பதினாறும் பெற்று..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2022
பார்வையிட்டோர்: 2,434 
 

(2005 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தமிழாசிரியர் சங்கத்தின் கோரிக்கையினை ஆதரித்து அன்று ஆசிரியர்கள் யாவரும் சுகவீன லீவில் இருந்தனர். பாடசாலை அமைதியாக இருந்தது. முன்று மாடிக் கட்டிடத்தின் கல் நாட்டும் விழாவிற்கான நடவடிக்கைகள் ஆடம் பரம் எதுவும் இல்லாமல் இடப்பெற்றுக் கொண்டிருந்தது.

அது ஒரு டி.எஸ்.டி பாடசாலையாகும். நீண்ட நாட்களாக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினை அரித்து எடுத்த பிரச்சனை ஒருவாறாக சங்கத்தின் முயற்சியால் முடிவுக்கு வந்துவிட்டது.

அதிகமான வேலையாட்களைக் கொண்டு ஒரே நேரத்தில் வேலைக்கு அமர்த்தி தொடர்ந்து வேலை செய்தால் குறித்த காலத்தில் கட்டிடத்தை முடித்து விடலாம். என பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் அதிபருடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

குருக்கள் ஐயா மந்திரம் ஓத, கல்விப் பணிப்பாளர் அழகாக தேவாரம் பாட, முன்னாள் அதிபர் அடிக்கல் நாட்டி வைத்தார்.

மேசன்மார் கத்தா மரத்தின் கீழ் கதைத்துக்கொண்டிருந்தனர். அவர்களது காலடியில் சிதறிய பொங்கல் பருக்கைகளை அங்கிருந்த கறுப்பு நாய்க்குட்டி உண்டு மகிழ்ந்தது.

கட்டிடம் வேகமாக வளர்ந்தது. வேலையாட்களின் மீதி உணவைத் தொடர்ச்சியாக உண்டு வளர்ந்ததால் எல்லோரையும் கவரக்கூடிய வகையிலேயே அந்தக் கறுப்பு நாய் வளர்ந்து வந்தது.

கறுப்பி என அதை எல்லோரும் அழைத்தனர். மிக விரைவாகவே கறுப்பி தாயாகி விட்டாள்.

வளர்த்த நாய்குட்டி போட்டாலே பெட்டைக் குட்டிகளை வீதிச் சந்தியில் அல்லவா கொட்டுவார்கள்.

“பெட்டை நாய்கள் நல்ல காவல்” என்ற மேசன்மாரும் ஒப்பந்தக் காரரும் நினைத்ததன் விளைவால் தாய், மகள், மகள் என்று மூன்று கறுப்பிகளை முன்றாம் மாடி முடியும் வேளையில் மேசன்மார் விட்டுச் சென்றனர்.

2002 ஆம் வருடம் டிசம்பரில் பேயாய் பெருமழை தொடர்ச்சியாக பொழிந்துதள்ளியது. வெள்ள நிவாரணம் பற்றியும் மின்னலில் இருந்து எவ்வாறு தப்புவது என்பது பற்றியும் வானொலிகள் தொடர்ச்சியாக அறிவித்துக்கொண்டிருந்தன.

க.பொ.த.(சா/த) பரீட்சையும் முடிவடைந்துவிட்டது. மழை விட்டபாடு இல்லை . அதிபரையும் ஓரிரு சகாக்களையும் தவிர பாடசாலை வளவினுள் எவரையும் காணமுடியவில்லை.

கொள்ளை அழகாகத் தூக்கிக்கொஞ்சி மகிழும் விதத்தில் வெள்ளையும் கறுப்புமாக 16 குட்டிகளை 3 கறுப்பிகளும் ஒன்றாய் பிரசவித்தன.

பாடசாலை வளவு வெள்ளத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. 3 நாய்களும் குட்டிகளை கவ்விக் கவ்வி இடம் மாற்றின. கண் விழிக்காத நிலையிலும் ஆண்குட்டிகள் தாய்மார்களை உறுஞ்சித் தள்ளின.

ஒரு மாதமாக பெய்த மழை ஒரு நாள் மட்டும் ஓய்ந்தது ஆண் குட்டிகள் முதலில் கண் விழித்தன. ஒன்றன் பின் ஒன்றாக அவைகள் மெயின் வீதியை எட்டிப் பார்த்தன. நீண்ட நாள் உணவில்லாமல் இருந்த அப்பிரதேச பிச்சைக்காரர் ஒருவர் ஈசலைப் பிடித்து இனிமையாக உண்ணும் தவளை போன்று அங்கு வந்த எட்டு ஆண் குட்டிகளையும் விற்பனைக்காக எடுத்துப் போய்விட்டனர்.

பாடசாலையினுள்ளே ஓடைகள் நிரம்பி வழிந்தன. ஓடையில் விளையாடக்கூட மாணவர் இல்லை. நீண்ட மழைக்கு தாக்குப் பிடிக்காமல் 3 கறுப்பிகளும் சுருண்டு படுத்தன. வரண்ட மடிகளில் அந்த ஆண்குட்டிகள் பால் குடித்தபோது கிடைத்த சுகம் இல்லையே என்ற ஏக்கம் மறுபுறம்.

பெட்டைக் குட்டிகள் கண் விழித்தன. 3 கறுப்பிகளினதும் பால்மடிகள் சுருங்கின.

வேறுவழியில்லாமல் பெட்டைக் குட்டிகள் இரை தேடத் தொடங்கின. நிரம்பி வழிந்த ஓடைகள் இரண்டு குட்டிகளை அள்ளிச் சென்றுவிட்டன. அவை ஆற்றிலே உள்ள ஏனைய உயிர்களுக்கு உணவாக இருக்கலாம். யார் அறிவார்?

எஞ்சியவை ஆறுதல் இல்லாமல் அலைந்தன. சற்று வளர்ந்தன. உணவு கொடுக்க யாரும் இல்லை. பாலூட்டத் தாய் இல்லை. மழைவிட்டு தலை தெறிக்கும் வெயில் எறித்தது.

வீதியோரத்திலே பெரியதொரு வாகனம் அமைதியாக நின்றது. அதன் 4 சில்லுகளின் நிழல்களிலும் இந்த சிறுசுகள் நிழலுக்கு ஒதுங்கின நாக்கை நீட்டி கொட்டாவி விட்டபடி நித்திரை செய்தன. என்ன நினைத்ததோ இரு குட்டிகள் எழுந்து வெளியில் சென்றன.

அது ஒரு வெள்ளிக்கிழமை ஆறுதலாகக் தூபதீபம் காட்டிய முதலாளி ஈஸ்வரா என்று ஸ்ரியறிங்கை வளைத்துத் தொட்டுக் கும்பிட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டார்.

காற்று அடித்த 4 சில்லுகளும் ஆரவாரம் எதுவும் இல்லாமல் அவற்றின் கீழே உறங்கிய அந்த சிறுசுகளின் காற்றை அகற்றிவிட்டன.

“அன்பே சிவம்” எனும் தமிழ் சினிமாவில் கமலகாசன் காட்டிய கலை வண்ணம் போல் 4 காட்சிகள் வீதியில் காணப்பட்டது. அதைப் பார்த்து கரைவதற்குக்கூட காகங்கள் இல்லை.

இந்தக் குரூரத்தைத் தாங்க முடியாமல் இயற்கை கொடூரமாக சீறியது. வீதியில் வந்த வெள்ளம் 4 வண்ணத் தட்டுக்களையும் சகோதரிகள் போன வழியிலே ஒடையில் சேர்ந்தது.

யாரும் அறியாத வகையில் அந்த ஆறு உயிர்களும் ஆற்றுக்குப் போயின. எஞ்சிய இரண்டும் யாருமே கண்டு கொள்ளாதபடி அலைந்தன. வெள்ளத்தில் நனைந்த அதிபரின் நீளக்காற்சட்டையில் கரைந்த கீழ்ப் பகுதியில் அந்த இரு குட்டிகளும் சூப்பி சுவைத்தன.

வியர்வையும் ஊத்தையும் அவற்றுக்கு வித்தை காட்டினவோ? அதிபரின் கண்கள் சற்று கசிவைக் காட்டின.

மறுநாள் விடிந்தது. மூன்று மாடியில் முன்னால் உள்ள சுற்று மதிலின் கதவு பூட்டப்பட்டிருந்தது. அதற்கு முன்னால் இருந்த கிறவல் வீதியில் ஒரு நாய் குட்டி கால்களைச் சற்று உயர்த்தியபடி சரிந்து கிடந்தது. மூன்று மாடியின் விறாந்தையில் நின்றபடி அதிபர் அதைப் பார்த்து பெருமூச்சுவிட்டார்.

பெட்டைக் குட்டிகளை தட்டிக் கழிப்பது சமூகத்தின் வழக்கம். பெட்டைக் குட்டிகளை தட்டிக் கழிக்கும் சமூகம் அவை இறந்தாலும் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை .

நீண்ட மழையினால் உண்டாகிய புதிய நீர்த் தேக்கங்களில் நுளம்புக் குடம்பிகளும் வால்ப் பேத்தைகளும் எஞ்சிய அந்தக் குட்டிகளுக்கு நீரோடு உணவாகியிருந்ததால் தான் சற்று உயிர் வாழ்ந்து இருந்தன.

கரைந்த காற்ச்சட்டையில் உப்புக் கரைசல். அதில் ஒரு குட்டிக்கு பேதிக்கு கொடுத்த மருந்து போல ஆகிவிட்டதோ?

மண்வெட்டி எடுத்துப் புதைக்கவும் மாணவர்கள் இல்லை. நீண்ட மழை வீதிக்கரையில் மணலைக்கூட வைத்திருக்கவில்லை. காலை 10மணிக்குத்தான் மழை விட்டது. முன்வீட்டுத் தாத்தாவும் 3 வயதுப் பேரனும் பற்பேசையோடு வெளியில் வந்தனர். குழந்தை கண்களை அகலத் திறந்தான்.

“தம்பி தொடாதமனே. தொடாத, தொடாத” என்றார் தாத்தா. பரிதாபமாக நின்றான் பையன். முதல் நாள் பார்த்த ஆங்கிலப் படத்தில் ஒரு நாய் ஒரு இராணுவத்தையே தலைமை தாங்கிச் சென்றதை ரீ.வீக்கு முன் ரசித்துப் பார்த்ததை நினைத்துப் பார்த்தான் அவன்.

தாத்தா அழைத்தும் அவன் அவரோடு செல்லவில்லை. வெள்ளத்திலே மிதந்து வந்து வீதியோரத்தின் வேலிக் கட்டையில் தொங்கி நின்ற செடியை எடுத்து நாய்க்குட்டிக்கு கொசு விரட்டினான்.

இழகிய நிலத்தில் மண்வெட்டியால் கொத்தும் முன்பே நீர் கசிந்தது. ஒருவாறு மண்ணை குவித்து பக்கத்தில் இருந்த கருங் கல்லையும் புரட்டி எடுத்து புதை குழியின் மேல் வைத்தார் தாத்தா, பேரன் பார்த்துக்கொண்டே இருந்தான்.

அன்று மழை விட்டிருந்தது. மக்கள் நிம்மதியாகக் தூங்கினர் என்ன பந்தமோ தெரியவில்லை, தாய் நாய் ஒன்று ஊளையிட பலமில்லாமல் புதைகுழிக் கல்லைச் சுற்றி வந்தது. பசி, பத்தும் பறந்து போகும் பசி. முயற்சியில் வெற்றி பெற்றது அந்த நாய். சுடலைப் பிசாசு போல் அந்த குட்டியின் உடலை அது உண்டது. தான் பெற்ற உடல் தனக்கே சொந்தம் என அந்த தாய் நாய் நினைத்திருக்கலாம்.

பொழுது புலர்ந்தது சிறிய தென்றல் பாடசாலை வளவில் பறந்து தவழ்ந்தது. அந்தக் காற்றிலே தோண்டிய புதை குழியிலிருந்த நாற்றம் கலந்து வந்தது.

பற்பசையோடு மறுநாளும் அப்பையன் அங்கு வந்தான். புதைகுழியை வெறித்துப் பார்த்தான். அவனுடைய மனதிலே என்ன நினைத்தானோ? சில நினைவுகள் அந்த பிஞ்சு மூளையின் சில நரம்புகள் புடைக்கச் செய்தன.

அன்ரிட வளவுக்குள்ள அப்புச்சி நட்ட வெண்டி விதைகளை அவருக்குத் தெரியாமல் தோண்டி எடுத்து வேறு இடத்தில் தான் நட்டுப் பார்த்ததையும் அவை முளைத்ததையும், வளர்ந்ததையும் அவன் நினைத்துப் பார்த்துச் சிரித்தான்.

அவனுடைய மூளையில், நாய்க்குட்டியைப் பற்றி ஒரு தெளிவு பிறந்தது. ”இதுதான் செத்துப்போனா மேல போற என்று தாத்தா கதைத்த விடயமோ” என்று அவன் நினைத்தான்.

என்ன அதிசயம் அதே அளவு கறுப்பு வெள்ளை நாய்க்குட்டி அவனுடைய காலை நக்கியது. மிகுந்த சந்தோசத்தில் பற்பசையை நீட்டினான்.

அதே நாய்க்குட்டி மீண்டும் உயிர் பெற்று வந்ததை நினைத்து தாத்தாவைப் போலவே அவனும் செயற்பட்டான். அந்தக் குட்டியை ஆன மட்டும் அடித்தான். சிறிய கைகளால் மண்ணைக் குவித்து புதை குழியை மூடிவிட்டான். மறுநாள் விடிந்தது. புதைகுழியோரம் பையன் குந்தியிருக்கிறான். குட்டி வருமா? மணம் வருமா? அடுத்த நாய்வருமோ?

– மறுபக்கம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜனவரி 2005, எழுத்தகம் தமிழ் எழுத்தாளர் பேரவை, மட்டக்களப்பு..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *