நேர்முகத் தேர்வு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 12, 2021
பார்வையிட்டோர்: 1,690 
 
 

அடிப்படை தேவைகளுக்கே அன்றாடம் அல்லல்படும் குடும்ப பின்னணியில் மூன்று அக்காக்களுக்கு கடைக்குட்டியாக, சர்வான்மா, முதற்முறையாக ஒரு நேர்முகத்தேர்வை எதிர்கொள்ள தயாராகிறான். வீட்டிலிருந்து நிறுவனம்வரும்வரை ஒலித்து கொண்டே இருந்தது அம்மா மற்றும் அக்காகளின் அறிவுரைகள் மற்றும் பொருளாதார குறைகள்.

அந்த MNC கம்பெனியில்நேர்முகத்தேர்வுக்கு காத்திருக்கும் மாணவர்கள் கூட்டம் சர்வான்மாவை களைப்படைய செய்தது. கிட்டத்தட்ட வரிசையின் கடைசியில் இருப்பினும், இயல்பாக முன்னால் இருப்பவரிடம் பேச முயன்றான்.“ஹலோ சார், உங்களுக்கு FIRST டைமா? அவன், ஒரு மாதிரி பார்த்துவிட்டு “ ஆமா, நாம மட்டும் இல்ல, இங்க வந்துருக்க முக்காவாசி பேருக்கு இதான் பஸ்டு டைம்”. என்று கடுப்படிக்கிறான். சர்வான்மா “ஓகே ஓகே ஏன் சார் டென்சன் ஆகுறீங்க, சும்மா இண்டிடியூஸ் ஆகலாம்னுதான் கேட்டேன், இட்ஸ் ஓகே விடுங்க. பின்னால் திரும்பி இன்னோருத்தனை பார்க்கிறான். அவன், ஹாய்! ஐ அம் சந்தோஷ், ப்ரம் தஞ்சாவூர். வாட் ABOUT யூ? சிறு புன்னகையுடன், நான் சர்வான்மா…பிரெண்ட்ஸ் கால் மீ சர்மா, ப்ரம்.. இங்கதான் லோக்கல் ஆவடி பக்கம் பட்டாபிராம். அப்புறம், நம்ம ஊர் பக்கம் எல்லாரும் நல்லா இருக்காங்களா?” அவனும் ஒரு மாதிரி பார்த்துவிட்டு திரும்பி கொள்கிறான். சர்மா,“இங்க யாருமே இயல்பா இல்லன்னு நல்லா தெரியுது,’ னு தனக்கு தானே பேசி சமாதானம் ஆகிறான்.

எட்டி பார்க்கிறான், வரிசையில் நிற்பவர்கள் ஒருவருக்கொருவர் ஏதேதோ பரிமாறிகொள்கிறார்கள். அவற்றில் “உங்க டென்த் மார்க் எவ்ளோ?” “ஆமா இந்த கம்பெனியோட founder யாரு?” “இந்த கம்பனி பேரோட fullform என்ன?” “கம்பனி ஹிஸ்டரி தெரியுமா?” இன்னும் பல GK QUESTION & ANSWERS என பல விவாதங்கள் நடந்த வண்ணம் இருந்தது. ஒவ்வொருவராக இன்டர்வியூ ரூமுக்குள் வந்து போய் கொண்டிருக்கிறார்கள். வெளியே வருபவர்களிடம் ஓடி ஓடி சிலர் எதோ கேட்டு, கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். அதில் ஒருவன் “எல்லாம் சும்மாப்பா ஆளெல்லாம் எடுத்து முடிச்சிடாங்க, சும்மா கணக்கு காட்ரதுக்காக நம்மல யூஸ் பண்ணிகிறாங்க’ னு புலம்பிட்டு போனார், இன்னும் சில விமர்சணங்கள் அவனை கடக்கின்றன. சர்மா எதோ யோசித்தபடி அமைதியாக நிற்கிறான்.

போன், அம்மாமூலம் அவனை அழைக்கிறது. சர்மாவை அந்த நேர்முகத்தேர்வு அறையும் அழைக்கிறது, போனை எடுக்க நினைத்தவன் கட் செய்துவிட்டு பாசிடிவ் எனர்ஜியுடன் உள்ளே செல்கிறான் “மே ஐ கம் இன் சார்?” என்ற குரலுடன் உள்ளே சென்று விட்டான். அந்த நேர்முகத்தேர்வு அதிகாரி, சற்று முரண்பட்ட பார்வையுடன், அலுப்புடன் அமர்ந்திருந்தவர் எழுத்து நின்று லேசாக சோம்பல் முறிக்கிறார், அதற்குள் சர்மா, “சார் மே ஐ” னு கூறிக்கொண்டே எதிரே அமர்ந்து விடுகிறான். கோவமான அவர் , “ஹலோ மிஸ்டர், நான் உங்கள உக்காரவே சொல்லல, அது போக நானே நின்னுக்கிட்டு இருக்கேன் நீ… நீங்க பாட்டுக்கும் வர்றீங்க, உக்காறீங்க,.. டூ யூ கேவ் எனி சென்ஸ்?” சிறு அதிர்ச்சியுடன் சர்மா, “இல்ல சார், நீங்க உக்காந்தே களைச்சு போயி நிக்குறீங்க, நாங்க நின்னே களைச்சிபோய்டோம், கொஞ்சம் உக்கார கூடாதா சார்?” அவர் டென்சன் ஆகி, ‘first you get up then speak மிஸ்டர்?’ என்று அதட்டுகிறார். முகமது கஜினி என்ற நேம் போர்டை பார்த்தபடியே மெதுவாக எழுந்து நிற்கிறான் சர்மா. மனதுக்குள் வேலை கிடைக்கும் எண்ணம் சுக்கு நூறாகியது சர்மாவுக்கு.

கஜினி, “இந்த கம்பனில வேல கெடைக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா, first இது எவ்ளோ பெரிய கம்பனி? இதுல நான் யாருன்னு உனக்கு தெரியுமா ? இல்ல நீ பேசுன வார்த்தைக்கு முழு அர்த்தமாவது தெரியுமா உனக்கு? யு இடியட்?” என்று கோவத்தில் சரமாரியாக சாடுகிறார். சர்மா செய்வதறியாமல் நிற்கிறான். “tell me மிஸ்டர்” னு கூறிக்கொண்டே அவன் profile ஐ பார்த்துகொண்டே, “மிஸ்டர் சர்..வான்..மா?” என்கிறார் கஜினி. அவன் பெயரை பார்த்ததும் சற்று வித்தியாசமாக உணர்ந்து பின் நிதானமாக, வெளியில் காட்டிகொள்ளாமல் தனக்குள் அமைதியாகிறார். சர்மா, “இல்ல சார், நீங்களே சொல்லுங்க சார்” என்கிறான், கஜினி அமர்கிறார்.

ஏதோ யோசித்தவராய், “சரி ஓகே., நான் எதுக்கு உங்களுக்கு வேல கொடுக்கனும்?”- கஜினி, சர்மா, “இந்த கேள்விக்கு நான் ஏன் பதில் சொல்லணுமோ? அதுக்குதான் சார்?” மீண்டும் எரிச்சலுடன் அவர், “உங்களுக்கு இங்க வேலை கிடைக்கனும்னு எண்ணமே இல்லையா? எங்க கம்பெனியால நம்ம ஊர்ல அரசியல் மாற்றமே நடந்திருக்கு தெரியுமா? இந்த கம்பனி எத்துண பேருக்கு வாழ்க்கை கொடுத்துருக்கு தெரியுமா?” சர்மா, ஏன் சார் இவ்ளோ கோவப்படுரீங்க ,” கஜினி,“அப்புறம் நீ கொஞ்சம்கூட பொறுப்பு, மரியாதயோட பேசவே இல்லையே.” சர்மா, “சார்…, செய்கையில் மரியாத இருக்கிறதவிட சிந்தனையில் இருக்கிறதுதான் முக்கியம், அதுபோக வரலாறு மேல எனக்கு ரசனை எப்போதும் உண்டு, ஆனா நம்பிக்கை கொஞ்சம் கம்மி தான் சார்..”

கஜினி சற்று கடுப்பாகி பின் இயல்பாகி, ஒரு சிறு பெருமூச்சுடன் “ஏம்பா நீ வேணும்னு பேசுறியா? இல்ல இதான் உன் இயல்பா?” ஏதோ தெளிவாக புரிந்தாற்போல் சர்மா, “கரக்டா கேட்டீங்க சார், இதேதான் சார் நானும் வந்ததுலேந்து யோசிச்சுட்டு இருக்கேன் இங்க யாருமே இயல்பா இல்ல சார்!” கஜினி முறைப்பதுபோல் பார்க்கிறார், “இல்ல.., நான் உங்கள MEAN பண்ணல சார், என்னபோல கேண்டிடேட்ஸ சொன்னேன், ஏன்னா உங்க இயல்பு எனக்கு தெரியாது பாருங்க.. கஜினி, “சரி உன் பாயிண்ட் ஆப் வியுவ்ல, இன்டர்வியூனா என்ன?” சற்றும் கலக்கமில்லாமல் சர்மா, “இந்த கம்பெனில வேல பாக்க நான் தகுதியான ஆளானு நீங்களும், நான் வேல பாக்க இந்த கம்பனி தகுதியானதான்னு நானும் டிஸ்கஸ் பண்றது”.முக்கியமா இயல்ப வெளிபடுத்துறது”

கஜினி எதுவும் கூறாமல் அமைதியாக இருக்கிறார், உற்று பார்த்துவிட்டு சர்மா, “என்னாச்சு சார் சைலேண்டு ஆகிடீங்க?” கஜினி, “சரியாத்தான் சொல்ற அதனாலதான், என்னமோ உடனே ஏத்துக்க முடியல.. சரி சரி உக்காருப்பா.”. வேலையே கிடைத்துவிட்டதுபோல் மகிழ்ச்சியுடன் “தேங்க்ஸ்” சொல்லிவிட்டு நிம்மதியாக அமர்கிறான் சர்மா. இருவருக்கும் ஒரே நேரத்தில் போன் அடிக்கிறது, சர்மா நெளிகிறான், கஜினி சற்று முரண்பட்டு மீண்டும் இயல்பாகி புன்னகைத்து “சரி பேசு” என்கிறார். அவரும் பேசுகிறார். சர்மாவின் அம்மா, “வேல கெடைச்சுட்டா டா? னு கேட்ட கேள்விக்கு கஜினிக்கு வந்த அழைப்பு பதில் கூறியது “ வேகேன்சி புல் ஆகிட்டு, இன்டர்வியூவ நிப்பாட்டிடுங்க கஜினி.”இது தெரியாத சர்மா “வேல கிடைச்சுட்டு மா”னு அவனுக்கு தெரியாமலேயே அவன் பொய் கூறினான். கஜினிக்கு தர்மசங்கட்டம் செய்வதறியாமல் யோசிக்கிறார்.

சற்று சுதாரித்து, “ஹே மிஸ்டர், நான் உன்னை அப்பாய்ன்ட்மென்ட் பண்ணவே இல்லையே, நீ ஏன் அதுக்குள்ள கமிட் ஆகிற” சர்மா, “இல்ல சார்.”… கஜினி, “இல்ல இல்ல., நீ எதுவும் பேசாதே, ஓவர் கான்பிடென்ட் எல்லாம் நமக்கு செட் ஆகாது, யு ஆர் டிஸ்அப்பாயிண்டேடு மீ, சோ டேக் யுவர் பயில் அண்ட் கெட் அவுட்” னு கத்துகிறார். சர்மா, சார்… ஏன். சார்… தீடிர்னு இப்டி பேசுறீங்க நல்லாதானே சார் போனிச்சு?, கஜினி, டேய் இல்லடா சர்மா நீ எதிர்பாத்த வேல உனக்கு கெடைக்காது. சர்மா சற்று யோசித்துவிட்டு அந்த போன்காலை ஞாபகபடுத்தி, “ஓ! இதான் விஷயமா சரி விடுங்க சார், நீங்க மறுபரிசீலனையின் மறுஉருவம்னு தெரியும் ஆனா, இவ்ளோ சீக்கிரம் மாத்துவீங்கனு நினைக்கல சார், நான் இந்த கம்பெனிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன் என்ன தேர்ந்தெடுக்க”, சர்மா பேசி கொண்டிருக்கும்போதே கஜினி தலைகுனித்து ஏதோ வேலை பார்ப்பதுபோல் இருக்கிறார் .ப்ச்.. இந்த கம்பனி கொடுத்து வச்சது அவ்ளோதான்”. என்று கூறியவாறு பயிலை எடுத்துகொண்டு திரும்பி நடக்கிறான்… கஜினியின் ஆணைப்படி, பிரிண்டிங் மெசின் ரெண்டு பேப்பரை கக்குகிறது, கஜினி “டேய் நில்டா சர்மா, என கூற அவன் திரும்பி பார்க்கிறான், அவனிடம் அந்த ரெண்டு பேப்பரையும் நீட்டுகிறார், அதை வாங்கி பார்க்கிறான். ஒரு பேப்பரை பார்க்கும்போது கஜினி, “அது உன்னோட அப்பாயின்மென்ட் ஆர்டர்” சர்மா, “எப்டி” என்பது போல் பார்க்க, இன்னொரு பேப்பரை கண் காட்டுகிறார், அந்த இரண்டாவது பேப்பர் கஜினியோட ரிசைனிங் லெட்டர்.

சர்மா அதிர்ந்து “ஏன் சார்?” னு கேட்கிறான். கஜினி, “நீ எதிர் பார்த்த வேலைதான் கிடைக்காதுன்னு சொன்னேன், எதிர்பாக்காத வேலை கிடைக்காதுன்னு சொல்லலையே, இனிமே இந்த கம்பெனிக்கு நீ தான் நான்’ னு கூறிக்கொண்டு திருப்தி புன்னகை சிந்துகிறார். சிறிது யோசித்து சர்மா, “இது சாத்தியம்னா?” தனது அப்பாயின்மென்ட் ஆர்டரை கண்பித்து, “யூ ஆர் மை சுப்பர்வைசர், WHICH MEAN நேர்முகத்தேர்வு மேற்பார்வையாளர்.”னு கூறிக்கொண்டே கஜினியோட ரிசைனிங் லெட்டரை கிழித்துவிட்டு, பெருமிதமாகக் கை நீட்டுகிறான், சற்று யோசித்த கஜினி, பின் அதன் தேவையை உணர்ந்து, நெகிழ்ச்சியுடன் கை கொடுக்கிறார். சேர்ந்தது அவர்கள் கைகள் மட்டுமல்ல…

“தொழிலாளியை தேடும் முதலாளியும் தொழிலாளியே,
முதலாளியை தேர்ந்தெடுக்கும் தொழிலாளியும் முதலாளியே”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *