(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காலை -“குளுகுளு” என்று சீதந் ததும்பும் காலை. அந்தக் காலையின் சௌந்தர்ய சிகரம்தான் அதோ விளங்கும் தாமரைத் தடா கம். ஆழ்ந்த தபஸ்வியின் ஞான விளக்கம் போல் தெளிந்திருந்தது அதன் ஜலம்.
அதில் ஒரு மலர் – தாமரை மலர் – மொட்டுவிடும் போது, இன்று மலர்ச்சிரிப்பு. அதன் ஹிருதயத்திலே ஊறியிருக்கிறது. ஆனால் மலரவில்லை. ஏன்?
அதோ! ஓய்வின் முழுப் பொலிவுடனே ஆதவன் வருகிறான். அவன் எழுச்சிதான் உலகின் எழுச்சி. ஏன், அதுதான் அந்த மலரிதய அரிப்பையுந் தூண்டுகிறது. அவன் கதிர்க் கரங்களின் அணைப்பிலே அந்தப் போது மலராக விரிகிறது. தந்தையின் அணைப்பிலே மகனறிவு விரிவது போல.
அந்த மலருக்கு அவன், தந்தை – பொலிவு தரும் தந்தை. அதோ மலர்.
நீரின் மேற்பரப்பிலே அழகுத் தெய்வமாகப் பொலிகிறது. கன்னிப் பெண்ணின் எழின் முறுக்கை யொத்து.
நீண்டு வளர்ந்த தண்டொன்றின் நுனியிலே கம்பீரமாகக் கொலுவிருந்து, தென்றலின் அசைப்பிலே அசைந்தாடுகிறது. தாளவொழுங்கற்ற நடனத்தைப் போல.
அந்தத் தண்ணிய நீர் அதைத் தாங்குகிறது; வளர்க்கிறது; எழிலுறுத்துகிறது; தாயின் அணைப்பிலே வாழும் இளங்குழவி போல.
நீர் அதன் தாய் – உயிர் மூச்சளிக்குந் தாய். ஐயோ! அதைச் சொல்லவா! அழகு கொளிக்கும் அந்த மலருக்கும் இன்றுதான் முடிவு நாளோ? பாவம்! தண்ணீர் சலசலக்கிறது. ஒரு சிறுவன் நீந்திச் செல்கிறான். அந்த மலரை நோக்கி அடுத்தகணம்….. பூ கொய்யப்பட்டது. ஜலத்தில் தண்டு துடிதுடிக்கிறது. தலைபோன உடலைப் போல, பூ கரையிலே கிடக்கிறது, சாவின் சோர்வுடனே. அது தன் ஏக்கம் நிறைந்த கண்களை வீசி வாய்விட்டுச் சொல்கிறது:
“ஆம், இனி என் வாழ்நாள் முடிந்தது. எனக்குத் தந்தையான சூரியனே இனி என்னைத் தகிப்பான். எனக்குத் தாயான தண்ணீரே என் உடலை – தண்டை அழுகச் செய்வாள். அவரவர் நிலைகெட்டு விட்டால் தாழ்வடைவதுடன் பல இன்னல்களையும் அனுபவிக்க நேரிடும். இது இயற்கை நியதி. இதற்கு நானே சாட்சி”
அடுத்த கணம் ஒரு வேதனைத் தீண்டல்.
மலரைக் காணவில்லை.
– மறுமலர்ச்சி வைகாசி, ஆனி 1947.
– மறுமலர்ச்சிக்கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1997, ஈழத்து இலக்கியப் புனைகதைத் துறையின் மறுமலர்ச்சிக் காலகட்டத்துச் சிறுகதைகள் இருபத்தியைந்து 1946 – 1948, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான் சு. குணராசா, வெளியீடு: கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அனமச்சு, திருகோணமலை.
– ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.