புதிய வெளிச்சம் தெரிகிறது

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 9, 2019
பார்வையிட்டோர்: 11,417 
 

தூக்கம் இல்லாமல் போன இரவுகளில் இதுவும் ஒன்றாக இருந்தது.

திடுக்கிட்டு எழுந்த போதுதான் அதிகாலையில் சற்று நேரம் அயர்ந்து தூங்கியிருந்தது தெரிந்தது. என்றுமில்லாதவாறு அதிகாலையில் காதுக்குள் கேட்ட அந்தக் குயிலின் ‘கூக்கூ’ குரல்தான் எனது தூக்கம் கலைந்ததற்குக் காரணமாய் இருந்திருக்க வேண்டும்.

அந்தக் குயிலின் குரல் எனக்குள் ஒருவித புத்துணர்வை மீட்டுக் கொண்டு வந்தது போல என்னால் உணர முடிந்தது. யுத்தம் ஓய்ந்துவிட்டாக அறிவித்திருந்தார்கள். யுத்த சூழ்நிலையால் இயற்கை அழிக்கப்பட்டபோது மரங்கள் செடிகள் மட்டுமல்ல விலங்குகள் பறவைகள் என்று அனேகமாக எல்லாமே வன்னிப் பகுதியில் இருந்த எங்கள் கிராமத்தில் அழிந்து போயின. குண்டடிபட்டு அழிந்து போன மனித உடல்களையே கணக்கெடுக்க முடியாத போது இந்தப் பறவை இனங்களை யார் கணக்கில் வைத்திருக்கப் போகிறார்கள். ஆனாலும் எங்கிருந்தோ வந்த குயில் ஒன்று அதிகலையில் இணையைத் தேடி எழுப்பிய அந்தச் சத்தம் இயற்கை மீண்டும் எழுந்து நிற்கத் தொடங்கி விட்டதை நினைவூட்டினாலும், அந்தக் குரலில் ஒருவித சோகம் கலந்திருப்பது தெரிந்தது. ஒருவேளை அதன் இணையும் இறந்திருக்கலாம்.

பல வருடங்களின் பின் அதிகாலைப் பட்சிகளின் குரல் காதில் தேனாய்ப் பாய்ந்ததில் ஒருவித மன எழுச்சியில் புத்துணர்வு கிடைத்தது. ‘என்னதான் அடித்துடைத்தாலும் மீண்டும், மீண்டும் எழுந்து நிற்பேன்’ என்ற பாடத்தைக் காலாகாலமாய் எமக்குச் சொல்லித் தந்ததே இந்த இயற்கைதானே! ‘விழுந்தாலும் நாங்களும் எழுந்து நிற்போம்’ என்பதை அடுத்த தலைமுறைக்குச் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற மனவைராக்கியம் எனக்குள் இருந்தது.

நான் ஒன்றும் அதிகமாகப் படித்துவிடவில்லை. க.பொ.த உயர்தர வகுப்பில் சித்தி அடைந்ததும் பல்கலைக் கழகம் செல்ல நினைத்தேன். அதற்கான ஆயத்தங்கள் எல்லாமே நல்ல படியாக நடந்தன. கல்விச் செல்வம் ஒன்றுதான் தமிழனுக்கு நிலையில்லாத சொத்து என்பதை நானறிவேன், அதுமட்டுமல்ல அந்தக் கல்விச் செல்வம் பெண்களுக்கும் கட்டாயம் தேவை என்பதையும் உணர்ந்து கொண்டேன். எனவேதான் மேற்படிப்பிற்கு ஆசைப்பட்டேன்.

ஆசைப்பட்டேனே தவிர அது நிறைவேறவில்லை. யுத்தம் என்ற போர்வைக்குள் விதி என் எதிர்காலத்தோடு விளையாடி விட்டிருந்தது. எங்கிருந்தோ ஏவப்பட்ட செல் ஒன்று தோட்டத்தில் வந்து விழுந்து வெடித்த போது தோட்டத்தில் களை பிடுங்கிக் கொண்டிருந்த அப்பா எலும்பும் தோலுமாய்ச் சிதறிப் போனார்.

ஊரே திரண்டு சோகத்தில் மூழ்கிக் கிடந்தபோது நான் மட்டும் மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தேன். காரணம் புரியாத கோபம், ஆத்திரம், வெறி என்று ஒவ்வொரு உணர்வுகளும் எனக்குள் எழுந்து அர்த்தமில்லாத இந்த யுத்தத்தைத் திட்டித் தீர்த்ததில் ஓரளவு தணிந்து போனது. என் படிப்பிற்கு அப்பாதான் இதுவரை முழுமையாக ஒத்துழைப்புத் தந்தார்.

இன்று என் கனவுகள் எல்லாமே அவருடன் சிதைந்து போய்விட்டன. என்ன செய்வது என்று அறியாமல், தந்தையின் பிரிவைத் தாங்க முடியாமல் நான் உடைந்து போயிருந்தேன். காலம் ஓடிக் கொண்டிருந்ததே தவிர எங்கள் வாழ்வில் இதுவரை விடியலைக் காணமுடியவில்லை.

வீடு வாசலை இழந்திருந்த எங்களுக்கு உதவி செய்வதற்கு நல்ல மனசு படைத்த சிலர் வெளிநாடுகளில் இருந்து முன்வந்தார்கள். ஆரம்பத்தில் அவர்களின் உதவி எங்களுக்குத் தேவையானதாக இருந்தது, ஆனால் எவ்வளவு காலத்திற்கு அவர்களால் எங்களுக்கு உதவ முடியும்? நாங்களும் எவ்வளவு காலத்திற்கு அவர்களிடம் இப்படிக் கையேந்தியபடி நிற்பது?

‘எங்களுக்கு உதவி வேண்டாம், நாங்களாகவே உழைத்து முன்னேற ஏதாவது வழிகாட்டி விடுங்கள்’ நான் இதைச் சொன்ன போது என்லோரும் என்னை வினோதமாகப் பார்த்தார்கள்.

‘வலிய வந்து யாராவது உதவி செய்ய நினைத்தால் இவள் ஏன் மறுக்கிறாள்’ என்று முணுமுணப்பது என் காதில் விழுந்தது.

எவ்வளவு காலத்திற்குத்தான் சோம்பேறிகளாய் இவர்களிடம் கையேந்தி நிற்பது? எனக்குள் சுயமாக எழுந்த மானப் பிரச்சினை என்னைத் தயங்க வைத்தது. எனக்கு மட்டுமல்ல இங்கே உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த மானப் பிரச்சினை இருக்கத்தானே செய்யும். நீண்ட காலத்திட்டத்தின் அடிப்படையில் நாங்கள் இயங்கினால் என்ன என்று நினைக்கத் தோன்றியது. கனடாவில் இருந்து நல்ல நோக்கத்தோடு தொண்டர்கள் வந்திருந்த போது என் மனதில் பட்டதை அவர்களிடம் சொன்னேன்.

‘அண்ணா நீங்கள் இதுவரை செய்த உதவியை நாங்கள் மறக்க மாட்டோம், ஆனால் இப்போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு ஏற்றமாதிரி ஏதாவது வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதுதான் நல்லது என்று நினைக்கிறேன்.’ என்றேன்.

அவர்களும் அதைப் பற்றிச் சிந்தித்துப் பதில் சொல்தாகச் சொன்னார்கள். இரண்டு மாதங்களின் பின் அவர்கள் அதை ஏற்றுக் கொண்டு செயற்பட்டார்கள். அவர்களின் உதவியுடன் தான் இப்பொழுது ஆடை தைக்கும் நிறுவனம் ஒன்று இங்கே ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது. இதன் மூலம் இப்பகுதியில் உள்ள பல பெண்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. இதைவிட இன்னும் ஒரு தொண்டர் நிறுவனம் தந்த தையல் மெசின்களும் எங்களுக்குப் பெரும் உதவியாக இருந்தன. பெரிதாக இல்லாவிட்டாலும் தன்மானத்தோடு சம்பாதிக்க முடிந்தது.
இந்தக் கிராமம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி விட்டது போல இருந்தாலும் இழப்புக்களை மீட்டெடுக்க முடியவில்லை. ஆனால் இப்போது உழைக்கிறோம், சாப்பிடுகிறோம், யாருக்கும் கையேந்தவில்லை என்ற வகையில் எல்லோருக்கும் நிம்மதியாக இருக்கின்றது.

ஊர் ஒன்றியத்தின் முயற்சியால் இங்கே இருந்த பாடசாலையும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. பழைய மாணவர்களின் நிதி உதவி இதற்குப் பெரும் பலமாக இருந்தது. கல்விச் செல்வம் ஒன்றுதானே எங்களிடம் உள்ள அசையாத சொத்து என்பதால் அதை அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க வேண்டிய பொறுப்பு எங்களிடம் இருந்தது. எதையும் இழந்துவிடலாம், ஆனால் கல்விச் செல்வம் ஒன்றுதானே கடைசிக்காலம்வரை எங்களுடன் துணையிருக்கும் என்பதால் பாடசாலை ஒன்று இந்தக் கிராமத்திற்குத் தேவை என்பதன் அவசியம் புரிந்ததால் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம் பாடசாலையை மீண்டும் ஆரம்பித்தோம்.

பக்கத்து வீட்டு நிசா ஓடிவந்தாள். பள்ளியில் கொடுத்து விட்ட வீட்டு வேலைகளில் சந்தேகம் இருந்தால் என்னிடம் வந்து உதவி கேட்பாள்.

‘என்னம்மா நிசா, ஏன் சோகமாய் இருக்கிறாய்?’

‘இல்லை அக்கா, இப்ப எங்க ரீச்சர் எடுத்ததற்கெல்லாம் எங்களைத் திட்டிறா, எரிஞ்சு விழுகிறா அதனாலே பள்ளிக்கூடம் போவதற்கே வெறுப்பாக இருக்கிறதக்கா’ என்றாள்.

‘அதற்காகப் படிப்பை விட்டுவிடுவியா?’

‘எவ்வளவோ கஷ்டத்திற்கு மத்தியில்தானே நாங்களும் பள்ளிக்குப் படிக்கப் போகின்றோம், ஏன் டீச்சர் மட்டும் எங்களைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறா?’

‘இல்லை நிசா, அப்படி எல்லாம் செல்லக்கூடாது. எங்களைப் போலத்தான் உங்க டீச்சரும் அத்தனை மன உளைச்சலுக்கும் ஆளாகி இருப்பா, உன்னுடைய குறையை என்கிட்ட சொல்வது போல, உங்க டீச்சர் யாரிட்ட போய்ச் சொல்லுவா?’

நிசா ஒரு நிமிடம் மௌனமாய் இருந்தாள்.

‘என்னக்கா, எங்களைப் போலவே எங்க ரீச்சருக்கும் மன உளைச்சல் இருக்குமா?’

‘ஏன் இல்லை, உங்க ரீச்சர் என்ன வானத்தில இருந்து குதி;த்தாவா? எங்களைப் போல ஒரு பெண்ணாய் அவாவும் யுத்தகாலத்தில் ஓடியோடி இடம் பெயர்ந்தவர்தானே?

‘அப்போ, எங்க ரீச்சருக்கும் யாராவது ஆறுதல் சொல்லுவாங்களா?’

‘ஆமா, எத்தனை இழப்புக்களை அவாவும் சந்தித்திருப்பா? நடந்தது என்லாவற்றையும் அவாவால் வெளியே சொல்ல முடியமா? நம்பிக்கையான யாரிடமாவது மனம் திறந்து சொன்னால் அவாவுக்கும் மனவாறுதலாக இருக்கும்தானே!’

‘ஆமாக்கா, நீங்க சொல்வதும் சரிதான், எங்களைப் போலத்தானே டீச்சரும், யுத்த காலத்தில் பல இன்னல்களைச் சந்தித்திருப்பாதானே, அவாவும் ஒரு பெண்தானே? நான் ஏன் அதை யோசிக்கவில்லை?’

‘இப்போதாவது புரிந்து கொண்டிருக்கிறாயே நிசா, அதுவே போதும்! ஒரு மாணவியாய் உங்க ரீச்சரையும் புரிந்துணர்வோடு இனிமேல் அணுக வேண்டும், புரியுதா?’

‘ஆமா’ என்பது போல அவள் தலையசைத்தாள்.

நிசாவின் புரிந்துணர்வு எனக்குள் மகிழ்வைத் தந்தது. பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, முதலில் கல்விகற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் அவர்களின் மன அழுத்தத்தில் இருந்து விடுதலை வேண்டும். மனிதாபிமானத்தோடு அவர்களை நோக்க வேண்டும்.

யுத்தகாலத்தில் இதுபோன்ற கிராமங்களில் இன்னல்களைச் சந்தித்தவர்களில் பெண்கள்தான் அதிகம். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. எதையோ பறிகொடுத்த சோகம் அவர்களின் கண்களில் தெரிந்தது.

போராளிகளைப் பிடிப்பதற்காக இராணுவம் பெண்களைத்தான் பணயம் வைத்தது. அவர்கள் தாயாய், மனைவியாய், சகோதரியாய், மகளாய் எல்லா உருவத்திலும் பெண்களே இருந்தார்கள். யுத்தகாலத்தில் இழப்புக்களைச் சந்தித்து மனரீதியாக அதிகம் பாதிக்கப் பட்டவர்களும் அவர்கள்தான்!

யாரோ செய்த தவறுக்காக இவர்கள் தண்டனை அனுபவிப்பதா? யுத்தகால மன உளைச்சலில் இருந்து வெளியே வருவதற்கான உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் எனக்குள் உதித்தது. யுத்தம் முடிந்து விட்டது என்று அறிவித்தாலும் அதன் பாதிப்பில் இருந்து இன்னும் பலர் மீளவே இல்லை என்பதைத் தினம் தினம் இங்கு நடக்கும் சம்பவங்களே சாட்சியாக நிற்கின்றன.

முதலில் ஆசிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும், அவர்களின் நிதிக்குறை மட்டுமல்ல மனக்குறையையும் தீர்ப்பதற்கான வழி கண்டுபிடிக்க வேண்டும். ஆசிரியர்கள் சிறப்பாக இருந்தால்தான் மாணவர்கள் அவர்களிடம் முறையாகக் கல்வி கற்க முடியும். இதை எல்லாம் யாரிடமாவது சொல்லி உதவி கேட்க வேண்டும் என்ற நினைப்போடு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்திருந்தேன்.

அப்பொழுதுதான் அவர்கள் எங்கள் கிராமத்திற்கு வந்தார்கள், ‘புதியவெளிச்சம்’ என்றார்கள். வெளிச்சத்தில் புதியது, பழையது என்று இருக்கா என்று நினைத்தேன், ஆனாலும் அவர்களை வரவேற்றேன்.

நிசாவின் பாடசாலையில் மறுநாள் நடந்த புதிய வெளிச்சம் நிகழ்வைப் பற்றிச் சொன்ன போது நான் எதை நினைத்தேனோ அதை அவர்கள் செயலில் காட்டிவிட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.

யுத்த சூழலில் அகப்பட்டு அல்லற்பட்ட பிள்ளைகளின் ஆழ்மனதில் அடைந்து கிடக்கும், வெளியே சொல்லமுடியாத துயரங்களை எப்படியும் வெளியே கொண்டு வரவேண்டும் என்பதுதான் அப்போதைய முக்கிய தேவையாக இருந்தது. அதையே அவர்கள் செய்தார்கள். தாங்கள் தவறு வெய்து விட்டோமோ என்ற குற்ற உணர்வோடு இருந்த பெண்களோடு அன்பாய்ப் பழகி ஊக்கமும் ஆக்கமும் தந்து மனவாறுதல் கொடுத்தார்கள்.

‘நாங்கள் தமிழர்கள், பல்லாயிரக் கணக்கான வருட பாரம்பரியத்தையும், மொழியையும் கொண்டவர்கள். நட்சத்திரமாய் வானத்தில் ஒளிவீசி அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டியவர்கள். விழுவது ஒன்றும் அவமானமல்ல, விழுந்தவன் எழும்ப முயற்சி செய்யாவிட்டால் தான் அது அவமானம்.’ என்று திரும்பத் திரும்ப நிசா சொல்லிக் கொண்டிருந்தாள்.

‘இதைத்தான் திரும்பவும் சொல்கிறாய், வேறு என்ன சொன்னாங்க நிசா’ என்றேன்.

‘நிறையவே சொன்னாங்க அக்கா, மனதிற்கு ரொம்ப நிம்மதியாக இருந்தது. அந்த அம்மா சொன்னதில் இன்னுமொன்று என் மனதைத் தொட்டதக்கா’ என்றாள்

‘அப்படி என்ன சொன்னார்?’ என்றேன் ஆர்வமாக.

‘பெரும் சமுத்திரத்தில் திமிங்கிலங்களாய் துள்ளிக் குதித்து சுதந்திரமாய் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டிய எங்கள் இனம் இன்று சிறியதொரு மீன்தொட்டிக்குள் அடைபட்டு வெறும் காட்சிப் பொருளாய் இருப்பதை நினைத்து வேதனைப் படுவதாகவும்’ அந்த அம்மா குறிப்பிட்டார்.

இதைச் சொல்லும்போது நிசாவின் முகத்தில் ஒருவித ஒளி தெரிவதை அவதானித்தேன். அந்த வெளிச்சம்தான் இவர்களுக்குத் தேவை, அதுவும் புதிய தலைமுறைக்குத் தேவை என எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

சின்ன இதயங்களில் முதலில் ‘முடியும்’ என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டும். சரியான முறையில் விதைக்கப்பட்டால் எதிர்காலத்தில் நல்ல பலனை எதிர்பார்க்க முடியும். இந்த இனத்தின் எதிர் காலமும் இந்தப் புதிய வெளிச்சத்தில்தான் தங்கி இருக்கின்றது.

மூன்று தசாப்தங்களாக யுத்த சூழலில் வாழ்ந்து இருளில் மூழ்கிப்போன இந்தக் கிராமத்திற்கு விடிவு வேண்டும். சோகம், துன்பம், துயரம், பயம் போன்ற உணர்வுகளில் இருந்து இவர்களுக்கு விடுதலை வேண்டும். விடியலை நோக்கிய பயணத்தில் அதற்கான சில ஏற்பாடுகள் ஆரம்பித்துவிட்டதை உணர்த்தும் வகையில் ‘புதிய வெளிச்சம்’ ஒன்று கண்ணில் தெரிந்தது. அதுவே விடிவெள்ளியாய் வழிகாட்டியாய் இந்தக் கிராமத்தையே அமைதி கொள்ள வைக்கும் என்ற நம்பிக்கையை உணர்த்தி நின்றது. புதிய வெளிச்சம் எங்கள் கிராமத்தையும் கடந்து ஒவ்வொரு கிராமமாய் பரவி, அல்லற்பட்ட பெண்களின் துயர் துடைக்கும் என்ற நம்பிக்கை மனதில் துளிர்த்து நின்றது.

Print Friendly, PDF & Email

1 thought on “புதிய வெளிச்சம் தெரிகிறது

  1. . ‘என்னதான் அடித்துடைத்தாலும் மீண்டும், மீண்டும் எழுந்து நிற்பேன்’ என்ற பாடத்தைக் காலாகாலமாய் எமக்குச் சொல்லித் தந்ததே இந்த இயற்கைதானே! ‘விழுந்தாலும் நாங்களும் எழுந்து நிற்போம்’
    Ode to the West Wind என்ற கவிதையில் P.B.Shelley என்ற ஆங்கிலக் கவிஞர் If Winter comes, can Spring be far behind? என்ள கவிதையின் முடிவைப் போல நேர்மறையாக முடிந்த இந்தச் சிறுகதை மனதைத் தொட்டது.
    நல்லதொரு தன்னம்பிக்கைச் சிறுகதை.
    வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள்
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *