பரீட்சை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 23, 2017
பார்வையிட்டோர்: 6,383 
 
 

விடிந்தால் பரீட்சை.

ஹிட்லர் போர்க்களம் போவதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தான்? 16ஆம் உலூயி மன்னனின் 32வது மனைவி பெயர் என்ன? எலிசபெத் மகாராணியார் தனது 82வது பிறந்ததினக் கொண்டாட்டத்தின்போது என்ன கலர் மூக்குத்தி அணிந்திருந்தார்? – என்பவற்றையெல்லாம் நினைவுபடுத்துவதில் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருந்தான் சரவணன்.

இந்த நேரம் பார்த்து கோவிந்தர் ஹொஸ்பிட்டலில் போய் படுத்துக் கொண்டுவிட்டார். கோவிந்தர் சரவணனிற்கு மாமா. சரவணனின் அம்மாவின் தம்பி. ‘கோவிந்தராசு’ என்பது அவரது இயற்பெயர்.

’இயற்பெயர் என்னவாயிருந்தென்ன! விடிஞ்சா கோவிந்தர் கோவிந்தாதான்’ என்று எதிர்வீட்டு விதானையார் ஊரெல்லாம் திக்விஜயம் மேற்கொண்டு புலம்பித் திரிகின்றார். விதானையார் தனிக்கட்டை. இயற்பெயர் சுந்தரம். சுந்தரம் பெயரில்தான் இருந்தது. எல்லாருக்கும் பட்டங்கள் பின்னாலேதான் நீளும். சுந்தரத்திற்கு இது புறவிலக்கு. முன்னாலே நீண்டது. ஊர்த் தொளவாரங்களில் தலையிடுவதால் முதலில் ‘விதானையார்’ ஆகி பின்னர் ’விஸ்கி விதானயார்’ ஆனார்.

கோவிந்தருக்கு மிஞ்சிமிஞ்சிப் போனால் ஒரு வைரவிழாக் கொண்டாடுகிற வயசுகூட இல்லை. அதுக்குள்ளை அப்படி என்ன தலை தெறிக்கிற அவசரமோ?

கோவிந்தரின் வாழ்க்கை வட்டிக்கு காசு கொடுப்பதும் சீட்டுப் பிடிப்பதுமாகக் கழிகின்றது. முற்பிறப்பில் சீனி வியாபாரம் செய்திருக்க வேண்டும். அதுதான் அவரைப்போட்டு ‘டயபிட்டீஸ்’ இப்படி அலைக்கழிக்கின்றது என்று சொல்லுவாரும் உளர். கோவிந்தரின் வீட்டுக்கோழி குட்டி போடுகிறதோ இல்லையோ அவரின் காசு பணம் குட்டி போடுகின்றது. குட்டிக்கும் கோவிந்தருக்கும் பல விதங்களில் சம்பந்தமுண்டு. இவற்றில் எல்லாம் இருந்து சரவணனுக்கு பரீட்சைக்கு கேள்விகள் வரலாம் என்று சொல்வதற்கில்லை. கோவிந்தர் ஒருவேளை சுகப்பட்டு தெருவீதிகளில் அலைந்தார் என்றால், நீங்கள் எல்லாரும் தலைதெறிக்க ஓடி தப்புவதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காகவே இதைச் சொல்லி வைக்கின்றேன்.

சரவணன் புலன்களை ஒன்றுதிரட்டி புத்தகம்மீது திருப்பினான். மீண்டும் வாசல்பக்கம் ‘கோவிந்தா கோவிந்தா’ கேட்டது. விதானையார் இரண்டாவது ரவுண்டில் காலடி எடுத்து வைத்து, இவர்களின் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். வீட்டிற்குள் வருவதற்கு முன்பதாக கதவைத் தாழ் போட்டுக்கொள்ள வேண்டும் என்று விரைந்தான் சரவணன். ஆனால் இந்தமாதிரிச் சந்தர்ப்பங்களில் எல்லாம் விதானையார் வாயு வேகம். வீட்டிற்குள் புகுந்துவிட்டார்.

“டயபிட்டீஸ் இருக்கு எண்டு தெரிஞ்சும், இரண்டு கிழமையா பிசுங்கான் வெட்டி நாற நாற வைச்சிருந்திருக்கிறான். நேற்றுக்காலமை கூடச் சந்திச்சனான். அப்பகூடச் சொல்லேல்லை. அவள் பெடிச்சியும் ஒன்பதுமாதக் கர்ப்பிணியாம். அது வேற இழவு…”

”அம்மா வீட்டிலை இல்லை மாமா!… பிறகு வாங்கோ…”

”அட… நான் தலை போற விஷயம் பற்றிச் சொல்லுறன். நீயென்னண்டால் அம்மா இல்லை ஆட்டுக்குட்டி இல்லை எண்டு சொல்லுறாய்!”

“இல்லை மாமா! எனக்கு நாளைக்கு exam.“

”விடிஞ்சா செத்தவீடு தம்பி. நீயென்னண்டா exam எண்டு சொல்லுறாய். உங்கை சனம் எல்லாம் கோவிந்தரைப் பாரக்க எண்டு ஆளாளுக்கு அள்ளுப்பட்டுக் கொண்டு ஹொஸ்பிற்றலுக்குப் போகினம்.”

”நீங்கள் போகேல்லையே மாமா?”

“ஆண்டவனாப் பாத்துச் செய்யிற இந்த விஷயத்திலை சுண்டக்காய் மனிசன் நான் போய் என்ன செய்ய முடியும் தம்பி?

கோவிந்தரின்ரை விதியை பிசுங்கான் காலுக்குள்ளாலை கொண்டுபோயிருக்கு. கால் அழுகிப் போச்சாம். எடுக்கவேணுமெண்டு கதைக்கினம். ஆர் கண்டார்கள்? கோவிந்தருக்குக் கால் கழட்டியதும் பவுண் கால் போட்டுக் கொண்டாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை. எண்டாலும் என்ரை மனசு என்ன சொல்லுதெண்டா விடிஞ்சா செத்தவீடொண்டு நிச்சயம் தம்பி. வீணாப்படிச்சு மினைக்கெடாதையும்.”

சரவணனுக்கு மழை ஓய்ந்தது போல இருந்தது. விதானையார் போகும்போது சரவணனின் கையிற்குள் இனிப்பொன்றை வைத்துக் கண்ணைச் சிமிட்டினார்.

”என்ன மாமா இது?”

“சாப்பிட்டுப் பார். விளங்கும்”

சாப்பிட்டான். இனிப்புக்கும் கோவிந்தருக்கும் என்ன சம்பந்தம்? சரவணனுக்குப் புரியவில்லை.

” புரியவில்லையே மாமா… இன்னுமொண்டு சாப்பிட்டுப் பார்க்கட்டுமா?”

“இந்தா பிடி. சாப்பிட்டுப் பார். இப்பவும் புரியாட்டி உனக்கு எப்பவும் புரியாது. நீ படிச்சுப் பிரயோசனமில்லை. சும்மா இரு” சொல்லிவிட்டு கடகடவென்று போய்விட்டார்.

விதானையார் போன சற்று நேரத்தில் சரவணனின் அம்மா ஹொஸ்பிட்டலில் இருந்து வீடு வந்துவிட்டார்.

”தம்பி… மாமாவுக்கு கடுமை. சீட்டுக்காசு வட்டிக்கணக்கு எண்டு எல்லா மனிசரோடையும் சண்டை பிடிச்சு புத்தி பேதலிச்சுப் போய் அறிவு நினைவு இல்லாமல் கிடக்கிறார். ஒருக்கால் போய்ப் பாத்திட்டு வா” சொல்லிக்கொண்டே குசினிக்குள் பானை சட்டிகளை உருட்டினார் அம்மா.

பரீட்சை எப்பொழுதும் எழுதலாம். விதி ஒருமுறை எழுதியதுதான். மாமாவைப் பார்க்க முடிவு செய்தான் சரவணன்.

ஹொஸ்பிட்டலுக்குள் நுழையும்போது ஸ்ரெச்சரில் வெள்ளைத்துணி போர்க்கப்பட்ட ஒரு மனிதனைத் தள்ளிக்கொண்டு போனார்கள். பின்னாலே ஒரு பெண் ஓவென்று கதறிக்கொண்டு மூக்கைச் சிந்தி இவன்மேல் எறிந்துவிட்டு வளைந்து ஓடினாள். கோவிந்தராக இருக்குமோ? பயந்துவிட்டான் சரவணன்.

‘என் செயலாவது இனி யாதொன்றும் இல்லை. இனித் தெய்வமே!” என்று மெத்தையில் நீட்டுவாக்கில் கிடந்தார் கோவிந்தர். அவரைப் பார்த்த மாத்திரத்தில் நகைச்சுவை நடிகர் நாகேஷ் உங்களுக்கு நினைவில் வந்து போகலாம். ஒருகாலத்தில் இவரும் நகைச்சுவை உணர்வுடன் இருந்தவர்தான். காலப்போக்கிலே ‘சுவை’ போக ’நகை’யே தஞ்சமென்று இருந்துவிட்டார்.

வெண்ணிறப் போர்வை இடுப்புவரை படர்ந்திருந்தது. மேலே நரம்புமண்டலங்களும் விலா எலும்புகளுமாக வெளித்தெரிந்தன. அவரது தலைமாட்டில் இரண்டு புதல்விகள். பாதகமலங்களில் நிறைமாதக் கர்ப்பிணியாக அவர் மனைவி.

“வட்டிக்கு ஆர் ஆரிட்டையெல்லாம் காசு குடுத்து வைச்சிருக்கிறியள் எண்டு சொல்லுங்கோவன்” காலைப் பிடித்து உலுப்பி கேட்டுக் கொண்டிருந்த மனைவி சரவணனைக் கண்ட்தும் விலகி நின்றாள்.

”தம்பி சரவணன் வந்திருக்கிறான். கண்ணை முழிச்சுப் பாருங்கோ”

ரியூப்லைட் வெளிச்சத்தில் கோவிந்தரின் உடல் பழுத்துக் கிடப்பது போலத் தெரிந்தது. ‘ஆ… ஊ…’ என்று பாசாங்கு செய்துவிட்டு கடைக்கண்பார்வை அருளினார் கோவிந்தர். யமகிங்கரர்கள் சுற்றிச்சூழ நிற்பதைக் கண்டுகொண்டார். முக்கலும் முனகலும் பெரும் ஊளையிடும் குரலாக மாறியது. சரவணனைக் காட்டி ‘பே… பே…’ என்று உளறினார். சரவணனுக்கு நடுக்கம் பிடித்தது. குறிப்பறிந்த கோவிந்தரின் மனைவி, பிள்ளைகளையும் தள்ளிக்கொண்டு வெளியே போனாள்.

“மாமி! நீங்களும் பக்கத்திலை நில்லுங்கோ.”

“மாமா ஒண்டும் உன்னைக் கடிச்சுக் குதறமாட்டார். அவர் உன்னோடை ஏதோ தனியக் கதைக்கப் பிரியப்படுகிறார் போல கிடக்கு. நாங்கள் வெளியிலை நிக்கிறம்”

கோவிந்தருக்குப் பிசுங்கான் வெட்டிய அடையாளங்கள் எதுவும் தெரியவில்லை. ஒருவேளை விசர்நாய் கடித்திருக்குமோ?

“கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு எனக்குப் பக்கத்திலை வந்து இரும்” கட்டளை போட்டார் கோவிந்தர். இறப்பதற்கு முன்னர் ஒரு அசுரபலம் வரும் என்பார்கள். அந்த அசுரபலத்தை அவர் குரலில் நேரில் கண்டான்.

மணம்முடிக்காத இருபெண்களும் மனக்கண் முன்னே வந்தார்கள். ஒருவேளை தன்னுடைய மகளை கலியாணம் செய்யவேணும் எண்டு சத்தியம் வாங்கப் போகின்றாரோ? அப்படியே சத்தியம் வாங்கினாலும் மனிசன் இரண்டு பெண்பிள்ளைகளையும் திருமணம் செய் எண்டுதான் சத்தியம் வாங்கும். பொறிக்குள் அகப்பட்ட எலி போலானான். மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவன் போல நடக்கலானான்.

சினிமாப்படங்களில் மனிதர்கள் பாம்பு ஊருவது போல கட்டிலில் கிடந்து நெளிந்து போவார்களே அப்படியொரு நெளி நெளிந்து கட்டிலின் மறு உச்சிக்குத் தாவினார் கோவிந்தர். கட்டிலின் சட்டகத்திற்கு தன் தலையணைப் பாலம் கட்டிச் சரித்தார்.

“இந்தா இந்த ’மற்றசு’க்குக் கீழை இருக்கிற கொப்பியை ஒருக்கா எடு. வாற அவசரத்திலை கண்ணாடியை விட்டிட்டு வந்திட்டன்” கோவிந்தர் வடிவாகக் கதைத்தார். ஒருவேளை சொத்து முழுவதையும் உயில் எழுதித் தரப் போகின்றாரோ? சொத்து வருகுதோ சொந்தம் வருகுதோ? ‘மற்றசை’ மிதத்தி அழகான சுவாமிப்படம் போட்ட 40 பக்கக் கொப்பியை எடுத்தான். அது ஜனன மரண ஜாதகக் குறிப்புத்தான் என மனம் தந்தி அடித்தது. என்ன ஆச்சரியம்! ‘வட்டிக்கணக்கு’ என்று கொட்டை எழுத்தில் விரிந்தது முதல்பக்கம்.

“உவன் விதானையார் நான் செத்துப்போவன் எண்டு ஊரெல்லாம் சுவரொட்டி ஒட்டிக்கொண்டு திரிகின்றானாமே! கண்டியா அவணை? சந்திரனைப் பாத்து நாய் குலைச்சுச்சுதாம்.”

“இல்லை மாமா.. நான் காணேல்லை…”

“சரி ஒவ்வொரு பக்கமா வாசிச்சு, கோட்டுக்குள்ளை கிடக்கிறதைச் கூட்டிச் சொல்லு. பேனை பென்சில் வைச்சிருக்கிறியா?”

:இல்லை மாமா…”

“அப்ப நாளைக்கு என்னண்டு exam எழுதப்போறாய்?”

”வீட்டிலை இருக்கு மாமா. நாளைக்கு எனக்கு exam இருக்கு. படிக்கவேணும்.”

“என்னுடைய examஇலை முதல் எல்லாரும் பாஸ் பண்ணுற வழியைப் பாருங்கோ. சரி இப்ப வாசி. இந்தக் காது மடலிலை ஒரு பென்சில் செருகி வைச்சிருக்கிறன்.”

பொன்னம்மாவில் தொடங்கிய வட்டிக்கணக்கு விதானையாரில் வந்து முடிந்தது. தின்னாமல் குடியாமல் சேர்த்த சொத்து – பொன்னம்மா பரிமளம் என்று வியாபித்து வி.ஐ.பி விதானையார் வரையில் வந்து முடிந்தது. நிமிர்ந்து கோவிந்தரைப் பார்த்தான் சரவணன். கோவிந்தரின் விலா எலும்புகள் நான் முந்தி நீ முந்தி என்று துருத்திக்கொண்டு – இது பொன்னம்மாவின் வட்டியில் வளர்ந்த எலும்பு, இது பரிமளத்தின்ரை வட்டியிலை வளர்ந்த எலும்பு என்று போட்டி போட்டு தள்ளிக் கொண்டு நின்றன.

“அட சரவணா… இந்தக் கொப்பிதான் என்ரை குடும்பத்தை வளர்த்த சொத்து. எல்லாரும் காசை வாங்கிப் போட்டு, இப்ப வட்டியைக்கூடத் தரமாட்டன் எண்டு சொல்லுறான்கள். மனிசி பிள்ளைப்பெறுகிற நேரமாப் பாத்து ஹொஸ்பிட்டலிலை வந்து படுத்துக் கிடந்தா மனிசர் மனமிரங்கி வருவினம் எண்டு நினைச்சது என்ரை மடத்தனம். மடக்கிப் பிடிக்கலாம் எண்டு ஒரு பரீட்சை வைச்சுப் பாத்தன். ஒரு காக்கா குருவிகூட ஹொஸ்பிட்டல் எண்டு வந்து எட்டிப் பாக்கேல்லை.

நான் நாலு காசு வட்டிக்குக் குடுத்தா அது நாலுபேருக்குப் பொறாமை. நான் திருப்பதி போய் எனக்கு மொட்டை போட்டுக்கொண்டால் அதுவும் நாலு பேருக்குப் பொறாமை. என்ன உலகமடா?”

சரவணன் இதுவரை பாடமாக்கி வைத்திருந்த சரித்திர நிகழ்வுகள் எல்லாம் கோவிந்தரின் இந்த திடீர் அதிரடி நடவடிக்கையால் கி.பி இலிருந்து கி.மு நோக்கி வந்த வழியே ஓடி மறைந்தன. இப்போது 16ஆம் உலூயி மன்னனின் 32வது மனைவியின் பெயர் என்ன என்று சரவணனைக் கேட்டால் – அதில் என்ன சந்தேகம் கோவிந்தரேதான் என்பான்.

“போட்டு வாறன் மாமா” என்று சொல்லிவிட்டு வாசல்வரை சென்றவனை கோவிந்தரின் குரல் தடுத்து நிறுத்தியது.

“தம்பி… இந்த நாலு சுவருக்கை நடந்தது ஒண்டையும் வெளியிலை சொல்லிப் போடாதையும். குறிப்பா அந்த 40 பக்கக் கொப்பி.”

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று வீடு போய்ச் சேர்ந்தான் சரவணன்.

கோவிந்தரின் மனைவி பிள்ளைகள் எல்லோரும் புறமுதுகுகாட்டி வீடு போய் சேர்ந்துவிட்டார்கள். அன்றைய தினத்தின் கடைசி மருந்தைக் குடுப்பதற்காக மருத்துவத்தாதி வந்தாள்.

“இதுதான் கடைசி பஸ்சோ” நேர்ஸைப் பார்த்து கடைக்கண் வீசி கண் சிமிட்டினார் கோவிந்தர்.

“எழும்பி இருக்கத் தெம்பைக் காணேல்லை. கடைசி பஸ் தேவைப்படுதோ” சரமாரியாகப் பேசினாள் நேர்ஸ்.

கோவிந்தருக்கு உறக்கம் வர மறுத்தது. வட்டி அவரின் தலையில் குட்டி உறக்கத்தைக் கலைத்தது. விதானையாரை நினைக்க ஆத்திரமாக வந்தது. விதானையார் கடைசியாகக் காசு கேட்டு வந்தபோது, “இப்ப என்னட்டைக் காசு இல்லை. ஆரிட்டையேன் தான் வாங்கித் தரவேணும். அவனுக்குமாச் சேத்து டபிள் வட்டி தரவேணும்” எண்டு சொல்லியிருந்தார். விதானையார் என்ன… பெரும்பாலும் எவர் காசு கேட்டாலும் அப்பிடித்தான் கோவிந்தர் சொல்லுவார். இன்னொருவனிடம் காசு கடன் வாங்கி அடுத்தவனுக்கு வட்டிக்குக் குடுக்க கோவிந்தர் என்ன கோமாளியா? இப்படித்தான் அற வட்டி வாங்கி, அதற்கும் மேலாக மனிதரில் நம்பிக்கையில்லாமல் பொறுப்பாக நகையும் வாங்கி வாழ்ந்த கோவிந்தரை ஏமாற்றுவதா? விதானையாருக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று நினைத்தார். பாடத்திற்கு முதல் பணத்தை கறந்துவிட வேண்டும் என துடித்தார். சுவரை மெதுவாகப் பிடித்து எழும்பி, ‘ஹொர்லிக்ஸ்’ போத்தல் ஒன்றுடன் அறையைவிட்டு வெளியேறினார் கோவிந்தர்.

“டேய் ஓடுகாலி…” என்று ஓடலியைக் கூப்பிட்டு காதோடு காதாக ரகசியம் பேசினார். ‘ஹொர்லிக்ஸ்’ போத்தலை அவனிடம் நீட்டினார். அவன் தலையை ஆட்டி ஆட்டி மறுதலித்தான். ’போறதோடை போகட்டும்’ என பொக்கற்றுக்குள் இருந்து ஒரு தாளை எடுத்து விசுக்கினார். சற்று நேரத்தில் பின் கரியரில் கோவிந்தர் வீற்றிருக்க, ஓடலியின் சைக்கிள் தெருவீதி உலா வந்தது. கோவிந்தமன்னர் நகர்வலம் வந்தார்.

எந்தக் கணத்திலும் கோவிந்தரின் மரண ஓலம் கேட்கலாம் என்ற ஆதங்கத்துடன் படுத்திருந்த விதானையார் வீட்டு முன்றலில், அதிகாலை ஐந்து மணியளவில் மன்னனும் மந்திரியுமாகி நின்றார்கள்.

முன்வீட்டில் விளக்குப் போட்டுப் படித்துக் கொண்டிருந்தான் சரவணன்.

“டேய் விதானையார்…” கூக்குரலிட்டார் கோவிந்தர். ஓடலி மெதுவாகச் சீட்டி அடித்தான். விதானையார் அதிகாலை ஐந்துமணிக்கு முன்பதாக எழுந்து பசுமாட்டில் பால் கறப்பது வழக்கம். இருளோடு பாலுக்குள் தண்ணி கலப்பதுதான் அவருக்குச் சுகம். கோவிந்தரைப் போல வெளிச்சத்தில் தண்ணி காட்டும் வித்தையை அவர் பயின்றிருக்கவில்லை. ஆறுமணிக்கெல்லாம் பால் வாங்க ஆக்கள் வந்துவிடுவார்கள். விதானையார் நேற்று இரவு அதிகம் விஷ்க்கி அருந்தியது வினையில் முடிந்துவிட்டது.

பானை சட்டிகளையும் தூக்கிக் கொண்டு விளக்கையும் போடாமல் அவசர அவசரமாக வாசலை நோக்கி ஓடினார். வாசலில் கோவிந்தரின் ஆவி நின்றது. ‘ஐயோ’ என்றபடி பானை சட்டிகளுடன் சரிந்தார் விதானையார். ‘ஃபுல் ரென்சனில்’ சரித்திரத்தை இரை மீட்டுக் கொண்டிருந்த சரவணனின் காதிற்குள் இந்த ‘ஐயோ’ சத்தம் காத்துவாக்கில் விழுந்தது.

ஜன்னலைத் திறந்து பார்த்தான் சரவணன். விதானையார் வீட்டுப் பக்கமிருந்து இருவர் சைக்கிளில் சவாரி போவது தெரிந்தது. சரியாக்க் காலை ஆறுமணிக்கெல்லாம் விதானையார் வீட்டு முற்றத்தில் பெரும் திரள் கூடியது. மருத்துவர் வந்து விதானையார் இயற்கை மரணம் எய்தினார் என்று சான்றிதழ் குடுத்துவிட்டுப் போனார்.

‘விசரன் என்ரை காசைத் தராமல் செத்துப் போனான்’ என்று கோவிந்தர் கூட்டத்தின் பின்வரிசையில் நின்று தனக்குள் முணுமுணுத்தார்.

சரவணனுக்கு விதானையார் ‘கார்ட் அட்டாக்’கினால் இறந்துவிட்டார் என்ற செய்தி தெரிந்தபோது தான் சரித்திரபாடத்தில் ஃபெயில் ஆகிவிட்டதையும் உணர்ந்தான்.

– ஏப்ரல் 2014

கே.எஸ்.சுதாகர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதி வருகின்றார். இவரின் முதல் சிறுகதை "இனி ஒரு விதி செய்வோம்" ஈழநாடு வாரமலரில் வெளியானது. இவர் யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பழை, வீமன்காமத்தைச் சேர்ந்தவர். தனது ஆரம்பக் கல்வியை வீமன்காமம் ஆங்கில மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் பயின்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியலாளராகப் பட்டம் பெற்றவர். நோர்வே தமிழ் சங்கம்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *