எதிரே நின்று கொண்டிருந்த படைகளை பார்த்தார் ராசா, எங்கிருந்து வந்தார்கள் இந்த வெள்ளையர்கள், நம் நாட்டின் மீது போர் தொடுக்க அவசியம் என்ன? இது எல்லாம் யாருடைய கைங்கர்யம், தெய்வங்களா நம் தலை மீது கை வைத்து நம்மை போர் புரிய ஆட்டுவிக்கிறார்கள்?. எப்பொழுது போர் அறிவிக்க போகிறார்கள்?
பக்கத்தில் இருந்த ராணி சிரித்தாள். ஏன் சிரிக்கிறாய்? கேட்டார் ராசா. இல்லை இந்த வெள்ளையர்களை பாருங்கள், அவர்களுக்கு அவர்களுடைய நிறத்தை பற்றி பெருமை, அதை நாம் மதிக்கவில்லை என்றவுடன் நம் மீது போர் தொடுக்க வந்து விட்டார்கள். அந்த ராணியை பாருங்கள், என்னைப்போலவே மகுடம் சூட்டியிருக்கிறாள், ஆனால் முகத்தில் ஏன் இத்தனை வெறுப்பு, கறுப்பர்களை கண்டால் ஏன் இவர்களுக்கு ஆக மாட்டேனெங்கிறது.
எனக்கு அப்படி தோணவில்லை, அவர்களை போர் செய்ய சொல்லி தூண்டுபவர்கள் யாரோ?
எதிரில் இருந்த படையில் இருந்து ஒரு வீரன் முன்னால் வந்து போர் தொடங்கி விட்டதாக அறிவித்தான். ராசா சற்று தடுமாறினார், ராணி ராசாவின் தடுமாற்றத்தை பார்த்து என்ன ஆயிற்று உங்களுக்கு? நீங்கள் அப்படியே நில்லுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்.
ராணியார் ஒரு வீரனை முன்னால் அனுப்பினாள், அவன் கம்பீரத்துடன் முன்னோக்கி சென்றான். இப்பொழுது வெள்ளையர்கள் கூட்டத்திலிருந்து யானை முன்னோக்கி வருவது தெரிந்தது. ராசா ஆச்சர்யமுடன் கேட்டார், நம்மைப்போலவே யானைகளையும் போரில் ஈடுபடுத்துகிறானே, அதுவும் குதிரைப்படையை நாம் எப்பொழுதும் முன்னோக்கி செலுத்துவோம், ஆனால் இவன் ஏன் யானையை முன்னோக்கி கொண்டு வருகிறான்.
சட்டென்று முன்னோக்கி சென்று கொண்டிருந்த வீரனின் பாதையில் இவர்கள் படையில் இருந்த மந்திரியார் முன் வந்தார், மன்னா என்னை அனுப்புங்கள் நான் முன்னோக்கி செல்கிறேன்.
வேண்டாம் மந்திரியாரே, தங்களைப்போன்றவர்களை இந்த போரில் முன்னோக்கி அனுப்பி உங்களை இழக்க விரும்ப மாட்டேன். நீங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்துக்கு பாதுகாவலாய் இருங்கள், நான் நம்முடைய குதிரைப்படையையே அனுப்புகிறேன்.
குதிரையார் நளினத்துடனும், அதே நேரத்தில் எதிர் படையை துவம்சம் செய்துவிடும் எண்ணத்துடனும் முன்னேறினார்.
எதிரில் இருந்த வெள்ளையர்கள் படையில் ராணி கொஞ்சம் சத்தமாக சிரித்தாள்.
வெள்ளை ராசா ஆச்சர்யத்துடன் கேட்டார், என்ன ராணி இப்படி சிரிக்கிறாய், எதிரி மன்னன் குதிரை படையில் வல்லவன், நான் சற்று கவலையாக இருக்கிறேன், அவனுடைய குதிரைகள் நம்முடைய படையை துவம்சம் செய்து விடுமே என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன். நீ என்னவென்றால் சிரிக்கிறாய்.
கவலைப்படாதீர்கள், உங்களிடமும் குதிரைப்படை உண்டுதானே, யானைப்ப்டைகளை சற்று பின்னோக்கி வர வையுங்கள், குதிரைப்படை முன்னோக்கி செல்லட்டும், நானும் இப்பொழுது என் இடத்தை விட்டு கிளம்புகிறேன், குதிரைப்படைகளுக்கு பின் புறமாக செல்கிறேன்.
உன் பாதுகாப்புக்கு யாரையாவது அனுப்பவா? கேட்ட ராசாவை வியப்புடன் பார்த்தாள் ராணி, என் மீது நம்பிக்கையில்லையா? இந்த படைகளிலே மிகுந்த அனுபவமும், தைரியமும் கொண்டவள் நான்.
எனக்கு புரிகிறது ராணி, இக்கட்டான நேரங்களில் எங்களை போன்ற ராசாக்களை பாதுகாத்து வெற்றிகளையும் பெற்று கொடுத்துள்ளீர்கள், ஒத்துக்கொள்கிறேன், இருந்தாலும் அவர்கள் படையிலிருந்து எந்த முக்கிய தளபதிகளும் முன்னோக்கி வராத போது நீ மட்டும் ஏன் முதலில் முன்னோக்கி செல்கிறாய்?
இப்பொழுதுதான் நமக்கு வசதி சற்று பொறுத்து பாருங்கள், நான் களத்துக்குள் நுழைகிறேன், எத்தனை தலைகள் கீழே உருளுகின்றன என்று வேடிக்கை பாருங்கள்.
சொன்னது போலவே ராணியார், போர்களத்துக்குள் எதிரில் தென்பட்ட வீர்ர்களை வெட்டி துவம்சம் செய்து முன்னேறுகிறாள்.
எதிர்ப்புறமிருந்த ராணி, வெள்ளை படையில் இருந்து வெளி வந்த ராணியார் வீர்ர்களை வெட்டி வீழ்த்துவதை பார்த்து தன் மந்திரிகளை தயவு செய்து முன்னோக்கி செல்லுங்கள், அந்த ராணியின் வேகத்தை கட்டுப்படுத்துங்கள், நான் அவளை நேருக்கு நேர் சந்திக்கிறேன், பார்த்து விடுவோம், அவளா நானா என்று.
ஆனால் வெளி வந்த ராணியை சுற்றி எதிர் படைகளின் குதிரைப்படையும், மந்திரிகளும் சுற்றிக்கொண்டனர். ராசா மனம் பதை பதைத்து போனார், ஐயோ ராணியை சுற்றிக்கொண்டார்களே, அவளில்லாவிட்டால் நான் ஏது? புலம்பியவர் மந்திரியாரே ஏதாவது செய்து ராணியை காப்பாற்றுங்கள்.
மந்திரியார் தனது வேகத்தை கூட்டி ராணியை சுற்றி இருந்த குதிரைப்படையை விரட்டி அடித்தார். அதற்குள் ராணியாரும், வெள்ளைப்படையின் தளபதிகளாக செயல்பட்டுக்கொண்டிருந்த மந்திரியார் ஒருவரை வீழ்த்தினாள். தன்னை காப்பாற்ற வந்த மந்திரியாரிடம், வெள்ளை ராணி வந்து கொண்டிருக்கிறாள், நீங்கள் முன்னோக்கி செல்லுங்கள், உங்கள் பக்கவாட்டில் யானைப்படைகளை கொண்டு போங்கள், நான் அந்த வெள்ளை ராணியை எதிர்க்க போகிறேன், உதவிக்கு குதிரைப்படைகளை கூட்டி செல்லுங்கள்.
இதற்குள் வெள்ளைக்கார்ர்களின் படையில் இருந்த ராசா அங்கிருந்தே மந்திரியாரிடம் கூவினார், நம்முடைய மந்திரியார் ஒருவரை வெட்டி வீழ்த்தி விட்டார்கள், நம்முடைய வீர்ர்களை கொண்டு அந்த ராணியையும், மற்றவர்களையும் சூழ்ந்து கொள்ளுங்கள், நான் இப்பொழுது முன்னோக்கி நகர்கிறேன்.
போர் உக்கிரமாயிற்று, ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்திக்கொண்டார்கள், இரு படைகளிலும் வீர்ர்களின் எண்ணிக்கை குறையலாயிற்று.
இந்த பக்கமிருந்த ராசா தன் ராணியிடம் கேட்டார், இழப்பு நம் படைக்கா? அல்லது அவர்கள் படைக்கா?
சொல்ல முடியாது, இருவர்கள் படைகளிலும் ஏராளமான வீர்ர்கள் இறந்து விட்டார்கள், நான் ஒரு முறை அவர்கள் ராசாவை எனது வீர்ர்களுடன் சுற்றி வளைத்தேன், ஆனால் மயிரிழையில் அவர்கள் ராணி வந்து காப்பாற்றி விட்டாள்.
இனி நாம் ஒருவரை ஒருவர் வெட்டி இறப்பதை விட அந்த ராசாவை, கைது செய்ய முயற்சி செய்யலாம்.
இதே போல் அங்கும் ராணியாரிடம் வெள்ளை ராசா சொல்லிக்கொண்டிருந்தார், போதும் ராணி எத்தனை உயிரிழப்பு, என்னை பொறுத்தவரை உயிரிழப்பில்லாமல் அந்த ராசாவை கைது செய்ய விரும்பினேன், ஆனால் என்ன பிரயோசனம், இத்தனை உயிர்களை பலி கொடுக்க வேண்டியிருக்கிறது.நம்மிடம் இப்பொழுது எத்தனை வீர்ர்கள் இருப்பர்.
ராணி தன் உதட்டை பிதுக்கி பெரிய பெரிய தலைவர்களை எல்லாம் இழந்து விட்டோம், இறந்து விட்ட தலைவர்களும் சும்மா இறந்து விடவில்லை, எதிரி படைகளிலும் எண்ணற்ற வீர்ர்களையும், பெரிய பெரிய தலைவர்களையும் சூறையாடிய பின்புதான் இறந்தார்கள். இப்பொழுது நம் படையில் பெரிய தலைகள் என்று சொன்னால் நீங்கள், நான், மற்றும் ஒரு மந்திரியார் மட்டுமே உள்ளோம், மற்றும் கொஞ்சம் படை வீர்ர்கள் மட்டுமே உள்ளோம்.
ராசா கவலையுடன் கேட்டார், போரை மேற்கொண்டு நடத்தலாமா? ராணியார் சிரித்து கவலைப்படாதீரகள் அவர்கள் படையிலும் நம் நிலைமைதான், அவர்கள் விருப்ப பட்டால் போரை நடத்தலாம், பார்ப்போம் நம்மை ஆட்டுவிப்பவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ! சிரித்துக்கொண்டே, நான் அந்த படையின் ராசாவை கைது செய்ய முயற்சி செய்கிறேன், என்று வேகமாக செல்ல ஆரம்பித்தாள்.
“இத்துடன் முடித்துக்கொள்ளலாமா? எதிரில் உட்கார்ந்திருந்த போட்டியாளர் கேட்க,”தாராளமாக” என்று இவர் எழுந்தார்.
இருவரும் எழுந்து கொள்ள, சுற்றிலும் உள்ளவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
சுற்றிலும் பத்திரிக்கைகளிலிருந்து வந்திருந்த புகைப்படக்கார்ர்கள் “அந்த “சதுரங்க காய்களை” புகைப்படம் பிடித்தனர், நாளைய தினசரியில் வெளியிட.
இன்றைய ஆட்டம் “டிரா” ஆனதாக அறிவிக்கப்பட்டது.