கதை-1 அலைபாயும் ஆவி
அங்கும் இங்கும் அலைபாய்ந்து ஓடிக்கொண்டிருந்த “ஆவியிடம்” பக்கத்து ஆவி கேட்டது ஏன் இப்படி அலை பாய்ந்துகொண்டிருக்கிறாய்.?
நான் பிறக்கும் போது குழந்தையில் இருந்த உருவம் பெயர் தெரியாத நோயில் விழுந்து முப்பது வருடங்கள் ஆடாமல் அசையாமல் படுத்து கிடந்தது, அங்கிருந்து வெளியேறிய நான் அத்தனை வருட ஏக்கங்களை இப்பொழுது தீர்த்துக்கொள்கிறேன்.
கதை-2 (கருத்து ஒன்று கதை இரண்டு) அம்மா
பழைய பொருட்கள் “ஏலம் நிகழ்ச்சி” ஏலம் கூறுபவர் கூடியிருப்போரை பார்த்து இங்கு இருக்கும் ஒரு மிக பழைமயான பொருள் ஏலத்திற்கு வந்துள்ளது, அது உயிருள்ள பொருள், இத்தனை வருடங்களாக பணி செய்து கொண்டிருந்தது. இப்பொழுது அதனை விற்பதற்கு அங்குள்ளவர்கள் முன்வந்துள்ளார்கள்.
அந்த பொருள் என்ன? கூட்டத்தில் இருந்து கேள்வி
பொறுங்கள், முதலில் புகைப்படம் காட்டுகிறோம். காட்டுகிறார், “ஒரு வயதான அம்மா”
பார்த்தவுடன் கூட்டத்திலிருந்து ஒருவன் ஓடி முன்னே வருகிறான் “ஐயோ அது என் அம்மா”
அவர் பழைய பொருட்களை விரும்பி வாங்குபவர், அவர் பங்களா முழுக்க அருங்காட்சி பொருடகளாய் நிறைத்து வைத்திருந்தார். பார்க்க வந்த நண்பர் ஒருவர் கேட்டார்
இவ்வளவு கலையார்வம் கொண்டவர்களாய் இருக்கிறீர்களே, உங்கள் பெற்றோருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும், எங்கே அவர்கள்?
அவர் பவ்யமாய் சொன்னார் அவர்களை காப்பகத்தில் விட்டு வைத்திருக்கிறேன்.
சே.. என்ற எண்ணம் உங்கள் மனதில் வந்தால் நான் பொறுப்பல்ல (எங்கோ படித்தது)
கதை-3 பலவீனம் (எங்கோ படித்தது)
மிகப்பெரிய ஆராய்ச்சியாளர், சப்ஜெக்டில் புலி, அவருக்கே ஒரு சந்தேகம், அதனை தெரிந்து கொள்ள ஒரே ஒருவர்தான் இருக்கிறார். ஆனால் ஒரு சிக்கல், அவரிடம் ஒரே கேள்விதான் கேட்க வேண்டும்.அதற்கு மேல் பதில் சொல்ல மாட்டார்.
ஆராய்ச்சியாளர் அந்த நபரை சந்தித்தார். அவரோ பேரழகியாக இருந்தார். சீக்கிரம் ஒரே கேள்விதான் கேளுங்கள் அவர் வற்புறுத்த இவர் கேட்ட கேள்வி “இவ்வளவு அழகா இருக்கீங்களே எப்படி? (எங்கோ படித்தது)
கதை-4 இருப்பிடவாசி
மலை உச்சியை நோக்கி நடந்து கொண்டிருந்த குழுவில் அனைவரும் இளைஞர்களாய் இருந்தனர். அவர்கள் நடுவே கொஞ்சம் வயதானவர் ஒருவர் இருந்தார். அவரை இவர்கள் பயமுறுத்தினர், ஐயா இது மிகவும் செங்குத்தான பாதை, உங்களால் முடியாது.
அவர் அமைதியாய் புன்முறுவல் செய்தார்.
கிளம்பிய சில மணி நேரத்தில் ஒவ்வொருவராய் மலை மீது ஏற முடியாமல் ஒவ்வொரு இடத்தில் தங்கி விட்டனர்.
கடைசியாய் மலை உச்சிக்கு போய் சேர்ந்த பெரியவர், திரும்பி பார்த்தார், யாராவது வந்தால் தன் வீட்டுக்கு கூட்டி சென்று உபசரிக்கலாம் என்று !
கதை-5 திருட்டு
கிட்டத்தட்ட ஒரு மாதமாய் அந்த வீட்டை நோட்டம் விட்டு இன்று இரவு புகுந்து விடுவது என்று முடிவு செய்து விட்டான் திருடன் முனுசாமி. நேற்று இரவு கூட உளவாளி காய் விற்பவனிடம் விசாரித்ததில், ஒரு அம்மா மட்டும் இருக்கு, அவங்க வீட்டுக்காரர் வெளியூருக்கு ட்ரான்ஸ்பர் ஆகி ஒரு மாசம் ஆச்சாம், சரி நாளைக்கு இராத்திரி அங்க போறேன் நீ அந்த பக்கம் சுத்தாதே, சந்தேகம் வந்தா உன்னையும் விசாரிக்கும் போலீசு.
சொன்னது போல அந்த வீட்டில் கன்னம் வைத்து உள்ளே நுழைந்தவன் அதிர்ச்சியாகி விட்டான். பகலில் வீட்டை காலி செய்து போயிருக்கிறார்கள்.
கதை-6 சந்தேகமே வாழ்க்கை
திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது, கணவன் மனைவி இருவர் உட்கார்ந்திருக்கிறார்கள், கணவன் கேட்கிறான், பாலை காய்ச்சி மூடி வச்சியா? திரைப்படத்தில் உற்சாகமாய் இருந்த மனைவிக்கு எரிச்சல், அதெல்லாம் வச்சாச்சு, கேஸ் அணைச்சி வச்சியா? முறைத்தாள் அதெல்லாம் வச்சாச்சு, பக்கத்து வீட்டுல வந்துருவோம்னு சொன்னியா? கடுமையான கோபம் அவளுக்கு, அதெல்லாம் சொல்லியாச்சு, சரி வரும்போது வீட்டை பூட்ட சொன்னேனே? பூட்டிட்டிங்களா?
தன் சட்டைப்பை, பேண்ட் பாக்கெட்டை தடவி பார்த்து ஐயோ வீட்டை பூட்டாம வந்துட்டேன், அலறினான் கணவன். (இது எங்கோ படித்தது)
கதை-7 ஓட்டம்
அது உலக அளவில் நடக்கும் தடகள போட்டி, வீர்ர்கள் ஓடுவதற்கு தயாராய் இருக்கிறார்கள். கணேசின் உடல் பரபரப்பாய் இருந்தது. அவன்தான் வெற்றி பெறுவான், இருந்தாலும்…போட்டி கடுமையாய் இருந்தது. நேற்று காலை “கோச்” எதையோ கொடுத்தார், அதை சாப்பிட்டபின், உடலில் ஒரு புத்துணர்ச்சி பரவியது.
ஒன்..டூ..திரீ……குண்டு வெடிக்க சிட்டென பறந்தார்கள் வீர்ர்கள், எல்லையை நெருங்குமுன் கணேசுக்குள் மின்னல். வெற்றி பெற்றவுடன் சிறு நீர் பரிசோதனை செய்தால்? வாழ்க்கை அவ்வளவுதான். சட்டென வேகம் குறைய பின் வந்தவன் முந்தினான்.
கணேஷ் இரண்டாமிடம்தான். கோச் திட்டினார். ஒரு வாரத்தில் முதலிடம் வந்தவனிடம் சிறு நீர் பரிசோதனை செய்ததில் “பாசிட்டிவ்” வர இரண்டாமிடம் வந்த கணேஷ் வெற்றி பெற்றவனாக அறிவிக்கப்பட்டான்..
கதை-8 மனைவிகையால் (எப்பொழுதோ படித்தது)
அது என்ன சார் உங்க ஓட்டல்ல மட்டும் டிபனாகட்டும், சாப்பாடாகட்டும், அவ்வளவு டேஸ்டா இருக்கு? கஸ்டமரின் கேள்விக்கு புன்னகையுடன் எங்க கடையில சாமாச்சு ஐயர்தான் இதுக்கெல்லாம் காரணம்.
சாமாச்சுஐயரின் காதுக்கு இந்த புகழ்ச்சி போனாலும், வழக்கம் போல அவர்
சட்டை செய்யாமல் தன் வேலையை பார்த்தார்.
டூட்டி நேரம் முடிந்து வேகவேகமாய் தனது வீட்டை நோக்கி நடந்தவர், வீட்டுக்குள் நுழைந்தவுடன் கை காலை கழுவிக்கொண்டு, “பசிக்குது அம்முலு” சீக்கிரம் சாப்பாடு போடு.
சாப்பிட்டு முடித்தவுடன் “என்னதான் சொல்லு” உன் கை பக்குவமே பக்குவம்தான் தன்னை மறந்து பாராட்டிக்கொண்டிருந்தார்.
கதை-9 நம்பிக்கை (இவை இரண்டும் எங்கோ படித்தது)
ஆளை விரைக்க வைக்கும் குளிர், நல்ல இருட்டு ஒருவன் மலை உச்சியில் இருந்து கயிற்றின் வழியாக இறங்கிக்கொண்டிருந்தான். கடுமையான பனியினாலும், கயிற்றை பிடித்து இறங்கியதாலும் களைத்து போனவன் ஒரு கட்டத்தில் இனி ஒரு நிமிடம் கூட கயிற்றை பிடித்து இறங்க முடியாது என்னும் நிலைமைக்கு வந்து விட்டான். “கடவுளே காப்பாற்று” உரக்க வேண்டினான். அப்பொழுது சட்டென்று காதோரம் ஒரு குரல் கயிற்றை விட்டு குதித்து விடு.
ஐயோ கயிற்றை விட்டு விடுவதா? கீழே குனிந்து பார்த்தான் எங்கும் கும்மிருட்டு
விழுந்தால் ஒரு எலும்பு கூட மிஞ்சாது, கயிற்றை விடவில்லை. இப்படியே குளிரில் விறைத்துப்போனான்.
விடிந்தது, அவன் விரைத்து தொங்கிக்கொண்டிருந்த இடத்திற்கும் தரைக்கும் இரண்டடிதான் இருந்தது.
ஒருவன் கடவுளே எப்பொழுதும் என்னுடன் இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டான். கடவுளும் அப்படியே என்றார். எப்படி தெரிந்து கொள்வது, நீ என்னுடன் இருக்கிறாய் என்று? கீழே குனிந்து பார்த்தால் என்னுடைய காலடித்தடம் உன் கண்களுக்கு புலப்படும்.
இப்படியே நாட்கள் ஓடியது. அவன் சந்தர்ப்ப வசத்தால் மிகுந்த துன்பப்பட்டான். படாதபாடெல்லாம் பட்டு விட்டான். கடவுள் என்னுடன் இருக்கிறாரா? குனிந்து பார்த்தான், ஒரு ஜோடி காலடி மட்டும் தான் தெரிந்தது. கடவுள் என் துன்பத்தை கண்டு ஓடி விட்டார். கோபத்துடன் கடவுளை இகழ்ந்தான்.
காலப்போக்கில் துன்பங்கள் கரைந்து விட்டன. இப்பொழுது குனிந்து பார்க்க நான்கு காலடித்தடங்கள் தெரிந்தன.
கோபத்துடன் சண்டையிட்டான் என்ன கடவுள் நீ துன்பம் வரும்பொழுது ஓடி விடுகிறாய்? உன்னுடைய காலடித்தடமே இதுவரை காணவில்லை.
கடவுள் சிரித்து கொண்டே சொன்னார். நன்றாக உற்றுப்பார்த்தாயா? நீ துன்பப்பட்ட காலங்களில் தெரிந்த காலடித்தடம் என்னுடையது. நீ மனம் விட்டு விட்டாய். உன்னை தோளில் தூக்கி சுமந்தது நடந்தது நான்தான்.. இப்பொழுது உன்னை இறக்கி விட்டு விட்டதால் நான்கு காலடி தடங்கள் தெரிகின்றன.
கதை-10 கருத்து ஒன்று கதை இரண்டு
கறார் பழனியப்பன்
பத்தே பத்து வீட்டிற்கு பால் ஊற்றிக்கொண்டிருந்தார் பழனியப்பன். பால் எந்த கலப்படமில்லாமல் ஓரளவிற்கு நன்றாக இருந்தது.
எப்பொழுதும் பழனியப்பனிடம் பால் வாங்கும் ராமசாமி பழனியப்பனை நிறுத்தி அப்பா எங்க பக்கத்துல இருக்கறவங்க நாலு பேரு உங்கிட்டே பால் வேணுங்கிறாங்க, என்ன சொல்றே?
மன்னிச்சுங்குங்க இவ்வளவு பேருக்கு மட்டுமே என்னால பால் ஊற்ற முடியும், கராறாய் சொல்லி விட்டு சென்று விட்டார் பழனியப்பன். ராமசாமிக்கு வருத்தமாகி விட்டது. அதிலிருந்து அவருடன் பேசுவதில்லை.
ஒரு நாள் பழனியப்பன் ராமசாமியிடம் ஐயா என் மேலே கோபம் உங்களுக்கு,பரவாயில்லை, இப்ப எங்க வீட்டுல மூணு மாடுகதான் கறக்குது. அதை வச்சு
கொஞ்சமா தண்ணி கலந்து வேற எதுவும் கலக்காம பத்து வீட்டுக்குத்தான் கொடுக்க முடியும். இப்ப நீங்க சொல்றீங்கன்னு இன்னும் இரண்டு வீட்டுக்கு எச்சா கொடுக்க ஆரம்பிச்சா கண்டிப்பா தண்ணியோ,மத்த எதுவோ கலக்காம முடியாது. அது என் மனசாட்சிக்கு ஒத்துக்காது.
ராமசாமிக்கு பழனியப்பனின் உள்ளம் புரிந்தது.
கறார் டாக்டர்
அந்த டாக்டர் மிகவும் பொறுமைசாலி. அவரிடம் செல்லும் நோயாளியை தீர பரிசோதித்து மருத்துவம் பார்ப்பார். ஆனால் அவரிடம் ஒரு பழக்கம் உண்டு. ஒரு நாளைக்கு இவ்வளவு நோயாளிகள்தான் என்பதில் கண்ணாய் இருப்பார். அதற்கு மேல் வந்தால் அவசர கேஸ்களை தவிர மற்றவர்களை மறு நாள் வர சொல்லி விடுவார்.
இதனால் அவரிடம் மருத்துவம் பார்க்கும் நோயாளிகள் சிலருக்கு அவர்மேல் வருத்தம். ஒரு முறை நான்கைந்து நோயாளிகள் சேர்ந்து அவரிடம் குறைப்பட்டு கொண்டனர்.
அவர் சிரித்துக்கொண்டே நீங்கள் குறை சொல்வது வாஸ்தவம்தான், ஆனால் என்னிடம் ஒரு பழக்கம் உண்டு, நோயாளியை தீர பரிசோதித்து அதன் பின்னரே மருந்து கொடுப்பது வழக்கம், அதனால் ஒவ்வொரு நோயாளிக்கும் பத்து நிமிடம் கணக்கு எடுத்துக்கொண்டே நோயாளிகளை பார்க்கிறேன்.
நீங்கள் சொல்வதால் என்னுடைய பணிக்கு மீறி நோயாளிகளை பார்க்க ஆரம்பித்தால் கண்டிப்பாக என்னால் நோயாளிகளை சரிவர் பார்க்க முடியாது. காரணம் எண்ணிக்கையை எப்படி குறைக்கலாம் என்றே வேக வேகமாக செயல்படுவேன் என்ன சொல்கிறீர்கள்?
உண்மைதான் ஒத்துக்கொண்டார்கள் அவரிடம் வரும் நோயாளிகள்.