படிக்காத குதிரை!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தென்றல்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 12,516 
 
 

ஸ்கூட்டரில் நானும் நண்பனும் போய்க் கொண்டிருக்கிறோம். வண்டி, கிண்டி குதிரைகள் ஆஸ்பத்திரியைத் தாண்டியது. மொழுமொழுவென்று, ஆரோக்கியமான பளபளப்புடன் வரிசையாகக் குதிரைகள் தார்ச்சாலையில் குளம்பொலி கிளப்பித் தாளம் தப்பாமல் நடைபயின்று சென்றன. ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று திரும்புகிறார்கள். பாரவண்டிக் குதிரையா! பந்தயக் குதிரையாயிற்றே! உயரமான அரபுக் குதிரை. ஒவ்வொன்றின் முதுகே ஒரு மனிதனின் சராசரி உயரத்துக்கும் மேல் இருக்கும். கண்டு கண்டாக முறுக்கேறித் திமிறும் தசைகள் புடைத்துத் தெறிக்கும்படியான கால் அசைவு. சீராக வெட்டிவிடப்பட்ட பிடரி மயிரும், வாலும். வாலை வீசி வீசி, சுழற்றிச் சுழற்றி நடக்கும் கம்பீரம். ‘என் முதுகில் உட்கார்ந்திருப்பவன் என்னை இழுத்துப் பிடித்துச் செலுத்தாவிட்டால் நான் பறந்து விடுவேன்’ என்று ஒரு திமிறல். முதுகில் உட்கார்ந்திருப்பவனுக்குத்தான் என்ன பெருமை! புத்தம் புது பிஎம்டபிள்யூவில் உட்கார்ந்து போகின்றவனுக்குக் கூட அத்தனை மகிழ்ச்சி இருக்காது. பின்னே, அவன் ஆளுவது சும்மா அழகாகத் தட்டப்பட்டு, வளைக்கப்பட்ட ஒரு இரும்பு ஜடத்தையா? உயிரும், மனமும், யோசனையும் உள்ள ஒரு ஜீவனை அல்லவா? டட்டக்கு டட்டக்கு டகடக்கு டட்டக்கு என்று சீரான நடை. Trot, piaffer, amble, canter, gallop என்று மனிதன் ரசித்து ரசித்து வைத்த அசுவகதியின் பெயர்களில் இது piaffer. தமிழில் அசுவகதி ஆறு என்று நினைவு. இல்லை, எட்டா? மறந்துவிட்டது.

நண்பனுக்கு என் வாயைக் கிண்டுவதென்றால் மிக விருப்பம். “இந்தக் குதிரை படிச்ச குதிரையா, படிக்காத குதிரையா ஹரி?” என்றான், பின் சீட்டில் இருந்து என் தோளைப் பற்றியபடி. ‘அதென்னடா அது சுட்ட பழம் கதை மாதிரி’ என்று புன்னகைத்தேன், அவன் பக்கமாக தலையைக் கொஞ்சம்போலத் திருப்பியபடி. எங்கே வருகிறான் என்பது தெரியும். பாம்புக்குத் தெரியாதா பாம்பின் கால்? இந்தத் தருணம் எப்படிப்பட்டதென்றால், சும்மா புன்னகைத்தால் போதாது. நான் புன்னகைப்பது அவனுக்குச் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரியவேண்டும். அவன் மனத்தில் ஓடுவது என் மனத்தில் எதிரொலிப்பதை, என் முதுகுப்பகுதியில் இருந்துகூட அவன் சொல்லிவிடுவான். முகத்தையே பார்க்க வேண்டாம். இருந்தாலும் எனக்கு அது – அந்தத் தருணத்திற்கு – போதாது. ஸ்கூட்டரை சாலையின் ஒரு ஓரத்தில் நிறுத்தி, கால் நீட்டிச் சாலையில் ஊன்றி, அவன் பக்கம் திரும்பிப் புன்னகைத்தேன். “டேய், தேரியும்டா எங்க வர்ரன்னு” தலையப் பக்கத்துக்குப் பக்கம் சீ-சா மாதிரி ஆட்டினேன். அவன் கண்கள் கொஞ்சம் சின்னதுதான். அங்கேயும் குறும்பு கூத்தாடிக் கொண்டிருந்தது.

“ஏண்டா, என்ன காரியமா போய்ட்டு இருக்கோம்? யார் கூட நீ இப்ப வந்துட்டிருக்கே? இப்ப சொல்ற வார்த்தையாடா இது? இப்ப யாரு கல்லா மா?” என்றேன். முதுகில் ஓங்கி ஒரு அறை விழுந்தது. “ச்ச்சீ போ…உன்னை அப்படிக் கூட யோசிப்பேனா நான்? வண்டிய எடு. போய்ட்டே பேசலாம்” என்றான். என்ன சந்தோஷத்தைத் தரும் அறை அது! சுளீர் என்று விழுந்தாலும், ‘உன்னைப் போல் எனக்கொரு துணையுண்டா’ என்று கேட்கும் அறை அல்லவா அது? குதிரையின் முதுகில் சுடீர் என்று விழும் சவுக்கடியைப் போல. அந்த அடியை வாங்கிக் கொண்டு, ‘ஏன் அடித்தாய்’ என்றா கேட்கும் குதிரை? பறக்காதா? அதற்குச் சம்மதம் இல்லாவிட்டால், அதற்கு சந்தோஷம் தராவிட்டால் அந்த அடியை வாங்கிக் கொள்ளுமா, பறக்கத்தான் பறக்குமா?

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.

குறளை முணுமுணுத்தேன். அதைத்தான் அவன் கேட்டான். போர்க்களத்தில் பாதி சண்டை நடந்து கொண்டிருக்கும்போது விட்டுவிட்டு ஓடிப் போகும் குதிரையைப் போன்றவன் நட்பைக் காட்டிலும் தனியாக இருப்பது மேல். அது வரைக்கும் சொல்லியிருந்தால் பரவாயில்லை. ‘கல்லா மா’ என்று சொல்லியிருக்கிறார். அதென்ன படிக்காத குதிரை? குதிரை படிக்குமா? கிராஜுவேஷன் கெளன் போட்டு, கையில் பட்டத்தைச் சுற்றி வைத்துக் கொண்டு, காமிராவைப் பார்த்துப் புன்னகைக்கும் எந்தக் குதிரையின் புகைப்படத்தையும் நான் பார்த்ததில்லை. பின்னே அது என்ன கல்லா மா? அது ஒரு பக்கம் இருக்கட்டும். குதிரை எதற்கு இந்த இடத்தில் நட்புக்கு எடுத்துக்காட்டாக, குறிப்பாக? யானை இல்லையா? அதே யுத்தத்திற்குப் பயன்படும், இன்னும் பெரிய விலங்குதானே அது? அதைச் சொல்லியிருக் கலாமே!

அமரகத்து ஆற்றறுக்கும் ஆனையே அன்னார்
தமரின் தனிமை தலை

என்று சொன்னால், பரி, அசுவம், குதிரை என்றெல்லாம் நிரை அசையில் ஆரம்பிக்க முடியாமல் மா என்று சொல்லி, அதுவும் போதாமல், கல்லா என்று அதற்கு ஓர் அடைமொழி போட்டெல்லாம் சிரமப்பட்டிருக்க வேண்டாம். பின்னே எதற்கு இப்படிச் சொன்னார்? ஆனால் அவரா சிரமப்படுபவர்? ஒரு வார்த்தை அனாவசியமாகப் போட்டுவிடுவாரா? அவரைப் புரிந்து கொள்ள நாமல்லவா சிரமப்பட வேண்டும்?

மனிதனுக்கும் குதிரைக்கும் இருக்கும் உறவு தொன்று தொட்டு வருவது. ஆழமானது. அழகானது. அவனுடைய உணவுத் தேவையை மாடு பூர்த்தி செய்தது. உழுதது. பால் தந்தது. அதிகம் தொல்லை தராமல் தொழுவில் ஒதுங்கிக் கொண்டது. தன் செல்வத்தை – மாடு – பாதுகாக்க மனிதனுக்கு அசாதாரண வேகம் தேவைப்பட்டது. பாதுகாப்பிற்கு வேகம் அவசியமானது. உல்லாசத்திற்கும் அது தேவைப்பட்டது. போரா? ஏறு குதிரை மேல். காதலியைப் புறங்கொண்டு போக வேண்டுமா? ஏற்று குதிரை மேல். கிருஷ்ணனுடைய தேர் யுத்தத்திற்குச் சித்தமாக வேண்டுமானால் அவனுக்கு ரைப்பியம், சுக்ரீவம், மேகபுஷ்பம் முதலான நான்கு குதிரைகள்தாம் வேண்டும். அவனுடைய தேரோட்டி தாருகனுக்கு இது நன்றாகவே தெரியும். அர்ஜுனனைக் கடத்திக் கொண்டு போய் மணந்து கொண்டாள் சுபத்திரை. அதுவும் கண்ணனுடைய ஏற்பாடு தான். அங்கேயும் முழு நம்பிக்கைக்குரிய குதிரைகள் பூட்டப்பட்ட தேர்தான் சித்தமாக இருந்தது. உல்லாசமாகப் போவதற்கு வேறு, போருக்குப் போவதற்கு வேறு என்று வேறு வேறு ரதங்களும், வேறு வேறு குதிரைகளும் இருந்தன. பழக்கப்பட்டிருந்தன அது. அதைத்தான் சொல்லாமல் சொல்கிறார் கற்ற மா என்று.

ஒரு மனிதனுக்குப் பழகிய குதிரை எந்தக் காலத்திலும் விசுவாசம் தவறாது. எந்த நிலையிலும் அவனைப் பிரியாது. யுத்த நேரத்தில் மிரளாமல் இருப்பது மனிதனுக்கே முடியாத ஒன்று. அந்தச் சமயத்திலும் குதிரை துணை நிற்கும். முதுகின் மீது அமர்ந்து, ஒரு கையால் லகானைப் பிடித்துக்கொண்டிருப்பவன் கையில் வாள் சுழலும் வேகத்துக்குத் தான் சுழலும். எதிராளியின் வாள் வேகம் உச்சம் பெற்றால், கால்களை உயரத் தூக்கி எட்டியும் உதைக்கும். அதனுடைய வேலை அது இல்லை. அந்தப் பணி அதனிடம் எதிர்பார்க்கப்படுவதில்லை. போடுகிற கொள்ளுக்கும், புல்லுக்கும் இந்தக் குதிரை காட்டும் அன்பா அது? இது அதற்கு மேல் கொஞ்சம் விசேஷமானது இல்லையா? வரலாறு முழுக்க குதிரைகளின் கதைகள்தாம். முரட்டுக் குதிரைகளுக்குக் கூட எஜமானனை நன்றாகப் புரியும். தேசிங்கு ராஜா அடக்கிய முரட்டுக் குதிரையைப் பற்றி நமக்குத் தெரியும். அப்படி இருக்க வேண்டிய குதிரை, நம்ப வைத்து, போர்க்களம் புகுந்த பின்னர், இதை நம்பிப் புகலாம் என்று வந்த பின்னர், முரசு அதிரும் ஓசையைக் கேட்டு, சங்கு முழங்கும் பேரொலியைக் கேட்டு, எதிராளியின் வாள் ஓங்கியிருக்கும் நேரத்தில் ஏறியிருப்பவனைக் கீழே தள்ளிவிட்டு ஓடுகிறது என்று வைத்துக் கொள்வோம். விழுந்தவன் அதற்குப் பிறகு எழுந்திருக்க முடியுமா?
நண்பர்களில் இந்த இரண்டு பிரிவும் உண்டு. நண்பனைத் தேர்ந்தெடுப்பது போல் குதிரையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார்கள். நல்ல குதிரையைப் போன்றவன் நல்ல நண்பன். பழக்காத – untrained – குதிரையைப் போன்றவன் ‘இனம் போன்று இனமல்லாத’ நண்பன் என்கிறார் பெருந்தகை. குதிரையைப் பழக்குவதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் www.gentlehorses.com போய்ப் பாருங்கள். எப்படி ஒரு நண்பனும் குதிரையும் வேறு வேறு இல்லை என்பது தெரியவரும். குதிரைக்கு சுய கெளரவம் முக்கியம். ‘நீ ஏறி அமர்ந்த உடனேயே அது உன் மனத்தைப் படித்துவிடும். நீ உட்காரும் விதத்திலேயே அது உன் குதிரையேற்ற அனுபவத்தை உணர்ந்துவிடும்’ என்றெல்லாம் சொல்கிறார்கள். குதிரை என்று சொல்லும் இடங்களில் எல்லாம் நண்பன் என்று போட்டுக் கொள்ளலாம். அவ்வளவுதான். ரெண்டுமே synonym போலத்தான் இருக்கும்.

“நான் சொல்றன் கேள்றா. இந்த ஷேரை வாங்கிக்கோ. ரெண்டு மாசத்துல எட்டு பங்கு ஏறும்” என்று சொல்வான். வாங்கிய பத்தாவது நாள் சங்கு ஊத வேண்டியிருக்கும். அந்தப் பக்கம் போய் நின்று “சரியான முட்டாள். அதுல போயி பணத்தப் போடறத்துக்குக் கூவத்துல போயி கொட்டலாம். சொன்னா அறிவிருந்தா தானே” என்று பகபகவென்று சிரிப்பான். “அந்தப் பொண்ணு ஒன்னயே பாக்குதுடா. என்னவோ இருக்கு ஒங் கையில… இல்ல இல்ல… மொகரக் கட்டையில” என்று ஏற்றிவிடுவான். அடி விழும் சமயத்தில் அந்தத் திக்கிலேயே இருக்கமாட்டான். திருட்டு தம் அடிக்க வைப்பான். மாட்டிக் கொண்டால், ‘எல்லாம் இவனாலதான் சார்’ என்று கண்ணால் நீர் பெருக்கி, காலை வாரிவிடுவான். பரீட்சையில் நம்மைப் பார்த்து எழுதுவான். ‘என்னடா, எவனப் பாத்து எவன் எழுதினது’ என்று கேட்டால், நம்மை மாட்டிவிடுவான். இந்தப் பாவிதான் கல்லாமா. இந்தப் பாவியோடு நட்பு வைத்துக் கொள்வதை விடத் தனியாக இருந்து தொலைக்கலாம். இதைத்தான் சொல்கிறார்.

பேசிக் கொண்டே போக வேண்டிய இடத்துக்குப் போய், காரியம் முடிந்து திரும்பி வந்தோம். “அப்ப கற்ற மா அப்படின்னா, உற்ற நண்பன் என்று சொல்ற, அதானே?” என்று கொக்கி போட்டான். அவனுக்குத் தெரியாமலா கேட்கிறான்? என் வாயால் கேட்டுக் கொள்வதில் ஒரு மகிழ்ச்சி. ஸ்கூட்டரை உதைத்தேன். குதிரையைத் தலையில் தடவிக் கொடுப்பதைப் போல வண்டியின் ஹெட்லைட் பகுதியில் தடவினேன். வண்டி மேல் தனிப் பிரியம் எனக்கு. “வண்டி பேரச் சொல்லு” என்றேன். நாக்கைத் துருத்தி அழகு காட்டினான். “சேடக். அங்க என்ன கொக்கி வச்சிருக்க?”

“யாரோட குதிரை தெரியுமா அது?”

“ம். ராஜா மஹாராணா பிரதாப்.”

ராணா பிரதாப் ஒரு அரபு குதிரை வியாபாரிகிட்டதான் அதை வாங்கினார். ரெண்டு குதிரைகள் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. சேடக் ஒண்ணு. நாடக் ஒண்ணு. நாடக்தான் ரெண்டிலும் அழகு. வேகம். திமிறிக் கொண்டு நின்ற இரண்டு குதிரைகளில் முதலில் நாடக்கைத்தான் அவர் தேர்ந்தெடுத்தார். ஆனால், அவர் ஏறி உட்கார்ந்ததும் அது அடங்காமல் ஓடின வேகத்தில் அவருக்குப் பெருத்த காயம் ஏற்பட்டுவிட்டது. தீய நட்பை உதறித் தள்ளுவது போல அடுத்த கணமே அதை விட்டுவிட்டார். சேடக் அவருடைய விசுவாசமான குதிரையானது. எத்தனையோ யுத்தகளங்கள். எத்தனையோ சாகசங்கள். அத்தனைக்கும் உறுதுணையாக நின்றது அது.

1576ஆம் வருஷம் ராஜஸ்தான் மேவாரில் அக்பருடைய படைகளுக்கும் ராணா பிரதாப்பின் படைகளுக்கும் பெரிய யுத்தம். சரித்திரத்தில் ஹால்டி காட்டி யுத்தம் என்றால் அவ்வளவு பிரசித்தம். ராணா பிரதாப் காயம்பட்டு குதிரையின் மேலேயே மூர்ச்சையானார். குதிரைக்கோ பெரிய அளவில் அடிபட்டு ரத்தம் உடலெல்லாம் வழிகிறது. செலுத்த வேண்டிய எஜமானனோ முதுகின் மீது மூர்ச்சையாகக் கிடக்கிறான். அவனைத் தூக்கிக் கொண்டு மலைகளுக்கு நடுவே, பாதுகாப்பான இடத்திற்கு ஓடியது. பின்னால் விரட்டி வரும் எதிரிப் படைகள். கொஞ்சம் தவறாக அடியெடுத்து வைத்தாலும் எஜமானன் முதுகின் மீதிருந்து விழுந்துவிடுவான். பிறகு மறுபடியும் அவனை ஏற்றி வைக்க முடியாது. இத்தனைச் சவால்களை எதிர்கொண்டு சேடக், ராணா பிரதாப்பைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு போனது. நண்பர்கள் மத்தியில் அவரைச் சேர்த்தது. மயக்கம் தெளிந்த ராணா பிரதாப் எழுந்து அமரும் வரை காத்திருந்தது. அவர் அமர்ந்ததும், தன் தலையை அவர் மடியில் வைத்தது. அதன் பெரிய பெரிய கண்களில் நீர் திரண்டிருந்தது. தன் உற்ற நண்பனைத் தடவிக் கொடுத்தார் ராணா பிரதாப். அவர் மடியில் உயிரை விட்டது சேடக். ராஜஸ்தானில் பெரிய வெண்கலச் சிலை வைத்திருக்கிறார்கள் சேடக்கிற்கு. அந்த யுத்தத்தில் ராணா பிரதாப் இறந்திருந்தால், சரித்திரத்தின் போக்கே மாறியிருக்கும். சேடக் காலகதியையே மாற்றியது. இதுதான் கற்ற மா.

தட் தட் தட் தட் என்று சப்தித்துக் கொண்டிருந்தது என்னுடைய சேடக். வண்டியைக் கிளப்பினாலும் நாங்கள் நின்றுகொண்டுதான் பேசிக்கொண்டிருந்தோம். இப்படி முடித்தவுடன், ‘ஹைய்ய்யோ’ என்று பெருமை பொங்கக் கூவி, தெருவென்றும் பாராமல் இறுகத் தழுவிக் கொண்டான். என்னை விட உயரமான அவனுக்குள் நான் அமுங்கிப் போனேன். அவனுக்கு நான் சேடக். எனக்கு அவன் சேடக்.

– ஆகஸ்டு 2003

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *