கண்ணாடி மனிதர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 14, 2023
பார்வையிட்டோர்: 2,662 
 

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

Quality begins with me! கட்டை கட்டையாகச் சில்வர் எழுத்துக்கள் வரவேற்பறைச் சுவரில் ஒட்டப்பட்டிருந்தன. முதல் நாள் என்பதால் 8 மணி வேலைக்கு 7.30 மணிக்கே வந்து காத்துக் கொண்டிருந்த எனக்குப் பொறுமை இழந்து கொண்டிருந்தது. என்னை உள்வாங்கிக் கொண்டிருந்த சோபா மெத்துமெத்தென்று சுகமாக இருந்தது. அழகான பூந்தொட்டி, வண்ண வண்ணப் பூக்கள், போட்டோக்கள், ஷீல்டுகள், வரவேற்பாளினி என இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் வரவேற்பறையை அணுஅணுவாக அலசிக் கொண்டிருந்தன என் கண்கள். ஒரு மூலையில் பொருத்தப்பட்டிருந்த எல்.சி.டி. மானிட்டர் அன்று வரப் போகிற வாடிக்கையாளர்களை வரவேற்றுக் கொண்டிருந்தது. வரவேற்பாளினி நான் பார்க்கிற போதெல்லாம் புன்சிரிப்பை வழங்கிக் கொண்டிருந்தாள். எனக்குச் சங்கட மாக இருந்தது, ‘வீணாக அவளுக்குச் சிரமத்தைக் கொடுக் கிறோமே’ என்று. ஆனால் அது அவளுக்குத் தொழில் முறைப் பழக்கமாகிவிட்டிருக்கலாம். நான் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். அவளே என்னை அழைத்துக் கேட்டாள். ‘யாருக்காகக் காத்திருக்கிறாய்?’- சொன்னேன். இ இண்டர்காமில் அழைத்துப் பார்த்து விட்டுச் சொன்னாள் ‘வென்டிசியா எட்டு மணிக்குத்தான் வருவாள்’ என்று.

சற்று நேரத்திற்கெல்லாம் வென்டிசியா வந்து என்னை அழைத்துச் சென்றாள். பெரிய ஹாலை இடுப்பளவுச் சட்டங் களால், பல சதுரக் கட்டங்களாகப் பிரித்திருந்தார்கள். ஒவ்வொரு சதுரத்துக்குள்ளும் நாலு மூலைகளிலும் நால்வர் உட்கார்ந்து கணினியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந் தார்கள். ஹாலின் நான்கு மூலைகளின் சீலிங்குகளில் கருப்புக் குமிழ்கள் பொருத்தப்பட்டிருந்தன. வேவுக் கேமராக்களாக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். ஹாலில் யாரும் அடுத்தவருக்குத் தெரியாமல் ஒன்றும் செய்துவிட முடியாது. தலையைக் கொஞ்சம் எக்கினால் மற்றவர் என்ன செய்கிறார் என்பதைப் பார்த்து விட முடியும்.

பக்கவாட்டில் இருந்த அறைகளில் வென்டிசியாவின் அறையும் ஒன்று. அதற்குப் பக்கத்து அறைகளில் ஐ.டி. டைரக்டர் அறையும், சி.ஐ.ஓ. அறையும் இருந்தன. வென்டி என்னை முதலில் பெரிய தலைகளுக்கு அறிமுகப்படுத்தி விட்டு ஹாலில் இருந்தவர்களிடம் அறிமுகப்படுத்தினாள். ஒவ்வொருவரிடமும் புன்சிரித்துக் கை குலுக்கினேன். ஒவ்வொருவரும் ‘தேன்மொழி’ என்ற அழகான என் பெயரை ‘தென்மொசி’, ‘தேங்மொகி’ என்று கடித்துக் குதறிக் காயப் படுத்தினார்கள். போகட்டும் என்று விட்டு விட்டேன்.

ஒரே இந்தியப் பெண் மல்லிகாவைத் தவிர மற்ற எவர் பெயரும் எனக்கு நினைவில் நிற்கவில்லை. மல்லிகாவிற்குப் பக்கத்துக் காலி இடம் எனக்கு ஒதுக்கப்பட்டதில் ஆரம்பத்தில் சந்தோஷமே. இடைப்பட்டு ‘ஐயோ இவளிடம் மாட்டிக் கொண்டேனே’ என்று எண்ணியிருக்கிறேன்.

மல்லிகாவைப் பற்றிச் சொல்ல வேண்டும்; மல்லிகா பார்த்தவுடன் யாரையும் கவர்ந்து விடுவாள். அவள் என்னையும் கவர்ந்து விட்டதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

அவ்வளவு பளிச். மேக்கப் சற்று கூடுதல்தான். அவளின் மாநிறத்துக்குக் கீழான நிறத்துக்கு அவள் போட்டிருந்த சிவப்பு லிப்ஸ்டிக் எடுப்பாகத்தான் இருந்தது. நான் கோதுமை நிறம். மிகைப்படுத்தவில்லை. நான் லிப்ஸ்டிக் போட்டு அழித்துவிடுவேன். முகப்பவுடரைத்தடவி பின் துடைத்து விடுவேன். எனக்கு எதுவும் அமுக்கமாக இருக்க வேண்டும். அவளுக்கு எதுவும் தூக்கலாக இருக்க வேண்டும் போல. மன்னிக்கவும் மல்லிகாவைப் பற்றிச் சொல்லவந்து என்னைப் பற்றி அளந்து கொண்டிருக்கிறேன்.

அவளுக்கு உடம்பு, கண்கள், மார்பு என்று எல்லாமே பெரிதுதான். அவளுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். எல்லோருடனும் அவளுக்குப் பேச்சு இருந்தது. நேரிலோ, போனிலோ யாரோடாவது சலச்சல என்று அருவி போலப் பேசிக் கொண்டே இருந்தாள்.

அவள் பேசி ஒழிந்த நேரத்தில் ‘வென்டி ஒன்றும் சொல்லவில்லையே, எனக்கு லாகின் அக்கவுண்ட் என்ன? வேலை ஒன்றும் சொல்லவில்லையே?’ என்று அப்பாவி யாகக் கேட்டேன், அதற்கு அப்படி ஒரு சிரிப்பு சிரிப்பாள் என்று நான் நினைக்கவில்லை. ‘இன்னும் மூனு நாளாவும் அக்கவுன்ட் வர. அதுவரை இண்டர்நெட், இமெயில் பாரு என்ஜாய்’ என்று காதில் குசுகுசுத்து விட்டு ‘இந்தா என் லாகின்ல பாரு’ என்று லாகின் பண்ணிக் கொடுத்தாள்.

யாகூ மெய்ல் பார்த்துவிட்டுத் திரும்பினேன். ‘வா, டீ பிரேக் போலாம்’ என்று கிளம்பினாள் மல்லிகா. அவளோடு இன்னும் பலரும் வந்தார்கள். எல்லாருடனும் செம அரட்டை அடித்துக் கொண்டு வந்தாள் மல்லி. நிறையப் பேரைத்தெரிந்து வைத்திருக்கிறாள். நிறைய அனுபவம் இருக்கும் என்று நினைத்துக் கொண்ட எனக்கு அவள் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதம்தான் ஆகிறது என்ற போது ஆச்சரியமாய் இருந்தது. ஒரு மாதத்தில் இவ்வளவா?

பிரேக்கில் என்னை விசாரித்துத் தள்ளிவிட்டாள் மல்லி. எனக்குப் போதும் போதும் என்கிற அளவுக்கு. அவள் பத்துக் கேள்விகள் கேட்டால் எனக்கு ஒன்று கேட்கவே வெட்கமாக இருக்கும். கேட்கலாமா? வேண்டாமா? என்று பலமுறை யோசித்து விட்டுக் கேட்பேன். இப்படித்தான் மல்லியுடன் என் நட்பு ஆரம்பித்தது.

அன்று மாலை வீடு திரும்பி அம்மாவிடம் பேசினேன். ‘எப்படி இருக்கிறாய்? வயதான காலத்தில் ஏன் தனியே இருந்து கஷ்டப்படுகிறாய்? நான் வேலைக்குச் சேர்ந்து விட்டேன். சித்தப்பாவும் சித்தியும் நன்கு கவனித்துக் கொள்கிறார்கள். நீயும் இங்கு வந்து விடு என்னோடு’ என்றேன். அவள், ‘நீ சிங்கப்பூர் போனதிலே இருந்து உன் நினைப்பாவே இருக்கேன். முடிஞ்சா நீ வந்துட்டுப் போ பல்லக்கடிச்சுக்கிட்டு இன்னும் ஒரு வருஷம். நான் ஒரு வழியா ரிடயர்மெண்ட் வாங்கிட்டு வந்துடுறேன். உனக்குத் தான் சித்தி வீடு பாதுகாப்பாச்சே என்கிற தைரியத்துலதான் இருக்கேன். பத்திரமா இருந்துக்க. பேரைக்காப்பாத்து. யார்ட்டயும் பாத்துப் பழகு’ என்று எச்சரிக்கையூட்டினாள்.

அப்பா இறந்த பிறகு அப்பாவின் பேங்க் வேலை அம்மாவுக்குக் கிடைத்தது. அப்போது எனக்கு ஆறு வயது. அண்ணனுக்குப் பத்து வயது, என்னையும், அண்ணனையும் அவள் ஒருத்தியாகப் படிக்க வைத்து ஆளாக்கினாள். கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த என்னை சிங்கப்பூர் வந்துவிடு உனக்கு வேலை கிடைக்கும் என்று சித்தி அழைத்துக் கொண்டு வந்து விட்டாள். அண்ணன் திருமணமாகி சென்னையில் செட்டில் ஆகிவிட்டான்.

இவள் மதுரையில் அப்பா கட்டிய வீட்டில் இருந்து கொண்டு வேலைக்குப் போய் வந்து கொண்டிருக்கிறாள். பேசும் போதெல்லாம் அடிக்கொருதரம் ‘பேரைக் காப்பாத்து’ என்று சொல்லி விடுவாள்.

நாம்தான் அதன் இலைமறை காய்மறை அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் அம்மாவுடன் பேசியதை டைரியில் குறித்து வைத்திருந்தேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் என்பதையும் மல்லிகாவின் அறிமுகத்தையும்தான்.

மல்லிகா சொன்ன மாதிரியேதான் ஆச்சு. மூன்றுநாளாக வேலையில்லாமல்தான் அல்லாடினேன். மல்லிகா கூட திட்டினாள். எனக்குத்தான் வென்டி மீது கோபமாக வந்தது. ‘ரிசோர்ஸ்’ இல்லை என்று எப்படிச் சண்டை போட்டு மேனேஜ்மெண்ட்டிடம் கேட்டு என்னை எடுத்திருப்பாள்? இப்போது ரிசோர்ஸை இப்படி வேஸ்ட் பண்ணுகிறாளே என்று இருந்தது. மல்லிகாவின் நட்பு ஆதரவாக இருந்தது.

அன்றைய என் டைரிக் குறிப்பில் இப்படி எழுதினேன் ‘மல்லிகா இன்னும் நெருக்கமானவளாகிவிட்டாள். அவள் அம்மாவைத் தனியே விடாமல் கூட்டிவந்து உன்னுடன் வைத்துக் கொள் என்று சொன்னபோது நெகிழ்ந்து போனேன்.’

ஒரு வழியாக இமெயில் அக்கவுண்ட், நெட்நொர்க் அக்கவுண்ட், எல்லாம் வந்து சேர்ந்தது. மல்லிதான் எனக்கு உதவினாள். நான் செய்ய வேண்டிய பணிகள் எனக்கு விளக்கிக் கூறப்பட்டண. மல்லி பார்த்துக் கொண்டிருந்த இரண்டு மாட்யூல்களில் ஒன்று எனக்குத் தரப்பட்டது. என்னுடைய யூசர்ஸ் ஷிப்பிங். மல்லியின் யூசர்ஸ் சேல்ஸ் டீம். சீக்கிரமே மல்லியிடம் கற்றுக் கொண்டு என் மாட்யூலை நானே பார்த்துக் கொண்டதில் வென்டிக்கு என் மேல் நம்பிக்கை பிறந்தது.

மாத இறுதியில் டீம் மீட்டிங் வந்தது. அதில் எங்களின் பெர்ஃபார்மன்ஸ் ரிவியூ செய்யப்பட்டது. அதில் எல்லோரையும் விட மல்லிதான் டாப் என்றாள் வென்டி. யூசர் ரேட்டிங்கில் அவளுக்கு நல்ல ஸ்கோர் என்றும் சொன்னாள். நாமும் டாப்பில் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். யூசர் ரிக்வெஸ்ட்களை சீக்கிரம் முடித்துக் கொடுத்து ‘யூசர்ஸ்ட்ட நல்ல பேரெடுக்கணும்’ என்று முடிவு செய்து கொண்டேன்.

அன்று மதியம் லன்ச்சுக்கு எல்லோரும் வெளியே போனார்கள். மல்லி கூப்பிட்டாள். “இன்று ஒரு நாளாவது உன் பாக்ஸை வைத்துவிட்டு எங்களோடு சாப்பிடலாம் வா” என்றாள். சரி என்று புறப்பட்டேன். எதிரே சாப்பிட்டு விட்டுத் திரும்பியது ஒரு கும்பல். எல்லோரும் மல்லியைப் பார்த்து “ஹாய் மல்லி” என்றார்கள். இவளும் அவர்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டாள். இவள் என் கலீக் தேன்மொழி என்று என்னை அறிமுகப்படுத்தி வைத்தாள். “இவங்க என் சேல்ஸ் யூசர்ஸ்ப்பா” என்றாள் என்னிடம். எனக்குப் பொறாமையாக இருந்தது எனக்கும் யூசர்கள் இருக்கிறார்கள்.

எல்லாம் சரியான சிடுமூஞ்சிகள். பார்த்தால் முகத்தைத் திருப்பிக் கொண்டு விடுவார்கள். என் டைரிக்குறிப்பில் எழுதினேன். ‘அடுத்த ரிவியூவில் நானும் டாப்பில் வர வேண்டும். மல்லிக்கு நல்ல யூசர்ஸ் மல்லி கொடுத்து வைத்தவள். அவள் மீது பொறாமையாய் இருக்கிறது.’

நான் மல்லியிடமிருந்து பெற்றுக் கொண்ட போது மலையாகப் பல ரிக்வெஸ்ட்கள் தேங்கிக் கிடந்தன. நான் மளமள என்று எல்லாவற்றையும் முடிக்க ஆரம்பித்தேன். மல்லி வழக்கம் போலப் பேசிக் கொண்டே இருப்பாள். போகப் போக மல்லியின் பேச்சு எனக்கு எரிச்சலாக மாறியது. எனக்குப் பொறுக்க முடியாமல் ஒருநாள் சொல்லிவிட்டேன். “எனக்கு டிஸ்டர்ப்பாக இருக்கு நீ பேசுவது. கொஞ்சம் பேச்சைக் குறைத்துக் கொள்ளேன்” என்றேன். அதற்கு அவள் “என் சுபாவம் அப்படி, உன்னைப் போல் என்னால் இருக்க முடியாது. நீ வேண்டுமானால் இடத்தை மாற்றிக் கொள்” என்று சொல்லிவிட்டாள்.

எனக்கு மல்லியின் மீது மீது வெறுப்பு மண்டியது. வென்டியிடம் சொல்லி இடத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். பெண் என்றால் ஒரு அடக்கம் வேண்டாம்? இவள் மேக்கப்பும், உடையும், யாரைப் பார்த்தாலும் சிரிப்பதும் பேசுவதும்…. ச்சேய் என்று வந்தது எனக்கு. இவள் இப்படி இருந்தால் யாரைத்தான் மயக்க முடியாது? எல்லாவற்றுக்கும் காரணம் நாம் நடந்து கொள்கிற விதம்தான். எல்லோரும் பார்ப்பார்களே என்று ஒரு இங்கிதம் வேண்டாம். அப்பொழுது முதல் மல்லிக்கும் எனக்குமான இடைவெளி அதிகரித்தது. நான்தான் அவளைத் தவிர்த்து வந்தேன். நெருக்கத்தைக் குறைத்துக் கொண்டேன்.

அன்று என் டைரியில் எழுதினேன். ‘மல்லியைப் பிடிக்கவில்லை. வெறுக்கிறேன். இவள் என்ன சொல்லியும் மாற மாட்டாள். நான்தான் வேறு இடம் மாறவேண்டும். இவளுக்குப் பக்கத்தில் நன்கு மாட்டிக்கொண்டு விட்டேன்” அந்த வார இறுதியில் அம்மாவிடம் சொன்னேன். யாரையும் வெறுக்காதே என்றார்கள் அம்மா. திருவிழா வருவதாகவும் அதற்கு வரமுடியுமா? என்றும் கேட்டார்கள். யோசிக்கிறேன். லீவு கேட்டுப்பார்க்கிறேன் என்றேன்.

திங்கட்கிழமை வார ஆரம்பம். காலையிலேயே வென்டியைப் பார்த்து என் விடுமுறை விண்ணப்பத்தைச் சொன்னேன். ஆறு மாதம் முடிவதற்குள் லீவு முடியாதே என்றாள். நான் ஒன்றும் பேசவில்லை.

அடுத்த நாள் வென்டி என்னை அழைத்தாள். “சரி உன் லீவுக்கு ஒப்புதல் அளித்து விட்டேன். உன் பெண்டிங் வேலைகளை மல்லியிடம் கொடுத்துவிட்டுப் போய்வா” என்றாள்.”ரொம்ப தேங்க்ஸ்” என்றேன். “உன் ஃப்ரென்ட்டுக்குச் சொல். அவள்தான் உனக்கு பேக்கப்பாக இருக்க சம்மதித்தாள்.” எனக்கு வியப்பாக இருந்தது. நன்றிப் பெருக்கோடு அவளிடம் சென்றேன். “ஹேய் மல்லி, தேங்க்ஸ்பா” என்றேன். “இட்ஸ் ஓகே. வரும்போது அம்மாவையும் கூட்டி வந்துரு. பாவம் தனியா இருப்பாங்க நான் கேட்டதாகச் சொல்லு” என்று சொல்லி விட்டுப் போய்விட்டாள்.

அன்றைய என் நாட்குறிப்பேட்டில் “ஊருக்குப் போவது சந்தோஷமாக இருக்கிறது. எல்லாம் மல்லியின் உதவியால். நான் அவளை வெறுத்தேன், அவள் என்னை வெறுக்க வில்லை” என்று எழுதிவைத்தேன்.

ஒரு வார விடுப்புப் போனதே தெரியவில்லை. அம்மாவுக்கு ரொம்ப மகிழ்ச்சி. மல்லிக்காக அம்மா கொடுத்தனுப்பிய முறுக்கு, சீடைப் பாக்கெட்டுகளை எடுத்து வைத்துக் கொண்டேன். மல்லியை அந்த பளிச் முகத்தைப் பார்க்கப் போகிற ஆவல் எனக்குள் பொங்கியது. அம்மா என்னோடு வந்து இருக்க சம்மதித்து விட்டாள். என்பதை மல்லியிடம் சொல்ல வேண்டும், அவள் ரொம்ப சந்தோஷப்படுவாள் என்றும் நினைத்துக் கொண்டேன். சித்தியிடம், அன்று சாப்பாட்டு பாக்ஸ் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

மல்லி ‘என்னடி இன்னொரு வாரம் இருந்துட்டு வர்றதுதானே?’ என்றாள். எல்லாம் விசாரித்தாள். அம்மா வரப்போகிறார், பாஸ்போர்ட் அப்ளை செய்தாகி விட்டது என்றேன். “வாவ், வெரிகுட்” என்று சந்தோஷமடைந்தாள். முறுக்கு, சீடை எல்லாவற்றையும் எல்லோரிடமும் கொடுத்து அவளும் சுவைத்தாள். எனக்கு வேலையே ஓடவில்லை. நான் விட்டுச்சென்ற பெண்டிங் வேலைகளில் ஒன்றிரண்டை முடித்து வைத்திருந்தாள் மல்லி.

இன்று சாப்பிட வெளியே போவோமே என்றேன். எல்லோரும் வெளியே சாப்பிடப் புறப்பட்டோம். எதிரே வந்த கும்பல் மல்லியைப் பார்த்து “ஹாய் மல்லி” என்றார்கள். அந்தக் கூட்டம் என் சிடுமூஞ்சி ஷிப்பிங் டீம். ‘எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. மல்லியின் முகராசியே தனி, ஒரு வாரத்தில் அவர்களை இம்ப்ரஸ் செய்திருக்கிறாளே’ என்று பட்டது.

கேட்டைக் கடக்கிறபோது ஏதோ ஒரு ஞாபகத்தில் அங்கிருந்த சிடுமூஞ்சி செக்யூரிட்டியைப் பார்த்து சிரித்து வைத்தேன். அவர் புரியாமல் விழித்தார்.

எல்லோரும் பனானா லீப் சென்றோம். விதவிதமாய்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். எனக்குள் பலமுறை ஷிப்பிங் டீம் ‘ஹாய் மல்லி’, ‘ஹாய் மல்லி’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ‘என் யூசர்கள் என்னைக் கண்டு கொள்ளவே இல்லையே? அவர்கள் வேலைகளை எவ்வளவு சீக்கிரம் முடித்துக் கொடுத்திருக்கிறேன்? ச்சே நன்றி கெட்ட ஜன்மங்கள், ஆனால் மல்லிக்கு மட்டும் எப்படி? பார்த்தாலே பேசத்தூண்டுகிற முகம் மல்லிக்கு என வியந்தேன். அத்தனை முகராசி அவளுக்கு என்று நினைத்துக் கொண்டேன்.

வரும்போது அந்த செக்யூரிட்டியைப் பார்த்து நான் ஏன் அப்படிச் செய்தேன்? அவர் ஒன்றும் புரியாமல் விழித்ததை நினைத்துச் சிரிப்பு வந்தது. என்னைப் பைத்தியம் என்று நினைத்திருப்பாரோ? சாப்பிட்டுத்திரும்பினோம்.

உள்ளே நுழைகிற போது அந்த செக்யூரிட்டி புன்சிரிப்போடு ஹாய் சொன்னார். ஒன்றும் புரியாமல் ஒரு வினாடி யோசிப்புக்குப் பிறகு, அட எனக்கும் ஒரு ‘ஹாய்.. என்ன சொன்னீர்கள்? திருப்பிச் சொல்லுங்கள் எனக் கேட்கத் துடித்தது மனசு. நான் போகும் போது கொடுத்ததை அவர் திருப்பிக் கொடுக்கிறாரா? எங்கே போனது அவரின் சிடுமூஞ்சி? மனம் மகிழ்ந்தேன். அந்த மகிழ்ச்சியில் செய்வதறியாமல் வரவேற்பறையில் ஒரு நிமிடம் நின்றேன். ‘Quality begins with me’ சில்வர் எழுத்துக்கள் என்னைப் பார்த்துச் சிரித்தன. என் மனத்தின் அடிப்படை நம்பிக்கைகள் சுக்குநூறாக நொறுக்கப்பட்டன. அங்கு புதிய நம்பிக்கைகள் முளை விட்டன.

அன்றிரவு என் டைரியில் இப்படி எழுதி வைத்தேன்.

இன்று நான் கற்றுக்கொண்டேன்.

Every thing begins with me!

Enjoy people!!

People are nothing, but mirrors!!!

– திண்ணை, புன்னகைக்கும் இயந்திரங்கள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2008, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *