பழையமுகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 11,344 
 
 

கதை ஆசிரியர்: ஜெயமோகன்

பதினொரு மணிக்கு மேலேதான் கூட்டி வருவதாகச் சொல்லியிருந்தான் கல்யாணம். அதுவரைக்கும் அவனுக்கு செய்யும்படியாக வேலை என ஏதும் இல்லை. அவன் சென்று பார்க்கவேண்டியிருந்தவரை மதியமே சந்தித்துவிட்டான். மாலைவரை, இரவு வரை கூட நீளும் என அவன் நினைத்திருந்த வேலை பத்து சொற்றொடர்கள் மற்றும் சில சங்கடமான புன்னகைகள், இறுக்கமான மௌனத்துடன் முடிந்து விட்டது.

அவன்கு மணிக்கு அவன் அந்தப் பெரிய மரக்குடோனில் இருந்து வெளியே கிளம்பியபோது விடுதலை உணர்வையே அடைந்தான். சில நிமிடங்கள் நீடித்த தளர்ச்சி சாலையில் நடக்க நடக்க கரைந்து இல்லாமலாகியது. சாலையின் வலப்பக்கம் நல்ல நீலநிறமான ஆறு வந்துகொண்டே இருந்தது. அதில் சில சிறிய படகுகள் சென்றுகொண்டிருந்தன. ஆற்றின் மீதிருந்து குளிரான காற்று வந்து சட்டைக்குள் புகுந்து உடம்பை தழுவி சிலுசிலுவென ஓடியது. மழைவிட்டு வரும் வெயில் போல வெப்பமில்லாத வெளிச்சம்.

அவனுக்கு ஒரு டீ குடிக்க வேண்டும்போல் இருந்தது. சற்றுமுன்புதான் அவன் சந்திக்க வந்தவர் அவனுக்கு ஒரு டீ கொடுத்திருந்தார். கம்பிவளையங்களில் மாட்டப்பட்ட கண்ணாடி டம்ளரில் வந்த டீ ஆறிப்போய் ஆடைகட்டி இருந்தது. அவன் சில மடக்குகள் குடித்துவிட்டு அதை அப்படியே வைத்துவிட்டிருந்தான். இப்போது டீக்கடைக்காக தேடியபோது எங்கும் கண்ணில் படவில்லை. அந்தச்சாலையில் மக்கள் நடமாட்டமே மிகவும் குறைவாக இருந்தது. அவ்வப்போது சில டிம்பர் லாரிகள் மட்டும் இரைந்தபடிச் சென்றன. சில சைக்கிள்கள் நிழல்சரிய களைப்புடன் கடந்து சென்றன.

அவன் மேற்கொண்டு என்ன செய்வது என்று சிந்தித்தான். நகரத்தின் நடுவே இருந்த விடுதியறைக்குச் சென்று படுத்துவிடவேண்டும் என்று தோன்றியது. ஆனால் நேற்று மாலை அவன் அந்த அறைக்கு வந்தது முதல் அப்படியே படுத்துக்கொண்டுதான் இருந்தான். இன்று காலையில் கூட பதினொரு மணிவரைக்கும் அவன் எழவில்லை. பின்பு எழுந்து காபி வரச்சொல்லி குடித்து விட்டு அவர்கள் கதவுக்குக் கீழே போட்டிருந்த மலையாளத் தினசரியை எடுத்து தலைப்புகளை வாசித்து விட்டு மீண்டும் கட்டிலில் படுத்து மேலே பிளாஸ்டர் போடப்பட்ட கூரையையே பார்த்துக்கொண்டிருந்தான். பின்பு டிவியை போட்டு பழைய பாட்டுகளை மதியம் வரை பார்த்தான். பசித்தபோதுதான் கீழே வந்து சாப்பிட்டுவிட்டு அப்படியே கிளம்பினான். குளிக்கவில்லை.

அப்போது அவனுக்கு ஒன்று தோன்றியது, அந்தச் சந்திப்பு அப்படி முடியவேண்டும் என்றுதான் அவனே நினைத்தானா என்று. அதுதான் அவனுக்கு அதுவரை நிகழ்ந்த விஷயங்களுக்கு சரியான பொருத்தமான அடுத்த நிகழ்ச்சி என்று மனம் எண்ணிவிட்டிருந்தது. இல்லையேல் ஏன் அவன் குளிக்காமல், ஷேவ் செய்துகொள்ளாமல், நல்ல சட்டை கூட மாற்றாமல் கிளம்பி வரவேண்டும்? இளைமையில் என்றால் இப்படி ஒரு சந்திப்புக்கு அவன் எத்தனை உற்சாகமாக , எவ்வளவு எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் கிளம்பியிருப்பான். அந்த நம்பிக்கை உள்ளே இருந்து கழன்றுவிழ ஆரம்பித்ததும் எல்லாமே போய்விடுகின்றன.

சலிப்புடன் நின்று ஆற்றைப் பார்த்தான். ஆற்றில் ஒரு சிறிய படகில் செல்லவேண்டும் போலிருந்தது. ஒரு படகுக்காரனிடம் கேட்டுப்பார்த்தால் என்ன? ஆனால் அப்பகுதியில் படகுகள் ஏதும் ஒதுங்குவதாக தெரியவில்லை. சாலையோரம் நின்ற கொன்றை மற்றும் இலுப்பை மரங்களின் கிளைகள் சரிந்து நீருக்கு மேல் தவழ முயல்வது போல நின்றன. அவை குனிந்து தண்ணீர் குடிப்பது போல அவனுக்கு தோன்றியது. ஆற்றின் விளிம்பில் மிகச்சரிவாக கருங்கற்களை அடுக்கியிருந்தார்கள். நீர் விளிம்பு கரடுமுரடான கற்பரப்பில் மெல்ல வருடி நெளிந்துகொண்டிருந்தது

சினிமாவுக்குச் செல்லலாம் என்று நினைத்தான். ஆனால் அந்த நினைப்பு வந்ததுமே மனம் எதிர்த்துவிட்டது. அவனால் ஒரு திரையரங்குக்குள் இரண்டரை மணிநேரம் உட்கார்ந்திருக்க முடியும் என்று தோன்றவில்லை. ஏற்கனவே பலமுறை சலிப்புற்ற வேளையில் சினிமா பார்க்கச் சென்று பத்து நிமிடங்களுக்குள் வெளியே வந்திருக்கிறான். சொல்லப்போனால் இந்த மூன்று வருடத்தில் அவன் ஒரு படத்தைக்கூட உட்கார்ந்து பார்த்ததில்லை. ஆனாலும் அலுப்பும் தனிமையும் அழுத்தும்போது சட்டென்று அவன் திரையரங்குகளுக்குள் நுழைந்துகொண்டுதான் இருந்தான்.

ஒருகாலத்தில் அவனுக்கு சினிமா உயிர்மூச்சாக இருந்திருக்கிறது. அவனுடைய சிறிய நகரத்தின் பதிமூன்று திரையரங்குகளிலும் வரும் பெரும்பாலான படங்களை அவன் பார்த்துவிடுவான். அனேகமாக தினமும் மாலையில் இரண்டாவது ஆட்டம் பார்ப்பதுண்டு. மாலை ஏழுமணி வாக்கில் சண்முகம் டூவீலர் ரிப்பேர் கடையில் கூடி பேசி சிரித்து பரோட்டா சிக்கன் சாப்பிட்டுவிட்டு படம்பார்க்கக் கிளம்பும் ஏழெட்டுபேர் கொண்ட குழு இருந்தது. எவருக்குமே எதைப்பற்றியும் அக்கறை இருக்கவில்லை. பேச்சு முழுக்க சினிமாதான். சினிமாவை விட சினிமா வம்புகள். ஒவ்வொருவருக்கும் அந்தரங்கமாக அவர்கள் எடுக்கவிருந்த சினிமாக்கள் இருந்தன. கணேசன் ஒரே ஒரு பாட்டில் ஒரே ஒரு முறை தெரிந்த நடிகைக்குக் கூட பெயர் தெரிந்து வைத்திருந்தான். அவனை அதில் வெல்ல ஆளில்லை.

அப்போதுதான் அவன் கல்யாணத்தை நினைத்துக்கொண்டான். அந்த நகருக்கு அவன் இரண்டாம்முறையாக வந்தபோது அறிமுகமானவன். செல்போனில் எண் இருக்கிறதா என்று தேடினான். இருந்தது. அவன் குரலைக் கேட்டதுமே கல்யாணம் அடையாளம் கண்டு கொண்டான். சிலருக்கு அந்த மாதிரி அபாரமான குரல் சார்ந்த நினைவு உண்டு. அவனுக்கு சுத்தமாக அது கிடையாது. முகங்களையும் அவனால் நினைவில் வைத்திருக்க முடியாது. அவன் மனத்தில் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் நினைவுகளைத்தான் அவனால் மீண்டும் நினைவுகூர முடியும்.

”என்னண்ணா எப்டி இருக்கீங்க? சொல்லவே இல்லையே” என்றான் கல்யாணம். ”என்ன, எங்க தங்கல்? ஆதிராவா? சூப்பர் எடமாச்சே…அண்ணாவை பாக்க வரலாமா” ”வாடா…எதுனா இருக்கா?” ”இருக்கு அண்ணா…நல்ல பலமான கை ஒண்ணு இருக்கு. நெறம்னா–” ”டேய் நீ சும்மா வர்ணிச்சிட்டிருக்காதே… சொல்றதெல்லாம் கவிதை கவிதையா சொல்லுவே” ”என்னண்ணா இப்டிச் சொல்லிட்டீங்க? நான் என்னைக்கு அண்னனுக்கு— ” ”சரிடா..பாத்து செய்… நமக்கு கட்டுப்படியாற மாதிரி…”

கல்யாணம்தான் பதினொரு மணி தாண்டி வருவதாகச் சொன்னான். ஆதிரா அவனுக்கு தெரிந்த ஓட்டல்தான். பிரச்சினை இல்லை. ஆனால் கீழே சைவ ஓட்டல் இருப்பதனால் பத்து மணி வரைக்கும்கூட நல்ல சந்தடி இருக்கும். பதினொரு மணிக்கு இன்னும் நெடுநேரம் இருக்கிறது. என்ன செய்வதென தெரியவில்லை. சாலையில் ஒரு ஆட்டோ வந்ததும் நிறுத்தி ஏறிக்கொண்டான். ஒரு நினைப்பும் இல்லாமல் கோயிலுக்குப் போகச் சொல்லிவிட்டான்.

அந்த ஊருக்கு அதுதான் மையமான கோயில். ஆனால் மிகச்சிறிய ஒரு பகவதி கோயில் அது. கோயில் வளைப்பு மிகப்பெரியது. மூன்று ஏக்கர் இருக்கும். குட்டையான சுற்றுமதிலுக்குள் கூம்புவடிவமான ஓட்டுக்கூரையுடன் வட்டமான சிறிய கருவறை மட்டும்தான். சிறிய ஒரு தேர்கூண்டு மாதிரி இருந்தது. கோயிடிலுக்கு முன்னால் தகரக்கூரை போட்டு நீளமான முகப்பு செய்திருந்தார்கள். வரிசையாக நின்று கும்பிடுவதற்கான ஸ்டீல் கம்பிகள் நடப்பட்டிருந்தன. நடுவே வெண்கலத்தில் பளபளவென்று உண்டியல்.ஓடுபோட்ட கூரையும் இருபக்கமும்திண்ணையும் கொண்ட வாசல்முகப்பில் மேலே ”அம்மே பகவதீ நாராயணீ’ என்ற எழுத்துக்கள் மீது நியான் விளக்கு ரத்தக்குழாய் மாதிரி ஓடியது.

அவன் ஆட்டோவை அனுப்பிவிட்டு கோயில் முகப்பில் சென்று சட்டையைக் கழட்டிவிட்டு உள்ளே சென்றான். கோயில் ஆறுமணிக்குமேலேதான் கூட்டம் வரும் போல. பூசாரி கண்ணில் படவில்லை. கருவறை திறந்திருக்க செம்பருத்தி மலரால் மாலை அணிந்து வெள்ளிக் கண்மலர்களுடன் பகவதி இருட்டுக்குள் தெரிந்தாள். ஒரே ஒரு சிறிய நெய்விளக்கு பூ மாதிரி தெரிந்தது. கேரளக்கோயில்களுக்கே உரிய களபமும் குங்குமமும் தேங்காய்நீரும் கர்ப்பூரமும் தேங்காயெண்ணையும் கலந்த வாசனை

அவன் பகவதியையே பார்த்துக்கொண்டிருந்தான். எதுவும் வேண்டிக்கொள்ள தோன்றவில்லை. சரஸ்வதி எல்லா கோயில்களிலும் நெக்குருக வேண்டிக்கொள்வாள். அப்போது அவள் முகம் அழுவது போலிருக்கும். சிலசமயம் அவள் மெலிதாக விசும்பி அழுவதுகூட உண்டு. அவன் ஆரம்பத்தில் என்ன என்ன என்று திரும்பத்திரும்ப கேட்டிருக்கிறான். ”ஒண்ணுமில்லை..மனசுக்கு தோணிச்சு” என்பாள். சிவந்த மூக்கை முந்தானையால் பிழிந்து கொள்வாள். பிறகு அவனுக்கு தெரிந்து போய்விட்டது. சரஸ்வதி தனிமையில் இருந்தாலே அழ ஆரம்பித்துவிடுவாள். அழுவது அவளுக்கு தேவைப்பட்டது. அழுது முடிந்ததும் வரக்கூடிய புத்துணர்ச்சியை அவள் விரும்பியிருக்கலாம்.

அவன் படிகளில் இருந்து கொஞ்சம் செந்தூரம் எடுத்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு மீண்டும் கைகூப்பிவிட்டு வெளியே வந்தான். அங்கே டீக்கடை இருந்தது. ஒரு டீக்குச் சொன்னான். ”சாரினு தமிழுநாடா?” ”ஆமா” ”கலெக்சனா?” அந்தப்பகுதியில் மதுரைப்பகுதி அண்ணாச்சிகள் வட்டிக்கு விட்டு வசூல் செய்துகொண்டிருந்தார்கள். அவன் ஒன்றும் சொல்லவில்லை. முரட்டு வட்டிக்காரர்களில் ஒருவனாக தன்னை நினைப்பது கஷ்டமாக இருந்தது.

ஆனால் அவனும் அப்படித்தான் இருந்தான்.ஐம்பதுக்கு இன்னும் ஒருவருடம். தொப்பை சரிந்துவிட்டது. கண்ணுக்கு கீழே கனமான தொங்கல். நீர் கோத்த கண்கள். உப்பிய கன்னங்கள். தவளைத்தாடை. முன்வழுக்கை. கருமையான நிறம். அவனை கண்ணாடியில் பார்க்கவே அவனுக்கு பிடிக்கவில்லை. ஒரு காலத்தில் அவன் தன்னை விஜயகாந்த் போலிருப்பதாக நினைத்துக்கொண்டிருந்தான். முண்டா நன்றாக முறுக்கேறி இருந்தது. பிரபாவதிகூட அவனை அடிக்கடி அப்படிச் சொல்வதுண்டு. ஒருவேளை அப்படிச் சொல்வது அவனுக்குப் பிடிக்கும் என்று நினைத்திருப்பாள். அவள் சரிதா போலிருப்பதாக அவன் அடிக்கடிச் சொல்வதற்கு கடன் தீர்த்ததாகவும் இருக்கலாம். அவனுக்கு சிரிப்பு வந்தது.

மீண்டும் ஆட்டோ பிடித்து ஆதிராவுக்குச் சென்றான். அறைக்குள் போனதுமே சட்டையைக் கழற்றி லுங்கி மாட்டிவிட்டு தன் தொப்பையை கண்ணாடியில் பார்த்தான். தொடைகள் அத்தனை பெரிதாக இருப்பதே ஆபாசமாக அவனுக்குப் பட்டது. மீசையில் நிறம் பூசி பல நாட்கள் ஆகிவிட்டிருந்ததனால் மேலே வெள்ளையாக ஒரு மேல்விளிம்பு தெரிந்ந்தது. நுனியில் தவிட்டு நிறமாக இருந்தது. பெருமூச்சுடன் அவன் தன் பெட்டியை திறந்து உள்ளே இருந்து புதிய திரிப்பிள் எக்ஸ் ரம் புட்டியை எடுத்து உள்ளங்கையில் அறைந்து லுங்கிநுனியால் பற்றி மூடியை திறந்தான். டம்ளரில் நீர் விட்டு அதில் ரம்மை கொட்டி அப்படியே குடித்தான்.

குமட்டியபடி டீபாயில் தேடினான். காய்ந்த பொட்டலங்கள்தான் கிடந்தன. ஏதுமில்லை. சிகரெட் கூட இல்லை. ஆஷ்டிரேயில் கிடந்த சிகரெட் குச்சிகளை எடுத்து வாயில் போட்டு மென்றான் . புகையிலை வாசனை குமட்டலைக் குறைத்தது. மீண்டும் குடித்தான். முழுப்புட்டியையும் குடித்துவிட்டு ஜன்னல்கட்டை மேல் வைத்தபின்னர்தான் புழுக்கத்தை உணர்ந்தான். மின்விசிறியை போட்டுவிட்டு கட்டிலில் படுத்துக்கொண்டு அதன் சுழற்சியையே பார்த்துக்கொண்டிருந்தான். தொண்டை கரித்தது. அவனுடைய இரு கண்களில் இருந்தும் கண்ணீர் பெருகி பக்கவாட்டில் வழிந்தது.

அவன் வாசலில் மணியோசை கேட்டுதான் விழித்தான். நல்ல இருட்டு. சத்தமே இல்லை. விளக்கை போட்டு விட்டு கதவைத் திறந்தான். கல்யாணம்தான். ”என்ன அண்னா, அதுக்குள்ளேயா? இப்பதானே நைட்டு ஆரம்பிச்சிருக்கு” என்றான். அவன் சிரிக்காமல் ”என்ன ஆச்சு?” ”கீழ இருக்கு. ஆட்டோவிலே. அண்ணன் செல்போனிலே ரிப்ளை இல்லை. அதான் வந்தேன்” ”தூங்கிட்டேன்” ”கூட்டிட்டு வரவா” ”ம்ம்”. ” அஞ்ஞூறு குடுங்க” ”என்னடா?” ”இல்லண்ணா… எல்லாத்துக்கும் ஒரு வெலவாசி இருக்குல்ல…தப்பா நெனைக்காதீங்க. ஆளைப்பார்த்தா ஆயிரம்கூட குடுப்பீங்க” ”அதான் மொத்தமா?” ”இல்லண்ணா. இது கன்வேயன்ஸ் நம்ம கமிஷன் அப்றம் கம்பெனிக்கு.. நீங்க அதுக்கு நீங்களா பாத்து முந்நூறோ அதுக்குமேலேயோ..” ”டேய்” ”அண்ணன் மனசு தெரியாதா எனக்கு…வாறேண்ணா”

கல்யாணம் பணத்தை வாங்க்கிக் கொண்டு கீழே சென்றதும் அவன் பாத்ரூமுக்குச் சென்று முகம் கழுவிக்கொண்டான். வாயையும் நன்றாக கொப்பளித்தான். மேஜைமேலும் டீபாயிலும் கிடந்த பொட்டலக்காகிதங்களை சேகரித்து சுருட்டி குப்பைக்கூடையில் போட்டு சட்டை போட்டுக்கொண்டான். காலடி ஓசை கேட்டது. சட்டென்று அவனுக்கு போகச்சொல்லிவிடலாமா என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த எண்ணத்துடன் அவன் நிற்கும்போது கல்யாணம் கதவைத் திறந்து ”அண்ணா” என்றான்.

”வாடா”. கல்யாணம் உள்ளே வந்து புன்னகைத்து பின்னால் திரும்பி ”வாடி” என்றான். பூப்போட்ட சிவப்பு சேலையால் முக்காடுபோட்ட ஒரு பெண் உள்ளே வந்தாள். கல்யாணம் ”அண்ணா வேற என்னமாம் வேணுமா?” என்றான். ”ஒரு ஆ·ப் திரிப்பிள் எக்ஸ் வாங்கிட்டுவாடா” என்று பணத்தை எடுத்தான். ”சேத்து வாங்குங்க அண்ணா . சேச்சியும் குடிப்பாள்ல?” ”சரி புல்லா வாங்கிக்க…” என்றான். ”சிக்கன் பக்கடா இருந்தா வாங்குகிக்கோ” கல்யாணம் பணத்துடன் வெளியே சென்றான். அவன் கதவைச் சாத்தினான். அவள் கட்டிலில் அமர்ந்து முக்காட்டை விலக்கினாள். ”என்ன வெளிச்சம். செவத்த வெளக்கை போடு அண்ணாச்சி…” என்றாள்.

அவளை பார்த்ததும் அவனுக்கு முதலில் ஏமாற்றமும் கசப்பும்தான் வந்தது. இம்மாதிரிப்பெண்கள் அளிக்கும் முதல் உணர்வே அப்படித்தான். பின்னர் மெல்லிய ஆசை எழுந்து மேலோங்கி மீண்டும் கசப்பாக மாறுகிறது. அவள் ஐம்பதைத் தாண்டியவளாக இருந்தாள். வலதுகன்னத்தில் பெரிய ஒரு சூட்டுத்தழும்பு பளபளவென்று இருந்தது. அது அவள் முகத்தையே பார்க்கமுடியாமல் செய்தது ”என்ன அது தழும்பு?” என்றான். ”குக்கர் வெடிச்சுப்போச்சு அண்ணாச்சி” அது குக்கர் வெடித்த தழும்பு அல்ல. அனேகமாக சூடான ஏதோ பொருளால் சுட்டது. அவள் பார்வையை விலக்கிக் கொண்ட மறுகணமே அவனுக்கு தெரிந்து விட்டது —

”நீ…நீங்க?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான். அவளுடைய கண்கள் மாறின. குரூரம் தெரிந்து மறைவது போலிருந்தது. கடுமையாக ”என்னது?” என்றாள். ”இல்லே நீங்க..” ”என்ன அண்ணாச்சி, மப்பு மாறலியா? உண்டான ஜோலிகள பாருங்க” அவன் அதற்குள் உறுதியாக தெரிந்துகொண்டுவிட்டான் ”இல்ல நீங்க கல்பனாஸ்ரீதான். எனக்கு நல்லா தெரியும். எனக்கு உங்க முகம் மறக்கவே மறக்காது” அவள் அவனையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள். பின்பு கண்களை விலக்கி ”என்ன அண்ணாச்சி சொல்லுறிய? வாங்க” என்றாள்.

”நீங்க கல்பனாஸ்ரீதான்…சத்தியமா” சட்டென்று கண்களில் ஒரு சுருக்கம் வந்தது. முகத்தில் துவேஷத்தை நிறைத்தது அது. ”சரி அதுக்கென்ன இப்ப? ஒரு அஞ்ஞூறு ரூபா கூட்டிக்குடு அண்ணாச்சி…வா வந்து உக்காரு” அவன் கால்கள் நடுங்க இரும்பு நாற்காலியில் அமர்ந்துகொண்டான். ”நம்பவே முடியலை…” என்றான். ”செரி கிடந்து திளைக்காதே…என்ன இப்ப?” என்றாள். அவன் ”இருந்தாலும்…” என்றான். ”இவனாலே பெரிய தொந்தரவா போச்சே…இப்பம் எதுக்கு கிடந்து ஓரியிடுதே. கல்பனாஸ்ரீன்னா அப்டி வெறும் ஸ்த்ரீன்னா அப்பிடி…இந்த அண்ணாச்சிமாருக்கு சினிமாவிலே ஒராளைக் கண்டா பின்ன அவங்க தெய்வமாக்குமே”

அவன் அவளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அவன் முன் அவளை அவன் பார்த்த சினிமாக்கள் பளபளத்து ஓடின. உயரமான கொண்டையுடன் லிப்ஸ்டிக் வரைந்த உதடுகளும் நுனி நீட்டி மையெழுதிய கண்களும் கொண்ட முகம். ”என்ன வா பொளந்து ஒரு பார்வை? எல்லாம் போச்சு. சம்பாரிச்ச சொத்தெல்லாம் அண்ணன்மார் கொண்டு போச்சு. பின்னே மிச்சம் மீதி இருந்தத கெட்டினவன் பிடுங்கினான். கன்னத்திலே அயர்ன்பாக்ஸை வச்சு சுட்டான். இப்ப ஆருமில்லை. மண்டவெளங்காத ஒரு மகன் மட்டும் உண்டு. வயத்துப்பிழைப்புக்காக இது..போருமா? செண்டிமெண்ட் கூட்டணுமா?”

நாலைந்து சொற்றொடர்களில் ஒரு வாழ்க்கை எரிந்து முடிந்து கண்முன் அமர்ந்திருந்தது. வெளியே சந்தடி செய்தபடி கல்யாணன் வந்தான். ”அண்ணா, சிக்கன் பக்கோடா இல்ல. நல்ல சிப்பிப் பக்கோடா இருக்கு. மெத்து மொருக்குன்னு இருக்கும். அரக்கிலோ வாங்கினேன். சேச்சிக்கும் சிப்பி பிடிக்கும்… என்ன காரியம்? சண்டையா? சரசச்சண்டை நல்லதாக்குமே” அவன் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் ”வச்சிட்டு போடே” என்றாள் அவள். அவன் வைத்துவிட்டு ”வாறேன் அண்னா, பாத்து குடுங்க” சென்றான்.

அவன் எச்சில் விழுங்கினான். பெருமூச்சுகளாக விட்டான். ”என்ன அண்ணாச்சி, குடிக்கலியா?” அவன் ” எனக்கு காலேஜ் படிக்கிற நாளிலே நீங்கதான் பிடிச்ச நடிகை” ”செரி..” என்று அவள் ரம்புட்டியை எடுத்தாள். ”வீரசபதம் மட்டும் நூறுவாட்டி பாத்திருப்பேன்…” ”தமிழம்மாருக்கு வேறே ஜோலி என்ன?” என்று அவளே ரம் புட்டியை எடுத்து லாகவமாக திறந்து டம்ளரில் ஊற்றிக்கொண்டாள். சிப்பி பக்கோடாவை திறந்து ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டபின் டம்ளரை ஆவேசமாக குடித்து, உடலி உலுக்கி மீண்டும் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டாள்.

அவன் வேகமாக எழுந்து என் செல்போனை எடுத்தான். அதை இயக்கி ஒரு பாடலை ஒலிக்கவிட்டான். ”நேற்று நீ கண்ட நிலா, இன்று என் தடாகத்திலா” என்று கணீரென சுசீலா பாட ஆரம்பித்தாள். ”நான் எப்ப இந்த பாட்டை கேட்டாலும் அழுதிடுவேன்…என்ன ஒரு பாட்டு. என்ன ஒரு மியூசிக். தாயளி விஸ்வநாதனை ஜெயிக்க இனிமே ஒருத்தன் பொறந்துதான் வரணும் ” அவள் பேசாமல் பகோடாக்களை தின்று இன்னும் ஒரு டம்ளர் குடித்தாள்.

அவன் மீண்டும் அந்தப்பாட்டையே போட்டான் ”எளவு, அதை நிறுத்தப்பிடாதா?” என்று அவள் கோபமாக கத்தி செல்போனை பறிக்க வந்தாள். அவன் நிறுத்தினான். அவள் தலை குனிந்து அமர்ந்திருந்தாள். அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். எப்படி இந்த உடலில் இந்த முகத்தில் இறந்த காலத்தின் அழகான முகத்தைக் கண்டு பிடித்தான்! ஆச்சரியமாக இருந்தது. அது வேறு முகம்,வேறு கண்கள், வேறு சிரிப்பு. ஆனால் அவள்தான் இவள் என்பதும் உறுதியாக இருந்தது.

அவள் நெற்றி நன்றாகவே வேர்த்திருந்தது. ”எளவு அந்த ·பேனைப்போடுறது” என்று அண்ணாந்து பார்த்தவள் மின்விசிறி சுற்றிக்கொண்டிருப்பதைக் கண்டு அவனைப் பார்த்தாள். ”அப்ப என்ன, அண்ணாச்சிக்கு ஒண்ணும் வேண்டாமா? அப்ப என் பைசாவ குடு. நான் போறேன்” அவன் பெருமூச்சு விட்டேன். ”பாத்தா போருமா? கால்ஷீட் தீர்ந்திருமா” என்று சிரித்தாள். ” எனக்கு உடம்பு முடியல்லை…பணத்த குடு. நான் வெளுக்குறதுக்குள்ள வீடு போய்சேருறேன்”

அவன் ” அந்தப்பாட்டை கேட்டுட்டே பாத்தா போதும்” என்றான். ”போடா” என்று கடும் கோபத்துடன் கத்தினாள். மூக்கு சிவந்து கண்கள் நீரோடி அவள் முகம் கடிக்க வரும் நாய் போல தெரிந்தது. ”அதுக்கு வேற ஆளைப்பாரு…வந்திருக்கான், தாயளி” அவன் ”ஸாரி” என்றான். அவள் அபப்டியே கட்டிலில் படுத்துக்கொண்டாள். அடிவயிற்றில் ஏதோ ஆபரேஷன் செய்த பெரிய தழும்பு பூரான் போல தெரிந்தது.

அவளை பார்த்துக்கொண்டே இருந்தபோது அவன் மனதில் படங்கள் ஓடின. கம்பிக் கூண்டுக்குள் நெரிக்கும் கியூ. வேர்வை. கூச்சல்கள். உற்சாகக்கூவல்கள். நெரிசலில் பிதுங்கி டிக்கெட் வாங்கி பார்த்தால்தான் படமே ருசிக்கும் காலம் இருந்தது. நாகர்கோயில் தங்கத்தில் அடர்ந்த வரிசையில் பின்னால் இருந்து ஏறி தோள்கள் வழியாகவே ஓடி குதித்து முன்னால் சென்று டிக்கெட் எடுக்கும் வீரர்கள் உண்டு.

உள்ளே நெரிந்தோடி துண்டுச்சீட்டை கிழிக்கக் கொடுத்து வாங்கி வாகான இருக்கை பிடித்து அமர்ந்ததும் மின்விசிறிக்காற்றின் இதம். சட்டையை கழற்றி வியர்வை ஆற்றும் குதூகலம். அந்தப்போதை பத்தாண்டுகளுக்கும் மேலாக உலகை மறக்க வைத்திருந்தது.

திரை மேலே செல்லும் போது விசில்கள். பிள்ளையார் படம். அதன் மேல் ஒலிக்கும் ‘வினாயகனே வருவாய்’. கூடவே பயல்களின் கடலே கடலே கப்பலண்டிக்கடலே. சுக்குபாலைஸ். சென்ஸார் சர்ட்டிபிகெட் காட்டப்பட்டதும் ”மக்கா பதிமூணு ரீலுலே” என்ற கூச்சல். டைடில்களில் ‘வழங்கும்’ போட்டதும் கைதட்டல்கள், ஆனந்த நடனங்கள். எத்தனை மறக்கமுடியாத நாட்கள். கணேசன் இவளைப் பார்த்தால் என்ன செய்வான். அழுது கொண்டே காலில் விழுந்து விடுவான். பாவம், அவன் வருடம் முன்பு ஆசிட் குடித்து செத்துப்ப்போனான். அவன் பெருமூச்சுவிட்டான். பெருமூச்சுக்களால் அவன் உடம்பே நிறைந்திருந்தது போல உள்ளிருந்து பீரிட்டு வந்துகொண்டே இருந்தது

”அண்ணாச்சி” என்று அவள் அழைத்தாள் ”அந்தப் பாட்டை போடு” நல்ல போதை ஏறி விட்டிருந்தது அவளுக்கு. அவன் உற்சாகமாக எழுந்து சென்று பாட்டைப் போட்டான். ”உன் கண்கள் என் பாதையில் ஒளியல்லவா? உன் மூச்சு துணைவரும் காற்றல்லவா?” சுசீலாவின் குரல் பறவை சர்ரென்று இறங்குவது போல இறங்கி அப்படியே மேலே சென்றது. அவள் அதைக் கேட்டுக்கொண்டே தலையை மெல்ல அசைத்தாள். ”காலங்கள் மாறலாம் கனவுகள் மாறுமா? ராகங்கள் மாறலாம் பாடல்கள் மாறுமா?”

பாடல் முடிந்ததும் அவள் எழுந்து அமர்ந்துகொண்டு ”தண்ணி” என்றாள். அவன் எழுந்து கூஜாவை அவளிடம் கொடுத்தான். அவள் அதை வாங்கி அப்படியெ தண்ணீர் குடித்தாள். மடக் மடக் என்று அவள் குடித்துக்கொண்டே இருந்தாள். பின்பு ஈரம் சொட்டும் வாயுடன் கூஜாவை திருப்பிக் கொடுத்தபடி ஏப்பம் விட்டாள். அவன் கூஜாவை வைக்கும்போது அவள் வாய்க்குள் மெல்ல முனகுவது கேட்டது. அவன் திரும்பிப் பார்த்தான். அவள்தான் பாடிக்கொண்டிருந்தாள். ”ஓஓ, நேற்று நீ கண்ட நிலா, இன்று என் தடாகத்திலா”

அவன் பிரமிப்புடன் அவளையே பார்த்தான். அவள் அப்படியே மாறி விட்டிருந்தாள். முகத்தில் பரவசமா துக்கமா என்று தெரியாத ஒரு பாவனை. அவள் குரல் சுசீலாவின் குரலின் கம்பீரத்துடன் இல்லை. பல இடங்களில் அது பிசிறடித்து கமறியது. ஆனாலும் அந்தப் பாடலின் பாவம் முழுக்க அவள் குரலில் இருந்தது. பாடி முடித்தபோது அவன் கண்களை அழுத்திக்கொண்டான். நெஞ்சு விம்மியது.

”என்ன அண்ணாச்சி ?” என்றாள். ”இல்ல ஒண்ணுமில்ல” அவனால் கண்ணீரை நிறுத்த முடியவில்லை. விரல்களை தாண்டி கண்ணீர் கன்னத்தில் வழிந்தது. ”என்ன அண்ணாச்சி?” அவன் பெருமூச்சுடன் கண்களை துடைத்து ”பழைய ஞாபகங்க” என்றான். அவள் முகம் மலர்ந்திருந்தது. கண்களில் ஒளியுடன் ”இந்தப்பாட்டை விஜயாவாஹினியிலே எடுத்தாங்க.சாம்ராஜ் அண்ணன்தான் காமரா. விஜி உன் முகம்தான் இந்தப்பாட்டுக்கு செட்டிங்னு சொன்னார். பாட்டுலே பாதி என் குலோஸப்தான். கழுத்தை பிடிச்சு இப்டி வச்சுக்கோன்னு சொல்லிட்டு போனா அசைக்கப்பிடாது. அப்பல்லாம் லைட்ட வாங்கி நடிக்கணுமே..”

”விஜி யாரு?” ”நாந்தான். என் பேரு விஜயா. சினிமாவுக்காகத்தான் கல்பனாஸ்ரீ. அது எடிட்டர் ராக்வேந்திர ராவ் சார் வச்ச பேரு, ராசியானவர்னு அவருக்கு பேரு. நமக்குத்தான் ராசியில்லை” ”ராசிக்கு என்ன குறை? சினிமாவிலே ஓகோன்னு இருந்தீங்களே” ”அது சரிதான். எல்லாம் கையிலே வந்து விழுந்தது. பொத்தி வச்சுக்கிட அறிவில்லை” முகம் மங்கலடைந்தது. உடனே மீண்டு ”இந்தப்பாட்டு தெரியுமா? கனாக்காணும் கண்களிலே வினாக்கோலம் ஏனடி? சிவாஜி சார் பாடி நடிச்ச பாட்டு. நான் தான் தங்கச்சி. சாவித்ரியம்மா சிவாஜிசாருக்கு ஜோடி”

அவன் ”எங்கிட்டே இருக்கே” என்று செல்போனை துழாவ அவளே ”கனாக்காணும் கண்களிலே வினாக்கோலம் ஏனடி?” என்று பாட ஆரம்பித்தாள். அவன் செல்லை வைத்துவிட்டு அவளையே பார்த்தான். அவள் சட்டென்று நிறுத்தி ”பாடுவீங்களா?” என்றாள். அவன் வெட்கத்துடன் ”சுமாரா” என்றான். அவள் பாடும்படி சைகை காட்டிவிட்டு மேலே பாடினாள். அவன் ”உந்தன் பாதம் தழுவும் கொலுசு என் நெஞ்சின் ராகம் அல்லவா?” என்று டிஎம்எஸ் குரலில் சேர்ந்துகொண்டான். பாடிக்கொண்டிருக்கும்போது அந்த அறை அவள் அவன் எல்லாமே மறைந்துபோய் அந்த படம் மட்டுமே இருந்தது. சிவாஜி இருந்தார். சாவித்ரி இருந்தார். பண்டரிபாய் இருந்தார். யாருமே சாகவில்லை. சாகவே முடியாது.

அவள் பெருமூச்சுடன் அமைதியானாள். ”குடிக்கலியா?” என்றாள். ”வேண்டாம்” என்றான். ”அப்ப செரி” என்று அவளே மிச்சத்தையும் டம்ளரில் விட்டு நீர் ஊற்றி குடித்தாள். ”ரொம்ப குடிக்கிறீங்க” என்றான். ”பழகிப்போச்சு” என்றாள். ”இப்ப தினம் இது இல்லாம முடியாது” ”அப்பவே குடிப்பீங்களா?” ”அய்யோ..அப்ப ஒரு தடவை ஒருகிளாஸ் வைன் குடிச்சதுக்கே அம்மா அடிச்சாங்க. அம்மா ரொம்ப ஸ்டிரிக்ட். நாங்க ராஜமுந்திரிப்பக்கம். அம்மா அங்கே ஒரு ரெட்டியோட கீப்பா இருந்தாங்க. எங்க சொந்தத்திலே ஒரு மாமா மெட்ராஸிலே மேக்கப் மேனா இருந்தாங்க. அவர்தான் பாப்பாவுக்கு சினிமாவிலே நடிக்க சான்ஸ் இருக்கு வந்திடுன்னு கூட்டிட்டு வந்தார். எங்கம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு ரெண்டு பையன்க. ரெண்டுபேரும் படிக்கலை. ஒருத்தர் ராஜமுந்திரியிலே டிரைவரா இருந்தான். இன்னொருத்தர் சும்மா ரவுடியா ஊரைச்சுத்திட்டிருந்தார்”

”உங்க முதல்படம் ‘கன்னி காஞ்சனா’ தானே?” என்றான். ”ஆமா. அது தெலுங்கு ரீமேக். நாராயண் ரெட்டிசார்தான் புரடக்ஷன். ஈஸ்வர ராவ்சார் டைரக்ஷன். அம்மாவுக்கும் ராவ் சாருக்கும் கொஞ்சம் நெருக்கம். அதிலேதான் சான்ஸ் கெடைச்சுது.” ”சூப்பர் ஹிட் படம்ல அது” ”ஆமா…அப்றம் நெறைய படங்கள்….” அவள் பெருமூச்சு விட்டாள். பின்பு எழுந்து பாத்ரூம் சென்று விட்டு வந்தாள். அவன் அது வரை செல்போனில் பாடல்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவள் வரும்போதே ”இப்ப எங்க அண்ணா ரெண்டுபேருமே இல்லை. அண்ணிகள் இருக்காங்க. அண்ணன் பிள்ளைகள் இருக்காங்க. எல்லாரும் நல்ல வசதியா ஐதராபாதிலெ இருக்காங்க. நான் இந்தாள்கூட வந்திட்டதிலே அவங்களுக்கு கோபம்.. போனா செருப்பாலே அடிபபங்க…இப்ப அவங்கள்லாம் நல்ல கௌரவமான ·பேமிலி. பையன் பொண்ணுகள்லாம் டாக்டர் எஞ்சீனியர்னு இருக்காங்க ”

அவன் ”யார் கூட வந்தீங்க?” என்றான் ”இவன் தான் எம்.கெ.தாமஸ். உதயா ஸ்டுடியோஸிலே புரடக்ஷன் மேனேஜரா இருந்தான். அவன் தான் சொன்னான் என் பேரிலே ஒரு பைசா சொத்து கிடையாதுன்னு. வயசு முப்பதாச்சு. தினம் நடிப்பு, டிராவல் இதான். அம்மா போனதுக்கு அப்றம் யாருமே இல்லாத மாதிரி இருந்தது. அண்ணன்களுக்கு பிஸினஸ். சின்ன அண்ணாதான் என் கால்ஷீட் பேமெண்ட் எல்லாத்தையும் பாத்துக்கிட்டது. அண்ணிகளுக்கு என்னை சுத்தமா பிடிக்காது. எல்லாருமே நல்ல ·பேமிலி பொண்ணுங்க. நடிகைன்னா எளக்காரம்… பணம் காசு எல்லாம் ஆயாச்சுல்ல. அப்பதான் நான் கணக்கு கேட்டேன். தாமஸ் சொல்லிக்குடுத்து கேட்டதுதான். சொன்னதுமாதிரி சொத்தெல்லமே அண்ணா அண்ணிங்க பேரிலே. உனக்கு ஒரு பைசா தரமாட்டோம் ஆகிறதை பாருன்னு சொல்லிட்டாங்க. அதை என்னாலே தாங்கிக்க முடியலை. அழுதுட்டே இவன் கிட்டே சொன்னேன். என்கூட வந்திரு கல்யாணம் பண்ணி ராணிமாதிரி வச்சுக்கிறேன்னான். வந்திட்டேன். வர்ரப்ப ஒருகிலோ நகை வைர நெக்லஸ் வைரத்தோடு வைரவளையல் எல்லாமே எடுத்திட்டுதான் வந்தேன்…”

பாட்டிலை எடுத்துப் பார்த்தாள். அதில் கொஞ்சம் மிச்சமிருந்தது. அதை அப்படியே வாயில் விட்டுக்கொண்டாள். ”வந்த கொஞ்சநாள் அன்பா இருந்தான். நடிக்க அனுப்பி காசெல்லாம் அவனே வச்சுகிட்டான்.நகைய வித்து அவன் பேரிலே எர்ணாகுளத்திலே ஓட்டல் கட்டினான். அப்பதான் பிரக்னண்ட் ஆனேன். கலைக்கச் சொன்னான். மாட்டேன்னு சொன்னதுக்கு அடி அடின்னு அடிச்சு கலைச்சான். நாலுமுறை கர்ப்பம் கலைச்சிருக்கேன். பிறகு பட சான்ஸ் இல்லை. அங்க இங்க போன்னான். அதுக்கு எனக்கு மனசில்லை. தினமும் அடி உதை. அப்பதான் இவனை கர்ப்பமானேன். கலைச்சிருன்னான். முடியாதுன்னு சொன்னப்ப கன்னத்திலே சூடுவச்சான். அடிச்சு தெருவிலே இறக்கி விட்டான். புண்ணோட ஆஸ்பத்ரியிலே அனாதையா கெடந்தேன், அங்கேருந்து டிரைவர் தாசப்பண்ணன் கூட வந்திட்டேன். இவன் இப்பிடி பிறந்துடான்.கர்ப்பம் கலைக்க குடிச்ச மருந்து செய்த வேலை… இப்ப பதிமூனு வருஷமா இங்கதான்…”

அவள் கண்களை மூடி கிடந்தபின் சட்டென்று முகம் மலர்ந்து ”அந்த பாட்டு உண்டா, ‘அழகர் மலைமேலே அழகான ஊர்வலமாம்” என்றாள். அவன் ”இருக்கே” என்றான். ”அந்தப்பாட்டிலே ஹம்மிங் நானே குடுத்தேன்” அவன் அந்தபபாட்டை போட்டான். ஹம்மிங்கில் அவள் குரல் சிறுமி பாடுவது போல் இருந்தது. ”சின்னப்பொண்ணு பாடுறதுமாதிரி இருக்கு” ”பின்ன நான் அப்ப சின்னப்பொண்ணுதானே…அப்ப எனக்கு வயசு இருபத்தொண்ணு. புத்தி மனசு எல்லாமே பதினாறுதான். சாக்லேட் குடுத்தாத்தான் நடிப்பேன்னு அடம் பண்ணுவேன். குண்டாயிடுவேன்னு குடுக்க மாட்டாங்க. டைரக்டர் ராமண்ணா ரகசியமா குடுப்பார்.”

”ஆயிரம் மலர்கள் மலர்ந்ததே !ஆனந்தம் எங்கும் நிறைந்ததே! கண்ணும் கண்ணும் கனவு காணும் நாளல்லவா?” அவளும் அவனும் சேர்ந்தே அந்த வரிகளைப் பாடினார்கள். ”அந்தக்காலத்திலே என்னென்ன பாட்டு போட்டிருக்காங்க” என்றாள். ”பின்னே, நான் தியேட்டரிலேயே அழுதிருக்கேன் சில பாட்டைக்கேட்டு..”என்றான். ”இந்த பாட்டு ஞாபகமிருக்கில்ல. செந்தூரப்பொட்டு படத்திலே உள்ளது. ஜெய்சங்கர் உங்களுக்கு ஜோடி அதிலே…” என்று சொல்லி ”பொன்மயில் ஒன்று பறந்து சென்றதே. என்னை தனிமையில் விட்டுச் சென்றதே’ போட்டான்.”பிபி ஸ்ரீனிவாஸ் தான் இந்த மாதிரி பாட்டுக்கு மன்னன்” என்றான். ”என்ன ஒரு இழுப்பு…”

பாட்டு முடிந்ததும் அவள் ”அண்ணாச்சிக்கு எத்தனை பிள்ளைங்க?” என்றாள். ”பிள்ளைங்க இல்லை” என்றான். ”அடாடா..டாக்டரிட்ட காட்டவேண்டியதுதானே?” ”இல்லை…என் வீட்டுக்காரி தவறிட்டா” ” அடாடா, எப்ப?” ”அது இருக்கும், ஒரு ஏழெட்டு வருஷம் முன்னாடி… சேலையிலே தீ வைச்சுகிட்டா” ”அய்யய்யோ…எதுக்கு?” ”எல்லாம் நம்ம தப்பு. அவ நல்ல வசதியா வளாந்தவ. நம்ம வியாபாரம் அப்டியே சரிஞ்சுபோயி அஞ்சுக்கும் பத்துக்கும் கஷ்டமாயிட்டுது. பணமில்லேன்னா யாரப்பாத்தாலும் கடுப்பா இருக்குமே. நமக்கும் வேற போக்கிடம் ஏது… அவளை போட்டு திட்டி நொறுக்கிறது. தண்ணி வேற போடுறது. ஒருக்கா ஜாஸ்தியா கைய நீட்டிட்டேன். விடிகாலையிலே பிள்ளையோட தீய வச்சுகிட்டா”

அவள் வாயில் கை வைத்தாள். ”ஸ்ஸோ’ கண்களில் இரக்கம் தெரிந்தது. பின்பு ”என்ன பிள்ளை?” என்று மெதுவாகக் கேட்டாள். ”பொட்டப்பிள்ளை. ஒன்பது வயசு” ”அடாடா” என்றாள். அவன் செல்போனையே பார்த்தான். ”செரி விடுங்கண்ணாச்சி. எல்லாம் விதி. வேறே என்னத்தச் சொல்ல” ”அதான். அப்டித்தான் சொல்லணும். நல்லா போயிட்டிருந்த வியாபாரம். என்ன ஆச்சு ஏன் விழுந்ததுன்னு இன்னைக்கும் தெரியல்லை. விழ ஆரம்பிச்சா அப்டியே விழுந்திட்டே இருக்கும். ஒண்ணும் செய்ய முடியாது. விழப்போறேன்னு தெரிஞ்சா பின்ன எல்லாரும் விலகிருவாங்க. உதவிக்கு ஆளிருக்காது. அவ்ளவுதான்… ஆயிரம் பத்தாயிரம்னு புரட்டின கையாலே கடனுக்கு நகைய கொண்டுபோய் அடகு வைச்சேன்…எல்லாம் தலயெழுத்து…”

”இங்க எதுக்கு வந்திங்க?” ”இங்க பழைய சப்ளையர் ஒராள் இருக்கார். கொஞ்சம் சரக்கு கடனாக் குடுத்தா மறுபடி சின்னதா ஆரம்பிக்கலாமேன்னு பாத்தேன். குடுக்கமாட்டார், தெரியும். இருந்தாலும் ஒரு நம்பிக்கையிலே வந்தேன். வெத்துப்பயலை நம்பி ஆரு குடுப்பா?” போகட்டும் என்று கையை அசைத்து ”ஒரு வீடும் கொஞ்சம் நெலமும் இருக்கு. அதுவும் தீந்தா பண்டாரமா கெளம்பிர வேண்டியதுதான். நமக்குன்னு யார் இருக்கா…” அவன் செல்போனை எடுத்து ”மத்தபாட்டுண்டே , சின்னச் சின்ன பூனைக்குட்டி செல்லச் செல்ல பூனைக்குட்டி.. அது நீங்க பாடினதா?” ”அய்யயோ அது ராஜேஸ்வரி பாடினதாக்குமே” ”நல்ல பாட்டு. அந்த டான்ஸ¤ம் நல்லா இருக்கும்…”

அவள் அதைப் பாடினாள். அவளது முதிர்ந்த குரல் அப்போது மழலை போல ஒலித்தது. அவன் அடுத்து ”பேசும் பொற்சித்திரமே வீசும் இளந்தென்றலே” பாடினான். அவளுடைய பாடல்கள் எல்லாமே செல்போனில் இருப்பது போலிருந்தது. ”இப்ப டெக்னாலஜி எப்டி வளந்திருக்கு இல்ல, எல்லா பாட்டும் கையிலேயே இருக்கு” ”எங்கிட்ட ஒண்ணுமே இல்ல. எப்பவாவது ரேடியோவிலே கேக்கிறதுதான். கேட்டா வயத்துக்குள்ள தீயா இருக்கும். அந்தால வெலகிப்போயிடுவேன்” என்றாள். ”எல்லாம் போச்சு. தெலுங்கே ஞாபகமில்லை. இந்த ஊரு தமிழும் மலையாளமும் வாயில வந்தாச்சு…ஆனா பாட்டு மறக்கலை. அது இப்பதான் தெரியுது”

”அதெப்டி மறக்கும். ஆத்மாவிலே இருக்கப்பட்டதில்லா?” அவன் ”சொல்லடி சொல்லடி செல்லக்கிளி” போட்டான். அவள் அதன் சிலவரிகளுடன் சேர்ந்து பாடினாள். ”ராமன் வில்லறியும் ஜானகி நெஞ்சத்தினை இருக்கா?” என்றாள். ”இருக்கே…”அவன் போடுவதற்குள் அவள் பாட ஆரம்பித்தாள். கூடவே அவன் சேர்ந்து பாடினான். மாறி மாறி பாடிக்கொண்டே இருந்து சட்டென்று ஒரு இடத்தில் இருவருமே தங்களை மறந்து நினைவுகளில் மூழ்கி நெடுநேரம் இருந்தார்கள்.

பெருமூச்சுடன் அவள் விழித்து ”கண்ணெல்லாம் பூத்திருக்கு கண்மணியே உனக்காக- அது போடுங்க” என்றாள்., அவன் போட்ட பாட்டு முடியும் வரை சுவரையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு மீண்டும் பெருமூச்சுடன் ”என்னா மாதிரி டியூன் இல்ல?” என்றாள். ”இது கேவி மகாதேவன் போட்டபாட்டு. அவரு எங்க ஊருதான். பக்கத்து தெரு.ஆனால் சின்னவயசிலே மெட்ராஸ் போயிட்டார்” என்றான்

அவள் ”எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுன்னா ‘காத்திருந்தநாள்’ படத்திலே நான் சாகிற பாட்டு உண்டே அதான்” என்றாள் ”அய்யோ சொல்லாதீங்க. எனக்கு அந்த சீனே பிடிக்காது. அந்தப்பாட்டை கேட்டாலே ஆ·ப் பண்ணிடுவேன். அப்பல்லாம் என்னால அந்த மாதிரி நெனைச்சே பாக்க முடியலை” என்றான். ”அந்தபடம் அப்டி ஒரு ·ப்ளாப். எப்டிங்க நீங்க சாகுறத ஜனம் ரசிப்பாங்க?”

”கர்ப்பூரம் கரையும் காற்றிலே எப்போதும் இருக்கும் ராகமே” என்று அவள் பாட ஆரம்பித்தாள். அது ஜானகி பாடிய பாட்டு. விசித்திரமான கம்மல் ஒலிகளுடன் தொண்டை அடைப்பது போல அதைப் பாடியிருப்பார் ஜானகி. அவள் பாடும்போது அந்த எல்லா உணர்ச்சிகளும் வந்தன. அதில் டிஎம்எஸ் பாடும் ”இசையாக வந்ததெல்லாம் எப்போதும் இருக்குமே .காற்றிலே ஏறிய கானம் அழிவதே இல்லையே” என்ற வரிகளை அவன் பாடினான்.

பாடி முடித்ததும் அவள் அழ ஆரம்பித்தாள். அவன் அவள் அழுகையைப்பார்த்தான். சினிமாவில் அவள் அழுவதை பார்ப்பது போல இருந்தது. ஆனால் பின்பு தன் மடியில் கண்ணீர் சொட்டிக்கொண்டிருந்ததை உணர்ந்து அவனும் அழுவதை உணர்ந்தான். அங்கே இருக்க முடியவில்லை. எழுந்து ஜன்னலைதிறந்தான். வெளியே இருட்டுக்குள் தென்னைமரங்கள் நின்றன. இருட்டையே பார்த்தான். என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அவன் பலத்த கமறல் ஒலிகளுடன் கதறி அழ ஆரம்பித்தான். அழ அழ அழுகை நெஞ்சுக்குள் மிச்சமிருப்பது போலிருந்தது. மார்பில் ஓங்கி அறைந்து மார்புச்சதையை அழுத்திப் பிசைந்து கொண்டு அழுதான். கம்பிகளில் தலையை ஓங்கி ஓங்கி மோதினான்.

பின்பு மெல்ல மனம் விடிந்து அவன் ஜன்னல்கட்டையிலேயே அமர்ந்துகொண்டான். மின்விசிறி கறக் கறக் என்று சுழன்றது. ஜன்னல்வழியாக குளிர்ந்த காற்று உள்ளே வந்து சுழன்றது. அவள் கட்டிலில் கைக்குழந்தைகள் சுருண்டு கிடப்பதுபோல கிடந்து அப்போதும் குலுங்கி அழுதுகொண்டிருந்தாள். சேலைவிலகிய வெண்ணிறமான கால்கள் முழுக்க தழும்புகள் நிறைந்திருந்தன. அவன் அவள் அழுவதை பார்த்துக் கொண்டிருந்தான்.

பின்பு எழுந்து சென்று செல்போனை எடுத்ததும் அவள் ”வேண்டாம் அண்ணாச்சி” என்றாள். அவன் அதை மே¨ஜையில் போட்டான். அவள் எழுந்து அமர்ந்து கண்களை துடைத்துக்கொண்டு பாத்ரூம் போய்வந்தாள். அவன் நாற்காலியில் அமர்ந்து டீபாயில் கிடந்த மாலைமுரசு நாளிதழை வாசித்தான். அவள் கட்டிலில் மல்லாந்து படுத்து கூரையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ”என்னமோ இண்ணைக்கு இப்டி ஒருநாளுன்னு எழுதியிருக்கு” என்றாள். அவன் ஒன்றும் சொல்லவில்லை.

எத்தனை நேரம் என்று அவர்கள் அறியவில்லை. கல்யாணம் வந்து கதவை தட்டினான். ”அண்ணா, என்ன சேச்சி ரெடியா? போலாமா?” அவள் எழுந்து ”அப்பம் நான் வாறேன்…” என்றபின் தன் கைப்பையை எடுத்துக்கொண்டாள். அவன் தன் பையை திறந்து ஆயிரம் ரூபாயை எடுத்து அவளிடம் கொடுத்தான். பேசாமல் வாங்கி பைக்குள் வைத்துக்கொண்டு ஒன்றுமே சொல்லாமல் அவன் கண்களைக்கூட சந்திக்காமல் வெளியே சென்றாள்

கல்யாணம் அவனைப்பார்த்து ”அண்ணன் முகத்திலே நல்ல தேஜஸ¤ண்டே…சேச்சி நல்ல சுயம்பு ஐட்டமாக்கும் இல்லியா? மெல்ல ”தெலுங்கத்தியாக்கும். நமம் டிரைவர் தாசப்பன் நெல்லூரிலே இருந்து கூட்டிட்டு வந்தது” அவன் ஏதோ சொல்ல வாயெடுத்து அடக்கி ”’செரி பாப்பம்டே” என்றான். ”வரட்டா, சேச்சி முன்னாலே போயாச்சு” என்று கல்யாணம் இறங்கி ஓடினான். அவன் கதவைச் சாத்திவிட்டு கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *