பீஃப் பிரியாணி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 20, 2020
பார்வையிட்டோர்: 8,414 
 

சென்னையின் நெருக்கமான தெருக்கள், எங்களுக்கு மிக அந்நியமாக இருந்தன. நாங்கள் என்பது நான்கு பேர். லோகநாதன், செந்தில், ஜார்ஜ், நான். எங்கள் கம்பெனியின் போர்டு மீட்டீங் சைதாப்பேட்டை ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட இருந்ததால் வந்தோம்.
பீஃப் பிரியாணி

கிண்டியில் ஒரு லாட்ஜில் எங்களுக்கு இரண்டு அறைகள் போடப்பட்டிருந்தன. மூட்டைப்பூச்சி நசுக்கிய சுவடுகளோடு, ஓர் அழுக்குப் போர்வையும் மாடிப்படி முக்கில் துப்பிய எச்சில் கறைகளுமாக இருந்த லாட்ஜ். குடிக்கும் தண்ணீரில் செத்து மிதந்த பூச்சியைப் பார்த்து லோகநாதன் டென்ஷன் ஆனான்.

“என்னய்யா இது… நல்லா வாயில வருது. எதுனாச்சும் ஒண்ணுத்துலயாவது சுத்தம் இருக்கணும்ல?”

`‘என்ன சார் சவுண்டு ஓவரா வுடுறீங்க? `மாத்திக் குடு’னா குடுத்துட்டுப்போறோம். அத்த வுட்டுட்டு…” என்று எகிறினான் எப்போதுமே பல் குத்தியபடி ரிசப்ஷனில் உட்கார்ந்திருந்தவன். அவனது முன் பல் உடைந்து இருந்தது. மீதம் இருந்த பாதிப் பல்லும் காறை படிந்திருந்தது. எங்கள் ஊரில் இப்படி ஒரு தூரத்துச் சித்தப்பா உண்டு. அவர் எப்போதும் போதை, பாக்கு என இருந்து, ரிசப்ஷனில் இருந்தவனுக்கு நிகரான காறை பற்களில் உண்டு. அவர் சிரிக்கும்போது ஒரு பாம்பின் நாக்கு மாதிரி பெரும் துர்நாற்றம் நீண்டு வீசும். அவரைப் போலவே இவனுக்கும் போதை, பாக்குப் பழக்கம் இருக்கக்கூடும்.

எனக்கு, அதிகமான பயம் உண்டு; இயல்பாக இருக்கும் பயம் போக கற்பனாவாத பயமும் உண்டு. `அவன் ஒரு பெரிய ரௌடியாக இருக்க வேண்டும்’ என என் கற்பனாவதி மந்திரக்கோல் சொல்ல, நான் அவசரமாக லோகநாதனிடம் “பூச்சிதானே… சாகத்தானே செய்யும்ம்ம்ம்…” என்றேன் தட்டுத்தடுமாறி.

அவன் என்னைக் கோபமாகப் பார்த்து “இப்ப எதுக்கு சம்பந்தமே இல்லாமப் பேசற… ஹாங்?” என்றான்.

பீஃப் பிரியாணி

செந்தில்தான் நடுவில் வந்து, “கஸ்டமர்கிட்ட இப்படியா பேசுவீங்க? விடுங்க பாஸ். இவன்கிட்டபோயி… வாங்க ரூமுக்குப் போவோம்’’ என்று கூட்டிப்போனான். மாடி ஏறும் வழி எல்லாம் ஜார்ஜ், “ராத்திரி முக்குலதான் பாத்ரூம் போவானுகனு நெனைக்கேன். என்ன வாடை… ச்சீ!” என்றான்.

அன்று, குடிக்கத் திட்டம் போட்டிருந்தான் லோகநாதன். சைதாப்பேட்டை டாஸ்மாக்கில் சரக்கு வாங்கி வர ஜார்ஜ் தானாக முன்வந்தான். வழக்கம்போல எல்லோரும் கொஞ்சம் பணம் போட்டோம். என் மனைவி என்னை போனில் அழைத்து, பத்து ஆண்டுகாலத் திருமண வாழ்வின் அத்தனை அன்பையும் சுமந்தபடி, “சாப்டீங்களா?’’ என்றாள்.

“ஆமா… ஆமா…” என்றேன் ஜார்ஜிடம் காசு கொடுத்தபடி, `நீ சாப்டியா?’ எனக் கேட்டிருக்க வேண்டும் நான். ஆனால், எல்லோரும் என்னைக் கிண்டல் செய்வார்கள் என்பதால் கேட்கவில்லை. அவளே மறுபடியும், “சொன்னா கத்தக் கூடாது. ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் இருப்பாக. அதுவும் அந்த லோகு சாருக்கு, உங்களைக் கெடுக்கிறதுதான் சோலி. அவர் சொல்லுதாரேனு சும்மா குடிச்சிவைக்காதீக.”
“அட… நீ வேற” என்று சொல்லும்போதுதான் அவன் “ஓல்டு மங்கா?” என்றான்

நான் அவனிடம் தலையசைத்துக்கொண்டே “ஹலோ… ஹலோ… ஹலோ…” என்றேன். பின்னர் போனை சுவிட்ச் ஆஃப் செய்தேன். லோகு சத்தமாகச் சிரித்தான்.

“சரி… சைட் டிஷ் என்ன?”

“எதுனாச்சும் காரமா வாங்கு” என்றான் லோகு.

“எனக்கு சிக்கன்.”

“எனக்கு மசாலா கலக்கி’’ என்றேன் நான்.

சென்னை வரும் சமயங்களில் மட்டுமே சாப்பிடக் கிடைக்கும் ஒரு வஸ்துவாக கலக்கி இருப்பதால், எனக்கு சிக்கனைக் காட்டிலும் அதுதான் சுவாரஸ்யமானதாக இருந்தது. மசாலா சேர்த்த கலக்கியைப் பிய்க்கும்போதே சிறிய வயதில் அணிந்த சில்க் சட்டையைப் பிய்ப்பதை போன்ற ஓர் உணர்வு வரும். நெளுக் நெளுக்… என இருக்கும் அந்த மசாலா கலக்கியின் சுவை, முதல் காதலியின் நினைவைப்போல நீண்ட நேரம் அடிநாக்கில் உழன்றுகொண்டே இருக்கும்.

செந்தில் தனக்கு ஒரு சிக்கன் பிரியாணி போதும் என்றான்.

“கிட்டத்தட்ட ஆர்டர் எடுக்கிற ஆளாட்டம் ஆக்கிட்டீக” என்று சலித்தபடி ஜார்ஜ் கீழே இறங்கிப் போனான்.

திருநெல்வேலியில் சம்பளம் வாங்கிய முதல் சனிக்கிழமை, நாங்கள் நால்வரும் குடிப்பது உண்டு. வறுத்த முந்திரியை அரசன் பேக்கரியில் வாங்கி வருவான் ஜார்ஜ். அது நிச்சயம் நிறைய விலை இருக்கும். அதுபோல வாங்க வேண்டும் எனப் பலமுறை முயற்சித்திருக்கிறேன். பட்ஜெட்டின் துண்டுத் தெறிப்புகளில் சில்லு சில்லாகப்போனது என் முந்திரி ஆசைகள்.

சமாதானபுரம் முக்கில் ஒருமுறை 30 ரூபாய் கொடுத்து முந்திரி பாக்கெட் வாங்கி வந்தால், அது ஏதோ மாவால் முந்திரி மாதிரியே செய்துகொண்டு வந்ததாக இருந்தது. பல நாட்கள் கனவுகளில் நான் முந்திரி சாப்பிடுவதுபோல ஒரு பிம்பம் வந்து வந்து போனது.

“யோவ்… எந்திரிவே” என்று லோகநாதன் தட்டி எழுப்ப, நான் திடுக்கிட்டு எழுந்தேன். செந்தில் என்னைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்க ஜார்ஜ் வந்திருந்தான். திடீரென அறையே கமகமவென மணந்தது. அரைத்தூக்கம் கலைந்து எழுந்ததால், குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தைவிட சாப்பிட வேண்டும் என்ற பசி எனக்கு அதிகம் இருந்தது.

நான் செந்திலிடம் பொத்தாம்பொதுவாக, “நான் சாப்பிட்டுறட்டா?’’ என்று கேட்டேன். எல்லோரும் என்னை கொலைவெறியோடு பார்க்க… லோகநாதன், “கனவுல மைனி வந்து மிரட்டிட்டாவளோ?” என்று சிரித்தான். யாருமே எனக்காகக் காத்திருக்கத் தயாராகவும் இல்லை. ஒரு ஃபார்மாலிட்டிக்காகக்கூட தொடர்ந்து கேட்காதது எனக்கு வருத்தமாக இருந்தது.

நான் என் பிரியாணி பொட்டலத்தைப் பிரித்தேன். ஜார்ஜ் அதில் இருந்து ஒரு கை எடுத்து வாயில் போட்டு, “த்தூ… மொக்கை’’ என்றான். எனக்குக் கோபம் வந்தது. மறுபடி அடக்கிக் கொண்டேன்.

“இன்னும் நான் சாப்பிடவே ஆரம்பிக்கலை. அதுக்குள்ள `மொக்க… கிக்க’னு’’ என்றேன். எடுத்து வாயில் வைத்தபோது முந்தின வரியை நான் பேசியிருக்கக் கூடாது என்றுதான் தோன்றியது. அத்தனை மோசமானதாக அது இருந்தது. கோழி சரியாகக் கழுவப்படாத கவிச்சி வாடை, என் வாயில் ஒருவிதமான உமட்டும் தன்மையைக் கொடுத்தது. ஜார்ஜ் என்னைப் பார்த்துச் சிரித்தான்.

“என்னவே… மொக்க மொக்கதானா?”

“வாயில வெக்க முடியலை. `மொக்க’னு சொல்லிருக்க?” என்று சமாளித்து, பெரிய ஹாஸ்யத்தைச் சொன்னதுபோல சிரித்தேன்.

திறந்து இருந்த கதவைத் தட்டி, “சார்… செவன்அப்” என்று சொல்லியபடி உள்ளே வந்த ரூம்பாய், தன் கையில் இருந்த சில்லறையை ஜார்ஜிடம் கொடுத்தான். ஜார்ஜ் என்னைப் பார்த்தபடியே அந்தச் சில்லறையை அவனிடமே கொடுத்து,

“உன் பேரு என்ன?” என்றான்.

“மதுர.’’

“அட, சென்னையில ஒரு மதுரையா… சூப்பர்!’’ என்றான் லோகநாதன்.

“மதுரவீரன்… எங்க குலசாமி சார்” என்றான் மதுர, முகத்தை இறுக்கிக்கொண்டு.

“சரி… சரி… கோவப்படாத. சொல்லு… இங்கே எங்கே நல்ல பிரியாணி கிடைக்கும்?”

“என்ன பிரியாணி சார்?”

“சிக்கன்தான்டா!”

“சிக்கன் தெரியலை சார். பக்கத்துல நல்ல பீஃப் பிரியாணி கிடைக்கும்.”

ஜார்ஜ் உடனே “செமடா… வாங்கி தர்றியா?” என்று கேட்க, லோகநாதன் “அடடா… அதெல்லாம் வேணாம் ஜார்ஜ். எனக்கு இறங்காது’’ என்றான்.

ஜார்ஜ் அவனைக் கவனிக்காமல்,

“நீ சாப்பிடுறியா… நீ..?’’ என்று செந்திலையும் என்னையும் பார்த்தான். எனக்கு மிகவும் பசித்தது. நான் “சரி’’ என்றேன்.

செந்தில் “இதே இருக்கே… சாப்பிட்டுக்கிறேன்’’ என்றதும் அதை அப்படியே குப்பைத்தொட்டியில் கொட்ட, லோகநாதன் பதறினான்.

“என்னடா நடக்குது இங்கே… இப்பதான் ஒரு பெக் போட்ட?”

“என்சாய் மச்சான்!’’

“சும்ம்மா… அது வேணாம் இது வேணாம்னு.காட்டு ஓணான் சாப்பிட்டிருக்கீங்களா… செஞ்சி தரச் சொல்லட்டுமா? மதுர தம்பி, சைதாப் பேட்டையில காட்டு ஓணான் கிடைக்குமா?”

மதுரக்கு சிரிப்பு வந்தாலும் அதை அடக்கிக்கொண்டு, “இல்லை சார். நான் வரேன்” என்று கிளம்பினான்.

“எங்கே கிளம்புற? இரு… பீஃப் பிரியாணி வாங்கிக் குடு’’ என்றான் ஜார்ஜ்.

மதுர இப்போது மலங்க மலங்க விழித்தான். “சார்…’’ என்று இழுத்தான்.

லோகநாதன் அவனிடம், “நீ போப்பா” என்று சொல்ல, ஜார்ஜ் “இரு… அந்தாள் சொல்றான்னு போவாத…’’ என்று அவனை அணைக்க முயற்சித்தான்.

நான் ஜார்ஜிடம், “விடு விடு… பாத்துக்கலாம். வேற வாங்கிக்கலாம்’’ என்று சொல்ல, அவன் ஒரே மடக்கில் அடுத்த பெக்கை ஊற்றி, “என்னடா… பீஃப்னா என்ன அசிங்கமா? கோழி திங்கல… முயல் திங்கல?’’

“நான் சிக்கன் தவிர எதுவும் சாப்பிட மாட்டேன்” என்றான் லோகநாதன் அழுத்தமாக. அவன் முகம் சிவந்து இருந்தது.

“குரூப்ல ஒருத்தருக்குப் புடிக்கலைன்னா விடேன்’’ என்றான் ஜார்ஜைப் பார்த்து.

“உன்னையா சாப்பிடச் சொன்னேன்… இல்லையே?’’ – ஜார்ஜ் உச்சக்குரலில் கத்தினான்.

ஒரு நிமிடம் அறையே அமைதியானது. லோகநாதன் எழுந்து சட்டை மாட்டிக்கொண்டு மதுர பக்கம் போய் அவன் கன்னத்தில் பளார் என அடித்து, பின்னர் வெளியே நடந்தான். மதுர துவண்டு லேசாகச் சரிய, செந்தில் அவனைப் பிடித்து கட்டிலில் உட்காரவைத்தான். லோகநாதன் நிற்கவே இல்லை. ஜார்ஜ் போதை கலைய, “என்ன இழவுடா… சின்னப் பையனைப்போய். டேய்… டேய்… இந்த அங்கிளை மன்னிச்சிருடா. அவன் மிருகம்டா. ஸாரிடா!”

மதுர ஸ்தம்பித்தபடி உட்கார்ந்திருக்க, ரிசப்ஷனில் இருந்தவன் உள்ளே வந்து,

“அடிச்சிட்டீங்களா?” என்று மதுர பக்கம் போனான்.

“வந்ததுலே இருந்து கலீஜ் பண்ணிக்கிறீங்க.பேசாமக் கிளம்புங்க சார். இது எல்லாம் நல்லதுக்குல்ல” என்றான்.

“ஸாரி தம்பி. அவர் ஏதோ கோவத்துல…” என்று அவன் கைகளைப் பிடிக்கப்பார்த்தான் செந்தில். அதை அவன் விலக்கி, “எதுக்குடா… எதுக்குடா அடிச்சான் அந்தாளு?” என்று கேட்க, மதுர ஓர் இடம்கூடத் தயங்காமல் முழுவதையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தான்.

“அடங்கொய்யால… இப்படி அடிச்சிருக்கானே இந்தப் பயல. இவங்க அம்மா தனி ஆளா தெரு கூட்டி நாலு புள்ளைங்களைக் காப்பாத்துதுய்யா. இவ்ளோ ஏன்? உங்க அப்பாரு எப்படிடா செத்தாரு?” – மதுர பேசாமல் நின்றிருந்தான் .

“அட… சொல்லுடா. அப்பதான் இந்த மாதிரி ஜென்மங்க திருந்தும். சொல்லுடா!”

அவன் தேம்பியபடி வேகமாக அறையைவிட்டு வெளியேறினான். ரிசப்ஷனிஸ்ட் கோபமாக, “கையால பீ அள்ளி தலையில வெச்சுக் கொண்டு போனவன் புள்ள. காதுல புழு நுழைஞ்சு செத்துப்போனான். உங்க போதைக்கு ஊறுகா ஆக்கிட்டீங்களே. நாசமாப்போக. கிளம்புங்க சார்… கிளம்புங்க.”

ஜார்ஜ் பேய் அறைந்தாற்போல வெறித்தான். அறை எங்கும் பிரியாணி சிதறிய வாடையும் பிரச்னையின் துர்நாற்றமும் நூலாம்படைபோல் தொங்கிக்கொண்டிருந்தன.

செந்தில் அவன் கைகளைப் பிடித்து “புரியுது சார்… ஏதோ கோவத்துல பண்ணிட்டாங்க.”

“கை இருந்தா அடிச்சிருவீங்களா சார்?”

ஜார்ஜ் சட்டென தன் கையில் இருந்த 500 ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் அழுத்த, அவன் கைகளை உதறியபடி, “ஐய்ய… மடக்கப்பாக்கிறியா? எங்கேயோ தன் புள்ள சாப்பிட்டிருக்கும்; தூங்கிருக்கும்னு நினைக்காளே ஒருத்தி. அவ பாவத்துல விழுந்துட்டியே. ஷ்… பேசாதே. நீ கெளம்பு சார். பில் வாங்கிக்க.”

“இந்த நைட்ல… நாங்க…” என்றேன் நான் தயங்கியபடி. லேசான பயம் என்னைப் போர்வையாகப் போத்திக்கொண்டிருந்தது.

அவன், என்னை சட்டைசெய்யவே இல்லை. மாறாக, நான் நிமிரும்போது வெளியே போயிருந்தான்.

“இப்ப என்ன செய்ய?’’ என்றான் ஜார்ஜ்.

செந்தில் உடனடியாக ஒரு டாக்ஸி சொல்லி பெட்டி அடுக்கினான். பக்கத்து ஹோட்டல் விவரங்களை கூகுளில் தேடினான். லோகநாதனுக்கு போன் செய்தான். அவனது பெட்டியினுள் அவன் பேன்ட்டை மடித்துவைத்து, எங்கள் இருவரையும் திரும்பிப் பார்த்து “கிளம்புங்க’’ என்றான்.

நாங்கள் கிளம்புவதற்குள் கீழே போய் பில் கட்டி வந்திருந்தான். கீழே டாக்ஸி இருந்தது. டாக்ஸி கிளம்பும் நேரத்தில் லோகநாதன் வந்து ஏறிக்கொண்டான். யாரும் யாருடனும் பேசாமல், செந்தில் வழிகாட்டிய ஹோட்டலில் இறங்கினோம்.

நானும் லோகநாதனும் ஓர் அறைக்குச் செல்வதாக இருந்தது. செந்தில் “ஒரு நிமிஷம்’’ என்று கூப்பிட்டான்
பீஃப் பிரியாணி

“என்ன?” என்றேன் நான். அவன் என்னை சட்டை செய்யவில்லை. லோகநாதனை நோக்கி, “உனக்கு இப்பமாச்சும் மனசு வருந்தல?’’ என்று கேட்டுவிட்டு விறுவிறுவென அவன் அறைக்குப் போனான். ஜார்ஜ் “விடு மச்சான்… அவன் புரட்சியாளனா ஆகிட்டான்’’ என்றான்.

லோகநாதன் வேகமாக அவனது பையை கண்ணாடி முன்னால் வைத்து, தேம்பித் தேம்பி அழுதான். நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. `இரவு தூங்கக் கூடாது’ எனவும், `லோகு தற்கொலை செய்துகொள்ளக்கூட வாய்ப்பு இருக்கிறது’ எனவும் என் உள்மனம் சொல்லிற்று. லோகநாதன் அழுததும் ஜார்ஜ் பின்வாங்கினான்.

“என்னா லோகு இது? நீர் யாரு… அவனை விடுங்க பாஸு!”

“எதுக்கு அழறீங்க?”என்றேன் லோகுவிடம். என் குரல் படபடத்து அடங்கிற்று.

நீண்ட மௌனம். ஜார்ஜ், அறையைவிட்டு வெளியேறினான். நான் கதவைச் சாத்திவிட்டு படுக்கையில் உட்கார்ந்தேன். லோகு தூங்குவது போல படுத்துக்கொண்டான். நான் வேறு எதுவும் பேசவில்லை. தூக்கம் வரவே இல்லை. எங்கோ ஒரு ரயில் போகும் சத்தம் கேட்டது. காலையில் இது பற்றி பேச்சு வந்தால், லோகு தப்பா… செந்தில் தப்பா… எப்படிச் சொல்லப்போகிறேன் என மிகுந்த பதற்றமாக இருந்தது. நள்ளிரவு பசி வேறு வயிற்றுக்குள் புரளும் நீண்ட பாம்பைப்போல நெளிய, நான் எழுந்தேன். லோகு அசந்து தூங்கினான். வராந்தாவில் செந்தில் நின்றுகொண்டிருந்தான். லேசாகத் தூறியது.

“தூங்கலையா செந்தில்?”

பீஃப் பிரியாணி2

“ஆ… சும்மா. தூக்கம் வரலை…” – அவன் கண்கள் கலங்கியிருந்தன.

“விடுங்க செந்தில்… யாரைக் குறை சொல்ல…”

“சொல்றது இருக்கட்டும். அந்தப் பையனுக்கு எவ்ளோ வேதனையா இருக்கும்? எங்க அப்பாரும் டிரை லெட்ரீன்ல அள்ளுனவர்தான். திங்க முடியாது. வாடை போவணும்னு குடிச்சிட்டு சாப்பிட உக்காருவார். சாக்கடை அடைப்புக்கு குழியில இறங்கினவர், காஸ் முட்டி செத்துப் போனார். குடிச்சிட்டு குழியில இறங்கினார்னு நஷ்டஈடுகூடக் கொடுக்காம விட்டுடாங்க. `மேன் ஹோல்’னுதானே இன்னி வரைக்கும் ரோட்டுல போடுறானுக? நிலவுக்கு போறவன் மெஷினை வெச்சு அள்ள முடியாது? பீஃப்னா நாறுறது… மட்டன்னா மணக்குமா? வலிக்குது. குப்பை லாரி கிராஸ் பண்ணிப்போனா மூக்கைப் பொத்தாமலா லோகு சார் போவாரு?”

செந்திலின் குரல் இறுகிக்கிடந்தது. ஒரு குரல் ஒரு மாய அலைபோல என்னை வாரி சுருட்டிக்கொண்டு, என் அறைக்கதவைத் திறக்கச்செய்யும் என நான் நம்பவே இல்லை. அதைக் காட்டிலும் அந்த நடுநிசியில் லோகநாதனை எழுப்பி “மனுஷனாடா நீ?” என்று கேட்கச்செய்யும் என நினைக்கவே இல்லை!

– ஏப்ரல் 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *