கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 29, 2020
பார்வையிட்டோர்: 7,817 
 
 

கடந்த இரண்டு மூன்று நாட்களாக காரணமில்லாமல் அலுவலகத்தில் எனக்கு எதிரில் உட்கார்ந்திருக்கும் ராமசாமியின் மீது எரிச்சல்வந்தது. எதற்கு என்று காரணம் புரியவில்லை. நானும் யோசித்து யோசித்து அதனாலேயே எரிச்சல் அதிகமானதுதான் மிச்சம்.

இதற்கும் அவர் என்னிடம் எந்த விசயத்திற்கும் வந்ததில்லை. தானுண்டு தன் வேலை உண்டு என்று வந்து போய்க் கொண்டிருப்பவர்.

இது என்ன இப்படி காரணம் இல்லாமல் எரிச்சல்படுவது என்று நானே என்னை கடிந்து கொண்டேன். அவர் மீது பொறாமைபடுகிறேனோ?

இதற்கும் அவர் என்னை கண்டால் ஒரு புன்னகை செய்து விட்டுத்தான் அவர் சீட்டுக்கு செல்வார்.

ராமசாமி எனது தெருவில்தான் குடியிருக்கிறார். அவரது வீடு அந்த தெருவின் கடைசியில் இருக்கும். என்வீடு முதலிலேயே வந்துவிடும்.

அலுவலகத்தில் புன்னகைப்பதோடு சரி. மற்றபடி பாவம் எந்த விதத்திலும் என்னுடன் சம்பந்தப்படாதவர்.

அப்படி இருக்கையில் அவர்மீது எனக்கு ஏன் எரிச்சல் ஏற்பட்டது என்று புரியவில்லை. அதுவும் இந்த நான்கு நாட்களாகத்தான் இப்படி தேவையில்லாமல் அவர்மீது எரிச்சல்படுகிறேன்.

அன்று அலுவலகத்தில் ஓய்வு பெற்ற ஒருவருக்கு மாலை தேநீர் விருந்து வைக்க பணியில் உள்ள எல்லோரிடமும், விருப்பமுள்ள தொகை கொடுக்கலாம் என்று பணம் வசூல் செய்தார்கள்.

என்னிடம் வரும் போது நான் தேவையில்லாமல் இதுவரை பணம் கொடுத்துள்ளவர்களின் லிஸ்டை வாங்கி பார்த்தேன். அப்பொழுது என் கண்கள் ராமசாமியின் பெயரை பார்த்தன. அவர் உள்ளதிலேயே மிககுறைவான தொகைதான் கொடுத்திருந்தார்.

நான் வசூல் செய்பவரிடம் இந்த தொகை கொடுக்கறதுக்கு ஒண்ணுமே கொடுக்காம இருக்கலாம் இந்தஆள் என்று அவரின் பெயரை சுட்டிகாட்டினேன்.

வசூல் செய்பவர்“நல்லமனுசன் சார்”அவரால முடிஞ்சதை கொடுக்கறாரு, என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு நான் எவ்வளவு கொடுக்க போகிறேன் என்று என்னை பார்த்தார். பர்சிலிருந்து பணத்தை கொஞ்சம் அதிகமாகவே கொடுத்து என்பெயரை எழுதினேன்.

அவர் அதை பற்றி கவலைப்படாமல் சாதாரணமாய் வாங்கி சென்றார். எனக்கு சுருக்கென்றது. கொஞ்சம் கொடுத்தவனை ஆஹா ஓஹொ என்கிறான். நான் எல்லோரையும் விட அதிகமாக கொடுத்திருக்கிறேன், ஒரு புன்னகை கூட, இல்லை ஒரு பாராட்டு எதுவும் இல்லாமல் போகிறானே என்று கோபம் வந்தது. அன்றிலிருந்து ஆரம்பித்தது இந்த ராமசாமியின் மீது எரிச்சல்.

இப்பொழுதெல்லாம் யாராவது பேச்சு வாக்கில் ராமசாமியை பற்றி உயர்வாக பேசிவிட்டால் போதும் உடனே பிரசர் ஏறிவிடுகிறது. இது நல்லதுக்கல்ல என்று மனசு சொன்னாலும் கேட்கமாட்டேனெங்கிறது.

அன்று காலை அலுவலகத்துக்கு வந்தவன் எல்லோரும் கூடி கூடி நின்று பேசிக்கொண்டிருப்பதை கண்டவுடன் என்னவென்று விசாரித்தேன். நம்ம பாலு டூவீலரில வரும் போது ஆக்சிடெண்ட் ஆயிடுச்சாம். ஹாஸ்பிடல்ல கொண்டு போய் சேர்த்திருக்காங்கலாம். போய் பாக்கறதுக்கு ரெடியா இருக்காங்க.

நானும் உடனே அவர்களுடன் கலந்து கொள்ள சென்றவனுக்கு சட்டென கோபம் வந்தது. ஏனென்றால அந்த கூட்டத்துக்கு நடுவில் இருந்தது ராமசாமி. அவர்தான் அந்த கூட்டத்தாரிடம் எப்படி அடிபட்டது என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

வேகமாக சென்றவன் அப்படியே தயக்கத்துடன் நின்றுகொண்டேன்.

அப்பொழுது அந்த கூட்டத்திலிருந்து பிரிந்து வெளியே வந்த ஆளிடம் மெல்ல இந்த ஆளுக்கு எப்படி நியூஸ் தெரியுமாம்? கிண்டல் கலந்த கேள்வியை கேட்டேன்.

அவர் அப்ப நடந்து வந்துகிட்டு இருந்தார், அவரை தாண்டித்தான் பாலு போனாராம். அப்ப சந்து வழியா ஒருபையன் டூவீலரை வேகமா ஓட்டிகிட்டு வந்து கண்ட்ரோல் பண்ணமுடியாம இவர்மேல மோதிட்டான். பாவம் அப்படியே வண்டி சாஞ்சு கீழே விழுந்துட்டாராம். நல்ல வேளை பின்னாடி அப்ப எந்த வண்டி வராத்துனால தப்பிச்சுட்டாரு. ராமசாமி உடனே அங்கிருந்த ஆட்டோவை பிடிச்சு அவரை ஹாஸ்பிடல்ல கொண்டு போய் சேர்த்துட்டாராம்.

எனக்கு பாலு அடிபட்டு விட்டதை விட ராமசாமி அவரை ஹாஸ்பிடலில் சேர்த்து பெரிய மனுசர் ஆகிவிட்டார் என்ற எரிச்சல்தான் முன்னால் நின்றது.

ராமசாமி அவரையும் அறியாமல் என் மனதில் ஒரு பிரச்சினைக்குரிய மனிதராகிவிட்டார்.

அப்பொழுதும் மனசு சொன்னது. தேவையில்லாமல் ஒருவர் மீது பொறாமை கொள்ளவேண்டாமென்று. ஆனால் அறிவுரை அப்பொழுது மட்டும்தான். மீண்டும் அவரை பார்த்தவுடன் பொறாமை பற்றிக் கொள்ளும். இதற்கும் ராமசாமி தினமும் பஸ்ஸில்தான் வருகிறார். மிகசாதாரண உடையில்தான் வருகிறார். பார்த்தால் வசதி உள்ளவராகவும் தெரியவில்லை. வெட்டிபந்தா எதுவும் செய்வதில்லை. இப்படி இருப்பது கூட என்னை போன்றவர்களுக்கு அவர் மீது பொறாமை உணர்ச்சியை தூண்டிவிடுமோ?

மதியம் மூன்று மணிஇருக்கும். அலுவலகத்தில், குனிந்து எழுதி கொண்டிருந்தவனுக்கு எதிரில் யாரோ நிற்பது போல உணர்வு வர தலையை தூக்கி பார்த்தேன். ராமசாமி நின்று கொண்டிருந்தார். சட்டென காரணம் புரியாத எரிச்சல் எட்டிபார்க்க, அதை காட்டாமல் என்ன சார்? என்று கேட்டேன்.

சார் என்று இழுத்தார், உட்காருங்க சார் என்று மரியாதைக்காக சொன்னேன். பரவாயில்லே சார் என்று பவ்யமாய் நின்றார். என்ன சார் என்ன வேணும்? குரலில் கொஞ்சம் கேலி எட்டிபார்த்தது. அவர் அதை எல்லாம் கவனித்தாரா என்று தெரியவில்லை. கொஞ்சம் பணம் தேவைப்படுது மெல்ல கேட்டார். நான் சட்டென நிமிர்ந்தேன், மனதுக்குள் ஆர்ப்பரிப்பு, அப்பாடா கடைசியில் ராமசாமி என்னிடம் சரண்டர் ஆகிவிட்டார். இருந்தாலும் வெளிகாட்டிக் கொள்ளாமல் எவ்வளவு வேணும்?

ஒரு இருபத்தஞாசாயிரம் கொடுத்து உதவினீங்கன்னா நல்லா இருக்கும். பையனுக்கு ஸ்கூல்பீஸ் கட்ட நாளையோட கடைசிநாள். மெல்ல சொன்னார்.

இப்ப எங்கிட்ட அவ்வளவு பணம் இல்லையே, சொன்னாலும் மனதுக்குள் பாங்கியில் எவ்வளவு பணம் இருக்கும் கணக்கு போட்டு பார்த்தேன். அவர் கேட்டதைவிட அதிகமாகவே இருந்தது. இருந்தாலும் இழுத்தடித்து பார்ப்போம். அவர் முகம் சுண்டி போவதை மனசு இரசித்தது. ”உங்க கிட்ட கேட்டா” கிடைக்கும்னு சொன்னாங்க, அடுத்த மாசம் லோன் போட்டு கொடுத்துடலாமுன்னு பார்த்தேன்.

யார் சொன்னால் என்ன? ராமசாமி சொன்ன“ உங்க கிட்ட கேட்டா கிடைக்கும்” இந்த வார்த்தை என்னை அசைத்தது. சாயங்காலம் அஞ்சுமணிக்கு நான் கிளம்பறதுக்கு முன்னால வந்து பாருங்க.. அதுக்குள்ள பணம் புரட்டமுடியுமான்னு பாக்கறேன். இப்பொழுது மீண்டும் பிரகாசமானார் ராமசாமி.

அரைமணி நேரத்தில் எழுந்து ஏடிஎம்மை நோக்கி நடந்தேன். இப்பொழுது ராமசாமியின் மீது இருந்த பொறாமை காணாமல் போயிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *