பிலிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 21, 2022
பார்வையிட்டோர்: 4,949 
 
 

குடிசைக்குள் மயான அமைதி. கட்டிலில் வதங்கிய செடியாகப் படுத்திருக்கும் பிலிப்புவின் வெறிச்சோடிய பார்வை. படுக்கைக்கு முன் நான் மட்டும் தனியாக நாற்காலியில். பக்கவாதக் கணவனை விட்டுவிட்டு எங்குதான் போயிருப்பாள் வேதம்? மணி ஐந்து.

வேதத்தை இரண்டாந்தாரமாக பிலிப்பு கல்யாணம் செய்துகொண்டபோதுதான் நான் கடைசியாக இந்தக் குடிசைக்கு வந்தது.

‘பிலிப்பண்ணே..’ ஐந்தாவது முறையாகக் கூப்பிடுகிறேன். பார்வையில் உணர்ச்சியற்ற லேசான அசைவு. அவ்வளவுதான்.

பளிச்சென்ற சுத்தமான தரை. பினாயிலின் மெலிதான நெடி. பக்கவாத நோயாளியின் வீடு என்று நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. பிலிப்புவின் வார்ட்பாய் அனுபவத்தை நன்றாகத்தான் கற்று வைத்திருக்கிறாள் வேதம்.

நேற்று சென்னை வந்த வில்சன்ராஜ் சொல்லவில்லையென்றால் எனக்குத் தெரியாமலேயே போயிருக்கும். பத்து வருடங்களுக்கு முன் மிஷன் ஆஸ்பத்திரியில் எறும்பின் சுறுசுறுப்புடன் வேலை பார்த்த மனிதன் இன்று இப்படி அசைவற்ற ஜடமாக…

ஜன்னலுக்கு மேலே நிறைய போட்டோக்கள். நானும் பிலிப்புவும் சேர்ந்து நிற்கும் போட்டோ ஒன்று. பிலிப்புவுக்கு என் மீது அலாதியான அன்பு.

மிஷன் பள்ளியில் முப்பது வருஷத்துக்கு மேல் வாத்தியாராக இருந்த என் அப்பாவின் பெயர் பிஷப்பிடம் எந்த உணர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், பிலிப்பு பற்றி தயக்கத்துடன் சொன்னதும், பிஷப் முகத்தில் பிரகாசத்துடன், ‘பிலிப்பு சிபாரிசு பண்ணி இருக்கானா ? அப்போ வேலை கொடுத்துத்தான் ஆகணும். இல்லைனா அவன் கிராமத்துக்கு நான் வரமுடியாது. கறுப்புக்கொடி காட்டினாலும் காட்டுவான்’ என்றார் பலத்த சிரிப்புடன்.

நிறைய குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் தாத்தாவாக பிலிப்பு இருக்கும் போட்டோ. ஒவ்வொரு வருடமும் சான்டா கிளாச் வேஷத்துக்காக பஞ்சு, வேஷ்டிகளை உள்ளே திணித்து ஒரு பிரமாண்ட உருவகமாக சிவப்பு கவுனும் வெள்ளைத் தாடி முடியுமாக வயிற்றை ஆட்டிக்கொண்டு பிலிப்பு பண்ணும் சேட்டைகள் யாரைத்தான் சிரிக்க வைக்காமல் இருந்தது.

கிறிஸ்துமஸ் தாத்தா என்றாலே நினைவுக்கு வருவது ராபின் டாக்டர்தான். சென்னையிலிருந்து கிறிஸ்துமஸ் பரிசுகள் மட்டும் வாங்குவதை விட்டுவிட்டு ராபின் தன் வேலூர் வீட்டுக்கும் சேர்த்து ஆஸ்பத்திரி பணத்தில் பெயிண்ட் டப்பாக்கள் வாங்கணுமா? யார்தான் எதிர்பார்த்திருக்கமுடியும், அர்த்த ராத்திரியில் வேனைவிட்டு இறங்கியவர்களை பளிச் பளிச்சென்று சான்டா கிளாஸ் வேடத்தில் பிலிப்பு போட்டோ எடுத்துவிடுவான் என்று ? ஸ்காட்லாந்து மிஷனரி கொடுத்த காமிரா, பிலிப்புக்கு இப்படித்தான் நிறையப் பயன்பட்டிருக்கிறது. இரண்டு கைகளிலும் பெயிண்ட் டின்களுடன் மிரளமிரள போட்டோவில் முழித்துக் கொண்டிருந்த ராபினை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

மறுநாள் பிஷப்புக்கு பிலிப்பு எழுதிய நீண்ட மனு, அதனைத் தொடர்ந்த விசாரணைக் கமிஷன், சஸ்பென்ஷன் எல்லாம் ஆஸ்பத்திரியை ஒரு எமர்ஜென்சி பிடிக்குள் கொண்டுவந்து என்றுதான் சொல்ல வேண்டும். யோசிக்கையில் இந்தச் சம்பவம் வேறு துறை திருட்டுக்களையும் கட்டுப்படுத்தியது.

பிலிப்பு இரவில் தூங்குவது உண்டோ என்னவோ? ‘ரஞ்சிதமா லஞ்சிதமா’ என்ற தலைப்பில் ரஞ்சிதம் நர்ஸ் டிஸ்சார்ஜ் பேஷண்டிடம் காசு பறிப்பதைக் கண்டித்து, கழுத்து முழுக்க பணமாலையுடம் படம் வரைந்து நோட்டாஸ் ஒட்டியது இரவில்தான். ‘ரேடியோகிராபர் ஜொள்ராஜ், வீட்டில் படுக்காமல் ஸ்பெஷல் ரூம் ஐந்தில் வாட் இஸ் டூயிங்?’ என்று பிலிப்பு அறிவிக்க, குவார்ட்டர்ஸிலிருந்து ஓடி வந்த ஜேக்கப்ராஜ் மனைவி, தன் கணவனைக் கையும் களவுமாக வேறு ஒரு பெண்ணுடன் பிடித்ததும் ஒரு இரவில்தான்.

‘ஹாரர் ஆஃப் ட்ராகுலா’ என்ற பெயர் தன் பரட்டைத் தலைக்கும் பெரிய எத்துப் பற்களுக்கும் மொச்சைக் கொட்டைக் கண்களுக்கும் இரவில் திரியும் தன் சுபாவத்துக்கும் பொருத்தமான பெயர்தான் என்று பிலிப்பு சுயவிமரிசனம் செய்து கொள்வதுண்டு.

எழுபத்தோரு வயதில் இப்போது முடி முற்றிலும் நரைத்துவிட்டிருக்கிறது. பற்கள் காணாமல் போய் குழிவிழுந்த கன்னங்கள். உடல் சதையெல்லாம் கரைந்து விட்டிருக்கிறது. இடது கைகால், வலதுபுறத்தைவிட வெகுவாக மெலிந்த நிலையில் கண்கள் மூடியிருக்கின்றன, தூக்கமா?

தன்னை எல்லோரும் மாமா, அண்ணன், தாத்தா என்று உறவு சொல்லித்தான் அழைக்க வேண்டும் என்பது பிலிப்புவின் ஆசை… அதுவும் குழந்தைகள் வார்டில் உள்ள பிள்ளைகள். டியூட்டி இல்லாதபோது பிலிப்பு அதிகமாக வலம் வருவது குழந்தைகள் வார்டில்தான். ‘பிலிப்பு மாமா’ என்று ஏதாவது ஒரு குழந்தை பிலிப்பு முதுகில் தொங்கிக் கொண்டிருக்கும்.

ஆஸ்பத்திரிக்கு வந்தவர்களில் பலர் பிலிப்புவைத் தேடியதற்குக் காரணம் இருக்கிறது. அவுட் பேஷண்ட்டாக வருபவர்களுக்கு பழைய ஃபைலை உடனே தேடித் தருவது, டாக்டரிடம் அறிமுகப்படுத்துவது, மருந்து வாங்கித்தந்து பிரிஸ்கிரிப்ஷனுக்கு விளக்கம் தருவது இத்யாதி இத்யாதி. இன்பேஷண்ட்டுகளுக்குப் படுக்கை தருவது, டிபன் வாங்கித் தருவது, டாக்டர், நர்ஸ்களிடம் தனக்கு வேண்டப்பட்டவர் என்று சிபாரிசி செய்வது, ஏழையாக இருந்தால் டிஸ்சார்ஜ் ஆகும்போது ஃபீஸில், சலுகை வாங்கித் தருவது… இப்படி இருந்தால் ஏன் தேடி வரமாட்டார்கள்?

மணி ஐந்து முப்பதிரண்டு, வேதத்தை இன்னும் காணவில்லை. பிலிப்பின் கண்கள் மூடியேதான் இருக்கின்றன. லில்லி அக்காவுடன் கூடிய கல்யாண போட்டோ பழுப்பேறிக் கிடக்கிறது. ஆஸ்துமா, சளி என்று நித்தம் நோக்காடுதான் அக்காவுக்கு.

என் கல்யாணத்துக்குப் பிறகு ஒரு மாதத்தில் லில்லியக்கா இறந்து போனது. குழந்தைகளே இல்லாமல் போனது அவர்களின் மிகப்பெரிய சோகம்.

இறந்த தகவல் வந்தபோது பிலிப்பு புதிதாக எழும்பிக் கொண்டிருந்த ஐ.சி.யூ. கட்டடத்தருகே, செங்கற்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தது நினைவிருக்கிறது. மாரடைப்பு வந்த சிலர் ஆஸ்பத்திரியில் போதிய வசதியின்றி இறந்து போனதால், ஆயிரம் பேரின் கையெழுத்துடன் ஆஸ்பிட்டல் போர்டுக்கு பிலிப்பு கொடுத்த மனுவால் இந்தக் கட்டடம் உருவாகியது. லில்லியக்கா இறந்த செய்தி கிடைத்ததும், கையிலிருந்த செங்கற்களை மேலே நின்ற மேஸ்திரியிடம் கொடுத்துவிட்டு, வெகு நிதானமாகத் தன் சைக்கிளை வெளியே உருட்டிச் சென்று ஏறிய பிலிப்பு, பக்கத்தில் வந்து கொண்டிருந்த என்னைக் கவனிக்கவே இல்லை. லில்லியக்காவின் உடலருகே உட்கார்ந்தபோதும் ஆழ்ந்த மௌனம்தான். நாங்கள் ஆறுதல் கூறியபோது பிலிப்பு சொன்ன ஒரே வாக்கியம் ‘கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்’.

லில்லியக்கா இறந்த அன்று மட்டும்தான் பிலிப்பு லீவ் போட்டது. ஜெபக் கூட்டம் கூட ஒரு மாலை நேரத்தில்தான் நடந்தது. ஒரு வருடத்துக்கு ஆஸ்பத்திரி காரியங்களில் தன்னை முற்றிலுமாக மூழ்கடித்துக் கொண்ட பிலிப்புவாகத்தான் பார்க்க முடிந்தது. ஐ.சி.யூ. கட்டடத்தைத் திறந்து வைத்த பிஷப் சொன்னது நன்றாக நினைவிருக்கிறது. ‘இந்த ஆஸ்பத்திரியை ஒரு சிறுவனைப் போல தன் முதுகில் சுமக்கும் பிலிப்பை பாராட்டுகிறேன். ஆஸ்பத்திரியின் வெற்றி நடைக்கு பிலிப்பு ஒரு முக்கிய காரணம். ‘

இன்னும் நினைவில் இருக்கிறது. வேதம் கழுத்தில் ரத்தம் வழிய வழிய அழுகின்ற தன் இரண்டு மகள்களுடன் ஆஸ்பத்திரிக்கு ஓடிவந்தது. பிலிப்புவின் தூண்டுதலால்தான் அவளுக்கு முதலுதவி செய்யப்பட்டது. போலீஸ், கேஸ் என்று எம்.எஸ் பயந்ததால், தன் வீட்டுக்கே அவளை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தபோது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

வேதத்துக்கு குண்டூர் பக்கம் என்றும், அவள் கணவன் அவளை இங்கு அழைத்து வந்து குடிவைத்திருந்தான் என்றும், இரண்டு குழந்தைகள் பெற்ற பின்தான் அவனுக்கு ஏற்கெனவே மனைவி, பிள்ளைகள் இருக்கும் விஷயம் தனக்குத் தெரியவந்தது என்றும் பிலிப்பிடம் சொல்லி அழுதிருக்கிறாள். இதில் முளைத்த சண்டை அவளைக் கொல்ல முயற்சிக்கும் அளவுக்குப் போயிருக்கிறது. பிலிப்புவும் நானும் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும் அவனோடு தான் வாழமுடியாது என்று மறுத்துவிட்டாள் வேதம்.

அப்போதே கவனித்தேன். வேதத்தின் மகள்கள் பிலிப்போடுதான் எப்போதும் நெருக்கமாக இருந்தனர். டியூட்டி முடிந்ததும் உடனே சைக்கிளை எடுத்துக் கொண்டு ஐயர் கடையில் பலகாரம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு விரையும் புதிய மனிதனாகப் பார்த்தேன்.

எம்.எஸ். கோயில் பிள்ளை, போதகர் மற்றும் என் முன்னிலையில் பிலிப்பு – வேதம் திருமணம் நடந்தது. வேதத்துக்கு அப்போது முப்பது, முப்பத்திரண்டு வயதுதான் இருக்கும்.

பிலிப்பு ரிட்டயர் ஆனபோது எடுத்த குரூப் போட்டோ இருக்கிறது. கால்மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்திருக்கும் பிலிப். எங்கள் வாயெல்லாம் சிரிப்பு. ‘ஆஸ்பத்திரிய என் கண்போல உங்க கைல ஒப்படைக்கிறேன்மா? ஸி இட் குட்’ சிரிக்காதவர்கள் கூட பிலிப்புவின் ஜோக்குக்கு சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள் போட்டோவில்.

ரிட்டயர் ஆனபிறகும் வார்ட்பாய் உத்தியோகம் ஜோசப் கிளினிக்கில் தொடர்ந்தது. இரண்டு பெண்களையும் சென்னையில் ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் சேர்த்துவிட்டதை பெருமிதமாக என்னிடம் சொன்னபோது, பிலிப்பு அண்ணன் தன் சொந்தப் பிள்ளைகள் இருந்தால்கூட இவ்வளவு பெருமையாகப் பேசியிருக்க மாட்டார் என்று தோன்றியது.

வீவுக்கு வரும்போதெல்லாம் போட்டோ எடுக்கும் வழக்கம் இருக்கும்போல. நிறைய போட்டோக்கள். விதவிதமான போஸ்களில் இரண்டு மகள்களும், மாநிறமானாலும் நல்ல லட்சணம்தான் அம்மாவைப் போல இரண்டாவது பெண் கார் விபத்தில் இறந்துவிட்டாள். அதற்குப் பிறகுதான் பிலிப்புவுக்கு இந்த நிலை. முதல் பெண் நர்ஸிங் படிக்கிறாள் என்று வில்சன் சொன்னபோது சந்தோஷமாக இருந்தது. ஆனால், அவளும் பிலிப்புவைப் பார்க்க வருவதே இல்லை என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

நான் சென்னைக்கு மாற்றலாகிப் போனபின் இங்கு வருவது நின்று போனது துரதிருஷ்டம்தான். கிறிஸ்துமஸ் கிரீட்டிங்ஸ் போட்டுக் கொண்டோம். அதிலும் ஏதாவது ஒரு கிண்டல் வார்த்தை இருக்கும்.

மணி ஆறு பத்து. கிளம்ப வேண்டியதுதான். ‘பிலிப்பண்ணே’ என்று அழைத்தேன். தலை மெதுவாக என் பக்கம் திரும்புகிறது. கண்களில் என்ன நீரா? ‘போய் வறேண்ணே’ என்றேன். பிலிப்புவின் வலதுகரம் கட்டிலுக்கு வெளியே வந்து விழுகிறது. உள்ளங்கை திறக்கிறது. நான் கை கொடுக்கிறேன். பிலிப்புவின் ஒரு விரல் என் உள்ளங்கையை மிருதுவாகத் தடவுகிறது.

பிலிப்புவின் தலை ஜன்னல் பக்கம் மீண்டும் திரும்புகிறது. வேதம் மெயின் ரோட்டில் ஒரு சைக்கிளின் கேரியரிலிருந்து கீழிறிங்குகிறாள் காலை ஊன்றியபடி. ஆஜானுபாகுவாக ஒருவன் அவளருகில்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *