கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2022
பார்வையிட்டோர்: 2,086 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலை நேரம், பத்து மணி இருக்கும்.

திருக்கழுக்குன்றத்தில் சில மாதங்கள் தங்கலா மென்று ஒரு வீட்டை வாடகைக்குப் பேசி வந்து ஒரு வாரம் ஆயிற்று, கொஞ்சம் கொஞ்சமாகச் சாமான்களைச் சேர்த்துக்கொண்டிருந்தோம். நான் ஒன்றும் செய்யவில்லை. என் அம்மாவும் மனைவியுந்தான் அந்தக் காரியத்தைச் செய் தார்கள். வீதியில் எது போனாலும் அதை வாங்குவது என்று திட்டம் போட்டார்கள். உமி போனாலும் கூப்பிடு வது, உரல் போனாலும் கூப்பிடுவது. இந்தப் பண்டங்களை விற்கிறவர்களும் சரி, வாங்குகிற இரண்டு பெண்மணிகளும் சரி, வியாபார தோரணையில் நடந்து கொள்வதில்லை. பேரம் பேசுவதும், ஊர் விவகாரம் பேசவதும், பழைய வியாபாரக் கதைகளைப் பேசுவதுமாக இந்த வியாபாரம் நடக்கும். நான் அவர்களிடையே நடை பெறும் சம்பாஷணையைக் கவனித்து வந்தேன். காசு கொடுத்து வாங்கும் சமாசாரப் பத்திரிகை களிலே காணாத பல உள்ளூர்ச் செய்திகளும், குடும்பச் சிக்கல்களும், வாழ்க்கைத் தத்துவங்களும், இன்பதுன்பக் கூறுபாடுகளும் எனக்கு வெளியாகும்.

பண்டங்களை விற்க வருகிறவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகவா இருக்கிறார்கள்? ஒருத்தி பட பட வென்று பேசுவாள்; மற்றொருத்தி நிதானமாகப் பேசுவாள். துடைப்பம் விற்க வருகிறவன், யானையை விற்பது போல ஜம்பமாகப் பேசுவான்; நாற்காலி விற்பவன் பணிவாகப் பேசுவான். விலை குறைத்துக் கேட்டால் சீறும் ஆசாமிகள் உண்டு; எவ்வளவு குறைத்துக் கேட்டாலும் கோபப் படாமல் ,”கட்டாதம்மா! ஏழை வாயில் மண்ணைப் போடாதீர்கள்” என்று தீனக் குரலில் எடுத்துச் சொல்கிறவர்களும் உண்டு. இப்படி விற்கிறவர் கட்சியில் பலபல வகை மனித உள்ளங்களைப் பார்க்கச் சந்தர்ப்பம் உண்டாயிற்று. ஆனால் வாங்குகிறவர் கட்சியில் இரண்டே பேர்; என் தாயும் மனைவியும். அவர்களிடம் ஒரே மாதிரி சுபாவந் தான் நான் கண்டேன். கூடைக்காரி ஒரு விலை சொன்னால், உடனே குறைத்துக் கேட்பது, “பட்டணத்தில் கூட இந்தக் கிராக்கி இல்லை” என்று பொய்யும் கற்பனையும் கலந்து பேசுவது – இப்படியாக ஒரே ரீதியில் எங்கள் வீட்டில் உள்ளவர்களின் போக்கு இருந்தது.

ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு மூன்று வியாபாரமாவது நடக்கும்; இரண்டு மூன்று சுவாரஸ்யமான காட்சிகளை நான் பார்ப்பேன். காட்சிகள் என்பதை விடச் சம்பவங்கள் என்றே சொல்லலாம். என் மனத்தில் ஆழப்பதிந்துவிடும் அவற்றைச் சம்பவங்கள் என்று சொல்வது தான் பொருத்தம். காட்சி, பேச்சு, மனப்பாங்கு, இத்தனையும் அவற்றில் இருந்தன.

காலை நேரம், பத்து மணி இருக்கும். ஆம், அதைத் தான் முன்பே சொல்லி விட்டேனே!

குளத்தில் நீராடிவிட்டு வந்து சமையல் வேலையைக் கவனித்துக்கொண்டிருக்கும் அம்மா காதில், வாசலில் எதையாவது விற்கும் மனிதர்களின் குரல் எவ்வளவு மெது வாக இருந்தாலும் விழுந்து விடும். ‘அதோ வாசலில் என்னவோ போகிறது! போய்க் கூப்பிடு’ என்று தன் மருமகளை ஏவுவாள். குழந்தைக்குப் பால் புகட்டித் தூளியில் போட்டு ஆட்டிக்கொண்டிருக்கும் என் மனைவி உடனே வீதிக்குப் போய்க் கூடைக்காரியைக் கூப்பிடுவாள்.

கூடைக்காரி திண்ணையில் கூடையை இறக்கி வைப்பாள். உள்ளேயிருந்து அம்மாவும் வந்து சேர்ந்து கொள்வாள். வியாபாரம் ஆரம்பமாகும். “என்னடீ வெண்டைக்காய் இவ்வளவு முற்றலாக இருக்கிறது?” என்று கொண்டு வந்திருக்கும் பண்டத்தில் தோஷம் சொல்லி விவாதத்தைத் தொடங்கி வைப்பாள் என் தாய். “என்ன அம்மா அப்படிச் சொல்லுகிறே! இங்கே பாரு. ஒடிச்சுக் காட்டறேன்” என்று கூடைக்காரி ஒரு காயை எடுத்து மளுக்கென்று ஒடித்துக் காட்டுவாள். “வாடலாக இருக்கிறதே” என்று அடுத்த குறையை எடுத்து விடுவாள் அம்மா. “இதுவா வாடல் காலையிலே தான் பறித்தது; இதைப் போய் வாடலென்று சொல்றியே!” என்று கூடைக்காரி சொல்வாள். உண்மையில் அது வாடலாக இராது. “உனக்குக் கண் இருக்கிறதா? இதைப் போய் வாடல் என்று கூசாமல் நாக்கில் நரம்பில்லாமல் சொல்லுகிறாயே!” என்று அந்தக் கூடைக்காரி கேட்டிருக்கலாம். அப்படிக் கேட்பாளென்று நான் நினைப்பேன். அப்படிச் சுறுக்கென்று கேட்பது வியாபார நாகரிகம் அன்று என்பது எனக்குத் தெரியுமா? பிறகு விலையைப் பற்றி விவாதம் நடக்கும். அப்போதுதான் பட்டணத்துப் பேச்சு நடுவிலே வரும். அம்மா, ஒவ்வொரு நாளும் தவறாமல் பட்டணத்தில் காய்கறி மார்க்கட்டுக்குப் போய்க் கணக்கெடுத்து வந்தவளைப் போலத்தான் பேசுவாள். கூடைக்காரி அதைக் கேட்டு விலையைக் குறைத்துக்கொள்வாளென்பது அவள் அபிப்பிராயம். ஆனால் அவள் என்னவோ தன் விலையையே தான் சொல்லிக்கொண்டிருப்பாள்.

காலை பத்து மணி இருக்கும். இது வரையிலும் சொன்னது பொதுவான காட்சிகள். காலை பத்து மணி என்று ஆரம்பித்தேனே, அந்த நேரத்தில் நடந்தது ஒரு நிகழ்ச்சி; என் மனத்துக்குள் ஆழப்பதிந்த சம்பவம். அதைச் சொல்ல வந்தவன் தான் இவ்வளவு தூரம் பீடிகை போடும்படி ஆகிவிட்டது. அந்தச் சம்பவம் நடந்தது நடந்தபடியே என் அகக் கண்முன் நிற்கிறது. காலை பத்து மணி என்ற நேரம் கூடத் திட்டமாக எனக்கு நினைவிருக் கிறது.

அப்போது வீதியில் காய்கறி வரும் நேரம் அன்று. காயோ, கறியோ, தயிரோ காலையிலே வந்துவிடும். அதற்கு மேற்பட்டு விற்பனைக்கு ஏதாவது தட்டுமுட்டுச் சாமான் வரும்; பாய் வரும்; துடைப்பம் வரும். கூடை வரும்; முறம் வரும். ஆமாம்; அன்று முறந்தான் வந்தது. கையில் இரண்டு முறங்களை எடுத்துக்கொண்டு ஒருத்தி எங்கள் வீட்டு வாசலுக்கு வந்து அங்கே நின்று கொண்டிருந்த என் தாயினிடம், “முறம் வேணுமோ?” என்று கேட்டாள். அம்மா ஏதோ ஞாபகமாக இருந்தாள். இல்லாவிட்டால் அவளே, “எ , முறம்” என்று கூப்பிட்டிருப்பாளே.

“ஆமாம், வேணும்; ஆனால் நீ ஆனை விலை, குதிரை விலையல்லவா சொல்லுவாய்?” என்று அவளுக்கு வரவேற்பும், கண்டனமும் சேர்த்து வெளியிட்டாள் அம்மா.

முறக்காரி திண்ணையில் முறம் இரண்டையும் வைத்தாள்; “உளுத்த மூங்கிலாகப் பார்த்துப் பொறுக்கி வாங்கி இந்த முறத்தை முடைந்தாயோ?” – இது அம்மாவின் கேள்வி. இதற்குள் உள்ளே குழந்தையைத் தூங்கப் பண்ணிக்கொண்டிருந்த என் மனைவி வந்துவிட்டாள். பேரம் செய்யும் தந்திரங்களை அவள் இப்போதுதான் தன் மாமியாரிடமிருந்து கற்றுக்கொண்டு வருகிறாள். ஒவ்வொரு வியாபாரத்திலும் அம்மாவின் வாக்குச் சாதுரியம் எப்படி இருக்கிறதென்று கவனிக்கிறாளோ என்னவோ தெரியாது. பள்ளிக்கூடத்துக்குப் போகாவிட்டால் பாடம் வீணாகப் போய்விடுமே என்று கவலைப்படும் மாணாக்கனைப் போல, ஒரு வியாபாரத்தைத் தான் கவனிக்காவிட்டால் அந்த வியாபார அநுபவம் இல்லாமல் போய்விடுமே என்று அவள் நினைத்திருக்கலாம். அவள் வந்துவிட்டாள். “உளுத்த மூங்கில் மாதிரி தான் இருக்கிறது” என்று வந்தவுடனே என் தாயின் அபிப்பிராயத்தை ஆமோதித்தாள் அவள் –

“என்ன அம்மா, விஷயம் தெரியாமல் பேசுறீங்க. பச்சை மூங்கிலைப் பிளந்து பண்ணியிருக்குது. காஞ்ச மூங்கில் முடைய வருமா அம்மா? பச்சை மூங்கிலின்னு இதைப் பார்த்தாத் தெரியில்லையா?” என்று முறக்காரி சொன்னாள். அவள் பேச்சு ஆணித்தரமாக இருந்தது. நான் அதை ரஸித்தேன். அது காய்ந்த மூங்கிலே அல்ல; அப்படி இருக்க எப்படி உளுத்த மூங்கிலாக இருக்க முடியும்? ‘இவர்கள் வாயை அடைக்கச் சரியான வெடி குண்டு போட்டாள் இவள். இதுவும் வெண்டைக்காய்ப் பேரமா என்ன?’ என்று நான் எண்ணினேன் ; மனசுக் குள்ளே சிரித்துக்கொண்டேன்.

“சரி, சரி; நாங்கள் முறங்கட்டுகிறபோது அந்த விவ ரத்தைத் தெரிந்து கொள்கிறோம். இப்போதைக்கு இந்த முறம் வாங்கிக்கொள்ளுகிறோம்; விலையைச் சொல்” என்று ரோசத்தோடு அம்மா பேசினாள்.

“ஒரே விலை; ரெண்டு முறமும் முக்கால் ரூபா.”

“முக்கால் ரூபாயா?” அம்மா ஆச்சரியப்படுபவளைப் போல வாயைப் பிளந்தாள்.

“பன்னிரண்டு அணாவா?” – என் ‘சகதர்மிணி’ ரூபாயை அணாவாக மாற்றி ஆச்சரியப்பட்டாள்.

“இதே, திருவிழாக் காலமானா ரெண்டு, ரெண்டரைக்கு விக்குமாக்கும்” என்றாள் முறக்காரி.

“பத்து ரூபாய்க்கும் விற்கலாம். ஆனால் முறம் மாத்திரம் மூங்கிலாக இருக்கக்கூடாது. வெங்கலமா இருக்கணும்” என்று சொல்லிப் புன் முறுவல் பூத்தாள் அம்மா.

‘வெங்கல முறமா அது எதுக்கு உதவும் அம்மா? இந்த முறந்தானே கண்ணுக்கு அழகு? காரியத்துக்கு எளிசு? விலையும் குறைவு?”

‘அட! இவளுக்கும் விளம்பரக் கலையில் பயிற்சி இருக்கிறதே!’ என்று நான் ஆச்சரியப்பட்டேன்.

“சரி, சரி, விலையைச் சொல்லு” என்றாள் அம்மா.

“அதுதான் சொன்னேனே! ரெண்டும் முக்கால் ரூபாய்; அதுக்குக் குறைவில்லை. வேணுமானால் வாங்கிக்கோ; இல்லையின்னா, கடை வீதிக்குப் போய் வித்து விட்டு வரேன்.”

“மகராஜியாப் போயிட்டு வா. முக்கால் ரூபாய் கொடுத்து வாங்குகிற மகாராஜன் அங்கே, நீ வரவில்லை வரல்லையின்னு காத்துக்கொண்டிருக்கான். போய் வித்து விட்டுவா.”

“சரி, உங்களுக்கு வேணாமா?”

“வேணும்; ஆனால் நீ சொல்கிற விலைக்கு வேண்டாம்.”

“என்னதான் விலை குடுப்பீங்க?”

“எட்டணாவுக்கு மேலே ஒரு தம்பிடியும் குடுக்க மாட்டேன்.”

அநேகமாக வருகிறவர் சொல்லும் விலையில் பாதிக்குக் கேட்பது அம்மா வழக்கம். இந்தத் தடவை பெரிய மனசு பண்ணி மூன்றில் இரண்டு பங்குக்குக் கேட்டு விட்டாள். அதிலிருந்து முறம் வீட்டுக்கு எவ்வளவு அவசியம் என்பதை ஊகித்துக் கொண்டேன்.

“என்னம்மா, ஒரேயடியாக் கொறைச்சுக் கேக்கறீங்க. மூங்கில் வெலையெல்லாம் ஏறிப் போயிருக்குங்க. நாங்க செஞ்ச வேலைக்குக் ‘கூலி’ என்ன மிஞ்சப் போவுது?”

“ஆமாமா; நீ இந்தப் பட்சி தீர்த்தத்துக்கு வருகிற வர்களிடம் முறம் நஷ்டத்துக்கு வித்துப் புண்ணியம் சம்பாதிக்கிறையோ? கூலியே இல்லை என்கிறையே! அப்படியானா இந்தத் தொழில் எதுக்கு? வேறு ஏதாவது வியாபாரம் செய்யலாமே..”

“பதினோரணாக்குக் குடுக்கறேன்.”

‘அடே ரொம்பக் கொறைச்சுக்கொண்டு விட்டாயே!’ என்று மனைவி பரிகாசத் தொனியில் சொல்லிவிட்டு என்னைப் பார்த்தாள். தானும் இந்தப் பேரஞ் செய்யும் கலையில் பயிற்சி பெற்று வருவதை நான் தெரிந்து கொள்ள வேண்டு மென்று பார்த்தாள் போலும்! நானோ முறம் கட்டும் தொழிலில் எத்தனை கஷ்டம் இருக்குமோ என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். சம்பாஷணை நீண்டு கொண்டே இருந்தது. வாதப் பிரதி வாதங்கள் ஒன்றுக்கொன்று சளைக்காமல் இருந்தன.

அப்போது உள்ளே குழந்தை அழுதது. அதன் ஒலியை என் மனைவி காதில் வாங்கிக்கொண்டாளோ, இல்லையோ, தெரியவில்லை. திடீரென்று முறக்காரி, “சரி, ஒன்பதணாவாவது குடுங்க. நேரமாயிடுத்து” என்று பர பரப்புடன் கூறினாள். அது வரையில் நிதானமாகப் பேசியவள், பதினோரணாவிலே பிடிவாதமாக நின்று கொண்டிருந்தவள், அப்போது அவ்வளவு பரபரப்பாகப் பேசினது எனக்கு விளங்காத புதிராக இருந்தது. தன்னுடைய வாதங்கள் வெற்றி பெற்றன என்ற சந்தோஷம் என் அன்னையின் முகத்தில் ஒளிர்ந்தது.

“எட்டணாத்தான் தருவேன்” என்று அவள் பிடிவாதம் செய்தாள்.

“அம்மா, உனக்குப் புண்ணியமாப் போவுது. தர்மம் செஞ்சதா நினைச்சுக்கோ. கடை வீதியில் கொண்டு போய் வித்தா முக்கால் ரூபா சுளையாக் கிடைக்கும். ஆனால் அங்கே போக நேரம் இல்லை.”

“என்ன அப்படி அவசரம்?”

“குழந்தையை வீட்டிலே விட்டு விட்டு வந்திருக்கிறேன். அது பசியினாலே அழும். இதோ நான் போகணும். நீங்க குடுக்கறதைக் குடுங்க.”- அவள் குரலில் ஏதோ சோகம் தொனித்தது.

“வீட்டிலே குழந்தையைப் பார்த்துக்கறவுங்க ஆரும் இல்லையா?”

“நான் ஒண்டிக்காரி. அதெல்லாம் இப்ப என்னத்துக்கம்மா? காசைக் குடுங்க. நான் போகணும். மனசு வச்சு ஒன்பதணாக் குடுத்தாக் குடுங்க. அப்புறம் உங்க இஷ்டம்.”

இப்போது உள்ளே குழந்தை வீரிட்டுக் கத்தியது.

“….குடுங்க; சீக்கிரம் குடுங்க. குழந்தை துடிச்சுப் போயிடும்.”

இந்தப் பேச்சைக் கேட்டபோது என் மனசு என்னவோ செய்தது. அவளுடைய குழந்தை துடிக்கிறதோ இல்லையோ, அதைக் கேட்க எனக்குக் காதில்லை. உள்ளே குழந்தை அழும் அழுகை, அவளுக்குத் தன் குழந்தையின் துடிப்பை நினைப்பு மூட்டி விட்டது.

என் மனைவியைக் கடைக்கண்ணால் பார்த்தேன்; அவள் புரிந்து கொண்டாள். குழந்தையைக் கவனிக்க உள்ளே போய்விட்டாள். சில்லறை எடுத்துவர உள்ளே போன என் அன்னை வெளியே வந்தாள். “இந்தா, பன்னிரண்டணா, நீ பிள்ளைத்தாய்ச்சியின்னு தெரிஞ்சிருந்தா இவ்வளவு நேரம் நிறுத்தி வச்சிருக்கமாட்டேன். போய்க் குழந்தைக்குப் பால் குடு.”

முறக்காரி ஆச்சரியப்படுவது கிடக்கட்டும்; எனக்கே ஆச்சரியமாகிவிட்டது. அம்மாவா, இவ்வளவு பேரத்துக்குப்பின் அவள் கூறின விலையையே கொடுத்து விட்டாள்.

ஆம்! உண்மை. குழந்தையின் மேல் முறக்காரிக்கு இருந்த பாசம் தூய்மையானது. அது என் தாயின் உள்ளத்தை உருக்கி விட்டது. அவளும் தாய் அல்லவா? அவளுக்கும் அந்தப் பாசம் இருக்கிறதென்பதை நானல்லவா அறிவேன்?

– பவள மல்லிகை (சிறு கதைகள்), முதற் பதிப்பு: செப்டம்பர் 1951, அமுத நிலையம் லிமிடெட், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *