முதலில் விழித்தது அவள்தான். எழுந்து இன்னும் இருட்டு தடிப்பாயே இருப்பதைப் பார்த்துவிட்டு மீண்டும் அவன் பக்கத்தில் படுத்துக் கொண்டாள். சூழலில் கவிந்துவந்த குளிருக்கு அவனின் தோளின் கதகதப்புக்கூட மறுபடி பேருறக்கத்தில் ஆழ்த்தவில்லை அவளை.
கண்களை மூடி, உடம்பை உளைவெடுத்து முறுகிக்கொண்டு கிடக்க விழித்த அவன், ‘இன்னும் விடியவில்லையா ? ‘ என்று கேட்டான் கோணல்மாணல் குரலில்.
அவள் இல்லையென்றாள் .
அவன் அவளின் நெஞ்சுகள் உறுத்தும்படி இறுக அணைத்து காற்று ஊடறுக்கா நெருக்கமடைந்தான்.
ஆசைகளும் துடித்தெழாமல், தூக்கமும் வராமல் ஒரு புதிய சூழ்நிலைமையை அவர்கள் உணர்ந்துகொண்டிருக்க, வெளியில் கிளரும் மெல்லிய பேச்சரவங்கள், நடையொலிகள் செவியில் விழுந்தன. குழந்தையொன்று பசித்தழுதது. பசுக் கன்றுகள் ஆட்டுக் குட்டிகள் கட்டில் நின்று தாய் முலை தேடித் தவித்துக் கத்தின. கோழிகள் கூவாமலே கூரையில் குதித்திறங்கி கொக்…கொக்…கொக்கென்று புறுபுறுத்தபடி இரை தேடின.
அவன் குழம்பியவனாய் எழுந்து வெளியே வந்தான். கூட அவளும்.
அப்படி ஓர் அப்பிய இருட்டை தம் வாழ்நாளில் பார்த்திராத அவர்கள், பக்கத்தில் எதிரில் உள்ள வீடுகளில் மனிதர்கள் எழுந்துவிட்டிருந்தும் இன்னும் விடிவிளக்குகள் எரிந்துகொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியம் மேவிப்போனார்கள்.
நடு நிசியின் மேல் காலம் நகரவில்லையா ?
எல்லோருக்கும் அதிசயம்.
எவரும் நித்திரையில்லை. இருந்தும் கிழக்கில் ஒரு கீற்று வெளிச்சமுமில்லை.
ஒரு பயம் கவிந்துவந்து பின் ஆச்சரியமாய் மாறியது. நேரமாக ஆக குதூகலமாய் ஆயிற்று.
சூரியன் தோன்றாத விந்தையில் சிறுவர்களின் இயல்பான கலகலப்பு பன்மடங்கு பெருகிப்போனது.
வெளியே வந்து முற்றத்தில் நின்றவன் வானத்தைப் பார்த்தான். நட்சத்திரங்கள் செத்த மயான பூமியாகக்கிடந்தது அது .
அவன் வீதிக்கு வந்தான்.
மனிதர்கள் போயும் வந்தும், நின்று பேசியும் கொண்டிருந்தார்கள். காலம் மண்ணுள் புதைந்த கர்ண ரதம்போல் எதிலோ கொளுவிக்கொண்டு நகராதுவிட்டிருப்பதுபற்றி எங்கும் பேச்சாயிற்று.
காலத்தைச் சில்லெடுப்பது எப்படியென்று ஆங்காங்கே ஆலோசனைகள்.
அவன் அவளை அங்கே நிற்கச் சொல்லிவிட்டு வீதியில் நடந்து வெகு தூரம் போய்வந்தான்.
எங்கும் இருள். ஆனாலும் ஒரு விழாக் காலக் கொண்டாட்டம் எங்கும் பிரவாகித்துக்கொண்டிருப்பதையே கண்டான்.
அவன் அவளைக் கட்டிக்கொண்டு கடகடவெனச் சிரித்தான். ‘காலம் நின்றுவிட்டதடி. இனி பகலில்லை. எப்போதும் இரவுதான். எமக்கு ஜீவபரியந்தம் காமோத்சவம் ‘என்று கிசுகிசுத்தான்.
அவள் நாணினாள்.
அவன் ‘வா ‘வென்று உள்ளே நகர்ந்தான். அவள் , ‘பொறுங்கள் ‘ என்று ஒரு நெடிய சிந்தனையில் நின்றுவிட்டு பின் கேட்டாள்: ‘ஒளி , இருள் என்பது எதிரிணை எனப்படுகிறது. ஒளியின் இன்மை இருளா ? இருளென்பது ஒளிபோல் ஒன்றா ? இதற்குத் தனி இயக்கம் உண்டா ? இல்லையாயின் இவற்றை எதிரிணை எனல் எங்ஙனம் சரியாகும் ? ‘
‘உன் தத்துவ விசாரிப்பை எங்கேயாவது கொண்டுபோய்க் கொட்டு. இது தத்துவ விசாரத்துக்கான காலமில்லை. காலமே இல்லாத காலம். காலமில்லையேல் நாளையில்லை. வளர்ச்சியில்லை. மூப்பில்லை. மரணமில்லை. எதுவுமில்லை. ‘
அவனது களிப் பேச்சு அர்த்தமில்லாதது என்பதை அவள் புரிந்தாள்.அதை அவனுக்கு புரியவைக்க அவளுக்கு சில ஆதாரங்கள் தேவைப்பட்டன. காத்திருந்தாள்.
சிறிது நேரத்தில் அவன், ‘ பசிக்கிறது. ஏதாவது உணவு தயார்செய்யேன் ‘என்றான்.
‘பசியின்மையிலிருந்து பசியாவது காலத்தின் நகர்ச்சியல்லவா ? ‘
அவளது ஞானத்தில் அவன் அதிர்ச்சியடைந்தாலும் அதை விளங்கிக்கொண்டும் ஒப்புக்கொண்டும் சொன்னான்: ‘மெய்தான். பசி வருமெனில் மூப்பு வரும், மரணம் வரும். அதுபோல் ஜனனமும் . ‘
‘மட்டுமில்லை. எதனொன்றின் இயக்கமிருந்தாலும் காலம் நின்றிருக்கவில்லையென்று தெரியமுடியும். காலம் நின்றால் என்னால் கதைக்க முடியாது. நான் கதைத்தால் காலத்தால் நிற்கமுடியாது. எல்லாவற்றின் தப்பிதங்களுமே காலம் நின்றதன் அடியாளமாகும் ‘ என்றாள்.
பின் சென்று உணவு தயாரித்தாள்.
எங்கும் அதுபோலவே அவசியங்களின் நிறைவேற்றுகை. மக்கள் குளித்தார்கள், சாப்பிட்டார்கள், உரையாடினார்கள். அன்றைக்கு எப்போது தூங்கச் செல்லலாமென்று தெரியாதிருந்தது. ஆனால் ஒரு பொழுதில் மினுக்கிக்கொண்டு நட்சத்திரங்கள் சுடர்விடலாயின. அப்போது அந்தப் பிரச்னை தானாக நீங்கிப் போயிற்று.
மிக உச்சகட்ட இன்பங்கள் அன்று அடையப்பட்டன.
***
காலம் இரவாய் நகர்ச்சிபெற மிருக பராமரிப்பு, விவசாயம், உழைப்பு யாவும்
சிரமமான காரியங்களென்று மெல்லத் தெரியலாயிற்று. நிலவும் சில நாட்களில் வரலாம். அதனாலும் பெரிய மாற்றமெதுவும் நிகழ்ந்துவிடாதென்று தெரிந்தது.
அவர்களை ஒரு பயம் மெல்லக் கெளவலாயிற்று. சூரியனின்றி வாழ்ந்துவிட முடியாதென்று சர்வ நிச்சயம் அடைந்தவர்களால் ஆகக்கூடிச் செய்யக்கூடியதாய் இருந்தது சர்வ வல்லமையுள்ள ஒரு மூலப் பொருளை வேண்டுவதொன்றாகவே இருந்தது.
ஆயினும் இன்னும் இருள் விலகினபாடாயில்லை.
நாட்டில் வறுமை மெல்லத் தலைகாட்டத் துவங்கிற்று. பசியின் குரல்கள் எழுந்தன. இருள்களில் நோய்களும் பெருகின. மரணங்கள் மிக மோசமான தருணங்களில் எவராலும் கவனிக்கப்படாதிருந்தன . நாடு பிணக் காடாவதின் துவக்கச் சுவடுகளைத் தாங்கலாயிற்று.
அப்போது மரணங்கள் குளிரின் அவத்தையினாலும்.
வீதியில் மனித நடமாட்டங்கள் அருகி வந்தன.
நட்சத்திரங்கள் தோன்ற தூங்கி, அது மறைய எழும் ஒவ்வொரு வேளையிலும் விடியலை, சூரியனைத் தேடி அனைவர் கண்களும் கீழ்த் திசையை நோக்கிப் பரம்புவது இயல்பாயிற்று. இருளின் நீக்கமற்ற தரிசனம் அவர்களை மேலும் மேலுமான துக்கத்தில் ஆழ்த்தியது.
கலகலப்பு , ஆரவாரம் அனைத்தும் மறைந்தும் மறந்தும் போயின.
அப்படியான ஒருவேளையில் திடீரென மின்னல்போல் ஒரு வெளிச்சம்.
மின்னல் அடித்து மறையும். இதுவோ வளர்ந்துகொண்டு வந்தது.
எல்லோரும் முண்டியடித்துக்கொண்டு வீதிக்கு ஓடினார்கள்.
தொலைவில், முடுக்குகளுக்கு அப்பாலிருந்து, சூரியன் விடியலில் கதிர் விரிக்கிற மாதிரியில் ஒரு வெளிச்சப் பரவலைக் கண்டார்கள். அது மெல்ல மெல்ல ஒரு நிதானமான நடையின் வேகத்தில் முன்னேறி வந்துகொண்டிருந்தது.
அனைவரது ஆவலும் அதிகரித்தது.
வெளிச்சம் கிட்டவரக் கண்டவர்கள் அதிர்ந்து போனார்கள்.
யெளவனத்தின் முதற் படியில் நிற்கிற பிராயத்தினனான ஒரு பையன் கதிர் ஆடையொன்றைத் தோளில் போட்டபடி நடந்து வந்துகொண்டிருந்தான்.
முதிசுகளெல்லாம் பரவசப்பட்டனபோல் நின்றுகொண்டிருந்தன. அவர்கள் நிறைய நிறைய தேவதைக் கதைகள் அறிந்தவர்கள். பறக்கும் குதிரையில் விண்வழி வந்த ராஜன், சந்திரிகாபுர இளவரசியைக் கண்டு காதல்கொண்டு அவள் பெற்றோருக்குத் தெரியாமல் அவளை ஒரு பூவாக்கி எடுத்துக்கொண்டு பறந்துபோன கதையெல்லாம் தெரிந்தவர்கள். அதுபோன்ற ஒன்றின் நிஜம் அவர்களது பேச்சையே கட்டிப்போட்டுவிட்டிருந்தது.
அவன் அவர்களைக் கடந்துசென்ற பின்தான் பிரமை கலைந்தார்கள்.அவன் அப்படியே சென்று மறைந்துவிடுவதன் முன்னம் பின்னால் விரைந்தனர். ‘தம்பி….ஏய் தம்பி…! ‘ என்று கூவினார்கள்.
அவன் அவர்களுக்காய்த் தாமதிக்காமல் நடக்க, பின்னரும் அழைத்தனர்.
அவன் நின்றான்.
திரும்பினான்.
சிரிப்பு மறந்த முகம். ஆனாலும் கவிந்திருந்தது சோகமுமில்லை. நெடு வழி நடந்த களைப்பு இருந்தது. கூட லேசான ஒரு எரிச்சல். அவன் , ‘என்ன ? ‘என்றான்.
‘யார் நீ ? ‘
‘பின்னல் பையன். ‘
‘இந்த உலகம் வாழ வெப்பம் வேண்டும்; ஒளி வேண்டும். சூரியன் மரணித்துப் போனான்போலும். சிறிது வெப்பமும், சிறிது வெளிச்சமும் தர ஒரு சின்னச் சூரியனாவது வேண்டும். அந்தப் போர்வையை எங்களுக்குத் தருவாயா ? ‘
அவன் அசட்டையாகச் சிரித்துவிட்டு சோம்பலுடன் அப்பால் நடந்தான்.
அவர்கள் பின்னால் நடந்தனர். நெருங்க முடிந்த ஓர் எல்லையை நெருங்கிப் போய்க்கொண்டு, ‘ தயவுசெய்து அந்தப் போர்வையைக் கொடுத்துவிட்டுப் போ. நாங்கள் செத்துக் கொண்டிருக்கிறோம் ‘ என்று மன்றாடினார்கள்.
‘பயித்தியக்காரர்களே, இதை நான் கொடுத்தாலும் எரிந்து அப்படியே சாம்பராகித்தான் போவீர்கள். மந்திரிக்கு நேர்ந்த கதை அறியீரோ ? ‘என்று சொல்லிக்கொண்டே அப்பால் நடந்து போனான்.
அவர்கள் சட்டென நின்றார்கள். எரிந்து போக யார் பிரியப்படக் கூடும் ? அவர்கள் பார்த்துக்கொண்டே இருக்க அவன் அப்படியே நடந்து முடுக்கில் திரும்பி மறைந்தான்.
நேரே நடந்துகொண்டிருந்தவன் , பரந்த ஆல் ஒன்று எதிர்ப்பட அதன் கீழ்ச் சென்று அமர்ந்தான்.
மரத்துக் குருவிகளெல்லாம் கிளுகிளுத்தும் கீச்சிட்டும் கிரீச்சிட்டும் பறந்தடித்தன.
***
மிக்க அமானுஷ்யமான திறமையொன்று அவன் தாயின் மூலமாக அவனுக்குக் கிடைத்திருந்தது. அவளும் இறந்து அவன் அனாதையான பின் வேலைசெய்து ஜீவிக்க நேரிட்ட தருணத்தில் , தாய் அவனுக்குக் கற்றுக் கொடுத்த அந்தப் பின்னற் கலை அவனுக்குக் கை கொடுத்தது. இளவரசிக்கு கூந்தல் பின்னிவிடும் வேலையாளாக அவன் அமர்த்தப்பட்டான். அந்தளவு வறுமையில் வாடியவன் அரண்மனை வந்ததில் நியாயமாகப் பார்த்தால் மிகப் பெரிய சந்தோசத்தை அடைந்திருக்க வேண்டும். அவனோ சிரிக்க மறந்தவன் போல், முகவிலாசத்தைப் பறிகொடுத்தவன்போல் வழமைபோலவே இருந்துகொண்டிருந்தான். ஒருவேளை அந்த முசுட்டுத் தனமேகூட அந்த வேலை அவனுக்குக் கிடைக்க காரணமாய் அமைந்திருக்கலாம்.
அரசன் நகரிலில்லாத சமயம்.பின்னல் பையனின் திறமையில் மனதைப் பறிகொடுத்திருந்த இளவரசி , தன் மீஅன்பை வெளிப்படுத்திய சமயத்தில், அதையும் ஒரு கடமைபோல் மெளனமாய் அவன் ஏற்றுக்கொள்ளவே நேர்கிறது.
இது மந்திரிக்குத் தெரிய வர அவனை உடனடியாக இருட் சிறைக்குள் போட்டுவைக்க உத்தரவிடுகிறான்.
இருட்சிறைக்குள் இரவு பகல் அறியாது தடுமாறிய பின்னல் பையன், சிறைக் கூரையிலுள்ள துவாரத்தின் வழி சூரியக் கதிர்கள் புகுவதைக் காண்கிறான். அற்புத கைவண்ணம் கொண்ட அவன், கதிரினை நூலாய் எடுத்து பின்னத் துவங்குகிறான். பெரும் போர்வையொன்று விரிகிறது நாளடைவில்.
போர்வை முடிய அங்கே வரும் மந்திரிமேல் கொத கொதவென இருந்த போர்வையைத் தூக்கி வீசுகிறான் பின்னல் பையன். மந்திரி எரிந்து சாம்பலாகிறான். இது கண்டவர்கள் வெருண்டோட, சூரியக் கதிர்ப் போர்வையை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு நோக்கமெதுவுமின்றி விழி பட்ட பாதையில் அவன் நடக்க ஆரம்பிக்கிறான்.
***
ஒருசில நாட்கள் அவனுமே பகல் இரவு அறியா இருட்சிறையில் வாடியவன். மனித குலத்தின் அந்த இருட்புவி வாழ்வினது அவலத்தை அவனால் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் மன்றாட்டம் மீண்டும் மீண்டும் காதில் வந்து ஒலித்தது. அவன் மந்திரியைக் கொல்லலாம்; இளவரசியைக்கூடக் கொல்லலாம்; ஆனால் அவர்களை சிறிதளவுகூட வதைத்துவிடக் கூடாது.
யோசித்து ஒரு முடிவுக்கு வந்த பின்னல் பையன் போர்வையைத் தோளிலிருந்து எடுத்து இழை இழையாய்க் குலைக்க ஆரம்பித்தான்.
போர்வை முடிந்து அவன் எழும்பினான்.
வானத்தில் சூரியன் ஒரு சிறு வட்டமாய் ஒட்டிக்கொண்டிருப்பது தெரிந்தது.
பிரபஞ்சம் வெளிச்சக் காடாய்க் கிடந்தது.
– திண்ணையில் தேவகாந்தன், December 7, 2002