புழுதிகள் போர்த்திய புனிதங்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 3, 2023
பார்வையிட்டோர்: 1,475 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாட்டின் பல பகுதிகளிலும் பிறை காணப்பட்டுள்ளதால் நாளை நோன்பு ஆரம்பமாகுமென்று, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் எடுக்கப் பட்ட முடிவு வானொலி மூலம் அறிவிக்கப் பட்டாயிற்று.எப்படியும் நாளை நோன்பு தான் என்ற நம்பிக்கையோடு பள்ளிவாசலில் குழுமி நின்ற சனத்திடையே ஒருவித கலகலப்பு.

உதுமான் லெப்பைக்கும் வயதுக்கு மீறிய சுறுசுறுப்பு ஏற்பட்டு விட்டது. அவர்தானே கடந்த பதினைந்து வருடங்களுக்கும்மேலாக தராவீஹ் விஷே’ தொழுகை நிகழ்த்தி வருகிறார். இகாமத் சொல்ல வேண்டிய மோதினார். அவரது கண்வலைக்குள் சிக்கிக் கொள்ளாமல் எங்கெங்கே நழுவிய நுழைந்து கொண்டிருந்தார். இரண்டொரு பேராகக் கூடிக்கூடி ஏதேதோ குசுகுசுப்பதற்கும் குறைச்சலிருக்கவில்லை. ஐங்காலத் தொழுகைக்கும் பொறுப்பான பேஷ் இமாம் அவர்களைச் சற்றி இன்னொரு வட்டம். ஏதோ புதியதொரு சூழ்நிலை உருவாகி வருவது போல விளங்கியது உதுமான் லெப்பைக்கு

‘ஏனோ ஒன்பது மணியாகிது…. தொழுவிக்கியல்லியா?’

உதுமான் லெப்பையின் குரல் பலமாக ஒலித்தது என்ன இருந்தாலும் பள்ளிவாசலில் உரிமைக் குரல் எழுப்பும் தைரியம் அவருக்குத்தானே!

‘சரிசரி இகாமத் செல்லுங்கோ’ தமீம் மாஸ்டர் எங்கோ பார்த்தபடி சொன்னார்.

ஜன்னலுக்கூடாக செருமித் துப்பி விட்டு, தொண்டையைச் சரிப்படுத்திக் கொண்டு, உதுமான்லெப்பை வருவதற்கிடையில் இகாமத் சொல்லி….. வரிசை வரிசையாகி….. தொழுகை நடாத்தும் முஸல்லாவை நோக்கி பேஷ் இமாம் போய்க் கொண்டிருந்தார்.

உதுமான் லெப்பைக்கு சற்றுமே எதிர்பாராத அதிர்ச்சியாக இருந்தது. சற்று முன்னே நிகழ்ந்த அசாதாரண இயக்கமும் இதற்காகத்தான் என்பதும் சட்டென்று அவருக்குப் பட்டது. ‘என்னதயன்செய்?’ தன்னைச் சமாளித்துக் கொண்டார். தொழுகை நடாத்த இயலாமல் போனாலும் தொழுதாக வேண்டுமே! பின் வரிசையில் அவருக்கும் ஓரிடம் கிடைக்கத்தான் செய்தது.

அவரது மனதை ஏதோவொரு வேதனை சுண்டி வதைக்கத் தொடங்கியது. அது ஏதோ பெருநாள் தொழுகையோடு கைக்கெட்டும் சுமார் ஐநூறு ரூபாவை இழந்து விட்டதால் அல்ல.தன்னை மதிக்காத கால கட்டமும் வந்துவிட்டதே என்பதால் தான்.

பேஷ் இமாம் தொழுகை நடாத்திக் கொண்டிருந்தார். அவரது குரல் ஆணித்தரமாகவும் தெளிவாகவும் ஒலித்தது. வாட்ட சாட்டமாக மட்டுமல்ல வயதிலும் குறைந்தவர் தான். வெளியூர்க்காரரும் திறமைசாலியுமான அவருக்கு இடம் கொடுப்பதை உதுமாக் லெப்பை ஆட்சேபிக்கப் போவதில்லை. ஆனால் அதை முன்கூட்டியே மத்திச்சம்மார் அவரிடம் சொல்லிவிட்டு ஏற்பாடு செய்யாமல் மூடுமந்திரமாக்கி விட்டார்களே என்பதை நினைக்கும் போது தான் அவருக்கும் சற்றே வேதனை யாகவுமிருந்தது.

அரைமணி நேரத்துக்குப் பின்பு தொழுகை முற்றுப் பெற்றது. அமைதியாக வெளியிறங்கினார்.

‘பேஷ் இமாம் எப்பிடி தொழுவிச்சார். அந்தக் கிழவனென்டா ஒரே முணுமுணுப்பாத்தான் இருக்கும்.’

பள்ளிப் படிக்கட்டில் நின்று நாலைந்து பேர் கதைத்துக் கொண்டது உதுமான் லெப்பைக்கு தெளிவாகக் கேட்கவே செய்தது.

***

நோன்புச் சக்கரம் அரை வாசிக்குமேல் சுழன்றாகிவிட்டது. அன்றும் வழமைபோல் தராவீஹ் தொழுகைக்காக எல்லோரும் கூடி நின்றார்கள். ஒரு பக்கமாக ஒதுங்கி அமர்ந்து கொண்டிருந்தார்.

‘லெப்ப கொஞ்சம்…..’

தமீம் மாஸ்டரின் குரலைக் கேட்டு மெல்லப் பார்த்தார் அவர்.

‘இன்டக்கி நீங்கதான் தொழுவிக்கோணும்..’

மாஸ்டரின் குரலில் ஒருவித வெட்க உணர்ச்சி படர்ந்திருந்தது. இப்படி இடை நடுவில் மீண்டும் லெப்பையைத் தேவைப் படுமென்று யாருமே நினைத்திருக்க முடியாது தான்.

‘பேஷ் இமாமுக்கு காச்சல் புடிச்சி ஊருக்குப் பெய்த்தார். அதனால…… மாஸ்டர் தான் காரணத்தையும் முன் வைத்தார்.

‘வேறு தாராலுமில்லியா?’ உதுமான் லெப்பை மெல்ல இழுத்தார். நீங்கதான் நடத்தோணும்…’

‘ச….றுல்ஹம்துலில்லாஹ்’ தொழுகையை அன்று உதுமான் லெப்பைதான் நடத்தினார். குரலில் தளர்விருந்த போதிலும் நீண்ட கால அனுபவம் அவருக்கு என்றுமே கைகொடுக்கும்.

ஒரு நாளல்ல…இரண்டு நாளல்ல…ஆறு நாட்களாக அவர்தான் தராவீஹ் நடாத்தினார். எது எப்படிப் போனாலும் அல்லாஹ்வுடைய விஷயங்களில் முடிந்த போதெல்லாம் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள அவர் தயங்குவதில்லை.

***

தக்பீர் முழக்கம் வீடுகள் தோறும், வானொலிக் கூடாகவும், பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலமாகவும் எழுந்து எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. புத்தாடை சகிதம் பாதையெல்லாம் ஒரே சன நடமாட்டம்.

உதுமான் லெப்பையும் பள்ளிவாசலில் முன்வரிசையில் அமர்ந்து தக்பீர் சொல்லிக் கொண்டிருந்தார். பத்து மணிக்குத்தான் பெருநாள் தொழுகையென்ற போதும் எட்டரை முதலே எல்லோரும் பள்ளிவாசலை நாட முனைந்து விட்டார்கள்.

முன் விறாந்தையில் தமீர் மாஸ்டரும் இன்னும் இருவருமாகத் ‘தண்டக்காசு’ சேர்த்துக் கொண்டிருந்தார்கள். விரிப்பில் பணத் தாள்கள் குவிந்து கொண்டிருந்தன. வரவு வைத்துக் கொண்டிருந்தார் ஒருவர். திருமணம் செய்தவர்கள், தாம் விரும்பிய ஒரு தொகையைக் கட்ட வேண்டுமென்பது வழமை. எல்லைப் படுத்தப் படாத வருடாந்த வரி என்றாலும் பிழையில்லை.

பல வருடங்களாக இமாமாக நின்று தொழுகை நடாத்திய உதுமான் லெப்பையை ஏளனத் தோடும், அனுதாபத்தோடும் பார்த்தவர்கள் பலர்.

நோன்பு ஆரம்பிக்கும் முன்பே, தராவீஹ் தொழுகை நடாத்தி அதன் இறுதிக் கட்டமாக பெருநாள் தொழுகைக்குப் பின்பு கிடைக்கும் சுமார் ஐநூறு ரூபா போனஸால், ஏதாவது உடுப்புக்கள் வாங்கிக் கொள்ளும் செலவைச் சமாளிக்கலாமென்று உதுமான் லெப்பை கணக்குப் போடத் தவறவில்லைத்தான். ஆனால், மனிதர்கள் போடும் கணக்குகள் எப்போதுமே சரியாக இருக்குமா என்ன?

பெருநாள் தொழுகை ஆரம்பமாயிற்று. குத்பா பிரசங்கமும் முடிவுற்று அனைவரும் சென்ற பின்பும், சிற்சிலர் பள்ளி வாசலினுள் இதர காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

‘இந்தமுற ஆயிரத்து சொச்சம் கெடச்சீ…’

எப்போதுமில்லாதபடி இந்த முறை நல்ல பரக்கத்தாகர் சேர்ந்திருந்தது. உதுமான் லெப்பைக்கு கொஞ்சம் மனதுக்குள் உறுத்தத்தான் செய்தது.

‘லெப்ப கொஞ்சம் நில்லுங்க’ செருப்புக்களைக் காலில் மாட்டத் தயாரானவர், இந்தக் குரலைக் கேட்டு அப்படி நின்றொரு பார்வை பார்த்தார்.

உள்ளே பேஷ் இமாம் மலர்ந்த சிரிப்போடு கதைத்துக் கொண்டிருந்தார். கை நிறையக் கிடைத்திருக்குமோ! மோதியருக்கும் என்னவாம்? பெரும் மகிழ்ச்சி தான். அவருக்கும் நூறு இருநூறு கிடைக்காமல் போகாது.

‘இந்தாங்க ஒங்கட பங்கு…’

தமீம் மாஸ்டர் தான் உதுமான் லெப்பையிடம் நீட்டினார். ஆனால், அவர்…

‘எனக்கெனத்துக்கு. நான் தொழுவிக்கல்லயே’.

‘அதெனா அப்பிடி. ஆறுநாள் தொழுவிச்சதானே…’

‘அவரு இல்லாத்துக்காகத் தொழுவிச்சன். அந்த அஞ்சாறு நாளக்கும் நான் ஒண்டும் வழிபாக்கல்ல, இதேம் பேஷ் இமாமுக்கே குடுங்க’ உதுமான் லெப்பை தான் சொன்னார்.

தமீம் மாஸ்டர் மாத்திரமல்ல, அங்கு கூடி நின்ற இதர முக்கியஸ்தர்களும் வியப்போடு பார்த்தனர். எங்கே கிடைக்குமென்று எதிர்பார்த்து, கிடைத்ததும் நன்றியோடு சுருட்டிச் சேப்புக்குள் போட்டுக் கொள்வார்

கொள்வார் என்று நினைத்தவர்களெல்லாம், லெப்பையைப் புதுமாதிரியாகப் பார்த்தனர்.

‘நான் இப்ப கெழவன்…முந்தியே ஒதுங்கிக் கோணும்…ஆனா இந்த நபுஸு ஈக்கே இது தாரவிட்டுது? ம்…. எல்லாருக்கும் அல்லாதான் நல்ல ஈமானக் குடுக்கோணும்…..’

தமீம் மாஸ்டர், நீட்டிய கையை மடக்கவும் முடியாமல். பேசிய பேச்சுக்குப் பதிலும் சொல்லத் தெரியாமல் தத்தளிப்பதற்கிடையில், உதுமான் லெப்பை தன்பாட்டுக்கு நடக்கத் தொடங்கினார்.

தலை நோன்பில் நெஞ்சில் குத்தப் பட்ட முள், பெருநாளில் கிள்ளி எறியப் பட்ட சுகம் அவருக்கு!

– இதழ் 154 – 1981, மல்லிகைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2002, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *