பட்டர் பிஸ்கட்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 11,544 
 
 

பெயர் பெற்ற பள்ளிக்கூடம் அது. அந்தப் பள்ளியின் அருகே இருக்கும் பெட்டிக்கடையை ‘தாத்தா கடை’ என்று மாணவர்கள் செல்லமாக அழைப்பார்கள்.

துருப்பிடித்த மூடிகள் கொண்ட கண்ணாடி ஜாடிகளில் இருக்கும் பட்டர் பிஸ்கட், கடலை உருண்டை, கலர் மிட்டாய்கள், சூயிங்கம், முறுக்கு போன்ற அயிட்டங்களுக்கு மாணவர்களிடையே ஏகப்பட்ட கிராக்கி. குறிப்பாக பட்டர் பிஸ்கட்டுகளுக்கு பயங்கர டிமாண்டு!

பள்ளி இடைவேளையில், பிள்ளை கள் கூட்டமாகத் தன் கடையை நோக்கி ஓடி வருவதைப் பார்த்தாலே, தாத்தாவுக்கு படு குஷியாகிவிடும். தாத்தாவைத் தங்களுக்குச் சமமாக கலாட்டா செய்வது, வம்புக்கு இழுப்பது, ஏமாற்றி வேடிக்கை பார்ப்பது… இதெல்லாம் மாணவர்களுக்குப் பொழுதுபோக்கு. தாத்தாவுக்கும்தான்!

உரிமையுடன் ஜாடியைத் திறந்து, தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்வார்கள். பாதிக்கு காசு வரும்; மீதிக்கு கணக்கு வரும். தாத்தா எதையுமே கண்டுகொள்ளமாட்டார். யாரிடமும் இவ்வளவு தரவேண்டும் என்று கண்டித்துக் கேட்கமாட்டார். அவர்கள் கொடுப்பதை மகிழ்ச்சியாக வாங்கிக்கொண்டு, கடையை நடத்திக் கொண்டு இருந்தார்.

வருடங்கள் ஓடின. தாத்தாவின் (!) மாணவர்கள் இன்று எங்கெல்லாமோ இருக்கிறார்கள். படித்து, நல்ல பதவிகளில் இருக்கிறார்கள். தாத்தாவோ, வழக்கம்போல் மாறாத பொறுமையும், சிரிப்புமாக அடுத்தடுத்து புதுசு புதுசாக வரும் மாணவர்களிடம் தனது ‘பட்டர் பிஸ்கட்’ வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு இருந்தார்.

இப்போது காலம் மாறி, பீட்சாவும், பர்கரும், மில்க் சாக்லெட்டுகளும், இன்னும் பலவிதமான புதிய வகை தின்பண்டங்களும் வந்துவிட்டாலும், தாத்தா கடை பட்டர் பிஸ்கட்டின் மவுசு மட்டும் குறையவே இல்லை.

அன்று… தாத்தா கடையின் எதிர்ப் பக்கத்தில் ஒரு பெரிய கார் வந்து நின்றது. வெள்ளை உடை, வெள்ளைத் தொப்பியுடன், டிரைவர் இறங்கிக் கதவைத் திறந்துவிட, கோட் சூட்டில் ஆறடி உயரமுள்ள கனவான் ஒருவர் இறங்கி, விறுவிறுவென்று கடையை நோக்கி வந்தார். ‘‘வணக்கம் தாத்தா! எப்படி இருக்கீங்க? என்னை அடை யாளம் தெரியுதா?’’ என்றார்.

கண்களை இடுக்கி அவரை உற்றுப் பார்த்த தாத்தா தயக்கத்துடன், ‘‘நீ… நீங்க… கணேசுதானே?’’ என்று கேட்க, அந்த மனிதர் ஆச்சர்யப்பட்டுப் போனார். ‘‘அய்யோ தாத்தா… எப்படிக் கரெக்டா கண்டுபிடிச்சீங்க? இதே பள்ளிக்கூடத்தில் படிச்ச அதே கணேஷ்தான் நான். எப்படித் தாத்தா இன்னும் எங்களையெல்லாம் ஞாபகம் வெச்சிருக்கீங்க?’’ என்று செல்லமாகச் சிணுங்கிய அந்த கனவான், பள்ளிப் பிள்ளையாகவே மாறிப் போனார்.

‘‘உன்னை இப்படிப் பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கப்பா! ஏம்ப்பா கணேசு, இப்ப எங்கே இருக்கே? உள்ளே வா, இப்படி ஸ்டூல்ல உட்காரு!”

உட்கார்ந்த கணேஷ், ஜாடியைத் திறந்து ஒரு பட்டர் பிஸ்கட்டை எடுத்துக் கடித்தபடி, ‘‘ஸாரி தாத்தா! கேட்காமலேயே எடுத்துக்கிட்டேன். பழக்கதோஷம்’’ என்று சிரித்தார்.

‘‘உனக்கில்லாததா… எடுத்துக்கப்பா!’’ என்றார் தாத்தா வாஞ்சையுடன்.

கணேஷ் படித்த பெரிய படிப்பு, வகிக்கும் உயர்ந்த உத்தியோகம், வசதியான வாழ்க்கை, மனைவி, இரண்டு குழந்தைகளுடன் கூடிய அழகான குடும்பம்… இப்படி எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்துகொண்ட தாத்தா, ‘‘நீ சின்னப் புள்ளையா இருக்கும்போதே நல்லா படிப்பியே! ரொம்ப நல்லா வருவேன்னு எனக்கு அப்பவே தெரியும் ராசா!’’ என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.

‘‘தாத்தா, இப்ப நான் டெல்லிலதான் இருக்கேன். எங்கே போனாலும்… வெளிநாட்டுக்குப் போனாலும் சரி, அங்கே எந்த பிஸ்கட்டைப் பார்த்தாலும் எனக்கு உடனே உங்க கடை பட்டர் பிஸ்கட்டும், உங்க ஞாபகமும்தான் வரும்’’ என்று கணேஷ் சொல்ல, ‘‘அப்படியா கணேசு’’ என்று வெள்ளைச் சிரிப்புடன் அதைப் பெருமையோடு ஏற்றுக்கொண்டார் தாத்தா!

‘‘தாத்தா, நாங்க அஞ்சு பேரா வருவோமே, ஞாபகம் இருக்கா?’’

‘‘மறக்கமுடியுமா தம்பி? என்னா லூட்டி அடிப்பீங்க! ‘பஞ்ச பாண்ட வருங்க’னுதானே நான் உங்களைக் கூப்பிடுவேன்!’’

‘‘ஆமா, நாங்க அஞ்சு பேரும் உங்க கடையிலேர்ந்து கண்டதை எடுத்துத் தின்னுவோம். ஒழுங்கா காசு கொடுக்க மாட்டோம். கணக்குல வெச்சுக்குங்கனு சொல்லி ஏமாத்துவோம். நீங்க எங்க பாக்கியைக் கேட்கவே மாட்டீங்க. நாங்களா கொடுத்தாதான் உண்டு. ரொம்பப் பெரிய மனசு தாத்தா உங்களுக்கு. நாங்கதான் ரொம்பத் தப்பு பண்ணிட்டோம். இப்ப நினைச்சாலும் எனக்கு ரொம்ப வெட்கமா இருக்கு!”

‘‘அட, சின்னப் புள்ளைங்கன்னா அப்படித்தான் தம்பி! கள்ளங்கபடு இல்லாத வயசு. கன்னுக்குட்டி மாதிரி துள்ளித் திரிஞ்ச காலம். ஆனா, எனக்கு நீங்கள்ளாம் வந்தாலே சந்தோஷமா இருக்கும். பாட்டுப் பாடுவீங்க. ஜோக் அடிப்பீங்க. உங்க வாத்தியாருங்க மாதிரி பேசிக் காட்டுவீங்க. கடையே ரொம்ப கலகலப்பா ஆயிடும்!’’ என்று வாய்விட்டுச் சிரித்தார் தாத்தா.

அப்புறம், பழைய கதைகளை எல்லாம் சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தனர் இருவரும். நேரம் போனதே தெரியவில்லை.

‘‘சரி தாத்தா, அப்ப நான் கிளம்பட் டுமா? டெல்லி போகணும். ஃப்ளைட் டுக்கு டயமாச்சு!” என்று எழுந்த கணேஷ், தன் கோட் பாக்கெட்டிலிருந்து ஒரு கவரை எடுத்து தாத்தாவிடம் நீட்டி, ‘‘இதுல ரெண்டாயிரம் ரூபாய் இருக்கு. தயவுசெஞ்சு வாங்கிக்குங்க தாத்தா!’’ என்றார்.

கணேஷின் கைகளைப் பாசத்தோடு தடவிக் கொடுத்தார் தாத்தா. ‘‘கணேசு… நீ எவ்வளவோ உசந்த நிலைக்குப் போன பிறகும், இந்தத் தாத்தாவை நெனைப்பு வெச்சுட்டிருக்கே பாரு, அதுதாம்ப்பா எனக்குப் பெரிசு! எப்ப இந்தப் பக்கம் வந்தாலும் என்னை வந்து பார்த்துட்டுப் போ ராசா, எனக்கு அது போதும்!’’ என்று பணக் கவரை கணேஷிடமே திருப்பித் தந்தார்.

பின்பு, அலமாரியிலிருந்து ஒரு காகிதப் பையை எடுத்து, அதில் ஜாடியிலிருந்த பட்டர் பிஸ்கட்டுகளை எல்லாம் அள்ளிப் போட்டார்.

‘’இந்தா கணேசு, இதைக் கொண்டு போய் உன் பொஞ்சாதிக்கும் புள்ளைங் களுக்கும் தாத்தா குடுத்தாருன்னு சொல்லிக் கொடு. நல்லா இரு ராசா!’’ என்று மனமார வாழ்த்தி, பிஸ்கட் பையை கணேஷின் கைகளில் திணித்தார்.

தன் படிப்பு, பதவி, அந்தஸ்து எல்லாம் இவரின் களங்கமில்லாத அன்புக்கு முன் எம்மாத்திரம் என்று கண்கலங்கியபடியே அதைப் பெற்றுக் கொண்டு, தாத்தா இன்னும் ரொம்ப நாளைக்கு நன்றாக இருக்க வேண்டும் என்று மனசுக்குள் வாழ்த்திய படியே காரில் போய் உட்கார்ந்தார் கணேஷ்.

பள்ளிக்கூடத்தில் மணி அடிக்கிற சத்தம் கேட்டது. தொடர்ந்து, குழந்தைகள் கும்பலாக தாத்தாவின் கடையை நோக்கி ஓடுவது தெரிந்தது. அதோ, தாத்தாவின் அன்பு மழை அடுத்த தலைமுறைக்கும் பெய்யத் தொடங்கிவிட்டது.

– மார்ச் 2006

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *