நான் அமெரிக்கா செல்வது இது ஒண்ணும் முதல் தடவை கிடையாது. ஆனாலும் தனியாக போவது இது தான் முதல்.!!!!!
இது ஆறாவது தடவை என்றால் நம்ப முடிகிறதா? இது தான் கடைசி என்று சொல்லிக் கொண்டே ஆறு தடவை ஆகிவிட்டது.இது ஒன்றும் பெரிய அதிசயமில்லை. அநேகமாக குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பும் எல்லார் கதியும் இதுதான்.
ஆரம்பத்தில் ஒரு குஷியுடன்தான் கிளம்புவோம். போகப் போக சுரத்து கம்மியாகிவிடுகிறது…..
” அம்மா just மூணு மாசம்……. குழந்தைகளும் பாட்டி பாட்டி என்கிறதுகள் “…….. இந்த பிரம்மாஸ்திரத்துக்கு வீழாதவர்கள் இருக்க முடியுமா?
எனக்கு மூன்று குழந்தைகள். ஒரு பையன் Newyork ல்……..City Bank ல்……. Manhattan ல் வீடு…..
ஒரு பெண் , Australia வில்…….. கடைசி பெண் சென்னையில்……. இரண்டு குழந்தைகள்……. முதல் பெண் வெளிநாட்டிற்கு போனதும் பயம் பிடித்துக் கொண்டது. சுய நலத்துக்காக கடைசி பெண் பக்கத்தில் இருக்கட்டும் என்று தீர்மானம் செய்து விட்டோம்.
பையன் வீட்டில் மூணு மாசம் இருந்து விட்டு இதோ கிளம்பி விட்டேன். அவருக்கு கொஞ்சம் BP ஜாஸ்தியானதால் நான் மட்டும்.
Airport ல் immigration, security முடிந்து அப்பாடா என்று, Gate no. கண்டு பிடிச்சு வந்து உட்கார்ந்தேன். பையனுக்கும் phone பண்ணியாச்சு!
இனி இந்தியா போய்ச் சேரும் வரை நேரத்தை எப்படியோ போக்க வேண்டுமே!
நிறைய புடவை அணிந்த பெண்கள்.. . பத்து வருஷம் முன்னால் புடவையில் பயணம் பண்ணுவர்களை அதிகம் பார்க்க முடியாது. ஏதோ ஒரு தயக்கம் …. ஆனால் காலம் மாறி விட்டது.பக்கத்தில் வந்து உட்கார்ந்த பெண்மணிக்கும் என் வயசு தான் இருக்கும். அழகாக புடவையில் இருந்தார்.
Phoneஐ எடுத்து யாரிடமோ பேச ஆரம்பித்தார்.
” ஏர்போட்டுல இருந்து பேசறேன் அண்ணி. அண்ணனுக்கும் உடம்பு நல்லால்லே ! கொஞ்சம் நடந்தாலே மூச்சுவாங்குது எனக்கு ஒரு மணிநேரம் காலத் தொங்கப்போட்டாலே வீங்கிக்குது. இரண்டு பேரும் wheelchairதான்.எப்படித்தான் ஊர் போய்ச்சேரப் போறோமோ ஒண்ணும்புரியலை.பையனானா
” இரண்டுபேரும் அடிக்கடி வெளியூர் போகவேண்டி இருக்குது.குழந்தைகள் தனியா இருக்கும்.கண்டிப்பா வரணும் ” ன்னு order போட்டுட்டான். வீட்ல இவங்க அம்மாவானா ” ” நீ வரும்போது நான் இருப்பேனோ இல்லையோ ” ன்னு ஒரே புலம்பல். யாருக்குன்னு பதில் சொல்றது ? இந்த வயசில் இப்படி கிடந்து அல்லாடுவேன்னு நினைக்கலை!
Bording announce பண்ணி விட்டார்கள். Air hostess ஐ ப் பார்த்ததுமே உற்சாகம் பிறந்தது. எனக்கு இப்போவெல்லாம் aisle seat தான் book பண்ண சொல்கிறேன். அடிக்கடி நடக்க வசதி.
என்னுடைய பக்கத்து seat ல் ஒரு அமெரிக்க யுவதி. இருபது வயதிருக்கும். ” Excuse me ” என்று கூறி விட்டு உட்கார்ந்தாள்.
” I’m Linda ” …… ” I’m Uma….. ” அறிமுகம் முடிந்து அவள் ஒரு புன்சிரிப்புடன் அமைதியானாள்.
பொதுவாக நான் பக்கத்திலிருப்பவரை தொந்தரவு செய்வதில்லை.அதுவும் வெளிநாட்டு பயணிகள் பெரும்பாலும் ஒரு laptop அல்லது book ஐ எடுத்து வைத்துக் கொண்டு விடுகிறார்கள்.நாம் ஏன் அவர் நிம்மதியை கெடுக்கவேண்டுமென்று பேசாமல் ஒரு சினிமா பார்த்துவிடுவேன்.
அவளாகத்தான் பேச்சை ஆரம்பித்தாள்.
” நான் Columbia University யில் junior year ல் இருக்கிறேன்.என்னுடய room mates இருவரும் இந்தியர்கள் தான். நீங்களும் இந்தியாவைச் சேர்ந்தவர்தான் என்று நம்புகிறேன்” என்றாள்.
எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. பேச துணை கிடைத்தால் வேறென்ன வேணும் ?
” உங்களை தொந்தரவு செய்கிறேனா? “
” Not at all! It’s a pleasure talking to you…. ” என்றேன்.
” நான் இந்தியா வந்திருக்கிறேன்.! Chennai ! என்றாள்.
” நானும் சென்னையில் தான் இருக்கிறேன். “
” நான் Oxford University யில் ஆறு மாசம் exchange student ஆக போகிறேன். Chennai எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. Especially தோச , இட்லி.!” என்னுடைய roommate ன் அக்காவின் திருமணத்திற்கு வந்திருக்கிறேன்.”
“ஓ ! Very interesting…. உங்கள் அனுபவம் பற்றி கூற முடியுமா?”
” திருமணம் ஒரு fantasy போல் இருந்தது.” ஆனால் மிகவும் ஆடம்பரமாக எனக்கு தோன்றியது. அதுவும் பெற்றோர் செலவில் என்றால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.”.
“பெண்கள் திருமணத்தை நடத்தி வைப்பதை எங்கள் கடமையாக நினைக்கிறோம்.விருப்பப்பட்டுதான் நடத்தி வைக்கிறோம்.
நீங்கள் பதினெட்டு வயதிலேயே பெற்றோரை விட்டு தனியாக இருப்பதை விரும்புகிறீர்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். அது உண்மையா?”
“நீங்கள் கூறுவது சரிதான். ஆனால் அதை எப்படி புரிந்து கொண்டிருக்கீறீர்கள் என்று தெரியவில்லை. பதினாலு வயதிலிருந்தே தனியாக முடிவெடுக்கும் திறமையை எங்கள் பெற்றோர் எங்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.
அதனால் பதினாறு வயதில் இந்த உலகத்தை எதிர் கொள்ள மனதளவில் தயாராகி விடுகிறோம். எந்த முடிவையும் எங்கள் மீது திணிப்பதில்லை. எங்கள் செயல்களுக்கு நாங்களே முழு பொறுப்பேற்கிறோம்.
பெற்றோர் பராமரிப்பில் வாழ்வதை தன்மானக்குறைவாக எண்ணுகிறோம். அதனால் தான் எங்கள் துணைவனை தேர்ந்தெடுக்கும் choice ஐயும் எங்களிடமே விட்டு விடுகிறார்கள்.”
திருமணத்தை நாங்களே நடத்துவதால் அதற்காக சேமிக்க தொடங்குகிறோம். வயதான காலத்தில் எந்த விதத்திலும் பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்புவதில்லை.”
” ஆனால் குழந்தைகளை என்றுமே நாங்கள் பாரமாக நினைப்பதில்லை. விருப்பப்பட்டு சுமக்கும் போது எதுவுமே பாரமாகத் தோன்றுவதில்லை ” என்றேன் நான் பதிலுக்கு……
” Indian mothers are great ” என்றாள்.
மறுபடி தொடர்ந்தாள்.
” நீங்கள் பதினாறு வயதில் …..உனக்கு ‘ தனியே பொறுப்பை எடுத்துக்கொள்ள விருப்பமா ? ‘ என்று கேட்டிருந்தால் எல்லாரும் ‘ஆமாம் ‘ என்று தான் கூறியிருப்பார்கள்.
சிறகு முளைத்த எந்த பறவையும் கூட்டிலிருப்பதை விரும்புவதில்லை. தாயிடம் பறக்க கற்றுக் கொண்டு சுதந்திரமாக பறக்கவே விரும்பும். நம்முடைய பயத்தால் வளரும் சிறகுகளை வெட்டிக் கொண்டேயிருக்கிறோம்.
நான் கூறுவது உங்கள் மனதை புண் படுத்தியிருந்தால் மன்னியுங்கள். “
எனக்கு அவள் கூறியது முழுக்க முழுக்க சரியென்று தோன்றினாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இன்னும் வரவில்லை என்று தோன்றியது.
நாம்தான் சுகம் சுகம் என்று சொல்லிக் கொண்டே அளவுக்கு அதிகமான பாரத்தை சுமக்க பழகிக் கொண்டோமோ ?
” You are right ! My children are ready ! Only I’m not ready !!!” என்று சிரித்துக் கொண்டே கூறினேன். அவளும் சிரித்தாள்.