கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 11,478 
 

அந்தி மயங்கும் பொழுதில் லச்சுமி, “டிமக்ரான்’ பூச்சி மருந்து குடித்துச் செத்துப் போனாள். அதற்கு ஒரு மணி நேரம் முன்பு வரை பண்பலையில் சினிமாப் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த 18 வயதுப் பெண். மருந்து குடித்ததற்குக் காரணம், அவளுடைய உண்டியலில் இருந்த பணத்தை – 200 ரூபாயை எடுத்து அவள் அம்மா பருத்திக்கு பூச்சி மருந்து வாங்கி விட்டாளாம்.
கோவில்பட்டியிலிருந்து பக்கம் 15 கி.மீ., ஆனால் சாத்தூர் தாலுகா. வானம் பார்த்த பூமி. இன்னமும் விவசாயத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு சராசரி தமிழ் கிராமம். பருத்தி, கடலை என எதையாவது போட்டு கைக்கும் வாய்க்குமாக வாழ்நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கும் இந்நாட்டு மன்னர் குடும்பங்கள் நூறு. அனேகமாக எல்லாருமே ஒருவருக்கு ஒருவர் உறவு முறை. போன இரண்டு வருடங்களாக மழை பொய்த்து போனதால் -மழை பெய்யாமல் இல்லை. பெய்ய வேண்டிய நேரத்தில் பெய்யாமல் வேண்டாத நேரத்தில் பெய்து தொலைத்தது – ஊரில் யாரிடமும் பணம் இல்லை. ஒருவருக்கு ஒருவர் எப்பொழுதும்
கொடுத்து வாங்கிப் பழக்கம். இந்த வருஷம்தான் யாரும் யாரையும் கேட்கும் நிலையில் இல்லை.
அதனால்தான் கோவில்பட்டியில் அந்த தேச வங்கிக்கு விவசாயக் கடன் கேட்க சென்றார்கள். லச்சுமியின் நயினா கோபால்தான் இட்டுச் சென்றார். எல்லோருமே வங்கிக்கு ஏதோ ஒரு சமயம் இல்லாவிட்டால் ஒரு சமயம் போனவர்கள்தாம். ஆனால் கடனுக்கு
என்று 5 பேர் ஒரே சமயம் போவது அதுவே முதல்.
போனவுடன் இருந்த 6 வது எண் கவுண்டரில் சம்பத் தான் கேட்டார்.
“”விவசாயக் கடன் எங்கே கேட்கணும்?”
“”கட்டணுமா?”
“”இல்ல. புதுக் கடன்”
“”அப்படியே மாடிக்குப் போயிடுங்க” என்றார் முகம் பார்க்காமலேயே.
போனார்கள்.
பத்து நிமிட விசாப்புக்குப் பின்னரே ஃபீல்ட் ஆபிசர் யார் என்றே தெரிந்தது.
“”ஐயா, விவசாயக் கடன் பத்தி விவரம் கேட்கணும்”
“”கடன் வேணுமா விவரம் வேணுமா?”
“”கடன்தாங்கய்யா வேணும்”
“”அப்புறம் எதுக்கு விவரம்னு கேட்குறீங்க? விவரம்னா அங்கே நோட்டீஸ் இருக்கு. பார்த்துகோங்க. கடன் வேணும்னா புதன் கிழமை வாங்க”
“”ஐயா இன்னிக்குத்தான் புதன்”
“”யோவ் அடுத்த வாரம் புதன் சொல்றேன்”.
என்ன அடுத்து செய்வதுன்னு கோபாலும், சம்பத்தும் பேசிக் கொண்டிருக்கும்போதே ஃபீல்ட் ஆபிசர் காணாமல் போய்விட்டார்.
ஒரு டீ குடித்துவிட்டு அடுத்த வங்கிக்குப் போனார்கள். இந்த வருடம் பட்ஜெட் இல்லை என்றார்கள். இன்னொரு வங்கியில் டார்கெட் முடிந்துவிட்டது. மூன்றாவது வங்கியில் நகையின் பேரில் மட்டும் தான் விவசாயக் கடன் கொடுப்போம் என்றார்கள்.
மீண்டும் அடுத்த புதன்.
அதே தேச வங்கி. அதே ஃபீல்ட் ஆபிசர்.
“”என்ன வேணும்?”
“”சார்… போன வாரம் வரச் சொன்னீங்க”
“”அதான் கேட்கிறேன் – என்ன வேணும்?”
விவரங்கள் கேட்டார். ஊர், என்ன சாகுபடி, கிணறு, பாசன வசதி, எவ்வளவு நிலம் – எல்லாம் கேட்டார். மனதில் குறித்துக் கொண்டார் போலும்.
“”வெள்ளிக்கிழமை ஊருக்கு இன்ஸ்பெக்ஷன்” என்றார்.
வரவில்லை. அலைபேசி அமர்த்தி வைக்கப்பட்டிருந்தது. கிளைத் தொலைபேசியில் தகவல் கிடைத்தது. அவர் அன்றும் மறு நாளும் விடுமுறையாம்.
திங்கள் கிழமை சம்பத்தும், கோபாலும் ஃபீல்ட் ஆபிசரை கிளையில் வந்து பார்த்தார்கள். “”மீண்டும் வெள்ளிக்கிழமை” என்றார்.
“”சார் கொஞ்சம் சீக்கிரம்”
“”என்னய்யா செய்றது. வெள்ளிக்கிழமை தான் எனக்கு ஃபீல்ட் விசிட்டுக்கு கார் அலாட்மென்ட்”
“”நாங்க வேணுமின்னா வண்டி கொண்டு வரட்டுமா?”
காத்திருந்த மாதிரியே “”சரி” என்றார்.
வந்தார். காரில் இருந்தபடியே வலம் வந்தார் ஊரை. அரசியல்வாதிகள் புண்ணியத்தால் ஊரெங்கும் சிமென்ட் சாலை. வாங்கிவைத்திருந்த குளிர் பானம் கண்டு முகம் சுளித்தார்.
பட்டா, கிராம அதிகாரியின் சான்றிதழ் எல்லாமே பார்த்ததாக பேர் பண்ணினார்.

திங்கள்கிழமை வரச் சொன்னார். அன்றே எல்லோருக்கும் சேமிப்புக் கணக்கு ஆரம்பித்து வைத்தார். பட்டா, பாஸ் புக்,போட்டோ,ரேஷன் கார்டு நகல் வாங்கி ஸ்டாம்ப் அடித்து கையெழுத்துப் போட்டார். புதன்கிழமை வரச் சொன்னார். ஒரு உதவி அலுவலரைக்
கூப்பிட்டு எல்லாருக்கும் விவசாயக் கடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவிடச் சொன்னார். எல்லாம் முடிய கோவில்பட்டியிலேயே இரவு 7 மணி. ஏதோ அரசியல் காரணமாக மினி பஸ்சும் 3 மாசமா இல்லை. கையில் காசும் இல்லாமல் பசியோடு நடந்து ஊர் திரும்பினார்கள்.
அடுத்த நாளிலிருந்து தினமும் யாராவது ஒருவர் வங்கி திறக்கும் போதே சென்று காத்திருந்து மாலையில் ஊர் திரும்புவதை வாடிக்கையாக வைத்தனர். ஒரு வாரம் சென்ற பின் ஃபீல்ட் ஆபிசர் ஒரு குண்டு போட்டார்.
“”உங்க ஊர் எங்க பாங்க் சர்வீஸ் ஏரியாவில இல்லையே”
“”யாரோட ஏரியா சார் அந்த ஊரெல்லாம்?”
வேறோரு வங்கியைச் சொன்னார். அடுத்த நாள் அங்கே படையெடுப்பு. அங்கே மேனேஜர்தான் எல்லாமே.
கொதித்து விட்டார் அந்த ஃபீல்ட் ஆபிசர். எந்தக் காலத்திலயா இருக்கான்? சர்வீஸ் ஏரியாவெல்லாம் போய் ஒரு மாமாங்கம் ஆகுது. இன்னமும் சர்வீஸ் ஏரியா சொல்லி ஏய்க்கிறானா?”
மீண்டும் தேச வங்கி. ஃபீல்ட் ஆபிசர்.
“”சரி, அப்படின்னா அந்த வங்கியிலிருந்து நோ அப்ஜெக்க்ஷன் வாங்கி வாங்க”
ஒவ்வொரு நோ அப்ஜெக்க்ஷனுக்கும் நூறு ரூபாய் கட்டினால்தான் தருவோம் என்றார். “”இதுக்கு எதுக்கு சார்?”
என்று கேட்டதற்கு அதில் அவருடைய உழைப்பும், நேரமும் செலவு ஆகிறதாம். எதுவும் சும்மா கிடைக்காதுன்னார். சம்பத்தின் தம்பி மார்வாடி கடையில் மோதிரத்தை வைத்து 1000 ரூபாய் வாங்கி வந்தான். அச்சடித்த காகிதத்தில் பெயரும் விலாசமும் எழுதி ரப்பர் ஸ்டாம்ப் போட்டு கிறுக்கலாக ஒரு சுழி. அதான் சர்டிபிகேட்.
எப்படியெல்லாம் சம்பாத்தியம்.
தேச வங்கியில் போய்க் கொடுத்தார்கள்.
அடுத்த நாள் ஆளுக்கொரு அச்சடித்த காகிதத்தில் எல்லார் பெயரும் எழுதிக் கொடுத்தார்கள். கோவில்பட்டியில் வேறெந்த வங்கியிலும் கடன் இல்லை என்று எல்லா வங்கிக் கிளையிலும் சென்று வாங்கி வர.
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்று யாரோ எழுதியதைப் படித்த நினைவு வந்தது சம்பத்திற்கு. படிக்கிற காலத்தில இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்துப் படித்திருந்தால் இந்த அலைச்சல் இல்லையே என்று புகைச்சலோடு கோபாலிடம் புலம்பினார்.
“”எங்க நயினா இன்னும் கொஞ்ச காலம் இருந்திருந்தா நானும்தான் படிச்சிருப்பேன்” என்றார் கோபால்.
கடன் வாங்கிக் திருப்பிக் கட்டாதோரிடத்தில்கூட பாங்க் அதிகாரிகள் இன்னம் மரியாதையோடு நடக்கிறார்கள்.ஆனால் கடன் வாங்கவில்லை என்று சான்று வாங்க வருபவர்களைப் பிச்சைக்காரர்கள் மாதிரி ஏன் நடத்த வேண்டும்? என சம்பத்துக்குப் புரியவே இல்லை. ஒரு நாளில் 23 பாங்க் கிளைகளில்தான் வாங்க முடிந்தது. ஒரு வாரம் இதில் ஓடியது.
திங்கள் மீண்டும் தேச வங்கி. “”புதன் வரட்டும்” என்றார். “”கண்டிப்பா கடன் கிடைச்சிரும்” என்றார்.
செவ்வாய் நல்ல மழை. பாங்கில் வெள்ளி வரச் சொன்னார்கள். ஃஃபீல்ட் ஆபிசர் இல்லை. வெள்ளிதானே கார் அலாட்மென்ட். புதன், வியாழனில் மீண்டும் மழை.
விதை வியாபாரிகள் வந்து விட்டனர். டிராக்டர் ஓட்டுபவனும் வண்டியோட வந்து விட்டான். ஓட்டச் சொல்லியும் ஆச்சு. பத்திரமில்லா கடன். ஞாயிறுக்குள் எல்லோருமே ஓர் ஓட்டு ஓட்டியும் ஆச்சு. உரக் கம்பெனியார்களே இப்பவெல்லாம் கொண்டு வந்து “குட்டி யானை’ வண்டியில் உர மூட்டையை இறக்கி விடுகிறார்கள். அவர்கள் வசதிக்காகத்தான் ஊர் முழுக்க ஒரே பயிர் போடச் சொல்கிறார்களோ?
அடுத்த வாரம் முழுவதும் பாங்கில் ஏதேதோ போக்கு காண்பித்தார்கள்.
பாங்க் கடன் வரும்போது வரட்டுமென விதையும் போட்டாச்சு. வியாபாரிகளுக்கு இதுவும் ஒரு முதலீடு. ஒரு விளைச்சல் இல்லைன்னா அடுத்ததில் முதல் கடனுக்கும் சேர்த்து வட்டியோடு வசூலித்து விடுவாங்க. ஆனா இப்ப உள்ள நிலைமையில் வியாபாரியைத் தவிர
விவசாயியை நம்பி யார் கடன் கொடுக்கிறாங்க?
மறுபடியும் தினம் யாராவது ஒருவர் பாங்க் காவலுக்கு தினம் போய் வந்தனர். இரண்டு வாரத்துக்கு அப்புறம் நிலப் பத்திரத்தை அடமானம் வைப்பதாக எழுதிக் கொடுத்தார்கள். ஸ்டாம்ப் பேப்பர், பத்திரச் செலவுன்னு பெண்டாட்டிமார் காதுல உள்ளதெல்லாம் காணாமல் போச்சு.
“”ஏக்கருக்கு 40,000 ரூபாய்னு எழுதியிருந்தாங்க அதுக்குள்ளே செலவு முடியாதுன்னு கோபால் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தார். இன்னமும் வெளியே வட்டிக்கு வாங்கினா சாக வேண்டியதுதான்னு கூட சொல்லிப் பார்த்தார். நபார்டு வங்கி நிர்ணயித்த ஒரு ஏக்கர் பருத்திச் சாகுபடிக்கு அவ்வளவுதானாம். ஒவ்வொருத்தருமே குடியானவனுக்கு விலை நிர்ணயம் பண்றானுங்கோ விதை, உரம், விளைபொருள்,கடன் வசதி,வட்டி-
“”என்ன பொழைப்புன்னு” சம்பத் குமுறிக் குமுறி டாஸ்மாக் கடையில் ரகளை பண்ணினார்.
அடுத்த நாள் வானம் பொத்துக் கொண்டது. இரண்டு நாள் வெளியே தலை காட்ட முடியவில்லை. குற்றாலத்தில் வெள்ளம்னு பேப்பரில் செய்தி போட்டார்கள். ஆனால் இங்கே பயிர்கள் தண்ணியில முங்குனதைப் போடல.
தண்ணியை வடிச்சு விட்டு, மிஞ்சினதையாவது காப்பாத்தலாம்னு முடிவு செஞ்சு பாங்குக்குப் போனார்கள். ஃபீல்டு ஆபிசர் இல்லை. ஒரு மாசம் லீவாம். வட இந்திய டூர்.
வம்படியாக மேனேஜர் அறைக்குள் நுழைந்தார்கள்.
“”நான் என்ன செய்ய பத்திரமெல்லாம் அவர்கிட்டதான் இருக்கு. ரூல்ஸ்படி அவர்தான் பொறுப்பு”
“”சார் எல்லாம் முடிச்சிட்டார். கையெழுத்துப் போட்டவுடன் பணம் பட்டுவாடாதான்னு அன்னிக்குச் சொன்னார்”
“”அவர் வந்ததுக்கப்புறம் வாங்க”ன்னு சொல்லிவிட்டு கிளைக்குள்ளே மறைந்தார்.
கிளைக்குள் இருந்த வாடிக்கையாளர் இருக்கைகளில் யாரும் யாரிடமும் பேசாமல் வெறித்துப் பார்ப்பதைத் தவிர எதுவும் செய்யத் தோன்றாமல் உட்கார்ந்தே இருந்தனர். ஒரு வங்கிக்குள் போய் உட்கார்ந்து இருந்து பார்த்தால்தான் தெரிகிறது நாட்டில் இருக்கப்பட்டோர் எவ்வளவு,வழி தெரியாது திகைப்போரும், சுற்றிச் சுற்றி வருவோரும் எவ்வளவு என.
ஊரே எதிர்பார்த்துக் காத்திருந்தது. ஏமாந்தது.
ஒரு கிழவி சொன்னாள்: “”வாங்கய்யா எல்லாரும் தாசில்தார் கிட்ட போய் மறியல் பண்ணலாம்”
“”அட சும்மா இரு கிழவி. தெனைக்கும் 2 ஊர்காரங்க வண்டியை மறிச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க. அவரு பாதையை மாத்தி போய்க்கிட்டே இருப்பாரு. ஒருத்தரையும் ஒண்ணும் பிசுக்க முடியாது”
“”இந்தாய்யா” என்று அதே கிழவி பாம்படத்தைக் கழட்டிக் கொடுத்தாள். “”இதக் கொண்டு போய் வை. வெள்ளாமைக்கு உதவாத பொருள் காதுக்கு எதுக்கு?” என்றாள். ஊர்ப் பெண்கள் காது, கழுத்துல இருந்த தங்கம் எல்லாம் அடகுக்குப் போச்சு. வெள்ளி எல்லாம் விற்பனை ஆச்சு.
அடுத்தடுத்த வேலைகள் நடந்தன. மனிதர்களை மாதிரி இயற்கை தொடர்ந்து ஏமாற்றுவதில்லை.மழையும் சரியாகப் பெய்தது.
எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்கிறது என்ற ஒரு தருணத்தில் தான் கடைசி மருந்து அடிப்பதற்கு பத்து பத்தாதற்கு லச்சுமியின் உண்டியலை உடைத்து அவள் அம்மா பணத்தை எடுத்தாள்.
“”ஏன் எம்பணத்தை எடுத்தே?”
“”நீ என்ன கொட்டை நூத்தா சம்பாதிச்சே அப்பா கொடுத்ததுதானே”
“”நான் வயல்லே பார்த்த வேலைக்கு அப்பா கொடுத்த கூலிதான் அது. எம் பணம் தான்”
வார்த்தை வளர்ந்து தடித்தது. செத்துப் போறேன்னு மகள் சொல்ல, “ஒழி, நிம்மதி’ என ஆத்தா கத்த பின் பக்கம் போய் டிமக்ரான் டப்பாவில் மிச்சமிருந்த மருந்தில் தண்ணீர் ஊத்திக் கலக்கிக் குடித்துவிட்டு பின் வாசல் வழியாகவே போய்த் திண்ணையில் உட்கார்ந்து கொண்டாள் லச்சுமி. பத்து நிமிடத்தில் வெளியே வந்த ஆத்தாக்கா லச்சுமி பக்கமாக் கூடத் திரும்பாமலேயே பக்கத்து வீட்டுக்குப் போனாள். எவ்வளவு நேரம் ஆச்சுன்னு தெரியவில்லை . டிவிஎஸ் 50 வண்டியில் வந்த லச்சுமியின் தம்பி “”ஏங்க்கா வீட்டில் விளக்கு ஏத்தலையா?” என்று கேட்டுக் கொண்டே ஸ்டாண்ட் போட்டவன் அக்கா வாயில் இருந்த நுரையைப் பார்த்து கூச்சலிட்டான்.
அதே வண்டியில் அம்மாவையும் பின்னால் உட்கார வைத்து லச்சுமியை இருவருக்கும் இடையில் பிடித்துக் கொண்டு கோவில்பட்டிக்குக் கிளம்பினார்கள். பாதித்தூரம் போற வழியிலேயே துடிப்பு நின்றுவிட்டது என உணர்ந்து ஊர் திரும்பினார்கள்.
அடுத்த நாள் மாலைதான் ஈமச் சடங்குகள் முடிந்தன.
ஊர் பூரா நாள் முழுக்க அழுதும் தீராத துக்கம்.
பத்தாம் நாள் வரைக்கும் ஊர் அடங்கியே இருந்தது. அப்புறம் ஒரு நாள் யாரோ பாங்குக்குப் போய் கடன் பற்றி விசாரித்தார். ஒவ்வொரு வாரமும் ஒரு சாக்கு, ஒரு போக்கு. கோபமாக் கேட்டபின் இந்த வருடத்திற்கான டார்கெட் முடிஞ்சிருச்சு. இன்னமே அடுத்த வருடம்தான் என்று சொல்லி விட்டார் ஃபீல்ட் ஆபிசர். வெள்ளை பேன்ட், சட்டை போட்டிருந்த ஓர் அலுவலர் மெல்ல பக்கம் வந்து, “”இந்த அதிகாரிகளுக்கு ஒரு குடும்பஸ்தனோட கஸ்டம் என்னிக்குமே தெரியறதில்லை. நீங்க மண்டல மேலாளருக்கு ஒரு புகார் அனுப்புங்க” ன்னார். கிளைக்குள்ளே போர்டில் உள்ள ஒரு விலாசத்தைக் காண்பித்தார். ஊருக்குப் போய் விவரமாக எழுதி புகார் அனுப்பினார்கள்.வந்து சேர்ந்தது என ஒரு பதில் தபால் வந்தது. அவ்வளவுதான் அது.

ஊர் பூராவும் பருத்தி அந்த வருடம் நன்றாக விளைஞ்சிருக்குன்னு பேசிக்கிட்டாங்க. ஏஜென்டுகள் வர ஆரம்பித்தனர். உரக் கடைக்காரர் ஒரு கோயம்புத்தூர் பார்ட்டியைக் கூட்டி வந்தார். வட்டிக்குக் கடன் கொடுத்தவர்கள் ஆளுக்கொரு புரோக்கருடன் வந்தனர்.
ஒரு ஞாயிறு பேப்பரில் பொருளாதாரச் செய்திகளுக்குக் கீழ் “பருத்தி இறக்குமதிக்கு அனுமதி. மத்திய அரசு ஆலோசனை’ என்று செய்தி வந்திருந்தது. அது விவசாய செய்தி இல்லையா? ஆறு மாதத்திற்கு முன்னால்தான் திடீரென ஏற்றுமதிக்கு அனுமதித்தார்கள். இப்பொழுது ஏன் இறக்குமதி என மற்ற பொருளாதாரச் சிற்றறிவு சிறிதும் இல்லாத சம்பத்தும் கோபாலும் புலம்பினார்கள். “”நமக்கு அதனாலே என்ன நயினா நஷ்டம்?” என்று கேட்ட ஊர்க்காரங்களுக்கு விளக்கினார்கள். “”இறக்குமதி பஞ்சு வந்துதுனா மில்காரங்க எல்லாம் நம்ம நாட்டுப் பஞ்சை இப்ப வாங்க மாட்டாங்க. தேங்கிப் போச்சுன்னா விலையை வியாபாரிங்க குறைப்பாங்க. வேற வழியில்லாம விவசாயிங்க கடனை
அடைக்கறதுக்காவது வித்துத்தானே ஆகணும்?”
“”நயினா நாம விக்காமலே வச்சிருந்து நல்ல விலை வந்தாத்தான் விப்போம்னு சொன்னா என்ன?”
“”அதுவரைக்கும் புவாவுக்கு என்ன பண்றது? உரக்கடைக்காரன், கடங்காரங்கள் வந்து நிப்பாங்களே”
“”இந்தப் பஞ்சை வெச்சுக்கிட்டு பாங்குலே கடன் கொடுக்க மாட்டாங்களா? இதே பஞ்சுக்கு மில்லுக்காரங்களுக்கினா கோடி ரூபாய் கூட கோடவுன்ல வச்சுக்கிட்டு பாங்குலே கடன் கொடுப்பாங்க. நமக்குக் கிடைக்காது”
“”அது எப்படி நயினா நம்மளை விட வெளிநாட்டுக்காரன் விலை கம்மியா கொடுக்கிறான்
அவன் நாட்டுலே ஏகப்பட்ட மான்யங்கள் கொடுக்கிறான். ஏற்றுமதி கப்பல் செலவைக்கூட கவர்மெண்ட்ல கொடுத்திறான்”
“”இப்ப நாமெல்லாம் என்னதான் பண்றது நாமெல்லாம் சாகணும்னுதான் அல்லாரும் நெனக்கிறாங்களா?”
கேட்கும் போதே பாதி ஊர் அழுது கொண்டிருந்தது.

இரண்டு நாள் கழித்து உள்ளூர் செய்தித் தாளில் கடன் தொல்லை தாங்காமல் கோவில்பட்டிக்கு பக்கத்தில் உள்ள இன்ன கிராமத்தில் சம்பத் என்னும் விவசாயி தற்கொலை என்ற செய்தி 3-வது பக்கத்தில் வெளி வந்தது. சமூக சேவை, மனித உரிமை அமைப்புகள் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கையை 205637 லிருந்து 205638 ஆக ஆக்கிக் கொண்டன. பாவம் லச்சுமிக்கு அந்த பாக்கியம் கூட இருந்திருக்கவில்லை.

– டிசம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *