நான்தான் அடுத்த கணவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 15, 2024
பார்வையிட்டோர்: 344 
 

’பத்மப்ரியாவிடமிருந்து கடிதம் வந்திருந்தது. என் உடம்பு முழுக்க இருதயமாகித் துடித்தது. உருண்டை உருண்டையான எழுத்து. நான் டெல்லி சிறையிலிருந்து மீண்டு கனடா திரும்பி ஒரு வருடம் ஆகியிருக்கும். எப்படியோ என்னுடைய முகவரியை தேடிக் கண்டுபிடித்து எழுதியிருக்கிறாள். இது எப்படி சாத்தியமானது? ஐயா, என்னால் நம்பவே முடியவில்லை. என்னை அப்படிப் பார்க்க வேண்டாம். அப்படிப் பார்க்க வேண்டாம். நான் ஆரம்பத்திலிருந்தே சொல்கிறேன்.’

‘நான் பிறந்தது யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு சின்ன ஊர். 1990ம் வருடம் எனக்கு 18 வயது தொடங்கியபோது அப்பா என்னை வெளிநாட்டுக்கு அனுப்பத் தீர்மானித்தார். எங்கள் ஊர் ஏஜண்டைப் பிடித்து பணம் கொடுத்து என்னை எப்படியும் கனடாவுக்கு அனுப்பிவிடும்படி சொன்னார். எங்கள் கிராமத்திலிருந்து ஏற்கனவே பலர் அங்கே போயிருந்தார்கள். இந்த ஏஜண்ட்தான் அவர்களை அனுப்பியவர் என்பதால் அவருக்கு நல்ல பெயர் இருந்தது. ஏஜண்ட் என்னை சென்னைக்கு அனுப்பி அங்கே ஒரு வீட்டில் தங்கவைத்தார். அங்கிருந்து பம்பாய் போய். கியூபா, அமெரிக்கா வழியாக கனடா போவதுதான் திட்டம்.

சென்னையில் என்னை தங்க வைத்ததுதான் பிரச்சினை. அந்த வீட்டுக்கார அம்மாவுக்கு 16 வயது மகள் ஒருத்தி இருந்தாள். பெயர் பத்மப்ரியா. அந்தப் பெயரைக் கேட்டவுடன் உங்கள் மனதில் ஓர் உருவம் தோன்றுமே, அதுதான் அவள். டிவி விளம்பரங்களில் வரும் பெண்களை அவள் அழகு சாதாரணமாக்கிவிடும். மலிவு ஆடையிலும் பேரழகியாய் தெரிவாள். தான் அழகு என்று தெரிந்த பெண் காட்டும் ஒயில் அவளிடமிருந்தது. நகைகள் அணியமாட்டாள். அவளுடைய ஒவ்வொரு அங்கமும் ஒரு நகைபோலத்தான். அபூர்வமாக அவள் சிரிக்கும்போது உங்கள் மனம் உங்களையே மறந்துவிடும்.

ஆனால் நான் காதலிக்க முடிவு செய்த சில நிமிடங்களிலேயே இடி விழுந்தது. அவளுக்கு ஒரு காதலன் இருந்தான். பெயர் அபி. சினிமாவில் ஒளிப்பதிவாளருக்கு உதவியாளாக இருந்தான். சினிமா பிரபலங்களை எல்லாம் அவனுக்கு தெரியும். அவளை வைத்து முதலில் விளம்பரப் படம் எடுப்பான். பின்னர் அவள் சினிமாவில் கதாநாயகியாவாள். அவனே படத்தை இயக்குவான். இப்படி எல்லாம் ஆசை காட்டினான். அடிக்கடி வீட்டுக்கு வந்து அவளைச் சந்தித்தான். அவளுடைய அம்மாவுக்கும் பரிபூரண சம்மதம். இந்த நிலைமையில் கனடாவுக்கு அகதியாக கள்ள பாஸ்போர்ட்டில் போகத் திட்டமிடும் ஒருவன் எப்படி அந்த பெண்ணின் மனதில் இடம் பிடிப்பது? அவர்களை ஒன்றாகப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு எரிச்சல் எரிச்சலாக வரும். என்னுடன் ஒரு வார்த்தை அவள் பேசினால் அன்று முழுக்க அந்த வார்த்தையை நினைத்தபடியே நாளைக் கழிப்பேன்.

அந்த வீட்டில் நான் இரண்டு மாதம் தங்கினேன். அவளைத் தினமும் பார்க்கவும் அவளுடன் பேசவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒளிப்பதிவாளரின் உதவியாளர் பாவம் வாரத்தில் மூன்று நாட்கள்தான் வருவார். நானோ ஏழு நாட்கள் 24 மணிநேரம் அங்கேயே கிடந்தேன். எனக்கு அது பெரிய அனுகூலம். நான் கனடா போகிறேன், அங்கே விரைவில் எஞ்சினியர் ஆவேன். வசதியான வாழ்வு கிடைக்கும். உலகத்தின் பல இடங்களுக்கும் சுற்றுலா போகலாம் என்றெல்லாம் பேசினேன். அவள் மனதில் முதலாவது இடத்தில் அபியும் இரண்டாவது இடத்தில் நானும் இருந்தோம். அப்படி அவள்தான் சொன்னாள்.

நான் கடவுளிடம் தினம் வேண்டியதற்கு ஒரு பலன் கிடைத்தது. ஒருநாள் அபிக்கும் அவளுக்குமிடையில் பெரும் சண்டை மூண்டது. அவன் கோபித்துக்கொண்டு ஸ்கூட்டரை உதைத்துக் கிளப்பி போய்விட்டான். மூன்று நாள் அவள் தொடர்ந்து அழுதாள். நாலாவது நாள் என்னுடன் சிரித்துப் பேசினாள். ’நான் உன்னை மணமுடிப்பேன். உலகத்து காதலர்கள் எல்லாம் பொறாமைப்படும்படி நாங்கள் வாழலாம்’ என்றெல்லாம் சொன்னேன். ’எப்பொழுது நான் கனடா வரலாம்?’ என்றாள். ’நான் அங்கே போய் எஞ்சினியராகிவிடுவேன். விசா கிடைத்ததும் உம்மைக் கூட்டிப்போவேன். நாயகரா நீர் வீழ்ச்சிக்கு கிட்டவாக நாங்கள் பெரிய வீடு எடுத்து வாழலாம்’ என்றேன். அவள் ’அப்படியா, எனக்கு நீர் வீழ்ச்சி பிடிக்கும். குற்றாலம் அருவியிலே குளித்திருக்கிறேன்’ என்றாள். நான் ’நாங்கள் நயாகரா போய் அடிக்கடி குளிக்கலாம்’ என்று சொன்னதும் சம்மதம் சொன்னாள்.

’இதையெல்லாம் எதற்கு என்னிடம் சொல்கிறீர்?’

’கேளுங்கள் ஐயா. நீங்கள் என் முதலாளி. பத்மப்ரியாவின் தாயாருக்கு கனடா மாப்பிள்ளை கிடைப்பதில் பெருமைதான். ஆனால் நான் என் பெற்றோருக்கு இது பற்றி ஒன்றுமே அறிவிக்கவில்லை. லண்டனில் இருந்த என் அண்ணருக்கு மாத்திரம் சொன்னேன். நான் என்ன கேட்டாலும் அவர் செய்வார். என்னிலே அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். ‘அண்ணை, இந்தப் பெண் மட்டும் எனக்கு கிடைத்தால் வாழ்க்கையில் உள்ள சகல ஐஸ்வரியங்களும் கிடைப்பதற்கு சமம். நீ அவளை பார்க்கவேண்டும். பேரழகி’ என்றேன். ’சரி, அவசரப் படாதே நான் வந்து கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்’ என்றார். அதுதான் என் அண்ணர். தங்கக் கட்டி. நான் கேட்டதை அவர் மறுத்ததே கிடையாது.

அடுத்த வாரம் கோயிலில் கல்யாணம் என்று ஏற்பாடு. அண்ணர் மறுநாள் காலை சென்னை வருகிறார். முதல்நாள் இரவு அபி அவளை ஸ்கூட்டரில் கடத்திக்கொண்டு போய்விட்டான். அவள் ஒரு கடிதம்கூட எனக்கு எழுதி வைக்கவில்லை. அவர்கள் வேறு கோயிலில் அதே முகூர்த்தத்தில் மணமுடித்துவிட்டதாக செய்திகள் வந்தன. அண்ணர் வந்து எனக்கு ஆறுதல் கூறினார். ’இப்படியான பெண் உனக்கு கிடைக்காமல் போனது நல்லதுதான். இவள் மோசமானவள். உன்னை இப்படி அவமானப்படுத்தியவளை மறந்துவிடு.’

நான் கனடாவுக்கு வந்து அகதியாகப் பதிவு செய்தேன். அட்லாண்டிக் சமுத்திரத்தை தாண்டி வந்தாலும் அவளை என்னால் மறக்க முடியவில்லை. நான் நினைத்த மாதிரி எஞ்சினயரிங் படிப்பு அவ்வளவு இலகுவானதில்லை. ஒருவித திறமையும் தேவைப்படாத பலவித வேலைகள் செய்தேன். உணவகங்களில் கோப்பை கழுவுதல். துப்புரவுப் பணி. சில சமயம் தொழில்சாலையில் நாள்கூலி வேலை. காதலில் தோல்வி. படிப்பில் தோல்வி. வேலையில் தோல்வி. ஆனால் மிகப் பெரிய வெற்றி ஒன்று கிட்டியது. கனடியக் குடியுரிமை.

இந்த நாலு வருடங்களில் ஒருநாள்கூட நான் அவளை மறந்தது கிடையாது. என்னுடைய பெற்றோர்களை மறந்துவிட்டேன். அண்ணரை வாரத்தில் ஒருதடவை நினைப்பேன். ஆனால் இந்தப் பெண்ணை ஒவ்வொரு நிமிடமும் நினைத்தேன். என்னாலேயே இதை நம்ப முடியவில்லை. இவள் யார்? என்னை எமாற்றியவள். இவளை ஏன் நான் நினைக்கவேண்டும். கனடிய பாஸ்போர்ட் கையில் கிடைத்த அன்று அதை முத்தமிட்டேன். நான் அகதி இல்லை. எனக்கு ஒரு நாடு கிடைத்துவிட்டது. நாலு வருடங்களாக திட்டமிட்டதை செய்தேன். சென்னைக்கு போகும் விமானத்தில் ஏறினேன். சென்னை வந்து இறங்கிய பின்னர்தான் அண்ணருக்கு அறிவித்தேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை.

நான் கேள்விப்பட்டது சரிதான். அவளுக்கும் அபிக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. அவள் ஒரு விளம்பரக் கம்பனியில் வேலை செய்தாள். நான் அவளை வீட்டிலே பார்க்கப் போனபோது ஒன்றுமே நடக்காததுபோல தாயும் மகளும் என்னை அன்பாக வரவேற்றார்கள். முதல் கேள்வியாக நான் கனேடியன் ஆகிவிட்டேனா என்று கேட்டாள். நான் ஓம் என்று சொன்னேன். கருநீலக் கலரில் இருந்த என்னுடைய பாஸ்போர்ட்டை வாங்கித் தடவிப் பார்த்தாள். ’எனக்கு கருநீலம் பிடிக்கும்’ என்றாள். அதிலே இருக்கும் படத்தை பார்த்து பின்னர் என்னுடைய முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். குடிவரவு அதிகாரி பார்ப்பது போல அவள் பார்வை ஊடுருவியது.

வயது அதிகமாக அழகும் அதிகமாகும் என்பதை அன்றுதான் உணர்ந்தேன். கண்மை, முகப்பூச்சு, உதட்டுச் சாயம் என்று அவள் அழகு பன்மடங்கு பெருகியிருந்தது. அவள் அணியும் ஆடம்பரமான ஆடைகளோ, அணிகலன்களோ தெரிவதில்லை. அவள்தான் தெரிந்தாள். இருபது வயதாகியிருந்த அவளை இன்னும் சினிமாக்காரர்கள் விட்டு வைத்தது ஓர் அதிசயம்தான். நான் அவளைக் கூர்ந்து பார்த்தபோது அவள் முகம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தது. ’உங்களை மணமுடித்தால் எனக்கு எப்போது கனடிய பாஸ்போர்ட் கிடைக்கும்?’ என்றாள். எனக்கு அப்போது ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. என்னிடம் படிப்பு இல்லை. வேலை. இல்லை. பணம் இல்லை. என்னுடைய ஒரே தகைமை என்னிடம் கனடிய பாஸ்போர்ட் இருந்ததான்.

தினமும் நாங்கள் வெளியே போனோம். உணவகத்தில் உணவருந்தினோம். சினிமா பார்த்தோம். பார்க்குகள், கடற்கரை என்று சுற்றினோம். ஆனால் அவள் முகத்தில் மகிழ்ச்சியில்லை. ஏதோ கடினமான மனக்கணிதத்துக்கு விடை தேடுவதுபோல இருந்தாள். ஒருநாள் ’உங்கள் அண்ணருக்கு தினம் தொலைபேசி எடுத்து பணம் கேட்கிறீர்களே. வெட்கமாயில்லையா? நீங்கள் கனடாவில் பெரிய எஞ்சினியர். ஆனால் சாதாரண ஹொட்டலில் தங்கியிருக்கிறீர்கள். மலிவான உணவகங்களுக்கு அழைத்துப் போகிறீர்கள். நீங்கள் தரும் பரிசுகள் விளயாட்டுத்தனமாக இருக்கின்றன. ஒன்றுமே புரியவில்லை’ என்று முகத்தில் ஈரத்துணியால் அடித்தது போல கேட்டுவிட்டாள். .

இந்தப் பேரழகியை மறுபடியும் இழந்துவிடுவேனோ என்ற பயம் என்னை ஆட்டியது. பணம்தான் பிரச்சினைக்கு காரணம். என்னுடைய மூளை இரவும் பகலும் இதையே யோசித்தது. எப்படியும் அவளை மணமுடிக்காமல் கனடாவுக்கு புறப்படக்கூடாது. அந்த நேரம் பார்த்து ஹொட்டல் அறைக் கதவை யாரோ தட்டினார்கள். என்னைத் தேடி வரக்கூடிய நண்பர் ஒருவர்கூட எனக்கு இல்லை. கதவைத் திறந்த நான் திடுக்கிட்டு நின்றேன். என்னை நாலு வருடம் முன்பு கனடாவுக்கு அனுப்பிய பழைய ஏஜண்ட். ‘வாருங்கள்’ என்று சிரித்தேன். என்னுடைய வாழ்க்கையில் நான் என்றென்றுமே மறக்க முடியாத இரண்டு வருடங்கள் ஆரம்பமாகின.

ஏஜண்ட் சுற்றி வளைக்காமல் நேராக விசயத்துக்கு வந்தார். ’ஒரு கணவனும் மனைவியும் அமெரிக்காவுக்கு புறப்படுகிறார்கள். நான்தான் அவர்கள் பாஸ்போர்ட்டை தயாரித்து கொடுத்தேன். உண்மையான பாஸ்போர்ட்டுகள் ஆனால் அவர்களுடைய படம் மாற்றப்பட்டது. கண்டுபிடிக்கவே முடியாது, அசல்போலவே இருக்கும். உங்களிடம் கனடிய பாஸ்போர்ட் இருப்பதால் பிரச்சினையே கிடையாது. நீங்கள் இந்த தம்பதியினருடன் அமெரிக்கா போகவேண்டும். அவர்கள் நியூயோர்க்கில் இறங்கியதும் அவர்களிடமுள்ள பாஸ்போர்ட்டை திரும்ப பெற்று சென்னைக்கு கொண்டு வரவேண்டும். உங்களுக்கு 4000 டொலர் கிடைக்கும்.’ ’இதுதானா? எதற்காக நான் போகவேண்டும்? பாஸ்போர்ட்டுகளை கூரியர்மூலம் அனுப்பலாமே.’ ’இதைப்பற்றி யோசிக்காமல் இருப்போமா? பயணிகளை நம்ப முடியாது. பாஸ்போர்ட்டை திருடி விடுவார்கள். ஒவ்வொரு பாஸ்போர்ட்டின் விலை 25,000 டொலர். இதை நீங்கள் திரும்பக்கொண்டு வந்து கொடுத்தால் போதும். இதை வைத்து இன்னும் பத்துப்பேரை அமெரிக்காவுக்கு அனுப்பலாம்.’ ’ஆபத்து இல்லையா?’ ’என்ன ஆபத்து? நீங்கள் கனடிய பாஸ்போர்ட்டில் போகிறீர்கள், வருகிறீர்கள். உங்களை என்ன கேள்வி கேட்க முடியும்? திருடுகிறீர்களா? ஏமாற்றுகிறீர்களா? இல்லையே!’

அண்ணருக்கோ பத்மப்ரியாவுக்கோ நான் ஒன்றுமே சொல்லவில்லை. இரண்டு நாள்தானே. போனதும் உடனே திரும்பிவிடலாம் என்று நினைத்தேன். அந்த நாள் நன்றாக நினைவிருக்கிறது. 19 நவம்பர் 1995, ஞாயிற்றுக்கிழமை. 18 நவம்பர் புறப்படுவதாக இருந்து ஏஜண்டின் எண் சாஸ்திரப் பிரகாரம் 19ம் தேதி மாற்றப்பட்டது. கணவனும் மனைவியும் டெல்லி விமான நிலையத்தில் குடிவரவை தாண்டி உள்ளே நுழைந்துவிட்டார்கள். அதை உறுதி செய்துவிட்டு நான் புறப்பட்டேன். தம்பதிகளை நான் தொடர்பு கொள்ளவே கூடாது. அவர்களுக்கும் என்னைத் தெரியாது. நியூயோர்க் விமான நிலையத்தில் இறங்கி வெளியே வந்த பின்னர் நான் அவர்களிடம் பாஸ்போர்ட்டை பெற்று மறுபடியும் விமானத்தில் டெல்லி திரும்ப வேண்டும். பேசியபடி ஏஜண்ட் 4000 டொலர் தருவார். பத்மப்ரியா விரும்பிய மாதிரி ஆடம்பரமாக திருமணத்தை கொண்டாடிவிடலாம்.

டெல்லியில் முதலில் தம்பதிகளைக் கைது செய்தார்கள். பின்னர் என்னைக் கைது செய்தார்கள். கணவன் மனைவியை பார்த்து அதிகாரிகளுக்கு சிரிப்பு வந்தது. அவனுக்கு 18 வயது, அவளுக்கு 40 வயது. கள்ள பாஸ்போர்ட் என்றபடியால் அவர்களைக் கைது செய்ய காரணம் இருந்தது. நான் என்ன குற்றம் செய்தேன்? என்னுடைய பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததார்கள். ஆள்கடத்திய குற்றம் என் மேல் சுமத்தப்பட்டது. ‘நீங்கள் எப்படி என்னைக் கைது செய்ய முடியும்? நான் கனடியக் குடிமகன். நியூயோர்க் போகிறேன்’ என்றேன். ’ஒரே ஏஜண்ட் உங்கள் மூவருக்கும் டிக்கட் போட்டிருக்கிறார். அவரே பணம் கட்டியிருக்கிறார். உங்கள் டிக்கட் நம்பர்களின் ஓடர் அடுத்தடுத்து வருகிறது. முதலில் சனிக்கிழமை டிக்கட் போட்டு பின்னர் ஞாயிறாக மாற்றப்பட்டிருக்கிறது. கள்ள பாஸ்போர்ட்டில் ஆள் கடத்துவது கடுமையான குற்றம். சரி, 200 டொலர் தாருங்கள் விட்டுவிடுகிறேன்’ என்றார் அதிகாரி. முட்டாள்தனமாக நான் மறுத்துவிட்டேன்.

எதிர்பாராத திருப்பங்கள் பல நிகழ்ந்தன. ஏஜண்ட் திரும்பியும் பார்க்கவில்லை. மறைந்துவிட்டார். திகார் ஜெயிலில் என்னை அடைத்தார்கள். அது எத்தனை பிரபலமானது? சில வருடங்களுக்கு முன்னர்தான் கிரண் பேடியால் ‘திகார் ஆச்ரமம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 7000 பேர் தங்கக்கூடிய சிறையில் அப்போது 12,000 கைதிகளை அடைத்து வைத்தார்கள். தென் கிழக்கு ஆசியாவில் ஆகப்பெரிய ஜெயில் என்று சொன்னார்கள். என்னுடைய அறையில் நாலு சிமெண்ட் படுக்கைகளும் ஒரு திறந்த கழிப்பிடமும் இருந்தன. முதல் நாள் இரவு ஒரு தலையணையுடனும், போர்வையுடனும் நிலத்தில் படுத்தேன். போர்வையால் காலை மூடினால் தலையை மூட முடியவில்லை. டெல்லியில் நவம்பர் குளிர் மோசமாயிருக்கும். நடுங்கியபடி முழு இரவையும் கழித்தேன். அன்றிரவு என் வாழ்க்கை பற்றியே யோசித்தேன். பத்மப்ரியாவுக்கு ஒன்றுமே தெரியாது. அண்ணருக்கும் தெரியாது. எப்படி அவர்களிடம் முகத்தை காட்டுவேன்?

அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கு சிறைக்கதவு திறந்ததும் எல்லோரும் வெளியே ஓடினார்கள். நானும் ஓடினேன். முதல் இரண்டு நிமிடத்துக்கிடையில் கழிப்பறைகளை பாவிக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டேன். காலைச் சாப்பாடாக ரொட்டியும், தண்ணீர்போல ஓடிய சப்தியும் கிடைத்தது. சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். பசி என்ற ஒன்று என்னுடன் சிறைக்குள்ளும் வந்துவிட்டது. முதல் நாளே என்னை புல்லு வெட்ட அனுப்பினார்கள். சரியாக ஏழு மணிக்கு தேசிய கீதம் உரத்து ஒலிக்க அரிவாள்களைப் போட்டுவிட்டு சல்யூட் அடித்தார்கள். நானும் செய்தேன். ஒரு வாரம் அப்படியே கழிந்தது. ஏஜண்ட் வந்து பார்ப்பார் என்று நினைத்தேன், வரவில்லை. கோர்ட்டிலே என்னை நிறுத்தினார்கள். 2 லட்சம் பிணை கட்டினால் வெளியே வந்துவிடலாம். அண்ணரைத் தொடர்பு கொள்ளுவதா அல்லது பத்மப்ரியாவை தொடர்புகொள்வதா என்று என்னால் முடிவெடுக்க முடியவில்லை.

காவலாளி ஒருத்தன் என்னுடைய நிலைமையை பார்த்து இரங்கி வாசுதேவ் என்ற வழக்கறிஞரை அறிமுகப் படுத்தினான். அவர். பார்ப்பதற்கு அப்பொழுது சினிமாவில் பிரபலமாயிருந்த ஜாக்கி ஷ்ராஃப் போலவே இருந்தார். ரூபா 35,000 கொடுத்தால் என்னை வெளியே எடுத்துவிடுவதாகச் சொன்னார். வேறுவழி இன்றி பத்மப்ரியாவை டெல்லிக்கு கூப்பிட்டேன். அவள் பதறியபடி வந்து சேர்ந்தாள். என்னுடைய கதையை கேட்டு அழுதாள், ஆனால் நம்பவில்லை. அப்படியும் பாதி உண்மைதான் சொல்லியிருந்தேன். என் அண்ணரைப்போல ஒருவரை இந்த உலகத்தில் கண்டுபிடிக்க முடியாது. ஒரு கேள்வி கேட்காமல் பணத்தை அனுப்பிவைத்தார். பத்மப்ரியா பணத்தை எடுத்துப்போய் லோயரிடம் கொடுத்தாள். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. டெல்லி சிறையைப் பார்த்தபோது அங்கே நிறைய ஏமாற்றுக்காரர்கள், திருடர்கள், கொலைகாரர்கள் இருப்பது தெரிந்தது. ஆனால் லோயர்கள் ஏமாற்றுவார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.’

’என்ன பிரயோசனம்? இதையெல்லாம் எதற்கு என்னிடம் சொல்கிறீர்?’

’ஐயா, உங்களுக்கு தெரியவேண்டும். வேறு யார் என் கதையை கேட்பார்கள்? தயைசெய்து கேளுங்கள். ஒரு மாதம் ஆகிவிட்டது. என்னை வெளிநாட்டுக்காரர் சிறைக்கு மாற்றினார்கள். இங்கே நாங்கள் வேலைக்குச் செல்லத் தேவையில்லை. சிறையிலே இருக்கலாம். புத்தகம் படிக்கலாம். ஹிந்தி வகுப்பு நடக்கும் அதற்கு போகலாம். ஆனாலும் சிறை சிறைதானே. பலவிதமானவர்கள் இருந்தார்கள். இத்தாலியர், ஆர்ஜண்டீனியர், அரேபியர், அமெரிக்கர், பிலிப்பினோக்காரர். ஏறக்குறைய 22 வருடமாக அங்கே வாசம்செய்த 40 வயது ஆப்பிரிக்கரும் இருந்தார். பிரெஞ்சுதான் அவருடைய மொழி. கொஞ்சம் ஆங்கிலமும் கொஞ்சம் ஹிந்தியும் தெரியும். இரண்டுதரம் தப்ப முயற்சி செய்து பிடிபட்டதில் தன்னுடைய சிறை நாட்களை தானாகவே கூட்டிக்கொண்டார். 1978ல் இந்திரா காந்தி திகார் சிறையில் அடைக்கப்பட்டபோது தானும் இருந்ததாக பெருமையுடன் சொல்வார். ’என்ன செய்தாய்?’ என்று கேட்டேன். அவருக்கு 18 வயது நடந்தது. படிக்க ஆசை ஆனால் பணமில்லை. அவருடைய தாயாரை பிணையாக வைத்துக்கொண்டு அவரிடம் போதைப்பொருள் கொடுத்து அனுப்பினார்கள். அவர் பிடிபட்டுவிட்டார். தப்பியிருந்தால் அவருக்கு 1000 டொலர் கிடைத்திருக்கும். வாழ்நாள் முழுவதும் படித்திருக்கலாம்.

’நீர் எங்கிருந்து வருகிறீர்?’ என்று கேட்டேன். ’ஓக்கடொக்கு’ என்றார். எனக்கு சிரிப்பு வந்தது. இந்த 40 வயதுக்காரர் எனக்கு சிரிப்பு மூட்டுகிறார். மறுபடியும் கேட்டேன். ’ஓக்கடொக்கு’ என்றார். ’அது எங்கே இருக்கிறது?’ ’புர்க்கினஃபாஸோவில். அந்த நாட்டின் தலைநகரம் ஓக்கடொக்கு’ என்றார். ’புர்க்கினஃபாஸோ என்று ஒரு நாடா? அதன் பொருள் என்ன?’ என்று கேட்டேன். ’நேர்மையான மனிதர்களைக் கொண்ட நாடு’ என்றார். ’மிகப் பொருத்தம்தான். நேர்மையான நாட்டிலிருந்து கள்ளக்கடத்தல் செய்கிறீர்.’ அவர் சொன்னார். ‘எனக்கு வேறு வழி தெரியவில்லை. படிக்கவேண்டும் என்ற வெறி. இப்பொழுது படிப்பும் இல்லை. அம்மாவும் இல்லை. வாழ்வும் இல்லை.’

’நான் வெளிநாட்டுச் சிறையில் இருப்பதைக் கேள்விப்பட்டு தானாகவே அங்கே வந்து சேர்ந்தான் சந்திர போஸ். இவன் இலங்கைக்காரன். பார்த்தவுடனேயே இவனை யாருக்கும் பிடிக்கும். 30 வயது மதிக்கலாம். குழந்தைப்பிள்ளை முகம். விளையாட்டுக் குணம். ஒருவருக்கும் துரோகம் செய்யமாட்டான். இரண்டு பக்கமும் சாய்ந்து சாய்ந்து நடப்பான். தூரத்தில் வரும்போது உருண்டு உருண்டு வருவதுபோலத் தோன்றும். பத்து வருடமாக அதே சிறையில் உள்ளே வருவதும் போவதுமாக இருந்தான். எல்லா சிறையதிகாரிகளும் அவனிடம் நட்பாகப் பழகினர். இவனுடைய கதையும் என்னுடையது போலத்தான். ஜேர்மனி போவதற்கு இலங்கையிலிருந்து புறப்பட்டான். டெல்லியில் அவனுக்கு கடன் அட்டை திருடும் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் அங்கேயே தங்கிவிட்டான்.

’வீட்டிலே இருப்பதுபோல மிக மகிழ்ச்சியாக இருந்தது அவன் ஒருவன்தான். காலையில் ஒரு சுற்றுப்போய் சிறையதிகாரிகளையும், சிறையில் அடைபட்டு கிடப்பவர்களையும் பார்ப்பான். என்ன தேவையோ அவனிடம் கேட்கலாம். எப்படியோ வருவித்து தருவான். என்னிலும் பார்க்க அவனுக்கு வயது கூட ஆனால் என்னை ’மச்சான்’ என்று அழைப்பான். நான் ’டேய் போசு’ என்று கூப்பிடுவேன். ’டேய் போசு. ஏன் வாழ்க்கையை பாழாக்குகிறாய். மறுபடியும் உன் பெற்றோரிடம் போய்விடு.’ அவன் சிரித்தான். ஆட்களை மயக்கும் சிரிப்பு. அவனுக்கு இந்த வாழ்க்கை பிடித்துக்கொண்டது.

எங்களுடன் தங்கிய இத்தாலியர்கள் இருவரும் மல்யுத்த வீரர்கள்போல இருந்தார்கள். இருவரும் போதைப் பொருள் கடத்தி பிடிபட்டவர்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர்கள் சுறுசுறுப்பாகி விடுவார்கள். இத்தாலிய தூதரகத்திலிருந்து அதிகாரிகள் வந்து அவர்களை நலம் விசாரிப்பார்கள். சொக்கலெட், சிகரெட் போன்றவற்றை கொடுப்பார்கள். போதைப் பொருள் கடத்தினாலும் ஏதோ தேசப்பிதாக்கள் போலத்தான் அவர்கள் மதிக்கப்பட்டார்கள். போசு சொல்வான் ’மச்சான் நீயும் கனடிய குடிமகன். நீ ஒரு குற்றமும் செய்யவில்லை. உன்னைப் பிடித்து அடைத்துவிட்டார்கள். உன்னை கனடிய தூதரகத்திலிருந்து ஒருவரும் வந்து பார்ப்பதில்லை. சும்மா கனடிய குடிமகனாக இருந்து பிரயோசனம் இல்லை. உன் தோல் வெள்ளையாகவும் இருக்கவேண்டும்’ என்றான்.

’நான் சிறையில் இருந்த அதேசமயம் மிகப் பிரபலமானவர்கள் எல்லாம் சிறையில் இருந்தார்கள். என்னைக் கைது செய்த சமயம் பிரதம மந்திரியாக இருந்தவர் நரசிம்மராவ். அதன் பின்னர் தூங்கும் பிரதமர் தேவகவுடா பிரதமரானார். அவரைத் தொடர்ந்தது குஜ்ரால். வாஜ்பாய் வந்தபோது நான் விடுதலையாகிவிட்டேன். நாலு பிரதமர்கள் என்ன ஆண்டார்கள். என் சிறைவாச ஆரம்பத்தில் பிரதமராக இருந்த அதே நரசிம்மராவ் கைதியாகப் பிடிபட்டு எங்கள் சிறையில் அடைக்கப்பட்டது எங்களுக்கு பெருமையான விசயம். அவருடன் அவருடைய குரு சந்திராசாமியும் கைதுசெய்யப்பட்டிருந்தார். வாழ்நாள் முழுக்க நான் அதைச் சொல்லித் திரியலாம்.

சந்திராசாமி அப்பொழுது உலகப் பிரபலமாக இருந்தார். சிவப்பு பச்சை சால்வை அணிந்து பெரிய குங்குமப்பொட்டுடன் கம்பீரமாகக் காட்சியளிப்பார். முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மார்கிரெட் தாட்சர் சந்திராசாமியை ஆலோசித்துதான் காரியங்கள் செய்தார். சந்திராசாமி சிவப்பு ஆடை அணியச் சொன்னால் தாட்சர் அணிவார். தாயத்து கட்டுவார். நரசிம்மராவ் வழக்கமான வெள்ளைச் செருப்பு வெள்ளைச் சால்வையில் காணப்பட்டார். ஓக்கடொக்கு ஸொங்கோதான் அவர்கள் கைது விவரத்தை எனக்கு சொன்னான். முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் மகன் தகப்பனுடைய பெயரில் சென்ற்கிட்ஸ் தீவு வங்கியில் 21 மில்லியன் டொலர் கட்டியதாக கள்ள ஆவணம் தயாரித்ததாக வழக்கு. நரசிம்மராவ் கோர்ட்டிலே நின்றபோது நீதிபதி அவரைப் பார்த்து இப்படிச் சொன்னாராம். ‘ஓ, நீங்கள் உச்சத்திலும் அதி உச்சத்தில் இருக்கலாம். ஆனால் சட்டம் அதனிலும் உயரமானது.’ அந்த வழக்கு தள்ளுபடியாகி எனக்கு முன்னரே அவர்கள் விடுதலையானார்கள். ஒரு நாட்டின் பிரதம மந்திரிக்கே இந்தக் கதி என்றால் என் நிலைமையைப்பற்றி சொல்லவும் வேண்டுமோ?

ஆனால் இவர்கள் இருவரிலும் பார்க்க மிகப் பிரபலமான இன்னொருவனும் அப்போது அங்கே சிறையில் இருந்தான். அவன் பெயர் சார்ள்ஸ் சோப்ராஜ். சர்வதேச திருடன், ஏமாற்றுக்காரன். 12 கொலைகள் செய்தவன். கோடுபோட்ட சிறை உடுப்பில் இருந்தாலும் அவனை மரியாதையுடன் நடத்தினார்கள். சிறையிலிருந்து தப்பி ஓடுவதும் பின்னர் பிடிபடுவதும் அவனுக்கு வழக்கம். அவன் தன்னுடைய கதையை பத்திரிகைகளுக்கும் சினிமாவுக்கும் விற்று பணம் சேர்த்தான். அவன் சிறையில் கழித்த ஒவ்வொரு வருடமும் அவனுடைய வருமானம் ஒரு மில்லியன் டொலர் என்று பேசிக்கொண்டார்கள். இவனை மணந்த கனடியப் பெண் இறுதிவரை அவனுக்கு விசுவாசமாக இருந்தாள். இந்தக் கொலைகாரனும் எனக்கு முன்னரே சிறையிலிருந்து விடுதலையானான்.

என்னுடைய பிணையை ரூபா 100,000 ஆக குறைத்ததும் அண்ணர் எப்படியோ உழைத்து காசு சேர்த்துக்கொண்டு லண்டனிலிருந்து வந்து என்னை பிணை எடுத்தார். நான் வெளியே வந்து டெல்லியிலேயே ஒரு சிறிய அறை வாடகைக்கு எடுத்து வசித்தேன். வழக்கு முடியும்வரை நான் அங்கேயே இருக்கவேண்டும். அண்ணர் மாதா மாதம் செலவுக்கு பணம் அனுப்புவார். வெளியே இருந்தாலும் இந்த வாழ்க்கை எனக்கு நரமாயிருந்தது. பத்மப்ரியா தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டாள். அவளுக்கு அனுப்பும் கடிதங்கள் திரும்பி வந்தன. என்னில் வெறுத்துப்போய் என்னை கைவிட்டுவிட்டாள். திகார் சிறையில் அடைபட்டுக் கிடந்தவனை எந்தப் பெண்தான் விரும்புவாள்?

என்னுடைய ஒரே நண்பன் சந்திரபோஸ்தான். ஒவ்வொரு வாரமும் அவனைச் சென்று பார்ப்பேன். அவனைப் பார்த்தால் அவனுடைய குதூகலம் கொஞ்சம் என்னிலும் தொற்றிவிடும். நான் வெளியே இருந்து துக்கமாயிருந்தேன். அவன் உள்ளேயிருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தான். ஒருநாள் அவன் சொன்னான். ’எனக்கு வெளியே இருப்பதும் உள்ளே இருப்பதும் ஒன்றுதான்’ என்று. ’எப்படி நீ சொல்லலாம்?’ என்று கேட்டேன். அவன் சொன்னான் ’இங்கே எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். வேண்டியது கிடைக்கும். அடுத்த வேளை உணவு எங்கேயிருந்து வரும், எப்போது வரும் என்ற கவலை கிடையாது. ஆனால் நீ இப்போதுவெளியே இருக்கிறாய். எனக்கு வெளியே வந்து உன்னுடன் வாழ ஆசை’ என்றான்.

நான் திடுக்கிட்டுவிட்டேன். யாரோ சவுக்கினால் அடித்ததுபோல பட்டது. இத்தனை நாளும் நான் அவனிடம் அவனுடைய வழக்குப் பற்றி விசாரித்ததே இல்லை. ’என்னுடைய பிணைப்பணம் ரூபா 1500. உன்னால் கட்டமுடியுமா? நான் வெளியே வரவேண்டும்.’ எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை சொல்லமுடியாது. வெறும் ரூபா 1500. என்னால் நம்பமுடியவில்லை. இதை நான் எப்போவோ கட்டியிருக்கலாம். ’இந்தச் சின்னத் தொகையை கட்ட உனக்கு நண்பர்கள் ஒருவரும் இல்லையா?’ என்றேன். ’இருந்தார்கள். அப்போது வெளியே வரவேண்டும் என்று தோன்றவில்லை. இப்போது தோன்றுகிறது’ என்றான்.

அன்றே ரூபா 1500 பிணைகட்டி அவனை வெளியே எடுத்தேன். அவன் என்னுடன் தங்கினான். நான் மகிழ்ச்சியாக இருந்த சில நாட்கள் அவை. ’என்னுடன் இருக்கும்போது நீ கள்ளக் கடன் அட்டை, ஏமாற்று வேலை செய்யக்கூடாது’ என்று கேட்டுக் கொண்டேன். அவனும் சம்மதித்தான். என்னுடைய வழக்கு பல தடவை ஒத்திவைக்கப்பட்டது. டெல்லியில் அவனுடன் சுற்றினேன். எங்கே சென்றாலும் அங்கே அவனுக்கு ஆட்கள் இருந்தார்கள். சில உணவகங்களில் காசு வாங்க மாட்டார்கள். அவனை அத்தனை மரியாதையுடன் நடத்தினார்கள். எனக்கு அது புரியவே இல்லை.

ஒருநாள் வேலையாக வெளியே கிளம்பிப்போன போஸ் பாதியிலேயே அவசரமாக திரும்பினான். ’உன்னுடைய பத்மப்ரியா என்ன செய்தாள் தெரியுமா?’ என்றான். ’தெரியாதே. இன்றைக்கும் அவளை தேடிக்கொண்டுதானே இருக்கிறேன்’ என்றேன். ‘மூடனே, நீ ஒரு லோயரிடம் ரூபா 35,000 கொடுத்து ஏமாந்தாயே ஞாபகம் இருக்கிறதா?’ என்றான். ‘தெரியும். அவன் பெயர் வாசுதேவ். பத்மப்ரியா பணத்தை அவனிடம்தான் கொடுத்தாள்.’ ‘உன்னை ஏமாற்றி இருக்கிறார்கள். பத்மப்ரியா அவனை மணந்து இங்கே டெல்லியில்தான் வாழ்கிறாள்.’ என் நெஞ்சு பதைக்க ஆரம்பித்தது. அவள் செய்த துரோகத்திலும் பார்க்க அவளைக் கண்டுபிடித்ததில் ஏற்பட்ட ஆனந்தம்தான் பெரிதாக இருந்தது. ‘இங்கே இருக்கிறாளா? பத்மப்ரியாவா? நான் அவளைப் பார்க்கவேண்டும்’ என்றேன். போஸ் என்னை உற்றுப் பார்த்தான். அப்படி அவன் என்னைப் பார்ப்பதில்லை. ‘அவள் உனக்கு துரோகம் செய்தவள். நீ சிறையிலிருந்து அவளுக்காக உருகினாய். அவளோ உன்னை ஏமாற்றிய லோயரை மணந்து சந்தோசமாக வாழ்கிறாள். நீ வெளியே வரக்கூடாது என்றுகூட அவள் நினைத்திருக்கலாம் அல்லவா? அவளை மறந்துவிடு’ என்றான்.

அவன் சொன்னதில் நியாயம் இருந்தது. அதன் பின்னர் என்னால் அங்கே இருக்க முடியவில்லை. எப்பொழுது வெளியே போனாலும் என் கண்கள் அவளைத் தேடியபடியே இருந்தன. இங்கேதான் எங்கோ அவள் இருக்கிறாள். என்ன உடை உடுத்தியிருப்பாள். டெல்லிக்காரர்போல சுரிதார் அணிவாளா? அல்லது நாகரிகமாக ஜீன்ஸ் அணிந்து உலவுவாளா? எந்த சனக்கூட்டத்தை கண்டாலும் என் கண்கள் அவளைத் தேடி அலைந்தன.

என்னுடைய நிலைமையை பார்த்து சந்திரபோஸ் இரக்கப்பட்டான். ஒரு நாள் என்னைக் கூட்டிக்கொண்டு தனக்கு தெரிந்த ஒரு லோயரிடம் போனான். வழக்கு விவரங்களைப் படித்த லோயர் திகைத்துப்போனார். குற்றம் செய்யத் தொடங்காத ஒருவனுக்கு சட்டத்தின் பல பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. பிரிவு 120 B – சதிக்குற்றம், பிரிவு 419 தேசத்துரோகம், பிரிவு 420 ஏமாற்று இப்படி தாறுமாறாக குற்றம் பதிவு செய்யப்பட்டிருந்தது. லோயர் சொன்னார், ’இந்த வழக்கிலிருந்து விடுபட பல வருடங்கள் ஆகும். லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். அப்பொழுதும் நிச்சயமில்லை. எனக்கு நீதிபதியை தெரியும். 2000 டொலர் கொண்டு வாருங்கள். நான் வழக்கை சரிபண்ணிவிடுகிறேன்.’ ஆரம்பத்தில் அவர்கள் கேட்டது வெறும் 200 டொலர். இப்பொழுது 2 வருடங்களுக்கு பின்னர் நான் 2000 டொலர் கொடுத்தால்தான் விடுதலையாவேன்.

இரண்டு நாளில் போஸ் 2000 டொலருடன் வந்தான். வாக்குக் கொடுத்த மாதிரியே லோயர் வழக்கை தள்ளுபடி செய்து என்னுடைய கனடிய பாஸ்போர்ட்டையும் மீட்டுக் கொடுத்தார். சந்திரபோஸ் விமான டிக்கட்டை தந்து என்னை ரொறொன்ரோ விமானத்தில் ஏற்றிவிட்டான். அவனுக்கு பணம் எப்படி கிடைத்தது என்பதுபற்றி நிறைய மூளையை செலவழிக்கத் தேவை இல்லை. விமானம் தரையைவிட்டு மேலெழும்பியபோது டெல்லி நகரம் கையளவு சிறிய படமாகத் தெரிந்தது. அந்தக் கணத்தில் சந்திரபோஸை என் மனம் மறந்தது. எனக்கு துரோகம் செய்வதையே தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்ட பத்மப்ரியா நினைவுக்கு வந்தாள். என்னுடனேயே அவள் ரொறொன்ரோவுக்கு பயணம் செய்தாள்.

’என்னுடைய அருமையான நேரத்தை வீணாக்கிவிட்டீர். இதையெல்லாம் எனக்கு ஏன் சொல்கிறீர்?’

’உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன். நீங்கள்தானே எஜமானன். ஆறு மாதமாக உங்களிடம் வேலை செய்திருந்தாலும் நான் விசுவாசமான ஊழியன். என்னுடைய எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது. ஐயா, எனக்கு முக்கியமான கடிதம் வந்திருக்கு.

’அதற்கு என்ன?’

’என்னவா? ஆதரவான ஐயா! நீங்களல்லவோ என் முதலாளி. நீங்கள்தான் உதவி செய்யவேண்டும்.’

’என்ன செய்யவேண்டும்?’

’இரண்டு வாரம் லீவும், 2500 டொலர் முன்பணமும் வேண்டும்.’

’முன்பணமா? எதற்கு?’

’கடிதம் வந்திருக்கு. பத்மப்ரியா. பத்மப்ரியாவிடமிருந்து.’

’வரட்டுமே!’

’இது என்ன? கருணையானவரே! இத்தனை நீண்ட கதை கேட்டபின்னரும் உங்களுக்கு புரியவில்லையா? அடுத்த பிளேனில் நான் சென்னைக்கு செல்லவேண்டும். பத்மப்ரியா சொல்லிவிட்டார். சொல்லிவிட்டார். நான்தான் அடுத்த கணவன்.’

– October 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *