பிறழும் நெறிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 27, 2021
பார்வையிட்டோர்: 3,170 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவர்கள் அவனைப் பார்த்த பார்வைகள் இன்னும் அவனது உடம்பில் ஈக்களாயும் எறும்புகளாயும் மொய்த்துக் கிடந்தன.

அப்படி என்னதான் விசித்திரமாய்ப் பார்க்கிறார்கள்? அவனது வகுப்பிலே ஸ்ரீதரனைப் பிரின்சிப்பலுக்குத் தெரியும். அவன் ஒவ்வொரு தவணையும் எப்படியோ முதலாம் பிள்ளையாக வந்து விடுகிறான். இவ்வளவு பாடங்களையும் வரி தவறாமல் நினைவில் வைத்துக் கொள்கிறான். தவணை முடிவில் நடக்கும் அசெம்பிளியில்’ மேடையில் ஏறிப் பிரின்சிப்பலிடம் ‘றிப்போர்ட்’ வாங்குகிறான். எல்லோரும் கை தட்டுவார்கள். இவன் மட்டும் தட்ட மாட்டான்.

“சரியான சப்பல் கட்டை அவனை என்ன பாராட்டுறது?”

சிலவேளைகளில் இவனும் அவனும் ஒன்றாக நடந்து செல்லும் போது, பிரின்சிப்பல்’ ஸ்ரீதரனைப் பார்த்துச் சிரிக்கிறார். அவனது முதுகிலே தட்டி,

“இப்ப என்ன பாடம் தம்பி?” என்று கேட்கிறார். மற்றவன் கோபி ! அவனையும் பிரின்சிப்பலுக்கு நல்ல நினைவு. அவன் அதிகமாக விளையாட்டுப் போட்டிகளில், அவர்களது பிரிவில் ‘சாம்பியனாக’ வந்து விடுகிறானே!

வெளியே துருத்திக் கொண்டிருக்கும் பற்களுடன், அவன் எவ்வளவு வேகமாக ஓடுகிறான்?

சிறுத்தை ஓட்டம்!

இவன் பல தடவை கோபியுடன் ஓடிப் பார்த்திருக்கிறான். அவனைப் பிடிக்க முடிவதென்ன? கிட்டவே போக முடியவில்லை!

சும்மா பாய்ந்து பாய்ந்து ஓடுவான்!

சென்ற வருடம் உயரம் பாய்தலில் ஒரு புதிய சாதனையை நிலைநாட்டினானாம். அடுத்த நாள்… அதற்கடுத்த நாள்… எல்லாரும் வகுப்பில் அவனது புகழையே பாடிக் கொண்டிருந்தார்கள்.

“கோபி என்ன மாதிரிப் பாய்ந்தான் …. என்ன மச்சான்?”

“டேய்.. அவன் கடைசியா இரண்டு தரம் தட்டிப் போட்டான். பிறகு, குளுக்கோசையும் போட்டிட்டுப் போய் ….. அப்பிடியே சர்க்கஸ்காரன் மாதிரியெல்லோ பாய்ந்தான் ….?”

“நீ ஐஞ்சு மணி வரையும் நிண்டு பாத்தனியோ?”

“ஓமடா….. ‘றெக்கோட்’ எண்ட உடனை நாங்கள் உவனைத் தூக்கிக் கொண்டு திரிஞ்சு ….. பெரிய முசுப்பாத்தியடா …”

“டேய் …. இவன் ‘றெக்கோட்’ உடைச்சிட்டான் எண்ட உடனை பாரதி இல்லத்தாக்களுக்குச் சரியான எரிச்சல் வந்திட்டு தடா….”

இவனுக்கு ஏற்பட்ட உணர்வுகளுக்கு உதாரணிக்க ஒன்றுமில்லை .

“பெரிய கெட்டித்தனம் மதில் பாயிற மாதிரிப் பாயிறது ….” இவனை ஒருவருக்கும் தெரியவில்லை . ‘பிரின்சிப்பல்’ ஒருநாளும் இவனோடு கதைக்கவில்லை . இவனது கண்களில் தீவிரம் எரிந்தது!

கண்ணன் கூடப் படிப்பிலே ‘மொக்குத் தான். சரியான தூங்காளி! வகுப்பில் என்ன பாடம் நடந்தாலும் நித்திரையாகிப் போவான். ஆனால் அவனையும் எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. அன்றொரு நாள், இவனும் கண்ணனும் விளையாடிக் கொண்டிருக்கும் போது, ‘வைஸ் பிரின்சிப்பல்’ கண்ணனைக் கூப்பிட்டு,

“கண்ணன் இஞ்சை வாரும், கன்ரீனுக்குப் போய் ஒரு ரீ வாங்கிக் கொண்டு வாறீரா?” என்று கேட்டு இரண்டு ரூபாத்தாளைக் கொடுக்கிறார்.

இவனை அப்படி ஒரு வேலை செய்விப்பதற்குக் கூட ஒரு ஆசிரியர்களும் கூப்பிடுகிறார்களில்லை.

ஏன்…..?

கண்ணன் அதிகமாகக் காலையில் தேவாரம் படிப்பான். வெள்ளிக்கிழமைகளில் சிவபுராணம் சொல்லிக் கொடுப்பான். ஆனால் இவனுக்குப் பாடவராது.

“வாய் திறந்தால் கழுதை கத்தினது போல் இருக்கு….” என்று சமயபாட ஆசிரியர் ஒரு நாள் கூற , எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.

“சிரிச்சால் எல்லாருக்கும் என்ன பெரிய குயில் போலை குரலே?”

நுணுக்கங்கள் நிறைந்த மனம், நுணுக்கங்கள் நிறைந்த துன்பத்தை இவனுக்கு நீண்ட காலமாகவே கொடுத்துக் கொண்டிருந்தது.

சரி பரவாயில்லை . இப்போது மீனா ‘பிரின்சிப்பலிடம்’ போயிருக்கிறாள். இன்னும் சிறிது நேரத்தில் ‘பிரின்சிப்பல்’ இவனைக் கூப்பிடுவார்.

இனிமேல் அவனை எல்லோருக்கும் நிச்சயமாயும் நிஜமாயும் தெரிந்துவிடும். பிரின்சிப்பலுக்கும், ஆசிரியர்கள் எல்லாருக்கும், ஏனைய வகுப்பு மாணவர்களுக்குத் தான்.

ஆனால் …..!

இவர்கள் எல்லாம் என்ன அப்படி விசித்திரமாய்ப் பார்க்கிறார்கள்?

அவனது அடி வயிற்றில் இருந்து, வேகமாக ஏதோ ஒன்று உச்சியை நோக்கி எழுந்து செல்கிறது.

மீனா ஏன் கிளாஸ் ரீச்சரிட்டைப் போய்ச் சொல்லேல்லை? அவ புது ரீச்சர் ஒருத்தருக்கும் அடிக்க மாட்டா. எல்லாரோடையும் அன்பாத்தான் கதைப்பா. அவட்டைச் சொன்னா… எனக்கு அடி விழறது ஐமிச்சம் எண்டுதான் பிரின்சிப்பலிட்டைப் போய் இருக்கிறாள்… போகட்டும் ! பிரின்சிப்பலின்ரை அடிக்கு நான் என்ன பயமே?

அவன் தனக்குள் கறுவிக் கொண்டான் ! ஒருத்தியால் இவ்வளவுதான் இளைக்க முடியும் இவ்வளவுதான் கறக்க முடியும் என்பது போல் இருப்பாள் மீனா. வீட்டிலே வறுமை, ஆனாலும் படிப்பிலே…. சூரி…!

அவன் எதிர்பார்த்த படியே, பியோன்’ வகுப்புக்கு வந்து அவனை அழைத்தான்.

“வசந்தனைப் பிரின்சிப்பல்’ வரட்டாம்!”

“அப்பாடி! இண்டைக்காவது பிரின்சிப்பல் என்ரை பேரைச் சொல்லிப் போட்டார்!”

அவனது மனதின் மூலை யொன்றில், லேசான பயம் தோன்றியிருந்தாலும் பெருமளவு திருப்தியே உள்ளூர வியாபித்திருந்தது.

‘இனி யெண்டாலும்…. வசந்தன் எண்டால் ஆரெண்டு பிரின்சிப்பலுக்குத் தெரியும்…’

அவன் தயங்காமல் … ஒரு மகாவீரன் போலப் பியோனாக்குப் பின்னால் நடந்தான். என்ன பயம்?

வாழ்க்கையின் துயரங்கள் அவனது முகத்திற்கும் வந்திருந்ததைப் பிரின்சிப்பல்’ கவனித்ததாகத் தெரியவில்லை.

இந்த விசாரணையை மிக விரைவாக நடத்தி முடித்துத் தண்டனையையும் வழங்கி விட்டால், தான் அடுத்த அலுவலைப் பார்க்கலாம் என்பதிலேயே அதிபர் குறியாக இருந்தார்.

“வசந்தன் … கெதியா வாடா உன்னை ….” குரலில் கசப்பும், அவசரமும், அலட்சியமும் ததும்பி நின்றன. உதட்டோரம் ஏளனம் சுழித்து நின்றது.

அவன் போய் அவருக்கு முன்னால் நின்றான். மறுபக்கத்தில் மீனா நிற்பதை, இரத்தம் ஒழுக நிற்பதை அவன் கடைக்கண்ணால் பார்த்து விட்டுப் பின்னர் கீழே நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பிடிவாதத்தை உணர்த்தும் அவனது மெல்லிய உதடுகளைக் கவனிக்காமலே அவர் கேட்டார்.

“யார் இந்தப் பிள்ளைக்குப் பிளேட்டாலை வெட்டினது?”

“எனக்குத் தெரியாது சேர். நான் காணேல்லை ,” ஏன் உடனே உண்மை சொல்ல வேண்டும்? இவர் கொஞ்ச நேரம் செலவழித்து விசாரிக்கட்டுமே!

“என்ன…? உனக்குத் தெரியாதோ? நீ தான் வெட்டினது எண்டு அந்தப் பிள்ளை சொல்லுது…”

“அவ சொல்லுறது கட்டாயம் உண்மை எண்டால் … பிறகு ஏன் என்னைக் கேட்டனீங்கள்?”

அவர் திரும்பி மீனாவைப் பார்த்தார்.

“இவன் தான் சேர்! பரிமளா, கலா, பானு …. எல்லாரும் கண்டவை. நீங்கள் வேணு மெண்டால் அவையையும் கூப்பிட்டுக் கேளுங்கோ சேர்…”

பரிமளா வந்தாள். கோணலான உதடுகளுடன்! “இவன் எப்பவும் பின்னாலை இருந்து மீனாவோடை சேட்டை விடுறவன் சேர். பின்னலைப் பிடிச்சு இழுப்பான் . பட்டம் சொல்லுவான். யூனி ஃபோமுக்கு மை தெளிப்பான். இண்டைக்கும் முதல் யூனிஃபோமிலை வால் கட்டித் தொங்க விட்டவன் …. இவள் திரும்பி என்ன…? நீ விட விட ஆகலும் சேட்டை விடுறாய் , தெரியுமோ என்னைப் பற்றி…’ என்று வெருட்டினாள். இவன் உடனை தன்ரை கொம்பாஸ்க்குள்ளை கிடந்த பிளேட்டை எடுத்து அவளின்ரை கையைச் ‘சதக்’ எண்டு வெட்டிப் போட்டான்.”

பானு வந்து சொன்னாள்,

“நானும் கண்டனான் சேர். நான்தான் பிறகு என்ரை லேஞ்சியாலை இவளின்ரை கையைக் கட்டி விட்டனான் …..”

அதிபர் இதன் பின் தாமதிக்கவில்லை !

“பத்தாம் வகுப்புக்கு வந்திட்டாய்! பொம்பிளைப் பிள்ளைய ளோடை என்ன சேட்டையடா உனக்கு? ம். இதை விட்டா நீ நாளைக்கு வாளும் கொணந்து வெட்டுவாய் …. என்ன ..?”

தனது ஸ்பெஷல் பிரம்பால் காலிலும், கையிலும், முதுகிலும் மாறி…. மாறி…..

இவன் நெளிந்தான். வளைந்தான். ஆனால் அழவில்லை வாயிலிருந்து ஒரு சத்தமுமே வரவில்லை. ஒவ்வொரு முறையும் அவர் பிரம்பை ஓங்கும் போது, அதைத் தடுக்கும் முயற்சியாய்க் கையால் மறித்தவன் நாலு அடிகள் விழுந்தவுடன் எட்டித் தொங்கிப் பிரம்பைப் பறித்துக் கொண்டான்.

அதிபர் விக்கித்துத் தான் போனார் ! இப்படி ஒரு மாணவனை அவர் தமது இருபத்தைந்து வருட ஆசிரிய வாழ்வில் சந்தித்தாரில்லை.

“நான் இவனைக் கவனிக்கிறான். நீர் ஒரு பிரிவ்வேக்ற்’ ஓடை போய்க் காயத்திற்கு டிஸ்பென்சரியிலை மருந்து கட்டிக் கொண்டு வாரும்…..” என்று கூறி மீனாவையும் அவளது சிநேகிதிகளையும் வெளியே அனுப்பிய அதிபர் வசந்தனின் வகுப்பாசிரியை திருமதி கேதீஸ்வரனைக் கூப்பிட்டனுப்பினார்.

அவர்கள் இருவரும் ஆங்கிலத்தில் உரையாடியதில் அவனுக்கு அதிகமாய் ஒன்றும் புரியவில்லை.

‘ஜுவினைல் டெலிங்குவன்ட்…’ என்றொரு சொல் அடிக்கடி கேட்டது.

அவன் பறித்துக் கொண்ட பிரம்புடன் வெளியேறித் தைரியமாய் நடந்து வகுப்பறைக்கு வந்தான்.

“லெஃப்ற்… றைற் …. லெஃப்ற்… ஜூவினைல் டெலிங்குவன்ற் ….. லெஃபற்… லெஃபற்…”

அதிபரின் பிரம்புடன் கம்பீரமாய் நடந்து அவன் வகுப்பறைக்குள் வருவதைப் பார்த்து …… அவனை ஒரு ‘ஹீரோ…’ போல நினைத்து ….. அந்தப் பார்வையின் அர்த்தங்கள் பற்றி அவனுக்குத் துப்பரவாக அக்கறையில்லை.

‘ஸ்ரீதரனைப் பாக்கிறியள் … கோபியைப் பற்றிக் கதைக்கிறியள் கண்ணனை ரசிக்கிறியள்… இண்டைக்கு ஒருக்கா என்னையும் எல்லாரும் …..’

ஆங்கில ஆசிரியர் வகுப்பறைக்கு வந்தார்.

“சேர்.. ஜூவினைல் டெலிங்குவன்ற் எண்டால் என்ன கருத்து?” அவன் திடீரென எழுந்து நின்று கேட்டபோது, அவருக்குத் தலையும் புரியவில்லை . காலும் புரியவில்லை .

“ஏன் கேக்கிறீர்? ‘ஜூவினைல் டெலிங்குவன்ற்’ எண்டால் பால்யக் குற்றவாளி எண்டு கருத்து ….”

“ஓ….. சும்மா கேட்டனான்….”

அச்சுவேலிக்குப் போகும் வழியில் வருகிற பால்யக் குற்றவாளிகள் பாடசாலை அவன் நினைவுக்கு வந்தது. அங்கே தான் இவனையும் அனுப்பப் போகிறார்களோ?

அனுப்பட்டும்.

மாலையில் கல்லுாரி விட்டதும், பிரம்பை நாலு துண்டாக முறித்து எறிந்து விட்டு வீடு நோக்கி நடந்தான். வழியில் வாசிகசாலையில் நின்று ‘பந்தடி’ பார்க்கலாம். ஆனால் அப்பா மணிக்கூட்டை முன்னால் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார். மூன்று நாற்பதுக்கு அவன் வீடு போய்ச் சேராவிடில், “எங்கை நிண்டிட்டு வாறாயடா?” என்ற அவரது குறுக்கு விசாரணையில் இருந்து தப்பவே முடியாது.

அவனைப் பொறுத்த வரை வீடு ஒரு சிறைக் கூடம். அங்கிருந்து எங்கேயும் போக முடியாது. அவன் அங்கு வாழும் ஒரு மரக் கட்டை ! |

அந்த நாலு சுவர்களுக்குள்ளிருந்து அவன் எப்போதும் படிக்க வேண்டும். எதைத்தான் படித்துத் தொலைப்பது? மரக்கட்டை எப்படிப் படிக்கும்?

ஒரு நாள் ராணி முத்து வாசித்ததை அப்பா கண்டு விட்டார். மரக்கட்டைக்கும் கூட வலிக்கக் கூடிய தண்டனை கிடைத்தது. அவனது உலர்ந்த மனம் அன்றிலிருந்து மேலும் உலர்ந்து போனது. அதன்பின் அவனது அறைக்கு ஒவ்வொரு நாளும் ‘செக்கிங்’ நடக்கும். பாடப் புத்தகம் தவிர, வேறெதுவும் வைத்திருந்தால் ….. கழுகுக் கண்கள் …… ! அவர் எப்படியும் கண்டு பிடித்து விடுவார்.

“அவனுக்கு வயது வந்திட்டுது. இனிக் கண்டிப்பாய் இருக்க வேணும் அவனோட……

“இந்த வயதிலை படிக்காட்டிப் பிறகு கஷ்டப்படுவான் நல்லா …..”

“இந்த வயதிலை கண்ட பெடியளோடை ஊர் சுத்த விடப்பிடாது….”

“சினிமாப் பைத்தியம் இப்ப தொடங்கினா… பிறகு ஒண்டும் மிச்சமில்லை …”

“இந்த நாளையிலை, கதைப்புத்தகம் வாசிச்சு ருசி கண்டானெண்டால் பிறகு நிப்பாட்ட ஏலாது ….”

“சந்திக்குச் சந்தி நிண்டு கதைக்கிற பழக்கம் இப்பத்தைப் பெடியளுக்கு … அதுக்கு இவனை விடப்பிடாது …”

இந்த வசனங்களை அடிக்கடி அப்பா சொல்லும் போது கேட்க இவனுக்கு ‘விசர்’ வரும். சம்மட்டியால் யாரோ ஓங்கி அடித்தது போன்ற வேதனை நெஞ்சைக் கவ்வும். ஆனாலும் ஒன்றும் எதிர்த்துக் கதைக்க முடியாது. ஒரு நாள் ஒரு வார்த்தை திரும்பிச் சொல்லி விட்டதற்கு அப்பா பூட்ஸ்’ காலால் போட்டு உதை உதையென்று உதைத்து விட்டது சீவியத்தில் அவனால் மறக்க முடியாது.

அப்பா பொலிசா’க இருந்து றிரையர்’ பண்ணியவர் என்பதற்கு இந்த ‘உதை ‘ தவிர வேறு சாட்சி தேவையில்லை.

அம்மா ஒரு சடம்! வாழ்க்கையைப் பெரும் சுமையாகச் சுமப்பது போன்ற மௌனம். அப்பா எது செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கு மென்ற எண்ணமுந்தான். அம்மா கதைப்பது மிக அருமை! ஏன் அவனுந்தான் …!

வீட்டிற்குப் போய்ச் சேர்ந்த நீண்ட நேரமாய் அவனுக்கு மனதில் ஓர் உறுத்தல் கலந்த மகிழ்வு இருந்து கொண்டேயிருந்தது.

அவனது பிரத்தியேக உலகங்கள் யாவும் நொருங்கிவிட வழக்கம் போலவே …. அறையில் அடைபட்டுக் கிடந்த போது ……

வெளியே பேச்சுக் குரல்!

யார் இது? கேதீஸ்வரன் ரீச்சர்!

அம்மாடி…. இவ ஏன் இஞ்சை வந்தவ இப்ப? வேறை என்னத்துக்கு …. நான் பிளேட்டாலை வெட்டினதை அப்பாவுக்குச் சொல்ல … பிரம்பு பறிச்சதை ….’

அவன் இன்றுடன் தொலைந்தான் !

உறுத்தல் கலந்த மகிழ்வு இப்போது வேதனை கலந்த நடுக்கமாகி விட்டது. தரை பிளந்துவிடத் தலைகுப்புற விழுவது போன்ற உணர்வு! வீட்டை விட்டு ஓடி விடலாமா? அவன் விரித்திருந்த பக்கத்தை மூடிவிட்டு மெதுவாக எழுந்தான் . பூனையைப் போலப் பதுங்கி வெளியே வருவதற்கும், ரீச்சர் கூப்பிடுவதற்கும் சரியாக இருந்தது.

“வசந்தன்….! வசந்தன்! எங்கை தான் உம்மடை வீட்டை வந்திருக்கிறன்… உம்மைக் காணேல்லை…”

‘என்ரை குழப்படியை அப்பாட்டைச் சொல்ல வந்தவ ஏன் இவ்வளவு அன்பா என்னைக் கூப்பிட வேணும்? அப்பாட்டைச் சொல்லிப் போட்டுப் போறது தானே!’

விலகிப் போக முடியாமல் அவன் முன்னால் வந்து நின்றான்.

“எப்பிடி… வசந்தன் பள்ளிக் கூடத்திலை குழப்படியோ? ஒழுங்காய்ப் படிக்கிறானோ?”

அப்பா கேட்க, இவனுக்குக் குருதி யெல்லாம் உறைந்து விட்ட உணர்வு!

“ஓ…. அவன் படிக்கிறான். இப்ப முந்தியை விடப் படிப்பிலை கவனம். வீட்டிலை என்ன செய்யிறானெண்டு அறியத்தான் வந்தனான்.”

இதென்ன? அவன் காண்பது கனவா? அன்றி நனவா? “வீட்டிலை அவன் ஒரு குழப்படியும் செய்யேலாது …. நான் வலு ‘ஸ்ரிக்ற்’ அவன் ‘ஸ்கூலா’லை வந்தால் உந்த அறையை விட்டு எங்கையும் போக ஏலாது. படிக்கத்தான் வேணும்….”

“ஓ.. அப்பிடித்தான் நானும் எதிர்பார்த்தான். நான் எதிர்பார்த்தது சரி. நீங்கள் கண்டிப்பாய் இருந்தாலும் அவன்ரை அம்மா அன்பா இருப்பாவெண்டு நினைக்கிறன்…”

“சீ… சீ… அன்பெண்ட கதையே இல்லை. சும்மா செல்லம் கொட்டிப் பிள்ளையளைப் பழுதாக்கப்பிடாது பாருங்கோ. நான் அவட்டையும் சொல்லியிருக்கிறான். தேவையில்லாமல் அவனோடை கதைக்கப்பிடாதெண்டு. அவ என்ரை சொல்லை மீற மாட்டா …. அப்பா பெரிதாகச் சிரித்துத் தன் வெற்றியை நிலைநாட்டிக் கொள்கிறார்.

“நான் உங்களோடை பிறகு ஒரு நாளைக்கு வந்து ஆறுதலாக் கதைக்கிறான்….”

ரீச்சர் போய்விட்டா.

போகும்போது இவனைப் பார்த்து ஒரு சிரிப்பு!

வாழ்வுக்கும் இவனுக்கும் என்ன பகைமை என்று அறியத் தான் வந்தாவோ ?

இரவும் இதே சிந்தனை தான்! கனவிலும்…… இவன் மீனாவைப் பிடித்து அவள் முகமெல்லாம் கீறிச் சட்டையைக் கிழித்துப் போடுகிறான்.

கனவு கலைந்த பின் ஓர் உணர்வு ! அவளை நாளைக்கு அப்படித்தான் செய்ய வேண்டும் ! அவள் ஏன் பிரின்சிப்பலிடம் போய்ச் சொன்னவள்? மூச்சை அடைக்கும் ஆத்திரம் இவனுக்கு !

வக்கிர உணர்வுடனேயே அடுத்த நாள், பாடசாலைக்குச் சென்றான் .

போய்ச் சேர முதலே ரீச்சர்’ அவனைக் கூப்பிட்டா. ஏன் …? ஒரு வேளை இனித்தான் அடி… கிடி…. ஏச்சு… பேச்சு…..?

“தம்பி வசந்தன்….. டிப்போவிலை போய் ஒரு பேனை வாங்கியாரும். இந்தாரும் காசு …”

இதுவரை ஒருவரும் இவனைத் ‘தம்பி’ என்று கூப்பிட்டதில்லை. ஒருவரும் அவனை நம்பிக் காசு கொடுத்தது மில்லை .

அவன் ‘தறதற்’ வென்று முழுசிக் கொண்டே அந்த வேலையைச் செய்து முடித்தான்.

முதல் பீரியேட் ‘ ரீச்சர் தான்!

“என்ன வசந்தன் விளங்கிச்சுதா….?”

“வசந்தன் கொப்பியைக் கொண்டாரும் பாப்பம்….”

“வசந்தன் இண்டைக்கு வடிவான ‘சேர்ட்’ போட்டிருக்கிறார் ?”

“வசந்தன் இண்டைக்கு எல்லாக் கணக்கும் சரியாச் செய்திட்டார். கொட்டிக் காரன் …”

அவனால் நம்பத்தான் முடியவில்லை! ஒரு வேளை ரீச்சர் நடிக்கிறாவோ? ரீச்சர் மனம் நிறையத்தான் பேசுகிறாரென்பதை அந்தக் கண்கள் சிரித்து உணர்த்துகின்றனவே?

மீனாவுக்குச் செய்ய நினைத்ததைச் செய்யவிடாமல் ஏதோ ஒன்று அவனைத் தடுத்து விட்டது.

அவனை அவ்வாறு சாந்த மடையச் செய்த…

– காங்கேயன் கல்விமலர் ’85

– வாழ்வு வலைப்பந்தாட்டம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஜூலை 1997, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *