பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 12,700 
 
 

பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான நாங்கள் அப்போது பச்சைவெளியில் விளையாடிக் கொண்டிருந்தோம். நாங்கள் விளையா டிக்கொண்டிருந்த்த இடத்தில் மட்டும் எங்களைச்சுற்றி ஒரு வயலட் நிற வெளிச்சம் பரவிக்கிடக்க மற்ற பகுதிகள் இருளில் மண்டிக்கிடந்தது. எங்களுடைய விளையட்டிற்க்கு உறுதுணையாக பெரிய பெரிய பல்லிகளும் எங்களை கேலி செய்யும் பாவனையில் அசையாமல் எங்களையே உற்றுப்பார்க்கும் கரப்பான் பூசிகள் சிலவும் அங்கே இருந்தன. வெளிச்சம் மெல்ல விரிய ஆரம்பித்தபோது எங்களைவிட பல மடங்கு உயரமாக வளர்ந்த நாணல் புதரினூடே நாங்கள் ஒடியாடி எங்களை துரத்தும் பெரியபல்லிகளுக்கு வருத்தமேற்படவைத்தோம். அப்போதெல்லாம் நாங்கள் இது போல் இரண்டாகப் பிரிந்திருக்கவில்லை. எல்லாவற்றிற்கும் காரணமாக தண்ணீரை சொல்ல வேண்டும்.

வழக்கம்போல் அன்றும் பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான நாங்கள் அளவற்ற சந்தோஷத்துடன் விளையாடிக்கொண்டிருந்தோம். என்ன காரணமோ தெரியவில்லை. எங்கிருந்ததோ வந்த தேயிலைச் செடியின் வாசம் எங்களுக்குள் புதிய விளையாட்டொன்றை கண்ட்டெத்தது. கள்ளன்,போலிஸ் என இரண்டு குழுக்களாக எங்களை பிரித்து கொண்டோம். அதில் முதல் முறையில் நாங்கள் கள்ளனாக விளையாடியபோது போலிஸான அவர்கள் எங்களைச் சுலபமாகவே பிடித்துவிட்டனர்.

இப்போது அவர்கள் கள்ளனாக மாறி நாங்கள் போலீஸாக அவர்களைத் துரத்தினோம். நாணல் புதர்களை கடந்து அவர்கள் ஒடிக்கொண்டிருந்தபோதே இந்த விளையாட்டை நிறுத்தும் விதமாக இரண்டொரு பாம்புகள் வேகமாகக் குறிக்கிட்டதை நாங்கள் பொருட்ப்படுத்தவில்லை. அவர்கள் மேலும் வேகமாக ஒடினர். நாங்களும் அவர்களை விட்டாமல் துரத்திக் கொண்டிருந்தோம். இம்முறை சிறு ஒடையை எக்கிச் சென்று மறுபுறத்தில் வரிசையாக நின்றுக்கொண்டிருந்த அவர்கள் ’’நாங்கள் இங்கே…..’’என அழைப்பு விடுத்தனர். அவர்கள் எத்ற்க்காக இப்படிக்கூச்சலிட வேண்டும் . ஒடையைத் தாண்டுவது ஒன்றும் பெரிய காரியமல்லவே என நினனத்தபடி நாங்கள் ஒடையை தாண்டமுயற்சித்தோம். எங்களின் கால் பட்ட மறுநொடியில் ஒடை சற்று அகலமாக விரிய ஆரம்பித்தது. குழந்தைகளான நாங்கள் சற்று பதடததுடன் எங்களின் பிஞ்சுப் பாதங்களை பின்னுக்கிழுத்து கொண்டோம்.

எதிரே இம்முறை சற்று கூப்பிடு தொலைவில் மறுகரையில் வரிசையாக நின்றிருந்த அவர்கள் எஙகளை கேலிசெய்யும் பொருட்டு மீண்டும் ”நாங்கள் இங்கே, நாங்கள் இங்கே……. எனக்கூச்சலிட்டனர்.

மீண்டும் நாங்கள்,சற்றே அகலமான அந்த ஒடை நீரீல் கால்வைத்தபோது ஒடை விருட்டென வேகமாய் விரிந்துவெள்ள பிராகமெடுத்து பெரும் நதியாக ஒடத்துவங்கியது.

பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான எங்களுக்கு பலத்த ஆச்சர்யமமும் அதிர்ச்சியும் பயமும் ஏற்பட்டது.சற்றுமுன் நாங்கள் நின்றிருந்த இடம் இருட்டாகி நதி மட்டும் சலச்சலத்து கொண்டிருந்த்து.

அவர்கள் கூக்குரல் மட்டுமே எங்கோ தொலைவில் கேட்டது.”நாங்கள் இங்கே , நாங்கள் இங்கே…”என அவர்கள விடுத்த குரல் மிக மெல்லிதாகக் கேட்டது.

எங்களுக்கு இப்போது முதல்முறையாக பயம் ஏற்ப்பட்டது. விளையாட்டை மறந்து இனி அவர்களை பார்க்கமுடியுமா எனும் அச்சம் எங்களைத் தொற்றிக் கொண்டது. பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான நாங்கள் அவர்களை எப்படியாவது காப்பாற்றிவிடும் பொருட்டு வெகுநேரம் யோசித்த பின் மீண்டும் அந்த நதியில் கால் வைத்தபோது நதியின் சலசலப்பு நின்று சற்று அமைதியாக சூழல் உறைந்திருந்தது. எங்களது காலில் பெரும் அலைகள் வந்து தீண்டியபோதுத்தான் நதி கடலாக மாறிவிட்டிருந்தததை உணர்ந்தோம். வெகு துரத்தில் நட்சசத்திரங்கள் மின்னிக்கொண்டிடுந்தன.இபோது அவர்களின் கூக்குரல் கேட்கவில்லை.பயம்மூட்டும் அந்தகாரம் பிரம்மாண்டமாக எஙகள் முன் விரித்தது.

எங்களை நோக்கி வரும் அலைகளின் சப்தம் எங்களின் துயரத்தை மேலும் அதிகப்படுத்துவதாக இருந்தது. எங்கள் முகத்தில் வீசும் குளிர்ந்த காற்றினூடே பிசுபிசுப்பான அவர்களின் ரத்த வாடையையும் எங்களால் உணர முடிந்தபோது மிகவும் துயரத்திற்குள்ளானோம். பூப்போட்ட ஜட்டியனிந்த குழந்தைகளான எஙகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

இந்தச் சூழ்நிலையில் நாங்கள் வேறென்ன செய்ய முடியும். மேலும் எங்களைக் கடலில் இறங்கவிடாமல் தடுத்ததே எங்கள் ஜட்டியிலிருக்கும் பூக்கள்தான். எங்கள் கால்கள் கடலில் இறங்கினால் ஜட்டியில்லிருக்கும் பூக்கள் ஈரமாகிவிடுமோ என்கிற அச்சம் தான் நாங்கள் கடலில் இறங்காது போனதற்கு காரணம் என்று கூறினர்.

பிற்பாடு அவர்கள் பல்வேறு கடல்களால் பிரிக்கப்பட்டு பல்வேறு துண்டுகளாகச் சிதறிபோய்விட்டார்கள் என்பதையும் கேள்விபட்டு வருத்தப்படுக் கொண்டிருக்கிறோம்.

என்ன செய்ய முடியும், நீங்களே சொல்லுங்கள்.பூப்போட்ட ஜட்டியனிந்த குழந்தைகளான எங்களுக்கு தொலைந்துபோன அவர்களைவிட எங்கள் ஜட்டிகளில் இருக்கும் பூக்களின் மீதுதானே அதிகப் பிரியம்.
புது எழுத்து ..2003

பின் குறிப்பு ;

எனது மயில்வாகனன் மற்றும் கதைகள் தொகுப்பில் இடம்பெற்ற இக்கதையை ஒரே வேகத்தில் 1995ல் ஒரு இரவு நேரத்தில் எழுதி முடித்தேன். அப்போது என் அறை பழவந்தாங்கலில் இருந்தது.வீட்டிற்குள் நுழைந்தபோது அறையின் கதவு திறந்திருந்தது. உள்ளே கவிஞரும் நண்பருமான யூமாவாசுகி அறியில் அமர்ந்து தீவிரமாக எதையோ எழுதிக்கொண்டிருந்தார்.அப்போது நான் தங்கியிருந்த வீட்டின் முன்பகுதியில்தான் யூமாவாசூகியின் அறையும் இருந்தது. இருவருடைய அறையின் கதவுகளும், கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் தானாக பூட்டை இளக்கி கொடுக்கும் தன்மையை பெற்றிருந்தன. சிலசமயங்களில் அவர் என் அறையிலும் நான் அவரது அறையிலும் அமர்ந்து எழுதுவது வழக்கம் .அது போலத்தான் அன்று நான் வீட்டினுள் நுழைந்தபோது யூமாவாசூகி தீவிரமாக எதையோ எழுதிக்கொண்டிருந்தார். சட்டென என்ன செய்வது என தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்த நானும் ஒரு பேப்பரை எடுத்து எழுதத்துவங்கினேன் .
அப்போது நான் வேலை செய்த அரசியல் புலனாய்வு பத்திரிக்கை அலுவலகத்துக்கு அன்றுகாலை வந்த சிலகடிதங்களும் செய்திகளும் என்னை பெருமளவு அலைக்கழித்துக்கொண்டிருந்தன. இக்கதை உருவாக்கம் பெற அந்த கடிதங்களே காரணம் .மேலும் அன்று யூமாவாசுகியிடம் இருந்த தீவிரமான படைப்பு மவுனமும் இப்படைப்பு எழுத முக்கியமானதொரு காரணியாக என்னுள் செயல்ப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் அவருக்கு நான் என் நன்றியை பகிர்ந்து கொள்வதில் பிரியப்படுகிறேன். அத்ன் பிறகு 2000ல் இக்கதை குமுதம்.காம் துவக்கப்பட்டபோது அதன் முதல்கதையாகவும் 2003ல் புது எழுத்து இதழிலும் பின் 2004ல் என் சிறுகதைத்தொகுப்பின் மூலமாகவும் இக்கதை வெளியானபோது நண்பர்கள் பலர் தங்களுக்கு பிடித்த கதையாக பல்வேறு காரணத்திற்கு சொல்வர்.ஆனால் ஒரு சிலர்மட்டுமே அதனுள் இருந்த சில வலிதரும் உண்மைகளை புரிந்துகொண்டனர். இச்சூழல்;உக்கும் அக்கதை பொருந்தும் என்ற நினைப்பில் இக்கதையை உங்களுக்கு மீண்டும் என் ப்ளாக் வழி பகிர்ந்துகொள்வதில் எனக்கு கசப்பு நிறைந்த மனஎழுச்சியை எய்துகிறேன்.

அஜயன் பாலா
21-12-2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *