பியூன் துரைசாமி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 7, 2022
பார்வையிட்டோர்: 3,987 
 

டமார் என்று ஒரு சத்தம். அந்த அலுவலகத்தில் இருந்த அத்தனை பேருடைய கண்களும் ஒரே இடத்தில் வெறித்து நின்றன. மேசையிலிருந்து தவறி விழுந்த கண்ணாடிக் குப்பி, ஆத்திரக்காரனின் அறிவைப்போல தரையில் சிதறிக் கிடந்தது. அருகே உள்ளம் பதற, உடலும் பதற ஒருகணம் தவித்துப்போய் நின்ற துரைசாமி அவசரமாகச் சிதறலைப் பொறுக்கத் துவங்கினார்.

பல திக்கிலுமிருந்து பலவகையான வசையொலிகள் வெடித்தன. பெரிய கிராணி ஆசோங்கின் குரல் உச்சஸ்தாயியில் ஒலித்தது. டைப்பிஸ்ட் லெங் லெங் கூட ஏதேதோ சொன்னான். அது மட்டுமா? வேலைக்குச் சேர்ந்து இன்னும் ஒரு மாதம்கூடச் சரியாக ஆகவில்லை, அந்த ஒஸ்மான். அவன்கூட என்னமாய்ச் சூடேற்றிப் பேசினான்! இத்தனைக்கும் சிகரட் சாம்பல் தட்டும் அந்தக் கண்ணாடிக் குப்பியை மேசை ஓரத்தில் வைத்ததே அந்த ஒஸ்மான்தான். அதை யாராவது கேட்கிறார்களா?

எதையுமே காதில் வாங்கிக்கொள்ளாமல் கருமமே கண்ணாக அதைச் சுத்தம் பண்ணுவதில் மும்முரம் காட்டிக்கொண்டிருந்தார் துரைசாமி. மனத்துக்குள் அவர் தன்னைத்தானே சபித்துக் கொண்டுமிருந்தார்.

இப்போதெல்லாம் அவருக்கு முன்போல பார்வை சரியாகத் தெரிவதில்லை. அருகில் இருப்பதுகூட சமயத்தில் மங்கித் தெரிகிறது. அதனால்தான் பெரிய கண்ணாடி விரிக்கப்பட்டிருந்த மேசை மேல் இருந்தும் கண்ணில் படாமல் ஈரத் துணியால் துரைசாமி மேசையைத் துடைக்கும்போது அந்தக் குப்பி விழுந்து நொறுங்கியது.

அது ஒரு தனியார் அலுவலகம். அதன் முதலாளி பெரிய கோடீஸ்வரர். சுற்றிலும் பல மாநிலங்களில் பெரிய பெரிய எஸ்டேட்டுகளையும் வெற்றி நிலங்களையும் வாங்கிப் போட்டு அதன் நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்வதற்காகவே அந்த அலுவலகத்தை அமைத்திருந்தார் முதலாளி.

துரைசாமி அந்த அலுவலகத்துக்கு வேலைக்கு வந்து சேர்ந்த போது இப்போதிருக்கும் முதலாளியின் தாத்தா முதலாளியாக இருந்தார். அந்த முதலாளி அப்போது கோடீஸ்வரர் இல்லை. ஆனால், அவருடைய முயற்சிதான் இப்போது உள்ளவரைக் கோடீஸ்வரனாக்கி இருக்கிறது.

தாத்தா முதலாளியாக இருந்தபோதும் துரைசாமி ஆபீஸ் தம்பிதான். இப்போதும் ஆபீஸ் தம்பிதான். துரைசாமியிடமும் முயற்சி இருக்கத்தான் செய்தது. இருந்தும் என்ன செய்ய?

பழைய முதலாளிக்குத் துரைசாமி மேல் ஒரு தனிப் பிரியம் உண்டு. பெரிய பெரிய விருந்துகளுக்கெல்லாம் கூட அவரை அழைத்துப் போயிருக்கிறார். இந்தக் காலத்தில் அது சாதாரணமாகத் தெரியலாம். காரணம் தாங்கள் வளர்க்கும் நாயைக் கூட பலரும் பல முக்கிய இடங்களுக்கெல்லாம் அழைத்துப் போகிறார்கள் இல்லையா?

ஆனால், அந்தக் காலத்தில் அது பெரிய பாக்கியம். அதை அனுபவித்தவர் துரைசாமி. இன்னும் அந்த நினைவுகளை அனுபவித்துக்கொண்டிருப்பவரும் அவரேதான்.

இப்போதுள்ள முதலாளி ரொம்ப ரொம்பச் சின்ன வயது! ஆனால், இந்தச் சின்ன வயதில்கூட அவருக்கு மூன்று மனைவிகள் இருக்கிறார்கள். இந்த ஊரில் ஒன்று! பக்கத்து ஊரில் மற்றொன்று! அடுத்த நாட்டில் இன்னொன்று! ஒரு மனைவியை வைத்துக்கொண்டு அவளுடைய அந்தரங்க அபிலாஷைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் இருக்கும் தன்னைப் பற்றிச் சமயத்தில் நினைத்துக்கொள்வார் துரைசாமி! அப்போதெல்லாம் அவருக்குச் சிரிப்புதான் வரும்.

உடைந்த துகள்களையெல்லாம் கூட்டிப்பெருக்கிச் சுத்தம் செய்துவிட்டு எழுந்தார் துரைசாமி. ஆ காவ்விடமிருந்து அழைப்பு வந்தது. ஆ காவ் தான் கணக்கப்பிள்ளை!

கையைக் கட்டிக்கொண்டு அவர் முன் நின்றார் துரைசாமி. ஐந்து வெள்ளி நோட்டு ஒன்றை எடுத்து நீட்டிய ஆ காவ் ஓடியன் தியேட்டருக்குச் சென்று இரண்டு டிக்கட் வாங்கி வரச் சொன்னார்.

எந்தக் காட்சிக்கு என்பதைக் கேட்டுக்கொண்டு உடனே விரைந்தார் துரைசாமி. இந்த வயதிலும் அவரால் என்னமாய்த் துவிச்சக்கர வண்டி ஓட்ட முடிகிறதோ?

அரை மணி நேரத்தில் இரண்டு டிக்கட்டும் சில்லரையுமாக வந்து நின்ற துரைசாமிக்கு நெற்றிப்பொட்டிலும் முன்னங்கைகளிலும் நரம்புகள் புடைத்து நின்றன. ஆனால், வியர்வை முத்துக்களோ எல்லா இடத்திலுமே புடைத்து நின்றதோடு, நிற்க முடியாத சில முத்துக்கள் வழியவும் துவங்கின.

டிக்கட்டைக் கொடுத்துவிட்டு முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்தபோதே அடுத்தடுத்துப் பல அழைப்புக்கள்! அத்தனைக்கும் அவர் பதில் சொல்லி முடித்தார்; அந்த அலுவலகத்தில் அத்தனை பேருக்குமே அவர்தான் எடுபிடி. எந்தச் சமயத்திலும் எந்த வேலையையும் தட்டாமல் செய்ய அவர் நன்கு பழகியிருந்தார். அதனால்தான் ஐம்பத்தைந்து வயதுக்கு மேலும் அவரால் அங்கு வேலை செய்ய முடிந்தது.

“முதலாளி வரப்போகிறார்!”

திடீரென்று மானேஜர் இந்தப் பரபரப்பான செய்தியைக் கூறிவிட்டு அவர் இருக்கையில் அமர்ந்துவிட்டார்.

முதலாளி வரப்போவது ஒரு பரபரப்பான செய்தியா? உண்மையில் அந்த அலுவலகத்தில் அதைவிடப் பரபரப்பான செய்தி வேறு இருக்க முடியாது. காரணம் முதலாளி அங்கு எப்போதும் வருவதே இல்லை. மாதத்திற்கு ஒரு முறை, அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறைதான் அங்கு வருவார். ஆனால், அவருக்கு ஒரு நல்ல பழக்கம். வருவதற்கு முன் மானேஜருக்கு டெலிபோன் செய்து தெரிவித்துவிட்டுத்தான் வருவார்.

அவருக்கென்று ஏர் – கண்டிசன் செய்யப்பட்ட ஒரு தனி அறை எப்போதும் பூட்டியே கிடக்கும். அவர் வரும் நாளில் மட்டும் திறந்துவிடப்பட்டு, மிகவும் முன் எச்சரிக்கையாகத் தூய்மையுடன் இருக்கும். முதலாளி அந்த அறையில் இருந்தபடியே அவருக்குத் தேவையான விவரங்களைக் கொண்டுவரச் சொல்லி, விசாரிக்க வேண்டியவர்களை விசாரித்து விளக்கம் பெற்றுக்கொள்வார்.

நிர்வாகத்தில் ஏதாவது கோளாறு என்று தெரிந்தால், மானேஜர் முதல் ஆபீஸ் தம்பி வரை யாராக இருந்தாலும் சரி, மிகக் கடுமையாகவும் மிக மிகக் கேவலமாகவும் திட்டித் தீர்த்து விடும் கெட்ட பழக்கமும் அவரிடம் இருந்தது. அந்த ஒன்றினால் தான் அவருடைய வருகை அங்கே பரபரப்பான ஒன்றாக அனைவராலும் கருதப்படுகிறது.

அடுத்து சில மணி நேரங்கள் துரைசாமி பம்பரமாகச் சுழலவேண்டியிருந்தது. முதலாளியின் அறையைத் தூய்மைப்படுத்தி வைப்பதில் ஈடுபட்டார். இடையில் மானேஜரிடமிருந்து ஓர் அழைப்பு. அங்கே ஓடிப்போய் நின்றார்.

நிலம் சம்பந்தமாக மானேஜரைப் பார்க்க யாரோ பிரமுகர் வந்திருந்தார். அவருக்கு குளிர்பானமும் சிகரெட்டும் வாங்கிவர உத்தரவு. அதையும் செய்து முடித்துவிட்டு, முதலாளி அறையில் விட்ட இடத்திலிருந்து பணியைச் செய்து முடித்தார்.

பிற்பகல் மூன்று மணிக்குத்தான் அங்கே ஒருவகையாகப் பரபரப்பு அடங்கியது. காரணம் அதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்புதான் முதலாளி புறப்பட்டுப் போயிருந்தார். இனி ஒரு மாதத்திற்கோ இரண்டு மாதத்திற்கோ அங்குள்ளவர்களுக்குக் கவலை இல்லை. ஆனால், துரைசாமிக்கு?

மாலையில் அலுவலகத்தைப் பூட்டி சாவியை ஜாகாவிடம் கொடுத்துவிட்டு, துவிச்சக்கர வண்டியில் வீடு போய்ச் சேர்ந்த போது உள்ளதைச் சொல்வோன் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

துரைசாமி உள்ளே நுழைந்த சமயம் அங்கே உட்கார்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்த அவருடைய தம்பி கண்ணுசாமி அவரைக் கண்டதும் சடாரென எழுந்து நின்றார். கண்ணுசாமிக்கும் வயது நாற்பத்தைந்துக்கு மேல் இருக்கும். இவ்வளவு வயதாகியும்கூட அவர் அண்ணனுக்கு முன் சரிக்குச் சரியாக உட்கார்ந்ததே இல்லை. அவ்வளவுக்குச் சம்பிரதாயங்களிலும் மரியாதைகளிலும் ஊறிப்போன குடும்பம் அவர்களுடையது.

கண்ணுசாமி ஒரு வெள்ளைக்கார கம்பெனியில் “டிஸ்பேட்ச் கிளார்க்”காக வேலை செய்கிறார். கல்யாணமாகாமலேயே கடைசிவரை காலத்தை ஓட்டிவிட்ட கட்டை பிரமச்சாரி. அண்ணனிடம் எதுவும் கேட்கவேண்டும் என்றாலும் சரி, பேச வேண்டும் என்றாலும் சரி எல்லாம் அண்ணி மூலமாகத்தான் நடைபெறும். அவ்வளவுக்கு அண்ணன் மேல் பெரிய மதிப்பு வைத்திருப்பவர் கண்ணுசாமி.

துரைசாமி உள்ளே சென்று உடைகளைக் களைந்துவிட்டு இடுப்பில் துண்டோடு குளியலறைக்கு வந்தபோது, அவர் மனைவி மீனாட்சி அவருக்கு வெந்நீர் விளாவிக் கொண்டிருந்தாள். நீர் பதமாக ஆனவுடன் மொண்டு குளிப்பதற்கு ஒரு பாத்திரத்தை அதில் திணித்துவிட்டு அகன்றாள்.

பாதி குளித்துக்கொண்டிருந்தபோது குளியலறையிலிருந்து சத்தம் வந்தது.

“இங்கே வந்து முதுகைக் கொஞ்சம் தேய்த்துவிடு மீனாட்சி. பகல்ல கொஞ்சம் வேர்த்ததும் நடு முதுகு நமநமன்னு அரிக்குது”.

அடுத்தகணம்! அடுப்படியில் ஏதோ வேலையாக இருந்தவள், போட்டது போட்டபடி உடனே ஓடிவந்தாள். அவளுக்குத் தெரியும்; கொஞ்சம் சுணங்கினாலும் அவர் சத்தம் போட்டு அமர்க்களப்படுத்துவார் என்று. அந்தக் காலத்திலிருந்தே அவருடைய பழக்கம் அதுதான்.

அவருடைய மூத்த பையன் குணாவாகட்டும், அல்லது அவனுக்கு நேர் இளையவனான ராதாவாகட்டும்; யார்தான் அவருக்கு முன் சரிக்குச் சரியாகப் பேச முடியும். கடைக்குட்டிப்பயல் சோமு மட்டும் ஓரளவுக்குத் தைரியமாக அவரோடு பேசுவான். பிள்ளைகளில் அவன் கொஞ்சம் மாற்றமாக இருந்ததால்தானோ என்னவோ பதினேழாவது வயதிலேயே காலன் அவனைப் பறித்துக்கொண்டான்.

மூத்தவனுக்கு அரசாங்க இலாகாவில் வேலை. இளையவன் ராதா ரயில்வேக்கு எழுதிப் போட்டுப் போன வாரம்தான் இன்டர்வியூவுக்குப் போய்வந்தான். அநேகமாக அவனுக்கும் வேலை கிடைத்துவிடும். பிள்ளைகள் இருவரும் சேர்ந்து மீனாட்சியை நச்சரித்தார்கள்; அப்பா வேலைக்குப் போக வேண்டாம் என்று. ஆனால், துரைசாமி கேட்டால்தானே!

மீனாட்சி எப்போதாவது அதைப் பற்றி அவரிடம் பேசுவாள்.

“ஏண்டி போக்கத்த தனமா பொலம்புறே; மாதம் நூறு நூறு வெள்ளி சுளையா வருது. நான் வேலைக்குப் போகாம அதையும் நிறுத்திப்புட்டா யாருக்கு லாபம்?” என்று எடுத்தெறிந்து பேசிவிடுவார் துரைசாமி.

மேலும் பேசினால், “முட்டாள் சிறுக்கி, உன் வேலையைப் பாரு” என்றுகூடச் சொல்லிவிடுவார்.

குளித்துக்கொண்டிருந்தபோது முழங்காலுக்குக் கீழே ஏற்பட்ட லேசான வலி, நேரம் ஆக ஆக அதிகரிக்கத் துவங்கியது. முதலில் அது துவிச்சக்கர வண்டி மிதிப்பதால் ஏற்பட்ட வலி என்றுதான் அவருக்குத் தோன்றியது. ஆனால், நேரம் செல்லச் செல்ல அப்படித் தோன்றவில்லை.

மீனாட்சி தலைவலித் தைலத்தைப் போட்டுத் தேய்த்துவிட்டாள். அப்போது ஒரு மாதிரியாக இருந்தது; ஆனாலும் வலி தீரவில்லை.

மீண்டும் அதே தைலத்தைப் போட்டுத் தேய்த்துக் கொண்டிருந்தபோது, அதுவரை வெளியே நின்றிருந்த கண்ணுசாமி கையில் வேறொரு தைலத்தோடு உள்ளே நுழைந்தார்.

“இந்தத் தைலத்தைப் போட்டா வலி கொஞ்சம் நிக்குமே”.

“என்ன தைலம் அது?” துரைசாமி கண்களை மூடியவாறு கேட்டார்.

“மீசைக்காரன் தைலம்!”

“ஐயோ, அது எரிஞ்சு தொலையுமே!”

“எவ்வளவுக்கு எரியுதோ அவ்வளவுக்கு வலியை எடுத்திடும்!” அதுவரை அண்ணியை நோக்கித் தைலத்தை நீட்டிக் கொண்டிருந்த கண்ணுசாமி என்ன நினைத்தாரோ, சடாரென மண்டியிட்டு அமர்ந்து தைலப் பாட்டிலைத் திறந்தார்.

“நீ ஏண்டா தேய்க்கிறே; அண்ணிக்கிட்டே குடு. அவளே தேய்ச்சு விடட்டும்” என்று துரைசாமி சொல்லிக்கொண்டிருந்த போதே கண்ணுசாமியின் கை தைலத்தில் நனைத்து, துரைசாமியின் காலைப் பதமாகத் தேய்க்கத் துவங்கிவிட்டது.

அதன் பிறகுதான் வலி ஒருவழியாக நின்றது துரைசாமிக்கு. படுக்கையில் படுத்த பின்னும்கூட இரவு வெகுநேரம் வரை கண்ணுசாமி தைலம் தேய்த்ததையே நினைத்துக்கொண்டிருந்தார். அந்த நினைவுகள் அவருக்கு ரொம்ப இதமாக இருந்தன.

இவ்வளவு தூரம் உபசாரம் செய்வதற்குத் தம்பியும் மனைவியும் பிள்ளைகளும் இருக்கும்போது, நாம் ஏன் வேலைக்குப் போய் அங்கே இருக்கும் அத்தனை பேருக்கும் அடிமையாக இருக்க வேண்டும்? நாளையிலிருந்து வேலைக்குப் போகாமல் இருந்து விடுவோமா?” இப்படி ஓர் ஊமைக் கேள்வி!

இப்படித்தான் தினமும் அவர் மனம் நினைத்தது. நாளைக்காவது தீர்மானமாக ஒரு முடிவைக் கண்டுவிட வேண்டும் என்று தீர்மானித்த வேகத்திலேயே அவர் தூங்கிப்போனார்.

பொழுதும் வழக்கமாகப் புலர்ந்தது. கிழக்கே உதித்த சூரியக் கதிர்கள் துரைசாமியின் கண்களை நோக்கி நேராகப் பாய்ந்தான். வழக்கமாக வரும் சூரியன்தான். ஆனால் இன்று ஏதோ ஒரு மாற்றத்தை அதில் உணர்ந்தவர்போல் திரும்பினார். அவரின் ஈருருளி வழக்கம்போல் வேலைத்தளம் நோக்கி வழக்கமான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

நன்றி: நவமலர்கள்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *