பாக்கு வெட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 23, 2019
பார்வையிட்டோர்: 8,659 
 
 

மாணவி அபி நான்கு மணியாகியும் வீட்டுக்கு வரவில்லை.. குடும்பம் பதறித் துடித்தது. அப்பா பஸ் நிலையத்துக்கு ஓடினார். அண்ணன் பாடசாலைக்கு ஓடினான். அதிபரை விசாரித்தான்.. ஆசிரியர்களை விசாரித்தான்.. அவர்கள் “ரெண்டு மணிக்கே பாடசாலை விட்டாச்சே..” என்று கைகளை விரித்தார்கள். அண்ணன் திரும்பி ஓடி வந்தான். நண்பர்களைக் கூட்டிக் கொண்டு தேடத் தொடங்கினான். இந்த ஊரில் இப்படி எத்தனையோ சிறுமிகள் காணாமல் போன சம்பவங்கள் ஏராளம் உண்டு. அபியின் தாயாரின் ஓலம் வானதிரக் கேட்டுக் கொண்டேயிருந்தது.. அக்கம் பக்கத்து வீடுகள் அல்லோ கல்லோலப் பட்டன. அவர்கள் வரிந்துக் கட்டிக் கொண்டு நெடுஞ் சாலையிலிருந்து காடு¸ மேடுகள்¸ செடி செத்தைகள் என்று தேடினார்கள். இளைஞர் கூட்டம் தங்கள் கிராமத்துப் பிரதேசம் முழுவதையும் சல்லடை போட்டுத் தேடினார்கள்.

எந்த வித அறிகுறியும் தென்பட வில்லை.

அந்திக் கருக்கல்… இருட்டியும் விட்டது. அந்த சோகமான சூழலை இன்னும் துயரமாக்குவதாய் மழையும் பெய்யத் தொடங்கியது. இனிமேல் எப்படி காடுகளில் தேடுவது..? இளைஞர்கள் சளைக்க வில்லை.. சிலர் எண்ணெய் பந்தங்களைக் கட்டிக் கொண்டு¸ கல் இடுக்குகள்¸ பாதையடி குழாய்கள்; என நுழைந்து நுழைந்து தேடினார்கள். சிலர் பஸ்ஸில் ஏறி அக்கம் பக்கத்து கிராமங்களுக்குச் சென்று விசாரித்தார்கள். பாடசாலை மாணவி காண வில்லை என்பதால்¸ ஊரே திரண்டு அமர்க்களப் பட்டது. தேடிக் களைத்தவர்கள்¸ அதிர்ச்சியோடு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி நின்றார்கள்.

கலவரமடைந்திருக்கும் அன்றைய இரவு கொந்தளிப்போடு விடிந்தது..

காலை பனி மூட்டம் இன்னும் விலக வில்லை.. விடிய விடிய விழித்திருந்த இளைஞர்கள் மீண்டும் அந்த நீண்ட பற்றைக் காட்டுக்குள் குருட்டாம் போக்கில் நுழைந்தார்கள். ஒற்றையடிப் பாதையை நோக்கி ஓடினார்கள். கம்புத் தடிகளைக் கொண்டு செடி செத்தைகளைக் கலைத்தார்கள்.

அவர்களது தேடுதல் முயற்சி வீண் போக வில்லை…! காலமும்.. நியதியும் ஒரு போதும் உண்மைகளை மறைப்பதில்லை.. குற்றங்களும் கொடுமைகளும் ஒருபோதும் வெளி வராமலிருப்பதில்லை..!

அபியின் உள்ளாடை ஒரு செடியில் தொங்கிக் கொண்டிருந்தது! அதைக் கண்ட ஒரு இளைஞன் சத்தமிட்டான். உள்ளாடையை எடுத்துக் கொண்டு இன்னும் ஆவேசத்தோடு அந்த பெரிய மரத்தடி பக்கம் ஓடினான். அபியின் பாடசாலை பை¸ தண்ணீர் போத்தல்¸ சப்பாத்துக்கள் எல்லாம் ஒரே இடத்தில் கிடந்தன.! அந்த இளைஞர் கூட்டத்தின் ஒரு பகுதியினர் மிக ஆக்ரோசமாகக் கத்தினார்கள். இன்னொரு கூட்டம் இன்னொரு இடத்தில் இன்னும் ஓங்காரமாகச் சத்தமிட்டார்கள். எல்லோரும் அந்த இடத்தை நோக்கி ஓடினார்கள். அபியின் உடல் நிர்வாணமாகக் கிடந்தது….! தங்கள் சட்டைகளைக் கழற்றி¸ நிர்வாண உடலை மூடி மறைத்து விட்டுத் திரும்பி ஓடி வந்தார்கள். பொலீசுக்கு தகவல் பறந்தது. பொலிஸ் ஜீப் ஸ்தலத்துக்கே வந்தது. அந்த சூழலை படம் பிடித்தார்கள். பின்னர் உடலை ஏற்றிக் கொண்டு உள்ளுர் வைத்தியசாலையில் ஒப்படைத்தார்கள்.

ஊர் மக்கள் பொலிஸ் நிலையத்திலும்¸ வைத்தியசாலையிலும் கூடிக் குவிந்தார்கள். அவர்களது குமுறல்¸ கொந்தளிப்பு¸ ஆவேசம் எல்லாம் கலந்த அனல் காற்று அங்கே வீசிக் கொண்டிருந்தது…

****

வைத்தியசாலை நிர்வாகம் சுடச் சுட மரண விசாரணை நடத்தியது.. மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப் பட்டிருக்கிறார் என்ற கடிதத்தை தந்தையிடம் நீட்டியது. அவர்களால் வேறென்ன செய்ய முடியும்..? உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்லும்படி சொன்னார்கள். காமுகனை¸ கொலைகாரனை.. கண்டுப் பிடிக்க பொலிஸ்காரர்களுக்கு உதவும்படி சொன்னார்கள். மௌனத்தோடு பொலிஸ் காவலுடன் மாணவியின் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

பாவம் ஊர் மக்கள்… வெள்ளை¸ கறுப்பு துணிகளால் ஊர் பாதைகளை அலங்கோலப் படுத்திக் கொண்டிருந்தார்கள்…. மனிதருக்கு மனிதரால் ஏற்படும் ஈனச் செயல்களை எப்படி தண்டிப்பதென அங்கு கூடியுள்ள இளைஞர்கள் ஆதங்கப்பட்டனர். இப்படி எத்தனை கற்பழிப்புக் கொலைகள் ஊருக்குள்ளே நடந்துக் கொண்டிருக்கின்றன…? சட்டம் ஒரு இருட்டறை…! குற்றங்களும் சட்டங்களும் நட்பு கொண்டு விடுகின்றன..! பிடிக்கப்படும் குற்றவாளிகளையெல்லாம் மன நோயாளிகள் என்று ஊருக்கு அனுப்பி வைத்து விடுகிறது.! மீண்டும் அதே நடமாட்டங்கள்.. மீண்டும் அதே கொடூரங்கள்… சமூகத்தை யார் பாதுகாப்பது..? நெருப்பாய் கொதிக்கும் இளைஞர்களின் நெஞ்சுக்குள் இந்தக் கேள்விகள் குமிழியிட்டன.

அந்த இளைஞர்கள் அபியின் கால்களைத் தொட்டு சபதம் எடுத்தார்கள். அந்த குழந்தையின் கருமாதி நடப்பதற்கு முன்பே¸ அந்த காமுகனை…அந்த கொலைகாரனைப் பிடித்து ஊர் மக்கள் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்துவதாக அவர்கள் உரத்துச் சொன்ன வாhத்தைகள் மரண வீட்டில் குழுமியிருந்தவர்களின் மனங்களை குளிர வைத்தன.

அபியின் கொலை¸ முழு நாட்டு மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. தொலைக் காட்சி…பத்திரிக்கை ஊடகங்கள் யாவும் கண்டனத் தொணியில் செய்திகளைப் பரப்பிக் கொண்டிருந்தன.. உலக நாடுகளில் பாலியல் துஸ்பிரயோகத்தில் இலங்கை மூன்றாவது நிலையில் இருப்பதாக வருத்தம் தெரிவித்தன.. சமீப காலங்களாக பதின்மர் வயதுக்குட்பட்ட பெண்களும்¸ சிறுவர் சிறுமிகளுமே காம கொடூரங்களுக்குள்ளாகி சாகடிக்கப்படுவதை தடுப்பதற்கு நாடு அக்கறைக் கொள்வதில்லையென்று திட்டித் தீர்;த்தன. இது பாரதூரமான சமூகப் பிரச்சினை என்பதை அரசு இன்று வரை ஏற்றுக் கொள்ளவில்லை என்று குற்றம் சுமத்தின. கற்பழிப்பு¸ கொலை குற்றங்களை தடுப்பதற்கு மரண தண்டனையே சரியான தீர்ப்பாகும் என்றன. இந்தத் தீர்மானத்தை அரசு ஏற்றுக் கொள்ளாமல்¸ நாடாளுமன்றத்தில் பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருப்பதாகக் கண்டனம் தெரிவித்தன.! இந்தச் செய்திகளையெல்லாம் செவி மடுத்த மக்கள் வாய் மூடி மௌனிகளாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

உறவுகளைப் பலி கொடுத்தவர்கள் சமூகப் பாதுகாப்பை எங்கே தேடுவதென்று பதறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சஞ்சலம் நிறைந்த சூழ்நிலையில் அபியின் பூ உடல் பூத உடலாக சுமக்கப்பட்டு மயானத்தை நோக்கிச் செல்கின்றது….

சமூக அட்டூழியங்கள் கேட்பாரற்று வெறும் சம்பவங்களாகவே நடந்து மறைகின்றன…

கசக்கி எறியபட்ட.. ஒரு மலர்ச் செடியின் மொட்டு மண்ணுக்குள் புதைக்கப்பட்டது. கண்ணீரில் நனைந்த ஊர் மக்கள் கரம் கூப்பி.. காட்டை விட்டுக் கலைந்தார்கள்.

அபியின் மரண வீடு…..

சம்பிரதாயத் துக்கச் சோறு பரிமாறப்பட்டது. அக் குழந்தையின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென பலர் துக்கச் சோறு சாப்பிட்டனர். கொதித்துக் கொண்டிருக்கும் அந்த குறிப்பிட்ட இளைஞர்கள் மட்டும் துக்கச் சோற்றை நிராகரித்தனர். மரண வீட்டுப் பந்தலை கழற்ற முயன்றவர்களைத் தடுத்து நிறுத்தினர். காமுகனை பிடிக்கும் வரை பந்தலைக் கழற்ற முடியாது…கறுப்பு வெள்ளை கொடிகளையும் அகற்ற முடியாதென சத்தமிட்டனர்.

இருள் கவ்வியது.. துயரத்தை இன்னும் துயரமாக்குவதற்கு மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.

இளைஞர்கள் அந்த மழையில்… அந்த இருளில் எங்கோ வேகமாகச் சென்றார்கள். அவர்களைக் குடைந்துக் கொண்டிருந்த சந்தேகம் மேலும் மேலும் வலுப் பெற்றது. அந்த ஒருவன் மேலேயே கண் வைத்துக் கொண்டிருந்தார்கள். கடந்த மூன்று நாட்களாக கறுவல் மகேசனின் தாயும் அவனும் ஏன் செத்த வீட்டுக்கு வரவில்லை..? என்பதே அவர்களது சந்தேகமாகும். ஒரு இளைஞன் மட்டும் மௌனத்தைக் கலைத்தான். “அந்தக் கெழவி கடைசி நேரத்தில வந்து நின்னுட்டு போனா.. மூஞ்சி மிரண்டு போயிருந்திச்சு.. !” என்றான். “கறுவல் ‘குடு’ வித்தாலும் கேனையனாச்சே.! இவன் இப்பிடி செய்ற ஆளா இருப்பானா..?” இன்னொரு இளைஞன் அபிப்பிராயப்பட்டான். “ஊம ஊரக் கெடுக்கும்..! பெருச்சாலி வீட்டக் கெடுக்கும்!…அவன் வூட்டப் போய் பாப்பம்..” என்றான் ஒருவன். எல்லோரும் ஏற்றுக்கொண்டனர்.

கறுவல் வீட்டை நெருங்கியவர்கள்¸ முன் வாசலில் சிலரும்¸ பின் வாசலில் சிலருமாக மறைந்துக் கொண்டார்கள். அவர்களில் கஜன்¸ முன் கதவைத் தட்டினான். பின்புறக் கதவு திடீரெனத் திறந்தது! கறுவல் மகேசன் ஒரே பாய்ச்சலாக வெளியில் ஓடி வந்தான். அவனை இளைஞர்கள் மடக்கிப் பிடித்துக்கொண்டார்கள். அவனை அதே வீட்டுக்குள் இழுத்து வந்து¸ கன்னத்தில் அறைந்து¸ கீழே தள்ளி மிதி மிதியென்று மிதித்தார்கள். தாய்க்காரி விழுந்து விழுந்து அவர்களைக் கும்பிட்டாள். சத்தம் போடாமல் கெஞ்சினாள். “உண்மைய சொல்லச் சொல்றேன் சாமிகளா..! என் புள்ளைய கொன்னு போடாதீங்க சாமிகளா…!” என்று ஒவ்வொரு இளைஞனின் கால்களையும் கட்டிப்பிடித்தாள். ஒருவன் அவளை உதறித் தள்ளி¸ கத்தியை உருவி அவள் மார்பில் ஓங்கி குத்த முயன்றான். கறுவல் அலறினான். “ அய்யோ..! அம்மாவ கொல்லாதீங்க… உண்மைய சொல்லி வுடுறேன்!” என்று அழுதான். அவன் கால் கைகளைக் கட்டி¸ பிணத்தைப் போல தூக்கிக் கொண்டு இருளில் மறைந்தார்கள்.

பின்னால் ஓடி வந்தவர்கள் கறுவலின் தாயிடம். “ஒங்க மகன கொல்ல மாட்டோம்… நீங்களும் இப்ப எல்லா விசயத்தையும் எங்ககிட்ட சொல்லியாகணும்..!” என்று அதட்டினார்கள். அந்த அப்பாவித் தாய் இது வரை காலமும் மகன் செய்த கற்பழிப்புகளையும்¸ கொலைகளையும் அக்கு வேறு¸ ஆணி வேராக சொல்லி முடித்தாள். இளைஞர்கள் இருளில் ஓடி மறைந்தார்கள்.

கறுவல் மகேசனை தனியான ஒரு வீட்டறையில் அடைத்து¸ காவல் புரிந்துக் கொண்டிருந்தார்கள். நடந்த உண்மையெல்லாம் சொல்லி விட்டால்¸ உன்னை பாதுகாப்போடு¸ கள்ள பாஸ்போட் செய்து¸ வெளி நாட்டுக்கு அனுப்பி வைப்போம்..! என்றார்கள். அவனைக் கடத்தி வந்து நான்கு நாட்களாகியும்¸ எவரும் அவனை அடிக்க வில்லை. துன்புறுத்தவுமில்லை.. தினந் தோறும் குடிக்க சாராயம் கொடுத்தார்கள்.. புகைக்க சிகரெட் கொடுத்தார்கள்.. அவனிடம் கேலிகள் பேசி நண்பனைப் போல் நடத்தினார்கள். அவன் அவர்களை நம்பினான். இது வரையிலும் அந்த கிராமத்தில் நடந்த கற்பழிப்பு¸ கொலைகளுக்கு தன்னோடு உடந்தையாகவிருந்த எல்லோரையும் சொன்னான். அவர்கள் இன்றைக்கும் யோக்கியர்களாக ஊரில் நடமாடிக் கொண்டிருப்பவர்கள் என்பதை இளைஞர்கள் அறிந்தனர்.

****

கறுவல் மகேசனை ஊர் இளைஞர்கள் கடத்தி ஊருக்குள்ளேயே மறைத்து வைத்திருப்பதை பொலிஸ் மோப்பம் பிடித்தது.! அபியின் வீட்டுக்கு பொலிஸ் ஜீப் வண்டி ஓடி வந்தது. பெற்றோர்களை மிரட்டியது. அபியின் அண்ணனின் சட்டையை ஒரு பொலிஸ்காரன் பிடித்து உலுக்கினான். கறுவலைப் பிடித்து கடத்தி வைத்திருப்பது சட்ட விரோதச் செயல்..என்றனர். குற்றவாளி பொலிசுக்கு சொந்தம் என்றும்¸ அவனை பொலிஸில் ஒப்படைக்கும்படியும் அதட்டினர்.

கஜன் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த பத்து பாட்டிமார்களும்¸ பத்து இளம் பெண்களும் பொலிஸ்காரர்களிடம் நெருங்கி வந்;து நின்றார்கள். பார்வதி பாட்டியம்மா வாயில் அடக்கி வைத்திருந்த வெற்றிலை எச்சிலை மிக அருவருப்பாகத் துப்பினாள். ஒரு உடல் பெருத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் தடித்த மீசையோடு பாட்டியின் முன்னால் நெருங்கி வந்தார். பாட்டியம்மாவும் முன்னால் நெருங்கினாள்! இன்ஸ்பெக்டர் மீசையை முறுக்கினார். “முறுக்காதீங்க தம்பி… மீசையும் மயிருதான்…!” என்றாள் பாட்டியம்மா! அவளே பேசத் தொடங்கினாள். “பொலிஸ்காரத் தம்பி..! காமுகன ¸ கொலகாரன.. பொலிசுக்கிட்ட புடிச்சுக் குடுத்தா… பொலிசு கோர்ட்டுல ஒப்படைக்கும்…! கோர்டு கூண்டுக்குள்ளத் தள்ளும். வக்கீல கூப்பிட்டு வழக்காட சொல்லும்…! சில வக்கீல் சாதி மனசாச்சி இல்லாத சாதி..! பணத்த நீட்டுனா… கொல செஞ்சவனுக்கும் வாதாடும்.. கற்;பழிச்சவனுக்கும் வாதாடும்… மன நோயாளின்னு… ஊருக்குள்ள கொண்டு வந்து உட்டுரும்…! அப்புறம் வழக்கு வருசக் கணக்குல ஓடும்…! ஆயிரத்தெட்டு நீதவானுங்;க மாறி மாறி வருவாங்க… தவண குடுப்பாங்க.. வழக்கு வீசுபட்டுப் போகும்!

பாவம்.. உயிரப் பறி குடுத்த குடும்பம் ஆவேசம் கொறைஞ்சி… மனம் நொந்து… மண்ண வாரி வீசிப்புட்டு¸ கையக் கழுவும்…! இது தான் நம்ம நாட்டு நடப்பு..! தூத்தேறி…! நீங்களும்… ஒங்க டூட்டியும் சட்டமும்…நீதியும்… பாதுகாப்பும்.. !” என்று பார்வதி பாட்டியம்மா மீண்டும் அசிங்கமாகக் காறித் துப்பினாள்.

அந்த மூதாட்டியின் பேச்சு¸ நாட்டின் இறையாண்மை அயல் நாட்டை நோக்கியது மட்டுமல்ல.. உள்ளூர் குடி மகனுக்கும் உரியது என்பதைச் சுட்டிக் காட்டியது. அவளைத் தொடர்ந்து எல்லா பாட்டிமார்களும்.. எல்லா இளம் பெண்களும் அசிங்கம் அசிங்கமாகக் காறித் துப்பினார்கள்..! இது ஒரு நவீனப் போராட்ட வடிவமாக பொலிசுக்குத் தெரிந்தது..! ஒரு தமிழ் பொலிஸ்காரன் நற நற வென்று பற்களைக் கடித்தான்.. “இவளுக¸ தமிழ் நாட்டுப் பொம்பளைங்க மாரடிச்சு.. ஒப்பாரி வச்சு.. போராட்டம் செய்றத டிஸ் டிவியில பாத்திருக்காளுக மச்சாங்…!” என்று பக்கத்தில் நின்றவனிடம் சிங்களத்தில் சொன்னான். தமிழன்களுக்கு சிங்;களத்தில் பேசுவது ஒரு பெருமை..!

அந்த தடித்த… பெருத்த…. கறுத்த… பொலிஸ் இன்ஸ்பெக்டர் பலமாகக் கர்ச்சித்தார். “இந்த “துப்பு…” சட்டத்துக்கும்¸ நீதித்துறைக்கும் அரசாங்கத்துக்கும் துப்பிய துப்பு…! நாங்க திரும்பவும் வந்து பார்த்துக்கிறோம்..!” என்று தன் ‘மயிரை’ மீண்டும் முறுக்கினார்;..!

ஜீப் வண்டி அவர்களை முட்டி மோதித் தள்ளுவதுபோல வேகமாக முன்னால் வந்து… பின்னால் இழுத்து சர்ரென திரும்பி ஓடியது..!

ஏற்கனவே ஆந்திராவி;ல் இதே மாதிரி கற்பழித்துக் கொலை செய்த ஒருவனுக்கு எப்படி மக்களால் தண்டனை கொடுக்கப்பட்டது என்ற “பேஸ் புக்” வீடியோ படத்தை கஜன் குழுவினர் பாட்டிமார்களுக்கும்¸ இளம் பெண்களுக்கும் போட்டுக் காட்டினார்கள். ஒரு பெண்ணை கற்பழித்துக் கொன்ற காமுகனை வீதி மின்சாரக் கம்பத்தில் நிர்வாணமாகக் கட்டி வைத்து¸ ஊர் பெண்களெல்லாம் அவனது ஆண் குறியை செருப்பால் அடித்துக் கொண்டே கோசமிட்டார்கள். எல்லா ஆம்பிளைகளையும் இழிவான கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தார்கள். வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஆண்களெல்லாம் தலையைக் கவிழ்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த வீடியோவைப் பார்த்த பாட்டிமார்களும் இளம் பெண்களும் “இந்த தண்டன போதாது தம்பிகளா! இத விட தண்டன எங்ககிட்ட இருக்கு..!” என்று அந்த இளைஞர் கூட்டத்தின் ஆவேசத்தை விட உயர்ந்து நின்றார்கள்.. அவர்கள் இளைஞர்களிடம் குசு குசுத்தார்கள். அந்த புதிய மக்கள் தண்டனையை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். அந்த தண்டனை நாளையே நடைபெறும் என்றார்கள்..

****

விடிந்து விட்டது…

இளங் காலைப் பொழுது……..எல்லாப் பெண்களும் வீடு வீடாகச் சென்று இன்று நடக்கவிருக்கும் “மக்கள் தண்டனை”யைக் கண்டு களிக்க வரும்படி வலியுறுத்தி அழைத்தார்கள். அந்தக் கிராமத்து விளையாட்டு மைதானத்தில் ஆயிரமாயிரம் ஆண்களும் பெண்களும் குழுமியிருந்தார்கள். பாட்டிமார்களும்¸ இளம் பெண்களும் மேடையில் நிற்க¸ திடீரென ஒரு வாகனத்தில் காமுகன் கறுவல் மகேசனை மேடையில் கொண்டு வந்து நிறுத்தினார்கள்! அவன் பாய்ந்தோடி விடாதபடி கால்களை சங்கிலியால் பிணைத்திருந்தார்கள். ஒரு இளைஞன் நிகழ்ச்சித் தொகுப்பை செய்துக் கொண்டிருந்தான். “இப்பொழுது… பார்வதி பாட்டியம்மாள் உங்கள் மத்தியில் பேசுவார்கள்… இல்லை..இல்லை ஏசுவார்கள்…!” என்று ஒலி வாங்கியை பாட்டியிடம் கொடுத்தான். “ஏன்டி பொம்பளைங்களா..! நீங்க சோறுதானே திங்கிறீங்க..? ஒடம்புல தெம்பு கெடையாதா..? கை கால் வெளங்;;;;;;காம போச்சா..? ஊர் ஆம்பளைங்க சேட்;ட பண்ண வந்தா… அவன்கள எதுக்க முடியாதா..? தற்காப்புக்கு ஒங்க ஒடம்பு பலத்த காட்ட முடியாதா..? இப்பதான் கராட்டி¸ மராட்டி….குஜராத்தி ன்னு என்னென்னமோ…தற்காப்பு சண்ட பயிற்சி சொல்லித் தாராங்களே.. கத்துக்க முடியாதாடி..?

ஆம்பளைகிட்ட தப்பிக்கனும்முனா ஒடம்பு பலத்த தவிர வேற ஒன்னுமே கெடையாதுங்கடி! ஒருத்தன்கிட்ட மாட்டிக்கிட்டா கெடுத்துக் கொன்னுப்புடுவான்! நீ சாகுறதுக்குள்ள கடிச்சி குதறு.! இடுப்புல கத்தி வச்சிக்க! குத்து! கீறு! முடிஞ்சா கொன்னு போடு! முடியாட்டி செத்துப் போ..! பொம்பளைங்கள கெடுக்கிறவனுக்கு¸ பிஞ்சுக் கொழந்தைங்கள கெடுத்து.. கொல செய்றவன்களுக்கு சமூகத்தில மக்கள்; தண்டனதான்டி.. சரியான தண்டன! இன்னும் கொஞ்ச நேரத்தில மக்கள் தண்டனைய எல்லாரும் வந்து பாருங்கடி..!” என்று பாட்டியம்மா பேச்சையும் ஏச்சையும் முடித்தாள்!

இன்னொரு பாட்டியம்மாவும் வந்து ஏசினாள். “ஏய் ஆம்பளைசாதிங்களா…! பொம்பளைங்கன்னா போதைக்கு மட்டுமா இருக்காங்க.? ஒங்களுக்கெல்லாம் தாய்¸ தங்கச்சி¸ அக்காமாருங்க கெடையாதாடா..? ஒங்க ஆம்பளை சாதி… பெத்த மவளக்கூட வுட்டு வைக்காத மிருக சாதிடா!.. எத்தன அப்பன்காரனுங்க மகமார்கள கெடுத்திருக்கான்? ஒங்கள மிருகம்முன்னு கூட ஏச முடியல்லடா.. சப்பி வீசுற மாங்கொட்டைமாதிரி¸ பொம்பளைங்கள… கொழந்தைகள கெடுத்து கொல்றவனுங்களுக்கு நம்ம நாட்டுல தண்டன போதாதுடா! இது பாரதூரமான குத்தமுன்னு சட்டம் இன்னமும் ஏத்துக்க மாட்டேங்குது…! சதா காலமும் பாதிக்கப்படுற… பொம்பளைங்க இனிமே சட்டத்த ஒங்க கைக்கு எடுக்கணும்டி.! மக்கள் தண்டன.. மகேசன் தண்டனைய விட பெரிசுடி!..” என்று அந்தப் பாட்டியம்மாவும் பேச்சையும் ஏச்சையும் முடித்தாள்..!

அந்த மூதாட்டிகளின் வார்த்தைப் பிரயோகங்களெல்லாம் ‘பெண்ணியல்வாதிகள்’ என்பவர்களின்; பேச்சுக்களைவிட உயர்ந்திருந்தன!

மேடை நிகழ்ச்சியில் பேச்சுக்களும்¸ ஏச்சுக்களும் முடிவடைந்தன..

அங்கே நிற்க வைக்கப்பட்டிருந்த கறுவல் மகேசனின் சட்டையை ஒரு பெண் கழற்றி வீசினாள்…! பார்வதி பாட்டி ஓடி வந்து¸ அவன் கோவணத்தை உருவி வீசினாள்.! அம்மணக்கோலத்தில் மகேசன்.. காட்சி கொடுத்தான்! கூச்சத்தோடு பெண்கள் கண்களை மூடிக் கொண்டார்கள்.. பார்வதி பாட்டி தன் கையிலிருந்த பெரிய பாக்கு வெட்டியை உயரத் தூக்கிப் பிடித்து எல்லாருக்கும் காட்டினாள்.. திடீரென ஆவேசம் கொண்ட பாட்டி.. சாமி ஆடினாள்!.. கறுவல் மகேசனின் மாணியில் பாக்கு வெட்டியை மாட்டி ஒரே நறுக்கு நறுக்கினாள்..!

மகேசனின் அலறல் அண்ட சராசரத்தையே அதிர வைத்தது..! கூடியிருந்த ஆண்கள் பயத்தால் நடு நடுங்கி மருண்டு நின்றார்கள்.. தயாராக இருந்த இளைஞர்கள்; கறுவலைத் தூக்கி வாகனத்தில் வைத்து ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்கள்.… நூற்றுக் கணக்கான பெண்கள் “மகேசனின் *** நாங்கள்தான் துண்டாடி “மக்கள் தண்டனை” கொடுத்தோம்….! எங்களைக் கைது செய்து “அரச தண்டனை” கொடுங்கள்!” என்று ஊர் பொலிஸ் நிலையத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றார்கள்!…காமுகனுக்கு மரணத்தண்டனையை விட சதாகாலமும் அனுபவிப்பதற்கு இதுதான் சரியானத் தண்டனை என்று கோசமிட்டுக் கொண்டு சென்றார்கள்!

இன்னொரு கூட்டத்தினர் துண்டித்த *** பாடையில் சுமந்து மக்கள் நடமாடும் முச்சந்தியில் புதைத்தார்கள்..! மற்றவர்கள்¸ தயாராகவிருந்த ஞாபகார்த்தக் கல்லை பொதுமக்கள் பார்வைக்கு புதை குழி மேல் நாட்டினார்கள். அந்த ஞாபகார்த்தக் கல்லில் இப்படி ஒரு வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.. “பெண்களையும்¸ சிறுமிகளையும் கற்பழித்துக்; கொலை செய்த காமுகன் கறுவல் மகேசனின் *** துண்டிக்கப்பட்டு இங்கே புதைக்கப்பட்டிருக்கிறது.. இது தொடரும் மக்கள் தண்டனையாகும்..!”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *