காரையார் என்ற நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊருக்கு அரசுப் பள்ளி ஆசிரியர் பணியில் சேர எனக்கு ஆணை வந்ததும் எல்லோரும் சொன்னதே,” அந்தப் பக்கத்து ஊர்கள் எல்லாம் நல்ல செழிப்பான ஊர்கள்தான். பக்கத்தில் இரண்டு அணைகள், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம், இயற்கை எழில் கொஞ்சும். ஆனா உன்ன மாதிரி ஆட்களுக்கு சரிப்பட்டு வராது பொறந்தது முதல் சென்னை வாழ்க்கையை அனுபவித்த உனக்கெல்லாம் அந்த கிராமத்து வாழ்க்கையெல்லாம் சரிப்பட்டு வராது” என்பதுதான்.
அவர்கள் வார்த்தைகள் கொஞ்சம் சிந்திக்க வைத்தது. நண்பன் குமார் கூட , “டேய், எங்க சித்தப்பாவுக்கு தெரிந்த அரசியல் பிரமுகர் ஒருத்தரு இருக்காருடா. ஸ்கூல் எஜிகேஷன் டிபார்ட்மெண்டையே கையில் வைச்சிருக்கார். நீ இரண்டு லட்சம் செலவு பண்ணினால் போதும், இங்கே சிட்டி பக்கத்திலேயே எங்கனா ஒரு ஸ்கூலில் மாடிபிக்கேஷன் ஆர்டர் வாங்கிடலாம்” என்றான். “இதுவரை எதுக்குமே நான் லஞ்சம் கொடுத்ததில்லை. இனிமேலும் கொடுப்பதாக இல்லை” என்று சொன்னதும் சிரித்தான். “தோ டா, இன்னும் இரண்டு மாசத்தில் ஐந்து லகரம் தரேண்டா, டிரான்ஸ்பர் வாங்கிக் கொடுடா ன்னு என் வூட்டாண்ட நீ நிக்கப்போற பாரு” என்று சவால் வேறு விட்டான். அப்பா அம்மாவிற்கு என்னைத் தனியாக விட மனதில்லை.
இண்டர் நெட்டில் காரையார் என்ற பெயரை வைத்துத் தேட ஓரளவுக்கு பரிச்சயமானது. திருநெல்வேலியிலிருந்து சுமாராக ஒரு மணி நேரப் பயணம். மலை அடிவாரம் என்று சொல்ல முடியாது. ஆனால் ஆறேழு கிலோமீட்டர் தூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை. நான் பணியாற்ற வேண்டிய பள்ளி மலை அடிவாரத்தில் பாவனாசத்திற்கு மேல் காரையாரில் அமைந்திருந்தது என்பதை அறிந்து கொண்டேன். அப்புறம் பெட்டி படுக்கை எல்லாம் கட்ட ஆரம்பித்தேன். அப்பா, அம்மா இருவருக்கும் நான் அங்கு போய் வேலை செய்வதில் விருப்பம் இல்லை. இருந்தாலும் அரசாங்க பள்ளி, மெரிட்டில் கிடைத்த வேலை என்பது ஒரு பக்கம். அப்பா கொஞ்சம் இடதுசாரி சிந்தனை கொண்டவர். ஆகவே லஞ்சம் கொடுத்து டிரான்ஸ்பர் என்பதில் உடன்பாடு இல்லை. மேலும் அவ்வளவு பணமும் கிடையாது.
திங்கள் கிழமை பணியில் சேருவதற்கு இரண்டு நாளுக்கு முன்பாகவே வெள்ளிக் கிழமையே நெல்லைக்கு போய் விட்டேன். நெல்லையில் சுமாரான ஒரு லாட்ஜில் தங்கிக் கொண்டு அந்த ஊருக்கு, பஸ் பிடித்து போனேன். நல்ல மார்கழி மாதக் குளிருடன் இதமான வெயில் சின்னச் சின்ன அழகான கிராமங்கள் பச்சைப்பசேல் வயல்கள், தூரத்தே மேற்கு தொடர்ச்சி மலைகள் என்று பயணம் ரம்யமாக இருந்தது.
பள்ளிக்கூடத்திற்கு இறங்க வேண்டிய இடம் வந்ததும் கண்டக்டர், “ஆள் இறக்கம்”, என்று சப்தமாகச் சொல்லி விசிலடித்து “சார்வாள், இறங்குங்க” என்றதும் ஊரை கூடுதலாகப் பிடித்துப்போனது. வழியேற கண்டக்டரிடம் பேசியபடி வந்ததில் நிறைய தெரிந்து கொண்டேன். “சார்வாள், கமல் நடித்த பாவனாசம் படம் பார்த்திங்கல்லா, அது இங்கனதாம் எடுத்தாவள்ளா” என்று சொல்லி ஆகக் கூடி மனதில் நல்லதொரு ஆரம்பம் தந்து விட்டார். அந்த பள்ளிக்குப் போக நான் இறங்கிய இடம் பாவனாசம் கோவில். பக்கத்தில் 50 அடி ஆழத்தில் சுழித்தோடும் தாமிரபரணி ஆறு. அங்கிருந்து காரையார் போக வேண்டும். படிக்கிற குழந்தைகள் எல்லாம் பெரும்பாலும் அங்கேயே உள்ள மலைக்கிராமங்களில் வசிப்பவர்களே. விக்ரமசிங்கபுரம் என்ற வி.கே புரம் தான் அருகிலுள்ள பெரிய நகரம். பெரிய நெசவாலை ஒன்று அங்குள்ளது. வி கே புரத்தில் தங்கிக் கொண்டு தினம் காரையார் போக வர வசதியாக இருக்கும். அடுத்த முறை சென்னையிலிருந்து வரும் போது தண்டர்பேர்டை ரயிலில் போட்டு எடுத்து வந்து விட வேண்டும்.
தினம் வி கே புரத்திலிருந்து காரையார் செல்ல தோதாயிருக்கும். பேருந்து வர எப்படியும் ஒரு மணி நேரமாகும் என்பதால் எப்படி பொழுதைக் கழிப்பது என்று நினைத்தவன் கோவிலுக்குள் நுழைந்தேன்.
அதிகம் கூட்டம் இல்லை. சுற்றி வந்தவனுக்கு ஒரு பெரிய உரலில் மஞ்சள் இடிப்பதைப் பார்த்தேன். அர்ச்சகரிடம் விசாரித்ததில் மணமாகாத ஆண்களும், பெண்களும் மஞ்சள் கொண்டு வந்து இடித்தால் விரைவில் திருமணம் ஆகும் என்ற ஐதீகம் என்றார். அப்போது தான்
“சொன்னாலும் நீர் கேளீரே, சும்மா சுவர் போல் இருந்தீரே
பொன்னா பொன் ஆவரையுடன் பொன்னும் அத்தனை மாலைச் சாற்றால்
கன்னார் பேதி சிலை ரசம் காந்தம் வெள்ளியும் தானுருக்க
என்னாம் என்னாம் என்னாதே பொன்னாம் பொன்னாம் பொன்னாமே” என்ற பாடலை யாரோ பாடக் கேட்டேன்.
இங்கே இந்த பாடலைப் பாடுவது யார் என்று நினைக்கும் போதே, “பவுன் மூட்டை சாமி வாங்க” என்று அர்ச்சகர் கூப்பிட்ட அந்த ஆளைப் பார்த்தேன். எப்படிப் பார்த்தாலும் ஐம்பது வயது மதிக்கலாம் . நடு வயதுக்கே உரிய வழுக்கை, நரைத்த முடி, மழுமழு என்று சவரம் செய்த முகம், எம்.ஜி.ஆர்அரும்பு மீசை , தூய வெள்ளை வேட்டி, மல் ஜிப்பா, பச்சை கலர் பட்டை பெல்ட், கழுத்தில் தங்கத்தில் உருத்திராட்சம் கட்டிய தங்கச் சங்கிலி. நெற்றியில் பட்டையாக திருநீறு, சந்தனத்தில் குங்குமப் பொட்டு என்று கிராமத்து மைனர் மாதிரி தோற்றம், ஆனால் கையில் சம்பந்தமில்லாத இரண்டு அழுக்கு வேட்டி மூட்டைகள். என்னவோ மனதில் இனம் புரியாத உணர்ச்சி. துக்கமா, சந்தோஷமா என்று சொல்ல முடியாத உணர்ச்சி அந்த மனிதரைப் பார்த்ததும் ஏற்பட்டது. கைக் கடிகாரம் மணி எட்டு என்று காட்டியது.
“செம்பு பொன்னாகும் சிவாய நமவென்னில்
செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
செம்பு பொன்னாகும் சிரீயும் கிரீயுமெனச்
செம்பு பொன்னான திருவம் பலமே” என்றபடி பாடிக்கொண்டு வந்தவர்
என் பக்கம் திரும்பி, “என்னைத் தேடி வந்து விடுவாய் என்று தெரியும். வா, படித்துறையில் நிதானமா உட்கார்ந்து பேசலாம்” என்று சொல்லிவிட்டு விடுவிடு என்று வெளியில் போனார் அந்த மனிதன்.
இந்தத் தோற்றத்தில் சென்னையில் இதுவரை யாரையும் பார்த்ததில்லை. யார் இந்த மனிதர்? நமக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? நான் வந்த விஷயமே வேற , அப்படி இருக்க என்னுடன் பேச வேண்டுமாமே. கோவிலுக்கு வராமல் பஸ் ஸ்டாண்டிலேயே காத்திருந்திருக்கலாமோ? பள்ளிக்கு வேறு போக வேண்டும். அறை பார்க்க வேண்டும். அடுத்த சனி ஞாயிறில் சென்னை போக டிக்கெட் எடுக்க வேண்டும் இப்படி தலைக்கு மேல் வேலைகள் இருக்க யாரோ நாட்டு ஷோக்காளி கூப்பிட்டதை பெரிதாக எடுத்துக் கொண்டு போக வேண்டுமா?
அர்ச்சகரைக் கேட்கலாம் என்றால் கூட்டம் சேர ஆரம்பித்து விட்டதில் எதுவும் கேட்க முடியவில்லை.
சரி நம்ம வேலையை நாம் பார்க்கப் போகலாம் என்று முடிவெடுத்து பஸ் ஸ்டாண்ட் நோக்கி வரவும் காரையார் போகும் ஒரு தனியார் பேருந்து வரவும் சரியாக இருந்தது. கைகாட்டி நிறுத்தி வண்டியில் ஏறி விட்டேன். பேருந்து சட்டென நடு ரோட்டில் எஞ்சின் அணைந்து போய் நின்று விட்டது. பத்து நிமிடமாய் ஓட்டுநர் பலமுறை முயன்றும் வண்டி கிளம்பவில்லை. கண்டக்டர், “ எல்லாரும் இறங்கிடுங்க, வண்டி பிரேக் டவுண் ஆகிடுச்சு” என்று அறிவித்த அடுத்த நொடியில் கோவிலில் நான் பார்த்த மைனர் ஆசாமி வண்டியில் ஏறினார். வண்டிக்குள்ளிருந்து இறங்கும் யத்தனத்தில் இருந்த பயணிகளை, “எல்லாரும் இடத்தில் போய் உட்காருங்க. மாரிமுத்து நீ வண்டியை ஸ்டார்ட் பண்ணு” என்று கட்டளையிடும் குரலில் சொன்னார். ஓட்டுநர் மாரிமுத்துவும் வண்டியை இயக்க சமர்த்தாக எஞ்சின் இயங்க ஆரம்பித்தது.
வண்டிக்குள் ஏறி சுற்றும்முற்றும் பார்த்தவர், என்னைப் பார்த்து சிரித்து
“ சாயங்காலம் உன் காரையார் பள்ளிக்கூட வேலையெல்லாம் முடித்துக் கொண்டு என்னை படித்துறையில் பாரு” என்று சொல்லிவிட்டு இறங்கிப் போனார். பேருந்தில் இருந்த எல்லோரும் என்னையே பார்க்க வெட்கம் பிடுங்கித்தின்றது. வாழ்க்கையில் என்னையே நான் அன்னியமாக உணர்ந்தது அந்தக் கணத்தில் தான்.
கண்டக்டரிடம் காரையார் ஒரு டிக்கெட் என்று நூறு ரூபாய் நோட்டை நீட்டியதும்,
“ சார்வாளுக்கு எந்த ஊர்? பவுன்மூட்டை சாமியை மின்னகூட்டியே தெரியுமா? சாமிக்கு வேண்டிய ஆளுன்னு தெரிஞ்ச பின்னாடி டிக்கெட் எல்லாம் வேண்டாம் சார். உங்களுக்கு காசு வாங்கி சீட்டுக் கொடுத்தது முதலாளிக்குத் தெரிந்தால் என் சீட்டுக் கிழிஞ்சிடும். காரையாரில் எங்கே போகணும் சார்? அடுத்த டிரிப் மதியம் இரண்டு மணிக்கு காரையார் வருவேன். அதுக்குள்ள எல்லாம் முடித்து வந்திடுங்க. அப்புறம் விட்டா நாலு மணிக்குத்தான்” என்று மூச்சு விடாமல் பேசினார்.
என்னவோ தலை சுற்றியது. ஒன்றும் புரியவில்லை. நல்ல மர்ம நாவலைப் படிக்கிற மாதிரி இருந்தது. கண்டக்டரிடம் பவுன் முட்டை சாமி என்ற நாட்டு ஷோக்காளி பற்றிக் கேட்க நினைத்து வாய் திறந்த போது வார்த்தை வர மறுத்தது. நாக்கெல்லாம் உலர்ந்து போனது.
ஒரு வழியாக பள்ளிக் கூடம் வாசலில் நிறுத்தி இறக்கி விட்ட நடத்துனர்,
“சார் மறக்காமல் சாமிய பார்த்திடுங்க. நான் இரண்டு மணி டிரிப்பில் உங்களை பிக்அப் பண்ணிக்கிறேன்.ரை ரைட்ட்ட்ட்” என்று இரட்டை விசில் கொடுத்ததும் பேருந்து மெலிதாகப் புகையைக் கக்கி விட்டுச் சென்றது.
பள்ளிக்கூடம் சிறியதுதான். மொத்தமே என்னையும் சேர்த்தால் எட்டு ஆசிரியர்களும் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு அலுவலக உதவியாளர் மற்றும் ஒரு இளநிலை உதவியாளர் ஆக பதினோரு பேர்கள். மாணவர்கள் மொத்தம் முன்னூற்றுச் சொச்சம்தான். வாத்திமார்கள் எல்லாம் அம்பாசமுத்திரம், கல்லிடை, விகே புரம் என்று உள்ளூர் வாசிகள். நான் மட்டும்தான் மெட்ராஸ்காரன். என் தலையலங்காரம், உடையலங்காரம் எல்லாம் அவர்களிடமிருந்து கொஞ்சம் வேறுபட்டிருந்ததை என்னை அவர்கள் பார்த்த பார்வையில் அறிந்து கொள்ள முடிந்தது. அப்புறம் நான் விரைவில் மாறுதல் பெற்றுச் சென்று விடுவேன் என்ற எண்ணமும் அவர்களுக்கிருந்ததை அறிய முடிந்தது. முக்கியமாக அவர்கள் எல்லாம் நாற்பதைக் கடந்தவர்கள், மணமானவர்கள். நான் மட்டும்தான் நடு இருபதுகளில் இருந்த பிரம்மச்சாரி.
ஓரளவுக்கு பரிச்சயம் ஆகி விட்டனர். மதியம் சத்துணவு ஆயாமா கொடுத்த சாதமும் சாம்பாரும் அத்தனை ருசியாக இருந்தது. இரண்டு மணி பேருந்து பிடிக்க சாலைக்கு வரும் போது அலுவலக உதவியாளர் கசமுத்து கூட வந்தார். அவரிடம் பவுன் மூட்டை சாமி பற்றிக் கேட்க நினைத்தால் மறுபடியும் எதோ ஒன்று என் வாயைக் கட்டியது. சம்பந்தமில்லாமல் எதையோ பேச முடிந்ததே ஒழிய பவுன் மூட்டை சாமி பற்றி எதுவும் பேச முடியவில்லை.
ஞாயிற்றுக் கிழமை வந்தால் தங்குவதற்கு கசமுத்து விகே புரத்தில் நல்ல இடம் பார்த்துத் தருவதாகச் சொன்னார். வாடகை அதிக பட்சம் ஆயிரம் என்றார். பெருந்து வந்தது. நடத்துனர் சினேகமாக சிரித்து சாப்பிட்டாச்சா சார், என்றவர் கசமுத்துவிடம், “அண்ணாச்சி, பவுன் மூட்டை சாமிக்கு சார்வாளைத் தெரியும். அவாளத்தான் இப்ப பார்க்க பாவநாசம் போறாவ” என்று சொல்லிவிட்டுப் புறப்பட விசில் கொடுத்தார்.
என்னை கோவில் அருகே இறக்கி விட்டார் நடத்துனர். படித்துறையில் நிறைய சுற்றுலாப் பயணிகள். கிட்டத்தட்ட ஐம்பது படிகள் கீழே இறங்க
ஸ்படிகமாய் தாமிரபரணி ஓடிக்கொண்டிருந்தது. காலையில் பார்த்த மனிதரைத் தேடினால் அந்த அங்க அடையாளத்தில் யாரும் இல்லை.
பக்கத்தில் உள்ள மண்டபத்தில் வந்து உட்கார்ந்த என் அருகில் வந்து அமெரிக்க உச்சரிப்பில், “கேன் யூ ரெககனைஸ் மீ, வீ மெட் சம் டைம் பேக் இன் சென்னை இன் எ மூவி தியேட்டர்” என்று ஆங்கிலம் பேசியவனை உற்று நோக்கினேன்.
“டூ யூ ஸ்டில் கீப் தட் கோல்டன் பின் தட் ஐ ப்ரெசென்டெட் யூ தட் டைம்” என்றதும் புரிந்தது.
அது நன்றாக நினைப்பிருக்கிறது. போன 2015 ஜனவரி 26 அன்று பெரம்பூர் எஸ்2 தியேட்டரில் “ஐ” படம் பார்க்கச் சென்றிருந்தேன். படம் ஆரம்பித்த பின் என் அருகில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்த ஆசாமி இடை வேளையில் விளக்குகள் எரிய ஆரம்பித்ததும் அந்த ஆசாமியின் முகத்தைப் பார்த்தேன். “ சிரித்தபடி படம் எப்படி சார்” என்றான்
“ ம். பரவாயில்லை. ஆனா நம்ப முடியாத கதை” என்றதும்
“பல நேரங்களில் உண்மைகள் கட்டுக்கதைகளை விட விசித்திரமாக இருக்கும் என்பார்களே. இப்போது கூட என்னால் நம்ப முடியாத ஒன்றை செய்ய முடியும்” என்றான்.
“உங்கள் சட்டையில் ஒரு குண்டூசி குத்தியிருக்கிறது அல்லவா. அதை என்னிடம் கொடுங்கள்”
கண்ணெதிரில் தன் கையில் வைத்திருந்த பையிலிருந்து ஒரு பச்சிலையை எடுத்து அந்த குண்டூசி மீது தேய்த்துத் திரும்பவும் என்னிடமே திரும்பக் கொடுத்தவன், “ படம் முடிந்ததும் உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கு” என்றான்.
நான் கழிப்பிடம் சென்று விட்டு மீண்டும் இருக்கைக்கு வந்த போது ஆசாமியைக் காணவில்லை. சரி படம் போட்ட பின்னர் வருவான் போல என்று நினைத்திருந்தேன். அவன் படம் முடியும் வரை வரவேயில்லை. படம் முடிந்து வீட்டிற்கு வந்தவன் இந்த நிகழ்ச்சியை அடியோடு மறந்து விட்டேன். ஒரு வாரம் கழித்து சட்டையை துவைக்கப் போடும் போது கையில் ஏதோ குத்தி ரத்தம் வந்தது. சுரீர் என்ற வலியில் எடுத்துப் பார்த்தால் தங்க நிறமாக குண்டூசி இருந்தது கண்டு வியப்புற்றேன். அங்கே தியேட்டரில் நடந்தது நினைவுக்கு வர பக்கத்து மிஸ்ரிமல் சேட் அடகுக் கடைக்குப் போய் குண்டூசியை உரசிப் பார்க்க அசல் சொக்கத்தங்கம். என்னால் நம்ப முடியவில்லை. அதை பத்திரமாக என் டைரியில் குத்தி வைத்தேன். அதோடு சுத்தமாக மறந்து விட்டேன். அன்று தியேட்டரில் பார்த்த அந்த ஆசாமிதான் இப்போது என்னுடன் பாவநாசத்தில் படித்துறையில் பேசுபவன் என்பதை மூளை உணர்த்தியது.
“யா. நௌ ஐ ரிமம்பர்” என்றேன்.
“ஆர் யூ லுக்கின் ஃபார் சம் ஒன் ஹியர்”? என்றவன் சட்டென தமிழில், “காலையில் கோவிலில் அப்புறம் பஸ்ஸில் பார்த்த அந்த நாட்டு ஷோக்காளி மனிதரையா? அப்படியென்றால் அது நான்தான்”, என்றதும் திடுக்கிட்டேன். “சரி. இன்றிரவு என்னுடன் பாணதீர்த்தத்தில் தங்குகிறாய். அங்கே நிறைய அறிந்து கொள்வாய். புறப்படுவோம்”, என்றவனிடம்
“ஒரு நிமிஷம், நீங்கள் யார்” என்றேன் நடுங்கும் குரலில்.
“ அதை இன்றிரவு அறிந்து கொள்வாய். இது ஈசனின் கட்டளை. நாம் யாருமே மீற முடியாத ஒன்று. தலையெழுத்து என்று வைத்துக்கொள். உன் எல்லாக் கேள்விக்கும் விடை தருகிறேன்”.
பாணதீர்த்தத்தை நாங்கள் எப்படி அடைந்தோம் என்பது நினைவில் இல்லை. காட்டுப்பாதை ஒற்றையடித்தடத்தில் நடந்தது மட்டும் லேசாக நினைவில் இருந்தது. நாங்கள் இருவரும் அங்கு போய் சேர்ந்த நேரம் இரவு எட்டு மணி என்றது என் கைக்கெடிகாரம்.
கும்மிருட்டு. ஓ என்று அருவி விழும் பேரொலி. அமானுடமாக இருந்த அந்தச் சூழல் பயமாக இருந்தது. போதாத் குறைக்கு ஒரு அமானுடன் வேறு பக்கத்தில். பேசாமல் குமார் சொன்னதைக் கேட்டு மாடிபிக்கேஷன் ஆர்டருக்கு முயன்றிருக்கலாம். எல்லாம் விதி.
” தொம்மா, ஏ தொம்மா நான் வந்திட்டேன். கூடவே விருந்தாள் ஒருத்தரும் வந்திருக்காரு. சீக்கிரமா விளக்கு போடு. சாப்பாடு விருந்தாளுக்கு கொடு. களைச்சிப் போய் இருக்காரு என்று இருட்டில் எங்கோ பார்த்து குரல் கொடுத்தான். ஐந்து நிமிடம் கழிந்திருக்கும். ஒரு காணிக்காரன் கையில் அரிக்கேன் விளக்கோடும் ஒரு தூக்குச் சட்டியோடும் வந்தான்.
“ சாமி வந்திட்டீங்களா. கும்பிடறேன் சாமி” என்று சொல்லி தூக்குச் சட்டியைத் திறந்து “சாப்பிடுங்க”என்று என் முன் வைத்தான். இருந்த கொலைப்பசியில் என்ன பதார்த்தம் என்று கூட யோசிக்காமல் அள்ளி எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன். தினைமாவில் மலைத்தேன் ஊற்றி பிசைந்த களி. வாழ்க்கையில் முதல் முறையாக சாப்பிட்டேன். கொஞ்சம் பயம் தெளிந்திருந்தது.
“ தொம்மா, நீ கிளம்பு. நான் இவரோட தனியா பேசணும். சரியா சந்திரன் முக்கால் மேற்கே இறங்கும் போது வந்தாப் போதும்” என்றான்.
அப்புறம் அவன் சொன்னது இதுதான்.
“ என் பெயர் சிவாக்கியன். என்னை திருமழிசைப் பிரான் என்போர் சிலர். என்னை நாத்தீகன் என்றும் சொல்வார்கள். நீ கூட படித்திருப்பாயே
“நட்ட கல்லை தெய்வம் என்று புட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொன என்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ” என்ற பாடலை.
இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை எனக்கு சித்தித்தது. அதை என் அடுத்த தலை முறைக்கு மாற்ற வேண்டும். அதற்கு பொன் மீது ஆசையில்லாதவனை தேடினேன். அப்படித் தேடும் போது அவர்களிடம் உள்ள எதாவது இரும்புப் பொருளை தங்கமாக மாற்றிக் காட்டுவேன். தங்கமாக மாறியதை அறிந்ததும் என்னைத் தேடி அந்த ரகசியத்தை அறியவே எல்லோரும் முயல்வர். ஆனால் நீ ஒருவன் தான் என்னை அந்த வித்தைக்காகத் தேடி வரவில்லை. ஆகவே என் குருநாதர் சொன்னபடி பொன்னாசை அற்றவன் நீ என்று கண்டு கொண்டேன்”.
“எண்ணான வேதைகோடி உத்தமர்க்குக் கிட்டும் அல்லல்
உண்மையாம் சான்றோர்க்கும் தயை குணம் உள்ளோருக்கும்
தன்மையாம் மொழிகள் கூறி உகந்ததுமே பணிந்திட்டோர்க்கும்
வண்மையாம் மனமுள்ளோர்க்கும் மேன்மையாம் பலிக்கும் தானே”
“எண்ணிக் கணக்கிடமுடியாத கோடிக்கணக்கான ரசவாத முறைகள் உள்ளன.
அவை உத்தமர்களுக்கும், உண்மையான சான்றோருக்கும், இரக்க
குணமுள்ளோருக்கும் , உண்மையானதொண்டருக்கும், நல்ல மனம்
உள்ளவருக்குமே பலிக்கும்”
நான் என்னுடைய அடுத்த பிறவிக்கு வேண்டி சமாதி ஆகப் போகிறேன். அதற்கு முன் உன்னிடம் என் மூட்டையில் உள்ள பச்சிலைகளை உன்னிடம் ஒப்படைக்கிறேன். அதில் ஒன்றே ஒன்று மட்டுமே அய சொர்ண பத்ரம். அய சொர்ண விருட்சத்தின் இலை. அதை அடையாளம் காணும் முறையையும் உபதேசிக்கிறேன். தகுதி வாய்ந்த ஒருவரை உன் வாழ்நாளில் தேடிக்கண்டுபிடி. உன் பொறுப்பை அவனிடம் கொடுத்த பின்தான் உனக்கு அமர வாழ்வு சித்திக்கும். பொன் ஒரு ஆட்கொல்லி. இதை என் வரலாறைப் படித்துத் தெரிந்து கொள். ஆகவே கவனமாக இருப்பது உன் கடமை. இப்போது நீ தைரியமாக துயில் கொள். நான் உனக்குக் காவலிருப்பேன்” என்றவர் யோக நிஷ்டையில் ஆழ்ந்தார்.
அவரையே பார்த்துக் கொண்டிருந்த நான் எப்பொழுது தூங்கினேன் என்று நினைப்பில்லை. காலை வெயில் சுள் என்று முகத்தில் பட்ட போது , பாபநாசம் கோவில் படித்துறை மண்டபத்தில் படுத்திருந்தேன். பக்கத்தில் இரண்டு அழுக்கு மூட்டைகள்.
நிதானமாகச் சிந்தித்தேன். மூட்டையில் உள்ள இலைகளில் அய சொர்ண பத்ரம் எது என்பதை நான் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். மற்றபடி யாருக்கும் தெரியாது. மனிதனை கொல்லும் ஆட்கொல்லி நான் அடுத்த தலைமுறைக்கு தரப் போவதில்லை. அமர வாழ்வு எனக்கு வேண்டாம். பொன்னுக்கு இந்த மனிதகுலம் அடித்துக் கொள்ள வேண்டாம். நானும் பவுன் மூட்டை தூக்கி பைத்தியமாக, சித்தனாக அலைய வேண்டாம் என்று தீர்க்கமாக முடிவெடுத்தேன். மலையேறி ஒவ்வொரு இலையாக காட்டுக்குள் போட்டு இரண்டு மூட்டைகளையும் காலி செய்தேன். எதற்கும் இருக்கட்டும் என்று அய சொர்ண பத்ரத்தை அலைபேசியில் நாலைந்து படம் எடுத்துக் கொண்டு பாபநாசம் ஆற்றுக்கு வந்து தலை மூழ்கி கோவிலுக்குச் சென்றேன்.
தரிசனம் முடித்து வெளியில் வந்தால் கசமுத்து சார்வாள் திருநெல்வேலியிலிருந்து காலையிலே வந்திட்டீயள் போல, டீ காந்திமதி சார்வாள் நம்ம ஸ்கூலுக்கு வந்திருக்கிற கணக்கு சார் என்றான். வணக்கம் சொன்ன காந்திமதிக்குப் பின்னால் நேற்று மாலை பார்த்த ஆசாமி குறும்பாகச் சிரித்தபடி கையில் இரண்டு அழுக்கு மூட்டைகளை வைத்துக் கொண்டு என்னைப் பார்த்து, “சார்வாள் என்னதான் மறதியானாலும் லக்கேஜை இப்படி மறந்து விட்டிட்டு போகலாமா” என்றார்.
மிக அருமை! ரசித்தேன்.