புதிய தேவதை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 8, 2023
பார்வையிட்டோர்: 1,919 
 
 

இனக் கவர்ச்சி மிகவும் வினோதமானது! காரண காரியங்கள் கிடையாது! முன் உதாரணங்கள் கிடையாது! பின்னால் உதாரணமாகவும் ஆக வாய்ப்பு கிடையாது!

நான் எதற்கு இத்தனை பில்ட் அப் கொடுக்கிறேன் என்று உங்கள் மனதில் எண்ணங்கள் புத்தா சர்க்யூட்டில் ரேஸ் ஒடும் கோணல் மாணலாக!

சரி! சஸ்பென்ஸ் ஏதுமில்லை! விஷயத்துக்கு வருவோம்.

சீராளனுக்கு ஒரு பொன் மாலையில், போன் வந்தது!

“ஸார்! எங்க ஹெட் ஆபீஸிலிருந்து உங்க நம்பரை ஷேர் பண்ணியிருக்காங்க! நான் உங்களை எப்ப மீட் பண்ணலாம்?”

“யாரு? என்ன விஷயம்?” தயங்கினாலும், சீராளனின் மனசில் ஒரு ஆர்வம் துளிர்த்தது.

“ஸார்! 28 நம்பரில் உங்களை மட்டும் நான் செலக்ட் பண்ணினேன்! எப்ப ஸார் அப்பாயின்ட்மென்ட்?” இதயத்தை நெருடும் குரல்! அத்தனை லாவண்யம். கொஞ்சல்.

“கண்ணா! உனக்கு எதற்கு அப்பாயின்ட்மென்ட் எல்லாம்? ஓடி வா உடனே!” என்று சொல்லத் தோன்றியது. ஒரு பலவீனமான ஆணின் மன ஓட்டம்தான்!

இவ்வளவு நெருக்கத்தில் ஒரு தேவதை காதில் கிசு கிசுத்ததை இதுவரை அவன் அநுபவத்தில் பார்த்ததில்லை.

சீராளன் சீர் கெட்ட மாதிரித் தோணிற்று!

“மேடம், விஷயம் என்ன என்று சொன்னால் தானே நான் எஸ் அல்லது நோ சொல்லலாம்?”

“ஸார்! எனக்கு எப்படியும் உங்களை நேரிடையாக மீட் பண்ணனும். உங்க ப்ரொபைல் அபாரம் ! இத்தனை அசீவ்மென்ட் உங்க வாழ்க்கையில சைலண்ட்டா பண்ணியிருக்கீங்க. ஐ லைக் யூ!” தேவதை பலவீன உணர்வை நெருடி, ஆர்வத்தைத் தூண்டினாள். ஐ லவ் யூ சொல்றாளா?

“ஹா! ஹா~! அதெல்லாம் கிடையாது! யாரோ தப்பா உங்ககிட்ட…”

“ஸார்! உரிமையா, உங்கிட்டன்னு சொன்னா எனக்கு சந்தோஷம்!…”

“நேரில கூட பார்க்காம எப்படி நான் உன்னை ஒருமையில் கூப்பிடுவது?…” என்றபடியே, ஒருமை அழுத்தமானது.

பார்க்காமலேயே, தேவதை அன்று முதல் கதா நாயகியானாள்.

வாட்ஸ் அப் சூடானது! வாய்ஸ் மெஸ்ஸேஜ் ஹாட் ஆனது! நேரம் கரைந்து கொண்டிருந்த வேளையில், சீராளன் மிகவும் மாறிப் போய் விட்டான். தேவதை அவன் முழு வாழ்க்கையையும் சில நாட்களிலேயே ஆக்கிரமித்திருந்தாள்!

தேவதையின் பெயர் நோரா!

“எனக்கு செல்பி படம் அனுப்பு நோரா! “

உடனே வந்தது படம்!

“ஸார்! உங்க படமும் எனக்கு பொக்கிஷம்!”

படங்கள், தனியாக, குடும்பத்தோடு படம், நண்பர்களோடு படம் எல்லாம், அப் லோடு ஆனது சீராளனுக்கே கணக்கிட முடியவில்லை.

சீராளன், நோரா ப்ராக்ரஸ் ரிபோர்ட் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், அவனது ஆபீஸில் அவனது ரிபோர்ட் திவாலாகிக் கொண்டிருந்ததுதான் உண்மை.

“என்னைப் பார்க்காமலே நீ எப்படி இத்தனை நெருக்கமானாய்?” சீராளனுக்கு ஒரு டவுட்டு தனபாலு!

“என்ன இப்படிக் கேட்கறீங்க! நான் மூட் அவுட் ஆயிடுவேன்!”

“என்னை நேரில் நீங்கள் பார்த்தால் எல்லாம் உடனே விளங்கும்!”

“ஹா! ஹா! ஹா!” நோராவின் சிரிப்பலையில் அலை பேசி பாசி பிடித்தது.

“சரி! எப்பத்தான் தரிசனம்?” சீராளனுக்கு இருப்புக் கொள்ளவில்லை!

“அதுக்கெல்லாம் ரொம்ப செலவாகும்!”

“ஏன் டியர்!”

“அதுக்கு என் மனசைத்தான் கேட்க வேண்டும்!”

சீராளன் நிலை குலைந்தான். என்ன மனசைக் கேட்க வேண்டுமா? அப்போ! அவள் என்னை லவ் பண்றாளா?

டேய்! என்னா அதிருஷ்டம்டா! அம்சமா ஒரு பொண்ணு வலிய வந்து லவ் பண்றாளா? சீராளனின் உள் மனசு கேட்டது.

“நோ சான்ஸ்! அவளுக்கு நன்றாகத் தெரியும் என் குடும்ப விவரங்கள் அனைத்தும். எனக்கு 50 வயதானதும், குடும்பம் நடத்தும் குழந்தைகள் இருப்பதும் தெரியும்தானே! அவளோ 35 வயதுப் பெண். திருமணமாகி ஒரு பெண் இருக்கிறாள்”

“அப்போ! பயில்வான் சொல்ற பாடி டிமாண்டா?” என்று உள் மனது மீட்டெடுத்தது.

‘ஏதோ ஒரு அட்ஜெஸ்ட்மென்ட்……….தான்…..” ஏதோ புரிந்தமாதிரித் தோன்றியது சீராளனுக்கு.

இரவின் மடியில், மீண்டும் சிந்தனைத் தொடர்………. இனிமேல் வேண்டாம்! சங்கரிக்குத் தெரிந்தால் என்ன ஆகும்? சங்கரி அவன் மனைவி!

“போதும்! விட்டுறலாம்” போனில் நோராவின் நம்பரை பிளாக் செய்தான்.

காலையில் மீண்டும், “சே! நான் என்ன முட்டாள்தனத்தில் நம்பரை பிளாக் செய்கிறேன். நோ! அன் பிளாக்!”

அதற்குள் நோராவின் போன்

“என்ன டியர்! நம்பரை பிளாக் பண்ணீட்டீங்களா?”

‘சுரீர் என்று உறைத்தது! சீராளனுக்கு.

“நோ நோ டியர்! நான் ஏன் இதெல்லாம் பண்ணனும்?”

“ஓ கே! லிஸன்! இன்னிக்கு நான் உங்களை நேரில் பார்க்கப் போகிறேன்!” ரொம்ப சந்தோஷமாக சொன்னாள் நோரா!

மனசெல்லாம் மத்தளம்! சீராளன் கற்பனைகளில் மிதந்த அதே நொடியில்….

அவன் வீட்டு கேட் திறக்கப் பட்டது. செக்யூரிட்டி யாருடனோ வாதாடிக் கொண்டிருந்தான்!

முதலில் ஒரு ஜீப் நுழைந்தது!

அதன் பின் வரிசையாக அரசாங்க வண்டிகள் பவனி வந்து கேட் முனை வரை நின்றன.

ஜீப் வண்டியின் பின்னால் நின்ற இன்னோவா க்ரிஸ்டா விலிருந்து சீருடையுடன் அழகாக இறங்கினாள் நோரா!.

“கம் ஆன் பாய்ஸ்! லெட்ஸ் மூவ் டு கேரி அவுட் த ஆபரேஷன் அண்ட் கலெக்ட் எவிடென்ஸ்”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *