புலிவேட்டை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 23, 2024
பார்வையிட்டோர்: 1,061 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவ்வப்போது உண்டாகும் உணர்ச்சிகளைப் பற்றி அந்த மூவரும் உற்சாகமாகப் பேசினார்கள். தமக்கு ஏற்பட்ட காதலுணர்ச்சி பற்றியும், அது கைகூடாமற் போனதால் அனுபவித்து கரை கடந்த துக்க உணர்ச்சி பற்றியும் பாக்யநாதன் ஆழ்ந்த பெருமூச்சுடன் கூறி முடித்தார். அடுத்துப் பேசிய சிதம்பரம் வீர உணர்ச்சி வசப்பட்டுத் தம் எதிரியைப் புற முதுகு காட்டியதையும், பிறகு தேச பக்தி உணர்ச்சியால் எல்லாவற்றையும் துறந்து சிறைவாசம் அனுபவித்ததையும், கதையாகக் கூறினார். அதன் பிறகு பாக்யநாதனும் சிதம்பரமுமே அவ்வப்போது தங்களுக்கு ஏற்பட்ட பலவகை உணர்ச்சிகளை – அதாவது கோபம், தாபம், இரக்கம், அன்பு முதலியவைகளைப் பேசித் தீர்த்தார்கள். பேச்சு சிதம்பரம் இல்லத்தில் நடந்து கொண்டிருந்தது. ஆனால் அருணாசலம் மட்டும் அவர்கள் கூறுவதைக் கேட்டுக் கொண்டு பேசாமல் உட்கார்ந்திருந்தார். இருவரும் பேசித் தீர்த்தவுடன் சிதம்பரம் அவரை நோக்கி, “என்ன அருணாசலம், உங்கள் அனுபவத்தைச் சொல்லவில்லையே?” என்று கேட்டார்.

“நண்பர்களே, நீங்கள் இருவரும் வெவ்வேறு உணர்ச்சிவசப் பட்டதைச் சொன்னீர்கள். கோப உணர்ச்சியுடன் வீர உணர்ச்சி வருவது இயல்பு. அதே போல் ஏமாற்ற உணர்ச்சியுடன் துக்க உணர்ச்சி சேருவது சகஜம். ஆனால் எதிரும் புதிருமான துக்கமும் சந்தோஷமும் ஒரே சமயத்தில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா?” – இது அருணாசலத்தின் கேள்வி.

அத்தகைய துர்ப்பாக்ய சம்பவம் தங்களுக்கு நேரவில்லையென்பதை சிதம்பரமும் பாக்யநாதனும் ஒத்துக் கொண்டார்கள். “சரி. அப்படி யானால் எனக்கு நேர்ந்த சம்பவத்தைச் சொல்கிறேன், கேளுங்கள். மிகவும் சுவையான சம்பவம்” என்று பீடிகையுடன் ஆரம்பித்தார் அருணாசலம்.

“விருத்தாசலம், அருணாசலம் என்றால் அந்தப் பக்கத்தில் அறியாதவர்கள் இல்லை. விருத்தாசலம் என் அண்ணன். அவருக்கு நேர் இளையவன்தான் நான். நாங்களிருவரும் காட்டில் வேட்டையாடு வதையே தொழிலாகக் கொண்டிருந்தோம். ஜப்பானியர் நமது மலாயா நாட்டை ஆதிக்கம் கொண்ட காலத்தில்தான் அந்தச் சம்பவம் நடந்து, என் அண்ணன் விருத்தாசலம் மாண்டார்…”

“எந்தச் சம்பவம்? எப்படி மாண்டார்?” என்று அருணாசலத்தின் இரு நண்பர்களும் ஆவலுடன் கேட்டனர்.

“அந்தச் சம்பவத்தை நினைக்கும்போது இப்போதுகூட எனக்கு துக்கமும் சந்தோஷமும் ஏற்படுகிறது, கேளுங்கள்.

“நாங்கள் இருவரும் வேட்டையாடுவதையே தொழிலாகக் கொண்டிருந்தோமென்று சொன்னேனல்லவா? வேட்டையில் கிடைக்கும் மிருகங்களும் பட்சிகளும் எங்கள் ஜீவனத்திற்குப் போது மானதாக இருந்தது. வேட்டைத் துப்பாக்கிகளும் வேட்டை நாய்களும் எங்களிடமிருந்தன. அவசியம் ஏற்பட்டால் துணைக்கு யாரையாவது அழைத்துக் கொள்ளுவோம். மற்றச் சமயங்களிலெல்லாம் நாங்களிரு வரும்தான் தனியாக வேட்டைக்குச் செல்வோம்.

“திடீரென்று ஒரு நாள் அந்தப் பிரதேசத்தில் பீதி ஒன்று தோன்றியது. புலி ஒன்றைப் பற்றிய கிலிதான் அது. ‘எங்கள் வீட்டு ஆட்டைத் தூக்கிக் கொண்டு போய் விட்டது’ என்றும், ‘எங்களிடமிருந்த பன்றிக் குட்டிகளைக் காணோ’மென்றும், அங்கே பார்த்ததாகவும், இங்கே பார்த்ததாகவும் இரவில் அதன் பயங்கர உறுமலைக் கேட்டதாகவும் ஜனங்கள் அப்புலியைப் பற்றிக் கதை கதையாகச் சொன்னார்கள். நாளாக ஆக இந்த முறையீடு அதிகரித்தது. கிராம அதிகாரி ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்தக்கொடிய புலியைச் சுட்டுக் கொல்லுகிறவர்களுக்கு ஐநூறு வெள்ளி சன்மானமளிப்பதாக அதில் அவர் தெரிவித்தார். இதை விட வேறு நல்ல வாய்ப்பு எங்களுக்கு எங்கே கிடைக்கப் போகிறது!

‘அப்புலியை வேட்டையாடியே தீர்ப்பதென்று நானும் என் அண்ணனாரும் குதூகலத்துடன் புறப்பட்டோம். நன்கு மோப்பம் பிடிக்கும் வேட்டை நாய்களை அழைத்துக்கொண்டு காட்டில் பிரவேசித்தோம். ஊதுகுழலை ஊதியும், புதர்களைக் கழிகளால் தட்டிக் கலைத்தும், நாய்களை ஏவியும் அந்தப் புலியைத் தேடினோம். இந்த வேட்டையில் பல காட்டுப் பன்றிகள், நரிகள், மர நாய்கள், சிறுத்தைகள் முதலியவை பலியாயினவே தவிர, நாங்கள் தேடிய புலியின் அடிச்சுவட்டைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

‘தம்பி, ஒரு வேளை இது கட்டி விட்ட கதையாக இருக்குமோ?’ என்று என் அண்ணனார் அலுத்துப் போய்க் கேட்டார்.

‘அது எப்படி? ஒருவரா, இருவரா, கிராமம் முழுவதுமே அந்தக் கொடிய புலியைப் பற்றிச் சொல்கிறதே! அது பொய்யாக இருந்தால் கிராம அதிகாரி ஐநூறு வெள்ளி சன்மானம் அளிப்பதாகச் சொல்வாரா?’ என்றேன் நான்.

“இந்த வார்த்தைகளே அடங்கிய அவர் வீர உணர்ச்சியை எழுப்புவதற்குப் போதுமானதாக இருந்தன. ‘சரி, சரி. அதையுந்தான் பார்த்து விடுவோமே. நான் அந்தப் புலியைக் கொல்லாமல் வீடு திரும்பப் போவதில்லை’ என்று உறுதியுடன் கூறினார் என் அண்ணன் விருத்தாசலம். அவர் கண்களில் வீர உணர்ச்சி பிரகாசித்தது,

“மாலை மயங்கி இரவு வந்தது. ஆனால் இரவு எங்களுக்கு ஒரு தடை அல்ல. பகலை விட இரவில்தான் பூனையைப் போல் எங்கள் இருவருக்கும் கண் நன்றாகத் தெரியும். காரிருளில் புதரில் பதுங்கியிருக்கும் காட்டு முயல்களைக் கூட எங்கள் கூர்மையான கண்கள் கண்டுபிடித்துவிடும்.

இருந்தாலும் மிருகங்களைக் கலைப்பதற்காக தீவர்த்திகளைக் கொளுத்திக் கொண்டு தேடலானோம்.

“இப்படி இரண்டு மணி நேரம் கழிந்திருக்கும். திடீரென்று ஒரு புதரிலிருந்து சரேலென்று ஒரு சப்தம். மறுவிநாடி என் தமையன் விருத்தாசலம்‘ஆ’வென்று அலறிக்கொண்டு கீழே விழுந்தார்! ஆம். அந்தப் புலிதான் அவர்மீது பாய்ந்து அவர் குரல் வளையைக் கடித்துக் குதறிக் கொண்டிருந்தது! சற்றும் எதிர்பாராத சம்பவம். சிந்திக்க நேரமில்லை. நிதானம் தவறித் தாறுமாறாக பலமுறை துப்பாக்கியால் சுட்டேன். பயனில்லை. ஒன்றிரண்டு சூடுதான் அதன்மீது பட்டிருக்க வேண்டும். ஏனெனில் புலி தப்பிவிட்டது. அதைத் துரத்திச் சென்ற நாய்களையும் காணவில்லை. இவ்வளவும் கண்மூடிக் கண் திறப்பதற்குள் நிகழ்ந்து விட்டது.

“சொல்லி வைத்தது போல் தீப்பந்தங்களும் எண்ணெய் இல்லாமல் அணைந்து போயின. இப்போது கிள்ளி விட்டுக்கிட்டே நின்றால் கூடத் தெரியாத கும்மிருட்டு.

இரத்தப் பிரவாகத்தில் கிடந்த என் அண்ணனை அசைத்துப் பார்த்தேன். அவர் உயிர் போய்விட்டது. எதற்கும் அஞ்சாத என் இரும்பு மனம் இப்போது முதன் முறையாக நடுங்கத் தொடங்கியது. பனிக்கட்டி போன்று ஜில்லென்று ஒரு உணர்ச்சி உள்ளத் தண்டினூடே ஓடியது.

“மீண்டும் என் அண்ணனின் சவத்தைப் பார்த்தேன். விலங்குகளுக்கு எமனாக விளங்கிய அவரா ஒரு விலங்கால் கொல்லப்பட வேண்டும்? என் அச்சம் கடுங் கோபமாக மாறியது. என் தமையனை மறைந்திருந்து தாக்கிக் கொன்ற அந்தப் பேடிப் புலியைக் கொன்று பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்று ஆவேசத்துடன் துடித்தேன். அப்புலியின் உயிரே என் வீரத்தின் பரிசு என்று துணிந்தேன்.

“இந்தச் சமயத்தில் வானத்தில் சந்திரன் தோன்றியது. சிறிதே மூளியான அந்த வான்மதியின் ஒளியில் அந்தக் காடு மூழ்கிக் குளித்தது. புதுமணப் பெண் போல் பெருமிதத்துடன் தோற்றமளித்தது.

“நான் என் தமையனின் உடலைத் தூக்கிக்கொண்டு, துப்பாக்கியை முன்னெச்சரிக்கையாகக் கையில் பிடித்தபடி, அந்தப் புலியைத் தேடி முன்னேறினேன்.

“அரை மைல் தூரத்தில் சென்றிருப்பேன். எனது வேட்டை நாய்கள் குரைக்கும் சப்தம் கேட்டது. வெற்றி சமீபித்து விட்டது! நடையைத் துரிதப்படுத்தினேன்.”

‘ஆகா! என் முயற்சி வீண் போகவில்லை. எனது எதிரியைச் சுற்றி வளைத்துக் கொண்டுதான் என் நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தன. என்னுடைய துப்பாக்கி சூடுபட்டு காயம் பட்டதால் அந்தப் புலிக்கு வேகமாக ஓட முடியவில்லை போலும். இருந்தாலும் நாய்களை நெருங்க விடாமல் தனியாகவே நின்று சமாளித்துக் கொண்டிருந்தது.

“சவத்தைக் கீழே கிடத்திவிட்டு முன்னேறினேன். திடவுறுதியுடனும் சினத்துடனும் துணிந்து நெருங்கி சரியாகக் குறி வைத்துச் சுட்டேன். புலி சுருண்டு விழுந்தது. வெற்றிப் பெருமிதத்தில் ‘வெற்றி, வெற்றி’ என்று கூவினேன். தாங்க முடியாத களிப்பில் துள்ளிக் குதித்தேன். ஆனால் அதே சமயத்தில் ‘ஐயோ அண்ணா! நீ இந்த வெற்றியைக் காணாமல் இறந்து போய் விட்டாயே!’ என்று குமுறிக் குமுறி அழுதேன்” என்று கூறி முடித்தார் அருணாசலம்.

“இது கதைதானே?” என்று பாக்யநாதன் கேட்டார்.

“கதையா? நன்றாகக் கேட்டீர்கள்! என்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவமய்யா” என்றார் அருணாசலம்.

பிறகு அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு சிதம்பரத்தின் பங்களாவை விட்டு வெளியே வந்தார் அவர். அவ்வளவுதான். அன்று தான் புதிதாக வாங்கிய சிதம்பரத்தின் நாய் குபீரென்று அருணாசலத்தின் மீது பாய்ந்தது. ‘ஐயோ, அம்மாடி செத்தேன்’ என்று அலறிப் புடைத்துக் கொண்டு ஓடினார் அருணாசலம். “டைகர், டைகர், இங்கே வா” என்று சிதம்பரம் அழைத்ததும், நாய் வாலைக் குழைத்துக்கொண்டு அருணாசலத்தை விட்டு விட்டு ஓடி வந்தது.

“புலியைச் சுட்ட வீரரா ஓடுகிறார்?” என்று நகைத்தார் பாக்யநாதன்.

“இருந்தாலும் கதை சொல்வதில் அவர் வல்லவர்” என்றார் சிதம்பரம்.

– கவிஞர் ந.பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (தொகுதி 2), முதற் பதிப்பு: பெப்ரவரி 1999, ப.பாலகிருட்டிணன், சிங்கப்பூர்.

ந.பழநிவேலு (பிறப்பு: 20-6-1908) இந்தியாவில் தஞ்சை மாவட்டத்தில் சிக்கல் எனும் ஊரினைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1930ம் ஆண்டில் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து சிங்கப்பூரிலே வசித்துவந்தார். இவரொரு வானொலி ஒலிபரப்பாளரும், நிகழ்ச்சித் தயாரிப்பாளரும், மொழிபெயர்ப்பாளரும், சிறுகதை, நாடக, புதின எழுத்தாளரும், கவிஞருமாவார். 1930களில் சிங்கப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராகப் பணியினைத் தொடங்கிய இவர் 1949ம் ஆண்டில் அப்போதைய 'ரேடியோ மலாயா' எனும் மலாயா வானொலி சேவையில் இணைந்தார். அங்கு ஒலிபரப்பாளராகவும்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *