கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 1, 2022
பார்வையிட்டோர்: 2,366 
 

(1998 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘ஸ்ஸ்ஸ்க்…’

சரி. குறி பிசகவில்லை . வேலி அடைப்பதற்காகக் குனிந்து பனையோலையைத் தூக்கிக்கொண்டு நிமிர்ந்தவனின் நெற்றியில் ரவை தைத்தது. ஒருவன் விழுந்துவிட்டான். கவிதா பார்த்துக்கொண்டேயிருந்தாள். விழுந்தவனைத் தூக்க எப்படியாவது முன்னுக்கு வருவார்கள். வருகின்றவர்களில் ஒருவனை விழுத்தவேண்டும்.

அதற்குள் வாணி ஓடிவந்தாள். “என்னடி, விழுத்திவிட்டியோ?” “ஓ. ஆள் ஓலையோடை நிமிர்ந்தார். சரி” என்றாள் கவிதா பார்வையைத் திருப்பாமலேயே. விடிந்தபின் இது மூன்றாவது பதுங்கிச்சூடு, பொழுது விடிந்து கொண்டிருக்கும்போது மண் அணைக்கு மேலால் எட்டி வாய் பார்த்தவர் முதலாவது ஆள். குளித்துக்கொண்டிருந்தவர் இரண்டாவது ஆள். இவர் மூன்றாவது.

வாணிக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஒரே இடத்தில் இரண்டு பதுங்கிச் சூட்டாளர்களும் நிற்பதைவிட, கவிதா காப்பரணில் நிற்க, வாணி ஒவ்வொருவரின் காப்பரணுக்கும் போய் ஏதாவது அசைவு தெரிகிறதா என்று பார்த்து வரவெனக் காலையில் புறப்பட்டிருந்தாள். அந்த வரிசையில் தொங்கல் காப்பரணில் நின்றவள்.

“அவன்ரை வேலிக்கும் வடலிக்கும் இடையால ஒருத்தன் பென்ட் பண்ணிப் போறான் போல கிடக்கு” என்று இவளிடம் சொல்ல, வாணி அந்த உருவத்ததைத் தொலைநோக்கியால் பார்த்துக்கொண்டேயிருந்தாள். வடலியைக் கடந்த பின்னர்தான் அது மாடு என்பது தெரிந்தது. வாணிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. காவலில் நின்றவர்களைப் பார்த்துக் கேலியா,

“எனக்கு தெரிஞ்சு எல்லா மாடுமே இப்பிடித்தான் சாதாரணமாகவே நடந்து போறது. எந்த மாடுமே ரெண்டு கால்ல நடந்து, பேந்து இப்பிடி பென்ட் பண்ணிப் போனதா இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை” என்று சொல்லிக்கொண்டிருந்தபோதுதான் கவிதாவின் சூடு காதில் விழுந்தது. அதற்குமேல் நிற்கப் பொறுமையில்லாமல் வாணி ஓடியே வந்துவிட்டாள். கவிதாவிடம் மெல்லக் கேட்டாள்.

“தூக்க வாறவனை நான் சுடட்டோ ?” “பேசாமல் இரு நான் சுடுறன்” வாணிக்குச் சப்பென்று போய்விட்டது. மண் மூடையின்மேல் ஏறி இருந்தாள். பக்கத்துக் காவலரணிலிருந்து சுதா இவர்களுக்குத் தேநீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டுக் கேட்டாள்.

“என்னப்பா இது எல்லா இடமும் ஒரே இலையானா இருக்கு” வாணி வாய்க்குள் இருந்த தேநீரை மடக்கென்று விழுங்கிவிட்டு, “ஒரு பிரச்சனையுமில்லை . அதுகள் தங்கட கடமையைச் செய்யுதுகள். பகல் சென்றி இலையான். இரவுச் சென்றி நுளம்பு. இடையிடையே குளவி, வண்டு, பூச்சி பூரான் எல்லாம் சென்றி செக் பண்ண வரும். இண்டைவரைக்கும் ஒருநாள்கூட ஒரு பிசகுமில்லை. உன்னை மாதிரி அதுகள் தூங்கிவழியிறதில்லை . படு அலேட்” என்று சொல்ல, “எடியேய், சிரிப்பு காட்டாதையடி” என்று அதட்டிவிட்டு கவிதா சுட, வாணியும் சுதாவும் பாய்ந்து வேலிப் பொட்டுக்குள்ளால் பார்க்க, முதல் விழுந்தவனுடன் இன்னொருவன் விழுந்து கிடக்க, மூன்றுபேர் குனிந்தவாறு இடறிக்கொண்டு ஓடுவது தெரிந்தது.

“பார் பார் தவண்டு திரியிறாங்கள்” என்று வாணி சொல்லவும், பின்னாலே இன்னொரு குரல் கேட்டது.

“நாலு பேர் நிக்கிற இடத்துக்கு ஏனடியம்மா சுடுறனீங்கள்? சொல்லியிருந்தா நாங்கள் ஷெல் போட்டிருக்கலாம்” என்ற அரசியைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள் கவிதா,

“வாடி மோட்டர்காரி” என்றாள். அரசி வாணிக்கு பக்கத்திலே இருந்தாள்.

“பிறகென்ன? ஓராள் வந்தா சினைப் பண்ணுங்கோ. நாலைஞ்சுபேர் நிண்டா ஷெல் போடுங்கோ. எங்களுக்கொரு வேலையுமில்லத்தானே. நான் போய் தூங்கி வழியப்போறன்” என்று சொல்லிக்கொண்டே சுதா தேநீர் கோப்பைகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.

“என்னடியப்பா, பொசிசன் லைனில வடிவான கப் அன்ட் சோசரெல்லாம் வச்சிருக்கிறியள்?” என்று கேட்டாள் அரசி.

“அது கெமுனுவோச்காரங்களின்ரை. தங்கட எட்டாம் ஆண்டு நிறைவுக்கு சோசரில கெமுனுவோச் படைப்பிரிவின்ரை ஒவ்வொரு படையின்ர கொடிகளையும் தங்கட சின்னத்தையும் அடிச்சிருக்கிறாங்கள். எல்லாம் இந்தச் சண்டையில எடுத்தது. ஏன் உங்களுக்கு குடுத்துவிடேல்லை எண்டு கத்தாதை. மெயினில இருக்குது. போற நேரம் கேட்டு வாங்கிக் கொண்டு போ” என்றாள் கவிதா. கொஞ்ச நேரம் இருந்து பம்பலடித்துவிட்டு அரசி தன் வேலைக்குப் போனாள். கவிதா முன்னுக்குப் பார்த்தாள். வாணி எதிரியின் நடமாட்டம் தெரிகிறதா என்று கவனித்துக்கொண்டிருந்தாள்.

இனி இவர்களை இழுத்துப்போக எவனாவது முன்னுக்கு வருவானோ தெரியாது. அநேகமாக இரவுதான் வருவார்கள். வருவதும் தெரியாது சுட முடியாது. அதனாலென்ன? அவர்களுக்கு இன்னும் அறுபது, எழுபது மீற்றர் தூரம் மண் அணை அடிக்கிற வேலையிருப்பதால், அந்த நேரம் வேலை செய்ய வருவார்கள், சுடலாம்.

முன்பு அவன் புல்டோசரால் இரவிராக மண்ணள்ளிக் குவித்தான். ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு புல்டோசர்களையும் எம்மவர்கள் அடித்து சேதமாக்கிவிட, இப்போது மறைப்புக் கட்டிவிட்டி மண் வெட்டியால் வேலை செய்யத்தொடங்கிய பின் பதுங்கிச் சூட்டாளர்களுக்கு வேலை தான். மறைப்பாகக் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் தரப்பாள் காற்றில் விலகும் போதெல்லாம் சூடுதான். மண் அணைக்கு மேலே எதிரியின் தலைக்கவசம் தெரியும் போதெல்லாம் சூடுதான். தொடர்ந்து ஒவ்வொருவராக விழுத்தப்பட்டால் இரண்டு நாட்களாகத் தலை காட்டாமல் இருந்து இரவில்மட்டும் வேலை செய்துவிட்டு, இன்று மறுபடி பகலில் வேலை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

“என்னமாதிரி, இண்டைக்கு குளிப்பு இல்லையோ?” என்று கவிதா கேட்டாள்.

அதுதான் அந்தப் புகைக்குண்டுக்காரன் கிணத்தடிக்குப் போற வேலியை எரிச்சு வச்சிருக்கிறான். “என்னென்டு குளிக்கிறது? புகைக்குண்டு அடிக்கிறவனை முதல்ல சினைப் பண்ணவேணும்” என்றாள் வாணி.

அதற்குள் சுதா ஓடிவந்தாள். “அக்கா ரெண்டு பேர் பண்டுக்குப் பக்கத்தில் இருக்கிற மரத்தில ஏறுறாங்கள்” என்று சொல்ல, இருவரும் சுதாவின் காப்பரணுக்கு ஓடினார்கள். ஒருவன் ஏறி கொப்புக்குள் மறைவது தெரிந்தது. மற்றவனைக் காணவில்லை. அவன் ஏற்கனவே ஏறிக் கொப்புக்குள் மறைந்திருக்க வேண்டும்.

“சரியாப்போச்சு. இனி இதாலை ஒருத்தரையும் போக விடமாட்டான்” என்ற வாணி காப்பரணுக்குள் நிலையெடுத்தவாறு அவதானிக்கத் தொடங்கினாள்.

“சுதா, பின் கிணத்தடிக்கு ஒருத்தரையும் குளிக்கப்போக விடாதை, அவனுக்கு அது தெரியும். இதாலை போய்வாற எல்லாரையும் நல்லா குனிஞ்சு போகச் சொல்லு” என்று சொல்லிவிட்டு காப்பரணுக்குள் குதித்தாள்.

ஒரு மணித்தியாலம்வரைக்கும் மரத்தில் ஒரு அசைவுமில்லை. இவர்களும் மரத்திலிருந்து கண்களை எடுக்கவில்லை. அவர்களும் அசைவதாயில்லை.

மரத்தததில் ஏறினவங்கள் யாரோ ஓ.பி காரங்களோ, சினைப்பர்காரங்களோ தெரியவில்லை. ஆரெண்டாலும் விடக்கூடாது நான் மரத்துக்கு ஷெல் போடச் சொல்லி அரசிக்கு அறிவிக்கிறன். எதுக்கும் நீ ஒரு தொப்பியை தடியில கொழுவி வேலிக்கு மேலே தெரியக்கூடியமாதிரி இடையிடையில் காட்டு. அவங்கள் அதைக் கவனிச்சுக்கொண்டு இருக்கட்டும் ஷெல் தலையிலை விழும்வரைக்கும்” என்ற கவிதா அரசிக்கு நிலைமையை அறிவித்தாள். பதினைந்து நிமிடத்துக்குள் மரத்தின்மேல் எறிகணை விழுந்து வெடித்தது. இனி எதிரி எறிகணைகளை ஏவுவான் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளே குதிக்க ஆயத்தமாக காப்பரண் வாசலில் இருந்தார்கள். ஒன்றையும் காணவில்லை .

“ஒருவேளை அவனிட்டை ஷெல் முடிஞ்சுதோ? வேவுக்கு போய் வாறவங்களிட்டை நாலைஞ்சு குடுத்து அனுப்பிவிடவேணும்” என்று சிரித்தாள் வாணி. கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு இருவரும் திரும்பினார்கள். அரை மணித்தியாலம்வரை ஒரு சத்தமும் இல்லை. அதன் பிறகு எதிரி தன் எல்லைக்குள் “டொக் டொக்” என்று மரம் தறிக்கும் ஓசையும், ஏதோ பாரத்தை (பதுங்கு குழிகளை மூடுவதற்கான மரக்குற்றிகளாயிருக்கவேண்டும்) தூக்கும்போது கத்தும் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது.

“இண்டைக்கு முன்னுக்கு வரமாட்டாங்கள் போலயிருக்குது. உள் வேலைதான் செய்யப்போறங்கள். ஷெல் போடச்சொல்லி அறிவிப்பமா?” என்று கவிதாவை வாணி கேட்கவும், பின்னுக்கிருந்து தலைக்கு மேலால் எறிகணைகள் கூவிக்கொண்டு எதிரியின் நிலைக்குள் விழத் தொடங்கின.

“ஆரோ எங்களை முந்திவிட்டாங்கள். இனி அவன் குத்தப் போறான்” என்ற வாணி காப்பரணுள் அமர்ந்து உணவுப்பொதியை அவிழ்த்துச் சாப்பிடத்தொடங்கினாள். கவிதா காதைத் தீட்டிக் கொண்டிருந்தாள். எதிரியின் பகுதிக்குள் பீரங்கிக் குழல்வாயிலிருந்து எறிகணை புறப்படும் ஒலி கேட்டது

“சரி இனித் திருவிழாதான்” என்றவாறு உள்ளே குதித்தாள் கவிதா. “இண்டைக்கு குளிச்ச மாதிரித்தான். எல்லாரும் குளிச்சுத்தான் திருவிழா கொண்டாடுறது. குளிக்காமல் திருவிழா கொண்டாடுறது

அநேகமாக நாங்களாகத்தான் இருக்கும்” என்று வாணியைப் பார்த்துச் சிரித்தவாறு, காவலரண் மூலையிலிருந்த அடுப்பை மூட்டித் தண்ணீர் வைத்துவிட்டு தேயிலையையும், சீனியையும் எடுத்தாள் கவிதா.

வெளியே மழைபோல எதிரியின் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக்கொண்டிருந்தன.

– புலிகளின் குரல், வானோசை 08, கலை இலக்கியப் போட்டியில் மூன்றாம் பரிசு, 1998, மலைமகள் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2012, வடலி வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *