பலிகளம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 8,267 
 

”வேணாம்ணே… காசு குடுண்ணே…” – கண்களைத் திறந்தால் ‘சரக்கைக்’ காண்பித்துச் சிந்தனையை மாற்றிவிடுவாரோ என்ற பயத்தில் இமையைப் பூட்டியபடியே கேட்டான் நாகராசு.

”மில்ட்ரி சரக்குடி… சும்மா கும்முனு இருக்கும்”- சமையல் மாஸ்டர் ஆனந்தனுக்கு, நாகராசுக்கு ஒரு மடக்கு ஊத்திவிட்டால் – தனக்கு 30 ரூபா மிச்சம் என்ற கணக்கு இருந்தது. சிறுவனாக இருப்பதால் அதிகமாகச் சாப்பிடவும் மாட்டான்.

நாகராசுவுக்கும் அந்தக் கணக்குதான் மனசில் ஓடியது. பேருக்கு ரெண்டு அவுன்ஸ் ஊத்திக் குடுத்துக் கழித்துவிடுவார்கள். சரக்கு சரியில்லாவிட்டால், கிறுகிறுப்பு வந்து வாந்தியாகிப்போகும். வீரபாண்டித் திருவிழாவில் வேலை பார்த்த காசைப் பூராவும் யாராச்சும் பிக்பாக்கெட் அடிச்சுப் போய்விடலாம். இப்படியே வீட்டில் கொண்டுபோய்ச் சேர்த்தாலாவது, அம்மாவிடம் நல்ல பேர் வாங்கலாம். திருவிழாவில் சேத்தாண்டி வேஷம் போட்டு, ஒரே நாளில் 300 ரூபா சம்பாதித்துக் குடுத்தானாம் நாகராசுவுக்கு இளைய தம்பி. அப்பாவும் அம்மாவும் பெருமையாகப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

மூணு நாள் வேலை பார்த்த காசு. ‘கட்டிங்’குக்குப் பதிலாக 30 ரூவா குடுத்தாரானால், 450-ஐத் தாண்டி வரலாம். இனியும் ஏதாச்சும் வேலை தகையுமா எனப் பார்க்க வேண்டும். தகையாவிட்டால், ஆற்றில் குளித்து விட்டு, சாமி கும்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போக வேண்டியதுதான். நாள் கணக்கு வைத்து ஏதாச்சும் ஒரண்டை இழுத்து அடிப்பார்.

”கொண்டாங்ணேய்…” – கழுத்தில் இருந்த சிவப்புக் குற்றாலத் துண்டை உதறி, டவுசருக்குப் பெல்ட்டாக இறுக்கிக் கட்டிக்கொண்டான். சட்டையை இறக்கி விட, துண்டு மறைந்துகொண்டது.

”பார்றா… துண்டுக் கட்டெல்லாம் பலமா இருக்கு”- ஆனந்தன் மாஸ்டர் கண்களை அகல விரித்துக் கேலி பேசினார்.

”பெரிய மாஸ்டராய்ட்டான்ல… இன்னும் பாருங்கண்ணேய்… என்னென்ன வித்த எல்லாம் வருதுன்னு…” – உடன் இருந்த கண்ணன் ஏத்திவிட்டார். அந்தக் கிடாவெட்டு வேலைக்கு மூன்று பேரும்தான் வந்து இருந்தனர். சேப்பில் இருந்து 10 ரூபாயை எடுத்துக் கொடுத்த ஆனந்தன், ”பரவால்ல… இப்படித்தான்டா இருக்கணும். நாங்கதே ஏதோ இந்த சாராயச் சனியனுக்கு வாக்கப்பட்டுட்டோம்… விட முடியல. நீயாச்சும் தப்புச்சுக்கப்பா!” என்றார்.

”நீங்க வேற… பாக்கத்தேன் பத்து வயசு. குவாட்டரு, ஆஃபெல்லாம் அசால்ட்டா முழுங்கீருவாண்ணேய்… என்னடா நாகராசூ!” – கண்ணன் அவனது தலைமுடியைக் கலைத்துவிட்டுச் சிரித்தார்.

”சேச்சே… அப்பிடியெல்லாம் சின்னப் பயல நாசம் பண்ணக் கூடாது. பெத்தாத்தேன் பிள்ளயா?” என்ற மாஸ்டர், ”பிடிடா… பாத்துக்கிட்டே இருக்க…” என்று நாகராசுவை அவசரப்படுத்தினார். அடிவயிற்றில் சொருகி இருந்த பிராந்தி பாட்டில் ரொம்ப நேரமாகக் காத்திருந்து இப்போது கனத்தது. வேட்டிக் கட்டு லூஸாகி பாட்டில் நழுவுகிறதோ… இடது கையால் மேலேத்தி விட்டுக்கொண்டார். கிடாவெட்டுக்காரர் கொடுத்த ‘கிஃப்ட்.’

”என்னாண்ணே… சம்பளத்தவும் கொறச்சிட்டீங்க… கட்டிங் காசவாச்சும் குடுங்ணே…” – பணத்தைக் கையில் வாங்காமல் சிணுங்கினான். கணக்குத் தப்புகிறதே…

அந்தச் சமயம் விடுவிடுவென வந்த கிடாவெட்டுக்காரர், ”இங்கியா இருக்க ஆனந்தா… வண்டி வந்திருச்சுப்பா… சித்த வந்து ஏத்திவிட்றதான… கூட்ட நெரிசல் கூடிக்கிட்டே இருக்கு. சட்டுனு கௌம்பிடலாம்…” – மொட்டைத் தலையைத் தடவியபடி அழைத்தார்.

திருவிழா நெரிசல் உண்மையிலேயே அதிகமாகத்தான் இருந்தது. எப்பவும் புதன் கிழமை மட்டுமே ஜனக் கூட்டம் பொங்கிச் சாயும். இந்த வருஷம் மூணாம் நாளான வெள்ளிக் கிழமையும் புதனைப்போலவே இருக்கிறது. தங்கள் வேலை முடித்த இடத்தில்கூட இரண்டு பேர் சமையல் பாத்திரங்களை இறக்கிக்கொண்டு இருந்தனர்.

”வேல இருக்குணே… சரக்கெல்லாம் வந்திருச்சி… கோச்சுக்காதீகண்ணே…” – பொய் சொல்லி, வீட்டுக்காரரை நகர்த்திவிட முயற்சி செய்தார் ஆனந்தன். வீட்டுக்காரரோ யாராச்சும் ஓராள் அனுப்பிச்சாக்கூடப் போதும் என மன்றாட, ”வண்டிகிட்ட நில்லுங்க, அனுப்பிவிடுறேன்…” என்று ஆளைக் கடத்திவிட்டார்.

”இந்தாடா… இது கோயில் வேல. பேசுனதே ஐநூறு… மாஸ்டரான எனக்கு எம்புட்டுங்கற… எறநூறுதே… மண்டபத்து வேலைக்கெல்லாம் முந்நூறு வரைக்கும் தரலியா… பிடி பிடி கௌம்புவம். நின்டா, வீட்டுக்காராளு மறுபடி வந்து லோடு ஏத்தக் கூப்புடுவாரு. நகரு… நகரு…” பணத்தை நாகராசுவின் சேப்புக்குள் திணித்துவிட்டு, தோப்புக்குள் மறைவிடம் பார்த்து நடந்தார்கள் ஆனந்தன் மாஸ்டரும் கண்ணனும்.

உள்ளூராக இருந்தால், தன் பங்குக்கான சரக்கை வாங்கி யாரிடமாவது விற்றுவிடலாம். இங்கே ரொம்பச் சிரமம். போலீஸ் கீலீஸ் பார்த்தால், பிதுக்கி எடுத்துவிடுவார்கள்.

கடைசி முயற்சியாகக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தான் நாகராசு. ”இன்னும் பத்து ரூவாயாச்சும் குடுங்ணே…”- கூவினான். திரும்பிப் பார்த்த மாஸ்டர், ”அஞ்சு காசு கெடையாது, தொரத்தர வேலையெல்லாம் நம்மளுக்குப் பிடிக்காது. அடுத்தடுத்து வேலைக்குக் கூப்புடணுமா… வேணாமா? போடான்னா…”

திரும்பினான்.

காக்காத் தோப்பு என்று அழைக்கப்படுகிற அந்தத் தென்னந் தோப்பு முழுக்கவும் மாரியாத்தாளுக்கு நிரை வருஷம் கிடா வெட்டுகிற கூட்டம் தள்ளிச் சாய்ந்துகொண்டு இருந்தது.

வீரபாண்டித் திருவிழா – சித்திரை முதல் வாரத்தில் ‘சாட்டு’ துவங்கியதுமே, நிரை வருஷம் சட்டி செலுத்த இருப்பவர்கள் கிடா வெட்டுக்கு இடம் கேட்டு அலையத் துவங்கிவிடுவார்கள். ரோட்டு ஓரத்திலும் ஆத்தோரத்திலுமாக நடந்துகொண்டு இருந்த பலி, பக்தகோடிகளின் அதிகரிப்பால் மண்டபத்திலும் தோப்புகளிலும் மட்டுமே என வரையறுக்கப்பட்டது.

அதனால், கோயிலைச் சுற்றிலும் இருக்கிற தென்னந் தோப்புகளுக்கு, காய்ப்புக் காலத் தைக் காட்டிலும் – திருவிழா – எட்டு நாளில் அள்ளிக் குமிச்ச வருமானம்.

வடக்கே இருந்து வரும் தேனி – அல்லிநகரம், பொம்மயக்கவுண்டன் பட்டி… அன்னஞ்சி… சுத்துக் கிராமத்துச் சனங்கள் பூராத்துக்கும் காக்காத்தோப்புத்தான் தோது. பத்துப் பதினைந்து ஏக்கரா விஸ்தீரணம். தண்ணீர் வசதியோடு இருப்பதால், சமையல்காரர்களுக்கும் பிரச்னை இல்லை. இப்போது கிரைண்டரும் மிக்சியும் வேறு போட்டுவிட்டார்கள். ஒரு கிடா வெட்டுக்கு முதலில் 50 ரூபாயில் ஆரம்பித்த கட்டணம், இந்த வருஷம் 300 ரூபா என்றானது. அதுவும் முன்கூட்டியே வந்து ரசீது வாங்கிக்கொள்ள வேண்டும்.

தோப்பு எங்கும் ஆட்டுக் கிடாக்களின் ரத்தம், பூகோள வரைபடமாக உறைந்துகிடக்க, கறி மசாலின் வாசனையும் ரத்தக் கவுச்சியும் அடுப்புப் புகையோடு கலந்து ஒரு விதமான நெடியினைப் பரப்பிக்கொண்டு இருந்தது. பண்டபாத்திரங்கள் கழுவிவிட்ட தண்ணீர் ஆங்காங்கே தேங்கி சகதியாக நசநசத்துக்கிடக்க, மேட்டுப்புறம் பெரிய பெரிய தார்ப்பாய்கள் விரிக்கப்பட்டு, பந்திகள் நடந்துகொண்டு இருந்தன. ”கிடா உரிக்க ஆள் வேணுமா?” – என்று கத்தியோடும் கட்டையோடும் அலைகிற ‘பாய்’களும், ஐஸ் வண்டி, பீப்பீ, சவரி முடி விற்கிற ஏவாரிகளுமாக – திருவிழாவின் ஒரு பகுதியே அடைந்துகிடந்தது. தென்னை மரங்களைச் சுற்றிலும் சாப்பிட முடியாமல் மீந்துபோன சோற்றுக் குவியல்கள், மண் மூடி ஈ மொய்க்கக்கிடந்தன.

தாண்டித் தாண்டித்தான் நடக்க வேண்டி இருந்தது நாகராசுவுக்கு.

”வேலைக்கு வரவாண்ணே!” – அப்போது தான் வந்து இறங்கிய ஒரு மாஸ்டரைப் பிடித்துக் கேட்டான்.

”ஓராள் வேலதாம்ப்பா… எவன் சம்பளந் தாரான்… அரிசிக்கு, ஆட்டுக்கு அள்ளிக் குடுப்பானுக… நமக்குக் கூலி தரணுமுன் னாத்தே… பல்லக் கடிப்பானுக… வேற எடம் பாரு!”

அடுத்த இடத்தில் ‘சாப்பிட’ மட்டும் வரச் சொன்னார்கள்.

தான் வேலை செய்த இடத்தில் மிச்சம் விழுந்த கறியைப் புதைத்த கதை சொன்னான் நாகராசு.

தோப்பின் மறு கோடி வரை நடந்தான். அவனுக்கே சள்ளையாக இருந்தது. ‘போதும் ஆற்றில் குளித்துவிட்டு திருவிழாக் கடையைச் சுற்றிப் பார்த்துவிட்டு, வீட்டுக்குப் போகலாம். ஞாயிறு, திங்களில் வேலைக்கு வரச் சொல்லி இருக்கிறார் ஆனந்தன் மாஸ்டர். சட்டை சேப்பில் இருந்த 10 ரூபாய்க்கு ‘சாக்கோபார்’ ஐஸ் வாங்கிச் சுவைத்தான்.

ஆற்றுக்குப் போகும் வழியில் தென்னை மரத் தூரில் சிறு கும்பல். தகர டப்பாவில் கட்டைகளைப் போட்டு உருட்டி ‘குலுக்குக் கட்டை’ ஆடிக்கொண்டு இருந்தார்கள்.

சினிமா நட்சத்திரங்களின் படங்கள் ஒட்டப்பட்ட அட்டை ஒன்று தரையில் விரிக்கப்பட்டு இருக்க, சின்ன மணைப் பலகையில் அந்த டப்பா கவிழ்த்து நிமிர்த்தப்பட்டது. கட்டையின் ஆறு பக்கங்களிலும் அட்டையில் ஒட்டப்பட்டு இருக்கும் சினிமாக்காரர்களின் அதே படம் குறுக்கப்பட்டு ஒட்டியிருந்தன.

”வையி சார் வையி… பத்துவெச்சா முப்பது, நூறுவெச்சா முந்நூறு… டபுளுக்கு ட்ரிபுளு, சிங்கிளுக்கு டபுளு… வையி… வையி…” ஓயாமல் டப்பாவைக் குலுக்கிக்கொண்டு பேசியபடிக்கு இருந்தான் உருமால் கட்டிய அந்த ஆள். ”வெச்சா மாலு… விழுந்தா டீலு! டீலா… டீலா… டீலா?” தொடர்ந்து அனத்தியபடியே இருந்தான்.

டப்பாவைக் குலுக்குவதும், டப்பெனப் பலகையில் சத்தம் எழக் கவிழ்ப்பதும், டப்பாவை நிமிர்த்தி விழுந்த படத்தைக் காட்டுவதுமாக வித்தைக்காரனின் வேகம் இருந்தது.

சுற்றி இருந்தவர்கள் கைகளில் ரூபாயைக் கசக்கி வீசிக்கொண்டு இருந்தார்கள். பணம் வருவதும் போவதுமாக இருந்தது. குவியல் குவியலாக ரூவாய் வைத்து ஆடிக்கொண்டு இருந்தார்கள். நாகராசு வும் ஆடி இருக்கிறான். பல தடவை ஜெயித்தும் – தோற்றும் வந்திருக்கிறான். ஜெயிப்பில் 5,000கூடக் கிடைக்கும்.

ஆடுவதற்கு வெறும் 10 ரூபாய் போதும். இங்கேயும் 10 ரூபாயில்தான் துவக்கினான்.

”…யோசிச்சா ஆகாது, ஆத்தாகொட… வெச்சா காசு… ஜெயிச்சா வீட்டுக்கு… போனா ஆத்தாளுக்கு. வையி… வையி…”- வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தான். வலது கையிலும், இடது கையிலுமாக டப்பாவை மாற்றி மாற்றிக் குலுக்கினான்.

நாகராசுவின் பணம் ஆத்தாளுக்குப் போனது. கடைசி 10 ரூபாய் – மாரியாத்தாள் மீது பாரத்தைப் போட்டு ஆடினான். ஆத்தாள், அவனை ஊருக்கு நடந்தே போகச் சொன்னாள்.

அவ்வளவுதான், அதற்கு மேல் அவனால் அடக்க முடியவில்லை. கண்களில் நீர் மடையாகப் புறப்பட்டுவிட்டது. புறங்கையால் துடைத்தும் அது நின்றபாடு இல்லை. இழுகி இழுகி, கன்னம் எரிச்சல் கண்டது.

”அழுவுறானப்பா” – கட்டை உருட்டிக்கொண்டு இருந்தவனின் அல்லக்கையாக இருந்தவன் புகார் சொன்னான். அது வரை மொணமொணவென ஒலித்துக்கொண்டு இருந்த குலுக்குக் கட்டைக்காரனது குரல், திடுமெனக் கட்டைக் குரலாக மாறியது. ”யேய்… என்ன ஸீன் காட்றியா… எந்திர்றா!”

”வீட்டுக் காசுண்ணே… அம்மா வையும்!”

”வீட்டுக் காசா..? அப்ப எங்க காசெல்லாம் பிக்பாக்கெட் அடிச்ச காசுங்கிறியா? டேய்… ஒனக்கேதுடா இம்புட்டுக் காசு? நீ பாக்கெட் அடிச்சதுதான். ஆத்தா திருவுழாவுல திருடுன காசு அம்போனு போச்சு… கௌம்பு… கௌம்பு…” – விரட்டினான்.

”வேல செஞ்சதுண்ணே!”

”எந்திர்றா!”

”வீட்ல அடிப்பாங்கண்ணே!”

அவனுக்குப் பேச நேரம் இல்லை. அடுத்தடுத்து பார்ட்டிகள் வந்துகொண்டே இருந்தன. அல்லக்கைக்கு கண் ஜாடை காட்ட, இரண்டு பேர் வந்து, நாகராசுவை அச்சுத் தூக்காகத் தூக்கி, ஆற்றுப் பக்கமாக இறக்கிவிட்டார்கள்.

”அங்கிட்டு மறுபடியும் வந்த… மவனே பிச்சுப் போடுவம் பிச்சு. ஓடிரு!” – எச்சரித்துவிட்டு நடந்தார்கள்.

திருவிழாவுக்காக முல்லையாற்றில் தண்ணீர் திறந்துவிட்டு இருந்தார்கள். இறங்கி, மூழ்கி மூழ்கிக் குளித்தான். உடம்பெல்லாம் குளிர்ந்தபோதும், கண்கள் எரிந்தன.

கரை ஏறியதும் வயிறு கபகபவெனப் பசித்தது. உடம்பைத் துவட்டாமல் சட்டை டவுசரை மாட்டிக்கொண்டான். சித்திரை மாசத்து வெயில் தலை ஈரத்தை வாங்கிக்கொண்டது.

கோயிலுக்குப் போகவே விருப்பம் இல்லை. பாலத்தில் நின்றபடியே ராட்சச ராட்டினமும் சர்க்கஸ் கூடாரமும் பார்த்து முடித்தான். தீச்சட்டி தப்புக் கொட்டு ஆட்டமும் அவனை மேலே நடக்கவொட்டாமல் தள்ளிக்கொண்டு வந்தன.

ஊருக்கு நடந்துவிட முடிவு செய்தான். ஈரத் துண்டைத் தலையில் உருமாலாகச் சுற்றிக்கொண்டான். தோப்பைக் கடக்கும்போது சாப்பிட்டுவிட்டுப் போக எண்ணம் பிறந்தது. உள்ளே நுழைந்து ஏதோ ஒரு பந்தியில் உட்கார, கறியாக அள்ளிவைத்தார் கள். சாப்பிட்டு முடித்ததும், வீட்டுக்குப் போகும் நினைப்பு பயத்தைக் கொடுத்தது.

அம்மாவிடம் என்ன சொல்ல… அடிக்க வரும். அப்பாவை எப்படிச் சமாளிக்க… யோசித்தபடியே தோப்புக்குள் சுற்றினான். இன்னமும் ஆடுகள், பலியாகிக்கொண்டே இருந்தன. கழுத்தறுபட்ட ஆடுகள், தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு தோலை உரித்துக்கொண்டு இருந்தார்கள். தோல் உரிக்கப்படும் ஆடாகத் தன்னை நினைத்துக்கொண்டான் நாகராசு. டிராக்டரும் வேன்களும் தோப்புக்குள் ஓரம் கட்டி நிறுத்தப்பட்டு இருந்தன.

வாகனங்கள் நிறுத்தியிருந்த அந்த இடத்தில் காற்று சிலுசிலுத்தது. சாய்ந்துகிடந்த ஒரு தென்னை மரத்தில் உட்கார்ந்தான்.

பக்கத்தில் இவனையத்த ஒரு பையன். அவனோடு இன்னொரு சிறுவன். இருவரும் சிவப்பு கலர் சட்டை போட்டு இருந்தனர். ஒரு மரத் தூரில் சாய்ந்தபடி நின்று இருந்தனர். நாகராசுவைப் பார்த்ததும் இரண்டு பேரும் சற்றுக் கலவரம் அடைந்ததுபோலத் தெரிந்தது.

நாகராசு தலையை வெட்டி, ‘என்ன..?’ என்று ஜாடையாகக் கேட்டான்.

மூத்தவன் தோள்களைக் குலுக்கிக் கையை விரித்து, ‘ஒண்ணுமில்ல…’ என்கிற பாவனையில் கையைத் திருப்பி ஆட்டினான். ஆனால், உடனிருந்த சிறுவனின் பார்வையோ வேறு பக்கம் நிலைத்து இருந்தது. அதனை நாகராசு கண்டுவிட்டான்.

உட்கார்ந்து இருந்த மரத்தைவிட்டு, எழுந்து அவர்கள் அருகே வந்தான்.

”நாங்கதே மொதல்ல பாத்தம்” – மூத்தவன் நாகராசுவை மறித்தான்.

சாய்ந்துகிடந்த இன்னொரு தென்னை மரத்தின் பின்புறம் ஓர் ஆள், ஒருச்சாய்த்துப் படுத்துக்கிடந்தார். முகம் முழுக்கச் சோறும் குழம்புமாக வாந்தி எடுத்துக்கிடக்க, மூக்கில் சளியும் கண்களில் ஈக்களும் மொய்த்துப் பறந்துகொண்டு இருந்தன. வெள்ளை வேட்டி- சட்டை அணிந்து, கையில் வாட்ச்சும், சேப்பில் மொத்தையாக பேப்பரும் இருந்தன.

”ஆர்றா..?” – நாகராசு கேட்டான்.

”எங்க அப்பா” – சின்னவன்.

”பொய் சொல்லாத… பாவம்!” – நாகராசு.

”அப்பாதேன் குடிச்சுக் கெடக்காரு.”

சமையல் வேலை முடித்து பிராந்திக் கடைக்குப் போகும்போது இதேபோல நிறையப் பேர் விழுந்துகிடக்கப் பார்த்துஇருக்கிறான் நாகராசு. இப்படிக் கிடப்பவர் களிடம் பிக்பாக்கெட் அடிப்பதற்கு என்றே அங்கே சுற்றுவார்கள்.

”வேணான்டா… பாவம்!” – நாகராசு பச்சாதாபப்பட்டான்.

”நாம விட்டுட்டாலும் வேற யாராச்சும் உருவிக்கிருவாங்க” – ரொம்பப் பழக்கப்பட்டவனாக மூத்தவன் சொன்னான்.

சின்னவனும் நாகராசுவும் ஆள் நோட்டம் பார்க்க… மூத்தவன், சட்டை, அண்ட்ராயரைக் காலி செய்தான்.

செல்போனும் நிறையப் பணமும் இருந்தது.

மூன்று பேரும் தனித் தனியே பிரிந்து, மாரியம்மன் கோயிலுக்கு மேல்புறம் அமைத்து இருக்கும் ராட்சச ராட்டினத்தின் அருகே ஒன்று கூடினர்.

மூத்தவன் சொன்னான், ”அவரு ஆட்டு ஏவாரிபோல!”

– அக்டோபர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *