புதிய கந்த புராணம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மணிக்கொடி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 15, 2023
பார்வையிட்டோர்: 4,183 
 

(1934 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தற்சிறப்புப் பாயிரம்

இரண்டும் இரண்டும் நான்கு என்ற மகத்தான உண்மையைக் கவிதையாக இசைக்கும் இந்த காலத்தில், உள்ளது உள்ளபடியே சொல்லவேண்டுமென்ற சத்திய உணர்ச்சியும் பகுத்தறிவும் பிடர் பிடித்துத் தள்ளும் இந்தக் காலத்திலே, அதன் தனிப் பெருமையாக ஓர் அழியாத காவியம் செய்ய என்னை எனது உள்ளுணர்வு தூண்டியது. அதன் விளையாட்டை யாரேயறிவர்! இந்தக் காவியத்தில் பச்சை உண்மையைத் தவிர வேறு சரக்கு ஒன்றும் கிடையாது. ஆதலால் பகுத்தறிவு அன்பர்களும் ஏனையோரும் படித்து இன்புறுமாறு வேண்டிக் கொள்ளுகிறேன். காவியமும் உங்களைக் களைப்புறுத்தாதபடி, கம்பனைப் போலல்லாமல், சிறிய கட்டுக்கோப்பிலிருப்பதற்கு நீங்கள் எனக்கு வந்தனமளிக்க வேண்டும்.

நாட்டுப் படலம்

திருநெல்வேலி ஜில்லா மூன்று விஷயங்களுக்குப் பிரசித்தி பெற்றது. ஒன்று சிவன் என்ற ‘பிறவாத பெம்மான்’ பிறந்தது அங்கு. இரண்டாவதாகத் தென்றல் பிறந்தது அங்கு. மூன்றாவதாகத் தமிழ் பிறந்ததும் அங்குதான். இந்த மூன்று பெருமையிலேயே 20ம் நூற்றாண்டு வரை திருநெல்வேலி ஜில்லா மெய்மறந்து இருந்தது.

துன்பம் தொடர்ந்துவரும் என்பது பழமொழி. புகழும் பெருமையும் அப்படித்தான் போலிருக்கிறது. 20ம் நூற்றாண்டிலே உலக மகாயுத்தம் நடந்து கொண்டிருக்கும் பொழுது இந்தப் பொல்லாத அதிர்ஷ்டம் மறுபடியும் திருநெல்வேலியைத் தாக்கிற்று. இந்த முக்கியமான சம்பவம் என்னவெனில், கந்தப்ப பிள்ளை 1916ம் வருடம் திருநெல்வேலியில் திரு அவதாரம் செய்ததுதான்.

ஆற்றுப்படலம்

தாமிரவருணி நதி எப்பொழுதும் வற்றாது என்பது சம்பிரதாயம். அந்தச் சம்பிரதாயத்திற்குப் பங்கம் இந்தக் கலிகாலத்தில் வந்துவிடுமோ என்று பயந்து முனிசிபல் உபநதிகள் பல அதில் வந்து சேருகின்றன.

நகரப் படலம்

இந்தப் புனிதமான நதி தீரத்திலே, வண்ணாரப்பேட்டை என்ற திவ்யப் பிரதேசம் ஒன்று உண்டு. சாட்சி சொன்ன கோமுட்டிச் செட்டி கண்ட குதிரையைப் போல் பட்டணத்தின் தொந்திரவுகளுடன் கிராமத்தின் அழகையும் பெற்றிருந்தது. அதாவது தமிழர்களில் நாகரிக வைதீகர்கள் மாதிரி குடுமியும், விபூதியும் ருத்திராட்சமும், ஸெர்ஜ் ஸுட்டும் ஐக்கியப்பட்டுப் பரிணமிக்கும் தமிழ்நாட்டு வைதீகர்கள் மாதிரி இரண்டையும் பெற்ற ஓர் ஸ்தலமாக இருந்தது.

இதன் ஸ்தல புராணம், கபாடபுரம் கடலுடன் ஐக்கியப்படும் பொழுது மறையாவிட்டாலும் சமீபத்தில் வந்த தாமிரவருணியின் வெள்ளத்தினால் ஆற்றில் நித்திய மோன சமாதியடைந்தது என்பது வண்ணாரப்பேட்டை முதியோர்களின் வாக்கு.

இந்தக் கிராம நகரில் கூட கோபுரங்களும் மாட மாளிகைகளும் இல்லாவிடினும் கூரை வீடுகளுடன் தோளோடு தோள் கொடுத்து நிற்கும் காரை வீடுகளும் உண்டு. இவையெல்லாம் அவ்வூர் பெரியார்களின் வாசஸ்தலம் என்பது உண்மையிலும் உண்மை.

இவ்வூரில் கோவில்களும் உண்டு. அதாவது பட்சபாதமில்லாமல், சிவபிரான் விஷ்ணுவாக முயன்ற (அது ஊர்க்காரர்களின் முயற்சி; இந்த உரிமை சிதம்பரத் தலத்தில் மட்டுமில்லை) ஒரு கோவில். “கூறு சங்கு தோல் முரசு கொட்டோ சை”யல்லாமல் மற்றொன்றும் அறியாத வேறொரு சிவபிரான். அப்புறம் ஒரு பேராச்சி – எங்கள் ஸ்தலத்திலிருக்கும் மக்களின் ரத்த வெறியையும் வீரத்தையும் எடுத்துக் காட்டும் பேராச்சி. இன்னும் ஒன்றிரண்டு குட்டிச் சுடலைமாடன்கள். இவைதான் அத்தலத்தின் தெய்வங்கள்; காவல் தெய்வங்கள்.

திருஅவதாரப் படலம்

திருநெல்வேலியில் நான்காவது முக்கிய விஷயம் கி.பி. 1916ம் வருடம் ஒரு இரவில், திரு.அம்மையப்ப பிள்ளைக்கும் சிவகாமி அம்மாளுக்குமாக – அந்த இரவில் முக்கியமாக அந்த அம்மாள்தான் பங்கெடுத்துக் கொண்டார்கள் – திரு. கந்தப்ப பிள்ளை இந்த உலகில் ஜனித்தார்.

பிறக்கும் பொழுது உலகத்தில் ஒரு உற்பாதங்களும் தோன்றவில்லை. ஆனால் அவர் மற்றவரைப் போன்றவரல்ல என்பதை வருகையிலேயே எடுத்துக் காண்பித்துவிட்டார். இவருடைய தாயார் இவர் வரும்வரை பிலாக்கணத்தையும் முனகலையும் கடைப்பிடித்திருந்தாலும் வேர் தாயின் வழியைப் பின்பற்றவில்லை. இதை அவர் தமது பெருமையை ஸ்தாபிக்க சரியான வழியென்று நினைத்திருக்கலாம். ஆனால் அவர் வருகையின் வரவேற்புக் கமிட்டியின் தலைவரான மருத்துவச்சியம்மாள் அப்படி நினைக்கவில்லை. அவரைத் தலைகீழாகப் பிடித்துக் குலுக்கி, முதுகில் கொடுத்த அறையில் ஆரம்பித்த அழுகை, அவர் வாழ்க்கையின் சூக்ஷும தத்துவமாக ஜீவியத்தின் இறுதிவரை இருந்தது.

திரு. கந்தப்ப பிள்ளை இவ்வுலகத்தில் வந்த பிறகு கார்த்திகைப் பெண்கள் அறுவரால் பாலூட்டி வளர்க்கப்படாவிட்டாலும் ஜாம்புத் தீபத்தின் மேற்கே இருக்கும் ஒரு ராஜ்யத்திலிருந்து வந்த இரும்பினாலான காமதேனுவின் பாலை அதாவது மெல்லின்ஸ், கிளாஸ்கோ என்ற அம்ருதத்தை அருந்தி வளர்ந்தார் என்பதை உணர வேண்டும். பழைய ஹோதாவில் சிறு பறையும் சிறு தேரும் இழுத்துத் திரியாவிட்டாலும், சிறு டிரமும் (drum) சிறு தகரமோட்டாரும் அவருக்கு விளையாட்டுக் கருவியாக இருந்தன. சிவகாமியம்மாள், “செங்கீரையாடியருளே” என்றும் “முத்தந்தருகவே” என்றும் சொல்லாவிட்டாலும், கையிலிருந்ததை வைத்துக் கொண்டு அவர் இந்த உலகத்தில் ஜனித்தவுடன் ஆரம்பித்த பிலாக்கணத் தத்துவத்தை நன்றாக வளர்த்து வந்தாள். காலாகாலத்தில் வித்யாரம்பமும் ஆயிற்று. அவரது குரு, கல்வி என்ற ஹோதாவில் புதிதாக ஒன்றும் சொல்லிக்கொடாவிட்டாலும், “தான்பெற்று, தாய் வளர்த்த” கந்தப்ப பிள்ளையின் பிலாக்கணத் தத்துவத்தை, அருங்கலையாகத் தமது செங்கோலால் பாவித்து வந்தார். கந்தப்ப பிள்ளையும் உருண்டு செல்லும் கல் போலும், காற்றிலகப்பட்ட காற்றாடி போலும், வகுப்புப் படிகளைக் கடந்து கல்விக் கோவிலின் வெளி வாயிலையடைந்தார்.

திருமணப் படலம்

இச்சமயத்தில் அம்மையப்ப பிள்ளையும் சிவகாமியம்மாளும் ஒரு சிறு கூட்டுக் கமிட்டியில் ஆலோசித்து, தமது திருமகனுக்குத் திருமணம் செய்விப்பது என்று தீர்மானித்தார்கள்.

வேங்கை மரத்தடியில் யானையைக் கொண்டு பயமுறுத்திக் காதல்கொள்ள வண்ணாரப்பேட்டையில் வசதியின்மையால், “தந்தை சொல்மிக்க மந்திரமில்லை” என்று, 4000 ரூபாய் தொகையுடன் தினைவிளை கிராமத்து நம்பியா பிள்ளையின் ஏக புத்திரியாகிய ஸ்ரீமதி வள்ளியம்மாளை மணம் செய்ய உடன்பட்டார். திருமணம் ஏக தடபுடலாக அதற்கிருக்க வேண்டிய சண்டை, தோரணைகளுடன் இனிது நிறைவேறியது. மணம் முடியும்வரை கந்தப்ப பிள்ளைக்குத் தனது சுகதர்மிணியைப் பார்க்கத் தைரியமில்லாமலிருந்தது. மணம் முடிந்த பிறகும் பார்க்காமலிருக்க முடியாதாகையால் பார்த்தார். அம்மணி என்னவோ அவர் கண்களுக்கு அழகாகத்தான் தோன்றினாள்.

அவருக்குத் தமது சகதர்மிணியைப் பற்றி கிடைத்த செய்திக் குறிப்பில், அவள் படித்தவள் என்றும் சங்கீதப் பயிற்சி உடையவள் என்றும் கண்டிருந்தது. அவள் கல்வி ‘குட்டிப்பாலர்’ என்பதில் முற்றுப் புள்ளி பெற்றது என்றும் ஹார்மோனியம் வாசிப்பது சுருதிக் கட்டைகளின் மீது எலி ஓடுவது போன்ற இனிய கீதம் என்றும் கண்டு கொண்டார். திரு. கந்தப்ப பிள்ளைக்கு சங்கீதம் பிளேட் கேள்வி ஞானம். அதிலும் வண்ணாரப்பேட்டையில் கிடைக்கக்கூடிய ஓட்டைப் பிளேட் ஞானம். இரண்டும் ஏறக்குறைய ஒத்திருந்ததினால் தமது சகதர்மிணிக்கும் சங்கீதப் பயிற்சி உண்டு என்பதை உணர்ந்தார்.

உலாவியல் படலம்

இதற்குள் கலாசாலை என்ற வானத்திலிருந்து பேனா என்ற தெய்வீக ஆயுதமான வேலும் கிடைத்தது. பசி என்று சூரபத்மனைக் கொல்லப் புறப்பட்டார். தாயின் இளமைப் பயிற்சியானது கல்வி மன்றத்தில் நன்றாகக் கடைந்தெடுக்கப்பட்டு, இப்பொழுது நன்றாகப் பரிணமித்துவிட்டது. அந்த மகத்தான பிலாக்கணம் என்ற சங்கநாதத்துடனும், பேனா என்ற வேலுடனும் அவர் ஏறி இறங்கிய மாளிகைகள் எண்ணத் தொலையாது. கடைசியாக 30 ரூபாயென்ற முக்தி பெறும் காலம் வந்ததும், தினம் பசி என்ற சூரபத்மனைத் தொலைத்த வண்ணம் தமது இல்லறத்தை நடத்துகிறார்.

சுபம்! சுபம்! சுபம்!
புதிய கந்த புராணம் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்.

– மணிக்கொடி, 28-10-1934

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *