பிச்சாயி மகன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 12, 2023
பார்வையிட்டோர்: 1,788 
 
 

புத்தகங்களை கீழே போட்டு எதையோ தேடிக் கொண்டு இருந்தான் இளவரசன். “என்னப்பா எல்லாத்தையும் குப்பை மாறி கொட்டி தேடுறே” என்றாள் பிச்சாயி. சைன்ஸ் புத்தகத்த காணோம் அதாம்மா தேடுறேன்.

யாருக்கிட்டேயும் கொடுத்திருந்தா யோசி என்று சொல்லிக்கொண்டே பாத்திரங்களைக் கழுவினாள்.

அட்டா காமராசுக்கிட்ட கொடுத்தது மறந்தே போச்சே!

பேண்ட் சட்டை யை மாட்டிக்கொண்டு கீழத் தெருவில் இருக்கும் நண்பன் காமராசு வீட்டுக்கு புறப்பட்டான்.

“என்னப்பா வேணும். வந்து ஒக்காரு.”

வீட்டுக்குள் அழைத்து பாயில் உட்கார வைத்தாள் ராதா.

“என்னய்யா விசயம்”

“சைன்ஸ் புத்தகத்த காமராசு வாங்கிட்டு வந்தான். அத வாங்கிட்டு போக வந்தேம்மா”

“ஞாயித்துக்கெழமை லீவுங்கவும் அவங்க அக்கா வீட்டுக்கு நேத்தே போயிட்டான். இப்ப வந்தாலும் வந்துருவான். அவனுட்டு பொசுத்தவமெல்லாம் அங்கிட்டுத்தாயா இருக்கு. வேணுனா தேடிப்பாரே”.

“நிதானமாக தேடிப் பார்த்தான். அந்தக்குடிசையில் உடல் வேர்த்தது தான மிச்சம். அவன் வந்தா கொண்டு வரச் சொல்லுங்கம்மா” வீட்டுக்கு புறப்பட்டான்.

“நில்லுப்பா நீ யாருனு சொல்லலையே”

“நானும் இந்த ஊர் தாம்மா”.

“ஒன்னப் பாத்ததே இல்லையேயா”

“சின்னப் புள்ளையிலிருந்தே வெளியூர்ல தங்கி படிக்கிறேன். எப்பவாது வருவேன்.காமராசு ஏங்கூடதான் படிக்கிறான்”.

“அப்புடியா! ஒங்க ஆத்தா பேரு என்னய்யா”

“தெற்குத்தெரு பிச்சாயி மயன் தாம்மா நான்”

“என்ன பிச்சாயி மயனா? இத ஏன்டா மொதல்லையே சொல்லல.. பேண்ட் சட்ட போட்டு ஏமாத்துறீகளோ. எல்லாம் ஏ நேரம். ஒங்க கொலம் வேற எங்க கொல்ம் வேற. ஓங்க ஆளுங்க அந்த வேலிக்கு அங்குட்டே நிப்பாங்க. என்ன திமிரு இருந்தா நடுவீட்டுக்குள்ளேயே வந்துருப்பே. சனியனே பாக்க லெச்சணமா இருக்கவும் கூப்புட்டேன். நீனும் வந்தர்றதா. நம்ம ஊர் பழக்கம் தெரியாத. வீட்டக்கழுவனும்”, சத்தம் போட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள் ராதா.

“பாக்க நல்லவங்க மாதிரி இருந்தாங்க” தன்னுள் நொந்தவனாய் நடைபோட்டான்.

தலையில் சிறுமூட்டையை சுமந்தவாற எதிரே வந்து கொண்டு இருந்தான் காமராசு.

“என்னடா ஒருமறியா வர்றே.”

“ஒன்னும் இல்லடா.”

புரிந்துகொண்டான் காமராசு.

“இந்தா புத்தகம்”.

தனது கையில் இருந்ததை கொடுத்தான்.

“கோபிச்சுக்காதடா, எங்கம்மா அப்படித்தான். நான் உன் நண்பன்டா. நம்ம நட்புக்கு எந்த கொலமும் கோத்துறம் கெடையாதுடா. சாதி தீ… ஒரு பக்கம் காட்டுத்தீ போல் எறிஞ்சுக்கிட்டுதான் இருக்கு. நம்ம சமுதாயம் தான் திருத்தனும்; திருந்தனும்”.

தலையில் இருந்த மூட்டையை இறக்கி வைத்துவிட்டு இளவரசனை கட்டிப்பிடித்து தட்டிக்கொடுத்தான்.

“நண்பா! நீ தான்டா நண்பன்!” விழிகளால் புகழ் பாடி மகிழ்ந்தவாறு விடை பெற்று சென்றான் இளவரசன்.

பரிதாபமாய் நின்று கொண்டிருந்த இளவரசனுக்கு இந்த உலகை விட பெரியது ஏதோ கிடைத்தது போல் இருந்தது.

– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *