பரிகாரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 25, 2019
பார்வையிட்டோர்: 7,695 
 
 

ரகு அந்த இடத்திற்கு வரும்பொழுது ஏற்கெனவே கூட்டம் சேர்ந்திருந்திருந்தது. இப்பொழுதெல்லாம் எந்த சாமியார் வந்தாலும் அந்த இடத்துக்கு புற்றீசல் போல் கூட்டம் கூடிவிடுகிறது. நிஜ சாமியாரா, போலிச்சாமியாரா என்பதைப் பற்றியெல்லாம் ஜனங்கள் கவலைப்படுவதேயில்லை. எப்படியாவது தங்கள் ப்ரச்சினைகள் தீர்ந்தால் சரி என்ற மனோபாவம்தான்.

ரகு தனக்குள் சிரித்துக்கொண்டான், தானும் அதுபோல்தானே வந்திருக்கிறோம் என்று.

கொஞ்சம் சிரமத்துடனேயே ஆட்டோவிலிருந்து இறங்கினான். காலில் பட்ட காயம் இன்னும் ஆறவில்லை. இன்னும் எரிச்சலிருந்தது. எப்பொழுதும் எல்லா இடத்துக்கும் அவனுடைய பைக்கில்தான் போவான். ஒரு வாரமாக கால் புண் காரணமாக ஆட்டோவில் போகும்படியாகிவிட்டது.

சாதாரணமாக இதிலெல்லாம் அவனுக்கு ரொம்ப நம்பிக்கை கிடையாது. ஒரு நண்பன் இந்த சாமியாரைப் போய்ப் பார்க்கச்சொல்லி ரொம்ப வற்புறுத்தியதால் வந்திருக்கிறான்.

அந்தக் கட்டிடத்தின் வாசலில் எந்த போர்டும் இல்லை. ஒரு பேனரில் ஒரு பெரியவரின் படம் போட்டு, அதன் அடியில் “குருவே சரணம்” என்று எழுதியிருந்தது. அவ்வளவுதான். வாசலில் மிகப்பெரிய க்யூ இருந்தது. ரகுவும் அதில் போய்ச் சேர்ந்து கொண்டான். கூட்டத்தைப் பார்த்தால் பெரியவரைப் பார்க்க தன் முறை வர எப்படியும் இன்னும் அரைமணி ஆகுமென்று நினைத்துக்கொண்டான்.

தன்னைச் சுற்றிலும் ஒரு பார்வை ஓட்டினான். இன்னும் காரிலும் ஆட்டோவிலும் இரு சக்கரவாகனங்களிலும் மக்கள் கூட்டம் வந்துகொண்டே இருந்தது.

உள்ளிருந்து வருபவர்களும் வெளியில் இருப்பவர்களும் கும்பல் கும்பலாக கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். உள்ளிருந்து வருபவர்கள் முகத்தில் ஒரு நிம்மதியும் தெளிவும் இருப்பது ரகுவுக்குப் புரிந்தது. நிஜமாகவே நல்ல சாமியார் போலிருக்கிறது என்று நினைத்து சிரித்துக்கொண்டான்.

அருகில் யாரோ இருவர் பேசிக்கொள்வது காதில் விழுந்தது: “என்ன, நாராயணன், என்ன இந்தப் பக்கம்? சாமியைப் பார்க்கவா?

ஆமாம். மிஸ்டர் விநாயகம். உங்களுக்குத்தான் தெரியுமே, எனக்கிருக்கிற ப்ரச்னை. அதான் ஏதாவது தீர்வு கிடைக்குமான்னு வந்தேன். நீங்க?

நான், பக்கத்துவீட்டுக்காரர் கூட வந்தேன். அவர் உள்ளே போயிருக்கார். இங்கு இருப்பவர்கள் எல்லாம் சொல்கிறார்கள் – சாமியார் ரொம்ப பேசுவதே இல்லையாம். பிரச்னை இருப்பவர்கள் அவர் இருக்கும் அறையில் நுழையும்போதே அவர்கள் வாழ்க்கையில் செய்த,செய்யும் தவறெல்லாம் மனதில் படம் மாதிரி தோன்றிவிடுகிறதாம். அவர் அருகே சென்றவுடன் எதுவுமே பேசாமல் ப்ரசாதம் கொடுத்து ஏதாவது பரிகாரம் சொல்கிறாராம். பலன் தெரிகிறது என்று சொல்கிறார்கள்.”

ரகு நின்ற வரிசை மெதுவாக நகர்ந்து முன்னேறிக்கொண்டிருந்தது. ரொம்ப நேரம் நின்றதால் கால் வலிக்க ஆரம்பித்தது. இந்த காலடிப்புதூரிலிருந்து 15 கிலோமீட்டர் தள்ளி நாராயணபுரம்தான் ரகுவின் இருப்பிடம். அங்கு இரண்டு செருப்புக்கடை அவனுக்குச் சொந்தம். வசதியான வாழ்க்கை. ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் பின்பு தொழிலில் நல்ல முன்னேற்றம். நாராயணபுரம் பெருமாள் கோவில் மிகவும் பிரசித்திப்பெற்றது. அவன் முதலில் பெருமாள் கோவில் இருக்கும் தெருவின் முனையில் ஒரு சிறிய ஷூ கடை திறந்தான். அதில் சிறிது லாபம் வரத்துவங்கியதும் அந்த நகரின் முக்கியமான் இடத்தில் இரண்டாவது ஷோரூம் திறந்தான். இரண்டிலும் நல்ல வியாபாரம். இப்பொழுது சொந்தவீடு, வண்டி என்று வாழ்க்கை நல்ல சௌகர்யமாகத்தான் இருக்கு, இருந்தும் வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நிலையில் ஏதேனும் தொந்தரவு இருந்துகொண்டே இருக்கிறது. மனதில் அமைதி இல்லை. இப்பொழுது ஒரு வாரமாக ரகுவுக்கு மோட்டார் பைக் சைலன்ஸரில் சூடு பட்டு பெரிய காயம். இதற்கு முன்னால் அவனுடைய ஒரே பையன் பள்ளிக்கூடத்தில் விளையாடும்போது விபத்தாகி காலி எலும்புமுறிவு. இப்படி ஏதோ பாதிப்புகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஒரு நண்பர் சொல்லி இந்த சாமியாரை பார்க்க வந்திருக்கிறான்.

ரகுவுக்குமுன் நின்றிருந்தவர் இப்பொழுது சாமியார் அறையில் நுழைந்தார். அடுத்து ரகு முறை. நின்ற இடத்திலிருந்தே உள் அறையைப் பார்த்தான். மிகவும் அமைதியாக, ரொம்ப புனிதமான தோற்றம். மெலிதான சுகந்தமணம். அவனுக்கு முன் நுழைந்தவர் அறையின் வலதுபக்கம் நடந்து மறைந்தார். அதிலிருந்து அந்த அறை நீளவாக்கில் பெரிதாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டான்.

கிட்டத்தட்ட ஒரு பத்து நிமிடம் கழிந்து உள்ளே போனவர் வெளியே வந்தார். அவர் முகம் தெளிவாக ஒரு நிம்மதியுடன் காணப்பட்டது.

ரகு அடுத்ததாக உள்ளே அடியெடுத்து வைத்தான். வலதுபுறம் திரும்பியதும் ஒரு இருபது அடி தள்ளி தெய்வப்படங்கள் சுவரில் மாட்டியிருந்தன. அதன் கீழே ஒரு ஐம்பது வயது மதிக்கக்கூடியவர் ந்ற்றியில் விபூதி, குங்குமத்துடன் அமர்ந்திருந்தார்.

ரகு மெதுவாக அவரை நோக்கி கால்வலியுடன் நடக்க ஆர்ம்பித்தான்.அந்த அறையின் சூழல் அவனை சிறிது நிலைதடுமாறச் செய்தது. அந்த நிலையில் அவனற்யாம்லேயே அவந்து மனக்கண்ணில் சில காட்சிகள் அரங்கேறின.

நாராயணபுரம் பெருமாள் கோவில் இருந்த தெருவில் கடை ஆரம்பித்த அன்றுதான் செல்வம் அவனைப் பார்க்க வந்தான்.

“ஸார், புதுக்கடையா? நான் உங்களுக்கு கஸ்டமர் அனுப்புகிறேன் என்று உற்சாகமாக திறப்புவிழாவில் உதவி செய்துவிட்டு பிறகு தயங்கி தயங்கி நின்றான். ரகு புரிந்துகொண்டு அவனுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பினான். இது போல் தினம் வருவான். ஒவ்வொரு தடவை வரும்போதும் ரகு அவனுக்கு பணம் கொடுப்பான். கடையிலும் நல்ல வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.

இன்னும் சில காட்சிகள் கண் முன்னே வந்தன: பக்தர்கள் கோவில் வாசலில் செருப்பை கழட்டி வைத்துவிட்டு சாமி கும்பிடச்செல்கிறார்கள். சிறிது நேரத்தில் செல்வம் சில பக்தர்கள் விடும் செருப்பை மெதுவாக காலில் அணிந்து அங்கிருந்து நகர்ந்து கொண்டிருந்தான்.

சட்டென்று பிரமையிலிருந்து விடுபட்டு ரகு சுயநினைவிற்கு வந்தபோது அந்த சாமியாரின் எதிரில் நின்றிருந்தான். அவர் புன்னகையுடன் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். அவனுக்கு எல்லாம் புரிந்தமாதிரி இருந்தது.

அவன் கையில் பழம், விபூதி கொடுத்து ஆசீர்வதித்தார். அப்பொழுதே அவனுக்குத் தான் செய்யவேண்டிய பரிகாரம் என்ன என்று புரிந்துவிட்டது. மிகுந்த பக்தியுடனும் நன்றியுடனும் சாமியை வணங்கிவிட்டு நிம்மதியாக வெளியில் வந்தான்.

அடுத்த சில நாட்களில் கோவில் வாசலின் அருகில் ஒரு சிறு கீற்றுக்கொட்டகையில் செல்வம் அமர்ந்திருந்தான். அவனிடம் பக்தர்கள் தங்கள் செருப்புகளை விட்டுவிட்டு டோக்கன் பெற்றுச் சென்றார்கள். இப்பொழுது ரகு செல்வத்தை மாதச்சம்பளத்துக்கு வேலையில் வைத்திருந்தான். கொட்டகையின் மேல் “இலவச காலணி காப்பகம்” என்று போர்டு தொங்கிக்கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *