்மா அதை பார்த்துவிட்டு பலமாகவே சிரித்தாள். இருவரும் காரணம் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துகொண்டனர். அன்று அவன் வெகுவேகமாக சைக்கிளில் வந்தான்.

நல்லிச்சேரி வளைவு மதகை கடக்கையில் அவன் உயர பாம்பு பெரும் இரையை தின்றுவிட்டு சாலையை கடக்க முடியாமல் கடந்துகொண்டிருந்தது. அதன் மேல் மேதிவிடாதிக்க சைக்கிளைத் திருப்ப அது வரப்பில் மோதி பொத்தென்று கீழே தள்ளியது. பாம்பு சிலநொடிகள் நின்று பின் நகர்ந்தது. அவன் கைகளில்
இன்னும் மகிழம்பூ வாசம் வீசிக்கொண்டியிருந்தது.

கல்யாணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக அவன் வேலை பார்த்து கொண்டிருந்த உரக்கடையில் அவனை வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். கல்யாணத்திற்கு முன்பணம் கேட்க நினைத்திருந்ததை அவர்கள் யூகித்திருத்திருக்கலாம். கும்பகோணத்து மார்க்கெட்டிலிருந்து வெங்காய மூட்டையை எடுத்துவந்து சைக்கிளில் வைத்து ஊர் ஊராக சென்று விற்றான். திலகா ஊருக்கு விற்க வந்தபோது திலகாவின் அப்பா அவனை கூப்பிட்டு இங்க வந்து ஏன் மானத்தை வாங்குற என்று கடிந்துகொண்டார். திலகாவுக்கு கொடுப்பதற்காக மகிழம்பூ சரத்தை அன்றும் எடுத்துவந்திருந்தான். சைக்கிளில் ஹேண்ட் பாரில் காசு வாங்கி போட்டுக்கொள்வதற்காக மாட்டியிருந்த பையில் அது இருந்தது. நான்கு முறை சில்லறைக்காக பையுனுள் கைவிட்டு எடுத்த போது பூச்சரம் கசங்கி போய்விட்டது. அவனிடம் கடுகடுத்த மாமாவிடம் சொல்லிகொண்டு கிளம்புகையில் திலகா தண்ணீர் கொண்டு வந்து தந்தாள். அப்போது அவன் மீது மகிழ்ம்பூ வாசமடித்தது. திலகா அந்த வாசத்தை உணர்ந்துகொண்டவளாய் மெலிதாக சிரித்தாள்.

ஊர் ஊருக்கு நாயாய் அலைகிற பிழைப்பு வேண்டாமென்று எரவாஞ்சேரி பாய் சைக்கிள் கடையில் வேலைக்கு சேர்ந்தான். பாய் நல்ல மனிதர். குடும்பஸ்தன் என்பதால் அப்போதைய தினக்கூலியான முப்பதைந்து ரூபாயை குமரேசனுக்கு தந்தார்.இடையில் ஏதாவது அவசரம் என்றாலும் கொடுத்துவந்தார். அவன் அங்கேதான் சைக்கிளை பழுதுபார்க்க கற்றுகொண்டான்.பாய் அவனுக்கென்று ஒரு சைக்கிளைத் தந்திருந்தார். சம்பளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பிடித்துகொள்கிறேன் என்று அவர் சொன்னாலும் அப்படி பிடித்ததில்லை. வெள்ளிக்கிழமைகளில் பாய் கடையை மதியத்திற்கு மேல் பூட்டிவிடுவார். அன்றைக்கெல்லாம் குமரேசன் திலகாவை சைக்கிளில் படம் பார்க்க அழைத்துசெல்வான். ஒருமுறை அவள் வீட்டிற்கே சைக்கிளில் அழைத்துசென்றான். ஒவ்வொருமுறையும் மகிழம்பூ பொறுக்கி கோர்த்து தலையில் வைக்கச்சொல்லியே அழைத்துச்செல்வான்.அவளுக்கும் அவ்வாசம் பிடித்துப்போனது அவனைப் பிடித்தைப்போல.இதற்குள் அவனின் மூத்த அண்ணனுக்கு உடல்நிலை மோசமாகி இறந்து போனார். அவர் இறந்த ஆறுமாதங்கள் முடிந்து தம்பி ஒரு பெண்ணோடு மாலையும் கழுத்துமாக
வீட்டுக்கு வந்தான். சண்டை போட அவன் அம்மாவால் முடியவில்லை. அந்த சின்ன வீட்டிற்குள் அறை ஒன்று இருப்பதே பேருக்குதான். சமையற்கட்டும் அந்த அறையும் வேறு இல்லை என்பது போலதான் இருக்கும்.அவனின் அம்மாவால் அங்கு தங்க முடியாமல் மகள் வீட்டிற்கே சென்றுவிட்டார்.

வாத்தியார் வீடு கட்டும்போது வாட்ச்மேன் தங்குவதற்காக சின்னதாக குடிசைப் போட்டியிருந்தார். அந்த குடிசையில்தான் குமரேசன் அவன் தம்பியோடு சண்டை போட்டபிறகு குடியேறினான். கதிர்வேலுதாத்தா மட்டும் தங்குவதற்காக கட்டப்பட்டிருந்த குடிசையில் இருவர் தங்குமளவே இடமிருந்தது. திலகா
பின்புறம் கல்கட்டிசமையல் செய்துகொண்டாள். திலகாவின் பெட்டியும் , குமரேசன் அவனது அக்கா வைத்திருந்த பெட்டியையும் இரவில் வாசற்தட்டியை மூடியபின் தட்டிக்கு அணைப்பாக வைத்திருந்தனர். சேகர் அண்ணன் தந்த அந்த துபாய் பையினை அக்கா திருமணத்திற்கு பிறகு அவள் இந்த பெட்டியில் அடியில்
போட்டியிருந்தாள் குமரேசனும் காரணமின்றி அந்த பையை தூக்கியெறியமாலும் உபயோகப்படுத்தாமலும் வைத்திருந்தான். அக்குடிசை சாலையை ஒட்டியிருந்ததால் அதன் வாசலில் சின்னதாக சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடை மாதிரி போட்டியிருந்தான் குமரேசன். அருகிலேயே அவ்வூர் பள்ளிக்கூடம் இருந்ததால் பள்ளிக்கூட மாணவர்கள் வந்து போயினர். அந்த வருமானம் பாய் கொடுத்ததைப் போல் தின 35 ரூபாய் என்று உத்திரவாதமாக இல்லை. யாராவது டய்ர் டியூப் மாற்றவேண்டும் வந்தால் அன்று கொஞ்சம் நன்றாக இருக்கும். ஓரிரு பஞ்சர் மட்டும் வந்தால் கையில் ஏதும் தேறாது. அதிலும் பள்ளிக்கூட பையன்களிடம் கறாராக அவனால் கேட்க மனம் வருவதில்லை. ஒருநாள் ஏழாவதோ எட்டாவதோ படிக்கும் பையன் தயங்கி தயங்கி வந்து சைக்கிளில் காற்று இறங்கிவிட்டது காசு இல்லை என்றான். குமரேசன்,

“அதனால் என்னடா.. நாளைக்கு வந்து கொடேன்..

என்று விசுக் விசுக் என்று அடித்தபின் மூச்சு வாங்கியது. திடென்று மகிழம்பூ வாசம் வர சுற்றும் முற்றும் பார்த்தான். அந்த பையன் தன் காற்சட்டை பையினுள் கைவிட்டு மகிழம்பூக்களை காட்டினான். அவன் கையை மூக்கினருகே கொண்டுபோய் வாசத்தை உள்ளேயிழுத்துக்கொண்டான் குமரேசன்.

“உங்களுக்கு வேணுமின்னா வைச்சிங்கங்க மாமா ”

என்று அவன் கையில் கொட்டிவிட்டு சைக்கிளில் ஏறி சென்றுவிட்டான். [அந்தப் பையன் தான் குமரேசனை முதலில் மாமா என்று அழைத்தது, இப்போது பள்ளிக்கூட பையன்கள் பெண்கள் எல்ளோரும் அப்படிதான் அழைக்கிறார்கள்] சமைத்துக்கொண்டிருந்த திலகாவிடம் அந்த பூக்களை கொடுக்க உணர்ச்சியேதும் காட்டாமல் வாங்கி அருகிலிருந்த பாத்திரத்தில் வைத்துகொண்டாள். சிறிதுநேரம் கழித்து குமரேசனே ஊசியால் பூக்களை கோர்த்து திலகாவிடம் தர, தலையில் வைத்துகொண்டாள்.

அன்றிரவு பெய்த பெரு மழையில் குடிசைக்குள் ஒழுக வாத்தியார் வீட்டுப் போர்ட்டிகோவில் உட்கார்ந்துகொண்டார்கள் . நேரமாக நேரமாக மழை குறைவதாக கூட‌யில்லை. திலகா குமரேசனின் மடியில் படுத்துக்கொண்டாள். அவள் தலையில் வைத்திருந்த மகிழம்பூவின் வாசம் அவனின் உடல் முழுவதும் பரவி, மழை ஈரத்தைப் போல அவர்களை நனைத்தும் கிறங்க வைத்துக்கொண்டிருந்தது. அவள் சேலைத்தலைப்பை எடுத்து போர்த்திக்கொள்கிறாள். மழை நனைத்துவிடுவதற்காக கைகளை இன்னும் விரிக்க இருவரும் ஒருசேர உடல்களை குறுக்கிகொள்கிறார்கள். அவன் அவள் காதில் முத்தமிட்டபோது அவள் பாதங்களில் குறுகுறுத்தன. அவளின் கை அவனின் கிழிந்து முடிந்திருந்த கைலியின் முடிச்சை நீவிக்கொண்டிருந்தது. காற்று அவளில் சேலையை கலைக்க இழுத்து மூடுகையில் அவளின் சடை முகம் பக்கம் வர, சடையை ஒழுங்கு செய்யவிடாமல் மகிழ்ம்பு மணம் அவளை தளர்த்தியது. அவன் தன் விரலால் அவளின் முடிகளை கோதிக்கொண்டே,சூடான மூச்சுக்காற்றை அனுப்பிகொண்டிருந்தான். அவள் அவனின் பாதங்களில் மெல்ல வருடிவிட்டுகொண்டிருந்தாள். மகிழம்பு வாசம் ஒரு கட்டத்தில் அவர்களின் இருப்பை அங்கிருந்து நகர்த்தியது. அவன் சைக்கிளில் ஓட்ட அவனுக்கு மிகப்பிடித்த பொன்நிற சேலையை அவளுடுத்திக்கொண்டு ஆற்றுக்கரையோரமாக இருக்கும் தென்னந்தோப்பு வழியே அவர்கள் செல்கின்றனர். சைக்கிள் மிதிப்பதே தெரியாமல் அவன் மிதிக்க, இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என அவள் அவனை அணைத்துகொள்ள பாலத்தின் மேல் செல்லும் பயணத்தில் மகிழம்பூ வாசத்தோடு ஈரமும் கோர்த்துகொள்ள அவன் காரணமேயின்றி சைக்கிளில் பெல் அடித்து செல்கிறான். மழை கொஞ்சம் குறைந்தது. அவள் காதோடு தன் காதையும் இணைத்து முகம் சாய்த்திருந்த போது தெருவிளக்கு வெளிச்சத்தில் நன்றாகவே தெரிந்தது விரைந்தோடும் பாம்பு ஒன்று. வாத்தியார் வீட்டில் யாரே கழிவறை செல்லும் சத்தம் கேட்க அவள் எழுந்துகொண்டாள்.

வாத்தியார் வீட்டை தொடர்ந்து அதற்கு அடுத்த இடத்தில் மில்காரார் வீடுகட்டத்துவங்கினார். அவரின் மகன் துபாயிலிருந்து வந்திருந்தான். அவர்கள் மனை முகூர்த்தம் செய்த இரண்டாம் நாள் குமரேசனுக்கு அம்மை போட்டது. மிக சுத்தப்பத்தமாக எல்லாவற்றையும் திலகா செய்தாலும் அடுப்பெரிய வாத்தியார் வீட்டை அடிக்கடி எதிர்ப்பார்க்கவேண்டியிருந்தது.முகம் சுளிக்காமல் அவர்களும் உதவினர். மூன்று தண்ணீர் ஊற்றிய போதும் குமரேசனால் முன்னைப்போல் முழு தெம்புடன் வேலைகள் செய்யமுடியவில்லை. ரேசன் கடை வேலாயுதம் இவனோடு படித்தவன் அதனால் அரிசியை அவன் காசு ஏதும் கேட்காமல் கொடுத்துக்கொண்டிருந்தான். பள்ளிக்கூடம் வேறு கோடை விடுமுறை விட்டதும் சுத்தமாக வருமானம் போனது. சமையல் மாஸ்டர் முருகனோடு சமையல் வேலக்கு சென்றாலும் கடினமான வேலை செய்ய முடியாததால் சின்ன பையன்களுக்கு கொடுக்கும் சம்பளத்தையே தந்தார்கள். அதுவும் தொடர்ச்சியாக வேலை இருப்பதில்லை. இருந்தாலும் உள்ளுர் கல்யணங்களுக்கு வேலைக்கு செல்வதை அவன் தவிர்த்தான். மாமனார் ஊருக்கு அருகேயிருக்கும் மண்டபங்களாக இருந்தாலும் போகவேண்டாம் என்றும் திலகாவே சொல்லியிருந்தாள்.

மாரியம்மன் கோவிலில் நடந்த கல்யாண வேலைக்கு சம்பளம் தர தாமதமானதும், மகிழம்பூ மரத்தடியில் உதிர்ந்திருக்கும் பூக்களை பொறுக்கி துண்டில் முடிந்துகொண்டான். அங்கேயே கண்ணம்மா பாட்டி வீட்டில் ஊசி நூல் வாங்கி பூக்களை கோர்த்து வைத்துக்கொண்டான். சாயந்திரம் திலகாவிடம் தந்தபோது தலையில் வைத்துகொண்டே தலைவலிக்குது என்றாள் இரண்டு கி.மீ தள்ளியிருக்கும் கடைத்தெருவில் மாத்திரை வாங்கிச்சென்றபோது கடைத்தெரு வழியே செல்லாமல் மசூதி தெருவழியே சென்றான். கடைத்தெருவில் பாய் கடை இருப்பதாலும் அவன் ஓட்டிக்கொண்டிருக்கும் சைக்கிளுக்கு இன்னும் பாய்க்கு
பணம் தரவில்லை என்பதாலும் அவன் சுற்றி சென்றான். பாயிடமிருந்து இவன் வேலையை விட்டு நின்றது பலதடவை இவனை பார்த்து பேசியிருக்கிறார் ஒருமுறைக் கூட அந்த சைக்கிள் பற்றி கேட்டதில்லை. மாத்திரை வாங்கிவிட்டு திரும்பவும் மசுதி தெரு சுற்றி வீட்டுக்கருகே வந்தபோது வீட்டின் வாசலில் மில்காரர் மகனும் திலகாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். இவனைக் கண்டதும் சிரித்துகொண்டே,” கடைத்தெரு போனிங்களா… என்று கேட்டுக்கொண்டே அந்த மில்காரர் மகன் அருகில் வந்தான். அவன் மேல் மகிழம்பூ வாசம் வீசியது. திலகா குமரேசனோடு எவ்வித மாற்றங்களும் இல்லாமல்தான் பழகிகொண்டிருந்தாள்.

ஒருநாள் அவள் துபாய் பை ஒன்று வைத்திருந்ததை ஏதென்று கேட்க மில்காரர் பையன் உங்களுக்கு சட்டை தந்ததாக எடுத்துக்காட்டினாள். அதில் பேரீட்சைப் பழங்கள் கொஞ்சமும் இரண்டு தலைவலி பாட்டில்களும் கிடந்தன. ஆனால் அங்குசென்ட் வாசம் மணத்தது.

சில மாதங்கள் கழித்து ஒருநாள் வாத்தியார் வீட்டோடு திலகா கடுமையாக சண்டைப் போட்டாள். குமரேசன் காரணம் கேட்க ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தாள். வாத்தியார் மனைவி குமரேசனிடம் கறாராக சொல்லிவிட்டு சென்றாள்” நீ மட்டும் இருக்கிறதுன்னா இரு.. அவ இங்க இருக்க கூடாது…” .திலகா தன் பெட்டியில் சாமான்களை நிறைக்க தொடங்கினாள். அவளுக்காக கோர்த்து வந்த மகிழம்பூ சரம் சைக்கிளில் தொங்கிகொண்டிருந்தது. நான்கைந்து மைல் தள்ளி திலகாவின் தூரத்து மாமாவின் ஊரில் ரோட்டோரமாய் குடிசை போட்டுகொண்டு அங்கயே போய்விட்டார்கள். குமரேசந்தான் தினமும் இங்கு வந்து குடிசைக்கு அருகில் கடை விரித்து சூரியவெளிச்சம் இருக்கும் வரை வேலை பார்ப்பான். மத்தியான நேரத்தில் வாத்தியார் வீட்டில் வடிகஞ்சி வாங்கி குடிப்பான். அவர்கள் எவ்வளவு வற்புறுத்தியும் சாப்பிட மறுத்தான். ஒருநாள் பசி தாளாமல் மதியநேரத்தில் வீட்டிற்கு போகும்போது மில்காரர் மகன் வீட்டின் வாசலில் நின்றிருந்தான். வாங்க… சும்மா வந்தேன். டீ குடிச்சிட்டு வருவோமா என தொடர்பில்லாமல் கேட்க, ஏதும் சொல்லாமல் கொல்லைபுரம் சைக்கிளை பூட்டி விட்டு மீண்டும் வாசலுக்கு வந்தபோது மில்காரர் மகனின் சிநேகிதன் அவன் வீட்டிற்குள்ளிருந்து வந்தான். திலகா ஒரு பாத்திரத்தை எடுத்துகொண்டு தெரு பம்படிக்கு சென்றாள். குமரேசன் வீட்டிற்குள் சென்று இருந்த பழைய சாதத்தை போட்டு சாப்பிட்டுவிட்டு சைக்கிளில் ஏறி திரும்புகையில் பெரும் சுமையேற்றிய லாரி இவன் மேல் புகையைக் கக்கிச்சென்றது. கடைக்கு வந்துவிட்டான். அன்றிரவு அவன் வீட்டிற்குச் செல்ல‌வில்லை.

அடுத்தநாள் மாலை மகிழம்பூக்களைக் கோர்த்துகொண்டு வீட்டிற்கு சென்றபோது பக்கத்துவீட்டு சுமதியோடு சித்தாள் வேலைக்கு போய்விட்டு குளித்துகொண்டிருந்தாள். இவன் பூச்சரத்தை சாமி போட்டோ அருகே
வைத்துவிட்டு முகம் கழுவி வந்தான். பூச்சரம் அப்படியே இருந்தது. இவனுக்கு சாப்பாடு போட்டாள். சாப்பிட்டு முடித்தான். பூச்சரம் அப்படியே இருந்தது.அவளும் சாப்பிட்டுவிட்டு , பாத்திரங்களை விளக்கி வைத்துவிட்டு வந்தாள். இவன் சைக்கிளை ஒட்டுத்திண்ணையில் ஏற்றி பூட்டினான். அப்பூச்சரம்
அப்படியே இருந்தது. அவள் பாய்விரித்து படுத்துகொண்டாள். இவன் அருகில் படுத்துகொண்டான். அவள் அடுப்பையும் இவன் சைக்கிளையும் பார்த்துகொண்டிருக்க பூச்சரம் அப்படியே இருந்தது. நள்ளிரவை
தாண்டியபொழுதில் பலத்த ஹாரன் சத்ததோடு ஏதோ வண்டி ஒன்று கடந்து போனது.

அடுத்த நாள் இரவு அவன் அவளின் காதில் முத்தமிட, வெக்கையாக இருக்கு என்று அவள் எழுந்து வாசலில் நின்றுகொண்டாள்.கூரை பொத்தல்களில் வழிந்த நிலவொளி வட்டத்தை சுற்றி சுற்றி வட்டமிட்டுகொண்டிருந்தான். அவள் சுமதி விழித்திருக்கிறாளா என்பதை போல சுமதி வீட்டை எட்டிப்பார்த்தாள். காரைக்காலிலிருந்து செல்லும் கடைசி பேருந்து வீட்டு வாசலில் இருக்கும்
பள்ளத்தில் விழுந்து சென்றது. இவன் விழித்திருந்த வரை அவள் வந்து படுக்கவில்லை. விடிந்தபோது கஞ்சி காய்ச்சிகொண்டிருந்தாள். முகம் சிரிப்பேதுமில்லை. சிடுசிடுக்கவும் இல்லை . வேலைக்கு செல்ல விரைந்து
கிளம்புவதுபோல புறப்பட்டுகொண்டிருந்தாள். அவனுக்கு ஒரு வாளியில் கஞ்சி ஊற்றி சைக்கிளுக்கருகே வைத்துவிட்டு தயாரயிருந்த சுமதியோடு கிளம்பிவிட்டாள். குமரேசன் எழுந்து கொல்லைபுறம் செல்ல அவன் குளிக்க வாளி நிறைய தண்ணீர் தயாரக இருந்தது. குமரேசனின் காதிற்கு புதுபுது செய்திகள் வந்தவண்ணமிருந்தன. புதுபுது ஆட்கள் பெயரோடு அவள் கிசுசுக்கப்பட்டாள்.

குமரேசனின் பெரியம்மா பேரனுக்கு காதுகுத்திற்கு சொல்லியிருந்தார்கள். திலகாவிடம் சொன்னபோது அவள் ஏதும் சொல்லாமல் வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட்டாள். குமரேசந்தான் சென்றிருந்தான். உள்ளூர் மாரியம்மன் கோவிலில்தான் விஷேஷம். சாப்பாடு முடிந்ததும் எல்லோரும் கிளம்ப, சமையல் பாத்திரங்களை வண்டியில் ஏற்றிவிட காத்திருந்த வேளையில் மகிழம்பூக்களை கண்ணம்மா பாட்டி ஊசிநூலில் கோர்த்துகொண்டு வீட்டிற்கு திரும்பினான். வீட்டிற்குள் நுழைந்ததும் அந்த வாசனை அவளின் மூச்சை நிறுத்தியபோது போல வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்தாள். வாசம் ஒரு பாம்பினை போல அவளை துரத்த, அவள் சுமதி வீட்டிற்கு செல்ல அங்கும் விடாது துரத்த, இடைவெளியில்லாமல் ஒரு சொம்பு நீரை குடித்தபின் செய்வதறியமால் வீட்டிற்குள் நுழைந்து அப்பூச்சரத்தை தூக்கியெறிந்தாள். குமரேசன் அதை எடுத்துவந்து அவன் புதிதாக நட்ட புங்கன் மரக்கன்றின் மேல் போட்டான். அவள் இன்னமும் மூச்சு விட சிரமப்படுபவளைப் போல சுவாசித்துகொண்டிருந்தாள். அவன் அப்பூச்சரத்தை ஒரு குழந்தையை தூக்கி செல்வதுபோல தூக்கிகொண்டு ஆற்றை நோக்கிச்சென்றான். அன்றைய நிகழ்ச்சி பிறகு குமரேசன் மகிழம்பூக்களை கொண்டுவருவதில்லை. திலகா அவனின் கிழிந்த கைலிகளை தைத்துவைப்பாள். சட்டை பொத்தான்கள் பிய்ந்துவிடாமல் கவனமாக துவைப்பாள். அவன் வைத்த புங்கன் கன்றுக்கு நாள்
தவறாமல் நீர் ஊற்றுவாள். என்றைக்காவது அவன் சைக்கிளை துடைப்பாள். புதிதாக அவனுக்கு செறுப்பு வாங்கித்தந்தாள். அவன் சபரி மலைக்கு மாலை போட்டியிருந்தபோது கவிச்சி சேர்க்காமல் இரண்டு வேலைகளும் சுடுதண்ணீர் வைத்துதந்தாள். அவன் மலைக்கு போய்வந்து மாலையை கழற்றிய அடுத்த நாள் அவள் பாதுகாப்பாய் எரவானத்தில் செறுகியிருந்த‌அவனின் செறுப்புகளை தந்தாள். அன்றிரவு அவன் கதவைச் சாத்திவிட்டு அவளருகே படுத்துகொண்டான். புரண்டு அவளைக் கட்டிக்கொண்டான். அவள் அப்படியே கிடந்தாள். அவளின் முகம் தூக்கி முத்தமிட்டான். அவள் அப்படியே கிடந்தாள். உதடுகளருகே உதடுகளை கொண்டுபோக அவள் புரண்டு அடுப்பை பார்த்து படுத்துக்கொண்டாள். அவள் கைகள் இறுக மூடியிருந்தன. கால்கள் மரத்துபோனதுபோல கிடந்தது. இடுப்பில் அவன் கைவைத்தபோது எவ்வித உணர்ச்சியற்றும் கிடந்தாள். அவனால் அதற்கு மேல் ஏதும் செய்யமுடியவில்லை எழுந்து வாசலில் நின்ற போது வடிவேலிடமிருந்து பீடி வாங்கி பற்றவைத்தான். அவன் வாழ்வில் அதுதான் அவன் பிடித்த முதல் பீடி. அப்படியே சைக்கிளை எடுத்து கிளம்பிவிட்டான். அவள் எழுந்து சாமி போட்டாவிற்கு பின்னால் வைத்திருந்த காய்ந்த மகிழம்பூ சரத்தை எடுத்து முகர்ந்துகொண்டாள். சுமதி வாசல் தெளித்துகொண்டிருக்கும் சத்தம் கேட்டது.

மழை நின்றுவிட்டது புளியமரத்தில் சாய்த்திருந்த சைக்கிளை எடுத்துகொண்டு நாட்டாண்மை வீட்டிற்கு செல்லும் வழியில் பிரிந்தான். நாட்டாண்மை என்றால் பெரும் தலை இல்லை. குமரேசனுக்கு நான்கைந்து வயது மூப்பு. ஆனாலும் இருவரும் சேர்ந்து விளையாடி ஊர்சுற்றியதெல்லாம் பெருங்கதை.
பெரியபிள்ளையும் குமரேசனும் நன்னிலத்திற்கு சைக்கிளில் படம்பார்க்க போய் சைக்கிளில் லைட் இல்லையென்று போலிஸில் மாட்டியதையும் ஊரிலிருந்து வந்து விடுவித்ததையும் பெரியபிள்ளை வீரகாவியம் போல பலநூறுதடவைகள் சொல்லிகொண்டிருப்பார். அவர் மோட்டார் சைக்கிள் வைத்திருந்தாலும் வீட்டில் கிடக்கிற சைக்கிளை ஆறுமாதத்திற்கொரு முறை குமரேசனிடம் ஓவராயில் செய்ய சொல்லுவார். காசு எல்லாம் கணக்கு பார்ர்த்தேயில்லை. மாலை நேரத்தில் அவனின் கடையில் வந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார். திலகாவை பெண் கேட்க போகும்போது இவன் சார்பாக வந்தது இப்போது நாட்டாண்மையாக இருக்கிற பெரியபிள்ளைதான். நேற்று கடைத்தெருவில் பார்த்தபோது நாளைக்கு காலையில் வீட்டில் வந்து பார்ப்பதாக சொல்லியிருந்தான்.

காளியம்மன் கோவிலை தாண்டி, அந்த வளைவில் திரும்பினால் நாட்டாண்மை வீடு. இந்த விஷயமாக அவரை பார்த்து பேசுவதற்காக கிட்டத்தட்ட ஆறுமாதமாக யோசித்து,யோசித்து வேண்டாம் என்றும் அப்புறமா என்றும் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்திருக்கிறான். யோசிக்கும்போதெல்லாம் என்ன பேசவேண்டும் என்று ஒவ்வொரு தடவையும் சொல்லிபார்த்துகொள்வான். சொல்லும்போது வாணி அங்க இருக்ககூடாதென்று முதலிலேயே முடிவில் இருந்தான். வாணி நாட்டாண்மை மனைவி. இவனோடு அஞ்சாவது வரைக்கும் படித்தவள். அஞ்சாவது வரை மாமா வீட்டில் தங்கி பின் அவள் வீட்டிற்கு சென்று படித்தாள். மாமன் மகன் பெரியபிள்ளையே கட்டிகொண்டுவந்துவிட்டாள். எப்பாவது நாட்டாண்மை வீட்டுக்கு சென்றால் பெரியபிள்ளை விட்டாலும் வாணி சாப்பிடாமல் அனுப்பமாட்டாள். அவள் முன் இதை சொல்வது அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. காளியம்மன் கோவில் பந்தலில் நின்று ஒரு முறை பேசப்போவதைச் சொல்லிப்பார்த்துக்கொண்டான்.

” மாப்பிள்ள.. நான் சொல்றத உங்க காதுக்குள்ளயே வச்சிங்கங்க.. வாணியிட்ட சொல்லியிடாதீங்க.. திலகா கொஞ்சம் முன்னபின்ன இருக்கிறதா நீங்க கூட எங்கிட்ட ஒருவாட்டி சொல்லியிருக்கீங்க.. எதனால அவ அப்படி இருக்கான்னு தெரியல.. இருந்துகிட்டு கூட போகட்டும்..நான் அவளுக்கு செஞ்ச ஒரே பாவம்
மகாராணியா இருக்க வேண்டியவளை சித்தாள் வேலைக்கு அனுப்பிட்டு
இருக்கிறதாம்.. அவளுக்கு நியாயமுனு படறதை அவ செய்யட்டும் மாப்பிள்ளை..
எங்கூட ஏன் அவ சந்தோஷமா இருக்க மாட்டாங்கிறா… இல்லாட்டியும் பரவாயில்லை.. மகிழம்பூ சரத்தையாவது அவள வச்சிக்க சொல்லி நீங்கதான் சொல்லுனும் மாப்பிள்ள…

ஒத்திகை பார்த்தபின் குமரேசன் கண்களை ஒருமுறை துடைத்துகொண்டான். சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். அதோ அந்த வேப்ப மரத்தை ஒட்டின மாதிரி திரும்பினால் மூன்றாவது வீடுதான் நாட்டாண்மை வீடு. அவன் வேப்பமரத்தினருகே திரும்பாமல் தென்கரை செல்லும் வழியில் சைக்கிளை மிதித்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *