ஊரைக் கூட்டச் சொல்லி நச்சரிப்பு தாள முடியவில்லை…..சிவ சிதம்பரத்திற்கு.
” சரிய்யா ! நாளைக் காலையில எட்டு மணிக்கெல்லாம் கூட்டம் போட்டு செய்ய வேண்டியத்தைச் செய்துடுவோம் ! ” என்று நேரம் காலம் குறித்து விட்டு திண்ணையில் சாய்ந்தார்.
மறுநாள் காலை சரியாய் எட்டு மணிக்கெல்லாம் ஆற்றங்கரை ஆலமரத்திடலில் ஊர் மொத்தமும் கூடி இருந்தது.
சிவசிதம்பரம் நாட்டாண்மை தோரணையில் வந்து மேடையில் அமர்ந்தார்.
அப்படியே கூட்டத்தினரைப் பார்த்து நோட்டம் விட்டு…..
” இப்போ இங்கே விஷயம் தெரியாதவர்களும் இருக்காங்க. தெரியாதவர்களுக்குத் தெரியனும். புகார் சொல்லுங்க. ” சொன்னார்.
கூட்டத்தின் முதல் வரிசையில் அமர்ந்திருந்த சுந்தரமூர்த்தி எழுந்து…
” நம்ம கிராமத்துல கண்ணுக்குத் தெரிஞ்சி ஒரு அசிங்கம் நடக்குது. வெளியில ஆம்பள , பொம்பள தலை நிமிர்ந்து நடக்க முடியல. அதைக் கண்டிக்கணும். ” பொத்தாம் பொதுவாக சொல்லி அமர்ந்தான்.
” விபரம் சொல்லுங்கய்யா. .? ”கூட்டத்தின் வேறொரு இடத்தில்…. தலையை நீட்டி ஒருத்தன் குரல் கொடுத்தான்.
” சொல்றேன். நம்ம ஊர்ல வாழ்ற கலா விபச்சாரம் செய்ய வெளியூர் போறா. ”
” ஆமாம். இதை பல பேர் கண்ணால பார்த்திருக்காங்க. ” இன்னொருத்தன்.
விஷயம் அசிங்கம் என்று…. கூட்டம் மொத்தமும் கப் சிப்பென்று வாயை மூடிக் கொண்டது.
சிவசிதம்பரம் எல்லோரையும் பார்த்தார்.
அவர்கள் மனம் அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. இன்னும் அதைப் பற்றி விளக்கம் கேட்டு விமர்சனம் செய்ய அவர் விரும்பவில்லை.
” சரிப்பா. .! …இப்போ விசயம் எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சு. அவமானம், அசிங்கம்…! அடுத்து நாம என்ன செய்யனும். .? ” தீர்ப்பை….. கூட்டத்தை நோக்கி விட்டார்.
” அந்த பொம்பளையை நாம இந்த ஊரை விட்டுத் துரத்தனும். ” ஒருவன் அழுத்தம் திருத்தம், ஆக்ரோசமாக சொன்னான்.
” எப்படி நியாயம். ..? ” சிவசிதம்பரம் கேள்வி கேட்டார்.
கூட்டம்…. ஒருகணம் அவரைத் திகைத்துப் பார்த்தது.
” காலா இந்த ஊருக்கு கலியாணமாகி வாழ வந்த பொண்ணு. ஆறுமாசத்துல புருசன் பாம்பு கடிச்சி இறந்து போக நிராதரவானவள். இங்கே புருசன் வீடு இருக்கு குந்த/. மானம், அவமானம்ன்னு அவளை ஊரைவிட்டு துரத்திவிட்டால்… இருக்க இடமில்லாமல் அவள் எங்கே போய் நிற்பாள்.? எப்படி வாழ்வாள். .? ” சிவசிதம்பரம் கேட்டார்.
” குடிசையப் பிரிச்சிக்கிட்டு எங்கேயாவது போய் வாழட்டும். ஏன். .? ராத்திரி நேரம் , ரோட்டோரம் போய்…. லாரிக்காரனைத் தேடிப் போய் சம்பாதிச்சி வர்றாளே…. அங்கேயே ஒரு குடிசையைப் போட்டு வாழட்டும் !. ” ஒருத்தன் சொன்னான்.
” பெண் தனியா வாழ பாதுகாப்பு. ? ”
” அவளுக்கு எதுக்குப் பாதுகாப்பு. .? ”
” நாளைக்கு ஒரு கொலை, கொள்ளைன்னு தனியே செத்துக் கிடந்தால் யார் பதில் சொல்றது….? ஊரை விட்டு ஒதுக்கின நாமதான் குற்றவாளி. நம்மை போலீஸ் பிடிக்கும். .?! ”
‘ சிவசிதம்பரம் நியாயம் மாறுகிறார் ! ‘ என்பது போல் கூட்டம் ,அவரை ஒரு மாதிரியாகப் பார்த்தது.
அவருக்கு இதுவும் புரிந்தது.
” தம்பிகளா. .! இப்போ… கிராம நியாயம் , பஞ்சாயத்துக்கெல்லாம் சட்டத்துல மதிப்பு, இடமில்லே. எந்த ஒரு தீர்ப்பும் கச்சேரியிலிருந்து வந்தாதான் செல்லும் என்கிறது இப்போதய நடைமுறை., சட்டம். இப்படி கூட்டம் போட்டு …..எடுத்தேன், கவிழ்த்தேனெல்லாம் நாம முடிவெடுத்தால் நாளைக்கு ஊர் மொத்தமும் அரசாங்கத்து முன்னால கைகட்டி நிக்கணும். ” விளக்கத்தைச் சொல்லி நிறுத்தினார்.
”விஷயம் தெரிஞ்சி பேசறீங்க நாட்டாமை. நல்லது. ஆனா. . இவை ஒருத்தியால அக்கம் பக்கம் உள்ள ஊர்க்காரனுங்க… எங்க பொண்டாட்டி , புள்ளைகளை ஒரு மாதிரியா பார்க்குறானுங்க. இதை இப்படியே கண்டுக்காம விட்டால்…. கைப்புடிச்சி இழுப்பானுகளோன்னு பயமா இருக்கு. ஒருத்தியால எல்லோரும் அசிங்கப்படுறது எப்படி சரி. .? ” ஒரு நியாயஸ்தன் கேள்வி கேட்டான்.
” ஆமாம். எப்படி சரி. .? ” கூட்டத்தில் கோரசாக குரல்கள் எழுந்து அடங்கியது.
” சரி. என்ன செய்யலாம் சொல்லுங்க.?..” சிவசிதம்பரம்.
” அவ காலி பண்ணனும். .”
”……………………………”
”அதட்டி உருட்டி, இல்ல …. நைச்சியமா. . ‘ அம்மா ! உன்னால் எங்களுக்குப் பிரச்சனை. தயவு செய்து காலி பண்ணுன் ‘ னு பேசி சம்மதமா வெளியேறுறாப்போல எழுதி வாங்கி வெளியேத்துவோம். சட்டத்திலிருந்தும் நாம் தப்பிக்கலாம். ” விஷ்ணு வழி சொன்னான்.
சிவசிதம்பரத்திற்கு ஏற்பில்லை . இருந்தாலும் எல்லோரும் ஒட்டு மொத்த முடிவிலிருக்கும்போது தான் பின் வாங்குவது எடுபடாது ! என்பது அவருக்குப் புரிந்தது.
” சரி. வாங்க ” சொல்லி எழுந்தார்.
ஊர் கடைக்கோடி….. கடைசியில் இருந்தது அவள் வீடு. சின்ன குச்சு, குடிசை வீடு. !
சிவசிதம்பரம் முன்னிற்க….. கூட்டம் அவர் உடனிருந்தது.
” ஏஏ. .. காலா ! வெளியே வா. ..” விஷ்ணு குரல் கொடுத்தான்.
காலையிலிருந்தே ஊர் நடப்பை அறிந்த அவள் வெளியே வந்தாள் . மொத்த கூட்டத்தையும் பார்த்தாள். ” நீ….. ஊரைவிட்டு இந்த நிமிசமே காலி பண்ணனும். ” தலையாரி மாயாண்டி சொன்னான்.
”எதுக்கு. .? ” அவள் கேட்டாள் .
” சேதி தெரிஞ்சி எங்களைக் கேலி பண்ணாதே. நீ… இங்கே இருக்கிறது எங்களுக்கு அவமானம், தலைக்குனிவாய் இருக்கு. வெளியேறனும். ”
” விபச்சாரி இந்த ஊர்ல இருக்கக் கூடாது. ” கூட்டத்தில் ஒருவன்.
” அதை நீங்க சொல்றது சரி இல்லே ” அவள் திருப்பி தாக்கினாள்.
” ஏன். .?”
” புருசன் செத்து அனாதையா இருந்தேன். பொணம் நாறாமல் ஊர் தூக்கி கொண்டு வைச்சதோடு சரி. யாரும் திரும்பி பார்க்கல. நான் ஏழை. ..இப்படி பொழைக்கிறேன். ” தன் நிலையைச் சொன்னாள்.
” அதுக்கு இதுதான் வழியா. .? ”
” நாத்து நட்டு, களை பறிக்க வழி இல்லே. காவரியில தண்ணி, மழை இல்லாம விவசாயம் இல்லே. சித்தாள் வெளிக்குப் போனா…. உடம்பைப் பார்க்குறாங்க. எந்த வேலைக்குப்போனாலும் ஆம்பளைங்க அத்தனை பேரும் அப்படியே கீழ்த்தரமா பார்க்குறாங்க. அக்கம் பக்கம் உதவிக்கு வழி இல்லே. வேற வழி இல்லாம….. ..”
” அந்த காரணமெல்லாம் வேணாம். வெளியில போ. ”
” ஐயா. .! உங்க ஒத்துமை, மான, அவமானமெல்லாம் எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கு. அதே சமயம் என்னை வெளியேற சொல்றதுக்குத் தகுதி இல்லாததாவும் இருக்கு. என் அனாதரவைப் பார்த்து ஊர்ல எல்லாரும் ஒத்த ரூபா போட்டு…’ இதை வைச்சு மனமாய் பொழை ‘ ன்னு அக்கறை காட்டி இருந்தீங்கன்னா…. தப்பு செய்ற நான் வெளியேறலாம். ஒரு ஊர்ல ஒரு குடி பாதிப்புன்னா. . மத்தவங்க அவுங்க மேல அக்கறை வைச்சு அப்படித்தான் செய்யனும். அக்கறை இல்லாதபோது குத்தம் சொல்லி தண்டனை கொடுக்கிறது எப்படி சரி. .? அதுக்காக நான் இப்படித்தான் வாழ்வேன்னு அடம் புடிக்கலை. இந்த நிமிசமே எனக்கு யாராவது வாழ்வு கொடுக்க வந்தா. . . அடுத்த நிமிசம் நான் யோக்கியமா அந்த ஆளோட குடும்பம் நடத்தத் தயார். ” சொன்னாள்.
சிவசிதம்பரம் எல்லோரையும் பார்த்தார்.
கூட்டம்….. ஒருவரை ஒருவர் பார்த்து மெல்ல கரைந்து கலைந்தது.