கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 12,373 
 
 

“கிட்டத்தட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட ஜாதகங்களிலிருந்து கடைசியில் தேறிய பத்து பெண்களில், பதினெட்டு பொருத்தமும் பார்த்து ஜோசியர் தேர்ந்தெடுத்த பெண்ணாக்கும் இந்த விசித்ரா…’ என்று பெருமையுடன் சொன்னார் நண்பர் வேதாந்தம்.

வேதாந்தம் என்னுடன் அலுவலகத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக, வேலை பார்க்கும் என்னுடைய பதவிப் பரிமாணத்திலேயே இருக்கும் மற்றொரு விஞ்ஞானி. ஆனால், பழமையான கருத்துக்கள் கொண்டவர். அதற்காக நீங்கள் அவரை ஒரேயடியாகப் பழமைவாதி என்று ஒதுக்கி ஓரம் கட்ட முடியாது.

நம்பிக்கை

இந்த இருபது – இருபத்தியோராம் நூற்றாண்டின் பெரும்பாலான மக்களின் சராசரிப் பிரதிநிதி. அவர் மகனும், எல்லா மத்தியதரக் குடும்ப மகன்களையும் போல், திறமையாகப் படித்து, பொறியியல் பட்டம் பெற்று, இன்று, மென் பொருள் துறையில் உலகின் தங்கச் சுரங்கமான அமெரிக்காவில் வேலை பார்ப்பவன்.

அவனும், அவன் அப்பாவைப் போலவேதான், ஏறத்தாழ குணங்களில். இவர் வெகு சிக்கனம் என்றால், அவன் சிக்கனம்; இவர் நெற்றியில் பட்டையாக நாமம் தரிப்பார் என்றால், அவன் ஒற்றை ஸ்ரீசூர்ணம் வைப்பவன்; இவர் மூன்று வேளை சந்தியா வதனம் என்றால், அவன் சிலிகன் வேலியிலும் ஒரு வேளை சந்தியா வந்தனம் செய்பவன்.

அப்பா வேதாந்தம் கிழிக்கும் கோட்டை தாண்டாத, உத்தமமான புத்திரன் ஸ்ரீவத்சன். ஒரே வாரிசு. செல்லப் பிள்ளை, ஆனால், நல்லப்பிள்ளை. இருபத்தி நான்கு வயதாகும் போதுதான், வேதாந்தம் அவனின் கல்யாணப் பேச்சை எடுத்தார். ஆனால், ஸ்ரீவத்சன் அவ்வளவு சுலபத்தில் சம்மதம் தரவில்லை.

ஆகவே வேதாந்தமும், மாமியும் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டனர். ஆறு மாதம் அலுவலகத்திற்கு லீவு. அவர் சொன்ன காரணம், “பையனை நல்ல முறையில் பேசி, கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கத்தான் நானும், என் ஆத்துக்காரியும் அமெரிக்கா போகிறோம்…’ என்றார்.

“ஆறு மாதம் வேண்டுமா உங்களுக்கு உங்கள் பிள்ளை மனசை மாற்ற?’என்றேன் நான் சற்று வியப்புடன்.

வேதாந்தம் என்னை ஒரு அற்ப வஸ்துவைப் போல் நோக்கினார்.

“என்ன பேசற… கல்யாணம்கறது ஆயிரங்காலத்து பயிர் இல்லையா… அவன் மனசு ஒப்பாம ஒருத்தியைப் பிடிச்சு, அவள் தலையில் கட்டலாமா?’

“அது சரி… ஆனா, ஆறு மாசம் அங்க உங்களுக்கு போரடிக்காதா?’ என்றேன்.

“போர் என்ன போர்… “டிவி’ இருக்கு… லைப்ரரி இருக்கு… வீட்டு வேலையிருக்கு… அவன் மனசை மாத்துறதுதான் இப்ப முக்கியம்…’
எல்லா அப்பா – அம்மாக்களும், அமெரிக்க விஜயம் செய்ய மேற்கொள்ளும் பல காரணங்களில் இதுவும் ஒன்று என்று எனக்குத் தோன்றியது.
அரசாங்க உத்யோகத்தின் பல சலுகைகளில், இது போன்ற அபரிமிதமான விடுப்பு எடுத்துக் கொள்ளும் உரிமையும் அடங்கும்.

நான் மேலே பேசவில்லை; “பான் வாயேஜ்…’ என்றேன்.

இது நடந்த பின்னர், அவர்கள் இருவரும் ஸ்ரீவத்சனின் மனசைக் கரைத்து, பெண் தேர்வு செய்ய முனைந்த போதுதான், வேதாந்தம் முன்னூறு ஜாதங்களிலிருந்து பத்தைத் தேர்ந்தெடுத்து, அதிலிருந்து மணியான மூன்றைப் பொறுக்கினார்.

“விசித்ரா என்ற வரனுக்குத்தான், பதினெட்டு பொருத்தங்களும் இருப்பதாக ஜோசியர் சொன்னார்…’ என்ற போது, நான் அதை என்னன்ன பதினெட்டு பொருத்தங்கள் என்ற கேள்வியை எழுப்பவில்லை.

கல்யாணம் அடுத்த மூன்று மாதங்களில், வெகு விமரிசையாக நடந்தது. ஆனால், அடுத்த ஆறு மாதங்களில் விரைவாக விசித்ரா விவாகரத்து நோட்டீசும் அனுப்பினாள்.

அடுத்த ஆறு மாதங்களில், விவாகரத்து வழங்கப்பட்டது.

விவாகரத்து விவகாரம் மும்முரமாக இருந்த சமயம், வேதாந்தம் மிகவும் சோர்ந்து இருந்தார். எதிலும் அவர், கவனம் செல்லவில்லை. காரணம் என்ன என்று கேட்டபோது, “அந்தப் பெண்ணுக்கு சமைக்கவே தெரியவில்லை… வேலைக்குப் போக வேண்டும் என்பதில்தான் ஆர்வம் இருக்கிறது…’ என்றார்.

“நீங்கள் மிகவும் க்வாலிபைட் பெண்ணாக ஏன் தேர்ந்தெடுத்தீர்கள். சமையல்தான் முக்கியம் எனில், சாதாரணமாகப் படித்த பெண்ணைத் தேர்ந்தெடுத்திருக்கலாமே…’ என்றேன்.

“அப்படி பொருத்தமான ஜாதகம் வரவில்லையே…!’ என்றார்.

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

“பதினெட்டு பொருத்தமும் இருக்கிறது என்று ஜோசியர் சொன்னார் என்கிறீர்கள். பதினெட்டில் சமையல் செய்ய விருப்பம் உள்ளவரா என்பது வராதா? அதோடு விவாகரத்துக்குப் போகும் அளவு உள்ள ஜாதகத்துக்குரிய பெண்ணை, எப்படி உங்கள் ஜோசியர் தேர்ந்தெடுத்து, அதுவும் 300 ஜாதகங்களிலிருந்து கொடுத்தார்…?’ என்றேன்.

வேதாந்தம் என்னை முறைத்தார்.

“நீங்கள் என்னை என்னவோ நக்கல் செய்வது போல் பேசுகிறீர்கள்…’ நான் சமாளித்தேன்.

“அடடா… நான் அப்படிச் சொல்லவில்லை… இப்போது பார்த்தால் பொருந்தாத இரு ஜாதகங்கள் இணைந்தது போல் அல்லவா இருக்கிறது?’

“ஆமாம்… உங்களுக்கு நிஜமான காரணம் தெரியுமா?’ என்றார் வேதாந்தம்.

“என்ன நிஜமான காரணம்?’

“அந்தப் பெண்ணின் குடும்பமே பித்தலாட்ட குடும்பம்; அவர்கள் பொய் ஜாதகத்தைக் கொடுத்து, எங்கள் அனைவரையும் ஏமாற்றி விட்டனர்…’

“என்னது…?’

“அப்படித்தான் எங்கள் ஜோசியர் சொல்கிறார்… அவர் சொல்வதில் நிச்சயமாக நியாயம் இருக்கிறது. அப்படித்தான் நடந்திருக்க வேண்டும்… வேண்டுமேன்றே பொருந்துவது போல் ஒரு ஜாதகத்தை கொடுத்திருக்கின்றனர்…’

என்னால் இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“அது எப்படி சார் முடியும்…’

“முடியும்… தாராளமாகக் குழப்பம் பண்ணலாம். நீங்கள் என்னை என்னமோ கோர்ட்டில் குறுக்குக் கேள்வி கேட்பது போல் கேட்கிறீர்களே?’ என்றார் வேதாந்தம் கடும் சினத்துடன்.

நான் பதில் பேசவில்லை.

இந்த நிகழ்வுக்கு ஓர் ஆண்டுக்குப் பின், வேதாந்தம் மிக எளிமையான முறையில் தன் மகனுக்கு இரண்டாம் கல்யாணம் செய்து வைத்தார்.
ஸ்ரீவத்சனை இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்க வைக்க, வேதாந்தம் தம்பதியினர், இன்னொரு ஆறு மாதம் அமெரிக்க விஜயம் செய்தனர்.

இந்த இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண், வேதாந்தம் குடும்பத்தின் சற்று தூரத்து சொந்தம்; அவ்வளவாக வசதியில்லாதவர்கள். பெண்ணும் பார்க்க சுமாராகத்தான் இருப்பாள். படிப்பும் ஏதோ பி.ஏ., தமிழோ என்னவோ, அதிலும் பெயில் என்று கேள்வி.

இந்த நுண்ணிய விவரங்களை வேதாந்தம் எனக்கு சொல்லவில்லை. அவர் உறவினர் ஒருவரின் மனைவியும், என் மனைவியின் தோழியும் நெருங்கிய நண்பிகள்; அவர்கள் வாயிலாக எனக்குக் கசிந்த சமாச்சாரம் இது.

இந்தத் திருமணம் வெற்றிகரமாக ஒரு குழந்தை பிறப்பில் முழுமை பெற்றது.

“”எனக்கு பேரன் பிறந்திருக்கிறான்!” என்று மகிழ்ச்சியுடன் அறிவித்த வேதாந்தம், எனக்கு முன்னால் ஒரு சாக்லேட் பெட்டியை நீட்டினார்.

“”வாழ்த்துக்கள்…” என்று கூறி, ஒரு சாக்லேட்டைப் பிரித்து வாயில் போட்டபடி என் வாய்த் துடுக்கு மாறாமல் கேள்வியை கேட்டேன்.

“”இந்த முறையும் ஜாதகப் பொருத்தம் பார்த்துத்தான் கல்யாணம் பண்ணினீர்களா?” என்றேன்.

“”பின்ன… எல்லாப் பொருத்தமும் உள்ள பெண்தான் இவள்…”

“”அப்படியா…!” என்றேன் வியப்புடன். அதற்குள் வேதாந்தமே பேசினார்.

“”உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லட்டுமா?” என்றார்.

“”என்ன ரகசியம்…?”

“”ஜோசியரிடம் கேட்ட போது என்ன சொன்னார் தெரியுமா? உங்கள் பையனுக்கு இரண்டாவது கல்யாண ப்ராப்தி இருக்கிறது… அதனால் தான், “டைவோர்ஸ்’ நடந்தது,” என்றார்.

“”அதை அவர் ஏன் உங்களிடம் முதலில் கல்யாணத்திற்கு ஜாதகம் பார்க்கப் போன போதே சொல்லவில்லை?” என்றேன் வியப்புடன்.

“”என்ன சார் பேசறீங்க… இதையெல்லாம் எடுத்த எடுப்பில் சொல்வரா? விதிப்படி நடப்பதை தடுக்கவா முடியும்?”

“”எல்லாம் சரிதான்… இருந்தாலும்…”

“”இதபாரும்… உமக்கு இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. அதனால் தான் இப்படி எல்லாம் வாதப் பிரதிவாதம் செய்கிறீர்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை சுவாமி. அதைப் புரிஞ்சுக்கோங்கோ…” என்றார் வேதாந்தம் புன்சிரிப்புடன்.

“”அடுத்த வாரம் நானும், என் மனைவியும் மறுபடி ஆறு மாசம் அமெரிக்கா போகிறோம்… பேரனோடு விளையாடுவதற்கு…!” என்றார் மந்தகாசத்துடன்.
வாஸ்தவம்தான்; நம்பிக்கைதான் வாழ்க்கை.

ஆனால், கட்டாயம் வேதாந்தத்தின் ஜாதகத்தில், அவருக்கு வேலை பார்க்காமலே சம்பளம் வரும் என்று விதி எழுதி இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

– ஆகஸ்ட் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *