சிவராசுவின் தீர்ப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 18, 2020
பார்வையிட்டோர்: 6,159 
 

நேரகாலத்தோடு அமர்வுக்கு வந்ததால் அங்கு பரவலாக போடப்பட்டிருந்த அந்த நீளமான வாங்குகளில் ஒன்றில் இடம் கிடைக்க அதில் அமர்ந்துவிட்டார் சிவராசு. வந்து சேர்ந்த களைப்பு நீங்க சற்று நீண்ட மூச்சை உள்வாங்கி வெளியேற்றி தன்னை ஒரு கணம் சுதாகரித்த வண்ணம் சுற்றும் முற்றும் தனது நோட்டமிடலை ஆரம்பிக்கிறார். அமைதியான சூழலுக்குள் ஆங்காங்கே ஒரு சில குரல்கள் அடங்கலான சப்தத்தில் மென்மையான இரைச்சல் அங்கு பரவியருந்ததை உணரக்கூடியதாக இருந்தது. அங்கு அவரைச்சூழ நூற்றுக்கும் அதிகமான மக்கள். வெவ்வேறு மதம் வெவ்வேறு மொழி வித்தியாசம் தெரிகிறது. சிலர் வந்தது முதல் தாங்கள் பிடித்த ஆசனங்களில் இருந்து ஆடாமல் அசையாமல் அவதானித்துக் கொண்டு இருக்கிறார்கள். இடத்தை விட்டு நகர்ந்தால் இன்னொருவர் இடத்தைப் பிடித்துவிடுவார் என்ற பயம் அவர்களுக்கு, காரணம் இங்கே எவ்வளவு நேரம் செலவிடவேண்டி வருமோ அதுவரை அமர்ந்திருக்க வேண்டுமல்லவா. சிலர் தங்கள் விபரங்களை அங்கிருந்த கறுப்பு மேலாடை அணிந்த பிரமுகர்களுடன் சமர்பித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தத்தமக்கென்று வெவ்வேறு நபர்களை நியமித்திருப்பது தெளிவாக புலப்பட்டது. உள்ளே இருக்கும்போது ஒருவிதமான தயக்கமும் தாழ்மையும் சுயமாகவே சிவராசுவிடம் குடிகொண்டிருந்தது.

வாழ்கையில் முதல் தடவையாக அந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார். இதற்கு முன்னர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இந்த இடத்திற்கு வந்த அநுபவம் அவருக்கு கிடைத்திருக்கவில்லை. நீண்ட நாட்களாக ஒரு ஆசை அவருள் இருந்தது. அப்படி என்னதான் உள்ளே நடக்கிறது, யார் யாரெல்லாம் வருகிறார்கள், என்னதான் பேசுகிறார்கள்> என்னென்னவெல்லாம் நடக்கிறது, கறுப்பு மேற்சட்டை அணிந்த அந்த பிரமுகர்கள் என்னதான் பேசுகிறார்கள் அவர்கள் எப்படித்தான் நடந்து கொள்கிறார்கள், ஏனைய அலுவலர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள், காக்கி உடை தரித்தோர் செயற்பாடுகள் எப்படி இருக்கிறது இவை பற்றியெல்லாம் நேரடியாக பார்க்க வேண்டும் என்ற ஆர்வம். அது மட்டுமா உள்ளே இருக்கும் கடவுளுக்கு சமமாக மதிக்கப்படும் பிரதானியின் செயற்பாடுகள் எப்படி இருக்கும். இறுதியாக அவர் எப்படி தனது தீர்வுகளை வழங்கும் செயல்முறையை கையாள்கிறார். இப்படி பல பல ஆசைகள் அவரது மனதில் ஆழமாக வேரூன்றிப்போய் இருந்தது. அமர்ந்த இடத்திலேயே அமர்ந்தபடி தான் காண ஆசைப்பட்ட அனைத்தையும் ஆவலோடு அவதானித்துக்கொண்டு இருக்கிறார்;. வேறு ஒரு புதிய உலகத்துக்குள் நுழைந்து இருப்பது போன்ற ஒரு பிரம்மை அவரை ஆட்கொண்டிருந்தது.

மனம் பொறுமை இழந்தது போன்ற ஒரு உணர்வு செயற்பாடுகள் ஆரம்பிக்க குறிப்பிட்ட நேரம் வரவேண்டும். அதுவரை காத்திருந்துதானே ஆகவேண்டும் என்ற எண்ணம் மனதை ஆட்கொள்ள, மீண்டும் சுதாகரித்துக்கொண்டு மேலும் பொறுமையை வரவளைத்துக்கொண்டு காத்திருப்பை தொடர்கிறார். நிசப்தத்துள் சப்தம் அது கூட ஒருவிதமான புது அனுபவம்தான். பள்ளிப் பருவத்தில் வகுப்பாசிரியர் வருகை தராத தருணத்தில் மாணவர்கள் எல்லோரும் சப்தம் போட்டுக்கொண்டிருக்க மாணவத் தலைவர் எழுந்து அமைதியைக் கொண்டுவருவார். ஏதாவது தண்டணை கிடைத்துவிடும் என்ற பயத்தில் அனைவரும் அமைதியாகிவிட ஒருசிலர் மட்டும் கைகளால் வாயை மறைத்துக்கொண்டு முணுமுணுப்பார்களே அப்போது ஆங்காங்கே ஒரு விதமான சப்தம் வருமே அந்த சந்தர்ப்பத்தை நினைவுபடுத்தியது இந்த சூழ்நிலை.

பிரதானி வருவதற்கான நேரம் மெல்ல மெல்ல நெருங்கிக்கொண்டிருந்தது சிவராசுவும் அந்த நேரத்துக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறார். மெல்ல பின்னால் திரும்பிப் பார்க்கிறார்

ஓ…. இது…. தான்….. அவர்களை வைத்திருக்கும் இடமோ…. மனதால் தனக்குள் தானே பேசுகிறார் சிவராசு. கம்பிக்கதவுகளால் முற்றாக அடைக்கப்பட்ட பெரிய அறை அதற்குள் பலபேர் அழகாக ஆடை அணிந்து, முகச் சவரம் செய்து, தலை சீவி மிகவும் சீராக காட்சியளித்துக்கொண்டு நின்றார்கள். சிலர் முகங்கள் செழிப்பாக இருந்தது சிலர் முகங்கள் குழப்பமடைந்து இருந்தது, சிலரோ அப்பாவிகள் போல் தோற்றமளித்தார்கள். வெவ்வேறு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் அத்தோடு வெவ்வேறு சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் எனப் பலர் ஒன்றாக அந்த அறைக்குள் முடக்கப்பட்டிருந்தமை தெளிவாகத் தெரிந்தது.

இந்தக் காட்சிகளையெல்லாம் மாறிமாறி பார்த்து ரசித்துக்கொண்டிருப்பதும் ஒரு சுவாரஸ்யம்தான்.

“சித்தப்பா…. இன்னும் கொஞ்ச நேரம் தான்…. பெரியவர்…. வந்திடுவார். வந்ததும்…. செயற்பாடுகள் தொடங்கிவிடும்…. பிரச்சினை இல்லைதானே…. அனேகமா…. இன்டைக்கு பிறகு வரவேண்டி வராது…. விசயம் எல்லாம் முடிஞ்சு…. முடிவு வந்திடும்…..”

பக்கத்திலிருந்து வந்த சப்தம் கேட்டு ரசனையை கைவிட்டு திரும்பிப்பார்த்தார் சிவராசு. அருகில் அவரது மருமகள் சர்மிளா. அவள்தான் சிவராசுவின் விடயங்களை கையாளப்போவதும் அவரின் பொருட்டு கருத்துக்களை முன்வைக்கப்போவதும். தானாகவே முன்வந்து அந்தப் பொறுப்பை அவள் ஏற்றுக்கொண்டிருந்தாள்.

ஆ…. சரி பிள்ளை…. இண்டையோட எல்லாம் சரியாகினா சரிதான்…. எனக்கெண்டால் அடிக்கடி இப்பிடி வந்துகொண்டு இருக்க ஏலாது…. தெரியும் தானே…. அலைச்சல் ஒரு பக்கம்…. மற்றது என்ரை வேலையுமெல்லோ பாதிக்குது…. சும்மா இல்ல.. வேலை இருக்கிற நாள் எண்டால் ஒரு நாளைக்கு…. ஆகக் குறைந்தது ஐயாயிரம் ரூபா வருமான இழப்பு…. அது மட்டுமா…. இங்க வந்து போற போக்குவரத்து செலவு வேற…. அதுக்கு மேல ஏனைய செலவுகள்…. சும்மா தேவையில்லாம சிலவளிக்க வேண்டியிருக்குதெல்லோ…. ஏற்கனவே இழந்தது போதாதெண்டு இதுக்கும் நாங்கள் சிலவளிக்க வேண்டியெல்லோ இருக்கு…. நல்ல வேளை எனக்காக கதைக்கிறதுக்கு நீங்க இருக்கிறபடியால… அந்த வேலைய பாக்க வேற யாரயும் நியமிச்சு அவயளுக்கு குடுக்கிற அந்த சிலவு இல்லாம போச்சு…. இல்லாட்டிக்கு அதுக்கும் ஒரு கணக்கு வந்திடும்….என்ன செய்யிறது…. இது எங்கட விதியெண்டு இருக்க வேண்டியதா போச்சு…. இது சிவராசு, தனது உள்ளக் கிடக்கையை முழுமையாக கொட்டித் தீர்க்க தலைப்பட்டடார்.

ஓம்…. நீங்கள் சொல்லுறதும் சரிதான்…. இண்டைக்கு எல்லாம் சரியாகிடும்…. நீங்க ஒண்டும் குழம்ப வேண்டாம்…. இப்ப பெரியவர் வாற நேரமாச்சு…. நீங்கள் கொஞ்சம் அமைதியா இருங்கோ…. நான் இதில நிக்க ஏலாது அங்க எங்கட இடத்தில தான் நான் இருக்க வேணும்…. நான் அங்க போறன்…. உங்கட நேரம் வரேக்க நான் சொல்லுறன் அதுமட்டும் சமாளியுங்கோ…. சரியா…. என்று பதிலிறுத்து அவரை சாந்தப்படுத்தி அமைதியாக்கி அவருடைய வாய்க்கு பூட்டுப் போட்டுவிட்டு மெதுவாக அவ்விடத்தைவிட்டு நகர்ந்தாள் சர்மிளா.

ஆ…. சரி…. சரி பிள்ளை நீங்கள் போங்கோ…. பிறகு உங்கட வேலைக்கும்…. என்னால…. சங்கடமா போயிடுமெல்லோ. நான் பாத்துக்கொண்டு இருக்கிறன் கூப்பிடேக்க வாறன்… என்று கூறிவிட்டு சாந்தமானார் சிவாராசு….

மனம் ஒரு குரங்கு மாறி மாறி இடத்துக்கு இடம் தாவும் என்று மூத்தோர் கூறுவதுபோல் சிவராசுவின் மனமும் ஒரு இடத்தில் இருப்புக்கொள்ள மறுத்தது. மாறி மாறி பல்வேறு விதமான நினைவுகளை நோக்கி ஓடத் தொடங்கியது. மீண்டும் வேதாளம் முருங்க மரத்தில் ஏறியதுபோல் அந்த இடத்தின் மிகுதிப்பகுதியை வட்டமிட்டு விழிகளால் நோட்டமிடத் தொடங்கினார்.

அந்தா…. ஆ…. அது என்னவாயிருக்கும்…. அது…. ஓ…. அதுதான் விசாரிக்கப் படவேண்டியவங்கள தனியாக கூப்பிட்டு நிறுத்தி விசாரிக்கிற இடம்போல…. மனதிற்குள் முணுமுணுத்தபடி அதன் அமைப்பை பார்த்தார். மூன்று பக்கமும் சுத்திவர சிறிய சிறிய இடைவெளிகள் விட்டு மரச்சட்டகத்தால் செய்யப்பட்ட ஒரு சிறிய கூடு. இப்பதான் எல்லாவற்றையும் தெளிவாக பார்க்க முடியும். செயற்பாடுகள் தொடங்கிவிட்டால் பின்பு அந்த அமைப்பு முறைகளையெல்லாம் தெளிவாக பார்ப்பது கடினம் என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அப்படியே மெதுவா தலையை திருப்பி நேரெதிராக உள்ள பக்கத்தை பார்த்தார். அங்கே ஒரு சிறிய மேடை மேடையின் முன்பாக நடுப்பகுதியில் நிலத்தில் ஒரு பெரிய மேசை. மேசை முழுவதும் கட்டுக் கட்டாக கோவைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த கோவைகள் என்னவாக இருக்கும்?…. மனதில் ஓடவிட்டு ஒருவாறு முடிவுக்கு வந்ததார். ஓ…. அவை தான்…. ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விபரங்களும், கடந்த காலங்களில் சேரிக்கப்பட்ட பல்வேறுபட்ட தகவல்களாகவும் இருக்கும் என்று தனக்கு தானே பதிலிறுத்தபடி தனது ஆராட்சியை தொடர்ந்தார் சிவாராசு.

அந்த மேசையின் ஒரு பக்கத்தின் மத்தியில் இருந்த நாற்காலியில் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார் அவருக்கு அருகில் மற்றொருவர் அமர்ந்திருக்க முன்னால் தட்டச்சு ஒன்று மேசையில் இருந்தது. முன்னையவர் தான் கோவைகளை எடுத்து பெரியவரிடம் வழங்குவதோடு ஒவ்வொருவருடைய பெயரையும் குறிப்பிட்டு அழைப்பார் போலும். மற்றையவர் அங்கு இடம்பெறும் விபரங்களை பதிவு செய்யும் பதிவாளராக இருக்க வேண்டும். அதனால் தான் தட்டச்சு இயந்திரத்தில் கடதாசி மற்றும் காபன் கடதாசி போன்றவற்றை போட்டு தயார்படுத்திக்கொண்டு இருந்தார் தன் உள்ளத்துள் இவ்வாறு நினைத்து தனக்குள் தானே தீர்வுகளையும் தந்துகொண்டிருந்தார்.

அப்படியே மெதுவாக தலையை நிமிர்தினால் அந்த மேடை மீது பெரிய மேசை பின்னால் உயரத்தில் ஒரு மணிக்கூடு நேரம் சற்று வேகமாக நெருங்குவதை அந்த மணிக்கூடு நினைவுபடுத்தியது. அப்பாடா…. அது…. அது…. அந்த மேசை எவ்வளவு பெரிய மேசை…. அது தான் பெரியவர் அமரும் மேசையோ…. ம்…. அதுவா தான் இருக்கவேணும்…. பழைய காலத்து மேசை…. நல்ல கனமா…. இருக்கும் போல…. அதோட எவ்வளவு நீளம்…. இதை எப்படித்தான் தூக்கிக்கொண்டு வந்து வச்சாங்களோ…. எப்பிடியும் ஒரு பத்து பேருக்கு மேல வேணும் இத தூக்கிறதுக்கு…. என்று ஆதங்கத்தோடு பெருமூச்சு விட்டபடி பார்த்துக்கொண்டிருக்க ஒரு சத்தம் அமைதி…. அமைதி…. அமைதி…. அத்தோடு வேறும் ஏதோ கூறினார் அதை சரியாக காதில் வாங்குதற்கு முடியவில்லை. அங்கிருந்த எல்லோரும் சட்டென எழுந்து நின்ற அந்த அமளிதான் இரண்டாவதாக கூறியவற்றை கிரகிக்க முடியாமல் போனதுக்கு காரணமாக அமைந்தது. எங்கிருந்து அந்த சப்தம் வருகிறது என தேடி கண்டு பிடிப்பதற்குள் ஒரு உருவம் முழுமையாக கறுப்பு நிற நீளமான மேற்சட்டை போட்டபடி முன்னே ஒருவர் வெள்ளை ஆடை அணிந்து இடுப்பிலும் நெஞ்சுக்கு குறுக்கேயும் ஒரு பட்டியணிந்தபடி உள்ளே வர அவரைத் தொடர்ந்து மெதுவாக நுளைந்தது. ஆகா…. அழகாகத் தான் இருக்கிறது இந்த காட்சி. உண்மையாகவே சினிமா திரப்படங்களில் வரும் நீதி மன்றங்களின் காட்சிகள் அப்படியே மனக் கண்ணுக்குள் ஓடியது சிவராசுவுக்கு. நான் காணிறது கனவா…. இல்லாட்டி நனவா…. என்று அவர் மனதில் நினைத்து நனவுதான் என்பதை உறுதி செய்யும்போது அனைவரும் தங்கள் ஆசனங்களில் அமர அதை சட்டென அவதானித்த அவரும் மெதுவாக அமர்ந்தார். இப்போது உள்ளே மாயான அமைதி நிலவியது. முன்பு இருந்த இலேசானா இரைச்சலும் காணாமல் போயிருந்தது. அனேகமானவர்களிடம் ஒரு பதட்டம் நிலவியது போன்ற தோற்றப்பாடு காணப்பட்டது. ஆயினும் சிலர் சர்வ சாதாரணமாக அங்கே இருப்பதை கண்டுகொள்ளக்கூடியாதாக இருந்தது. அவர்கள் பல தடவை இங்கு வந்து போன அனுபவம் உள்ளவர்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது.

ஒரு நீதி மன்ற அமர்வு எப்படி இருக்கும் என்பதை இப்போது அவதானிக்க தயாராகிறார் சிவராசு. ஒவ்வொரு பெயராக வழக்குக்கு உரியவர்கள் அழைக்கப்பட ஆரம்பிக்கிறது செயற்பாடுகள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அழைக்கப்பட்டதும் அங்கே இருந்த கூண்டிலிருந்து அழைத்துவரப்பட்டு முன்னால் இருந்த சிறிய விசாரணைக் கூட்டினுள் நிறுத்தப்பட அவர்கள் மீதான வழக்கு விசாரிக்கப்படுகிறது. சிவசாமியின் முறை வரும்வரை காத்திருக்க வேண்டும். அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஆவணங்களைப் பார்க்கும்போது அத்தனை பேரையும் எப்படி ஒரு நாளுக்குள் விசாரித்து முடிக்கப்போகிறார்கள் என்ற ஆச்சரியத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தாற்போல் அடுத்தடுத்து சிலருடைய பெயர் அழைக்கப்படுவதும் அவர்களது வழக்கு விசாரணைக்கு எடுக்க வேறொரு திகதி அறிவிக்கப்படுவதுமாக சற்று விரைவாகவே ஆவணங்கள் நகர்தப்படுவது மனதுக்கு ஆறதலாக இருந்தது. ஆயினும் இன்னும் இரண்டு மணி நேரமாவது சிவசாமியின் முறை வருவதற்கு எடுக்கும் என்பது மட்டும் தெளிவாக விளங்கியது.

மீண்டும் அவரது நினைவுகள் பின்நோக்கி நகரத்தொடங்கியது. நான் ஏன் இங்கு இன்று வரவேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்…. காலை கண் விழித்து அவர்களுடைய வீட்டின் அறைக்குள் இருந்து வெளியே வருகிறார். முன் வரவேற்பறையில் பொருட்கள் எல்லாம் அங்கும் இங்குமாக பரவிக் கிடக்கிறது. மனைவியின் கைப்பை, மகனுடைய பணப்பை சிவசாமியின் பணப்பை எல்லாம் உள்ளே இருந்த பொருட்கள் வெளியே எடுத்து வீசப்பட்டு சிதறிக்கிடக்கிறது. அவற்றுள் இருந்த பணம் மட்டும் காணவில்லை. அத்தோடு மேசையில் இருந்த ஒரு பெறுமதியான மணிக்கூடு, கையடக்க வீடியோ கமறா மற்றும் சிறிய ரக கையடக்க கமரா போன்றவை காணாமல் போயிருந்தன. மேசையில் இருந்த கணணி மற்றும் கைப்பேசி போன்றவை அப்படியே இருக்கின்றன. கொஞ்சம் விவரமான திருடன்போல…. அதுதான் கணணி கையடக்கத் தொலைபேசி போன்றவற்றை எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டான். மெதுவாக நிமிர்ந்து பார்த்தால் முன் ஜன்னல் கதவின் கண்ணாடி உடைக்கப்பட்டு அதற்கூடாக திருடன் வந்து தனது கைவரிசையை காட்டியிருக்கிறான். காட்சிகளை கண்ணுற்ற சிவசாமிக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை முழுமையாக குழப்பமடைந்த மனதோடு மனைவி பிள்ளைகளை அழைத்து நிலைமையை கூறுகிறார். என்ன செய்வதென்று தெரியாமல் அங்கலாய்ப்புடனும் பதைபதைப்புடனும் சலனமடைந்து போய்விட்டார். இரண்டாவது மகனுடைய சாதாரண தரப்பரீட்சைக்காக அன்றைய தினம் கட்டப்படவேண்டிய பணமும் வீட்டுச் செலவுகளுக்காக இருந்த பணமும் முழுமையாக சூறையாடப்பட்டிருந்தது.

சொல்ல முடியாத அளவு ஆத்திரமும் கோபமும் அவரை ஆட்கொண்டிருந்தமையை பறைசாற்றும் பதைபதைப்பு அவருடைய செய்கைகளில் தெரிந்தது. இறுதியாக என்ன செய்வது இனி ஆக வேண்டியதை பார்க்க வேண்டிதுதான் என்று முடிவ செய்தவராக காவல் துறைக்கு தகவலை கொடுத்து விட்டு அடுத்த நடவடிக்கைகளுள் இறங்கினார். சில நண்பர்களுடன் தொடர்புகொண்டு அவர்களுடைய உதவியுடன் பரீட்சைக் கட்டணத்துக்கான பணத்தை ஒருவாறு ஒழுங்குபடுத்தி இரண்டாவது மகனை பரீட்சைக் கட்டணம் கட்ட அனுப்பிவிட்டிருந்தார். அதன்பின்னர் காவல் துறையினர் வந்து தங்களது ஆய்வுகளை மேற்கொண்டு போதுமான ஆதாரங்கள் கிடைக்காமல் தகவல்களை மட்டும் பெற்றுக்கொண்டு திரும்பி சென்றனர். பின்பு ஒரு நாள் வேறு ஒரு தவறு ஒன்றின் பொருட்டு கைது செய்யப்பட்டவர்களை விசாரணை செய்யும்போது சிவசாமியின் வீட்டிலும் அவர்கள் தான் கைவரிசையை காட்டியமை தெரியவர அதற்கான வழக்கும் அந்த நபர் மேல் போடப்பட்டது. இதன் பிரதிபலன் தான் இப்போது இரண்டு வருடங்களுக்கு பிறகு அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. நடந்தவற்றுக்கான சாட்சி வழங்கும்பொருட்டு அழைக்கப்பட்டு இங்கே வந்து தனது முறை வரும்வரை காத்திருக்கிறார் சிவசாமி. அப்போது இருந்த குழப்பம், கோபம் ஆத்திரம் எதுவும் தற்போது இல்லை காலத்தோடு சேர்ந்து அவையெல்லாம் கலைந்து போயிருக்க இப்போது சாந்தமும் அமைதியுமாக எதற்கு இந்த அலைச்சல் என்று தன்னை தானே கேட்டபடி அமைதியாக நினைவுகளை மீட்டியபடி அமர்ந்திருக்கிறார்.

தனது முறை வந்துவிட்டதோ என்ற யோசனை திடீரென மனதை தட்டிவிட அந்த நினைவிலிருந்து மீண்டு தற்போதைய சூழலுக்குள் வந்தார். ஆகா…. ஒருவாறு….இரண்டு மணி நேரம் கடந்துவிட்டது…. சுவர் மணிக்கூடு அதை அவருக்கு தெரியப்படுத்த ஆவல் மேலீட்டால் தனது பெயர் அழைக்கப்பட்டுவிட்டதோ என்ற அங்கலாயப்புடன் தனது மருமகளை நோட்டமிட்டார். அவளைக் கதிரையில் காணவில்லை. இருந்தும் மனம் தளராது சுற்றம் முற்றும் விழிகளை உலாவவிட்டு தேடலானார். ம்ஹ_ம்…. கண்ணுக்கு தெரிந்த பகுதியெங்கும் அவளை காணவில்லை. தான் அழைக்கப்பட்டிருந்தால் தெரிந்திருக்கும். அழைக்கப்படவில்லை ஆகவே…. தனது முறைக்கு நேரம் மிக நெருங்கியிருந்தது என மட்டும் விளங்கிக்கொண்டார்.

நேரம் நெருங்கியிருந்ததால் சற்று பதட்டம் அவரிடம் குடிகொண்டிருந்தது. இப்போது அவர் என்ன கேட்பார்கள்…. எப்படி கேட்பார்கள்…. நான் எங்கு நிற்கவேண்டும்…. எப்படி நடந்துகொள்ள வேண்டும்…. என்ன பதில் கூறவேண்டும்…. பதிலை கூறும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும்…. இப்படி பல விடயங்களை தனக்குள் தானே கேட்டுக்கொண்டு தன்னைத் தயார்படுத்தத் தொடங்கினார். ஏற்கனேவே இங்கு வருவதற்கு முன்னர் பல விடயங்களை கேட்டு தெரிந்து வைத்திருந்ததோடு அதற்கமைவாக தன்னை ஓரளவு தயார்படுத்தியே வைத்திருந்தார் சிவசாமி. தற்போது அவற்றையெல்லாம் தனக்குள் மீள மீட்டி ஒழுங்குபடுத்தத் தொடங்கினார். தான் தனக்குள் கேட்டுக்கொண்ட கேள்விகளை மீட்டி அதன்படி ஒவ்வொரு செயற்பாடுகளையும் தனக்குள் ஒழுங்குபடுத்தினார். அத்தோடு என்னென்ன விடயங்களை எப்படி எப்படி கூறவேண்டும் என்று அவற்றையும் ஒழுங்குபடுத்தினார்.

சிவசாமியை பொறுத்தவரை எந்த ஒரு சிறு தவறுகளும் இல்லாமல் அனைத்து விடயங்களையும் தவறாமல் ஒழுங்காக ஒப்புவிக்க வேண்டும். தடுமாற்றம் ஏதும் நேர்ந்து விடக்கூடாது அங்கு இருக்கும் ஒவ்வொருவரும் அவர் ஒப்புவிக்கும் முறையை பார்த்து பிரமிப்படைய வேண்டும் என்பதெல்லாம் மிக முக்கியமான விடயங்கள். அவர் எந்த விடயத்தையும் மிக கவனமாகவும் நேர்த்தியாகவும் தவறுகளின்றியும் அதேவேளை அழகாகவும் செய்து முடிக்கும் பழக்கத்தை தனது வழக்கமாககொண்டிருந்தார். அதனால் இங்கும் அதேபோல் ஆகவேண்டும் என்பது அவரது அவாவாக இருந்தது. நடந்த சம்பவங்களை ஒன்று விடாமல் அனைத்தையும் சிறப்பாக ஒப்புவிக்கவேண்டும் அத்தோடு இதனையும் கூறவேண்டும் என்று மேலும் சில விடயங்களை மனதுக்குள் வரையறை செய்துகொண்டார்.

மனதுக்குள் அப்படியே காட்சி படமாக ஓடுகிறது…. நீதிமன்ற சம்பிரதாயம் சத்தியப்பிரமாணம் செய்ததை தொடர்ந்து சுவாமி…. அன்று காலை நான்…. நித்திரைவிட்டு எழுந்து…. வெளியே…. அப்படியே நடந்த சம்பவங்களை எல்லாம் ஒரு ஒழுங்கு முறையில் ஒன்று விடாமல் ஒப்புவிக்கிறார். ஒப்பவித்து முடிந்ததும்….

சகல விடயங்களையும் கூறிவிட்டீர்களா…. அவ்வளவுதானா? …. நீங்கள் வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா…. அப்படியானால் அதனையும் இப்போது கூறலாம்…. இது நீதிபதி

ஆமாம்…. சுவாமி…. என்னிடம் இருந்து களவாடப்பட்ட பணம் எனக்கு திருப்பி தரவேண்டியதில்லை…. அதனை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட இந்த நபர் அவர்தான் திருடினார் என்பதை ஒத்துக்கொண்டால்…. அல்லது விசாரணைகளில் நிரூபணமாகி விட்டால்… இவர் தான் திருடன் என்பது உறுதியானால்…. அந்த பணத்தை அவரிடமிருந்து பெற்று அவரது…. மனைவி…. அல்லது வளர்ந்த பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு ஒரு சிறிய பலசரக்கு கடை, அல்லது பழக்கடை போன்ற ஏதாவது ஒரு வியாபாரத்தை ஆரம்பித்து வழங்க பயன்படுத்துங்கள்…. இவரைப் போன்றவர்களால் அவர்களது குடும்பங்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றன…. சமூகத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு அவப்பெயர்…. பிள்ளைகள் கல்வி கற்க முடியாத நிலைமை…. பிள்ளைகளின் உணவு மற்றும் ஏனைய தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் இவர் போன்றவர்களுயை மனைவியர்…. இது தான் இவருடைய குடும்பத்தின் நிலையும்…. சாதாரணமாக இவர்கள் வீட்டில் இருக்கும்போதுகூட இதுதான் நிலைமையாக இருக்கும் பல சந்தர்ப்பங்களில் நான் இப்பேற்பட்டவர்களின் குடும்ப நிலைமை பற்றி அறிந்திருக்கிறேன்…. குடும்பத்தை கவனிக்கும் குடும்ப தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு கூட இவர்களுகளிடம் கிஞ்சித்தும் கிடையாது…. இந்த நிலையில் தண்டணை பெற்று சிறை சென்றபின் இந்த குடும்பம் இன்னும் பாதிக்கப்படும்…. பிள்ளைகளும் தந்தையைப் போலவே தவறான பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்…. ஆகவே தான் நான் இப்படியொரு கருத்தை முன் வைக்கிறேன்…. தாங்கள் மனமுவந்து எனது கோரிக்கையை ஏற்று இதனை செய்ய தொடர்புடைய அதிகாரிகளிடம் பரிந்துரை செய்யுங்கள்….

குற்றவாளியாக இங்கு கூண்டில் நிற்பவரை போன்றவர்கள் திரும்பத் திரும்ப இதே தவறை செய்து மீண்டும் மீண்டும் தண்டனை பெற்று சிறை சென்றுவிடுகிறார்கள்…. இவர்களுக்கு இது பழக்கப்பட்டு விட்டது…. ஆகவே குடும்பங்களாவது இவர்களில் தங்கி வாழாது தங்கள் வாழ்க்கையை சரி செய்துகொண்டு வாழ இதுபோன்ற நடவடிக்கை உதவியாக இருக்கும்…. தயவு கூர்ந்து இதனை செய்யும்படி தங்களை தாழ்மையுடன் கோருகின்றேன்…. அது மட்டுமன்றி…. சிறை செல்லும் இவர்கள் தொடர்ந்து தண்டனை முடிந்து வெளியே வந்ததும் பழையனவற்றை மறந்து…. ஒரு சிறந்த புதிய நேர்மையான வாழ்;க்கையை ஆரம்பிக்கக் கூடியவாறான வழிமுறைகளை தண்டணைக் காலத்தில் இவர்களுக்கு கிடைக்க வழி செய்தால் ஒரு குறிப்பிடக்கூடிய வீதத்தினரையாவது மனம்மாற்றி திருந்தி வாழும் சந்தர்ப்பத்தை உருவாக்க கூடியதாக இருக்கும்…. காலாகாலமாக இருந்துவரும் தண்டணைக்கால சிறை வாழ்;கை முறையில் மாற்றம் கொண்டுவந்தால் பல குற்றவாளிகள் தங்களை மாற்றி திருந்தி வாழ வழிபிறக்கும்…. அதற்கான ஒரு சிறந்த முறையை தண்டணை முறையில் அறிமுகப்படுத்துவது சிறப்பானது என நான் கருதுகிறேன்…… என்று தனது மேலதிக கருத்தை தடையின்றி தொடர்ச்சியாக கூறிக்கொண்டே போனார் சிவசாமி….

சித்தப்பா…. சித்தப்பா…. அமைதியான குரல் ஒன்று குறுக்கிட்டது. திடுக்கிட்டு தன்னை சுதாகரித்துக்கொண்டு குரல் வந்த திசையை நோக்கி தன் கண்களை நகர்த்தினார். மருமகள் அவரது சட்டத்தரணியின் குரல் தான் அது. ஓ….ஓ…. மை…. கோட்…. நான் எங்கு போய்விட்டேன்…. இன்னும் எனது முறை வரவில்லையா…. அப்போ இவ்வளவு நேரமும் நான் கனவுலகத்திலா இந்தேன்…. இது சிவசாமி தன் மனதுக்குள். எங்கட வழக்கு தான் கூப்பிடுகினம்…. நீங்கள் எழும்பி அமைதியா அங்க முன்னுக்கு வந்தா சரி…. அங்க நீதிபதி உங்கட சாட்சி முறைப்பாட்ட சொல்ல சொன்ன உடன நீங்க…. சொல்லத் தொடங்கலாம்…. எல்லாம் சரியா சொல்லுவீங்கதானே…. ரெடி தானே…. இது மருமகள் சர்மிளா. ஓமோம்…. எல்லாம்…. சரி…. நான் ரெடி…. நீங்கள் ஒண்டும் யோசிக்க வேண்டாம்…. எல்லாம் அப்பிடியே தெளிவா சொல்லிப்போடுவன்…. பிள்ளை…. இது சிவசாமி. சொல்லி முடிப்பதற்குள் அவள் அங்கிருந்து முன் நோக்கி நீதிபதியின் இருக்கை நோக்கி நகர்ந்தாள்.

சிவசாமியின் வழக்கின் சந்தேக நபரின் பெயரும் வழக்கு இலக்கமும் அழைக்கப்படுகிறது. சந்தேக நபர் கூண்டைநோக்கி அழைத்து வரப்படுகிறார் இப்போது சிவசாமி…. சிவசாமி…. சிவசாமி…. இவருடைய பெயரும் அழைக்கப்படுகிறது. சிவசாமி எழுந்து நீதிபதியின் பக்கம் பார்த்தபடி முன்னே நோக்கியவறு நகர தொடங்குகிறார். அங்கே சந்தேக நபரிடம் ஏதோ கேட்கிறார் நீதிபதி. சந்தேக நபரும் ஏதோ பதில் கூறுகிறார். சந்தேக நபர் ஒரு சட்டத்தரணியை நியமித்திருந்தார். அந்த சட்டத்தரணியும் நீதிபதியிடம் ஏதோ கூறுகிறார். சிவசாமியின் சட்டத்தரணி மருமகளும் ஏதோ கூறுகிறார் இப்படியே மாறி மாறி அவர்கள் மூவருக்குள்ளும் சில சம்பாசணைகள் நடந்துகொண்டிருக்க சிவசாமியும் அவர் சென்று நின்று தனது பக்க விடயங்களை ஒப்புவிக்கும் இடத்தை அடைந்தார். அருகில் மருமகள் சர்மிளா வந்தாள். முகத்திலே ஒரு விதமான புன் சிரிப்பு. எதையோ சாதித்துவிட்டதைப் போன்ற பெருமிதம் கலந்த நடை.

சரி…. நாங்கள் போவோம்…. வாங்கோ சித்தப்பா…. சர்மிளா கூறிக்கொண்டே என்னை வெளியே அழைத்தாள். என்னடா இது…. என்ன…. என்ன நடக்குது இங்க…. மூண்டு மணி நேரமா இருந்த இடத்த விட்டு அசையாமல் காத்துக்கொண்டு இருந்ததோட…. என்னென்னவெல்லாம் சொல்ல வேணும்…. அதயெல்லாம் எப்பிடி சொல்ல வேணும் எண்டெல்லாம் ஒரு பெரிய பயிற்சிய மனதுக்குள்ள எடுத்திட்டு…. தயாரா எழும்பி வாறன்…. இவள் போவம் எண்டு கூப்பிடுறாள்…. முணுமுணுத்தபடி பின்னால் தொடர்ந்தார் சிவசாமி.

என்ன…. என்ன பிள்ள நடந்தது…. நான் ஒண்டும் சொல்லேல்லையெல்லோ…. வேற ஒரு நாளுக்கு மாத்திட்டீனமோ…. என்னாலயெண்டால்…. திரும்ப இன்னொரு நாள் வர ஏலாது…. வந்து இப்பிடி இவளவு நேரம் காத்துக்கொண்டு இருக்கவும் ஏலாது…. பிள்ள கோவிக்காம…. ஏதாவது செய்ய ஏலுமோண்டு பாருங்கோ…. இண்டைக்கே நான் சொல்ல வேண்டியத சொல்லிப்போடுறன்…. இன்னும் கொஞ்சம் நேரம் போனாலும் பரவாயில்ல…. பொறுமையிழந்து நேரடியாகவே சற்று கடுமையான தொனியிலே சிவசாமி கூறினான்.

இதைப் பார்த்த சர்மிளாவுக்கு புன் சிரிப்பு மாறி கொக்களம் கொட்டி சிரிக்க வேணும்போல் இருந்தது என்பது அவளது பாவனையில் தெரிந்தது. சிவசாமிக்கு ஒன்றும் புரியவில்லை ஒரு திகைப்போடு காணப்பட்டார்.

நான் இவ்வளவும் சொல்லுறன் நீங்கள் என்ன புள்ள சிரிக்கிறீங்கள்…. எனக்கு ஒண்டும் விளங்குதில்லை…. இதுக்கே இவ்வளவு நேரமும் என்னகொண்டுவந்து இங்க காக்க வச்சனீங்கள்…. என்ன நடந்தது…. என்ன நடந்தது எண்டு சொன்னாதானே எனக்கு விளங்கும்…. இல்லாட்டி வேற ஏதாவது பிரச்சனையே…. என்னெண்டாலும் மறைக்காம சொல்லுங்கோ…. அதவச்சுக்கொண்டு அடுத்தது என்ன செய்யிறதெண்டு யோசிக்கலாம்…. சிவசாமி மாறி மாறி வேற வேற விதமா கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார். சர்மிளாவிற்கு அவள் கூறவந்த விடயங்களை கூறுவதற்கு இன்னும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவளுக்கு உள்ற சிரிப்பு வேற, அதை அடக்கிக்கொண்டு சித்தப்பாவின் ஒவ்வொரு உணர்வுகளையும் ரசித்துக்கொண்டு தான் சொல்ல வந்த விடயத்தை சொல்வதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்துக்கொண்டிருந்தாள்.

சிவசாமியும் விட்டபாடில்லை நீங்கள் அப்ப…. என்ன நடந்ததெண்டு சொல்ல மாட்டீங்களோ…. ஏன்னசரி சொல்ல ஏலாத விசயமோ…. சொல்லிறதால உங்களுக்க ஏதும் பிரச்சனையா போகுமோ…. ஆ…. அப்பிடியெண்டால் சொல்ல வேண்டாம்…. அப்பிடியெண்டால் தவணை போட்டிட்டீனமே? …. அடுத்த தவணை எப்பவாம்? …. திகதி தந்திருப்பீனம் தானே…. அதயெண்டாலும் சொல்லுங்கோவன்…. இல்லாட்டி வேற ஏதாவது எதிர் பார்க்கினமோ? ….அந்த கள்ளன்ர பக்கம் வந்து வாதாடின வாக்கீல் ஏதோ சொன்னவரெல்லோ…. அதுக்குப் பிறகு நீதவானும் ஏதோ சொன்னவரெல்லோ…. பிறகு நீங்களும் ஏதோ கதச்சனீங்கள்…. நான் கவனிச்சனான்…. எனக்கு இருந்த ரென்சனுக்குள்ள…. அவையெல்லாம் என்ன சொன்னவை எண்டு எனக்கு சரியா விளங்கேல்ல…. நீங்கள் சொன்னதும் விளங்கேல்ல…. இப்பவாவது என்ன நடந்ததெண்டு சொல்லுங்கோ…. எனக்கு ஏற்கனவே இருந்த ரென்சனோட…. இந்த ரென்சனும் சேர்ந்து ஒரே குழப்பா கிடக்குது…. சொல்ல மாட்டியளே…. நான் ஏதும் குழம்பிவிடுவன் எண்டு நினைக்கிறீங்களோ…. நான் ஒண்டும் குழம்ப மாட்டன் பிள்ளை…. நீங்க சொல்லுங்கோ பிள்ளை…. தொடர்ந்து தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தபடி கேள்விகளை தொடுத்துக்கொண்டு வந்ததில் நீதிமன்றத்தை விட்டு வாசலுக்கு வந்தது கூட சிவசாமிக்கு தெரியவில்லை. சர்மிளாவுக்கோ சிரிப்பு இன்னும் அடங்கியபாடில்லை வெளியே தெரியாமலே உள்;ர சிரித்துக்கொண்டிருந்தாள். அவள் நடந்ததை சொல்வதற்கு தயாராக இருந்தாலும் சொல்வதற்கான சந்தர்ப்பத்தை சிவசாமிதான் இன்னமும் அவளுக்கு கொடுக்கவில்லை.

சரி…. சரி…. சித்தப்பா கொஞ்சம் எனக்கு கதைக்கிறதுக்கு ஒரு சாண்ஸ் தாங்கோவன்…. அப்பதானே…. நான் கதைக்கலாம்…. நீங்கள் இப்பிடியே கேள்விக்கு மேல கேள்வியா கேட்டுக்கொண்டே போனால்…. நான் எப்பிடி நடந்ததை சொல்றது…. ஒருவாறு கிடைத்த ஒரு இடைவெளியை பிடித்துக்கொண்டு விடயத்தை சொல்ல ஆரம்பித்தாள் சர்மிளா.

அடடே…. நான் ஒரு லூசு…. நானே தொடர்ந்து கதச்சுக்கொண்டுபோனா நீங்கள் எப்பிடி நடந்தத சொல்லுறது…. இது…. விளங்காம போச்சே இந்த மர மண்டைக்கு…. அது என்னென்டால் எனக்கு இருந்த ரென்சனோட…. நான் சொல்ல ரெடியா வந்த விசயங்களயும் சொல்ல ஏலாம போட்டுதெல்லே அந்த ரென்சனும் சேர்ந்து…. டபிள் ரென்சனா போச்சு…. அதுதான்…. தொடந்து கதச்சுக்கொண்டே வந்திட்டன் சொறி…. சொறி…. பிள்ளை….நீங்க சொல்லுங்கோ…. நான் கொஞ்சம் சைலன்ஸாகிறன்…. என்று கூறி அமைதியாகியவர் மீண்டும் அதில்ல பிள்ளை…. என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க. பொறுங்கோ…. பொறுங்கோ…. சித்தப்பா…. என்று அவருடைய வாயை அடைத்து தான் கூற வந்த விடயத்தை கூறத் தொடங்கினாள் சர்மிளா. நீங்கள் ஒண்டும் ரென்சனாக வேண்டியதில்ல…. நீங்க நினக்கிற மாதிரி ஒரு பிரச்சனையும் இல்ல…. இடையே குறுக்கிட்ட சிவசாமி அப்ப ஏன் பிள்ள என்ன கதைக்க விடேல்ல…. உடனே அவரை நிறுத்தி சர்மிளா மிகுதியை சொல் ஆரம்பித்தாள். பொறுங்கோ சித்தப்பா அதத்தான் சொல்ல வாறன்…. நீங்க அங்க ஒண்டும் கதைக்க வேண்டிய தேவை வரேல்ல…. ஏனென்டால்….

ஏனென்டால்…. இது சிவசாமி

ஏனென்டால் எங்கட வழக்கு முடிஞ்சு போச்சு….

அதெப்பிடி…. மீண்டும் சிவசாமி

கள்ளன் தன்ர பிளைய ஒத்துக்கொண்டிட்டான்…. தான் தான் களவெடுத்ததெண்டு ஏற்றுக்கொண்டுட்டான்.

ம்…. அதுகும் அப்பிடியே…. அதுதான் தெரிஞ்ச விசயமாச்சே…. அவன் தான் களவெடுத்ததெண்டு…. பொலிசு கொண்டு வந்து வீட்டில காட்டேக்க…. எப்பிடி வந்தது…. எதில இருந்தது…. எப்பிடி எல்லாத்தையும் எடுத்தது…. எண்டு எல்லாம் அவன் அப்பவே சொன்னவன்தானே…. குறுக்கிட்டார் சிவசாமி

ம்…. அதுதான்…. அத இன்டைக்கு நீதவானிட்டையும் ஒப்புக்கொண்டிட்டான்…. அதனால….

அதனால…. பிற்பாட்டு சிவசாமி

அதனால நீதவான் அவனுக்கு தண்டனைய குடுத்து வழக்க முடிச்சிட்டார்…. இனி நாங்களும் கோட்டுக்கு வர தேவையில்லை….

அட…. கடவுளே…. எப்பியெல்லாம் எதிர் பார்த்த விசயம் இப்பிடி பொசுக்கெண்டு முடிஞ்சு போச்சுதே…. எப்பிடியோ இந்த வழக்க…. விசாரணை…. எண்ட தொல்லை முடிஞ்சது சந்தோசம் தான்…. அப்ப அவன் எடுத்த அந்த காசு…. இது சிவசாமி

சித்தப்பா…. சித்தப்பா…. அவன் எடுத்த காசை வச்சுக்கொண்டா இருந்திருப்பான்…. அவன் எல்லாத்தையும் செலவளிச்சு முடிச்சிட்டான்….. இப்ப அவனிட்ட ஒன்டும் இல்ல…. அதுக்கும் சேத்து தண்டன காலத்த கூட்டிக் குடுத்திட்டார் நீதவான்….

அதுகும்…. அப்பிடியே…. ம்…. அதுகும் நல்லது தான்…. எனக்கு கதைக்கதான் சான்ஸ் கிடைக்கேல்ல…. அது போகட்டும் பரவாயில்ல…. இனி இப்பிடி அலஞ்சு திரியிற…. காத்துக்கிடக்கிற வேலை இல்லாம போச்சுதெல்லோ அது போதும்….. களவெடுத்தவன் குசியா தண்டனை வாங்கிக்கொண்டு சிறைக்கு போயிட்டான்…. அவனுக்கு ஒரு நட்டமும் இல்ல…. நாங்கள் தான் களவையும் குடுத்திட்டு…. அதெல்லாம் இழந்ததுமில்லாமல் வழக்கு என்டு அலஞ்சதுதான் மிச்சம்… இப்பிடி நடந்தால் இவனுகள் திரும்பவும் வந்து தொடந்து இப்பிடியான குற்றங்கள செய்யத்தானே செய்வானுகள்…. சிவசாமி கூறி முடித்து ஒரு பெருமூச்செறிந்தார்.

அவருடையய பெரு மூச்சின் அர்த்தம் சர்மிளாவிற்கு விளங்க வாய்ப்பில்லை. அவர் சில புதிய கருத்துக்களை சொல்ல நினைத்திருந்தாரல்லவா அதை நீதிபதி முன்நிலையில் கூற முடியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கத்தில் வந்ததுதான் அந்த பெருமூச்சு.

சரி…. சரி…. உங்களுக்கும் நல்ல களைப்பாயிருக்கும்…. நீங்கள் இருந்தது எனக்கு ஒரு தைரியமும் ஆறுதலுமா இருந்திச்சு மிச்சம் நன்றி பிள்ள….. இப்பிடியே வீட்டை போய் சாப்பிட்டிட்டு நீங்க உங்கட வீட்ட போகலாம் வாங்கோ…. என்று கூறி சிவசாமி சர்மிளாவை அழைக்க

என்ன சித்தப்பா…. நீங்கள்…. எனக்கு போய் நன்றி எல்லாம் சொல்லிக்கொண்டு…. சித்தப்பாக்கு ஒரு மகள் செய்யிற கடமையதானே நான் செய்தனான்…. அதெல்லாம் சொல்ல வேண்டியதில்லை…. நான் இன்னொரு கிளயின்ட சந்திக்க வேணும்…. இப்பவே நேரம் போய்கொண்டு இருக்கு நாளைக்கு அவவின்ர வழக்கு விசாரணைக்கு வருகுது…. ஆனபடியால நான் இப்ப போகவேணும் சித்தப்பா…. கோவிக்காதையுங்கோ…. சித்தீற்ர சொல்லுங்கோ நான் சனிக்கிழமை வீட்ட வாறனென்டு…. என்று கூறி புறப்பட்டாள்.

ஆ…. சரி பிள்ள…. கவனமா போயிற்று…. வாங்கோ…. கட்டாயம் சனிக்கிழம வீட்ட வாங்கோ நாங்கள் பாத்துக்கொண்டு இருப்போம்…. பாய்…. கோட் பிளஸ் யூ….மை சயில்….

கூறி விட்டு வந்த முச்சக்கர வண்டியை நிறுத்தி அதில் ஏறி வீடு நோக்கி சென்றார் நினைத்ததை சாதிக்க முடியவில்லையே என்ற மனக்குழப்பத்துடன்.

சிவசாமி போன்றவர்களின் வித்தியாசமான கருத்துக்கள் எதிர் காலத்தில் குற்றங்கள் குறைவதற்கு அவசியமானவையே…. இவை யார் மனதிலாவது பட்டு மாற்றங்களை கொண்டுவர முனைவார்களா?.. அப்படி நடந்தால் அது எல்லோருக்கும் சிறப்பானதே….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *