நாகதடம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 842 
 
 

சூரியன் நாளின் அந்தலை தெரிந்து மேற்கில் தன்னைப் புதைத்தது.

பகலின் வெம்மை கெலித்திருந்த வறள் வெளியில் மென்குளிர் விரவுவது தெரிந்து, காற்று மனிதர்களை ஆசுவாசிக்க அதைத் தன் தோளேற்றி அசையத் துவங்கியது.

அதுவொரு வைகாசி மாத முழுநிலா நாள். நாளின் விசேஷத்தில் நாகதம்பிரான் குடிற்கோயில் முன் பக்தர்கள் குழுமத் துவங்கியிருந்தார்கள்.

மங்கிய பெரு மஞ்சட் குடமென கீழ் வான விளிம்பில் நிலா எழுந்திருந்தும் மெல்லிய இருள் இன்னும்பாரித்திருந்த அவ்வேளையில், குடும்பங்கள் தொட்டம் தொட்டமாய் அமர்ந்து தம் வளந்துகள் அடுப்பேற்ற ஆயத்தப்படுத்தின.

நெடும்பாதையிலிருந்து பற்றைக் காடு தாண்டியதும் கோயில்வரை வளைந்து வளைந்து சென்ற பாதையில் விழுந்திருந்த வெண்கோட்டினைக் குறிப்பாய்கொண்டு, மேலும் மேலுமான பக்தர்கள் நடந்தும் வண்டியிலும் டிராக்டரிலுமாய் ஊர்ந்து வந்துகொண்டிருப்பது தெரிந்தது.

ஒரு காலத்தில் பெரும் வனமாயிருந்தது அது. யானை புலி கரடிபோன்ற மிருகங்களது வசிப்பிடத்தின் மய்யம் அதுவென மக்கள் அச்சம் கொண்டிருந்தார்கள். பின்னாலேதான் வயல்கள் பெருக்கப் பெருக்க வனம் சிறுத்துச் சிறுத்து இன்றைய பரிமாணம் எய்திற்று.

சென்ற வருஷ வேளாண்மைப் பெருக்கம் இன்றைய வனவழிப்பு முயற்சிகளை மேலும் உத்வேகப் படுத்தியிருப்பதை தெளிவாகக் காட்டியது. வெட்டப்பட்ட காட்டு நிலங்கள் சில இன்னும் தீ வைப்புக்குக் காத்துக் கிடந்தன. மரங்கள் வெட்டப்பட்டு, புற்றுகள் இடிக்கப்பட்டு நிலவரை மாறிவருவதில் நாகதம்பிரானை வணங்க வெள்ளி தோறும் வந்துகொண்டிருந்த நாகமும் தன் ஒழுங்கு மாறிவிட்டிருந்தது. அதனால் அன்றைய பூஜை நாளில் அதன் தரிசனம் நிகழுமாவென பல பக்தர்கள் மனத்திலும் வினா எழுந்திருந்தது.

அவ் வினாவை காற்றில் ஏற்றினாள் அன்னமாச்சி. ‘கனநாளாய்க் கண்ணிலயும் படாத நாகம் இண்டைப் பூசைக்கெண்டாலும் காணக்கிடைக்குமா?’

சொற்கள் சுருண்டு சுருண்டு மெல்லென அசைந்துநின்ற காற்றிலேறி கோயிற் சூழலெங்கும் பலர் பேச்சுக்களில் மீள மீள அலைந்து திரிந்தன.

அது கேட்ட காத்தான் கிழவன், அன்னமாச்சியை நோக்கி உறுதிபடச் செப்பினான். ‘அடங்கியிரு… அடங்கியிரு… எது மாறினும் மாறாவிட்டாலும் நம்மைக் காக்க நாகதம்பிரான் நாகத்தைக் கண்ணில காட்டுவார்…. நம்பு.’

அது பல நெஞ்சுகளில் விழுந்து நம்பிக்கையின் விதையாய் முளைத்தெழுந்தது.

உலையேறிய வளந்தடுப்புகளில் தீயின் மஞ்சள் கிரணங்கள் விசிறத் தொடங்கின.

நேரம் நகர்ந்துகொண்டிருந்தது. சாமத்தின் சிறிது முன்னாகவேனும் நாகம் வந்துவிடுமென்ற நம்பிக்கையின் பாதி நிமிர்வோடு நாகதம்பிரானுக்கு முதல் படையல் செய்யப்பட்டது.

இனி படையல்கள் பெருகும். சூடாராதனைகள் வெகுக்கும். சாம்பிராணித் தூபங்கள் அலைந்தெழுந்து வெளி நிறைக்கும். ஆனால் அந்த விநாடிவரை நாகத்தைக் கண்டாருமில்லை; அதுபற்றி விண்டாருமில்லை.

அப்போது அன்னமாச்சியின் குரல் மீண்டும் கீச்சிட்டது: ‘நாகத்தை இன்னும் காண்கேல்லையே.’

பலருக்குள்ளும் கிளர்ந்துகொண்டிருந்த கேள்விதானது. எனினும் அன்னமாச்சிபோல் பிறரில் அவநம்பிக்கை உண்டாகுமளவு மனத்தைக் கடந்துசெல்ல அவர்கள் விடாதிருந்தனர். அவர்களது பார்வை அவ்வப்பொழுது பெரும்புற்றின் கண்களைக் குறிவைத்துப் பாய்ந்துகொண்டிருந்தது.

அது பாதையிலென்ன, நிலத்தைத் துளைத்தும் காட்சிதரவல்லதென்ற நம்பிக்கையை சிலரே அப்போது கொண்டிருந்தனர். ஆனாலும் பலர் மனத்தில் மண் தின்னும் பாம்பு, கறையானெடுத்த புற்றுக்கு நிலம் துளைத்து வந்துவிடுமாவென்ற கேள்வி முளைக்கவே செய்தது.

படையல் முடித்த சிலர் புறப்பட ஆயத்தம் செய்தார்கள். இன்னும் சிலர் நாகத்தின் வரவு காணாமல் செல்வதில்லையென்ற பிடிவாதத்தில் அங்கனயே உழன்றபடி.

அவர்களை அவ் வனத்தில் வாழ்வாதரம்கொண்டிருக்க வைத்த நாகதம்பிரானின் சொரூபமே அந்த நாகமாயிருந்தது. அதன் காட்சிதான் இனி வரும் நாட்களில் வனத்தில் எழக்கூடிய விஷக்கடியிலிருந்தான பாதுகாப்பின் உத்தரவாதம். ஒருகாலத்தில் அவர்களது வன்னி வாழ்வு மரணத்தின் வாயிலென்று சொல்லும்படிக்கு விஷ ஜந்துகளால் பெருகிப்போயிருந்தது. தன்னையே விஷமாக்கிக்கொண்டு அப் பிரதேசத்தைப் புரக்க நன்னியென்ற மனிதன் உருவெடுத்தது அந்தக் காலப் பகுதியிலேதான். அவனுக்கும் வாலாய தெய்வம் நாகதம்பிரானாகவே இருந்தது. அவன் மறைந்து வெகுகாலமாயினும் அவனடியிலிருந்து இன்னொரு விஷகடி வைத்தியர் தொடர்ந்து தோன்றவுமில்லை. அவர்களது வருஷாந்திர பொங்கலிலும், நாளாந்த வழிபாட்டிலும்தான் அத்தனை வருஷங்கள் பெரிய உயிரிழப்புகளின்றிக் கடக்கப்படலாயின. அதை அவர்கள் மறந்துவிடுதல் சாத்தியமில்லை. அந்தச் சமிக்ஞை அவர்களுக்கு வேண்டும். அது காணாமல் அவர்களுக்கு சந்தோஷம் முகிழ்த்திடாது.

சூழ பல இடங்களில் வெட்டிய காடுகள் தீ வைக்கப்பட்டிருப்பதாக காலந்தாழ்த்திப் பரவிய செய்தி பக்தர்களது மெய்யையும் அதிர்த்தது. நாக வழிகள் தீ மூழப்பெற்றிருப்பின் நாகம் தன்னை எங்காவது கொண்டுசென்று புதைத்துக்கொள்ளும். அன்றேல் வனம் தாண்டி நீர்ப் பரப்பின் புதருள் தன்னை ஒழித்துக்கொள்ளும்.

அவர்கள் மனமுடைந்திருந்தார்கள்.

அப்போது வேம்பைச் சுற்றிய புற்றின் பெருங்கண்ணிலிருந்து புறப்பட்டிருந்த நாகம் பக்தர் கவனத்தை ஈர்க்கும்படிக்கான சீற்றத்தைச் சிந்தியது. ‘ஸ்ஸ் ….. ஸ்ஸ்….’

நாகத்தின் மூச்சுக் கேட்டு பக்தர்கள் திரும்பினார்கள்.

நாகம் புற்றிலிருந்து தலையை மிதத்தி காற்றில் நீந்திக்கொண்டிருந்தது.

அது நிலம் கிழித்து கோயில் வந்தடைந்ததில் தன் பளீரிடும் மேனி சேறு படிந்ததாய் இருந்தது. அதன் கண்களில் தன் முயற்சியின் வெற்றியும், கருணையின் பிரவாகமும் ஒளிர்ந்து கொண்டிருந்தன.

பக்தர்கள் தரிசனம் அவாவியதுபோல், நாகமும் அதை விரதமாய்க் கொண்டிருந்ததோ?

புற்றென்னவோ கறையான் எழுப்பியதுதானெனினும், வாழிடமாக்கியது நாகம்தான். அப் புற்றின் பெருங்கண் நோக்கி நாகம் மண்ணுள்ளாய் தடமமைத்து வந்திருந்ததாய் பக்தர்கள் ஆர்ப்பரித்தனர்.

அதையே காத்திருந்தான்போல் கண்டதும் காத்தன் கிழவன் குரலெடுத்தான்: ‘நாகம் வந்துதே! நாகம் வந்துதே!’

அதைத் தொடர்ந்தாள் அன்னமாச்சி. ‘நானும் கண்டனே! நானும் கண்டனே!’

மேலும் பல குரல்கள் அவ்வரவை பலரறிய எடுத்துரைத்தன.

படையலேற்க வன்னித் தெய்வம் நாகத்தில் ஊர்ந்து வந்ததை பல பக்தர்கள் கண்டதாய் மறுநாள் உதயதாரகை, ஞானாமிர்தம் ஆகிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

அது வன்னி நிலமெங்கும், இலங்கைப் பெருந்தீவெங்கும், அதனைத் தாண்டிய அதன் சிறுதீவுகள் அடங்கிலும் பெருங்கதையாய் விரிந்து சென்றது.

– தாய்வீடு, ஒக். 2021

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *