அங்கோர் காட்டிடைப் பொந்திலே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 1, 2022
பார்வையிட்டோர்: 2,307 
 

(2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆரியகுளம் சந்தியால் திரும்பும்வரை அவளுக்கு அந்தச் சம்பவம் தெரியாது. தனியார் கல்வி நிறுவன வாயிலிலிருந்து மிதிவண்டியை எடுத்த நேரத்திலிருந்து வீதியோரமாக ஓரிரண்டு இடங்களில் மக்கள் குழுமி நின்று ஏதோ படுமுக்கியமான கருத்தாடல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அதைப் பொருட்படுத்தாமல் வந்தவளுக்கு ஆரியகுளம் சந்தியில் நின்ற கூட்டம் நிலைமையின் தீவிரத்தை உணர்த்தியதால், மிதிவண்டியின் வேகத்தை மிகவும் குறைத்துக்கொண்டு காதுகளை எறிந்தாள். அதிரிந்தாள். சம்பவத்தை நேரடியாகக் கண்ட ஒருவர் பரபரப்போடு செய்தியை சொல்லிக்கொண்டிருந்தார்.

“அவங்கட காம்பை நான் கடக்க வெளிக்கிடேக்கை, ரெண்டு பிள்ளையள் மோட்டர் சைக்கிளில் என்னைக்கடந்து போச்சுதுகள். பின்னால ஒரு சைக்கிளில டபிளில் வந்த பிள்ளையளும் என்னைக் கடந்து போச்சுதுகள். என்ன வீச்சாப் பிள்ளையள் போகுதுகளென்டு நான் யோசிச்சுக்கொண்டு போக, பின்னாலை ஒரு சத்தம் ஏதோ வித்தி யாசமாகக் கேட்டுது. சைக்கிள் ஓட்டினபடியே நான் பின்னுக்குத் திரும்பிப் பார்க்க, ரெண்டு சைக்கிளில் வந்த நாலு இயக்கப்பொடியளை ஆமிக்காரர் மறிச்சு வைச்சு அடிச்சுக்கொண்டிருந்தாங்கள். இதென்ன வில்லங்கம் எண்டு யோசிச்சுக்கொண்டு சைக்கிளை ஒரு கரையா நிப்பாட்டவும் பயமாக் கிடந்தது. அப்படியே போகவும் ஒரு மாதிரியாய் இருந்தது…”

“உன்ரை கதையளை விட்டிட்டு நடந்ததைக் கெதியாச் சொல்லு” “பின்ன நான் யோசிச்சுக்கொண்டுடிருக்கேக்கையே சைக்கிளில் போன ரெண்டு பிள்ளையளும் திரும்பி ஆமிக்காரனுக்கு கிட்ட வர, ஆமிக்காரன் ஒரு பிள்ளையைப் பார்த்து பெல்ற்றைக் கழட்டு என்றான்”

“பேந்து”

“நான் கழட்ட மாட்டன். இதைப்போய் கண்காணிப்புக் குழுவோடை கதை எண்டு அந்தப் பிள்ளை சொல்ல, ஆமிக்காரன் அந்தப் பிள்ளையின்ர கன்னத்தில் விட்டான் ஒரு அடி”

“பக்கத்தில் நிண்ட பிள்ளை பாய்ஞ்சு அந்த ஆமிக்காரனுக்கு விட்டுது ஒரு அடி. அடியென்டால் அந்த மாதிரி அடிதான். முதலில வெருண்டுகொண்டு நிண்ட எனக்கு இப்ப எங்க நிக்கிறன், வாறன், போறன் எண்டதெல்லாம் மறந்து போய்…”

“எடேய், முதல் நடந்ததைச் சொல்லு”

“ஆ… பின்ன, இந்தப் பிள்ளை திருப்பி அடிக்க, மோட்டார் சைக்கிளில் போன பிள்ளையளும் திருப்பிக்கொண்டு வர, அதுக்கிடையில காம்புக்காலை நிறைய ஆமிக்காரர் கத்தி, பொல்லு, சைக்கிள் செயின் எல்லாத்தோடையும் வெளியில குதிச்சு வர, எனக்கு குடல் சுருண்டுட்டுது. அவங்கள் பிள்ளையளைக் கையில் கிடந்த எல்லாத்தாலையும் அடிக்க, பிள்ளையள் வெறுங்கையாலையே திருப்பி அடிக்க, அதுக்கிடையில இன்னுமொரு நாலைஞ்சு பிள்ளையள் அவடத்துக்கு வந்து சேர, அவன் எல்லாப் பிள்ளையளின்ர பெல்ற்றையும் கழட்டுறதுக்கு படாதபாடு பட்டான். பிள்ளையளும் விடேல்லை. கைவச்ச எல்லோருக்குமே காலாலையும் கையாலையும் நல்ல அடிதான்”

“விசர்…. சுத்திவர நிண்ட சனம் என்னத்தை பார்த்துக்கொண்டு நிண்டதுகள்?”

“ஒரு முக்கா மணித்தியாலம்வரைக்கும் பிள்ளையள் விடேல்லை யண்ணை . நூறு பேருக்கு மேலை ஆமிக்காரர் வந்து எல்லாப் பிள்ளை யளின்ரை பெல்ற்றையும் பிடிச்சு இழுத்துக்கொண்டு நிண்டாங்களண்ணை.”

சமநிலை குழம்பி மிதிவண்டியிலிருந்து விழுந்துவிடுமாற்போல் தலைக்குள் ஏதோ செய்ய, ஊன்றி உழக்கினேன். கழற்றப்பட்டது அக்காக்களின் இடைப்பட்டிதானா? எங்கள் எல்லோரது கௌரவமு மில்லையா? இப்போது பாண்டவர் பாத்திரத்தை ஏற்கப்போவது யார்? பாஞ்சாலி சபதத்தை செய்யப்போவது யார்?

“விதுரனால் அழைத்து வரப்பட்ட பாஞ்சாலி கௌரவர் சபையேறினாள். பாண்டவர்களின் மனைவியாக அல்ல. பந்தயத்தில் பணயம் வைத்து தோற்கப்பட்ட பண்டமாகவே பாஞ்சாலி சபையேறினாள். அவளைச் சிறுமைப்படுத்துவதன்மூலம் பாண்டவர்களை சிறுமைப்படுத்த விரும்பிய கொளரவ நூற்றுவரிலிருந்து எழுந்து வந்த துச்சாதனன் பாஞ்சாலியின் ஆடையைக் களையத்தொடங்கினான். பாஞ்சாலி கதறினாள். பார்த்திருந்த வீமனின் கைகள் முறுக்கேறின.

அர்ச்சுனனின் தோள்கள் துடித்தன. நகுலனும் சகாதேவனும் பதறினர். தர்மர் எல்லோரையும் அமைதிப்படுத்தினார்.”

நடராஜா ஆசிரியர் நிறுத்தினார். வகுப்பிலிருந்த எல்லோரையும் பார்த்தார். மாணவியரின் முகங்கள் இறுகிக் கிடந்தன. மாணவர்களின் முகங்களும் சற்றுக் கோபமாகவே இருப்பது போல் பட்டது அவருக்கு.

“கொதித்தெழுந்த சகோதர்களைக் கட்டுப்படுத்திய தர்மர், பதினாறு வருடங்களின் பின் நில மீட்பு போரை செய்தார். அதுவரை…”

*சேர், மன்னிக்கவேண்டும். கௌரவர்கள் அடக்குமுறையாளர்கள் எண்டும், பாண்டவர்கள் பக்கம் நியாயம் இருப்பதும் உலகத்துக்குத் தெரியும். ஏன் பதினாறு வருடமும் பொறுத்திருக்கவேணும்?” கேட்டது தமிழன்பன். கிருஷாந்தியின் கல்லூரித் தோழியின் தம்பி. “நீதியான போரைச் செய்யிறதுக்கும் படைபலம் வேணும். ஆயுத பலம் வேணும். எங்களின்ரை நியாயத்தை உலகும் புரிஞ்சு கொள்ளுற வரைக்கும் பொறுத்திருக்கவேணும்” என்ற நடராசாவை இடைமறித்த வானதி,

“சேர், நாங்களும் பதினாறு வருசம் பொறுத்திருக்கவேணுமோ? எல்லாம் தெரிஞ்சுகொண்டும் தெரியாத மாதிரி உலகம் நடிக்கும். எங்கட பிரச்சனைக்கு ஆர் காரணமெண்டு தெரிஞ்சு கொண்டும்

அவங்களிட்டையே எல்லாத்தையும் உலகம் குடுக்கும். எங்களைச் சரி, பிழை சொல்ல உலகம் ஆர்?” என்றாள்.

உரையாடல் பாடத்தைவிட்டு விலகிவிட்டது நடராஜாவுக்கு நன்றாகத் தெரிந்தது. எனினும் இள இரத்தங்களின் தகிப்பைத் தன்னால் கட்டுப்படுத்த முடியாதென்பதும், அவர்களைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்தும் வல்லமை கொண்டவர் அவர் ஒருவர்மட்டுமே என்பதும் நடராஜாவுக்கு தெரியும்,

கொதிப்பு சிறிதும் குறையாமலேயே மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு வெளியேறினாள் வானதி.

“ம்… பாஞ்சாலியின்ர இடத்தில் எங்கட அக்கா நின்றிருந்தால், சிம்மாசனத்தை தூக்கியடிச்சு துச்சாதனனின்ரை மண்டையை பிளந்திருப்பா”

அக்காக்கள் அடித்த அடியில் ஒரு ஆமிக்காரனுக்கும் மண்டை உடையவில்லையோ? தெரிந்துகொள்வதற்குள் மண்டை வெடித்து விடும்போல் இருந்தது வானதிக்கு.

“எங்கட அக்கா வந்திருக்கிறாவோ எண்டு பாக்கிறதுக்காக எத்தினை அக்காக்களின் முகங்களைப் பார்த்திருப்பேன் அக்காவோடை நிக்கிற அக்காக்களும் வந்துதானிருக்கினம். அக்காதான் வரேல்ல. பளையில் நிக்கிற அக்காக்களுக்கு ட்ரெயினிங் குடுத்துக்கொண்டிருக்கிறாவாம்.” ஏதேதோ எல்லாம் நினைத்தபடி வாசலில் இறங்கியவளுக்கு வீடு கொதிநிலையில் இருப்பது புரிந்தது. அம்மாவும் அப்பாவும் முன் வாசல்படியில் இருந்தார்கள். அருகருகே வெங்காயம் மிளகாய்ப் பெட்டி. மிதிவண்டியின் தாங்கியைத் தட்டிவிட்டபடி, “ஏதும் அறிஞ்சீங்களோ அப்பா?” என்றாள்.

“இந்தக் கத்தியால அவங்கள் எல்லாரையும் ஒரு நாளைக்குக் குத்துவன். என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறாங்கள் எல்லாரும்? நான் பெத்த பிள்ளையள் ஆஸ்பத்திரிக் கட்டில்ல இருக்குதுகளாம்.” ஆத்திரத்தில் அம்மாவுக்கு உதடுகள் நடுங்கின. ஒரு கையில் வெங்காயத்தையும் ஒரு கையில் கத்தியையும் வைத்துக்கொண்டு எவ்வளவு நேரம் இப்படியே இருக்கிறாரோ தெரியவில்லை.

அப்பா எதுவும் கதைக்கவில்லை, கட்டுப்படுத்த முடியாதளவுக்கு கோபம் உச்சத்துக்குப் போனால், அமைதியாக இருப்பது அப்பாவின் வழமை. தம்பியிடம் கதைத்தால் மேலதிக விபரங்களைப் பெற்றுக்காள்ளலாம். எங்கே அவன்?

“அம்மா தம்பி எங்கையம்மா”

“ஆஸ்பத்திரிக்குப் போட்டான்”

‘ம், அக்காக்களுக்கு ஏதும் வாங்கிக்கொண்டு போயிருப்பான்’ புத்தகங்ளை மேசையில் வைத்தாள். அது அக்காவின் மேசை. அக்காவின் கதிரை. அக்காவின் புத்தக அலமாரி. அக்காவின் புத்தகங்களும் உடைகளும் இப்போதும் அவள் இங்கேதான், எங்கோ மிக அருகேதான் இருக்கிறாள். இன்னும் சிறிது நேரத்துக்குள் வந்துவிடுவாள் என்பதுபோன்ற உணர்வையே எப்போதும் தந்து கொண்டிருக்கும்.

சுரிதார் கொஞ்சம் பரவாயில்லை . சில நேரம் தடக்கக்கூடும். ஆ…. டெனிம் ஜீன்சும் ஸ்போட்ஸ் ரீசேட்டும்… ம்.. பொருத்தமான உடை. தம்பிக்கென்று மாமா அனுப்பிய ரீசேட்டை தம்பி இவளுக்கென்று கொடுத்திருந்தான், ஒருமுறை தனியார் கல்வி நிலையச் சுற்றுலாவுக்கு அணிந்துவிட்டு வைத்திருந்தாள். இதுதான் இன்று சரியாக இருக்கும்.

தலையை ஒற்றையாக வாரிக்கட்டிக்கொண்டு புறப்பட்டாள்.

“அம்மா நங்கை வீட்டை போயிட்டு வாறன்”

“சரியடா ”

என்னவெல்லாம் நடக்கும்? சாகும் வரைக்கும் விசாரணைகள் ஏதுமின்றியே களுத்துறையில் சித்திரவதைக்குட்பட நேரிடலாம். அல்லது நடுவீதியில் நாய்போல அடித்துக் கொல்லப்படலாம். அப்பாவின் வேலை பறிபோகலாம். அல்லது சிறை பிடிக்கப்படலாம். தம்பி? ஐயத்துக்கிடமின்றிக் கொல்லப்படுவான். பிள்ளைகளை வளர்த்த வளர்ப்புச் சரியில்லை என்று ஏற்கனவே உறவுகளால் குறை கூறப்படுகின்ற அம்மா, ஆதரிக்க யாருமின்றி வீதியோரத்திலே நிற்க நேரிடலாம். அக்கா? என்னை மிகச் சரியாகப் புரிந்துகொள்வாள். யார் கண்டது, நாளை யாழ்ப்பாணத்தை மீட்பதற்காக நடக்கக்கூடிய மாபெரும் போரில் படைகளை நடத்துகின்ற தளபதியாக அக்காவே வரக்கூடும். எது வந்தாலும் வரட்டும்.

“வானதி”

யார் கூப்பிட்டது? அட நங்கை!

“எங்கை போறாய் வானதி?”

“கடைக்குப் போறன். வாறியோ?”

“நானும் அங்கதான் போறன். வா”

மிதிவண்டியை இவளுக்கு பக்கமாக ஓடிக்கொண்டு வந்தாள். மிதிவண்டித் தரிப்பிடத்தில் மிதிவண்டிகளை விட்டுப் பூட்டிவிட்டு, நவீன சந்தைக்குள் புகுந்தனர்.

“என்ன வாங்கப் போறாய்?” என்ற தன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் முன்னே போய்க்கொண்டிருந்த வானதியைப் பின்தொடர்ந்தாள் நங்கை. அந்த முஸ்லிம் வியாபாரி தன் முன்னால் பரப்பியிருந்த கத்திகளருகே வந்து நின்ற வானதியைப் பார்த்து, தன் விளம்பர வசனங்களை எல்லாம் அவிழ்த்துவிட்டவாறு ஒவ்வொரு கத்தியாகக் காட்டியதைப் பொருட்படுத்தாமல், இரண்டொரு கத்திகளை கைகளில் எடுத்து கண்களால் அளந்தாள். நங்கைக்கு மெல்ல புரியத்தொடங்கியது. வானதியை நெருங்கி, “ஏனடி கத்தி” என்றாள்.

“ மாம்பழம் வெட்ட” என்றவாறு வானதி பொருத்தமான கத்தியொன்றை தேர்ந்தெடுத்தாள். நங்கைக்கு இப்போது நன்றாகவே விளங்கிவிட்டது. “எனக்கும் ஒரு கத்தி எடு” என்ற நங்கையை வியப்போடு பார்த்த வானதி கண்களாலேயே நன்றி சொன்னாள்.

அது மிகக் குறுகலான ஒழுங்கை. இரண்டு காரணங்களுக்காக வானதியின் தோழிகள் அந்த ஒழுங்கையைப் பாவித்தார்கள். ஒன்று அமுதினி வீட்டுக்குப் போவற்கு. இரண்டு, ஒழுங்கை முகப்பு கடையின் வாசலில் அமர்ந்திருக்கும் கிழவி விற்கின்ற மாம்பழங்களின் சுவை. போகும்போது கிழவிக்கு கைகாட்டிப்போட்டுப் போய், திரும்பி வரும்போது கிழவியிடம் மாம்பழம் வாங்கி நாட்டு நடப்புக்ளை அவரிடம் கேட்டறிந்தவாறே சாப்பிடும்போது, மாம்பழத்தின் சுவை அதிகமாகும். படையினர் அந்த ஒழுங்கைகயால் இரண்டிரண்டாகவோ, நாலைந்தாகவோ, மிதிவண்டிகளிலோ, நடந்தோ போய் வருவதை இவர்கள் பொருட்படுத்துவதேயில்லை.

ஒரு நாள் அமுதினி தனியாகப் போனபோது முன்னே வந்த படையினர் தமது மிதிவண்டியால் அவளின் பாதையைத் தடுக்க முயன்றனர். குறுகலான அந்த ஒழுங்கையில் விலகிப் போகவும் வழியின்றி, ஓடி ஒளிந்துகொள்ள வீடுகளுமில்லாததால் திணறிப்போய் நின்ற அமுதினியை இரு படையினரும் நெருங்கித் தொடமுயல, அமுதினி மிதிவண்டியைக் கீழே போட்டுவிட்டு கிழவியின் கடைவரை ஓடிப்போய் தன்னை காப்பாற்றிய நிகழ்வோடு அந்த ஒழுங்கை இவர்களால் கைவிடப்பட்டது. இது நடந்து இரண்டு வருடங்களாகிவிட்டன. அதன் பின் நெடுஞ்சாலையால் எப்போதாவது போய்வர நேர்ந்து, அந்த ஒழுங்கை முகப்பைக் கடக்கும் போதுகளில் நினைவாகக் கிழவிக்கு கை காட்டுவார்கள். அவ்வளவே!

நீண்ட நாட்களின் பின்னர் தன் முன் வந்து நின்ற வானதியையும், நங்கையையும் காண, கிழவிக்கு புளுகம் தாங்கவில்லை. “என்ன மோனே, சுகமாகயிருக்கிறியளோ? வளர்ந்து பெரிய பொம்பிளை ஆயிட்டீங்கள். எந்த மாம்பழம் வேணும்? விரும்பினதை நீங்களே எடுங்கோ” என்ற கிழவிக்குப் புன்னகையால் பதிலளித்துவிட்டு நான்கு மாம்பழங்களை எடுத்துக்கொண்டு புறப்பட, கிழவிக்கு ஏமாற்றம்.

“ஏன் மோனே, நிண்டு சாப்பிடேல்லையோ?” என்றார் கிழவி. “இல்லை ஆச்சி. நாங்கள் அமுதினி வீட்டை போறம்” என்றவாறு அந்த குறுகிய ஒழுங்கைக்குள் மிதிவண்டிகளைத் திருப்பிய இவர்களைக் கிழவி பலத்த யோசனையுடன் பார்த்தார். ஒழுங்கைக்குள் கொஞ்சத் தூரம் போய், எதிரும் புதிருமாய் மிதிவண்டிகளை நிறுத்திவிட்டு, அதிலேயே சாய்ந்தமர்ந்தவாறு ஆளுக்கொரு மாம்பழத்தை எடுத்து மிக நிதானமாகத் தோலைச் சீவ ஆரம்பித்தார்கள். சற்றுத் தூரத்தே ஒரு சீட்டியடியும், சிங்கள பொப் பாடலொன்றும் இணைந்து கேட்கத் தொடங்கின. அந்தக் குரல்கள் மெல்ல மெல்ல இவர்களை நெருங்கின.

பின்குறிப்பு: 2003 பெப்ரவரி 12 அன்று காலை 9.00 மணியளவில் மானிப்பாய் படைத்தளத்துக்கு முன்னாலுள்ள வீதியால் அரசியல் பணிக்காக நிராயுதபாணிகளாக போய்க்கொண்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பு உறுப்பினர்கள், சிறீலங்கா படையினரால் வழிமறித்துத் தாக்கிக் காயப்படுத்தப்பட்டனர். பெண் போராளிகள் அணிந்திருந்த இடைப்பட்டிகள் படையினரால் பறித்தெடுக்கப்பட்டன.

1996 இல் படையினர் ட்றக் மோதிக் கொல்லப்பட்ட தன் தோழியின் சாவீட்டுக்கு போய்விட்டு, யாழ்நகரப் பகுதியிலிருந்து கைதடியிலிருந்த தன் வீட்டுக்கு போய்க்கொண்டிருந்த சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமி, வழியில் செம்மணியில் நின்ற சிறீலங்காப் படையினரால் வழிமறிக்கப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டு செம்மணி வெயில் புதைக்கப்பட்டார். இவரைத் தேடி வந்த இவரின் தாயார், தம்பி, அயலவரும் படையினரால் கொல்லப்பட்டு செம்மணி வெளியில் புதைக்கப்பட்டனர்.

களுத்துறை பயங்கரவாத சந்தேக நபர்களாக கருதப்பட்ட ஏராளமான அப்பாவித் தமிழர்கள் காரண காரியமின்றி, விசாரணைகள் எதுவுமின்றி வருடக்கணக்காகத் தடுத்து வைக்கப்பட்டு, உடல், உளரீதியான சித்திரவதைக்குள்ளாக்கப்படுகின்ற வதை முகாம்களில் ஒன்று அமைந்திருக்கும் இடம்.

– வெளிச்சம், தை மாசி 2003, மலைமகள் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2012, வடலி வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *