கடைவீதியில் நெருக்கம் அதிகமாய் இருந்தது. அவர்களைத் தட்டிவிடாத நிதானத்தை வீதியில் வைத்துக்கொண்டு ஒரு நிறுத்திடத்துக்காக ஓரங்களில் பார்வையைச் செலுத்திக்கொண்டு வந்தேன். கார் நிறுத்துவதற்கு ஓர் இடம் தேவைப்பட்டது.
இப்பொழுது இங்கு வாகனங்கள் அதிகரித்துவிட்டன. அநேகமானோர் ஒரு வாகனமேனும் வைத்திருக்கிறார்கள். பலரிடம் கார் உண்டு. பொதுவான பஸ் சேவைகள் மற்றும் வாகன வசதிகளின் சீர்குலைவு அவர்களை ஒவ்வொரு சொந்த வாகனங்களுக்கு நிர்ப்பந்திருத்திருக்கலாம். போக்குவரத்துக்காக வீதிகளில் நின்று தூங்குவதைவிட, கட்டுப்பாடியாகுமென்றால் ஒரு வாகனத்துக்குச் சொந்தக்காரனாகிவிடுவது உத்தமமானதுதானே?
எங்கள் நகரத்தில் வாகனங்களின் தொகை அதிகரித்தாலும் வீதிகள் முன்போலவே இருந்தன. அதனால் நெருக்கம் கூடியது. கடை வீதிகளைப்பற்றிச் சொல்லத்தேவையில்லை! இரண்டு சுற்று வந்தபொழுது… “அப்பாடா!” என ஓர் இடம் கிடைத்தது. வெளியேறியவனை வாழ்த்திக்கொண்டு எனது காரை உள்ளே நுழைத்தேன். இறங்கி, கதவுகள் சரியாகப் பூட்டப்பட்டதா என இன்னொருமுறை கவனித்துக்கொண்டு திரும்ப…
“அட! அவன்…!”
அவனைச் சரியாக மட்டுக்கட்ட முதலே என் கண்களை விட்டு மறைந்துபோனான். அவன் போன திசையில் வேகமாக ஓடினேன். நாலு பக்கங்களிலும் பார்த்தேன்.. ஆனால் அவனைக் காணமுடியவில்லை.
அலையலையாக அவனது நினைவுகள் என் நெஞ்சிலே மோதத்தொடங்கின. நாங்கள் பாடசாலையில் படித்த நாட்கள் முன்னுக்கு வந்தன. அப்பொழுது எனது உற்ற நண்பர்களில் ஒருவனாக அவனும் சேர்ந்திருந்தான். பிறகு நாங்கள் பள்ளிக்கூட வாழ்க்கை முடிய, ஒருவரை ஒருவர் பிரிய நேரிட்டது. துக்கமான இந்த வி~யங்களெல்லாம் மிக இயல்பாகவே நடந்து முடிந்தன. நாங்கள் வேறு வேறு உலகங்களுக்குப் போனோம். புதியவர்கள் சேர்ந்தார்கள். வாழ்க்கையின் வளங்களும் வசதிகளும் மாறின….
ஆனாலும் அந்தச் சின்னப் பராய வாழ்க்கையை என்றும் மறக்கவே முடியாது. அவ்வப்போது மனதில் வந்து தட்டிச் செல்லும் உணர்வுகளைத் தவிர்க்க முடியாது. பொறாமை சூழ்ந்த உலகத்தில் விசர்த்தனமான சனங்களைக் காண நேரிடும்போதெல்லாம், கள்ளம் கபடமில்லாத ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வாழ்ந்த பழைய நெருக்கமான வாழ்க்கை நினைவுக்கு வரும். அப்பொழுது நாங்கள் இணைபிரியா நண்பர்களாயிருந்தோம். சேர்ந்து படித்தோம். ஒன்றாகப் பாஸ் பண்ணினோம். சைக்கிள்களில் ஒன்றாக ஊரைச் சுற்றிவந்து திருக்கூத்துக்கள் (தெருக்கூத்துக்கள்) செய்தோம்! வெயிலில் அலைந்து வரும்பொழுது ஒருவனுக்கு தண்ணீர் விடாய் எடுத்தால் மற்றவன் கண்ணில் படும் தென்னையில் ஏறி இளநீர் பறித்துவருவான்…
இவன் அந்த அற்புதராசனல்லவா?
அற்புதராசன் தடித்த தளதளத்த மேனியைக் கொண்டவன். சிவப்பாக இருப்பான். பிரகாசமான கண்கள். சிரித்த முகம். ஆனால் இந்த அற்புதராசன் ஒல்லியாகவும் கறுத்துப்போனவனாகவும் இருந்தான். எனினும் அவனது சாயல் இவனிடமும் இருந்தது.
உத்தியோகம் காரணமாகத் தனித்துப்போய் வெவ்வேறு இடங்களில் இருந்த நாட்களிலெல்லாம் இடையிடையே எனது பாடசாலை நண்பர்களைப்பற்றி நினைத்திருக்கிறேன். அவர்களைத் திரும்பவும் காண முடியாதா என எண்ணியிருக்கிறேன். ஒரு சில நண்பர்களின் வீடு தேடியாவது சென்று அவர்களைக் காணவேண்டும் என்ற ஆவலும் பிறக்கும். வேலை காரணமாக வேறு இடங்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ இருப்பதாக அறியவரும். சிலரைப்பற்றிய விபரங்களே தெரியவராது.
இப்பொழுது அருமையாகக் கிடைத்த சந்தர்ப்பம் வீண் போனது என்னை நிலைகொள்ளவிடாமல் அலைத்தது. நான் கண்டது அற்புதராசன்தானா, அல்லது அவன் போன்ற சாயலில் இன்னொருவனா, அவன் என்னைக் கண்டிருப்பானா, யாரென்று நிதானிக்க முடியாமல் போயிருப்பானா… எனப் பலவாறான அலைபாயும் மனதுடன், வந்த அலுவலைக் கவனித்துக்கொண்டு சென்றேன்.
அடுத்த நாளும் ஏதோ அலுவலாக ரௌனுக்கு வரவேண்டியிருந்தது. நேற்றைய வி~யத்தை மறந்துபோயிருந்த எனக்கு அதே வீதியில் வந்து, கிட்டத்தட்ட அதே இடத்தில் காரை நிறுத்தியபொழுதுதான் மீண்டும் அந்த நினைவு வந்தது. அவனை நினைத்துக்கொண்டே இறங்க, என்ன ஆச்சரியம்! அதே கூத்து நடந்தது! கதவைக்கூடச் சரியாகப் பூட்டாமல் இறங்கி ஓடினேன். அவன் கண்களுக்குள் மண்ணைத் தூவிச் சனங்களுக்குள் மறைந்து போனான். ஆனால் இப்பொழுது ஒன்று நிச்சயமாகிவிட்டது.
அவன் எனது நண்பன் அற்புதராசன்தான்!
ஆனால் என்னைக் கண்டதும் ஏன் ஓடி மறைந்தான் என்பது புரியாமலிருந்தது. கொஞ்ச நேரம் அந்த இடத்திலேயே தலையைப் போட்டு உடைத்துக்கொண்டு நின்றேன்.
‘அற்புதன் உனக்கு என்ன நடந்தது?”
அற்புதராசன் இப்படியான சுபாவம் உடையவனல்ல. பாடசாலைக்கு எனக்கு முதலே வந்துவிட்டால் நான் வரும்வரை வாசலிலே எனக்காகக் காத்திருப்பான். நான் நேரத்துக்குப் போகும் நாட்களில் அவனைக் கவனியாது வகுப்புக்குப் போய்விட்டால் அன்ற முழுவதும் கோபம் சாதிப்பான். எப்போதும் என்னோடு சேர்ந்தே திரிவான். இவை ஒரு குறிப்புக்காகத்தான். அவனது சினேகிதத்தைப்பற்றிச் சொல்வாதானால் அவனோடு பழகிய ஒவ்வொரு நாட்களைப்பற்றியும் சொல்லலாம்.
கல்லூரி நண்பர்களில் முதலிலும் சீக்கிரமாகவம் பிரிய நேரிட்டது அற்புதராசனைத்தான். ஏ.எல். வரைதான் எங்களோடு படித்தான். நல்ல விளையாட்டுக்காரன். விiளாயட்டுக்களில் அவன் காட்டிய ஆர்வத்தைக் கல்வியில் செலுத்தவில்லை. அதனால் பரீட்சைகளைக் கோட்டை விட்டான்! வங்கியொன்றில் முகாமையாளராக இருந்த அவனது தந்தை.. வங்கியில் வெற்றிடமொன்று வர, அதில் அவனை நிரப்பிவிட்டார்.
அன்றிலிருந்து அவனை நாங்கள் பிரிந்தோம். எனினும் அவன் எங்கள் மனங்களை விட்டுப்பிரியாமல் இருந்ததற்குப் பல காரணங்கள் இருந்தன. விளையாட்டுக்களிலெல்லாம் முன்னணியிலிருந்து எங்கள் உள்ளங்களையெல்லாம் கொள்ளை கொண்டிருந்தது ஒன்று. மற்றது, இடைநேரத் தேநீர்ச் செலவுகள், சினிமா போன்றவற்றிற்கு அநேக தடவைகள் உபயகாரனாக இருந்தது. இதையெல்லாம் தவிர, அவனது கள்ளங்கபடமற்ற நட்புரிமையோடு பழகும் சுபாவம்.
அவனைப் பிரிந்த பிறகு காலப்போக்கில் இயல்பாகவே எங்கள் தொடர்புகள் விட்டுப்போனாலும், ஒருபோதும் எங்களுக்குள் பிணக்கு என்று இருந்ததில்லை… பிறகு ஏன், என்னைத் தெரியாதவன் போலப் போனான்?
அடுத்தநாள் ரௌனுக்கு வந்து, காரை மெதுவாக உருட்டியவாறு அதே வீதியில் வந்தேன். ஒருவேளை அவனைக் காணக்கூடுமோ என்ற நப்பாசைதான். இரண்டு நாட்கள் நின்றவன்… இன்று எப்படியோ என நினைத்துக்கொண்டே வந்தபொழுது…
அதோ, அற்புதராசன்!
காரிலிருந்தவாறே உரக்கச் சத்தமிட்டேன்….
‘அற்புதன்!”
காரை அப்படியே நிறுத்திவிட்டு இறங்கி ஓடினேன்… ஓடிச்சென்று அவனது கைகளிரண்டையும் பிடித்துக்கொண்டேன். அவன் அசையவில்லை. மலைத்துப்போனவன்போல நின்றான்.
‘அற்புதன்…’ என்றேன்.
அவனது கண்கள் கலங்கின. அந்தத் தடியனின் கண்ணீர் உண்மையிலேயே இந்தத் தடியானாக வளர்ந்து போயிருக்கிற எனது நெஞ்சிலிருந்தும் கண்ணீரைக் கொண்டுவந்தது.
‘என்னடா?” என்றேன்.
அவன் சிரிக்க முயன்றான். பிறகு எனது காரைத் திரும்பிப் பார்த்தான்.
‘கார் உன்னுடையதா?” என்று கேட்டான்.
‘………..”
‘வெளிநாட்டிலை எங்கையோ வேலை செய்யிறாயெண்டு கேள்விப்பட்டனான்…. ஆருக்கத் தெரியும் இப்படி இருந்தாப்போலை சந்திப்பம் எண்டு!” என்றான்.
‘அது சரி! நீ எப்படியிருக்கிறாய்? வாழ்க்கை எப்பிடிப் போகுது?… பெண்சாதி, பிள்ளையள்?” நான் அவன் நிலைமையை அறிவதில் ஆர்வம் கொண்டேன்.
‘எல்லாம் சொல்லுறன். காரைச் சரியாய்ப் பாக் பண்ணிப்போட்டு வா!”
காரை நிறுத்திவிட்டு வந்தபொழுது ‘இண்டைக்கும் உனக்கு சார்ஜ் பண்ணமாட்டன்..” என்றான்.
நான் விழிக்க… ‘பார்க்கிங் சார்ஜ்!” என்றான். அவனது கையில் ஒரு ஷரசீது| புத்தகம் இருந்தது. எனது ஆச்சரியக்குறியை உணர்ந்து, ‘இதுதான் தற்சமயம் என்ரை ஜீவனோபாயம்!” என்றான். கடைவீதியில் “பார்க்” பண்ணப்படும் கார்களுக்கு ரசீது எழுதிக்கொடுத்து ஒரு ரூபா பெற்றுக்கொள்வது அவனது வேலை. இதில் ஒரு குறிப்பிட்ட பங்கு ‘கொமிசனாக” அவனுக்குக் கிடைக்கும்.
‘என்னடாப்பா, உன்ரை பாங் வேலை என்னவாச்சு?”
அவன் தனது கதையைச் சொன்னான்: ‘மூன்று வருடங்களுக்கு முன்பு, வங்கி ஊழியர் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டதால் தனது வேலை பறிபோச்சு.. வேறை வழியில்லாமல் இப்ப இதைச் செய்யிறன்..” என்றான்.
‘எவ்வளவு காலத்துக்கு வேலை வெட்டி இல்லாமல் வீட்டிலை அடைஞ்சு கிடக்கிறது?…. பெண்சாதி பிள்ளைகளை நெடுகலும் பட்டினி போடேலுமோ?…”
எனக்குப் பேச்சு வரவில்லை. இது எனக்கு ஒருவிதமான அதிர்ச்சி. வசதியற்றவர்கள் வாழ்க்கையில் உயர்வதும், வசதியாக இருந்தவர்கள் வசதியற்றுப்போவதும் ஒன்றும் புதினமான சங்கதியல்ல. தூணிலிருப்பவன் துரும்பிலுமிருக்கலாம். ஆனால் அந் நிலைமைகளைத் தைரியத்தோடு ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மனதுக்கு வரவேண்டும்.
பாடசாலையில் படித்த நாட்களில் அற்புதராசனின் வசதி நிறைந்த சொகுசான வாழ்க்கையை நினைத்தப் பார்க்கையில் கவலை மேலிட்டது. ‘பாங்கில் உழைக்கையிக்கை ஒன்றும் சேர்த்து வைக்கயில்லையோ?” என்றேன்.
‘இந்த நாட்டிலை உத்தியோகம் பார்த்து மிச்சம் பிடிக்கலாமா?… கிட்டத்தட்ட ஒன்றரை வருசம் வேலையில்லாமல் இருந்தனான்… மனிசியின்ரை கையிலை கழுத்திலை இருந்ததையெல்லாம் வித்துத் திண்டாச்சு!”
இனி அவனிடம் எதையும் கேட்கவேண்டிய அவசியமிருக்கவில்லை. இது அவனது மனதை மாத்திரமின்றி எனது மனதையும் புண்படுத்தத் தொடங்கியது.
அன்றைய இரவு எனக்கு உறக்கம் கெட்டது. அற்புதராசனுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும். எவ்வாறான உதவி செய்வது? பண உதவி செய்வது ஓரளவுக்குக் கைகொடுப்பதாக இருக்கும். அந்த முடிவை எடுத்தபொழுது கொஞ்சம் ஆறுதல் ஏற்பட்டது. எனினும் பகலில் கண்ட அவனது தோற்றத்தை மறக்க முடியவில்லை. மெலிந்த தேகமும், வாடிய முகமும், கலங்கும் கண்களும் அவனுக்கு எப்போது இருந்தன? வாழ்க்கையில் எவ்வளது தூரம் அவன் கஷ்டப்பட்டுப்போனான் என்பதை அது அச்சொட்டாகச் சொன்னது.
நான் லீவில் நிற்கப்போவது இன்னும் இரு மாதங்களே. அதற்குள் அடிக்கடி அற்புதராசனைச் சென்று பார்த்து வந்தால் நல்லது என்று தோன்றியது. அவனோடு இயல்பாகவே கதைத்து, கஷ்ட நஷ்டங்களை அறிந்துகொள்ளக்கூடியதாயிருக்கும். நட்புரிமையோடு அவனுக்குப் பணஉதவி செய்ய விரும்புவதையும் தெரிவிக்கலாம்.
இந்த எண்ணத்தோடு ரௌனுக்குச் சென்று கடை வீதியில் அவனைக் கண்டுவந்தேன். ஆனால் இரண்டோ மூன்றோ நாட்களுக்குப் பிறகு அச் சந்திப்பைத் தொடர முடியவில்லை. ஏனெனில் என்னோடு பேசுவதற்குக்கூட அவன் கூச்சப்படுவதை உணர்ந்தேன். நான் அவனோடு நிற்கும் நேரங்களில் வாகனங்களுக்கு ரசீது எழுதிக் கொடுத்துப் பணம் பெற்றுக்கொள்ளும் வேலையையும் தவிர்த்துக்கொண்டான். இது அவனது வருமானத்தையும் பாதித்தது. எனது நண்பன் மாறிப்போயிருந்தான். அவனது முகம் முன்னரைப்போல இல்லை. அவன் இப்பொழுது வேறு ஆள்!
மற்றவர்களை அதிகமாகக் குறை சொன்னான். வேலை இல்லாமலிருந்த நாட்களில் முதலில் உதவி செய்தவர்கள் பின்னர் “குத்தல்” கதைகள் பேசியிருக்கிறார்கள். அதனால் “என்ன கஷ்டம் வந்தாலும் யாரிடமும் உதவிக்குப் போவதில்லை” என்று சொன்னான். இதனால் எனது உதவி செய்யும் திட்டத்தையும் அவனிடம் சொல்லாமல் பின்வாங்கிக் கொண்டிருந்தேன்.
அவனிடத்தில் குதூகலமும், கதைப்பதில் ஆர்வமும் இல்லை. பேசுவதைத் தவிர்த்தான். எனக்கு இது சங்கடமாக இருந்தது. எதையும் மனம்விட்டுக் கதைக்கக்கூடிய நெருக்கத்தில் இப்பொழுது நான் அவனோடு அருகில் இல்லை என்று தோன்றியது. எங்களுக்குள் ஏதோ இடைவெளி வந்துவிட்டதுபோல உணர்ந்தேன்.
இதனால், அற்புதராசானைப்பற்றி இனி யோசித்து மனதை அலட்டிக் கொள்வதில்லை என எண்ணிக்கொண்டு சந்திக்கப் போவதையும் தவிர்த்துவிட்டேன்.
சில நாட்களில் நான் அவனை மறந்துபோயிருந்தேன். அல்லது மறக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன் என்று சொல்லலாம்.
ஒருநாள் இருளப்போகிற நேரமாக எனது வீட்டு மணி மூலம் யாரோ அழைப்பு விடுத்தார்கள். வெளியே வந்து பார்த்தேன். என்ன அற்புதம்! அற்புதராசன் வந்து நின்றான்.
‘வா…! வா…! இரு…!” என்றேன்.
கதிரையில் அமர்ந்துகொள்ளாமலே, நாணிக் குறுகினான். பின்னர், ‘ஒரு நூறு ரூபா இருந்தால் எடுக்கலாமோ?” என்று கேட்டான்.
நான் ஒருவித மகிழ்ச்சிப் பரவசத்தில் உள்ளே ஓடினேன். ஐந்நூறு ரூபாயளவில் கைவசமிருந்ததை எடுத்துக்கொண்டு வந்தேன்.
ஏதோ தவறு செய்துவிட்டவனைப்போல அவன் வெளியே தோற்றமளித்துக்கொண்டு நின்றான். ‘பிள்ளையளுக்கு இண்டைக்குச் சாப்பாட்டுக்கு ஒரு வழியுமில்லை…. இருந்து யோசிச்சுப் பார்த்திட்டுத்தான் இஞ்சை வந்தனான்..” எனக்கு எந்தவித காரணமும் தேவைப்படாமலே அந்தக் காரணத்தைச் சொன்னான்.
‘இந்தா! இதை வைச்சிரு!” என ஐந்நூறு ரூபாவையும் அவனது கைக்குள் திணித்தேன்.
‘இதேன்…? நூறு ரூபா போதும்!” என ஒரு தாளை எடுத்தான்.
‘இல்லை, பிடி…! பிடி..!” என நாhன் சொல்ல அவன் பிடிக்காதவன்போல இன்னொரு தாளைப் பிடித்தான்.
‘வேண்டையுக்கை நல்லாய்த்தான் இருக்கும். பிறகு திருப்பிக் குடுக்கிற வழியையுமெல்லோ பார்க்கவேணும்..” என ஒரு செயற்கையான சிரிப்பைக் காட்டி, எனது பேச்சுக்கு இடம் வைக்காமலே… ‘அப்ப, நான் வாறன்!” எனச் சொல்லிக்கொண்டே போனான்.
இது என் மனதில் இன்னும் கிளர்ச்சியை உண்டு பண்ணியது. பரிதாபமும் கவலையும் சிறிது சந்தோஷமும் கலந்த உணர்வுகள். கவலைதான் மேலெழுந்தது.. அற்புதன் என்னிடம் ஒரு அந்நியன்போல நடந்துகொண்டது! எனினும் இதையெல்லாம் பெரிதுபடுத்துவதில்லை என்ற திடத்தையும் மனதுக்கு ஏற்படுத்திக்கொண்டேன்.
அடுத்த சில நாட்களில் ரௌனுக்குத் தேவை கருதி போகிற நேரங்களில் அவனைக் காணக்கூடியதாயிருக்கும். தேவைகள் தவிர சிலவேளைகளில் வேண்டுமென்றே போய் அவனைத் தேடிப் பார்த்திருக்கிறேன், என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும். வலிந்து போய், சும்மா சிரிப்பைக் காட்டுவேன். சிலவேளை அவன் மேலும் பணஉதவி கேட்கக்கூடும்.. கொடுக்கலாம், என்ற எதிர்பார்ப்பு என்னிடமிருக்கும். இப்படி ஒரு பத்து நாட்கள் ஓடியிருக்கும். ஆனால் நினைத்ததற்கு மாறாக விஷயம் நடக்கத் தொடங்கியது. அவன் என்னைக் கண்டதும் நழுவத் தொடங்கினான். அதன் காரணமும் எனக்குச் சுலமாகாப் புரிந்தது. பணம் வேண்டியபொழுது திரும்பத் தருவதற்கு ஒரு கிழமை தவணை சொன்னவனுக்கு கஷ்ட நிலைமையினால் அது முடியாமற்போய்விட்டது. அதனால் அவன் எனக்கு முகம் கொடுக்கக் கூச்சப்படுகிறான் என நினைத்தேன். என்னை அவன் காண விரும்பாததை உணர்ந்ததும் அவனைக் காண்பதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்று தோன்றியது. அதுதான் இப்போதைக்கு அவனுக்குச் செய்யும் உதவியாயிருக்கக்கூடும். ஆனாலும் நான் ரௌனுக்குப் போகவேண்டிய தேவைகள் இருந்தன. அநேகமாக நான் கார் நிறுத்தும் இடங்களில் அவன் நிற்பான். காரைக் கண்டதும் மறைந்துவிடுவான். காரை ரௌனுக்குள் கொண்டுவந்தால்தான் அவனைச் சுலபமாகக் காணவேண்டியிருக்கும். அவன் சங்கடத்துக்குள்ளாகின்றான். அதனால் காரை அவ்வீதிக்குக் கொண்டுபோகாமல் மிகத் தொலைவில் எங்காவது நிறுத்திவிட்டு நடையில் ரௌனுக்குள் வருவேன். நடந்து வருவதால் சனங்களுக்குள் மறைந்து போவதற்குச் சுலபமாக இருக்கும்.
ஒருநாள் காரைவிட்டு இறங்கியபொழுது அவ்வழியால் சைக்கிளில் சென்ற அற்புதனைத் தற்செயலாகக் காண நேரிட்டது. ‘பிறகு… வாறன்!” எனக் கையைக் காட்டிச் சென்றான். ஆனால் பிறகு வரவில்லை.
ஏழோ எட்டு நாட்கள் சென்ற பிறகு, சற்றும் எதிர்பாராத விதமாக அற்புதன் மீண்டும் எனது வீட்டுக்கு வந்தான். அவனைக் கண்டதுமே எனது அவசர புத்தி, ‘என்ன அற்புதன், ஏதாவது காசு தேவையோ” எனக் கேட்டுவிட்டது. பிறகுதான் இப்படிக் கேட்டிருக்கக்கூடாது. இதைக்கூட அவன் கரவாக எடுத்துவிடுவானோ என்ற பயமும், தோன்றியது. அவன் மௌனமாக நின்றான். மிகவும் முயற்சித்துப் பேச்சை வெளியே கொண்டுவந்தான்.
‘… நான் கஷ்டப்பட்டுப் போனன்தான்… ஆனால் மானம் கெட்டுப் போகவில்லை… இவ்வளவு கேவலமாய் என்னை நினைக்கக்கூடாது…. ஏலாக் கட்டத்திலை காசு கேட்டு வந்தது என்ரை குற்றம்தான்… சொன்ன நேரத்துக்கு எனக்கு வசதிப்படாமல் போச்சு… எனக்குப் பயந்து காரைக்கூட எங்கையோ விட்டுவிட்டு, ஒளிச்சு ஒளிச்சுக் கடைகளுக்கு வந்து போனதெல்லாம் எனக்குத் தெரியும்… என் இன்னும் காசு கேட்டிடுவன் என்ற பயமோ…? இந்தா உன்ரை காசு!”
நான் பேச்சற்றவனாய் அதிர்ந்துபோய் நிற்க இருநூறு ரூபாய்த் தாள்கள் என் முன்னே விழுந்தன.
– சிரித்திரன் 1985.