(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வழி அனுப்ப வந்தவர்களின் கூச்சல் அடங்கி அப்போது தான் வைகை எக்ஸ்பிரஸ் கொஞ்சம் அமைதியாகி வேகம் பிடித்தது. பயணிகள் தங்களைச் சுற்றி உள்ள முகங்களை ஒரு முறை பார்த்துக் கொண்டார்கள். அவ்வளவு நேரம் இருந்த புழுக்கம் போய் முகத்தில் பட்ட காற்றை உணர்ந்து கொஞ்சம் புன்சிரிப்பை செலவு செய்தார்கள். நாலாவது பெட்டியில் நாப்பத்து ஐந்தாம் இருக்கையில் இருந்த இளவயசுக்காரன் காலை நன்றாக அகட்டியவாறு சரிந்து உட்கார்ந்து இருந்தான். கழுத்தில் ஒரு இரும்புச் சங்கிலி, கொஞ்சம் அழுக்கான டி-சர்ட், கையில் நிறைய மோதிரங்கள் என்று அவனது தோற்றம் பார்ப்பவர்களை கொஞ்சம் பயமுறுத்துவதாக இருந்தது. அவன் சுற்றி இருப்பவர்கள் யாரையும் சட்டை செய்யாமல் மேலேயே வெறித்துப் பார்த்தபடி இருந்தான். கையில் வைத்திருந்த ஃபோனில் ‘நான் யாரு எனக்கேதும் தெரியலையே’ பாட்டு அலறியது. சத்தம் தாங்காமல் பக்கத்தில் இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள், அவன் தோற்றத்தை பார்த்தால் எதுவும் சொல்ல பயமாக இருந்தது.
அந்தப் பாட்டு முடிந்தவுடன் ஃபோனை நோண்டி திரும்ப அதே பாடலை ஒலிக்க விட்டு திரும்ப வெறித்தபடி ஆனான். அவன் பக்கத்தில் இருந்த ஜன்னலோரப் பாட்டி அவனைச் சுரண்டினாள்.
“என்னா” என்றான் அவன் எரிச்சலாக.
“நான் ஹார்ட் பேஷண்ட்டுப்பா! பேஸ்மேக்கர் வச்சிருக்காங்க, இவ்வளவு சத்தமெல்லாம் என்னால தாங்க முடியாதுப்பா. கொஞ்சம் சவுண்ட கொறச்சுக்கோ” என்றாள்.
அவளை அலட்சியமாகப் பார்த்து விட்டு மறுபடியும் மேல் நோக்கி வெறிக்க ஆரம்பித்தான். அந்தப் பாட்டு நான்காவது முறையாக ஒலிக்க ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்தவங்க எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்க, ஒரு நடுத்தர வயசு மீசைக்காரர் ‘நான் சொல்றேன்’ என்பது போல கை காட்டினார்.
“தம்பி! அத கொஞ்சம் நிப்பாட்டுப்பா, கொஞ்சம் உன்கிட்ட பேசணும்” என்று ஆரம்பித்தார்.
“என்ன பேசணும் என்கிட்ட?” வேண்டுமென்றே கொஞ்சம் எரிச்சல் காட்டி பேசினான்.
“எந்த ஊருப்பா நீ?”
“மதுர”
“இப்ப மெட்ராஸ் போறியா? என்ன படிச்சிருக்க?”
“பி.எஸ்சி”
“பாத்தா ரொம்ப சோர்ந்து போய் இருக்கியே! நேத்து சரியா சாப்பிடலயோ?”
அவன் பதில் எதுவும் சொல்லவில்லை, ஆனால் முகத்தில் இறுக்கம் தளர்ந்திருந்தது.
“இதப் பாருப்பா, என்ன கவல இருந்தாலும் சாப்பிடாம இருக்கக் கூடாது. பசி வயித்த மட்டுமில்ல, மனசையும் அரிச்சிரும்” மீசைக்காரர் அமைதியாகச் சொன்னார்.
அந்தப் பையனால பொங்கி வந்தக் கண்ணீரை அடக்க முடியவில்லை.
“சாப்பிட்டியான்னு கேக்க எனக்கு யாருமில்லங்க, இப்படி யாரும் கேட்டதில்ல” குரல் உடைந்து அழ ஆரம்பித்தான். அந்தச் சூழ்நிலையே ரொம்ப நெகிழ்ந்து போய் இருந்தது.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அடுத்த வரிசைப் பெண் வேகமாக வந்து அவன் ஃபோனை பிடுங்கினாள். வேகமாக சில நம்பரை அழுத்தி விட்டு திரும்ப தன் இருக்கைக்குப் போனாள். போன வேகத்தில் அந்தப் பையனின் ஃபோன் ஒலித்தது.
“ஒனக்கு யாரும் இல்லன்னு கவலப்படாத, நான் இருக்கேண்டா” என்றாள். ஃபோனே தேவையில்லாமல் அவள் குரல் அங்கே எல்லோருக்கும் கேட்டது.
அங்கே எல்லோருமே அழுது விடுவார்கள் போல இருந்தது. மீசைக்காரர் சண்டை போட்டிருந்த தன் மனைவிக்கு ஃபோன் செய்து பேச ஆரம்பித்தார், ‘உறவு ரீதியாக சவால் விடப்பட்ட ஒருவன்’ என்று ட்விட்டரில் ஒருவர் எழுத ஆரம்பித்தார்.
அந்த ஜன்னலோரத்தில் செத்துப் போயிருந்த கிழவியை யாரும் கவனிக்கவில்லை.
– சிறுநனி சிறுகதைத் தொகுப்பு, ஜூலை 2014, வெளியீடு: Freetamilebooks.com