கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2022
பார்வையிட்டோர்: 2,452 
 

(2005 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நிர்மலவாசன் கோயில் மாடுபோல, கொழுகொழுவென்றிருந்தான் அவனுடைய அழகிய பெயர் நண்பர்களின் நாக்குகளுக்கு ருசியாக இருக்கவில்லை.

அம்மா அவனை செல்லமாக நிர்மல் என்றே அழைப்பார். எதிரும் புதிருமாக செல்லமாகக் கதைக்கும் நேசறிவகுப்பில் அவனை கமால் என்று அழைப்பார்கள்.

ரீ.வி.யில் அவன் சிங்கள நாடகங்களையே ரசிப்பான். நிமால் என்று தன்னைக் கூப்பிடும்படி வீட்டாரைக் கேட்டான். அப்பா அதை மறுத்துவிட்டார்.

முதலாம் வகுப்பில் ரீச்சரிடம் தனது செல்லப்பெயர் நிமால் என்றே கூறினான். மாணவர்கள் கமால் என்றனர். நிர்மல் ஒப்பாரியே வைத்து விட்டான். நாளாக நாளாக அவனுடைய வகுப்புப் பெண்கள் அவனை நிம்மி என்று அழைத்தனர். நிர்மலவாசனுக்கு இப்போது நிம்மி என்னும் பெயர் மிகவும் பிடித்து விட்டது.

நிம்மிக்கு படிப்பு கொஞ்சம் கம்மிதான். ஆனால் அழகு வடியும் முகம். சிரிக்கும் போது குழிவிழும் கன்னங்கள். எப்போதும் அவனுடைய மனமும் முகமும் ஒன்றாகவே சிரிக்கும். நல்ல நிறம். 2003 இல் 5 ஆம் தரத்திற்கு வந்துவிட்டான் நிம்மி. ஒரு நாளைக்கு அவன் இல்லாவிட்டால் வகுப்பு களை கட்டாது – எல்லோருக்கும் அவன் இல்லாத வகுப்பு என்னவோ போலிருக்கும். அவ்வளவு கலகலப்பு. –

கோயில் மாட்டிற்கு கோபமே வராதாம். யார்தட்டினாலும் சும்மாவே நின்றபடி அழகாகக் கழுத்தை ஆட்டி அசைபோடுமாம் அது.

நிம்மிக்கு நாய்க்குட்டிகள் என்றால் நல்ல விருப்பம். நமது ஊர்களில் தெரு நாய்கள் ஏராளம், ஏராளம். கோடையில் விசர்நாய்க்கடி அதிகம். மாணவர்கள் நாய்க்கடிக்கு அடிக்கடி ஊசி ஏற்றிக்கொள்வர்.

அன்றொரு நாள் நிம்மியின் கோலத்தைக் கண்ட அம்மா அலுத்தபடியே “சீ…. சீச்சீ.. இது என்னடா நிம்மி” என்று தலையில் அடித்து கொண்டார். தூரத்தில் வசிப்பவர்கள் நிம்மியின் வீட்டுச்சந்தியில் கொட்டி விட்ட ஐந்தாறு நாய் குட்டிகளை அள்ளி அணைத்துக்கொண்டு அம்மாவைப் பார்த்துச் சிரித்தான். அழகு வடிந்தது. அவனைச்சுற்றி ஒளிவட்டம் வீசியது. அந்த நேரத்தில் அவனுடைய முகத்தைப் பார்த்தவர்களால் மட்டும் தான் அந்தநேரத்து அவனுடைய முகத்தின் அழகினை மீட்டுப் பார்த்து ரசிக்கும் பாக்கியம் பெற்றவர்கள் எனத் துணிந்து கூறமுடியும்.

காலையில் அவ்வாறு இருந்த முகம் மாலையில் கறுத்து விட்டது. ஊதுகின்ற பலூன் உடையும் போது குழந்தையின் முகம் அதிர்ச்சியோடு வாடுவது போல் அவனுடைய முகம் அதிர்ச்சியோடு வாடியிருந்தது. நிம்மியின் அப்பா அத்தனை குட்டிகளையும் அள்ளிக் கொண்டுபோனது அவனுக்கு அறவே பிடிக்கவில்லை. –

குணுக்குக் குணுக்காகத் தொங்கும் நிம்மியின் சுருண்ட முடியும் அவனுடைய சிரிக்கும் கன்னமும் குறும்புகளும் வகுப்பில் மட்டுமல்ல பாடசாலையிலும் ஊரிலும் எல்லோருக்கும் பிடிக்கும்.

சித்திரை பிறந்துவிட்டால் நிம்மியை வீட்டில்காணமுடியாது. கோயில்களில் கும்பம் வைத்தாலும், கொடியேறலும் திருவிழாவும் என்றாலும் அவனுடைய பொழுதெல்லாம் கோயில்களில்தான் கழியும். மாரி, பேச்சி, காளி, சிவன், பிள்ளையார், முருகன் என்று ஊரில் உள்ள எல்லாக் கோயில் திருவிழாக்களும் முடிந்த பின்னர்தான் வீட்டில் அவனைக் காணலாம்.

விறகு வெட்டச்சென்ற நிம்மியின் அப்பா மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இருக்கிறாரா இல்லையா என்பது கூட மூடு மந்திரம் ஆகிவிட்டது.

அம்மா நிம்மிக்காகவே சவூதி சென்றாள். தெரிந்த ஊரிலேயே அவளால் பிழைக்கமுடியவில்லை. இவர்களால் வெளிநாட்டில் பிள்ளையார் சுழிகூடப்போடத் தெரியவில்லை . அதுக்கெல்லாம்…… ஒரு இதுவேணும் என்று ஊரில் கதைப்பார்கள்.

நிம்மியின் அம்மம்மா கால் நீட்டிப்போட்டு முற்றத்தில் இருந்தபடியே சாமியிடம் சவுதியில் இருக்கும் தமது மகளைக் காப்பாத்தும் படி இரங்கி வேண்டிக்கொள்வான். அவளால் முடிந்தது. அவ்வளவுதான். அவளுடைய சாப்பாட்டையும் சுருட்டுப் புகைச் செலவையும் நிம்மிதான் பார்த்துக் கொண்டான். இந்த வருடம் பிள்ளையார் கோயில் கொடியேற்றத்திற்கு முதல் நாள் கோயில் கிராம சாந்தி செய்துகொண்டிருந்தனர். பொம்மை கட்டி உள்வீதி சுற்றி வெளிவீதிக்கு வந்தபோது அந்தப்பேய்க்காற்று வந்தது. கோயிலில் நின்ற பெரியவர்கள் எல்லோரும் எழுபத்தெட்டாம் ஆண்டு அடித்த சூறாவளியினை நினைத்தபடி வீட்டுக்கு விரைந்தனர்.

இழுத்து வந்த பொம்மையினை வீதியில்விட்டபடி தலைப்பாகை பறக்கவேட்டி கழண்டுவிழ ஓடி மறைந்தான் அதைப் பாரமெடுத்த இளைஞன்.

நிம்மிதான் அவற்றைப் பொறுக்கி எடுத்து குருக்களிடம் கொடுத்தான். அவைகளை மேலும் மந்திரித்து மஞ்சள் நீராட்டி நிம்மியிடம் குருக்கள் கொடுத்தார். மீதி வேலைகள் எல்லாவற்றையும் நிம்மியும் அவனுடைய நண்பர்களும் குருக்களோடு சேர்ந்து முடித்தனர்.

சில நாய்களுடன் கோயில் காவலாளியும் நிம்மியும் கோயில் வாசலில் எஞ்சி இருந்தனர்.

அன்றைய பூசைக்குரிய படையல்கள் தொடுவாரற்றுக்கிடந்தன. நிம்மியும் நண்பர்கள் சிலரும் எஞ்சிய நாய்களும் சாப்பிட்டு எவ்வளவோ பண்டங்கள் எஞ்சி இருந்தன. அதே காற்று மீண்டும் விடியற் காலை மூன்று மணிக்கு வந்தது. மின்னல் வெட்டியது. மழை தூறியது. திருவிழாவுக்காக புளி போட்டு பூசி மினுக்கியகொடி மரம் அடிமின்னலில் பளிச்சிட்டது.

கொடி மரத்தில் உச்சியில் இருந்த சிறு மணிகளில் கலகலத்த ஓசை, ஒரு நாளும் இல்லாதவாறு காவலாளிக்கு நடுக்கத்தைக் கொடுத்தது.

குளிர் அடித்தது. கோயில் வாசலில் மணலைக்கிண்டி விட்டபடி சுருண்டு படுத்த நிம்மி அருகில் படுத்த நாயின் சூட்டில் மீண்டும் நித்திரையானான்.

இறைவனைத் தனியே விட்டு விட்டு ஊரார் சென்றாலும் நிம்மியும் சில சிறார்களும் சில நாய்களும் பிள்ளையாரைக் காப்பாற்றினர் என்றே சொல்லவேண்டும்.

விடிந்த பின்னர்தான் காற்றின் அட்டகாசம் தெரிந்தது. வாழை, மா, பலா, தென்னை என்பன முழுதாகவும் பாதியாகவும் தெறித்திருந்தன. சில வீடுகளில் கூரைகள் இல்லை .

நித்திரையில் வீட்டினுள் ஊஞ்சலில் இருந்தபடியே ஒரு மாதக் குழந்தையினை மார்பில் அணைத்த படி பாலூட்டிய குழந்தையொன்றின் தலையினைக் தடவிச்சென்ற கூரையின் பருத்த கைமரம் ஒன்று அன்றைய செய்தியின் முக்கிய செய்தியாக அடிபட்டது. ஊரெல்லாம் அது பெரிய கதை.

ஐயோ எவ்வளவு மாங்காய் எவ்வளவு தேங்காய் என்று வாயைப் பிளந்தபடி நிம்மி ஆற்றங்கரைக்குப் போய்க்கொண்டிருந்தான். கூடவே

குட்டி நாய் ஒன்றும் கோயில் முற்றத்தில் இருந்தே அவனைத் தொடர்ந்தது. நமது கிராமங்களில் பிரியாணியென்பது பெரியவிடயம். ஆனால் கிராமத்து நாய்களுக்கு பிரியாணிபோல் சுவையான உணவு இன்றும் கிடைக்கக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது.

”நாயைக் கழுவி நடுவீட்டில்…. முதல்நாள் இரவு நிறையவே நெய்வேத்தியங்களை உண்டதனால் நிம்மி காலையில் வேகமாக நடக்க வேண்டி இருந்தது.

அண்மைக்கால நிகழ்வுகள் ஆற்றங்கரைகளை அடியோடு அழித்து விட்டன. மறையக்கூடப் பற்றைச் செடிகள் அங்கு இல்லை.

ஆற்றைக் கடக்க பெரிய வள்ளம் (பாதை) ஒன்றைக் அக்கி ராமத்தில் புதிதாகக் செய்து இருந்தனர். அது ஒரு பஸ்சினை ஏற்றிச் செல்லக்கூடிய அகலமான பாதை, அதன் அடிப்பக்கத்தில் ஒட்டுவேலை சரியாக இல்லாததனால் ஊரெல்லாம் கூடி அப்பாதையினை கத்திப் பாட்டில் நிறுத்தி இருந்தனர். நல்ல மறைவு. நிம்மிக்கு நிம்மதி. சொர்க்கத்தைக் கண்டசுகம்.

ஆதாரத்திற்காக அவனுடைய கைகள் பாதைக்கு வைத்திருந்த முட்டுக்கட்டையில் பதித்திருந்தது. நாய்க்குட்டி நிம்மதியாக நிம்மிக்குப் பின்னால் காலை உணவை அனுபவித்தது.

ஆற்றங்கரைக்குச் செல்வதற்காக முட்டுக்கட்டையில் சற்று அழுத்தத்தை அதிகரித்தான் நிம்மி. பாதை எதிர்பாராமல் பக்கவாட்டில் சரிந்தது. பள்ளத்தில் இருந்த பாதையினை ஆற்றுக்கு எடுத்துச் செல்ல. உபயோகித்த இரு நெடிய தண்டவாளங்களும் அடுத்த பக்கத்தில் கிடந்தன. அவை இந்தப் பக்கத்தில் இருந்திருந்தால் நிம்மியும் குட்டியும் விரைவாக சேற்றில் புதைந்திருக்க மாட்டார்கள். இறந்துபோகும் வரைக்கும் நாய் அனுங்கிக்கொண்டே இருந்தது.

காற்றையும் மழையையும் பற்றியே மக்கள் கதை அளந்தனர். நிவாரணத்திற்காக அவர்கள் அலைந்தனர். பாதை சரிந்ததைப் பற்றி அவ்வூர் இளைஞர்கள் கவலைப்பட்டனர். மீண்டும் அதனைச் சரிசெய்து முட்டு வைக்க தங்கள் முதுகுப் பலத்தை உபயோகிக்க வந்தால் எவ்வாறு ஓடி ஒழிப்பது என்பதைப் பற்றிக் கதைத்து அவர்கள் ஜோக் அடித்தனர். நாய்க்குட்டியின் அலறலைக் கேட்ட சிலரும் எத்தனையோ உயிர்கள் போய்விட்ட இந்தவேளையில் நாய்க்குட்டி என்ன பெரிய கொம்பா என விசில் அடித்தனர்.

அம்மம்மாவிற்கு நிம்மியைப் பற்றி கவலை இல்லை. திருவிழா முடிந்ததும் நிம்மி வருவான் என்று அவள் தனக்குள் கூறிக்கொண்டாள்.

பாதையில் பக்கச்சரிவின் கீழிருந்து சிறிது சிறிதாக வாடை வீசியது. நாய்க்குட்டியைப் பற்றி கதை பரவியதனால் யாரும் கவலைப்படவில்லை. நல்ல வேளை நாய்க்குட்டியோடு போய் விட்டது *சிலவேளை வெள்ளோட்டத்திற்கு முன் நமது குழந்தைகளை இந்தப் பாதை பலி யெடுத்திருந்தால் நாம் என்ன செய்வது, இனிப்பயமில்லை” எனச்சிலர் கதைத்தனர்.

கோயில் கொடி இறங்கியது. மீண்டும் மக்கள் அன்றாட வாழ்வில் கவனம் செலுத்தினர். பாதை மீண்டும் ஊராரின் ஓசையோடு கிளம்பி வருகின்றது. முட்டுக்கட்டையில் இறுகப்பற்றிய எலும்புக்கூடு சேர்ந்து வருகிறது. பத்து விரல்களினதும் பூட்டுக்கள் விலகவில்லை: அழுகிய சிறிய எலும்புக் கூடொன்று கூடவே பார்வைக்கு பாதையோடு கிளம்பி வருகிறது.

– மறுபக்கம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜனவரி 2005, எழுத்தகம் தமிழ் எழுத்தாளர் பேரவை, மட்டக்களப்பு..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *