போராளிகள் காத்திருக்கின்றனர்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 29, 2024
பார்வையிட்டோர்: 1,633 
 
 

 (2016ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20

அத்தியாயம்-16

வலைக் குவியலுக்குமேல் கிடந்த முத்துராசனின் கால் மாட்டிலிருந்து வறோணிக்கா தாழ்ந்த குரலில் தன் பாட்டில் பேசிக்கொண்டிருந்தாள். 

அவள் பேசியதெல்லாம் முத்துராசனுக்கு நன்றாகக் கேட்டது. சிசிலியாவும் சொர்ணமும் கோவிலால் வரும்போது சம்மாட்டியாரின் மகன் லேயோன் நான்கைந்து இளமட்டங்கள் புடைசூழ ஒழுங்கை மூட்டில் நின்று சொர்ணத்தின் கையைப் பிடித்து இழுத்ததையும், சொர்ணம் அவன் கையை வெடுக்கெனத் தட்டிவிட்டுச் சீறிச் சினந்ததையும், கேலி செய்ததையும், சொர்ணம் அழுதுகொண்டு வந்து தன்னிடம் முறையிட்டதையும், சிசிலியா சொன்ன சாட்சியையும் வறோணிக்கா திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள். விடியும்வரை அவள் இதையே சொல்லிக் கொண்டிருந்தாள். 

திடீரென முத்துராசன் எழுந்தான். 

வலைக்குவியல்மேல் சிதறிக்கிடந்த பண நோட்டுக்களை எடுத்து ஒன்று சேர்த்தான்! படலையை நோக்கி நடந்து கொண்டிருந்தான். 

‘அந்தோனியாராணைச் சொல்லிப் போட்டன் அவர்களோடை ரு சண்டையும் பிடியாதையெணை!’ 

‘மகள் சொர்ணத்துக்கு மேலை ஆணையிட்டுச் சொல்லிப்போட்டன் அவர்களோட ஒரு சண்டையும் பிடிக்காதயணை!’ 

படலைவரை முத்துராசனைத் தொடர்ந்துவந்த வறோணிக்கா இப்படி ஆணைகளை இட்டுவிட்டாள். 

எதுவுமே பேசாமல் வெளியேவந்த முத்துராசன் சம்மாட்டியார் வீட்டு வாயிலுக்கு வந்துவிட்டான். 

நன்றாக விடிந்துவிட்டது. 

சம்மாடியார் வீட்டு வெளிக்கேற்றுப் பூட்டப்பட்டிருந்தது. 

வீட்டின் முன் விறாந்தையில் மின்சார வெளிச்சம் எரிந்து கொண்டிருந்தது. அது இரவு அணைக்கப்படாமலே தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கவேண்டும். அல்லது அதிகாலையோடு யாரோ எழுந்து அதை எரியவைத்திருக்க வேண்டும்! 

முத்துராசன் சற்றுவேளை கேற்றைப் பிடித்தபடி நின்றான். பின்பு, ‘சம்மாட்டியார்; சம்மாட்டியார்! என்று பலமாகக் குரல் வைத்தான். 

சம்மாட்டியாரின் ‘மெனிக்கே’ என்ற பெட்டை நாய்-ஜடை நாய்க் குட்டிக் குரைத்துக்கொண்டே வந்தது. பின்னால் வயதான பெரிய நாய் மெதுவாக அனுங்கிக் கொண்டே கேற்றுவரை வந்து முத்துராசனைப் பார்த்து வாலை ஆட்டி ஆட்டி அனுங்கிக் கொண்டிருந்தது. 

‘மெனிக்கே’ என்ற ஜடை நாய்க்குட்டிக்கு முத்துராசனைத் தெரிந் திருக்கவில்லை. அதைச் சமீபத்தில் தான் ஒரு சிங்கள நண்பரிடமிருந்து சம்மாட்டியார் வாங்கி வந்திருந்தார். 

சம்மாட்டியாரின் மனைவி வெளியே வந்தாள். 

‘சம்மாட்டியாரிட்டைதான் வந்தனான் கேற்றைத் திறவுங்கோ’ என்று முத்துராசன் சற்று மிடுக்காகக் கூறினான். முத்துராசனின் மிடுக்கான ஓசையைக் கேட்ட அவள் எதுவும் பேசாமல் படக்கென உள்ளே போய் விட்டாள். 

முத்துராசன் அப்படியே நின்றான். 

சற்று வேளைக்குப் பின், வண்ணப் போர்வையால் மூடியபடி சம்மாட்டியார் கேற்றண்டை வந்து கேற்றைத் திறந்தார். 

‘ஆர் முத்துராசாவே? நானும் உன்னைக் காணத்தான் இருந்தனான். வாவா, உள்ளுக்கை வா! நேத்துப் பொழுது படேக்கை வந்தனி எண்டு என்ரை அவ சொன்னவ, வா வா, உள்ளுக்கை வாடாப்பா’ என்று பெரிதாக முத்துராசனை வரவேற்றார் சம்மாட்டியார். 

முத்துராசன் எதுவும் பேசாமல் விறாந்தவரை வந்துட்டான். ‘இஞ்சேரும். தேத்தண்ணி தரவாபோறீர்! இரண்டு பேருக்கும் தாரும்’ என்று குசினிப்பக்கம் பார்த்துக் கூறிவிட்டு, ‘இரன்ராப்பா, உப்பிடிக் கதிரையிலை இரன் ஏன் நிண்ட நிலையில் நிக்கிறாய்! இரன்!’ என்று சம்மாட்டியார் கதிரையைக் காட்டினார். 

‘இல்லை வந்த காரியத்தை முடிப்பம்; இந்தாரும் உம்மடை காசு! வட்டியைக் கணக்குப் பாத்துச் சொல்லும்’ என்று மடிக்குள்ளிருந்த பண நோட்டுக்களை மேசை மீது வைத்தான் முத்துராசன். 

‘அதுக்கென்ன இப்ப அவசரம் உதிலே இரு பேசுவம்’ என்று சம்மாட்டியார் அவனை நிதானப்படுத்த முற்பட்டார். 

‘இருக்கிறதைப் பற்றிப் பேந்து பாப்பம் சம்மாட்டியார். உம்மடை முதலையும் வட்டியையும் எடுத்துக்கொண்டு என்ரை நோட்டைத் தாரும் போவம்!’ என்று முத்துராசன் பலமாகக் கூறினான். 

சற்று வேளை சம்மாட்டியாருக்கு எதுவும் பேச முடியவில்லை. பின்பு சுதாகரித்துக்கொண்டு, ‘எட தம்பி நீ ஏன் கோவிக்கிறாயெண்டு எனக்குத் தெரியுது! இப்ப என்ன ஊரிலை நடக்காததே நடந்து போச்சு? உன்ரை குமரைத் தொட்டவன் என்னவிடவே போறான்? நீ சீதனம் கீதனம் ஒன்றும் குடுக்கவேணாம்! அவனும் ஆசைப்பட்டிட்டான்! கையிலையும் பிடிச்சிட்டான்; இனி என்ன விடுகிறதே? எப்பன் ஆறுதலாப் பேசுவம் உப்பிடி இரு’ என்று விஷயத்துக்கே வந்துவிட்டார். ‘வீண் கதையை விட்டிட்டுச் சம்மாட்டியார் என்ரை நோட்டைத் தாரும் நான் போக!’ என்று முத்துராசன் படக்கென்று பேசினான். 

‘என்ன ஆகவும் எறிஞ்சு பேசிறீர்! உம்மடை மேளை நீர் இனி ஆருக்கும் குடுக்கேலுமோ? நான் விடுவனோ? ஊர் விடுமோ?’ என்று சம்மாட்டியார் சபதம் எடுக்கும் தோறணையில் பேசினார். 

‘ஓமேண்ணுறன்! இனி என்ன செய்யிறது அவனும் ஆசைப் பட்டிட்டானெண்டு பாத்தா அவாக பெரிய ஒளுப்பம் விடுகிறாக!” 

இப்படிக் குசினிப் பக்கமிருந்து சம்மாட்டியாரின் மனைவியானவளின் குரல் எழுந்தது. 

முத்துராசனுக்கு அடக்கமுடியாத ஆத்திரம் வந்துவிட்டது. 

‘நீங்க ஊருக்கைப் பெரிய மனிசராயிருக்கிறியள், எண்டாலும் இந்த முத்துராசனை விலைக்கு வாங்கேலாது!’ என்று கத்திக்கொண்டே முஷ்டியை உயர்த்தி மேஜை மேல் பலமாகக் குத்தினான் முத்துராசன். மேஜையை அந்தத்தில் கொலுவிருந்த அந்தோனியார் திருச்சொரூபம் சரிந்து நிலத்தில் விழுந்து நொறுங்கிப் போயிற்று. 

இதன் மேல் முத்துராசன் அங்கு நிற்கவில்லை. 

அவன் கேற்றை நோக்கி வந்தான். 

கேற்று வாயிலிலே நான்கைந்து பேர்கள் சூழ்ந்து நின்றனர். சம்மாட்டியார் ஏங்கிப்போய் விறாந்தையிலேயே இருந்தார். கேற்றை மடாரென்று இடித்துத் திறந்துகொண்டு முத்துராசன் வெளியே வந்துவிட்டான். 

சம்மாட்டியாரின் மெனிக்கே மெல்லிய குரலில் குரைத்தது. 

அத்தியாயம்-17

ஊரெல்லாம் பரபரப்பாகிவிட்டது. 

ஊரின் பலபேர் முத்துராசனிடம் சமாதானம் பேசி வந்தனர். பெரும் பாலானவர்கள் ஊரின் வழக்கங்களைச் சுட்டிக் காட்டினர். 

ஊரில்-பிரதான இரு வழக்கங்கள் இருந்து வந்தன. 

கோவில் பூசைக்குச் சென்று வரும்போது ஒரு கன்னிப் பெண்மேல் விருப்பம் கொண்ட ஒரு இளந்தாரி அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்துவிட்டால் பின்பு அவளை இந்த ஊரில் யாருமே கட்டிக்கொள்ளமாட்டார்கள். 

இது ஒன்று. 

ஊருக்குள் இருந்து வெளியிடங்களுக்கு யாரும் பெண்கொடுப்ப தில்லை. ஆண்கள் சென்று வெளியூர்களில் பெண் எடுத்து வரலாமே தவிர பெண்களை யாருமே வெளியூரவர்களுக்குக் கொடுக்கக்கூடாது. 

இது இரண்டு. 

இந்த இரண்டு வழக்கங்களையும் மீறிவிட யாருமே துணிய மாட்டார்கள். இதுவரை இத்துணிவு யாருக்குமே வந்ததில்லை. 

இந்த இரண்டு நடைமுறைகளைப் பலரும் முத்துராசனிடம் கூறிப் பயமுறுத்தியும் பார்த்துவிட்டனர். ஆனால், முத்துராசனோ இந்தப் பயமுறுத்தல்களுக்கெல்லாம் பயந்து போகவில்லை. எதற்கும் தலை வணங்காதவனாக அவன் நிமிர்ந்து நின்றான். 

வேறு சிலர் சந்தியாக்கிழவனுக்கூடாக முத்துராசனைப் பணிய வைக்க முயன்றனர். சந்தியாக் கிழவனோ தன்னை அணுகியவர்களை யெல்லாம் தூக்கி எறிந்துபேசி அனுப்பி விட்டான். 

பெண்கள் கூட்டத்தினர் வறோணிக்கா மூலமாகக் காரியத்தைச் சாதிக்க முயன்றும் தோற்றுப் போயினர். 

சொர்ணத்தை யாராலுமே அணுக முடியவில்லை. அவளின் சினேகிதி சிசிலியா மூலமாக அவள் மனதை மாற்றிவிடவும் முயற்சிகள் நடந்தன. ஆனாலும் சிசிலியாவோ இந்த விஷயத்தில் தலையிட முற்றாகவே மறுத்துவிட்டாள். 

முத்துராசனின் நியாயத்திற்கு ஆதரவாகத்தான் ஊரில் பலர் இருந்தனர். ஆனாலும் அவர்களால் முத்துராசனின் நியாயத்தை வெளியாகப் பேசிவிட முடியவில்லை. சம்மாட்டியாரிடம் அவர்கள் பல விஷயங்களில் கடமைப்பட்டிருந்தனர். 

தேவசகாயம் சம்மாட்டியார் ஊரின் சகலதுமாக இருந்தார். 

கோவில் காரியங்களிலிருந்து ஒவ்வொரு வீட்டின் காரியங்கள்வரை அவர் செல்வாக்குக்குள் அடக்கம். 

ஊருக்குள் முதல்முதலாக, ‘கரைவலை’ என்ற பெருந்தொழிலை நடத்தி அதனாலும், வேறு விதங்களினாலும் நிறையச் சம்பாதித்துக் கொண்டவர். அவரின்கரைவலையில் நாற்பதுக்கும் அதிகமான கூலிக்கு வேலை செய்கின்றனர். இப்போது அவரின் கரைவலை முல்லைத் தீவுக்குட்பட்ட மாத்தலின் என்ற கரைப் பகுதியில் பாடு பிடித்து நிற்கிறது. 

மாதத்தில் ஓரிரு தடவைதான் அவர் வலைப்பாட்டிற்குப் போய் வருவது வழக்கம். அவர் வலைப்பாட்டில் இருந்தாலென்ன இல்லா விட்டாலென்ன தொழில் மட்டும் ‘ஓகோ’ என்று நடக்கிறது. அவரின் மூத்த மகன் அங்கிருந்து எல்லாவற்றையும் சிறப்பாகக் கவனித்து வருகிறான். அந்தப் பகுதியில் எந்தச் சம்மாட்டிக்கும் இல்லாத வகையில் தேவசகாயம் சம்மாட்டியாரின் மீன்கள் உடனுக்குடன் விற்பனை யாகிக் கொண்டே இருக்கின்றன. பல சிங்கள வியாபாரிகளுடன் அவர் இதமாக வைத்துக் கொண்ட உறவினால் அவர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு அவரின் மீன்களைக் கொள்முதல் செய்து வருகின்றனர். 

மூத்த மகன் குடும்பஸ்தனாக இருந்தும் தந்தைக்குக் கீழ்ப்பட்ட வனாக, திறம்படத் தொழிலை நடத்தி, தனக்காகவும் தந்தைக்காகவும் சிறப்பாகச் சம்பாதித்துக் கொடுக்கிறான். 

ஒரு சிங்கள முதலாளியின் உதவிகொண்டு இளைய மகன் லேயோனை அரசாங்க உத்தியோகமொன்றில் அமர்த்திவிட்டார். லேயோன் தந்தைக்குச் சம்பாதித்துக் கொடுக்க வேண்டுமென்பதில்லை. முதல் முதலாக ஊருக்குள்ளிலிருந்து அரசாங்க உத்தியோகம் பெற்றவன் என்ற பெருமையுடன் கொழும்பு மாநகரில் கலகலப்பாக வாழ்கிறான். சம்மாட்டியாரின் மனைவியானவள் இராசாத்தி போல வாழ்கிறாள். 

வீடுவாசல், எடுபிடி ஆட்கள் என்ற விதத்தில் சகல சுகபோகங் களுடனும் இராச வாழ்வு நடத்தும் தேவசகாயம் சம்மாட்டியாரின் மனைவியானவள் இராசாத்தி போல வாழ்கிறாள். 

வீடுவாசல், எடுபிடி ஆட்கள் என்ற விதத்தில் சகல சுகபோகங் களுடனும் இராச வாழ்வு நடத்தும் தேவசகாயம் சம்மாட்டியாரின் ஆதிக்கத்தை எதிர்த்து முத்துராசன் ஒருவன் மட்டும் வாழ்ந்துவிடத் துணிந்து விட்டான். 

கடைசியில் ஒருநாள், கோவில் மூப்பரும், சங்கிலிஸ்தாமும் சேர்ந்துவந்து முத்துராசனிடம் சமாதானம் பேசினர். 

முத்துராசன் நிமிர்ந்து நின்றான். எதற்கும் அவன் சரிந்துகொடுக்க வில்லை. 

இந்தச் சமாதானப் பேச்சுவார்த்தைகளுடன் நாட்களும் நகர்ந்து போய்விட்டன. 

தென் இலங்கையில் தமிழர், சிங்களவர் கெடுபிடித் தொடங்கி, அதுசற்று விரிவடைந்து வருவதான அறிகுறிகள் பத்திரிகைகளில் வரும் செய்திகள் மூலம் தெரியவந்தன. இருந்தாற்போல ஒருநாள் வகுப்புக் கலவரமே தொடங்கிவிட்டதாகத் தகவல்கள் கிடைத்தன. 

சம்மாட்டியாரின் வீட்டில் அழுகுரல் கேட்டது. 

சம்மாட்டியாரின் மனைவியானவள் அழுது புலம்பத் தொடங்கி விட்டாள். ‘தன் மகனுக்கு ஏதும் நடந்து விடுமோ’ என்ற ஏக்கம் பிரலாபமாக வெடிக்க ஊரே சம்மாட்டியாரின் வீட்டில் கூடிவிட்டது. 

சம்மாட்டியார் செய்வதறியாது திகைத்துப் போனார். 

வேலையைவிட்டு வரும்படி தந்திக்குமேல் தந்தி அடித்தார்கள். தந்திகளுக்குப்பதில்களே கிடைக்கவில்லை. ‘விலாசதாரி, விலாசத்தில் இல்லை’ என்ற குறிப்புடன் கடைசியான ஒரே ஒரு தந்திமட்டும் திரும்பி வந்தது. 

சம்மாட்டியாருக்கு ஐம்பொறிகளும் கலங்கிப்போய்விட்டன. கொழும்புக்குப் போய் மகனைத் தேடிப் பிடித்து வரவும் அவருக்குத் துணிவு வரவில்லை. 

தனது வாடிக்கை மீன் முதலாளிகளுக்கு டெலிபோன் செய்தும் பார்த்தாகிவிட்டது. திருப்தியான பதில்கள் இல்லை. 

காலை மாலை ரெயில் ஸ்ரேசனுக்குச் சென்று மகனுக்காகக் காத்திருந்தார். நாளாந்தம் வந்துசேர்ந்த ஆயிரக் கணக்கானவர்களுள் மகன் லேயோன் இல்லவே இல்லை! 

பத்துநாட்கள் கழித்து ஒரு நாள் லேயோன் வந்து சேர்ந்தான். 

அவன் சோபை இழந்து, காய்ந்து கருகிப்போய் இருந்தான்; எலும்பும் தோலுமாக இருந்தான். அவனின் வல புறக் காது ஒட்ட அறுக்கப்பட்டு, அந்த இடத்தில் ஊறல் புண் இருந்தது. அவனைக்கட்டிக்கொண்டு தாயானவள் கதறினாள். 

லேயோன் வாய்க்கு வந்தபடியெல்லாம் பிதற்றினான். மரண பயம் அவனைப் பிதற்ற வைத்துவிட்டது. 

தனக்கு அடைக்கலம் தந்த சிங்களத்தாய் ஒருத்தியை அடித்து நொறுக்கிவிட்டு, தன்னையும் நையப் புடைத்துத் தனது வலப்புறக் காதை வெட்டிச் சென்றவர்களைப் பற்றி அவன் தொடர்பற்றுக் கூறினான். 

சம்மாட்டியாரின் வீட்டில் அமைதிவர நான்கு நாட்கள் ஆகி விட்டன. 

சிறிது சிறிதாக லேயோன் வெளியே உலாவத் தொடங்கிவிட்டான். கொழும்பில் இவனுடன் நட்பாக இருந்து, கலவரம் தொடங்கியதும் உயிரைப் பிடித்துக்கொண்டு ஓடிவந்து விட்ட சிலர் இவனிடம் வந்து போயினர். குசு குசுத்துப் பேசினர்; பின்பு இவனையும் அழைத்துக் கொண்டு வெளியே போயினர். 

தொடர்ந்து நான்கைந்து நாட்கள் லேயோன் நண்பர்களுடன் வெளியே போய்வந்தான். 

ஒவ்வொரு நாட்களிலும் ஒவ்வொரு புதுப் புதுச் சம்பவங்கள் நகரத்தில் நடந்துவந்தன. 

ஒரு நாள் சில பாண் போறணைகள் உடைக்கப்பட்டன. 

மறுநாள் நான்கு சிங்களக் கடைகள் நொறுக்கப்பட்டன. 

இன்னொரு நாள் சிங்களப் பெயர்ப் பலகைகள் தார்பூசி மறைக்கப் பட்டன. 

அத்தியாயம்-18

முத்துராசனின் வலை அரியாலைக் கரையோடு மருவியிருக்கும் அறுகுப் பாட்டில் புதைக்கப்பட்டிருந்தது. அந்த அறுகுப்பாட்டில் இப்போது நெடுவால் திரளியும் ஊடகத்திரளியும் பட்டு வந்தமையால் ஊரின் பெரும்பான்மை வலைகள் அந்த அறுகுப்பாட்டிலேயே புதைக்கப் பட்டிருந்தன. பட்டிகள் ஒன்றைச் சேர்ந்தாற்போல மற்றொன்று பாயப்பட்டிருந்தமையால் திருடர்கள் பற்றிய பயமே இருக்கவில்லை. முத்துராசனும் அலசும் கடந்த நான்கு நாட்களாக விடிவெள்ளி முளைத்தபோதுதான் பட்டிக் களத்துக்குச் சென்று வந்தனர்! 

காரின் ரயர் ஒன்றை எடுத்து, அதன் அருகுப்புற ரபரைக் கீலமிட்டு ஒரு தடியோடு இணைத்து இணைத்து ‘சூழ்’ என்று சொல்லப்படும் நீள் பந்தமாகக் கட்டிக் கொண்டிருந்த சந்தியாக்கிழவன், இருட்டு வந்ததும் இறப்பிலே செருகப்பட்டிருந்த மண்டாவையும், பறியையும், சூழையும் எடுத்துக்கொண்டு கடற்கரையில் இறங்கிவிட்டான். 

எப்போதாவது இருந்துவிட்டு ஒருநாள், ‘வேட்டைத் தண்ணீர்’ சாப்பிட வேண்டுமென்ற அவா சந்தியாக்கிழவனுக்கு வந்துவிடும். அப்போதெல்லாம் இப்படிச் சூழ்பிடித்து, கடற்கரையில் கெண்டைக் கால் தண்ணீருக்குள் ஊர்ந்து செல்லும் வெள்ளை நண்டுகளையும், கரையின் மணல் பரப்போடு தலையைச் செருகியபடி தூங்கிக் கிடக்கும் ஏறியால் மீனையும் மண்டாகொண்டு வேட்டையாடி வருவதில் கிழவனுக்கு ஒருவித ஆசை. அவைகளை வறோணிக்கா விடம் கொடுத்து ‘வேட்டைத் தண்ணீர்’ என்ற ஒருவகைச் சூப்பை ஆக்கிக் குடிப்பானானால் போன இளமையே வந்துவிட்டதான திருப்தி அவனுக்கு. அவனின் நலங்கல் போர்வை வீட்டுத் திண்ணை யில் தொங்கியது. 

முத்துராசன் வழமைபோலத் தம்பிப்பிள்ளையின் கள்ளுக் கொட்டி லுக்குப் போய்விட்டான். 

மாலை வெள்ளி படுவான்வரை செல்லும் வரை அலஸ் முத்துராசன் வீட்டின் திண்ணையிலிருந்து கடிப்பு வலையைச் சீர்செய்து கொண்டி ருந்தான். காலை, கடிப்பு வலையிலிருந்து சில தும்பி மீன்களை மீட்டெடுத்த போது அவை கடிப்பு வலையைச் சேதப்படுத்திவிட்டன. 

சிமிலி விளக்கின் வெளிச்சத்தில் தலைகுனிந்தபடி வலையைச் சரிசெய்து கொண்டிருந்த அலசுக்குப் பக்கமாக இருந்த கப்பில் சாய்ந்து, மால்தடி ஒன்றை இலாவகமாக வைத்துக்கொண்டு புதிய வலைமால் ஒன்றைப் பின்னிக்கொண்டிருந்தாள் வறோணிக்கா. 

வீட்டு வாயில் பக்கக்குந்துடன் சாய்ந்தபடி குப்பிவிளக்கொன்றின் வெளிச்சத்திலிருந்து புதிய வர்ணச்சட்டை ஒன்றைத் தைத்துக் கொண்டி ருந்தாள் சொர்ணம். 

வெளிப்படலைத் திறபடும் ஓசை கேட்டது. தகரவிளக்கு ஒன்றை உயர்த்திப் பிடித்தபடி பேத்திக்கிழவி வந்து கொண்டிருந்தாள். 

‘எடி பிள்ளை வறோணிக்கா, உவன் ஊமை கடிப்பு வலை பொத்தோணுமெண்டு வந்தான். பொத்திப் போட்டானே?’ என்று கேட்டுக்கொண்டே வந்தாள். 

‘ஓமெணை, நீயும் பேரனை விடுறேல்லை எண்டுதான் நிக்கிறாய். வரவாணைபோறாய்?’ என்று கிழவியை வரவேற்றாள் வறோணிக்கா. அலஸ் அவசர அவசரமாகக் கடிப்பு வலையைச் சுற்றி வைத்துவிட்டு பேத்திக் கிழவியுடன் போவதற்குத் தயாரானான். 

அப்போதுதான் முத்துராசனும் வந்து சேர்ந்தான். 

வறோணிக்கா எழுந்து அடுக்களைக்குள் சென்று விட்டாள். அலசையும் அழைத்துக்கொண்டு பேத்திக்கிழவி வெளியே போனாள். வறோணிக்கா அடுக்களைக்குள் இருந்து, ‘சாப்பிட வரவாண போறியள்?’ என்று முத்துராசனை அழைத்தாள். 

முத்துராசன் எழுந்து குடத்தடிக்குச் சென்று வாய்க் கொப்பிளித்து விட்டுச் சோற்றில் கையை வைத்தான். 

வடக்கிலிருந்து அவலக்குரல் ஒன்று எழுந்தது. 

அது பேத்திக் கிழவியின் குரல்! 

‘ஐயோ! ஐயோ என்ரை ஊமை! ஐயோ அந்தோனியாரே என்ரை ஊமை?” 

ஒருகணம்தான் முத்துராசன் திகைத்தான். 

கண்களை அங்குமிங்குமாக வீசினான். 

மூலையோடு கொடுவாக்கத்தி மின்னியது! 

அதை முத்துராசன் பாய்ந்தெடுத்தான். 

வடக்குநோக்கி ஓடினான். 

வறோணிக்கா கையில் அகப்பட்ட ஒன்றைத் தூக்கினாள். முத்துராசனுக்குப் பின்னால் ஓடினாள். 

சிமிலி விளக்கை எடுத்துக் கொண்டு சொர்ணம் இருவருக்கும் 

பின்னால் ஓடினாள். 

படலையைத் தாண்டி, குச்சொழுங்கையைத் தாண்டி தெருமூட்டுக்கு முத்துராசன் வந்தபோது, பெருந்தெரு வெளிச்சத்தில் நான்கைந்து பேர் போய்க் கொண்டிருந்தது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. 

‘முரல் பாய்வாங்களே! திருக்கை அடிப்பாங்களே! திமிங்கலம் திம்பாங்களே, வாயில்லாத ஊமைக்கு அடிச்சுப் போட்டாடா போறியள்? முரல் பாய்வாங்களே! திருக்கை அடிப்பாங்களே…’ 

பேத்திக்கிழவி நிலத்திலிருந்த மண்ணை வாரித் திட்டிக் கொண்டி ருந்தாள். 

தலையின் இருபுறத்தையும் கைகளால் தாங்கிப் பிடித்தபடி அலஸ் நிலத்தில் குனிந்திருந்தான். 

அவனின் வலக்கரத்தில் இரத்தம் தோய்ந்து வழிந்தது. அவன் வலக் கரத்தில் காதுச் சோணை அறுக்கப்பட்டுவிட்டது. 

‘எடி கிழவி! இந்த எளியவனை வீட்டைவிட்டுக் கூட்டிக்கொண்டு போனியோ வீட்டுக்கு நெருப்பு வைப்பம்! அந்தோனியாராணை விடியிறத்துக் கிடையில் சாம்பலாக்கும்!’ 

இந்தக் குரல் பெருந்தெரு வெளிச்சத்துக்கப்பால் இருந்து ஓங்காரமாக எழுந்தது. 

அது லேயோனின் குரல்! 

‘முரல் பாய்வானே! திருக்கை அடிப்பானே! திமிங்கலந் திம்பானே…!” பேத்திக்கிழவி மண்ணை வாரி வாரி மீண்டும் மீண்டும் திட்டிக் கொண்டிருந்தாள். 

‘டேய் நாயளே; பரதேசி நாயளே! இனி ஒருக்கா வாருங்கோடா பாப்பம்! ரோசமிருந்தா வாருங்கோடா பாப்பம்?’ 

கொடுவாக்கத்தியை உயர்த்திப் பிடித்தபடியே முத்துராசன் கத்தினான். வறோணிக்கா அடக்கமாக அழுதுகொண்டே அலசை தூக்கி நிறுத்தி, தனது முந்தானைச் சீலையைக் கிழித்து இரத்தம் வழியும் அலசின் காதுப்புறத்தை ஒற்றிப்பிடித்து மேலும் இரத்தம் வராது செய்ய முயன்றுகொண்டிருந்தாள். 

சொர்ணம் சிமிலி விளக்கை உயர்த்தி உயர்த்திப் பிடித்துக்கொண்டே அழுது விம்மினாள். 

‘எடி என்னடி வறோணிக்கா?’ என்று கேட்டுக் கொண்டே சந்தியாக் கிழவன் வந்தான். ஒரு கையில் குழுடனும் மறுகையில் மண்டா வுடனும் அலஸ் நின்ற இடத்தைச் சுற்றிச்சுற்றி வந்தான். வரோணிக்கா வும் சொர்ணமும் அலசைத் தாங்கிப் பிடித்தபடி பேத்திக் கிழவியின் குடிசைக்குள் அழைத்துச் சென்றனர். 

கிழவியின் வீட்டுக்குள் முன்னால் அயலவர்கள் கூடிவிட்டனர். அவர்கள் பலதும் பத்தும் பேசினர். அனுதாபப்பட்டனர்; ஆத்திரப் பட்டனர்; பின்பு கலைந்து சென்றனர். 

அத்தியாயம்-19

கடல் செத்துப்போய்க் கிடந்தது. 

கடலின் நெஞ்சைக் கிழித்துக்கொண்டு சிறு தோணி ஒன்று அவசர அவசரமாகப் பாய்ந்தோடி சென்றது. 

தன்னந்தனியாகத் தோணியின் நடுவே நின்று மரக்கோலைத் துரிதமாக ஊன்றித் தாங்கிக் கொண்டிருந்தான் ஒரு இளைஞன் 

அவன் பூனைக்கண் யேசுதாசன்! 

வலைகள் புதைக்கப்பட்டிருந்த மண்டைத் தீவுக்கரையை நோக்கி அவன்விரைந்து கொண்டிருந்தான். 

செத்துப்போய்க் கிடந்த கடலின் மேற்பரப்பில் கூட்டங்கூட்டமாக நின்ற தேறை மீன்கள் துள்ளிப் பாய்ந்து சிலுசிலுத்து இலேசான நீர்நாதம் எழுப்பிக் கொண்டிருந்தன. 

கடலின் அடி வயிற்றிலிருந்து நெளிந்தோடும் சிறு மீன்கள், கெவரடித்துப் பளிச்சிட்டு மின்னல் வெட்டுக்களைப் பிறப்பித்தன. 

முன் நீண்டுசென்ற தோணியின் அணியத்திற்குச் சமீபமாகச் சிறையா மீனொன்று மேலெழுந்து தாவி அணியத்தை மோதி அடித்து விட்டு வெகுதூரம்வரை குதித்தோடிச் சென்றது. ஈராட்டிக் காற்றின் அமைதியைக் கிழித்துக்கொண்டு கடல் சலசலத்தது. 

மண்டைத் தீவுக் கரையிலிருந்து இரண்டொரு மனிதக்குரல்கள் ஈராட்டியில் மிதந்து வந்தன. 

‘கூ…கூ..ய் ய் ய்! 

பூனைக்கண் யேசுதாசன் இப்படிக் குரல்வைத்தான். பதிலுக்கு அக்கரையிலிருந்தும், கூ…கூ…கூ… ய் ய் ய் என்ற ஓசை எழுந்தது. 

பூனைக்கண்ணனின் தோணி இப்போது குறிப்பாகக் குரல் வந்த பக்கமாக ஓடியது. 

சற்று வேளைக்குப்பின் பூனைக்கண்ணன் அந்தத்திக்கில் புதைக்கப் பட்டிருந்த பட்டி வலைக்குச் சமீபமாக நின்று கீழ்க்குரலில் பேசினான். வேறும் பலர் கீழ்க்குரலில் பேசினர். 

இதற்குப்பின் பூனைக்கண்ணனின் தோணியுடன் வேறொரு தோணியும் சேர்ந்து கொண்டது. 

இரண்டு தோணிகளும் மேற்கு நோக்கிப் போயின. 

‘கூ…கூ… ய் ய் ய்’ என்ற பூனைக்கண்ணனின் ஓசைக்கு ‘கூ…கூ…கூ… ய் ய் ய்’ என்ற பதில் ஓசையும் மேற்குநோக்கி எழுந்தது. 

அங்கேயும் மனிதக் குரல்கள் கேட்டன. 

அதற்கப்புறம்… 

அதற்கப்புறம்… 

‘கூ…கூ….கூ…ய் ய் ய் 

அதற்குப் பதில் கிடைத்தது. மனிதக் குரல்கள் கேட்டன. 

கடலின் நடுவே அங்குமிங்குமாக மின்னி மின்னி வெளிச்சங்கள் தோன்றின. 

கடலைச்சுற்றி எழுந்த ‘கூகூய்ய்’ ஓசைகள் ஓய்ந்து போயின. 

கடலின் நடுவே பத்து தோணிகள்வரை சேர்ந்தாற்போல நின்றன. அதற்குப்பின் அவைகள் இக்கரையை நோக்கி – அந்தோனியார் கோவிலின் இரட்டைக்கோபுர வெளிச்சத்தைக் குறிவைத்து அணிவகுத்து வந்தன. 

ஊமை அலசைப் பற்றியும். சின்னச் சம்மாட்டி லேயோனைப் பற்றியும் அவர்கள் பலதும் பத்தும் பேசினர். 

அத்தியாயம்-20

அலஸ் சற்று கண்ணயர்ந்து போனான். 

காதின் இரத்தக்கசிவுப் பூரணமாக நின்றுபோய் விட்டது. வலியும் குறைந்துவிட்டது. 

சரிந்துகிடக்க முடியாதபடி தோள்புறங்களில் நோவு இருந்தது. அதனால் அவன் நீட்டி நிமிர்ந்தபடியே உறங்கிப் போனான். 

சொர்ணம் அலசுக்குப் பக்கத்தே விழிப்பிருந்தாள். 

அவள் கண்களில் நீர் சுரந்து சுரந்து; தொங்கி நின்று நின்று, மைகளால் வெட்டுண்டு வெட்டுண்டு விழுந்து சிதறிச் சிதறி, மீண்டும் சுரந்து சுரந்து, தேங்கித் தேங்கி, வெட்டுண்டு வெட்டுண்டு நெஞ்சத்தின் துடிப்பையெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தது. 

சொர்ணத்திற்கும் அலசுக்குமிடையே தகர விளக்கு எரிந்துகொண்டிருந்தது. 

இடையிடையே சொர்ணத்தின் நெஞ்சிலிருந்து பீறிட்டுவந்த பெரு மூச்சுக்களால் அந்த ஒளிக்கட்டி ஆடி அசைந்து சிதைவுற்றபோதும் அது மீண்டும் மீண்டும் சுதாரித்துக்கொண்டு முழுமைபெற்றுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. 

வெளியே – தெருப் படலைக்குப் பக்கத்தே வறோணிக்காவும், பேத்திக்கிழவியும், முத்துராசனும், சந்தியாக்கிழவனும் எதிரிகளின் வரவுக்காகக் காத்திருந்தனர். 

கொடுவாக்கத்தியை இறுகப்பிடித்தபடி வீதிக்கரை வேலியோரம் அங்குமிங்குமாக முத்துராசன் நடைபோட்டுக்கொண்டிருந்தான். சிங்களத்தி பெற்ற மகன் ஊமை அலசை விடிவதற்கிடையில் வீட்டோடு எரித்துவிடச் சபதமேற்றவர்களின் வரவுக்காக அவன் காத்திருந்தான். ‘நாயளே, பரதேசி நாயளே! ஆரெண்டாலும் வாருங்கோடா பாப்பம்’ என்று அடிக்கொரு தடவைதனக்கு மட்டும் கேட்கக் கூடியதாகக் கூறிக்கொண்டு அவன் காத்திருந்தான். 

படலையின் நட்டுக்கு நடுவாக வரோணிக்காவும் பேத்திக் கிழவி யும் வரிந்து கட்டிக்கொண்டு காத்திருந்தனர். வறோணிக்காவின் கையில் திருகுவலைப் பிடியும் பேத்திக்கிழவியின் கையில் வெற்றிலை இடிக்கும் சாவியும் இருந்தன. சிங்களத்திப் பெற்ற மகன் ஊமை அலசை விடிவதற்கிடையில் வீட்டோடு எரித்துவிடச் சபதமேற்ற எதிரிகளை சந்திக்க அவர்கள் காத்திருந்தனர். 

இலேசாகத் தார் தெளிக்கப்பட்ட தெருவின் கல்லு விளிம்பிலே மண்டாவின் முனைகளைத் தேய்த்துத் தேய்த்து, உரசிஉரசி, கூர் பார்த்துப் பார்த்து… முதுமை கண்டு நடுங்கிக் கொண்டிருந்த கைவிரல்களை வருடி வருடி, வரிசைப்படுத்தி வரிசைப்படுத்தி… இருளை ஊடறுற்று மேற்கு நோக்கி, மேற்குநோக்கி, கிழக்கு நோக்கிக் கிழக்கு நோக்கி, தெற்குநோக்கித் தெற்கு நோக்கி, பெருந்தெரு வெளிச்சத்திற்கும் அப்பால் சம்மாட்டியாரின் வீடுநோக்கி வீடுநோக்கி சந்தியாக்கிழவன் காத்திருந்தான். சிங்களத்திப் பெற்ற மகன் ஊமை அலசை விடிவதற்கிடையில் வீட்டோடு எரித்துவிடச் சபத மேற்றுச் சென்றவர்களின் வரவைக் காண சந்தியாக்கிழவன் நிதானமாகக் காத்திருந்தான். 

நட்டுக்கு நடுவே சந்தியாக்கிழவனால் நிலத்தில் குத்தி வைக்கப் பட்டிருந்த சூழ்த்தடி தன் தீ நாக்குகளை உயர நீட்டி நீட்டி ஒளி கக்கிக் கொண்டிருந்தது. 

இருந்தாற்போலப் பெருந் தெருப்பக்கம் மனித ஆரவாரங்கள் கேட்டன. 

மண்டாத் தடியை இறுகப் பிடித்துக்கொண்டே சந்தியாக்கிழவன் நிமிர்ந்து நின்றான். 

ஓசை வந்த திக்கில் நெஞ்சை நிமிர வைத்துக் கொண்டே முத்துராசன் இறுகப் பிடித்த கத்தியோடு எதிரிகளைச் சந்திக்கத் தயாராகிவிட்டான். ‘பரதேசி நாயளே. உங்களைத்தான்ரா பாத்திருக்கிறன். வாருங்கோடா’ என்ற பலமாகக் கத்தினான். 

வறோணிக்கா படலைக்கு நட்டுக்குநடுவாக இறுகப் பிடித்த திருகு வலைப்பிடியோடு ஓசை வந்த திக்கில் பார்வையைப் புதைய வைத்துக் கொண்டு தயாராக நின்றாள். 

பேத்திக்கிழவியின் கையில் இரும்புக் கம்பி உயர நின்றது. ‘முரல் பாய்வாங்களே. அஞ்சாளை அடிப்பாங்களே திமிங்கலந் திம்பாங்களே வாருங்கோடா பாப்பம்’ என்று அவள் குரல் வைத்தாள். 

பெருந்தெரு வெளிச்சத்தின் தூரத்தில் மனிதத் தலைகள் தெரிந்தன. 

பெருந்தெரு வெளிச்சத்தையும் தாண்டி மனிதத் தலைகள் முன்னேறி வந்தன. 

அந்த மனிதர்களிடம் மரக்கோல்களும், சவள் பலகைத்தடிகளும் கடிப்புவலைப் பெருந்தடிகளும் இருந்தன. 

சந்தியாக்கிழவனின் நரம்புகள் முறுக்கேறித் துள்ளின. 

மண்டாத் தடியை முன் நீட்டியபடியே சந்தியாக்கிழவன் இரண்டு கவடுகள் முன் வைத்தான். 

முத்துராசன் கிழவனை முந்திக்கொள்ள துடித்தான். கூட்டம் சமீபித்துச் சமீபித்து வந்தது. 

கூட்டத்தின் முன்வரிசையிலே பூனைக்கண் யேசுதாசன் வந்தான். ‘டேய் யேசுதாசன், நீயுமா சம்மாட்டி பக்கம்?’ என்று முத்துராசன் கத்தினான். 

இல்லை முத்துராசண்ணை! நாங்க அலசு பக்கம். ஒரு பாஷையும் பேசத்தெரியாத ஊமை பக்கம்’ என்று பூனைக்கண்ணன் யேசுதாசன் பதிலுக்குக் கத்தினான். 

யேசுதாசனின் ஓங்காரக்குரல் கேட்கவே சந்தியாக்கிழவனின் மண்டாத்தடி தாழப் பதிந்தது. அவன் சிலையாக நின்றான். 

‘வெள்ளாப்புக் காணுறத்துக்கிடையிலை ஊமையை வீட்டோடை சாம்பலாக்கப் போறாங்களாம் சின்னச் சம்மாட்டியும் அவன்ரை ஆக்களும் அதையும் ஒருக்காப் பாத்திடுவம்!’ 

கூட்டத்திலிருந்து இனந்தெரியாத ஒரு குரல் மேல் எழுந்து ஒலித்தது. மேலெழுந்து எரிந்த சூழ்தடியின் ஒளிப் பிரவாகத்தில் எல்லோர் முகங்களும் சிவப்பாகத் தெரிந்தன. 

சந்தியாக்கிழவனின் கண்கள் ஏனோ எழுவான் கரையை நோக்கின. அப்போதுதான் செட்டியைக் கொண்டான் வெள்ளி முளைத்து மேலே வந்துகொண்டிருந்தது. அதற்குப் பின்னால் விடிவெள்ளி முளைத்துவிடப் போகிறது. 

சந்தியாக்கிழவன் படுவான் கரையை நோக்கினான். அங்கே கப்பல் வெள்ளித் தலைகீழாக அடிவானச் சேற்றுக்குள் புதைவது நன்றாகத் தெரிந்தது. அவன் சிலையாக நின்றான். 

சந்தியாக்கிழவனின் கண்களிலிருந்து பிரசவித்த இரு சொட்டுக் கண்ணீர்த்துளிகள் அவன் நெஞ்சிலே குதித்தன. அவன் இன்னும் சிலையாகவே நின்றான். விடிவதற்கு இருப்பதுவோ இன்னும் சிறிது நேரம்தான்!

(முற்றும்)

– கே.டானியல் படைப்புகள் – சிறுகதைகளும் குறுநாவல்களும் (தொகுதி இரண்டு), முதற் பதிப்பு: 2016, அடையாளம், திருச்சி.

கே. டானியல் (25 மார்ச் 1926) ஈழத்தின் பஞ்சமர் இலக்கிய முன்னோடி. இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற இலக்கியவகை பிரபலமாக முன்பே டானியல் ஈழத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் பிறந்த டானியல் பல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியுள்ளார். இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தில் பங்கு கொண்டு 11 மாதங்கள் சிறைப்பட்டார். தமிழகத்திற்கு வந்து தஞ்சையில் தங்கினார். இலங்கையில் தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன இயக்கத்தின் அமைப்பாளராகவும், மக்கள் கலை இலக்கியப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *