பெண் ஜென்மம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 8, 2014
பார்வையிட்டோர்: 11,174 
 

இன்று ஏனோ ஆஸ்பத்திரி கிளம்பும் போதே குழந்தை அடம்பிடித்தாள். என்ன சொன்னாலும் கேட்கவில்லை. மாமியாரும், கணவரும் அவளை சமாதானப்படுத்தி உள்ளே அழைததுச்சென்றனர். குழந்தையின் அழுகை என்னுள் காரணமற்ற கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. சே!என்ன வாழ்க்கை இது? என்ன டாக்டர்? பொல்லாத டாக்டர்! குழந்தையைக் கூட சரியா பார்த்துக்கொள்ள முடியாமல். இந்த பெண் ஜென்மமே இப்படித்தானா? எப்போதும் காலை கட்டிக்கொண்டிருக்கும் சங்கிலிகளுடன். அது அடிமைச் சங்கிலியாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை. அன்பு சங்கிலி, கடமைச் சங்கிலி என்று ஏதோ ஒரு வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டே ஆக வேண்டிய கட்டாயம். முழுமையாக குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளவும் முடியாமல், வேலையிலும் முழுக்கவனத்தைச் செலுத்த முடியாமல் என்று இரட்டைக்குதிரை வாழ்க்கை சலித்துத் தான் போகிறது ஒரு கட்டத்தில்.

என் குழந்தையை மட்டுமல்ல என் கோபத்தையும் சமாதானப்படுத்த முடியாமல் ஆஸ்பத்திரி உள்ளே நுழைந்தேன். அடுத்தடுத்து வரிசையாய் பெண்கள். குடும்ப கட்டுப்பாட்டுக்கு முன்பான பரிசோதனைக்காக.

குழந்தை பிறந்து எத்தனை நாள் ஆச்சு? எத்தனை குழந்தைங்க? என்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் தொடர்ந்து கொண்டே இருந்தன. இறுக்கிக்கொண்டிருந்த கோபத்தோடு பசியும் சேர்ந்து கொண்டது. காலையில் குழந்தை படுத்தியப் பாட்டில் சாப்பிடக்கூட முடியவில்லை.

அப்போது தான் அவள் வந்தாள். ரொம்ப சின்ன வயசு. ஒல்லியாக இருந்தாள். கண்களில் கருவளையம் இல்லாமல் கன்னங்களில் சிறிது சதைப்பற்றும் இருந்தால் திருஷ்டி கழிக்க வேண்டிய அழகு தான்.

‘வயசென்ன?’

’22’

பார்த்தால் அப்படித்தெரியவில்லையென்று நினைத்துக்கொண்டேன்.

‘எத்தனை வருஷமாச்சி கலியாணமாகி?’

‘மூணு வருஷம்’

‘எத்தனை குழந்தைங்க?’

‘ஒரு பொண்ணு’

‘எப்ப பொறந்தது?’

என்று கேட்டபடியே அவள் கேஸ் பைலை புரட்டினேன்.

‘இரண்டு வருஷமாச்சு’

‘அபார்ஷனா?’

‘ம்’

‘ஏன் வர்றதுக்கு முன்னாடியே ஜாக்கிரதையா இருக்கிறது?’

ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தாள்.

‘எதுக்கு இப்ப கலைக்கிற? ஒரு பொண்ணு போதுமா?

‘ம்’ என்று சொல்லி அதற்கும் ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தாள

‘அபார்ஷன் பண்ணிட்டு குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்க’

‘வேண்டாம் டாக்டர்’

‘ஏன் மறுபடி மூணு மாசம் கழிச்சு வயித்தைக் தூக்கிட்டு வந்து நிக்கறதுக்கா?

அதே சிரிப்பு. இப்போது என் வார்த்தைக்கு எதிரில் இருந்தவர்களும் சிரிக்க,
‘இல்லை அப்படியெல்லாம் நடக்காது’

எல்லோரும் சிரித்தது எனக்குள் ஆணவத்தை கிளறி இருக்க இத மாதிரி எத்தனை கேஸ் பார்த்திருக்கேன். நாம சொல்றதை கேட்காம மறுபடி வயித்தைத் தூக்கிக்கிட்டு ஆபார்ஷனுக்கோ, பிரசவத்துக்கோ வந்து நிக்குங்க என்று என் மனதில் விழுந்த எண்ணங்களோடு அவளை பார்க்க,

அவள் லேசாக கலங்கிய கண்களோடும் அதே வெள்ளந்தி சிரிப்போடும் ‘அப்படி எல்லாம் நடக்காது டாக்டர்’ என்றாள். இது அழுகையா? சிரிப்பா? புரியாமல் அவளை கோபத்தோடுக் கீழ்பார்வைப் பார்த்து,

ஏன் மறுபடி படுக்கவே மாட்டியா? என்றேன

தலை குனிந்து கொண்டாள்.

‘மாட்டேன்மா’ என்றாள்.

அவள் குரல் தழைந்திருந்தது. முட்டிக்கொண்டிருந்த அவள் கண்ணீர் இப்போது வெளியே எட்டி பார்த்தது.

நான் நக்கலாய் சிரிக்க,சிறிது நேரம் அங்கே அமைதி நிலவியது. எட்டிப்பார்த்த அவளது கண்ணீர் இப்போது தரையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது.எவ்வளவு பேரின் நீலிக் கண்ணீரைப் பார்த்திருப்பேன் என்று நினைத்துக்கொண்டிருந்த போது அவளின் மெல்லிய குரல் அந்த நிசப்தத்தை கலைத்தது. அவள் சொன்னாள்.

‘அவருக்கு நாளைக்குக் கல்யாணம் டாக்டர்’

அவள் கண்ணீருக்கான காரணம் உறைத்த போது எனக்குள் இருந்த ஆணவச்சுவர் இடிந்து விழுந்தது போல் இருந்தது. காலையில் எரிந்து கொண்டிருந்த என் கோபக்கனலை அவள் கண்ணீர் அணைத்து விட்டிருந்தது. அவளும் பெண் தானே? அவளுக்கும் சங்கிலிகள் இருக்கும் தானே?

மெத்தப்படித்து, வேலைப்பார்த்துக் கொண்டு கணவனின் துணையோடு இருக்கும் எனக்கே எத்தனை எத்தனை சவால்கள்? அவள் படிப்பற்றவள் மட்டுமல்ல. இப்போது பிடிப்பற்றவளாகவும் ஆகிவிட்டாள்.பசி போய் பெரூமூச்சு வந்தது.

பின்னாடி நின்று கொண்டு இவள் எப்போது போவாள் என்று அவசரப்பட்டுக்கொண்டிருந்த அடுத்த பேஷண்ட் கூட சிரிப்பு மறந்து நின்று கொண்டிருந்தாள். நேரமாவது தெரிந்தாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை.

‘ஏன் உன்னை விட்டு?
என்று நான் முடிக்கும் முன் அவள் சொன்னாள்.

‘நான் நல்லா இல்லையாம். என்னைய பிடிக்கலையாம்’

‘ஏன் மூணு மாசத்துக்கு முன்னாடி படுக்கும் போது மட்டும் பிடிச்சிருந்துதாமா?’

‘சரி உள்ளே போய் படு செக் பண்ணணும்’ என்றேன்.

வீட்டிற்கு வந்தும் மன உளைச்சல் குறையவே இல்லை. பெண் தான் இந்த சமூகத்திற்கான அடிப்படை. இனப்பெருக்கத்தின் மூலதாரம். ஆனால் பல கட்டங்களில் அதுதான் அவளின் பெருஞ்சங்கிலியாய் இருப்பது போல் தோன்றியது.

அந்த ஆணை இரண்டாவதாக திருமணம் செய்யவிருக்கும் முகம் தெரியாத பெண்ணின் மேல் கோபம் வந்தது. பெண்ணுக்கு இன்னொரு பெண் எதிரியாய் இருந்து சங்கிலி பூட்டுகிறாளா? இல்லை அவளுக்கு அவளே பூட்டிக்கொள்கிறாளா?

ஏதேதோ சிந்தனைக்கு நடுவில் குழந்தை என் முகத்தைத் தடவிக்கொண்டிருந்தது தெரிந்தது. நாளைக்கு என் பெண்ணுக்கும் இது போன்று…

உடன் எழுந்தேன். காவல் துறை சார்ந்த தோழிக்கு போன் அடித்தேன். செக்கப்புக்குப் பின் அந்தப் பெண்ணை காத்திருக்கச் சொல்லி வாங்கிய சில தகவல்களை பகிர்ந்தேன்.

காலையில் இருந்த மன உளைச்சல் குறைந்தது போல் இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *