பூங்கோதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 11,065 
 
 

சேலம் ஜில்லாவில் சங்ககிரி துர்க்கம் என்ற ஊர் ஒன்று இருக்கிறது. அங்கே பிறந்தவர் எம் பெருமான் கவிராயர் என்பவர். அவர் ஆயர் குலத்தில் உதித்தவர். இளமைக் காலத்தில் அவர் தமிழ் நாடு முழுவதும் பிரயாணம் செய்து பாண்டி நாட்டில் சில காலம் தங்கிச் சில வித்துவான்களை அடுத்துத் தமிழ் பயின்றார். பிறகு கொங்கு நாட்டிலுள்ள தம் ஊருக்குப் போய்த் தமிழ் நூல்களை ஆராய்ந்தும் பாடம் சொல்லியும் இன்புற்றுவந்தனர். அவருக்குக் கம்ப ராமாயணத்தில் பேரன்பு இருந்தது. அந்த நூலை அடிக்கடி படித்தும், அந்நூலின் நயங்களைப் பிறருக்குச் சொல்லி இன்புற்றும் பொழுது போக்கிவந்த அவர்பால் யாவருக்கும் நன்மதிப்பு உண்டாகி வளர்ந்து வந்தது. ராமாயணத்தில் ஊறிய அவருடைய வாக்கில் வரும் விஷயங்கள் பக்திச் சுவை ததும்ப இருத்தலை யாவரும் அறிந்து பாராட்டினர்.

கொங்கு நாட்டில் மோரூர் என்னும் ஊரில் அதைச் சூழ்ந்துள்ள கீழ்கரைப் பூந்துறைநாடு என்னும் பகுதிக்குத் தலைவனாக நல்லதம்பிக் காங்கேயன் என்னும் உபகாரி வாழ்ந்து வந்தான் (பதினாறாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி). அவன் தமிழன்பு மிகுந்தவன். தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கும் இயல்புடையவன். எம்பெருமான் கவிராயருக்கும் நல்லதம்பிக் காங்கேயனுக்கும் நட்பு உண்டாயிற்று. அடிக்கடி கவிராயர் மோரூருக்குப் போய்ச் சில தினங்கள் இருந்து அந்த உபகாரியோடு அளவளாவி இன்புறுவார். கம்பராமாயணச் சொற்பொருள் நயங்களை எடுத்து விளக்குவார்.

ஒரு நாள் காங்கேயன் கம்பராமாயணப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருந்தபோது எதையோ நினைத்துப் பெருமூச்சு விட்டான். “என்ன நினைத்துக் கொண்டீர்கள்?” என்று புலவர் கேட்டார்.

“சோழ நாட்டின் பெருமையை நினைத்துப் பார்த்தேன்.அந்த நாட்டுக்கு எத்தனை நிலவளம் இருந்தாலும் அது பெரிய புகழ் ஆகாது. கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பருடைய கவி வளம் உண்டான நாடு என்ற பெரும் புகழ் ஒன்றைப்போல வேறு எதுவும் வராது. ‘சோழ நாடு கம்பராமாயணத்தை உடைத்து’ என்று பாராட்டுவதுதான் முறை” என்றான் காங்கேயன்.

“திடீரென்று ஏன் இந்த ஞாபகம் உங்களுக்கு வந்தது?”

“திடீரென்று வரவில்லை. கம்பராமாயணத்தை நினைக்கும்போதெல்லாம் இந்த நினைவும் உடன் வருகின்றது. இன்று அந்த நினைவு மிகுதியாகிவிட்டது.”

“உண்மைதான். ஒரு வேளை தின்றால் மறு வேளைக்குப் பயன்படாத சோற்றைத் தருவது பெரிய சிறப்பன்று. எக்காலத்தும் நினைக்க நினைக்க இன்பத்தைத் தரும் கவிச் செல்வத்தை, அதுவும் சுவைப்பிழம்பாக விளங்கும் கம்பராமாயணத்தைத் தந்த சிறப்பினால் சோழ நாடு எல்லா நாடுகளிலும் உயர்ந்து விளங்குகிறது.”

“அந்த மாதிரியான பெருமை வேறு நாட்டிற்கு வரக்கூடாதா?” என்று ஆவலாக வினவினான் காங்கேயன்.

“மீட்டும் கம்பர் அந்த நாட்டிற் பிறந்தால் வரக்கூடும்!”

“இது சாத்தியமா? அவ்வளவு புகழ் இல்லாவிட்டாலும் ‘நம்முடைய நாட்டிலும் ஒரு ராமாயணம் பிறந்தது’ என்ற புகழை அடைய முடியாதா?”

காங்கேயன் கருத்து என்னவென்று ஆராய்வதில் புலவர் மனம் சென்றது; அவர் மௌனமாக இருந்தார்.

“என்ன, கொங்கு நாட்டிலும் ஒரு புலவர் ராமாயணம் ஒன்றை இயற்றினார் என்ற புகழை இந்த நாட்டுக்கு அளிக்க முயல்வது கடினமான காரியமா?”

புலவருக்குக் காங்கேயன் கருத்து விளங்கிவிட்டது. அவர் புன்னகை பூத்தார். காங்கேயனும் புன்முறுவல் செய்தான்.

“என் கருத்தை உணர்ந்துகொண்டீர்களென்று நினைக்கிறேன். அந்தப் புகழை உண்டாக்க…”

“நான் முயல்வேன்” என்று உற்சாகத்தோடு சொல்லி வாக்கியத்தை முடித்தார் கவிராயர்.

“சந்தோஷம்! நல்லது; பெரும் பாக்கியம். இந்த நாட்டின் அதிருஷ்டம்! உங்கள் திருவாக்கினால் ஒரு ராமாயணம் வெளியாக வேண்டுமென்று நான் பல நாளாக ஆசைகொண்டிருந்தேன். அந்த விருப்பத்தை வெளிப்படையாகச் சொல்ல அஞ்சினேன். கம்பராமாயணத்திலே ஊறி நிற்கும் உங்களுக்கு எல்லா வகையான தகுதிகளும் இருக்கின்றன. நீங்கள் மனம் வைத்தால் எளிதில் நிறைவேற்றுவீர்கள் என்ற உறுதி எனக்கு உண்டு.”

இந்தக் தூண்டுதலின் விளைவாக எம்பெருமான் கவிராயர் தக்கை என்னும் வாத்தியத்தோடு பாடுவ தற்கு ஏற்ற இசைப் பாட்டுக்கள் அமைந்த ராமாயணம் ஒன்றை எளிய நடையில் பாடி முடித்தார். நல்லதம்பிக் காங்கேயனுடைய ஆதரவால் அந்தத் தக்கை ராமாயணம் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது.

எம்பெருமான் கவிராயருடைய மனைவியாகிய பூங்கோதை என்னும் பெண்மணி, புலவருக்கு ஏற்ற மனைவியாக இருந்தாள். அவளும் தமிழ்ப் புலமை உடையவள். பிறந்த வீட்டிலே தமிழ் நூல்களைப் படித்து அறிவு வாய்ந்ததோடு எம்பெருமான் கவிராயருக்கு வாழ்க்கைப்பட்ட பிறகும் அந்த அறிவைப் பன்மடங்கு பெருக்கிக்கொண்டாள். இதனால் அவளும் இலக்கண இலக்கியத் தேர்ச்சி பெற்றுச் செய்யுள் இயற்றும் வன்மையை உடையவளானாள்.

ஒரு நாள் சில வித்துவான்கள் தக்கை ராமாயணம் பாடிப் புகழ் பெற்ற எம்பெருமான் கவிராயரைப் பார்க்கும்பொருட்டு வந்திருந்தார்கள். அவர்கள் வந்த சமயத்தில் கவிராயர் ஏதோ வேலையாகப் புறத்தே சென்றிருந்தார். வித்துவான்கள் வந்திருப்பதை அறிந்த பூங்கோதை தன் குழந்தைகளை அனுப்பி அவர்களைத் திண்ணையிலே உட்கார்ந்திருக்கும்படி சொல்லி வெற்றிலை பாக்கும் அனுப்பினாள்.

அவர்கள் திண்ணையிலேயே அமர்ந்து தாம்பூலத்தைப் போட்டுக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். தமிழ் சம்பந்தமான பேச்சாக இருந்ததனால் பூங்கோதை வீட்டிற்குள் இருந்தபடியே அந்தச் சுவையுள்ள சம்பாஷணையைக் கவனித்து ரசித்து வந்தாள். எம்பெருமான் கவிராயருடைய பெருமையையும் தக்கை ராமாயணச் சிறப்பையும் பற்றிப் பேசினார்கள். கம்ப ராமாயண நயம் இடையே வந்தது. தமிழ்ப் பாடல்களும் புலவர்களைப்பற்றிய செய்திகளும் வந்தன. ஒவ்வொருவரும் தத்தமக்குப் பிரியமான செய்திகளைச் சொல்லிக்கொண்டு வந்தார்கள். பேச்சு மெல்ல மெல்லப் பெண்களைப்பற்றிய விவகாரத்தில் திரும்பியது. “பெண்கள் தனியே வாழ முடியாது. எண்ணறக் கற்று எழுத்தற வாசித்தாலும் பெண்புத்தி பின்புத்திதான்” என்றார் ஒருவர்.

“பேதையரென்ற பெயரே அவர்களுடைய அறியாமையைப் புலப்படுத்தவில்லையா?” என்றார் மற்றொருவர்.

“தெரியாமலா பரிமேலழகர், ‘அறிவறிந்த மக்கள்’ என்ற திருக்குறளுக்கு ‘அறிவறிந்த என்பது பெண்ணொழித்து நின்றது’ என்று எழுதினார்?” என்று ஆதாரங் காட்டினார் வேறொருவர்.
இதுவரையில் அவர்களுடைய பேச்சிலே இன்பங்கண்டு நின்ற பூங்கோதைக்கு, பெண்களை அவமதிக்கும் இந்த அதிகப் பிரசங்கத்தைக் கேட்கச் சகிக்கவில்லை. அவர்களோ மேலும் பெண்களை இழிவாகப் பேசலானார்கள். ஒருவர் பாடல் சொல்கிறார்; ஒருவர் உரையைக் காட்டுகிறார்; வேறொருவரோ புராண இதிகாசக் கதைகளை உதாரணமாக எடுத்துச் சொல்கிறார்; மற்றொருவர் தம்முடைய அநுபவத்திலே அறிந்த நிகழ்ச்சியை விளக்க ஆரம்பித்தார்.

கவிராயர் மனைவிக்குக் கோபம் கோபமாக வந்தது. அவர்களுக்கு எதிரே சென்று அவர்கள் வாயை அடக்க வேண்டுமென்று ஆத்திரம் பொங்கியது. ஆனாலும் இயல்பாக இருந்த நாணம் மிஞ்சியது. திண்ணைப்பேச்சில் பெண்ணைப் பழிக்கும் படலம் இன்னும் முடிந்த பாடில்லை. ‘ஏதாவது ஓர் உபாயம் செய்து தான் தீரவேண்டும்’ என்று துணிந்தாள் அந்தத் தமிழ் மங்கை.

சிறிதுநேரம் யோசித்தாள். ஒரு சிறிய ஓலையையும் எழுத்தாணியையும் எடுத்தாள். என்னவோ எழுதினாள். ஒரு குழந்தையைக் கூப்பிட்டு, “இந்தா, இதைக் கொண்டுபோய்த் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார்களே, அவர்களிடம் கொடு” என்றாள்.

குழந்தை அப்படியே அதைக் கொண்டுபோய்த் திண்ணையில் உட்கார்ந்திருந்தவர்களுக்குள் ஒருவர் கையில் கொடுத்தது.

அதை அவர் பார்த்தவுடனே அவர் முகம் மங்கியது. ஓலையை மற்றொருவர் பார்த்தார். அவர் பேச்சு நின்றது. ஒவ்வொருவராகப் பார்த்தார்கள். எல்லோரும் திடுக்கிட்டு, ஸ்தம்பித்து, மௌனமானார்கள்.

ஓலையில் என்ன இருந்தது? பூங்கோதை அவர்களை வைது ஒன்றும் எழுதவில்லை; ‘நீங்கள் இப்படிப் பெண்ணினத்தை அவமதிப்பது தவறு’ என்றும் எழுதவில்லை. ஆனால் ஒரு வெண்பாவை எழுதி அனுப்பினாள்.

‘ஆண்மக்கள் பெண்களைக் காட்டிலும் அறிவில் தாழ்ந்தவர்கள்’ என்று அந்தக் கவி சொல்லியது.

“அறிவில் இளைஞரே ஆண்மக்கள்” என்ற முதலடியே அவர்களைத் திடுக்கிடச் செய்தது. இவ்வளவு நேரம் பேசிக்கொண் டிருந்தபோது அவர்கள் சொன்ன அத்தனை பேச்சுக்கும் விரோதமான கருத்து; அது மட்டுமா?

“மாதர், அறிவில் முதியரே யாவர்.”

இதென்ன வெட்கக் கேடு? பெண்கள் அறிவில் ஆடவர்களைக் காட்டிலும் – அவர்களைக் காட்டிலும் – முதியவர்களாம்! இதற்கு என்ன ஆதாரம்?

“அறி கரியோ?”

இதை அறிந்துகொள்வதற்குச் சாட்சியா? இதோ

“தாம்கொண்ட சூலறிவர் தத்தையர்; ஆண்மக்கள், தாம்கொண்ட சூலறியார் தாம்.”

சாஸ்திரங்களிலும் பழைய நூல்களிலும் சொல்லப்பட்ட ஒரு தத்துவத்தை ஆதாரமாகப் பாட்டு எடுத்துக் காட்டுகிறது. உயிர் தாயினுடைய கர்ப்பத்திலே புகுவதற்கு முன்பு இரண்டு மாதங்கள் தகப்பனுடைய கர்ப்பத்திலே இருக்குமென்று அந் நூல்கள் சொல்கின்றன. மாதர் தாம் கர்ப்பமுற்ற செய்தியை அறிந்துகொள்வார்கள். ஆடவர்களோ தம்மிடத்தில் உயிர் தங்கியிருப்பதை அறிய முடிவதில்லை. இந்த விஷயத்தில், அதாவது தமக்குச் சூல் உண்டாகியிருக்கிறது என்று அறிந்துகொள்வதில் ஆடவர், பெண்களிலும் தாழ்ந்தவர்களே. அதைத்தான் அந்த வெண்பாவின் பிற்பகுதி சொல்லுகிறது.

திண்ணையில் இருந்த வித்துவான்கள் அந்தப் பாடலின் ஒவ்வோர் அடியையும் கவனித்துப் பார்த்தார்கள். முன்னே ஆரவாரித்துப் பெண்களை இழித்துப் பேசியதற்கு நாணமடைந்தார்கள்.

“இந்தப் பாடல் எந்த நூலில் இருக்கிறது?” என்று ஒருவர் மெல்லத் தமக்குள்ளே கேட்டார். யாருக்கும் தெரியவில்லை. ‘கவிராயர் மனைவி நன்றாகப் படித்திருக்கிறாள். நம்முடைய வாயை அடைக்கத் தக்க மேற்கோளைத் தெரிந்து நம் பேச்சுக்குப் பதிலாக அனுப்பியிருக்கிறாள். இது நமக்குத் தெரியாத நூலாகவும் இருக்கிறதே!’ என்று எண்ணி மனக்குழப்பமும், ‘தவறு செய்துவிட்டோமே’ என்ற அச்சமும் உடையவர்களாகி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.

அப்போது எம்பெருமான் கவிராயர் வந்தார். அவர் வரவைக் கண்டு யாவரும் எழுந்து அஞ்சலி பண்ணினர். “வாருங்கள். வந்து நெடுநேரம் ஆயிற்றே?” என்று சொல்லிக் கவிராயர் அவர்களை வரவேற்றார்.

“முதலில் உங்கள் மனைவியாரிடம் ‘எங்களைப் பொறுத்தருள வேண்டும்’ என்ற எங்கள் வேண்டு கோளைத் தெரிவித்து அவர்களுடைய பெருமையை அறியாத எங்களை மன்னிக்கச் சொல்லும்படி கேட்டுக் கொள்ளுகிறோம்” என்றார் ஒருவர்.

கவிராயருக்கு ஒன்றும் விளங்கவில்லை. விரைவாக உள்ளே சென்று, “என்ன நடந்தது?” என்று பூங்கோதையைக் கேட்டார். புன்சிரிப்போடு நிகழ்ந்தவற்றை அவள் சொல்லி, “வந்த விருந்தினர்களை அவமதித்த குற்றத்தை நீங்கள் பொறுத்தருள வேண்டும்” என்றாள்.

கவிராயருக்கு உள்ளத்துக்குள்ளே மகிழ்ச்சி. புன்முறுவலோடு திண்ணைக்கு வந்து, “உங்களுடைய மன்னிப்பைத்தான் அவள் வேண்டுகிறாள்” என்று சொல்லி அமர்ந்தார்.

“நாங்கள் மன்னிப்பதா? இதோ இந்தப் பாட்டுச் சொல்லுமே. அந்தப் பெருமாட்டியின் பேரறிவை. நாங்கள் இனி எந்த இடத்திலும் இந்தப் பிழையைச் செய்யமாட்டோம்.”

புலவர் பாட்டை வாங்கிப் பார்த்தார்.

“அறிவில் இளைஞரே ஆண்மக்கள் மாதர் அறிவில் முதியவரே ஆவர் – அறிகரியோ தாம்கொண்ட சூலறிவர் தத்தையர் ஆண்மக்கள் தாம்கொண்ட சூலறியார் தாம்”

என்று இருந்தது.

“பார்த்தீர்களா? இது தான் எங்களுக்கு அறிவூட்டியது. ஒரு சந்தேகம்: இந்தப் பாடல் எந்த நூலில் இருக்கிறது? அதைத் தெரிவித்தருள வேண்டும்.”

புலவர் சிறிதும் யோசியாமலே, “இதை அவளே தான் பாடி உங்களிடம் அனுப்பினாள்” என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார்.

அவர்கள் இதைச் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. “ஹா!” என்று அவர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *