யூனிபார்ம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 7,602 
 

மாலை மணி ஐந்து.

சீப் இன்ஜினியரின் அறையிலிருந்து கோப்புகளுடன் வெளியே வந்த ரத்தினம், தன் சீட்டின் அருகே தனக்காக கான்ட்ராக்டர் ராமசாமியும் மகன் ஆறுமுகமும் காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

தினமும் பள்ளிக்கூடம் விட்டதும் அருகிலிருக்கும் தன் தந்தையின் அலுவலகத்திற்கு வந்து விட்டுத்தான் வீட்டிற்கு செல்வான் ஆறுமுகம்.

கோப்புகளை மேஜையின் மீது வைத்தவன் மகனிடம், “எலே, நான் வீட்டுக்கு வரத் தாமசிக்கும்னு அம்மாகிட்ட சொல்லிருடா” என்றான்.

“அப்பா, யூனிபார்ம் வாங்கணும்பா..”

“கண்டிப்பால, ஆபீஸ் முடிஞ்சதும் கடைக்குப் போய் உனக்கும் தம்பிக்கும்
யூனிபார்ம் எடுத்துக்கிட்டு வரேன்”

“சரிப்பா, இப்ப மிட்டாய் வாங்க காசு குடுப்பா…”

“எலே இப்ப அப்பாகிட்ட துட்டு இல்லடா, ராத்திரி வீட்டுக்கு வரும்போது பண்டம் ஏதாச்சும் கண்டிப்பா வாங்கியாரேன்”

தந்தையின் பதிலில் திருப்தியடைந்தவனாக மூக்கை உறிஞ்சியபடி புத்தகப்பையை தோளில் மாட்டிக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினான் ஆறுமுகம்.

ரத்தினம், கான்ட்ராக்டர் ராமசாமியிடம், “இந்தப் பசங்களால நம்ம செலவு ரொம்ப அதிகமாகுதுங்க… தினமும் புத்தகம், கட்டுரை நோட்டு, பேனா, பென்சில் அது இதுன்னு ஏகப்பட்ட செலவாவுது. இது பத்தாதுன்னு, இவனுக்கும் என்னோட ரெண்டாவது பையனுக்கும் யூனிபார்ம் வேற வாங்கியாவனும்..” என்று அலுத்துக் கொண்டான்.

“அது வாஸ்தவம்தான் அண்ணே.. சரி, இன்னிக்கி சாயங்காலம் நம்ம பில்லை கொஞ்சம் பாஸ் பண்ணிடுவீங்கல்ல…” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தார் கான்ட்ராக்டர்.

“இல்லீங்க, இன்னிக்கு துணிக்கடைக்குப் போய் பசங்களுக்கு யூனிபார்ம் எடுக்கணும்… நாளைக்கு உங்க பில்லைப் பார்த்துறலாம்.”

“இல்லண்ணே, நான் நாளைக்கு அம்பாசமுத்திரம் போறேன், அங்க மில்லுல நல்ல துணி கிடைக்கும், நான் வாங்கியாரேன், என்ன கலர்னு மட்டும் சொல்லிடுங்க ரெண்டு பசங்களுக்கும் சேர்த்து எடுத்துரலாம்… இன்னிக்கு நம்ம பில்லை கொஞ்சம் பாத்து பாஸ் பண்ணிடுங்க” குழைந்தார் காண்ட்ராக்டர்.

“சரி, அப்ப உங்களுக்காக நான் நைட்டு இங்கேயே இருந்து உங்க பில்லுக்கு பாஸ் ஆர்டர் போட்டு மேனேஜர் பார்வைக்கு வச்சிருதேன்.” என்றவன் மேஜையின் இழுப்பறைகளை அடித்துச் சாத்திவிட்டு, “அப்ப வாங்க டிபன் சாப்பிட்டுவிட்டு வரலாம்” என்றவாறு கான்ட்ராக்டரை வெளியே தள்ளிக்கொண்டு போனான்.

இருவரும் அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள மிலிடெரி ஹோட்டலுக்குள் புகுந்து எதிரெதிரே அமர்ந்தனர்.

“என்ன சாப்படறீங்க?” – கான்ட்ராக்டர்.

“எனக்கு சிக்கன் கொத்துப் பரோட்டாவும், காப்பியும் போதுமுங்க.”

கான்ட்ராக்டர் ராமசாமி சர்வரிடம், சிக்கன் கொத்துப் பரோட்டாவிற்கும், இரண்டு கப் காப்பிக்கும் ஆர்டர் செய்தார்.

“ஏண்ணே, நீங்க ஒண்ணும் சாப்பிடலையா…?” வினயமாகக் கேட்டான் ரத்தினம்.

“இல்லண்ணே நான் இங்க வரும்போதுதான் டிபன் சாப்பிட்டேன்.”

ரத்தினம் ஆசையுடன் சிக்கன் பரோட்டாவை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, ராமசாமி காப்பியை ஆற்றிக் கொண்டிருந்தார்.

இருவர் மனதிலும் மாறுபட்ட எண்ணங்கள் ஓடலாயின….

‘இந்தப் பயலுக்கு சர்க்கார் குடுக்கற சம்பளம் பத்தாதுன்னு, ஒவ்வொரு பில்லுக்கும் நாம வாய்க்கரிசி போட வேண்டியிருக்கு… களவாணிப் பசங்கள கேட்கறதுக்கும் ஆளில்லாமப் போச்சு. ஆச்சு இந்த பில்லுதான் பைனல் செட்டில்மென்ட்டு… இது பாசாயிடுச்சுன்னா இனிமேல் இவனுக மூஞ்சியில கொஞ்ச நாளைக்கு முழிக்க வேணாம்…’ மனதில் கறுவிக் கொண்டார் ராமசாமி.

ரத்தினம், ‘இவனுக்கு இதுதான் பைனல் பில்லு, இன்னும் கொஞ்ச நாளைக்கு பாஸ் ஆர்டர் போடாமல் எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு கறந்தாத்தான் உண்டு’ என்று நினைத்துக் கொண்டான்.

சாப்பிட்டதும், ராமசாமி கல்லாவில் பணம் எண்ணிக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, ரத்தினம் வெகு சுவாதீனமாக ஹோட்டலை விட்டு வெளியே வந்து அருகில் இருந்த பெட்டிக் கடைக்குச் சென்று ஒரு பாக்கெட் பில்டர் சிகரெட்டும், தனது மகன்களுக்கு இரண்டு பாக்கெட் கடலை மிட்டாயும் வாங்கிக் கொண்டான். அங்கு வந்த ராமசாமி அவைகளுக்கும் சேர்த்து பணம் அழுதார்.

“சரிண்ணே… நீங்க கிளம்புங்க, நான் பில்லை இன்னிக்கு எவ்வளவு நேரமானாலும் உட்கார்ந்து பார்த்துடுதேன். நீங்க அம்பாசமுத்திரம் கிளம்புங்க… ரெண்டு பசங்களுக்குமே நீல நிறக் கால்சராயும், வெள்ளை நிறச் சட்டையும்தான், நாளைக்கு வரும்போது மறந்துடாதீங்க” என்று அவரை வழியனுப்பி வைத்தான் ரத்தினம்.

அவர் தலை மறைந்ததும், அபீஸ் சென்று, டூ வீலரை எடுத்துக்கொண்டு
தன் வீட்டை நோக்கிச் செலுத்தினான்.
-௦-

வயது வித்தியாசம் பாராது, ஒருவரையொருவர் அண்ணே, அண்ணாச்சி, தலைவா, மாமா, மச்சி என்று அழைத்து உறவாடுகிற மாநில அரசின் வாரியம் அது. அடிக்கடி வந்துபோகும் கான்ட்ராக்டர்களும் இந்த உறவுகளுக்கு விதி விலக்கல்ல.

சில குறிப்பிட்ட ‘சீட்களில்’ பில்கள் பாசாகும்போது செமத்தியான மாமூல்களும் அத்துப்படி.

இடைக்கால பில், இறுதி நிலை பில் இவைகளைப் பொறுத்து மாமூல்களின் கன பரிமாணங்களும் வேறுபடும். வெட்கத்தைவிட்டு கான்ட்ராக்டர்களுடன் அவர்கள் செலவில் பார்களுக்கும், ஹோட்டலுக்கும், சினிமாவிற்கும் அலைவதும், இரவு எட்டு மணிக்குமேல் மேஜைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு ஊழியர்கள், கான்ட்ராக்டர் என்கிற வித்தியாசம் பாராது ரம்மி விளையாடுவதும்… இவைகள் தவிர மாதச்சீட்டு, பாத்திரச் சீட்டுகள் பிடித்தல், காப்பிக்கொட்டை, புளி, எண்ணை போன்ற அத்தியாவசியப் பண்ட வியாபாரங்களும் அந்த அலுவலகத்தில் அமோகமாக நடப்பதுண்டு – வேலை ஒன்றைத் தவிர.

-௦-
மறுநாள் பன்னிரண்டு மணிவாக்கில் ராமசாமி ஒரு பெரிய தோல் பையுடன் வந்து, ரத்தினத்தின் இருக்கைக்கு அருகே அமர்ந்தார். மதிய உணவு இடைவேளையின்போது, யாரும் தன்னை கவனிக்காத நேரத்தில் தோல் பையைத் திறந்து, நீலம் வெள்ளை நிற யூனிபார்ம் துணிகளடங்கிய பார்சலை ரத்தினத்திடம் கொடுத்தார்.

வாயெல்லாம் பல்லாக அதை வாங்கித் தன் மேஜை இழுப்பறையினுள் திணித்துக் கொண்டான் ரத்தினம்.

‘பில்’ விஷயம் பற்றி அவர் மெல்ல ஆரம்பித்தபோது, ‘அதில் சில வில்லங்கம் இருப்பதாகவும் நாளை மறுநாள் காலையில் தன்னை வந்து பார்க்கும்படி’ ரத்தினம் சொன்னபோது கான்ட்ராக்டர் எரிச்சலடைந்து, “என்னண்ணே நீங்கதானே நேற்றே பாஸ் ஆர்டர் போட்டுவிடுவதாகச் சொன்னீங்க?” என்றார்.

ரத்தினம் அலட்சியமாக அமர்ந்திருக்க , கான்ட்ராக்டர் தன்னை சிறிது நிதானப் படுத்திக்கொண்டு மறுநாள் வருவதாகச் சொல்லிவிட்டுப் போனார்.

அன்று மாலை வீட்டையடைந்த ரத்தினம், புது யூனிபார்ம் துணிகளை தன் மகன்களிடம் காண்பித்து அவர்கள் சந்தோஷத்தில் திருப்தியுற்றான்.

மறுநாள் காலை, ராமசாமியின் வில்லங்கம் ஏதுமில்லாத பில்லை ஆடிட் செய்து அதன் கடைசி நிலையான பாஸ் ஆர்டர் மட்டும் போடாது ராமசாமியின் வரவிற்காக தன்னிடம் தயாராக வைத்துக் கொண்டான்.

சொன்னபடி அடுத்த நாள் மதியம் ராமசாமி வந்தார். ரத்தினத்தின் அருகே ஸ்டூலை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தார்.

இவன் இயல்பாக சிரித்துக்கொண்டு, “உங்க பில் ரெடியாயிருச்சு அண்ணே” என்றான்.

“மானேஜர் பார்வைக்கு போயிடுச்சா?”

“என்ன அவ்வளவு அவசரப்படுதீங்க? கவர் கிடையாதா….? சற்றுத் தாழ்ந்த குரலில் வினவினான்.

ராமசாமி வெகுண்டவராக, “என்னங்க இது… ரெண்டு ஜோடி யூனிபார்முக்கே நான் ஆயிரம் ரூபாய் செலவழிச்சிருக்கேன், அது தவிர, கிக்கன் பரோட்டா, காப்பி, கடலை மிட்டாய், சிகரெட் வேற…” என்று இழுத்தார்.

ரத்தினம் சிறிதும் மானம், வெட்கம் இல்லாதவனாக, “யூனிபார்ம் எப்பவாச்சும்தான… போனஸ் மாதிரி. மாமூல்தான் நீங்க வழக்கமா தர்றது,
உங்களுக்குத் தெரியாததா, வித்தியாசமா பேசறீங்களே…!” என்றான்.

“சரி இப்ப என்னோட பில்லுக்கு கடைசியா என்ன சொல்றீங்க? நான் எத்தனை தடவை இங்க வந்து அலையறது?”

“இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வாங்க, பார்க்கலாம்..”

ராமசாமி மிகுந்த கோபத்துடன் எழுந்து சீப் இன்ஜினியரின் பி.ஏ வின் அறைக்குள் நுழைந்தார்.

“மேடம், நான் உடனே ஸீ.இ யப் பார்க்கணும்…ப்ளீஸ்”

பி.ஏ. மிகவும் திறமையும், நேர்மையுமுள்ள பெண்மணி. அதனால் உடனே சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.

ஸீ.ஈ.யிடம், ‘கான்ட்ராக்ட் வேலை நடக்கும்போது இடைக்கால பில்கள் பாஸான விதத்தையும், தற்போது வேலை முடிந்தும் கடந்த இரண்டு மாதங்களாகியும் பைனல் பில் பாஸாகாது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கதையையும், அவ்வப்போது தான் செலவழிக்க நேர்ந்த நிர்ப்பந்தங்களையும் அழாக் குறையாகச் சொன்னார் ராமசாமி.

பொறுமையாகக் கேட்டுக்கொண்ட ஸீ.ஈ., தான் இவற்றைப் பரிசீலனை செய்வதாயும், மறுநாள் வரும்படியும் சொன்னார்.

நம்பிக்கையுடன் ராமசாமி அலுவலகத்தை விட்டு வெளியேறினார்.

ஸீ.ஈ ரத்தினத்தை கூப்பிட்டனுப்பினார்.

ராமசாமி சம்பந்தப்பட்ட கான்ட்ராக்ட் பைல்களை கொண்டுவரச் சொல்லிப் பார்த்தபோது, வேண்டுமென்றே பல தடவைகள் பல நிலைகளில் இடைக்கால பில்கள் தாமதப் படுத்தப் பட்டிருப்பதை அறிந்தார். தவிர பைனல் பில் வந்து இரண்டு மாதங்களாகியும் பாஸ் ஆர்டர் போடாது தக்க வைத்துக் கொண்டிருப்பதை அறிந்தபோது மிகுந்த கோபமடைந்து ரத்தினத்திற்கு ‘மெமோ’ ஒன்றை அனுப்பி அவனை அந்த சீட்டிலிருந்து உடனடியாக டெஸ்பாட்ச் செக்ஷனுக்கு மாற்றி உத்திரவு பிறப்பித்தார்.

அலுவலகம் முழுதும் இந்த விஷயம் பரவியது. அனைவரும் தன்னை ஒரு மாதிரியாகப் பார்ப்பதாக ரத்தினத்திற்கு தோன்றியது. மாமூல் கிடைக்காத டெஸ்பாட்ச் சீட்டுக்கு தன்னை மாற்றி கேவலப் படுத்தி விட்டதாக மனம் நொந்து போனான் ரத்தினம்.

அடுத்த நாளில் பில் பாஸாகி செக் தயாராகியிருந்தது ராமசாமி அலுவலகத்திற்கு வந்து செக்கைப் பெற்றுக் கொண்டார். ரத்தினத்தை அவர் ‘கண்டு’ கொள்ளவேயில்லை. நிம்மதிப் பெருமூச்சுடன் ஸீ.ஈ க்கு நன்றி தெரிவித்தார்.

அன்று இரவு உணவிற்குப் பிறகு மனச்சோர்வுடன் ஈஸிச்சேரில் சாய்ந்திருந்தான் ரத்தினம். அங்கு வந்த ஆறுமுகம் “அப்பா, நீ வாங்கித்தந்த யூனிபார்ம் சாயம் வெளுக்குதுப்பா” என்று தோய்த்து உலர்த்தியதால் வெகுவாகச் சாயம் போயிருந்த நீல நிறக் கால்சராயைக் காட்டினான்.

ராமசாமி மிகக் குறைந்த விலையில் மட்டரகத் துணியை எடுத்து தன் தலையில் கட்டி விட்டதை அப்போதுதான் உணர்ந்தான் ரத்தினம்.

யூனிபார்ம் மட்டுமல்ல. தன் சாயமும் மேலதிகாரியிடம் வெளுத்து விட்டதை வேதனையுடன் நினைத்துக் கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *