கோவிலுக்குள் நுழையும்போதே கவனித்து விட்டேன்.
அந்தச் சிறுமி இன்றைக்கும் வந்திருந்தாள்.
அவள் உயரத்திற்கு ஒரு துடைப்பம். யாரையும் எதுவும் கேட்கவில்லை. கோயிலை பெருக்கத் தொடங்கினாள்.
பக்தர்கள் வந்தார்கள். பகவானை வழிப்பட்டார்கள்.
கோயிலை வலம் வந்தார்கள். அவள் அவர்களுக்கு இடையில் தான் பெருக்கிக் கொண்டிருந்தாள்.
”ஏம்மா, இன்னும் கொஞ்சம் சீக்கிரமாவே வந்து பெருக்கலாம் இல்லையா? ”
“பள்ளிக்கூடம் முடிஞ்சதும் வீட்டுக்குப் போயிட்டு வரேன் கா…”
இதுக்கு எவ்வளவு சம்பளம்?
அதெல்லாம் இல்லை, அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, அதான் இந்த நாலுநாளா அவங்களுக்குப் பதிலா நான் வந்து பெருக்கறேன்!
சரி அம்மாவுக்கு எவ்வளவு சம்பளம்?
அதெல்லாம் இல்லேக்கா. சாமிக்கிட்டே வேண்டிகிட்டு பெருக்கறாங்க…!
என் மனசை என்னவோ செய்தது. “”இந்தா பாப்பா, இதை வைச்சிக்கோ..! உண்டியலில் போடாமல் அந்த பத்து ரூபாயை அவளிடம் திணித்தேன்.
– அரும்பாத்தபுரம் மது (அக்டோபர் 2011)