பூக்களுக்கு வலிக்குமா? பூவையவளுக்கு வலிக்கும் என்றால் பூக்களுக்கு நிச்சயமாக வலித்திருக்கும். அவள் என்றொரு அவள் எனக்கு தோழியானவர்களில் ஒரு தோழி. குறும்புத்தனமுள்ள குழந்தைத்தனமான அவளின் வாழ்வில் முட்கள் நிறைந்திருக்கிறது. வசந்த வாழ்க்கையில் குருதி கொதிக்கும் மனநிலையோடு எவ்வாறுதான் இவ்வாறு சந்தோஷமாய் இருக்கிறாளோ?
பலரும் தங்களின் வாழ்வில் எழும் சிக்கலுக்கு தாங்களே காரணமாகி விடுகிறார்கள். அல்லது காரணத்தை உருவாக்கி சிறையாக்கி சிறைபட்டு விடுகிறார்கள். சிலரின் வாழ்க்கை வெளியுலகிற்கு தங்கம் போல ஜொலிக்கும். உண்மையில் அது பிரச்சினை பித்தளையில் பூசப்பட்ட முலாம் என்று பழகி நெருங்கினால் தான் தெரியும் . அவளும் அப்படித்தான் ஆனந்த முலாம் பூசப்பட்ட சோகப் பறவை.
ஒரு சிறிய அறிமுகத்தில் என்னோடு பழக ஆரம்பித்தவள் தான் இந்த அவள் . கள்ளம் கபடமில்லாதப் பேச்சில் ஒரு தூய நட்பு அவளிடம் கிடைத்தது. நண்பனுக்குரிய எல்லா வித அறிவுரையும் அவளிடமிருந்து கிடைத்தது. இதுவரையிலும் நேரில் சந்திக்க முடியாத அந்த தோழியுடனான நட்பு அலைப்பேசியில் தொடர்ந்தது. நன்றாகப் பக்குவப்பட்ட பெண் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால்.. அவளோடு அவ்வப்போது தங்கியிருக்கும் அந்த நபரை பற்றி கேட்க என் மனம் துடித்தது. .அந்த நபர் அவளோடு இருக்கும் போது என்னோடு அலைப்பேசியில் பேசமாட்டாள். இதுவே ஒர் உறுத்தலாக அவள் மீது கொஞ்சம் சந்தேகத்தையும் வரவழைத்தது. அந்த நபர் இல்லாதபோது ஒருநாள் கேட்டேன். வெள்ளந்தியான அவள் வெடிக்குண்டாய் சொன்னாள்.
“ அவர் என் மாமா. நான் என் மாமாவை காதலித்தேன். ஆனா கல்யாணம் பண்ணிக்க முடியல ? “
“ மாமான்னா .. உன் அம்மாவோட தம்பியா ? “
“ இல்ல காலேஜ் படிக்கும் போது பழக்கம். மாமான்னுதான் கூப்பிடுவேன். “
” சரி என்ன பிரச்சினை கல்யாணத்தில. ? “
” அவங்க வீட்டுல ஏத்துக்கமாட்டிங்கிறாங்க ? அதானால…… “
“ அதானால.. சேர்ந்து வாழறீங்களா…? பாரீன் ஸ்டைல்லா ?… ம்ம்ம் “ என்று கொஞ்சம் கலாச்சார கோபமிட்டேன். ஆனால் அவள் சொன்ன காரணமோ வேறு.
அவளின் சிறுவயதிலே தாய் இறந்துவிட்டார். தன்னையும் தன் தங்கையும் மிகுந்த சிரமத்தில் படிக்கவைத்த தந்தையும் அவளின் கல்லூரி இரண்டாமாண்டிலே இறந்துவிட.. சொந்தப் பந்தங்களின் அரவணைப்பும் இன்றி தவித்தவளுக்கு ஆதரவுக்கொடுத்துப் படிக்க வைத்தவன் தானாம் இந்த மாமா எனும் அவளின் காதலன். தங்கையும் இவளை விட்டு பிரிந்து வேறொருவரை மணந்து சென்றுவிட ஓர் அனாதை எனும் நிலைக்கு தள்ளப்பட்டவளை மேற்படிப்பும் படிக்கவைத்து, சென்னையில் பணிபுரியும் அளவிற்கு உதவி செய்த காதலந்தான், இப்போது அவளை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இருக்கிறானாம். அவ்வப்போது அவன் இருக்கும் ஊரிலிருந்து சென்னைக்கு இவளை பார்க்க வருவனாம். வந்தால் 3 நாட்கள்..சிலசமயம் 10 நாட்கள் தங்கிவிட்டு போவானாம். மேலும் அவளின் மாத சம்பளத்தில் பெருமளவு அவனுக்கு கட்டாயத்தின் பெயரில் கொடுத்தும் விடுவதாக சொல்லும் அவள்… கிட்டதட்ட தன்னை அடிமைப்படுத்தி சுகவாழ்க்கை வாழும் காதலனுடன் லிவ்விங் டு கெதர் எனும் பாணியில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறாளாம் ஒரு விதமான விரக்தி மனநிலையிலே…. !
சென்னையில் தனி வாடகை வீட்டில் அவளும் அவன் காதலனும் கணவன் மனைவிப்போல வாழ்ந்தாலும், மனைவியெனும் மரியாதைப் பெற மறுக்கப்படுகிறாள்.
” நல்லவனாக இருந்த ஒருவன். ஏன் இவ்வாறு கொடுமைக்காரனாக மாறினான்.? அவளை தன் இஷ்டத்திற்கு வளையச் சொல்வதும், அவன் இஷ்டத்திற்கு அவளை வாழச்சொல்வதும் ஒர் ஆண் மகனாகிய அந்த காதலனுக்கு அழகா.? இல்லை காதலுக்குதான் அழகா.? உண்மையில் அது காதலா ? ” என் மனதில் ஓடிய அதே எண்ணவோட்டம்தான் அவள் மனதிலும் ரணமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
“சரி பா.. அம்மா அப்பா இல்லாத உன்னை படிக்க உதவினாருன்னு சொல்ற. காதலிக்கப்பட்டவளாகவும் இருப்பதுனால … காதலுன்னு ஒரு விசயத்திற்காக அவன் பண்ற டார்ச்சரெல்லாம் நீ பொறுக்கனுமா என்ன ? அவனை விட்டு நீ விலக வேண்டியதுதானே ” நட்போடு வேதனைப்பட்டவனாக ஒருமுறை கேட்டே விட்டேன்.
“ நீங்க கேட்பதும் நியாயம்தான். நான் யார்கிட்ட பேசினாலும் இப்போ எல்லாம் சந்தேகமாகவே பார்க்கிறார்.. என் போன்ல பசங்க நம்பர் இருந்துச்சுன்னா அவங்க கிட்டலாம் இவரே போன் பண்ணி ரொம்ப அசிங்கப்படுத்தறார். இதுனாலயே என்னோடு பேஸ்புக் ப்ரெண்ட்ஸ், ஆபிஸ் ப்ரெண்ட்ஸ்ன்னு இருக்குற பசங்க யாரும் என்கிட்ட பேசமாட்டிங்கிறாங்க. எல்லாருக்கும் நான் இவருகிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறேன்னு தெரியும்.ஆனா யார் ஹெல்ப் பண்ணபோறா. ? ஹெல்ப் பண்ண வரும் ப்ரெண்ஸையும் ‘ நீ இவள கல்யாணம் பண்ணிக்கிறியா.. நான் இவளுக்கு செலவு செஞ்சிருக்கிறேன். ’ அது இதுன்னு சொல்லி அவங்களையும் அசிங்கப்படுத்தறார். ஆனாலும் இவரை விட்டு விலகி நான் பாதுகாப்பா எங்க போயி வாழ முடியும்…? சொல்லுங்க “ சொல்லுபோதே அவள் தொண்டையிலிருந்து குரல் துக்கவிசும்பலை கொடுத்தது.
” ஏன் வாழ முடியாது ? ஒரு பொண்ணு நினைச்சா என்ன வேணும்னாலும் செய்யலாம் ? “ அவளுக்கு எப்படியோ ஒரு விடுதலை சூழ்நிலை பெறவேண்டும் என்ற எண்ணத்தில் உசுப்பிவிட்டேன்.
“ சினிமாவுல கதையில இருப்பது போல உடனே எழுச்சி புரட்சி பண்றதெல்லாம் நிஜத்தில ஆகாதுங்க. குடும்பதோடு இருக்கிற பொண்ணுங்களையே கற்பழிச்சி சாக அடிக்கிற மோசமான ஆம்பிளங்க வாழுற நாட்டில.. எனக்கு இவரை விட்ட வேற என்ன பாதுகாப்பு.. ? “
“சரி.அதுக்காக அவன் பண்ற டார்ச்சர்லாம் உன்னால தாங்க முடியுதா ? “
“சத்தியமா முடியல. நானும் மத்த பொண்ணுங்க போல சுதந்திரமா இருக்கதான் ஆசைப்படுறேன். அவரும் வேற கல்யாணம் பண்ணிட்டு போனாலும் கூட போதும். நான் எப்படியாவது சமாளிச்சி சந்தோஷமா வாழ்ந்துடுவேனுங்க ஆனா எங்க.. ?இந்த மனுஷன் தானும் வாழாம … என்னையும் வாழ விடாம கொடுமை பண்ணுறார். என் நிலம தெரிஞ்சு பேஸ்புக் ப்ரெண்ட் ஒருத்தர் என்னை கல்யாணம் பண்ணிக்க வந்தார். அவரையும் ஏதோ திட்டி விரட்டி விட்டுட்டார் மாமா..? “
“ அடச்சே இவ்வளவு கொடுமை பண்றவனை இன்னும் மாமா மாமான்னு சொல்றீயே….? “ வெகுளியான அவளிடம் கோபட்டேன்.
மெளனமாக சிரித்தாள் அலைப்பேசியில்..
“ மகளிர் போலிஸ் ஸ்டேஷன்லயாவது போயி கம்ப்ளையண்ட் பண்ணுபா. நான் வேணும்னாலும் கூட வரேன். “
“ வேண்டாங்க அது ரொம்ப விபரீதம் ஆகிடும். அதான் சொன்னேன்ல உணர்ச்சி வசப்பட்டு புரட்சி பண்றது எல்லாம் கதைக்கு – டி.வி சீரியல்லா பார்க்க நல்லா இருக்கும்.. விடுங்க… உங்களுக்கும் கஷ்டம் .உங்களுக்கே ஆயிரத்தெட்டு பிரச்சினை.. என் விதி .. நடக்கிறது நடக்கட்டும்… ” அவள் அப்படி விரக்தியில் சொன்னாலும் அவள் மனதில் ஒரு திட்டம் இருந்தது என அப்போது நான் அறியவில்லை. இருந்தும், நட்புக்காக நான் எந்தவித ஆறுதலோ உதவியோ வாழ்க்கையோ அவளுக்கு கொடுக்க முடியாமல் போனது என் மனதில் காயத்தை உண்டாக்கியது.
வேலை நிமித்தமாக நானும் அவளும் அவ்வளவாக பேசிகொள்ளமுடியவிலலை. ஒரு சமயத்தில் அவளை நான் மறக்கும் அளவிற்கு என் பிரச்சினையிலே என் கவனம் சென்றுக்கொண்டிருந்தது. பல மாதங்கள் வருடங்களாகி காலச்சக்கரம் சுழன்றுகொண்டிருந்தது.
நண்பன் ஒருவன் அவனின் பிறந்தநாளை கொண்டாட ஓர் அனாதை விடுதிக்கு என்னை அழைத்தான். அவன் எப்போதும் தன் பிறந்தநாளின் போது ஏதோ ஒர் அனாதைவிடுதியில். குழந்தைகளுக்கு மூன்றுவேளையும் உணவு ஏற்பாடுசெய்துக் கொடுத்து முடிந்த அளவு பண உதவியும் செய்வது வழக்கம். என்னையும் என் பிறந்தநாளுக்கு அவ்வாறு செய்யத்தூண்டினான். இம்முறை புதியதாக உருவான அனாதை விடுதிக்கு என்னை அழைத்துச்சென்றான்.
அழகான தோட்டத்திற்கு நடுவே சின்ன சின்னதாய் சில ஒட்டுவீடுகள். சிறிய மைதானம்.
விடுதியின் வரவேற்பு அறை…!
நண்பனையும் என்னையும் வரவேற்று அமரச்செய்தார் ஒர் இளம்பெண். எங்களைப் பற்றி விசாரித்த அந்த பெண்…
”பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க சார்…. இந்த ஹோமின் ஹெட் வந்திடுவாங்க “ என்றவரிடம் நான்..
” இங்க சின்ன குழந்தைங்க மட்டும்தானே இருப்பாங்கன்னு நினைச்சோம்.. வயசானவர்களும் இருக்காங்களே “ என ஆச்சரியத்துடன் கேட்டேன்.
“ ஆமா.. சார்..! இந்த ஹோமின் ஹெட் எனக்கு தோழி. நாங்க பெஸ்ட் பார்ட்னர்ஸ். பெத்தவங்களை சுமையா நினைக்கும் சில ஜென்மங்கள் முதியோர் இல்லத்தில சேர்த்துவிடுறாங்க. அப்படி சேர்க்கப்பட்ட பெரியவங்க சிலபேர் பேரன் பேத்திஙகன்னு அன்புக்கு ஏங்குவாங்க. அதுபோல இருக்கிறவங்க யாராவது வேற முதியோர் இல்லத்திலும் இருந்தாலும் சரி.. வேற எங்கேயாவது கஷ்டப்பட்டு இருந்தாலும் சரி பார்த்து விசாரிச்சி இங்கு அழைச்சிட்டு வந்திடுவோம். அவங்களுக்கும் இங்கு இருக்கிற சின்ன சின்ன குழந்தைகளின் அன்புல, குறும்புத்தனத்துல சந்தோஷப்படுவாங்க. குழந்தைகளுக்கும் பெரியவங்களோட அன்பு கிடைக்கும். பாட்டி கதை, புராணக் கதை எல்லாம் கேட்டு ரொம்ப சந்தோஷமா இருக்காங்க சார். இதெல்லாம் என்னோட தோழியோட ஐடியாதான். “
“ ஓ நைஸ்..உங்க தோழியை உடனே பார்க்கனும் போல இருக்கே… “ அவசரப்பட்டேன். அவரசப்பட காரணம் அவள் தான். அவதான் என் தோழி. அவளும் அடிக்கடி இப்படியான ஒர் இல்லம் ஆரம்பிக்கனும்ன்னு சொல்லிட்டுதான் இருப்பா ஆனா அப்போ எல்லாம் நான் சும்மா விளையாட்டுக்கு சொல்றான்னும்.. அவளுக்கே ஆறுதல் துணை தேவைபப்டும்போது அவ எங்க பண்ணப்போறான்னும் நினைச்சேன். ஆனா.. இங்கு.. இந்த இல்லம் .. அவளா நடத்துறா. ?அதுவும் இவ்வளவு சீக்கிரத்திலயா..? கல்யாணம் ஏதாவது பண்ணினாளா? அந்த காதலன் மாமன் என்ன ஆனான். ?எப்படி இவள இந்தளவுக்கு சுதந்திரமா விட்டான்……”? ஏகப்பட்ட கேள்விகள் ஆர்வத்தின் எல்லையில் நின்று என்னை குடைந்து எடுத்தன.
;” ஹாலோ சார்.. சாரி சாரி ரொம்ப நேரம் வெயிட் பண்ண வைச்சிட்டானா..” ஒரு குரல் என் இருக்கையின் பின்புறத்திலிருந்து… என் நண்பனை நோக்கி….!
அவ குரல்தான்.. அவளே தான்…… இப்போதுதான் அவளை நான் நேரில் பார்க்கப்போகிறேன். தலையை திருப்பி பார்க்கும் அந்த வினாடி கூட என் ஆவலின் மூச்சு முட்டி மோதி திணறியது..
பார்த்தேன்.. அவளேதான்…………… “ ஹே நீயா..?…. நீ எப்படி இப்படி..?.. இங்க… ? என்னாச்சு… ? இதெல்லாம்… ? . என்ன செஞ்ச ? “
அவளை அறியவேண்டிய எல்லா கேள்வியையும் ஒருவரியில் திக்கி திக்கி வந்தது எனது ஆவலான பேச்சில்..
மெலிதாக புன்னகைத்தாள்.. “ ஆமா.. நான் தான். நானே தான். இவங்க என் ப்ரெண்ட் “ என்று முதலில் எங்களை வரவேற்ற அந்த பெண்ணை எனக்கு அறிமுகப்படுத்தினாள்.
குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் பிறந்தநாள் விருந்து அளித்தபிறகு அவளிடம் தனியாக பேசினேன். கேட்டேன். சொன்னாள்.
“ மாமாவோட டார்ச்சர் ரொம்ப அதிகமுன்னு உங்களுக்கு தெரியும். ஒரு சமயத்தில நீங்களும் என் கூட பேசாம இருந்திங்கல. அப்போதான் இந்த தோழியும் நானும் ரொம்ப கிளோஸ் ப்ரெண்ட் ஆனோம். இவங்க என் வீட்டுக்கு பக்கத்துல இருந்தாங்க. ஒருநாள் ரொம்ப விரக்தியா இருந்தப்ப இவங்ககிட்ட என் பிரச்சினைலாம் சொன்னேன். அப்போ அவங்களும் பெண் பார்க்கும் வரவங்க வரதட்சனை , பணம் வசதின்னு எதிர்பார்ப்பது இவிங்களுக்கு பிடிக்கல. அதுனாலயே ஆம்பளைங்களே வெறுக்கிற அளவுக்கு இருந்தாங்க. கல்யாணம் பண்ணாம இருந்ததுனால அவங்க வீட்டுலயும் அவங்களுக்கும் நிம்மதி இல்ல. சோ … எங்களோட நிம்மதி தேட.. எங்களுக்கான வானத்திற்கு நாங்களே விடுதலைச்சிறகு முளைக்க வச்சோம். நாங்களே சம்பாதிச்சி கொஞ்சமா கொஞ்சமா சேர்த்து வச்சி, லோன் வாங்கி உருவானதுதான் இந்த அனாதை இல்லம். ”
அவள் சொல்ல சொல்ல… எனக்குள் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி. அது என்னமாதிரியான குற்ற உணர்ச்சி என்று என்னால் ஆராயமுடியவில்லை. ஆனால் சந்தோஷப்பட்டேன். ரொம்பவும் உற்சாகமாகினேன். அவளின் இந்த பக்குவத்தில் சிலிர்த்தேன்.
நன்றாக பக்குவப்பட்ட ஒரு சுதந்திரப் பறவை தன் சிறகை லாவகமாக அசைத்து , கூடவே பல சின்ன சின்ன பறவைகளையும் .. சில அனுபவ பறவைகளையும் துணைக்கு அழைத்து எந்த கட்டுபாடும் அற்ற வானில் ஆனந்தச் சிறகடித்து பறக்கிறது அவள் என்றதொரு அவள் பறவை. !